Post No. 15,437
Date uploaded in London – 19 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பிப்ரவரி 19 ஶ்ரீ கோல்வால்கர் பிறந்த தினம்: சிறப்புக் கட்டுரை!
குருஜி ஶ்ரீ மாதவ் சதாசிவராவ் கோல்வால்கர்!
ச. நாகராஜன்
குருஜி என்று அனைவராலும் மரியாதையுடனும் அன்புடனும் அழைக்கப்படும் ஶ்ரீ மாதவ் சதாசிவராவ் கோல்வால்கர் நாக்பூர் அருகில் உள்ள ராம்டெக் நகரில் சதாசிவராவ்- லட்சுமி பாய் தம்பதியர்க்கு 1906ம் ஆண்டு, பிப்ரவரி 19ம் நாளன்று பிறந்தார்.
இளமையிலேயே மிகுந்த கூரிய அறிவுத் திறன் கொண்டவராக இவர் விளங்கினார். 1926ல் நாக்பூர் ஹிஸ்லோப் கல்லூரியில் இளங்கலை படிப்பை முடித்த பின்னர் வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் அறிவியலில் பட்ட மேற்படிப்பை முடித்தார். அதே பல்கலைக் கழகத்தில் விலங்கியல் துறையில் மூன்று ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின் 1935ல் சட்டப் படிப்பை முடித்து வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார்.
ஆன்மீக நாட்டம் கொண்ட அவர் முர்ஷிபாத்தில் உள்ள சரகச்சி ஆசிரமம் சென்று சுவாமி ராமகிருஷ்ண குருகுலம் சென்றார்.
அங்கு ஸ்வாமி விவேகானந்தருடன் பயின்ற ஸ்வாமி அகண்டானந்தரின் சீடரானார். சில காலம் இயமலையில் தவமும் புரிந்தார்.
ஸ்வாமி அகண்டானந்தரி அறிவுரையை மேற்கொண்ட அவர் நாக்பூர் திரும்பி சமூக சேவையை மேற்கொண்டார்.
அப்போது தான் அபூர்வ சந்திப்பு ஒன்று நிகழ்ந்தது.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் (ஆர் எஸ் எஸ் என்று அனைவராலும் அறியப்படும் சங்கம்) நிறுவிய ஶ்ரீ கேசவ் பலிராம் ஹெட்கேவாரை அவர் சந்தித்தார். வாரணாசியில் சங்கத்தின் கிளையை அமைத்தார்.
ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த குருஜி அதற்காகத் தீவிரமாகப் பாடுபட்டார்.
ஹிந்து ராஷ்டிரத்தை நிறுவ வேண்டும் என்ற சங்கல்பத்தையும். மேற்கொண்டார்.
1939ம் ஆண்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார்.
ஶ்ரீ ஹெட்கேவார் மரணமடைந்ததற்குப் பின்னர் சங்கத்தின தலைமைப் பொறுப்பை 1940ம் ஆண்டு ஏற்றார்.
நாடு முழுவதும் சங்கத்தின் ஷாகாக்கள் நிறுவப்பட்டன.
1973ம் ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி அவர் மறையும் வரை தலைமைப் பொறுப்பில் இருந்து நாடெங்கும் இடைவிடாத சுற்றுப் பயணங்களை மேற்கொண்ட அவர் ஆயிரமாயிரம் சங்க ஸ்வயம்சேவர்களைச் சந்தித்து உரையாடி அவர்களுக்கு உத்வேகம் ஊட்டி வந்தார்.
அவரது அபூர்வமான பொருள் பொதிந்த உரைகள் ஹிந்து இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது. இமயம் முதல் குமரி வரை உள்ள ஹிந்துக்கள் வீரத்துடனும் தீரத்துடனும் தாய்நாட்டுப் பற்றுடனும் இருந்து ஹிந்து விரோத சக்திகளை அழிக்க வேண்டும் என்பதை ஹிந்துக்கள் உணரத் தலைப்பட்டனர்.
ஆண்டு தோறும் சிறந்த பயிற்சி அளிக்க நாக்பூரில் விசேஷ முகாம்கள் நடத்தப்பட்டன. அத்தோடு ஆங்காங்கே முக்கிய நகர்களில் ஒரு மாத முகாம்கள் நடத்தப்பட்டு நல்ல பயிற்சிகள் ஸ்வயம் சேவகர்களின் உடல் நலத்திற்கும் மன வளத்திற்கும் நடத்தப்பட்டன.
அவரால் உத்வேகம் ஊட்டப்பட்ட ஏராளமான இளைஞர்கள் திருமணம் செய்யாமல் பிரம்மசாரிகளாகவே திகழ்ந்து நாடு முழுவதும் உள்ள நகர்களுக்கு பிரசாரகர்களாகச் சென்று அங்கெல்லாம் சங்கத்தை வளர்க்கத் தீவிரமாகப் பாடுபட்டு வெற்றி கண்டனர்.
ஆர் எஸ் எஸ் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு சமூகத் துறைகளில் பணியாற்ற விசேஷமான தகுதி கொண்ட பலரையும் அந்தந்தத் துறைக்கு அவர் அனுப்பவே ஹிந்து சமுதாயத்தின் அனைத்துத் துறைகளிலும் ஹிந்து சிந்தனை வேரூன்ற ஆரம்பித்தது.
அரசியலில் ஜனசங், ஹிந்து சமுதாய மேம்பாட்டில் விஸ்வ ஹிந்து பரிஷத், தொழிலாளர் துறையில் பாரதீய மஸ்தூர் சங், மாணவர்கள் கல்வி பயிலும் கல்வித் துறையில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் உள்ளிட்ட பல அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
அரசியலில் சக்தி வாய்ந்த பிரிவாகத் திகழத் தொடங்கிய ஜனசங் காலப்போக்கில் மாறுதலை அடைந்து பாரதீய ஜனதா பார்டியாக ஆனது.
அது, ஶ்ரீ அடல்பிஹாரி வாஜ்பாய் தலைமையில் மத்திய அரசை அமைத்து வெற்றி கண்டது. தற்போது ஶ்ரீ நரேந்திர தாமோதர்தாஸ் மோடி அவர்கள் இந்தியாவின் பிரதம மந்திரியாக 2014 முதல் பதவி வகித்து இந்தியாவை மேம்பட்ட ஒரு வல்லரசாக மாற்றியுள்ளார்.
ஹிந்துக்களை மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்ட தீய சக்திகளை இனம் கண்டு எதிர்கொண்டு அவர்களின் தீய திட்டங்களை விஸ்வஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங்க அடிப்படையிலான அமைப்புகள் தரைமட்டமாக்கி வருகின்றன.
குருஜி அவர்களின் அற்புதமான உரைகள் BUNCH OF THOUGHTS என்ற நூலாக மலர்ந்துள்ளது.
ஹிந்து ராஷ்டிரம் என்ற குறிக்கோளை நோக்கி வெற்றி நடை போடும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தை பலப்படுத்திய மகான் குருஜி கோல்வால்கர் பிறந்த தினத்தன்று அவரை நினவ கூர்ந்து போற்றுவோமாக!
**