Post No. 15,456
Date uploaded in Sydney, Australia – 26 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
32 திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 32
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 32
வள்ளி, தேவயானையின் முற்பிறப்பு!
கல்லிலே பொன் தாள் படவே அது நல்ல ரூபத்தே வர …
கல்லின் மீது அழகிய திருவடி பட்டவுடனே அது நல்ல பெண்
உருவாய் வர,
கான் இடை கெளவை தீரப் போகும் இராகவன் மருகோனே …
காட்டில் (அகலிகைக்கு உற்ற) துன்பம் நீங்கும்படி சென்ற ராமனுடைய மருகனே,
தெள்ளி ஏமுற்று ஈரம் முன் ஓதிய சொல் வழாமல் … ஆய்ந்து,
இன்பமுற்று, முன்பு செய்த வாக்குறுதி* தப்பாமல்,
தான் ஒரு வான் உறு செல்வி மார்பில் பூஷணமாய் அணை
மணவாளா … விண்ணுலகில் வளர்ந்த செல்வியாகிய தேவயானையை தன் மார்பில் ஆபரணம் போல் அணைந்த மணவாளனே,
தெள்ளும் ஏனல் சூழ் புன(ம்) மேவிய வள்ளி வேளைக்கார
மனோகர … நன்கு விளங்கிய தினைப் புனத்தில் இருந்த வள்ளிக்கு
காவற்காரனாய் விளங்கும் மனத்துக்கு இனியோனே,
தில்லை மேலைக் கோபுரம் மேவிய பெருமாளே. … தில்லை
மேற்குக் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* முற்பிறப்பில் திருமாலின் மகளாகத் தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற கன்னிகைகளுக்கு மறுபிறவியில் அவர்கள் முறையே தேவயானை, வள்ளி என்று பிறந்து முருகனை மணந்து கொள்வர் என்று திருமால் வாக்களித்தார்.
***
அருணகிரியின் வரிகள்
கல்லிலே பொன் தாள் படவே அது நல்ல ரூபத்தே வர …
கல்லின் மீது அழகிய திருவடி பட்டவுடனே அது நல்ல பெண்
உருவாய் வர,
கான் இடை கெளவை தீரப் போகும் இராகவன் மருகோனே …
காட்டில் (அகலிகைக்கு உற்ற) துன்பம் நீங்கும்படி சென்ற ராமனுடைய மருகனே,
கம்பரின் வரிகள்
ராமபிரானின் கைவண்ணத்தையும் கால் வண்ணத்தையும் கம்பனும் அழகாக வருணிக்கிறார்
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றிமற்றோர் துயர்வண்ணம் உறுவதுண்டோ
மைவண்ணத்தரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன்
கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்குகண்டேன்
***
தில்லை மூவாயிரர் புகழ்
வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை
மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே …
வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும்
யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே*,
வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள்
கோபுர மேலை வாயிலின் மயில் மீது ஏறிய பெருமாளே. …
பொலிவு பொருந்திய மலை அரசாக விளங்கும் மேரு மலை போல உயர்ந்துள்ள கோபுரத்தின் மேற்கு வாயில் புரத்தில் மயிலின் மேல் விளங்கும் பெருமாளே.
***
ராவணன் நசுங்கிய கதை
வலித்துத் தோள் மலை ராவணன் ஆனவன் எடுத்தப் போது …
வன்மையுடன் ஆட்டி அசைத்து, தனது தோளால் (கயிலை) மலையை இராவணன் என்பவன் எடுத்த பொழுது*,
உடல் கீழ் விழவே செய்து மகிழ்ப் பொன் பாத … அவனுடைய
உடலைக் கீழே விழச் செய்து மகிழும் அழகிய பாதங்களை உடையவரும்,
சிவாய நமோ அர சம்பு பாலா … சிவாயநம என்னும்
ஐந்தெழுத்துக்கு மூலப்பொருளானவருமான சிவசம்புவின் குமாரனே,
மலைக்கு ஒப்பா முலையாள் குற மாதினை அணைத்து … மலை
போன்ற மார்பகங்களை உடைய குறப்பெண்ணாகிய வள்ளியைத் தழுவி,
சீர் புலியூர் பரமாகிய … பெருமை வாய்ந்த புலியூர் என்னும்
சிதம்பரத்தில் மேலான பொருளாய்ச் சிறந்து விளங்கும்
வடக்குக் கோபுர வாசலில் மேவிய தம்பிரானே. … வடக்குக்
கோபுர வாசலில் வீற்றிருக்கும் தனிப்பெரும் தலைவனே.
* இராவணன் திக்கு விஜயம் செய்த போது, அவனுடைய புஷ்பக
விமானம் கயிலை மலையைக் கடக்க முடியாது தடைபட்டது. அந்த மலையை வேரோடு பறித்து எறிய, அவன் தன் கைகளால் பெயர்த்து அசைக்க, சிவ பெருமான் தமது கட்டை விரலால் அம் மலையை அழுத்த, இராவணன் நசுக்குண்டு சாமகானம் பாடி, இறைவனை மகிழ்வித்து உய்ந்தான்.
மூவர் பாடிய தேவாரப் பாடல்களிலும் இதைக் காணலாம்.
***
ராமாயணக் காட்சிகள்
கொடுங்கைப் பட்ட மராமரம் ஏழுடன் நடுங்க … நீண்ட
கிளைகளை உடைய ஏழு மராமரங்களை அவற்றின் உடல்கள்
நடுங்கும்படியாக அம்பை விட்டும்,
சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய குரங்கைச் செற்று …
சுக்ரீவனுடன் போர் புரிந்த குரங்காகிய வாலியை அழித்தும்,
மகா உததி தூள் எழ நிருதேசன் … பெரிய கடலில் தூசி
கிளம்பும்படி, அரக்கர் தலைவன் ராவணனுடைய
குலம் கண் பட்ட நிசாசரர் கோ என … குலத்தைச் சார்ந்த
அரக்கர்கள் எல்லாம் கோவென்ற சத்தத்தோடு அலற,
இலங்கைக்குள் தழலோன் எழ … இலங்கை நகருள் அக்கினி
பகவான் எழுந்து தீப்பற்றி எரியச் செய்ய,
நீடிய குமண்டைக் குத்திர ராவணனார் முடி அடியோடே
பிடுங்க … செல்வம் மேலீட்டால் செருக்குண்ட, வஞ்சகம் நிறைந்த
இராவணனனுடைய தலைகள் பத்தும் அடியோடு அறுபட்டு
விழும்படியாக
தொட்ட சர அதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மா
மருகா … செலுத்திய அம்பைக் கொண்ட நாயகனாம் இராமன் மிகுந்த அன்பு கொள்வதற்குத் தகுந்த, நன்கு சிறந்த மருகனே,
இயல் ப்ரபஞ்சத்துக்கு ஒரு பாவலனார் என … இந்த
உலகத்துக்கு ஒப்பற்ற கவி அரசர் என்று
விருது ஊதும் ப்ரசண்டச் சொல் சிவ வேத சிகாமணி …
வெற்றிச் சின்னங்கள் முழங்குகின்ற, பெருமையுடைய சொற்களைக்
கொண்ட தேவாரப் பதிகங்களை ஓதிய சிவ வேத சிகாமணியாகிய ஞான சம்பந்த மூர்த்தியே,
ப்ரபந்தத்துக்கு ஒரு நாத சதாசிவ … நூல் வகைகளுக்கெல்லாம்
ஒப்பற்ற தலைவனே, என்றும் மங்களகரமானவனே,
பெரும்பற்றப் புலியூர் தனில் மேவிய பெருமாளே. …
பெரும்பற்றப் புலியூர் என்னும் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
***
ஏழு கடல் மணல் துளிகளை எண்ண முடியுமா ?
எழுகடல் மணலை … ஏழு கடல்களின் கரையிலுள்ள
மணலையெல்லாம்
அளவிடி னதிகம் … எண்ணிப்பார்த்தால் வரும் அளவை விட அதிகம்
எனதிடர் பிறவி அவதாரம் … என் துன்பம் நிறை பிறவிகள் என்ற
அவதாரங்கள்.
இனியுன தபய மெனதுயி ருடலும் … இனி உனக்கே
அடைக்கலமாம் என் உயிரும், உடலும்.
இனியுடல் விடுக முடியாது … இனியும் பிறப்பெடுத்து உடலைவிட
என்னால் முடியாது.
கழுகொடு நரியு மெரிபுவி … கழுகும், நரியும், நெருப்பும், மண்ணும்,
மறலி கமலனு மிகவும் அயர்வானார் … யமனும், பிரம்மாவும்,
என்னுடலை பலமுறை பிரித்தும், பிறப்பித்தும் சோர்வடைந்து விட்டார்கள்.
கடனுன தபயம் … என் கடமை இனி உன்னிடம் அடைக்கலம்
புகுவதே ஆகும்.
அடிமையு னடிமை … யான் அடிமைசெய்வது உன்னிடம் அடிமை
பூணுதற்கே ஆகும்.
கடுகியு னடிகள் தருவாயே … நீ விரைவில் உன் திருவடிகளைத்
தர வேண்டும்.
***
சீவன் சிவன் ஆக வேண்டும் !
காவி யுடுத்தும் … காவித் துணியை உடுத்திக் கொண்டும்,
தாழ்சடை வைத்தும் … தாழ்ந்து தொங்கும் சடையை வளர்த்து
வைத்தும்,
காடுகள் புக்கும் தடுமாறி … காடுகளில் புகுந்து தடுமாறியும்,
காய்கனி துய்த்தும் … காய், பழவகைகளைப் புசித்தும்,
காயம் ஒறுத்தும் … தேகத்தை விரதங்களால் வருத்தியும்,
காசினி முற்றும் திரியாதே … உலகம் முழுவதும் திரிந்து
அலையாமல்,
சீவன் ஒடுக்கம் … சீவனை* (சிவமயமாக) ஒடுக்குதலும்
பூத வொடுக்கம் … ஐம்பூதங்களுடைய ஒடுக்குதலும்
தேற உதிக்கும் … நன்றாக உண்டாகும்படி,
பரஞான தீப விளக்கம் காண … மேலான ஞான ஒளி
விளக்கத்தினையான் காணும்படி,
எனக்குன் சீதள பத்மம் தருவாயே … எனக்கு உன் குளிர்ந்த
தாமரை அடிகளைத் தந்தருள்க.
* சீவன் என்பதில் உள்ள (சீ) இரு மாத்திரை நெடில். அதனை ஒரு மாத்திரை குறில் எழுத்தாக (சி) ஒடுக்கினால், சீவன் சிவன் என்று ஆகிவிடும்.
***
நாதத்து ஓசைக் காண் துணையே சுடர் மூலத்தோனைத்
தூண்டிடவே உயிர் நாடிக் காலில் சேர்ந்திடவே அருள் …
உனது திருச்சிலம்போசை முதலிய நாதங்களைக் கேட்பதற்குத் துணை புரியும் தேவனே, மூலாதாரக் கனலைத் தூண்டி எழுப்பி, பிராணவாயு சுழுமுனை* நாடி மார்க்கத்தில் சார்வதற்கு அருள் புரிவாயாக.
அவ்வையாரும் விநாயகர் அகவலில் இதையே சொல்கிறார்
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி……
***
ஐந்து வகை இசைக் கருவிகள்
திகுட திந்திந் தகுட தந்தந் திகுட திந்திந் தோதிந்தம் டகுட
டண்டண் டிகுட டிண்டிண் டகுட டண்டண் டோடிண்டிண்
டிமுட டிண்டிண் டுமுட டுண்டுண் டிமுட டிண்டு என்றே
சங்கம் பல பேரி … (இதே ஒலியில்) ஒலிக்கும் சங்கமும் பல
பேரிகைகளும்,
செக கணம் சஞ்ச(ல்)லிகை பஞ்சம் பறை முழங்கும் போர் …
செககணம்சம் என்று ஒலித் திரளை எழுப்பும் சல்லிகை என்ற பெரும்பறையும், ஐந்து* வகையான இசைக் கருவிகளும் பறைகளும் முழங்குகின்ற போர்க் களத்தில்,
* ஐந்து வகையான பறைகள்:
தோல்கருவி, தொளைக்கருவி, நரப்புக் கருவி, மிடற்றுக் கருவி, கஞ்சக் கருவி.
–subham—Tags– வள்ளி, தேவயானை முற்பிறப்பு, ‘சீவன்’ சிவன் ஆக வேண்டும், தில்லை மூவாயிரர் புகழ் ,Part 32, அருணகிரிநாதர் ,அரிய செய்திகள்