Post No. 15,448
Date uploaded in Sydney, Australia – 23 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
29திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 29
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 29
திருப்புகழில் அணு விஞ்ஞானம் – மேலும் ஒரு புதிய தகவல்
பிரம்மத்தைக் /கடவுளை/
“அணுவுக்கும் சிறியதாய் பெரியதற்கும் பெரியதாய்” என உபநிஷத்துக்கள் சித்தரித்துள்ளன.
கடோபநிஷத் , ச்வேதாச்வரோபநிஷத்தில் உள்ள வாக்கியம் “அணோர் அணீயாம் மஹதோ மஹீயாம் “
இதை அவ்வையார், திருமூலர், இடைக்காடர் முதலியோரும் பின்னர் செப்பியுள்ளனர். உபநிஷத்துக்கள் வருணிப்பதை எல்லா அடியார்களும் தமிழில் மொழிபெயர்த்துள்ளனர்; ஆனால் அணுவுக்குள் இருக்கும் ப்ரோட்டான், எலெக்ட்ரான் நியூட்ரான் பற்றிய அறிவு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான் மேலை நாட்டினருக்குத் தெரியும். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அணுவுக்குள் இருக்கும் அசைவு பற்றி முதல் முதலில் தமிழில் சொன்னவர் அருணகிரிநாதர்தான்; ஏனைய எல்லோரும் அணுவினை விடச் சிறியவன் மலையை விடப்பெரியவன் என்றே பாடியுள்ளனர் அணுவுக்குள் என்ன நிகழ்கிறது என்று பாடவில்லை
அருணகிரிநாதர் கண்டுபிடித்த அணு விஞ்ஞானம் (Date uploaded in Sydney, Australia – 30 January 2026 ;Post No.15,375) என்ற எனது ஜனவரி கட்டுரையில் சொன்னதைவிட இங்கு இன்னும் தெளிவாகப் பேசுகிறார் அருணகிரி!
“உனது பததூள் புவன கிரிதான் … உன் பாதத்தில் உள்ள தூசானது பூமியிலுள்ள மலைகளுக்குச் சமம்.
உனது கிருபாகரம் ஏதோ … அப்படியென்றால் உன் திருவருள்
எவ்வளவு பெரியதோ? (யான் அறியேன்).
பரம குருவாய் அணுவில் அசைவாய் … மேலான குருமூர்த்தியாய், அணுவிலும் அசைவு ஏற்படுத்துபவனாய்,
பவன முதலாகிய பூதப் படையும் உடையாய் … காற்று முதலிய
ஐம்பெரும் பூதங்களை ஆயுதமாக உடையவனே,
சகல வடிவாய் பழைய வடிவாகியவேலா … எல்லா உருவமாயும், பழமையான உருவத்திலும் அமைந்த வேலனே,”
***
வியாக்ரபாதர், பதஞ்சலி கண்ட நடராஜ தாண்டவம்
கருணை ம்ருகேந்த்ர அன்பருடன் … கருணை நிறைந்த
புலிக்கால் கொண்ட வியாக்ரபாதருடன்,
உரகேந்த்ரர் கண்ட கடவுள் நடேந்த்ரர் மைந்த … சர்ப்ப
சிரேஷ்டரான பதஞ்சலி முநிவரும் தரிசித்த நடராஜரின்* மகனே,
வரை சாடும் கலபக கேந்த்ர தந்த்ர அரச … மலைகளைத்
தூளாக்கும் தோகை உடைய மயில் வாகனனே, இலக்கிய
நூல்களில் வல்லவனே, அரசனே
நிசேந்த்ர கந்த … சத்திய சிரேஷ்டனாகிய கந்தனே,
குலிச கர இந்த்ரர் தங்கள் பெருமாளே. … வஜ்ராயுதத்தைக்
கையில் கொண்ட தேவேந்திரர்களுக்குப் பெருமாளே.
* தில்லையில் நடராஜப் பெருமானது ஆடல் வியாக்ரபாதர், பதஞ்சலி என்ற இருவர் காணும் பொருட்டே ஆடப்பட்டது.
***
திருப்புகழில் சுந்தரமூர்த்தி நாயனார் கதை
ஒரு சிறுவன் மணம் அது செய் போதில் எய்த்து வந்து கிழ
வடிவு கொடு முடுகி வாசலில் புகுந்து உலகு அறிய இவன்
அடிமை யாம் என கொணர்ந்து சபை ஊடே … ஒப்பற்ற
சிறுவனான நம்பியூரன் என்னும் சுந்தர மூர்த்திக்குத் திருமணச்
சடங்கு செய்யப்படும் சமயத்தில், களைத்து வந்து ஒரு கிழ உருவம் கொண்டு வேகமாக முன் வந்து, (மண) வாசலில் புகுந்து உலகோர் யாவரும் அறியும்படி இந்தச் சிறுவன் (எனக்கு) அடிமையாம் என்று (ஒரு ஓலையைக்) கொண்டு வந்துசபையோர்களின் மத்தியில் அறிவிக்க,
ஒரு பழைய சருகு மடி ஆவணத்தை அன்று உரமொடு
அவன் அது வலியவே கிழிக்க நின்று உதறி முறை இடு
பழைய வேத வித்தர் தந்த சிறியோனே … ஒரு பழைய
ஓலையில் எழுதப்பட்டு மடிந்து வைத்திருந்த பத்திரம் ஒன்றை
வலிமையுடன் அந்தச் சிறுவன் வேணுமென்றே பற்றிக் கிழித்தெறிய, (அப்போது கை கால்களை) உதறிக் கொண்டு இது முறையோ என்று கூச்சலிட்ட பழையவரும், வேதத்தை நன்கறிந்த
முதல்வருமான சிவபெருமான் பெற்றருளிய குழந்தையே,
அரிய உடு பதி கடவி ஆடகச் சிலம்பொடு அழகு வட(ம்)
மணி முடி வியாளம் இட்டு அழுந்த அமரர் ஒடு பலர் முடுகி
ஆழியைக் கடைந்து அமுதாக அருளும் அரி திரு மருக …
அருமையான சந்திரனை தூணாக இருக்கும்படிச் செலுத்தி வைத்து,
பொன் மலையாகிய மேரு மலையை மத்தாக வைத்து, ரத்தின முடிகளை
உடைய பாம்பாகிய வாசுகியை கயிறாகப் பூட்டி, அழுத்தமாக
தேவர்களோடு பலரும் விரைவுடன் பாற்கடலைக் கடைந்து (இறுதியில்)
அமுது வரச் செய்து, அதனை (தேவர்களுக்குப்) பகிர்ந்து அளித்த
திருமாலின் மருகனே,
வாரணத்தை அன்று அறிவினுடன் ஒரு கொடியிலே தரித்து
உகந்த அருண கிரி நகரில் எழு கோபுரத்து அமர்ந்த
பெருமாளே. …
* சூரனுடைய உடல் வேலால் பிளவுபட, ஒரு கூறு மயிலாகவும், மற்றொரு கூறு சேவலாகவும் முருக வேளை எதிர்த்து வர, அவர் அருள் கண்ணால், மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆயின.
***
பெண்களின் மார்பக வருணனை
கமல மொட்டைக் கட்டு அழித்துக் குமிழியை நிலை
குலைத்துப் பொன் குடத்தைத் தமனிய கலச வர்க்கத்தைத்
தகர்த்து … தாமரையின் மொட்டை அழகை இழக்கச் செய்து, நீர்க்
குமிழியை நிலை குலைந்து உருவு இழக்கச் செய்து, தங்கக் குடத்தையும் பொன்னாலாகிய கலசக் கூட்டங்களையும் நொறுங்கச் செய்து,
குலை அற இளநீரைக் கறுவி வட்டைப் பின் துரத்திப்
பொருது அபசயம் விளைத்துச் செப்பு அடித்துக் குலவிய கரி
மருப்பைப் புக்கு ஒடித்து … குலை குலையாயிருக்கும் அழகு
ஒழியும்படி இளநீரைக் கோபித்து, சூதாடும் சொக்கட்டான் காய்களைப் பின்னாலே துரத்தி சண்டை செய்து தோல்வி உறச் செய்து, சிமிழை வேலைப்பாடு செய்பவர்கள் அடித்து உருவாக்கி, விளங்கிய யானையின் தந்தத்தைப் போய் ஒடித்து,
திறல் மதன் அபிஷேகம் அமலர் நெற்றிக் கண் தழற்குள்
பொடி செய்து அதிக சக்ரப் புள் பறக்கக் கொடுமையில் அடல்
படைத்து அச்சப்படுத்தி … சக்தி வாய்ந்த மன்மதனுடைய மகுடத்தை சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணின் நெருப்பில் பொடி செய்து, அதிக தூரத்தில் உள்ள சக்ரவாகப் பறவை பறந்து போகும்படி செய்து, கடுமையான வலிமை கொண்ட அதனைப் பயப்படும்படி செய்து,
சபதமொடு இரு தாளம் அறைதல் கற்பித்துப் பொருப்பைப்
பரவிய சிறகு அறுப்பித்துக் கதிர்த்துப் புடைபடும் அபிநவ
சித்ரத் தனத்துத் திருடிகள் உறவு ஆமோ … சப்தத்துடனே
இரண்டு தாளங்கள் அறைந்து மோதிக்கொள்ளும்படிச் செய்து,
மலைகளின் பரந்த இறகுகளை அறும்படிச் செய்து, வளர்ச்சி உற்ற பக்கத்து இடமெல்லாம் பரவி புதுமையும் அழகு உள்ளதுமான தனங்களை உடைய வஞ்சனை உடைய விலைமாதர்களின் உறவு நல்லதாகுமா?
இது தனங்களின் அழகை விவரிக்கும் பாடல். கமல மொட்டு, நீர்க்குமிழி, பொன் குடம், பொன் கலசம், இள நீர், வட்டு, செப்பு, யானைத் தந்தம், மன்மதன் மகுடம், சக்ரவாகப் பறவை, தாளம், மலை இவைகளை மார்பகங்கள் வெல்கின்றன என்பதை முதல் 12 அடிகள் விளக்குகின்றன.
***
7 தமிழ் இசைக் கருவிகள்
தனனதன தனனதன தந்தனந் தந்தனந்
தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந் தடம்
தவில்முரசு பறைதிமிலை டிங்கு டிங்குந்து அடர்ந்த …
தனனதன தனனதன தந்தனந்
தந்தனந் தகுகுகுகு குகுகுகுகு டங்குடங் குந்தடம் – என்று வளைந்த
மேளம், முரசு, பறை, திமிலை (இவை எல்லாம் கூடி) டிங்கு டிங்குந்து என்று பேரொலி எழுப்ப,
அண்டர் பேரி தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண்
டுண்டுடுண் டிமிடிமிட டகுர திகுகு … தேவர்களின் பேரி வாத்தியம்
தடுடுடுடு டுடுடுடுடு டுண்டுடுண்
டுண்டுடுண் டிமிடிமிட டகுர திகுகு என்று ஒலிக்க,
சங்கு வெண் கொம்பு திண் கடையுகம் ஒடு ஒலிய … சங்கும்,
வெண்ணிறமுடைய ஊது கொம்பும் வலிமையாக ஊதி யுக முடிவு போல்ஒலி செய்ய,
***
சரப பட்சி கதை
வெஞ்சச் சிம்புள் சொருபம் அது ஆனவர் பங்கில் பெண்
கற்புடைய பெண் நாயகி விந்தைச் செம் கைப் பொலி சுத …
கடுமை கொண்டவராய் சரபப் பட்சியின்* வடிவம் கொண்டவராகிய சிவபிரானின் இடப் பாகத்தில் இடம் கொண்டவளும், கற்பு நிறைந்த பெண்களின் நாயகியுமாகிய பார்வதியின் அழகிய செங்கையில் விளங்கும் குழந்தையே,
வேடுவர் புன(ம்) மீதே வெண்டித் தங்கித் திரி கிழவா …
வேடர்களின் தினைப் புனத்தில் களைப்பு உற்று தங்கித் திரிகின்ற
கிழவனே, அதி துங்கத் துங்கக் கிரி அருணாபுரி வெம் கண் சிங்கத்து
அடி மயில் ஏறிய பெருமாளே. … மிக உயர்ந்ததும்,
பரிசுத்தமானதுமான மலை உள்ள திருஅண்ணாமலை என்னும் ஊரில்,விரும்பத்தக்க கண்களை உடைய சிங்காசனம் போன்ற மயிலின் மேல் ஏறிய பெருமாளே.
* இரணியனை வதைத்த நரசிம்மம் (திருமால்) உக்கிரம் கொண்டு உலகங்களை வருத்தத் தொடங்கினார். தேவர்கள் முறையிட, சிவபெருமான் வீரபத்திரரை ஏவ, அவர் சரபப்பட்சியின் உருவம் எடுத்து அந்த நரசிங்கத்தைக் கீறி, அதன் தோலையும், முகத்தையும் சிவன் முன் வைத்தார். அதனால் சிவபெருமானுக்கு, சிங்க உரியும், நாரசிங்காம்பரன் என்ற பெயரும் உண்டாயின – சிவ புராணம்.
***
சிவாய நம மந்திர விளக்கம்

செயசெய அருணாத்திரி சிவய நம … அஜயஜெய அருணாசலா,
சிவயநம,*1
செயசெய அருணாத்திரி மசிவயந … அஜயஜெய அருணாசலா,
மசிவயந,*2
செயசெய அருணாத்திரி நமசிவய திருமூலா … அஜயஜெய
அருணாசலா, நமசிவய*3, மூலப் பொருளே,
செயசெய அருணாத்திரி யநமசிவ … அஜயஜெய அருணாசலா,
யநமசிவ*4,
செயசெய அருணாத்திரி வயநமசி … அஜயஜெய அருணாசலா,
வயநமசி*5,
செயசெய அருணாத் திரி சிவய நமஸ்த்து என மாறி …
அஜயஜெய அருணாசலா, சிவயநமஸ்த்து*6 என்று மாறி மாறிச் செபித்து,
செயசெய அருணாத் திரி தனின் விழி வைத்து … ஜெயஜெய
என்று கூறி அருணாசலத்தில் கண்ணை வைத்து,
அர கர சரணாத்திரி என உருகி … ஹர ஹர திருவடி மலையே
(சிவ மலையே) என்று கூறித் தியானித்து,
செயசெய குரு பாக்கியம் என மருவி சுடர் தாளை … ஜெய ஜெய
என்னும் இந்த மந்திரம் எங்கள் குரு தந்த பாக்கியம் என்று என் உள்ளம் பொருந்தி, பேரொளியாக விளங்கும் திருவடியை
சிவசிவ சரணாத் திரிசெய செயென … சிவசிவ திருவடி
மலையே ஜெயஜெய எனப் புகழ்ந்து,
சரண் மிசை தொழுது ஏத்திய சுவை பெருக … திருவடி
(சிவமலை) யின் மீது வீழ்ந்து தொழுது போற்றிய இன்பம் பெருக
திருவடி சிவ வாக்கிய கடல் அமுதைக் குடியேனோ …
அந்தத் திருவடியின் (ஆண்டவனது) சிவ மந்திரமாகிய பாற்கடலில்
இருந்து கிடைத்த அமுதம்போன்ற இன்பரசத்தைப் பருகி மகிழேனோ?
*1 ‘சிவயநம’ என்பது வேதாகமப்படியான பஞ்சாட்சரம்.
*2 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது ‘மசிவயந’.
*3 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது ‘நமசிவய’.
*4 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது ‘யநமசிவ’.
*5 இந்த மந்திரத்தில், கடைசி அட்சரம் முதலாக வந்தால் வருவது ‘வயநமசி’.
மீண்டும் கடைசி அட்சரத்தை முதலாக வைத்தால் ‘சிவயநம’ என்ற பஞ்சாட்சர சக்கரம் தொடர்ந்து மாறி மாறி வரும்.
To be continued…………………………..
–subham—
Tags- திருப்புகழில் அணு விஞ்ஞானம்,புதிய தகவல்; சரப பட்சி கதை – 29 , சிவாய நம மந்திர விளக்கம், சரப பட்சி, அருணகிரிநாதர்,அரிய செய்திகள், வியாக்ரபாதர், பதஞ்சலி