நிகழ்காலத்தில் கவனம் செலுத்துக! (Post.15,458)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,458

Date uploaded in London – 26 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 சுபாஷிதச் செல்வம் 

நிகழ்காலத்தில் கவனம் செலுத்துக! 

ச. நாகராஜன் 

அர்த்தமுள்ள சில சுபாஷிதங்கள் இதோ: 

இனிய சொற்களைப் பேசுக!

 ப்ரிய வாக்ய ப்ரதாதேன சர்வே ஜந்தவ: துஷ்யந்தி |

தஸ்மாத் (ப்ரிய வாக்யம்) வக்தவ்யம் ஏவ வசனே கா தரித்ரதா ||

இனிமையான வார்த்தைகளைப் பேசுவதால் எல்லோரும் சந்தோஷம் அடைகிறார்கள்.  அப்படி இருக்க, எனது நண்பனே! ஏன் இனிமையாகப் பேசுவதில் கஞ்சத்தனத்தைக் காட்ட வேண்டும்?

திருவள்ளுவரின் குறளுடன் இதை ஒப்பிடலாம். 

இனிய உளவாக இன்னாத கூறல்

கனி இருப்பக் காய் கவர்ந்தற்று (குறள் எண் 100)

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றைப் பேசாமல் கடுமையான சொற்களைப் பேசுவது இனிய பழம் இருக்கும் போது அதை உண்ணாமல் காயைப் பறித்துத் தின்பதைப் போன்றதாகும். 

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

 பஹுனாம் அல்பசாராணாம் சம்ஹதி: கார்யசாதிகா |

த்ருணை விதீயதே ரஜ்ஜுர்பத்யந்தே மத்ததந்தின: ||

 ஏராளமான பலஹீனமான அல்ப பூச்சிகள் ஒன்றாக இணைந்து கடினமான காரியங்களைச் சாதிக்கின்றன. பலமான மதம் பிடித்த யானையைக் கட்டி இழுக்க மெல்லிய வைக்கோல் இழைகள் ஒன்று சேர்ந்து பலமான கயிறாகத் திரிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

நிகழ்காலத்தில் கவனம் செலுத்துக! 

கதே ஷோகோ ந கர்தவ்யோ, பவிஷ்யம் நைவ சிந்தயேத் |

வர்தமானேன காலேன, வர்தயந்தி விசக்ஷணா: ||

 பழைய கால (கடந்து போன) நஷ்டங்களையோ எதிர்காலத்தையோ நினைத்து கவலைப்படாதீர்கள். நிகழ்காலத்தில் கவனம் செலுத்துபவர்களே புத்திசாலிகள்!

குணம் வம்ச பரம்பரையாக வருமா?

 ந வ்யாப்திரேஷா குணினோ குணவான் ஜாயதே த்ருவம் |

சந்தனோநளசந்தக்தோ ந பஸ்ம சுரபி க்வசித் || 

நல்ல குணமுள்ள புண்யசாலிகளுக்குப் பிறந்தவர்கள் அவர்களுடைய குணங்களை அப்படியே கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு உலக நியதியும் இல்லை. சந்தனக்கட்டைகளை எரித்து சாம்பலாக்கிய பிறகு அந்த சாம்பல் சந்தனத்தின் மணத்தைக் கொண்டிருப்பதில்லை என்பதைக் கவனியுங்கள்!

நிர்வாண தேசத்தில் வண்ணானுக்கு என்ன வேலை!

 கிம் கரிஷ்யந்தி வக்தார: ஸ்ரோதா யத்ர ந வித்யதே |

நக்னக்ஷபணாகே தேஷே ரஜக: கிம் கரிஷ்யந்தி || 

கேட்க ஒருவரும் கூடியிருக்காத இடத்தில் ஒரு பேச்சாளர் என்ன செய்வார்? நிர்வாண தேசத்தில் அனைவரும் நிர்வாணமாக இருக்கும் போது அங்கு வண்ணானுக்கு என்ன வேலை?

**

Leave a comment

Leave a comment