

London Swaminathan in Bangkok Airport, Churning the Milky Ocean
Post No. 15,445
Date uploaded in Sydney, Australia – 22 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
28திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 28
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 28
திருப்புகழில் ஐம்படைத்தாலி
சுருதி மா மொழி வேதியன் வானவர் பரவு கேசன் ஐ
ஆயுதபாணி … வேதங்களின் சிறந்த மொழிகளை ஓதும் அந்தணனாகிய பிரமன், தேவர்கள் ஆகியோர் போற்றும் கேசவன், ஐந்து வகையான ஆயுதங்களை* ஏந்தியவன்,
நல் துளப மாலையை மார்பு அணி மாயவன் மருகோனே …
நல்ல துளசி மாலையை மார்பில் அணிந்துள்ள மாயவனாகிய திருமாலின் மருகனே,
தொலைவு இலா அசுரேசர்கள் ஆனவர் துகளதாகவுமே எதிர்
ஆடிடு சுடரின் வேலவனே உலகு ஏழ் வலம் வருவோனே …
அழிவில்லாததாக தம்மை எண்ணிக்கொண்ட அசுரர்கள் தலைவர்களான சூரன், தாரகன், சிங்கமுகன் ஆகியவர் பொடிபடும்படி எதிர்த்துப் போர் புரிந்த ஒளி வீசும் வேலாயுதனே, ஏழு உலகங்களையும் (மயில் மேல் ஏறி)வலம் வருபவனே,
அருணர் கோடியினார் ஒளி வீசிய தருண வாள் முக
மேனியனே … கோடிக் கணக்கான சூரியர்களின் சுடர் வீசும் இளமை பொருந்திய ஒளி விளங்கும் முகங்கள் கொண்ட மேனியனே
* திருமாலின் பஞ்ச ஆயுதங்கள்:
சங்கம், சக்கரம், கதை, சார்ங்கம், வாள் (கட்கம்) ஆகியவை.
இவைகளை ஐம்படைத்தாலியாக குழந்தைகளுக்கு அணிவிப்பது தமிழர்தம் வழக்கம்.
சங்கத் தமிழ் நூல்களிலும் அதர்வ வேதத்திலும், இந்துக்கள் தாயத்துக்களைப் பயன்படுத்திய செய்திகள் உள்ளன.
சிறுவர்கள் ஐம்படைதாலி என்று விஷ்ணுவின் ஐந்து சின்னங்கள் பொறிக்கப்பட்ட தாயத்தை அணிந்தனர். சங்கு, சக்ரம், வாள், வில்,கதை ஆகிய சின்னங்கள் பொறிக்கப்பட்டதால் குழந்தைகளை தீய சக்திகள் அண்டாது என்று தமிழர்கள் நம்பினர்.
குறிஞ்சி நிலக் குறவர்கள் மற்றும் காடுகளில் வாழ்வோர் புலிப் பல், புலி நகம் ஆகியவற்றால் ஆன தாலிகளை அணிந்தனர்.
பெண்கள் மங்களச் சின்னங்கள் அல்லது கடவுளரின் திருவுருவங்கள் பொறித்த தாலிகளை அணிந்தனர்.
ஐம்படைத் தாலி பொன்னுடைத் தாலி என் மகன் — அகம்.54;
தாலி களைந்தன்றும் இலனே — புறம்.77
பி.டிசீனிவாச ஐயங்கார் எழுதிய தமிழர் வரலாறு (1930) என்னும் நூலில் புலிப்பல் தாலியே பிற்காலத் தங்கத் தாலிக்கு வழி செய்தது என்று வாதாடுகிறார்.
பிற்கால இலக்கியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை (3-135, 7-56), பெரியபுராணம் ஆகியவற்றில் சிறுவர்கள் தாலி புலிப் பல் தாலி முதலியன பற்றி கூடுதல் விவரங்கள் கிடைக்கின்றன.
“வனமாலி கதி சார்ங்கி
சங்கீ சக்ரீச நந்தகி
ஸ்ரீமான் நாராயணு விஷ்ணுர்
வாசுதேவோ அபிரக்ஷது.”
‘வனமாலி என்ற மாலையை அணிந்து சங்கு, சக்கரம், சார்ங்கம் என்னும் வில் ஆகியவற்றுடன் விளங்கும் திருமால் என்னைக் காக்க வேண்டும்.– என்று விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும் வருகிறது
தாயத்துக்களை ஏன் அணிந்தனர்?
அவைகள் பாதுகாப்பு தருவதோடு, அதிர்ஷ்டத்தை தரும் என்றும் நம்பினர். தீய சக்திகள், பேய், பிசாசுகளை அண்ட விடாது என்றும், பயத்தைப் போக்கவும் எதிரிகளை வெல்லவும் அவை உதவும் என்றும் நம்பினர். அதர்வ வேத மந்திரங்களில் இதைத் தெளிவாகக் காண முடிகிறது.
ஒரு காலத்தில் பனை மர ஓலைச் சுருளில் மந்திர தந்திர எந்திரங்களை வரைந்து அணிந்தனர். பனை மரத்துக்கு வடமொழியில் ‘’தால’’ என்று பெயர். இதில் இருந்தே தாலி, டாலிஸ்மேன் Talisman (ஆங்கிலச் சொல்) ஆகியன வந்தன.
***
திருமாலின் மகன் மன்மதன்!
கரி உரி அரவம் அணிந்த மேனியர் … யானையின் உரித்த
தோலையும் பாம்பையும் அணிந்த உடலைக் கொண்டவர்,
கலை மதி சலமு(ம்) நிறைந்த வேணியர் … ஒளிகள் கொண்ட
திங்களும், கங்கையும் நிறைந்த சடையினர்,
கனல் மழு உழையும் அமர்ந்த பாணியர் … நெருப்பையும்,
மானையும், பரசையும் ஏந்திய கையினர்,
கஞ்ச மாதின் கன முலை பருகி வளர்ந்த காமனை முனிபவர்
கயிலை அமர்ந்த காரணர் … தாமரையில் வாழும் லக்ஷ்மியின் முலைப் பாலைப் பருகி வளர்ந்த மன்மதனைக்* கோபித்து அழித்தவர், கயிலாயத்தில் அமர்ந்துள்ள மூலப் பொருளானவர்,
* மன்மதன் திருமாலுக்கும், லக்ஷ்மிக்கும் பிறந்த மகன்.
***
பாற்கடலைக் கடைந்த காட்சி
(லண்டன் சுவாமிநாதன் ஜனவரி 2026 -ல் தாயலாந்தின் தலைநகரமான பாங்காக் நகர சுவர்ணபுரி விமான நிலையத்தில் எடுத்த பாற்கடல் கடைந்த சம்பவ படங்கள்)
கனை கடல் வயிறு குழம்பி வாய்விட … ஒலிக்கின்ற பாற்கடலின்உட்புறம் எல்லாம் கலக்கிக் கொண்டு வெளிப்பட,
வட தமனிய கிரி கம்பமாய் நட … வடக்கே உள்ள பொன்
மலையாகிய மேருவை மத்தாக நட்டு,
கண பண விபரித கந்தகாள புயங்க ராஜன் கயிறு என …
விபரீதமான நாற்றமுள்ள விஷத்தைக் கொண்ட நாகராஜனாகிய வாசுகியை கடையும் கயிறாகக் கொண்டு,
அமரர் அநந்த கோடியு(ம்) முறை முறை அமுது கடைந்த
நாள் … பல கோடி தேவர்களும் வரிசை வரிசையாக அமுதம் கடைந்த அந்த நாளில்,
ஒரு கதி அற உலகை விழுங்கும் மேக ஒழுங்கு போல … உய்யும்
வழி ஒன்றும் இல்லாத வகையில் உலகையே விழுங்க வந்த கரியமேகத்தின் வரிசை போல எழுந்து,
வினை மத கரிகளும் எண் திசாமுக கிரிகளும் முறுகிட
அண்ட கோளகை வெடிபட … செயலாற்றும் மத யானைகளும்,
எட்டுத் திசைகளில் உள்ள மலைகளும் சூடேறி வெந்து போக, அண்ட உருண்டைகள் யாவும் வெடிபட்டுப் போக,
Astronomy in Thiruppugaz
(இந்தப்பாடலில் வரும் அண்ட கோளங்கள் என்ற சொற்கள் அக்காலத்திலேயே எல்லா கிரகங்களும் நட்சத்திரங்களும் வட்ட வடிவானவை- கோளவடிவானவை- என்று இந்துக்கள் அறிந்ததைக் காட்டுகிறது. மாணிக்க வாசகரும் திருவாசகத்தில் இதை இன்னும் விரிவாகவே பாடியிருக்கிறார் இவை எல்லாம் மேலை நாட்டு அறிவியல் நூல்களில் மிகவும் பிற்காலத்தில்தான் இடம்பெற்றன. .அண்டம் என்றால் முட்டை கோளம் என்ற சொல்லிலிருந்தே க்ளோப் Globe என்ற ஆங்கிலச் சொல்லும் பிறந்தது.)
எவரையும் விஞ்சி வேல் இடு நஞ்சு போல … யாவரையும்
மேலிட்டு வேல் போலப் பரந்து வரும் ஆலகால விஷம் போல,
விடு குழை அளவும் அளந்து காமுகர் உயிர் பலி கவர் உறு …
தொங்கும் குண்டலம் உள்ள செவிவரையிலும் பாய்ந்து காமம்
கொண்டவர்களுடைய உயிரைக் கவர்வனவும்,
பஞ்ச பாதக விழி வலை மகளிரொடு அன்பு கூர்வது
ஒழிந்திடாதோ … ஐந்து பாதகங்களுக்கும் இடம் தருவனவுமான கண்கள் என்னும் வலையைக் கொண்ட விலைமாதர்கள் மீது காதல் மிகுவது என்னை விட்டு விலகாதோ?
விலைமாதரின் விழிகளுக்கு ஆலகால விஷத்தை உவமை சொல்லவந்த கவிஞர், முதல் ஒன்பது அடிகளில் பாற்கடலைக் கடைந்த வரலாற்றைக் கூறுகிறார்.
***
நரகம் பற்றிய பாடல்
ஏழ் நரகில் சேரும் அழற் காயனை உட் சோதி ஒளிப் பாதம் அளித்து அருள்வாயே … ஏழு* நரகத்தில் சேருதற்கு உரியவனும்,
தீக்கு இரையாகும் உடலை எடுத்தவனும் ஆகிய என்னை, ஜோதியுள் ஜோதியாய் விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிக.
****
இருமா நடை புக்கு உரை போய் உணர்வு அற்று … இருமலில்
வீழும் தன்மை வந்து சேர, பேச்சு அற்று, உணர்வும் போய்,
இளையா உளம் உக்கு உயிர் சோர … இளைத்து, உள்ளம்
மெலிந்து, உயிர் சோர்வுற்று,
எரி வாய் நரகில் புகுதாதபடிக்கு … நெருப்பு கொளுத்தும்
(கும்பிபாக)* நரகத்தில் புகாத வண்ணம்,
இரு பாதம் எனக்கு அருள்வாயே … உனது இரு திருவடிகளை
எனக்குத் தந்து அருளுக.
* எரிவாய் நரகம் – கும்பி பாகம் எனப்படும். இது ஏழு நரகங்களில் ஒன்று. பாவம் செய்தவரைக் குயச் சூளையில் சுடுவது போல் வாட்டும் நரகம்.
ஏழு நரகங்கள் பின்வருமாறு:
கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).
****
கடல் பற்றிய வருணனை Killer Whales, Dolphins
பரவு மகர முகரமு(ம்) மேவல் உற்ற சக(ர)ரால் விளைந்த
தமர(ம்) திமிர(ம்) பிரபல மோக ரத்ந சல ராசி கொண்ட
படியை முழுதும் ஒரு நொடியே மதித்து வலமாக வந்து
சிவனிடத்து அமர் சேயே … போற்றப்படும் மகர மீனும் சங்கும்
கொண்டுள்ளதாய், சகரரால் உண்டானதால் சாகரம் என்ற பெயர்
கொண்டதாய், பேரொலி உடையதாய், இருள் நிறைந்ததாய், பிரசித்தி பெற்றதாய், கவர்ச்சி உள்ளதாய், ரத்தினங்களும் மணிகளும் கொண்டதாய் உள்ள கடல் சூழ்ந்த உலகை, முழுதும் ஒரு நொடிப் பொழுதில் அளவிட்டு வலம் வந்து (தந்தையாகிய) சிவபெருமானிடத்து அமர்ந்த குழந்தையே,
***
இடம் அடு சுறவை முடுகிய மகரம் எறி கடல் இடை எழு
திங்களாலே … இருக்கும் இடத்திலிருந்தே வருத்தும் சுறா மீனை
விரட்டி அடிக்கும் மகர மீன்கள் வாழ்வதும் அலைகளை வீசுவதுமான கடலில் எழுகின்ற சந்திரனாலும்,
இந்த வரிகள் கடல் பற்றிய தமிழர் அறிவினைக் காட்டுகிறது சுறாமீன்களுக்கு எதிரி டால்பின்களும் கில்லர் வேல் என்னும் திமிங்கிலங்களும் Killer Whales, Dolphins ஆகும்; இவை மீன் போன்ற வடிவத்தில் இருந்தாலும் இவைகள் மீன் இனத்தைச் சேர்ந்தவை அல்ல ; குட்டி போட்டு பாலுவுட்டும் மிருகங்கள் வகை ஆகும்.
****
இரவிலும் பகலிலும் முத்தமிழில் பாட ஆசை

இரவுபகற் பலகாலும் இயலிசைமுத்தமிழ்கூறி … இரவும், பகலும்,பலமுறையும், இயல், இசை, நாடகம் என்ற மூன்று தமிழினாலும் உன்னைப் புகழ்ந்து பாடி,
திரமதனைத் தெளிவாகத் திருவருளைத் தருவாயே …
நிலையான பொருள் எதுவோ அது எனக்குத் தெளிவாக விளங்க உனது திருவருளைத் தந்தருள்வாயாக.
பரகருணைப் பெருவாழ்வே … மேலான கருணையுடன் விளங்கும்பெருவாழ்வே,
பரசிவதத்துவஞானா … உயர்ந்த சிவமயமான உண்மையாம் ஞானப்பொருளே,
அரனருள்சற் புதல்வோனே … சிவபிரான் அருளிய நற்குணப்
பிள்ளையே,
அருணகிரிப் பெருமாளே. … திருவண்ணாமலையில் வீற்றிருக்கும்பெருமாளே.
பாரதியாரும் இப்படிப் பாடியிருக்கிறார்
விண்டுரை செய்குவேன் கேளாய் புதுவை விநாயகனே
தொண்டுனது அன்னை பராசக்திக்கென்றும் தொடர்ந்திடுவேன்
பண்டைச் சிறுமைகள் போக்கி, என் நாவில் பழுத்த சுவை
தெண்டமிழ் பாடல் ஒரு கோடி மேவிடச் செய்குவையே!
***
தெள்ளு கலைத்தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பஞ் செய்திடு வேன்;
எள்ளத் தனைப் பொழு தும்பய னின்றி
இராதென்றன் நாவினி லே
வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி
வேல், சக்தி வேல்,சக்தி வேல்! 5
****
அருவி போலக் கவி பொழிய-எங்கள்
அன்னை பாதம் பணிவேனே
குருவிப்பாட்டை யான்பாடி- அந்தக்
கோதை பாதம் அணிவேனே
—subham—
Tags- திருப்புகழில் ஐம்படைத் தாலி, பாற்கடலைக் கடைந்த காட்சி , ஏழுவகை நரகம்- Part 28 , அருணகிரி நாதர் , அரியசெய்திகள், பாரதி விண்ணப்பம், கடல் வருணனை