அருணகிரி நாதர் சொன்ன நான்கு கதைகள்! ஐந்து கோசம்!காந்த ஊசி!– 24 (Post No.15,433)

Written by London Swaminathan

Post No. 15,433

Date uploaded in Sydney, Australia –  18 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 24

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 24

***

முற்றா நித்தா அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. …

முதுமையே வாராதவனே, என்றும் இளமையாய் இருப்பவனே,

என் தந்தையே, பரிசுத்தனே, பாசங்களினின்று நீங்கியவனே,

முக்தியைத் தரும் பெருமாளே.

இந்த முடிவுள்ள மற்ற 10 திருப்புகழ் பாடல்கள் பின்வருமாறு:

     595 – மெய்ச் சார்வு அற்றே,

     768 – கட்காமக்ரோத,

     1116 – உற்பாதம் பூ,

     1117 – எற்றா வற்றா,

     1118 – செட்டாகத் தேனை,

     1119 – பட்டு ஆடைக்கே,

     1120 – பத்து ஏழு எட்டு,

     1121 – பொற்கோ வைக்கே,

     1122 – பொற் பூவை,

     1123 – மெய்க்கூணைத் தேடி  … என்று தொடங்கும் பாடல்கள்.

***

ஐந்து கோசங்களும் திருப்பதி மலையில் முருகனும்

திருப்பதி மலையில் முருகன் இருப்பதாக மீண்டும் மீண்டும் கூறுகிறார் அருணகிரி .

சீசி முப்புரக் காடு நீறெழச் சாடி … சீச்சீ என்று வெறுக்கத்தக்க

தீய திரிபுர மலைகள் போன்ற (ஆணவம், கன்மம், மாயை என்ற)

மும்மலங்களாகிய காடு வெந்து சாம்பலாகும்படி,

நித்திரைக் கோசம் வேரற … தூக்கமும், ஆன்மாவை

முடிக்கொண்டுள்ள பஞ்ச கோசங்களும்* வேரோடு அற,

சீவன் முத்தியிற் கூடவே … ஆன்மா முக்தி நிலை அடைந்து

விடுதலை பெற,

களித்து அநுபூதி சேர … யான் மகிழ்ந்து பேரின்ப

அநுபவத்தைப் பெற,

அற்புதக் கோல மாமென … அற்புதத் தோற்றம் இது என்று

கூறும்படியாக

சூரியப்புவிக் கேறி யாடுக … சூரிய மண்டலத்தில் யான் சென்று

அங்கு நடனம் புரிய,

சீலம் வைத்தருள் தேறியேயிருக்க அறியாமல் … ஒழுக்க

வழியினில் சென்று திருவருளை உணர்ந்து நிலைபெற்றிருக்கத் தெரியாமல்,

பாசம் விட்டுவிட் டோடி போனது … பாசங்கள் என்னை

விட்டு விலகி மீண்டும் ஓடிவந்து சேரும் நிலை

போது மிப்படிக்கு ஆகிலேன் … போதும் போதும். இப்படிப்

பாசத்தில் அகப்படும் நிலை எனக்கு வேண்டாம்.

இனிப் பாழ்வழிக்கு அடைக்காமலே … இனியாகிலும்

இந்தப் பாழும் நெறியில் என்னை அடைத்து வைக்காமல்

பிடித்து அடியேனைப் பார் அடைக்கலக் கோலமாமென …

என்னைப் பற்றிக்கொண்டு உலகில் எனக்குப் புகலிடமாக

இருக்கும் தோற்றத்தைக் காண்பித்து,

தாபரித்து நித்த ஆரம் ஈதென … ஆதரவுடன் யான்

நித்தியமான ஓர் ஆபரணத்தை அணிவதற்காக

பாத பத்மநற் போதை யேதரித்தருள்வாயே … உன்

திருவடியாகிய நற்கமல மலரை என் மீது தரிக்கச் செய்வாயாக.

தேசில் துட்டநிட்டூர … ஞானம் இல்லாத துஷ்டனும்,

கொடுமை வாய்ந்தவனும்,

கோதுடைச் சூரை வெட்டி … குற்றங்கள் நிறைந்தவனுமான

சூரனை வெட்டி,

யெட் டாசை யேழ்புவித் தேவர் முத்தர்கட்கு … எட்டுத்

திசைகளிலும் ஏழுலகிலும் இருக்கும் தேவர்கள், ஜீவன்முக்தரான

அறிஞர்களின்

ஏத மேதவிர்த்தருள்வோனே … துயரத்தை நீக்கி அருளியவனே,

சீர்ப டைத்தழற் சூல மான்மழுப் பாணி … தன் திருக்கரங்களில்

சிறப்பு வாய்ந்த நெருப்பு, சூலம், மான், மழு ஆகியவற்றை ஏந்தியவரும்,

வித்துருப் பாதன் … பவளம் போன்ற சிவந்த பாதங்களை

உடையவருமான சிவபெருமானின்

ஓர்புறச் சீர்தி கழ்ப்புகழ்ப் பாவை யீனபொற் குருநாதா …

ஒரு பாகத்தில் அமர்ந்த சிறப்புப் பொருந்திய புகழ்த் தேவி பார்வதி

பெற்றெடுத்த அழகிய குருநாதனே,

காசி முத்தமிழ்க் கூட லேழ்மலைக் கோவ லத்தியிற் கான …

காசி, முத்தமிழ் விளங்கும் மதுரை, ஏழு மலைகளுடைய திருவேங்கடம், திருக்கோவலூர், திருவானைக்கா,

நான்மறைக் காடு பொற்கிரிக் காழி யாருர்பொற்

புலிவேளூர் … நான்கு வேதங்களும் தங்கும் வேதாரணியம், கநகமலை, சீர்காழி, திருவாரூர், அழகிய சிதம்பரம், புள்ளிருக்கும் வேளூராகிய வைத்தீசுரன்கோயில்,

காள அத்தியப் பால்சி ராமலை … திருக்காளத்தி, அதன்பின்

திரிசிராப்பள்ளி முதலிய தலங்களிலும்

தேச முற்றுமுப் பூசை மேவி … நாடு முழுவதும் மூன்று

காலங்களிலும் வழிபாடு நடத்தப் பெற்று,

நற் காம கச்சியிற் சால மேவுபொற் பெருமாளே. … நல்ல

காமகோட்டம் என்ற கச்சியில் (காஞ்சீபுரத்தில்) மிகவும் விரும்பி

வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.

பஞ்ச கோசங்கள் (ஐந்து உறைகள்):

அன்னமய கோசம் – உணவும் உடலும் கூடியது,

பிராணமய கோசம் – வாக்கு, பாணி, பாதம், மற்றும் கர்மேந்திரியங்கள்  இவற்றுடன் உயிரும் கூடியது,

மனோமய கோசம் – மனம் மட்டும்,

விஞ்ஞானமய கோசம் – ஐம்பொறிகளும், புத்தியும் கூடியது,

ஆனந்தமய கோசம் – ஆன்மாவுக்கு மிக அருகில் போலி ஆனந்தத்தைத் தருவது.

***

கதை 1

கிரவுஞ்ச மலையின் கதை

பாவக்கார் கிரி பொடி பட்டுப் போகச் சூரர்கள் தலை இற்று

இட்டு ஆடப் போர் புரிகின்ற வேலா … (வருபவர்களை உள்ளே

மடக்கி) பாவங்களைச் செய்த (கிரவுஞ்சன்* என்னும் அசுரனாகிய)

மலை தூளாகும்படிப் போக, சூரர்களுடைய தலைகள் அறுந்து

வீழ்ந்து ஆடும்படி சண்டை செய்கின்ற வேலனே,

திகிரிப் பொன் பாணிப் பாலனை மறை கல் புத்தேள் அப்

பூம(ன்)னை சினம் உற்றுச் சேடில் சாடிய கந்த வேளே …

சக்கரம் ஏந்திய அழகிய திருக்கரத்தை உடைய திருமாலின்

பிள்ளையும், வேதங்களைக் கற்ற தேவனும், அழகிய தாமரையில்

வீற்றிருப்பவனுமாகிய பிரமன் மீது கோபம் கொண்டு அவனது

திரட்சியான தலையில் குட்டிய கந்தப் பெருமானே,

தினை உற்றுக் காவல் காரியை மணம் உற்றுத் தேவ பூவொடு

திகழ் கச்சித் தேவக் கோன் மகிழ் தம்பிரானே. … தினைப்

புனத்திலிருந்து காவல் புரிந்த வள்ளி நாயகியை திருமணம் செய்து

கொண்டு, தேவருலகில் வாழ்ந்த பூ அனைய தேவயானையுடன் சேர்ந்து,

விளங்கும் காஞ்சீபுரத்தில் வீற்றிருந்து, தேவர்கள் தலைவனான இந்திரன் மகிழும் தம்பிரானே.

தன்னிடத்தே வழி காட்டி உள்ளே வந்தவர்களை மாயையால் மடக்கி மாய்வித்த கிரவுஞ்சன் என்னும் அசுரன், அகத்திய முனிவர் அங்கு வர, அவரையும் வழி தடுமாறச் செய்தான். இதை அறிந்த முனிவர் நீ இந்த மலையாகவே இருக்கக் கடவாய். முருகன் கை வேலால் இறப்பாய் என்று சாபம் இட்டார்.

***

ஒரே நொடியில் உலகம் சுற்றிய முருகன்

பூமியை முதலில் வலம் வந்தவர் யூரி ககாரின் இல்லை !

மயில் ஏறி அன்று நொடி போதில் அண்டம் வலமாக வந்த

குமரேசா … மயிலின் மீது ஏறி முன்பு ஒரு நொடிப் பொழுதில் உலகைச் சுற்றி வந்த குமரேசனே,

மறி தாவு செங்கை அரனார் இடங்கொள் மலைமாது தந்த

முருகேசா … மான் தாவுகின்ற சிவந்த கையை உடைய

சிவபெருமானின் இடது பாகத்தில் குடிகொண்டுள்ள பார்வதி

தேவி பெற்ற முருகேசனே,

***

கதை 2

காஞ்சீபுர ஏகாம்பரேஸ்வரர் கதை

கம்ப ராய்ப்பணி மன்னு புயம்பெறுகைக்கு … ஏகாம்பரேஸ்வரராய்

விளங்கும் சிவபிரானின் பாம்புகள் நிலைத்துள்ள தோள்களைத் தழுவும் பொருட்டு,

கற்புத் தவறாதே … கற்பு நிலை தவறாமல்,

கம்பை யாற்றினில் அன்னை தவம்புரி … கம்பா நதிக்கரையில்

காமாக்ஷி அம்மை தவம் செய்திருந்த*

கச்சிச் சொக்கப்பெருமாளே. … கச்சி என்ற காஞ்சீபுரத்தில்

அழகாக வீற்றிருக்கும் பெருமாளே.

காஞ்சீபுரத்தில் கம்பா நதிக்கரையில் காமாக்ஷி தேவி சிவபிரானின் இடது பாகத்தைப் பெறுவதற்காக கடுந்தவம் செய்தாள். தேவியின் திறத்தை உலகுக்குத் தெரிவிக்க எண்ணி சிவனார் கம்பா நதியில் பெரு வெள்ளத்தை ஏற்படுத்தினார். லிங்கம் வெள்ளத்தில் கரையுமே எனக்கருதி தேவி லிங்கத்தைத் தழுவ, லிங்கத்தில்  தேவியின் வளைத் தழும்பும், மார்த் தழும்பும் தோன்றின. ஈசன் தேவிக்குத் தன் இடப்பாகத்தை ஈந்தான் – கச்சி புராணம்.

***

கதை 3

காந்தமும் ஊசியும் கச்சியப்பரும் கந்த புராணமும்

காந்தக் க(ல்)லும் ஊசியுமே என ஆய்ந்துத் தமிழ் ஓதிய சீர்

பெறு(ம்) … காந்தக் கல்லும் ஊசியும் போல, ஆசிரியரும் மாணவருமாக ஒருமித்து தமிழை ஓதுகின்ற* மேன்மை பொருந்திய

காஞ்சிப் பதி மா நகர் மேவிய பெருமாளே. … காஞ்சி

என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.

காஞ்சி குமரக் கோட்டத்து அர்ச்சகர் கச்சியப்ப சிவாச்சாரியார் தாம் பாடிய கந்தப் புராணப் பகுதி ஏட்டை தினம் இரவில் முருகன் திருவடியின் கீழ் வைக்க,  மறுநாள் காலையில் அதில் திருத்தங்கள் காணப்படுமாம். இது குருவான முருகனையும் சீடரான கச்சியப்பரையும் பற்றிய குறிப்பு எனக் கருதலாம்.

***

கதை 4

குமர கோட்டத்தின் கதை

குணமதாக்கிச் சிறந்த வடிவுகாட்டிப் புணர்ந்த … தன்

வசப்படுத்தி, உன் சிறந்த தெய்வ வடிவம் காட்டி, அவளை மணந்தவனே,

குமரகோட்டத்து அமர்ந்த பெருமாளே. … குமரக்கோட்டம்*

என்ற காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

பிரமனைச் சிறைப்பிடித்த குற்றம் நீங்க, சிவபிரானின் ஆணையால், முருகன் குமரக் கோட்டத்தில் தவக்கோலம் பூண்டு லிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜித்தான்- காஞ்சிப் புராணம்.

***

கற்பக விநாயகரின் மஹிமை

குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர்

கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன் …

யானையின் அழகிய முகத்தைக் கொண்ட விக்ன விநாயகன் என்னும் பெரியோன், (சினத்தை அடக்கும்) அங்குசம், (காமத்தை அடக்கும்) பாசம் இரண்டும் கையில் கொண்ட பிரசித்தி பெற்றவன், ஒற்றைக் கொம்பன், பெரு வயிற்றன், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய) முக்கண்ணன், வலிமை வாய்ந்தவன், கணபதி,

கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன்

நக்கர் பெற்று அருள் குன்றைய ரூபக கற்பக பி(ள்)ளை

இளையோனே … துதிப்பவர்களுடைய வினைகளையும் ஆசையையும் தீர்ப்பவன், எங்கள் விநாயக மூர்த்தி, திகம்பரரான சிவபெருமான் பெற்றருளிய மலை போன்ற உருவத்தை உடையவன், ஆகிய கற்பக விநாயகப் பிள்ளைக்குத் தம்பியே,

துஞ்சல் இலாத சட அக்ஷரப் பிரபந்த சடானன துஷ்ட

நிக்ரக … அழிவு இல்லாத (சரவணபவ என்னும்) ஆறு எழுத்தின்

பெருமை கூறும் நூல்களுக்கு உரியவனே, ஆறு திருமுகத்தனே,

துஷ்டர்களை அழிப்பவனே,

தும்பிகள் சூழ் அவையில் தமிழ் த்ரய பரிபாலா …

(மதுரையில் சொக்கநாதர் ஆலயத்தில் செதுக்கப்பட்டுள்ள அஷ்ட) கஜங்கள் தாங்கும் மணி மண்டபத்தில் (இயல், இசை, நாடகம் என்ற) முத்தமிழை ஆதரித்து வளர்த்தவனே*,

துங்க கஜாரணியத்தில் உத்தம … உயர்வு பெற்ற

திருவானைக்காவில் வீற்றிருக்கும் உத்தமனே,

சம்பு தடாகம் அடுத்த தக்ஷிண சுந்தர மாறன் மதில் புறத்து

உறை பெருமாளே. … சம்பு தீர்த்தத்துக்கு அடுத்துத் தெற்கே உள்ள சுந்தர (உக்கர) பாண்டியன் மதிலின் வெளிப்புறத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

மதுரையில் முருகன் உக்கிர பாண்டியனாய் தோன்றி, தமிழைப் பரிபாலித்தார்.

To be continued…………………..

Tags – அருணகிரிநாதர் ,அரிய செய்திகள் Part 24 , பஞ்ச கோசம் , காஞ்சீபுர கதை, காந்த ஊசி, கந்த புராணம், சொல் அழகு, கிரவுஞ்ச மலை

Leave a comment

Leave a comment