திருப்புகழில் ஐந்து கலைகள்,  ஐந்துஎழுத்து, பஞ்ச பூதங்கள் விளக்கம்- Part 34 (Post.15,463)


Written by London Swaminathan

Post No. 15,463

Date uploaded in Sydney, Australia –  28 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part34

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 34

***

பஞ்சாட்சர விளக்கம்

மதியம் மண் குணம் அஞ்சு நால் முக(ம்) நகர(ம்) முன்கலை …

சந்திரனது உதவியைக் கொள்ளும் மண்ணின் குணம் ஐந்தாகும்.*1 (அந்த மண்ணுலகம்) நாற் கோண வடிவைக் கொண்டது. (பஞ்சாட்சரத்தில்)

 என்னும் எழுத்தையும், (பஞ்ச*2 கலைகளில்) முன் கலையான நிவர்த்தி கலையையும் கொண்டது.

கங்கை நால் குண(ம்) மகரம் … நீர் (அப்பு மண்டலம்)

நான்கு*3 குணம் கொண்டது. இது பஞ்சாட்சரத்தில் ம என்னும்

எழுத்தைக் குறிக்கும்.

முன் சிகர(ம்) அங்கி மூணிடை தங்கு கோண(ம்) … அப்பு

மண்டலத்துக்கு முன் உள்ள அக்கினி மண்டலம் பஞ்சாட்சரத்தில்

சி என்னும் எழுத்தைக் குறிக்கும். (இந்த அக்கினி மண்டலம்)

மூன்று*4 குணமும் முக்கோணமும் கொண்டது.

மதனம் முன் தரி சண்ட மாருதம் இரு குணம் பெறில் அஞ்சு

எல் ஓர் தெரு வகரம் … அழித்தல் தன்மையை தன்னிடத்தே

கொண்டுள்ள பெருங் காற்று (வாயு மண்டலம்) இரண்டு*5

குணங்களைப் பெற்றதாய், ஐந்துடன் ஒன்று சேர்கின்ற (ஆறு) ஒளி

பொருந்திய வீதியாகும். (அதாவது வாயு மண்டலம் ஆறு கோண

வடிவானது). பஞ்சாட்சரத்தில் உள்ள வா என்னும் எழுத்தைக் குறிக்கும்.

மிஞ்சி அகன் படாகம் ஒர் ஒன்று சேரும் கதிர் அடங்கிய

அண்ட கோளகை யகர(ம்) நின்றிடும் … விரிந்துள்ள ஆகாயம்

ஒப்பற்ற ஒன்று சேரும் குணத்தை (சப்தத்தைக்) கொண்டதாகும். (இந்தஆகாய மண்டலம்) சூரிய சந்திரர் அடங்கி விளங்குவதான அண்ட உருண்டையான வட்ட வடிவம் கொண்டது. இதை ய என்னும் எழுத்து நின்று விளக்கும்.

(இ)ரண்டு கால் மிசை ககன(ம்) மின் சுழி (இ)ரண்டு கால்

பரி கந்து பாயும் … (ரேசகம், பூரகம் என்னும்) இரண்டு வழி கொண்டு

அண்டமாகிய ஒளி கொண்ட உச்சியில் (கபாலத்தில்) இடை கலை,

பிங்கலை*6 என்னும் நடையுள்ள குதிரைகள் பாய்ந்து செல்வன ஆகும்.

கருணை இந்திரியங்கள் சோதிய அருண சந்திர மண்டலீகரர்

கதி கொள் யந்திர விந்து நாதமொடு என்று சேர்வேன் …

(அவைகளை வசப்படுத்த) இந்திரியங்களின் அருள் ஜோதி விளங்க,

சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்கினி மண்டலம் ஆகிய மும்

மண்டலங்களில் பொருந்தியுள்ள மூர்த்திகள் பிரசன்னமாகும் மந்திர

சக்தியால் லிங்கவடிவ சிவத்துடன் நான் என்று சேர்வேன்?

அதிர பம்பைகள் டங்கு டாடிக முதிர அண்டமொடு ஐந்து

பேரிகை டகுட டண்டட தொந்ததோதக என்று தாளம்

அதிக … ஒலிக்கும் பறைகள் டங்கு டாடிக என்ற பேரொலியை முற்றின வகையில் எழுப்ப, அண்டங்களில் ஐந்து வகையான பேரிகை (தோற்கருவி, துளைக் கருவி, நரம்புக் கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக் கருவி என்னும் ஐவகை வாத்தியங்கள்) டகுட டண்டட தொந்த தோதக என்று தாளம் மிக்கு ஒலிக்க,

விஞ்சையர் தும்ப்ரு நார்தரொடு இத விதம் பெறு சிந்து பாடிட

அமரர் துந்துமி சங்கு தாரைகள் பொங்க ஊடு …

பதினெண்கணங்களுள் ஒருவராகிய வித்தியாதரர், தும்புரு நாரதர்

என்பவர்களுடன் இன்பகரமான முறையில் சிந்து முதலிய இசை

வகையைப் பாட, தேவர்கள் தேவபேரிகை, சங்கம், தாரைகள் (நீண்ட

ஊதுங் குழல்கள்) இவைகளை முழக்கி அவ்வொலி இடையே

மேலெழுந்து பொங்க,

உதிர மண்டலம் எங்குமாய் ஒளி எழ குமண்டி எழுந்து சூரரை

உயர் நரம்பொடு எலும்பு மா முடி சிந்தி வீழ உறு சினம்

கொண்டு எதிர்த்த சேவக … இரத்தப் பெருக்கின் வெள்ளம்

எல்லாவிடத்தும் பரவ, தீயின் ஒளி வீச, குதித்து எழுந்து போருக்கு வந்த சூரர்களை (அவர்களுடைய) பெரிய நரம்புகளுடன், எலும்புகளும்

மாமுடிகளும் சிதறுண்டு விழும்படியாக கோபத்துடன் எதிர்த்துப் போர் புரிந்த வலிமையாளனே,

மழை புகுந்து உயர் அண்டம் வாழ்வுற உரகனும் புலி கண்ட ஊர்

மகிழ் தம்பிரானே. … மழை பெய்து உயர்ந்த இப்பூமியில் உள்ளோர்

வாழ்வுறும்படி, பாம்பு உருவராகிய பதஞ்சலியும், புலி உருவரான

வியாக்ரபாதரும் (இறைவன் நடனத்தைத்) தரிசித்த தலமாகிய

சிதம்பரத்தில் மகிழ்ந்து வீற்றிருக்கும் தம்பிரானே.

*1 – மண்ணின் ஐந்து குணங்கள்:

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.

*2 – ஐந்து கலைகள்:

நிவிர்த்திகலை – ஆன்மாக்களை பாசத்தினின்று விடுவிப்பது.

பிரதிஷ்டாகலை – ஆன்மாக்களை முக்தியில் உய்ப்பது.

வித்யாகலை – பந்தநிலை நீங்கிய ஆன்மாக்களுக்கு அனுபவ ஞானத்தைத் தருவது.

சாந்திகலை – ஆன்மாக்களுக்கு எல்லாத் துன்பங்களும் சாந்தமாகச் செய்வது.

சாந்தியதீதகலை – சாந்தி பெற்ற ஆன்மாக்களுக்குத் துன்பங்களை முற்றும் ஒழியச் செய்வது.

*3 – நீரின் நான்கு குணங்கள்:

சப்தம், பரிசம், உருவம், ரஸம்.

*4 – தீயின் முக்குணங்கள்:

சப்தம், பரிசம், உருவம்.

*5 – வாயுவின் இரண்டு குணங்கள்:

சப்தம், பரிசம்.

****

மாணிக்க வாசகர் பற்றி

குருவின் உரு என அருள் செய் துறையினில் குதிரை கொள

வரு நிறை தவசி தலை கொற்றப் பொன் பதம் வைத்திட்டு

அற்புதம் எற்றிப் பொன் பொருள் இட்டுக் கைகொ(ள்)ளும்

முதல்வர் … குருவாய்த் தோன்றி அருள் பாலித்த திருப்பெருந்துறையில் (அரசனுக்காக) குதிரை வாங்க வந்த நிறை செல்வத் தவத்தினரான மாணிக்கவாசகரின் தலையில் வீரம் வாய்ந்த அழகிய தமது திருவடியைச் சூட்டிஅற்புதக் கோலத்தை வெளிப்படுத்தி, ஞானப் பொருளை அவருக்கு உபதேசித்து தடுத்தாட்கொண்டருளிய முதன்மையரான சிவ பெருமான்.

இள கலை மதியம் அடை சடை அருண உழை மழு மருவு திரு

புயர் கொட்டத்துப் புரர் கெட்டுப் பொட்டு எழ விட்டத் திக்கு

அணை நக்கர்க்கு அற்புத குமரன் என … இளம் பிறை நிலவை

அடைந்துள்ள சடையினர். சிவந்த மான், மழு இவைகளைத் தரித்த

அழகிய புயத்தினர். இறுமாப்பும் சேட்டையும் கொண்ட திரிபுராதிகள்

கேடுற்று அழியும்படிச் செய்து, திக்குக்களை எல்லாம் ஆடையாகப் புனைந்த திகம்பரராகிய சிவபெருமானுக்கு அற்புதமான குமாரன் என்று வந்தவனே,

***

மனத்துக்குக் கட்டளை

மனமே உனக்கு உறுதி புகல்வேன் … மனமே, உனக்கு உறுதி

தரக்கூடிய நன்மொழிகளைக் கூறுவேன்,

எனக்கு அருகில் வருவாய் உரைத்தமொழி தவறாதே … என்

சமீபத்தில் வா, நான் சொல்லும் சொற்படி தவறாமல் நடப்பாயாக.

மயில் வாகனக்கடவுள் அடியார் தமக்கரசு … மயிலை வாகனமாகக்

கொண்ட தெய்வம், அடியவர்களுக்கெல்லாம் அரசர்,

மனமாயை யற்ற சுக மதிபாலன் … மனம், மாயை என்பதெல்லாம்

இல்லாத சுகத்தைத் தரும் இளம் குழந்தை.

நினைவேது உனக்கு அமரர் சிவலோகம் இட்டு … உனக்கு

வேறு நினைவு எதற்கு? தேவலோகத்தையும், சிவலோகத்தையும்

உனக்குத் தந்தருளி,

மல நிலை வேர் அறுக்கவல பிரகாசன் … மும்மலங்களில்

(ஆணவம், கன்மம், மாயை) நிலைத்துள்ள வேர்களை அறுக்கவல்ல

ஒளியுருவானவர்,

நிதி கா நமக்கு உறுதி அவரே பரப்பிரம … சங்க நிதி, பதுமநிதி,

கற்பக மரம்* போன்று அளிக்கவல்லவர், அவரே நமக்கு உறுதி, அவரேமுழு முதற் கடவுள்.

நிழல் ஆளியைத் தொழுது வருவாயே … நீதிமான், அத்தகைய

பெருமானைத் தொழுது வழிபட்டு வருவாயாக.

மனம் பற்றி பாரதியார்

பாரதியாரின் நீண்ட கவிதையில் கடைசி பகுதியை மட்டும் தருகிறேன்

மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!

நின்னொடு வாழும் நெறியும் நன்கு அறிந்திடேன்;

இத்தனை நாட்போல இனியும் நின்னின்பமே

விரும்புவன்; நின்னை மேம்படுத்திடவே

முயற்சிகள் புரிவேன்; முத்தியும் தேடுவேன்;

உன் விழிப்படாமல் என் விழிப்பட்ட

சிவம் எனும் பொருளைத் தினமும் போற்றி

உன்றனக்கு இன்பம் ஓங்கிடச் செய்வேன்.

மனம் பற்றி பகவத் கீதை

“அஸம்சயம் மஹாபாஹோ மனோ துர்நிர்க்ரஹம் சலம்

அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேன் ச க்ருஹ்யதே” (6—35)

“தோள்வலி படைத்த அர்ஜுனா! மனம் அடக்குதற்கரியது; இதில் சந்தேகம் இல்லை. பயிற்சியாலும் வைராக்யத்தாலு (திட உறுதி) அடக்கமுடியும்”.

தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்:

மனம் ஊசலாடிகொண்டுமோய்வற்றும் இருக்கும் அதைக் காப்பதும் கட்டுப்படுத்துவதும் கடினம். அம்பு செய்பவர்கள் அதை எப்படிக் கூராகச் செய்வார்களோ அதே போல அறிவாளிகளும் அதை நேராகவும் கூராகவும் வைப்பர் (33)

மனம் ஒரு புலி

ஆதிசங்கரர் மனதையும் எண்ணத்தையும் புலிக்கு ஒப்பிடுகிறார். ஐம்புலன்கள் செயல்படும் அடர்ந்த காட்டில் மனது என்னும் கொடும் புலி வசிப்பதால், முக்தியை நாடுவோர் அந்தக் கட்டுக்குள் அகப்படாமல் இருக்க வேண்டும் (விவேக சூடாமணி 176)
ஆதிசங்கரரின் வினா – விடை துதியிலும் (பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா) மனதைப் பற்றி பல குறிப்புகள் வருகின்றன.

மனிதர்களுக்கு மிகவும் கஷ்டமான செயல் எது என்ற கேள்விக்கு அவர் தரும் பதில் “ எப்போதும் மனதைக் கட்டுப் பாட்டில் வைத்திருப்பதே” என்பார்.

***

வினைகளைப் பொடியாக்கு!

தேன் உந்து முக்கனிகள் … நல்ல தேன், உயர்ந்த முக்கனிகள் (மா,

பலா, வாழை)

பால்செங் கருப்பிளனிர் … பால், சிவந்த கரும்பு, இள நீர்

சீரும் … இவைகளின் இனிப்பின் சிறப்பையும்

பழித்த … (தனது ஒப்பற்ற தனிப் பெரும் இனிமையால்)

தாழ்மைப்படுத்துகின்ற

சிவம் அருள் ஊற … மேலான சிவத்தின் திருவருள் ஊற்றெடுத்துப்

பெருகவும்,

தீதும் பிடித்தவினை யேதும் … தீவினைநல்வினை முழுவதும்

பொடித்துவிழு … தூள்பட்டு ஒழியவும்,

சீவன் சிவச்சொருபம் … இந்த ஜீவன் சிவவடிவாக விளங்குகிறது

என தேறி … என்று நன்கு தெளிந்து,

நானென்ப தற்று … அகங்காரத்தை அடியோடு நீத்தும்,

உயிரொ(டு) ஊனென்ப(து) அற்று … உயிர்ப்பற்று, உடற்பற்று

இரண்டையும் அகற்றியும்,

வெளிநாதம் பரப்பிரம … (சிதாகாசம் என்ற) பரவெளியில் உள்ள

அருள்நாதப் பிரம்மமாம்

ஒளிமீதே … பரஞ்ஜோதியில்

ஞானம் சுரப்ப … சிவ ஞானம் பெருகிவரவும்,

மகிழ் ஆனந்த சித்தியொடு … மகிழ்ச்சி ஊறும் சிவானந்த மோட்சத்தில்,

எநாளும் களிக்க … அடியேன் எந்நாளும் மகிழ்ந்திருக்குமாறு

பதம் அருள்வாயே … நின் திருவடியைத் தந்தருள்வாயாக

***

உடல் ஒரு பொம்மை

பனியின் விந்(து) துளி போலவே கருவின் உறு அளவில் …

பனித்துளி அளவுக்கு உள்ள சுக்கிலம் கருவில் சேர்ந்த அளவில்,

அங்கு ஒரு சூசம் ஆய் மிளகு துவர் … அவ்விடத்தில் ஒரு

அறிகுறியாய், (பின்பு) மிளகு அளவாய், (அதன் பின்) பாக்கு அளவாய்,

பனை தெ(ன்)னங் கனி போலவே பல கனியின் வயிறு

ஆகி … பிறகு பனை, முற்றிய தேங்காய் போல் ஆகி, (பின்னர்) பலாப்

பழ அளவுக்கு வயிறு பெரிதாகி,

பருவமும் தலை கீழதாய் நழுவி நிலம் மருவி … (பூமிக்கு

வரவேண்டிய) பருவ காலம் வந்தவுடன், தலை கீழாக நழுவி இந்தப்

பூமியை அடைந்து,

ஒன்பது வாசல் சேர் உருவம் உள பதுமையின் செயல்

போலவே வளி கயிறின் உடன் ஆடி ம(ன்)ன … ஒன்பது

துவாரங்களைக்* கொண்ட உருவம் உள்ள ஒரு பொம்மையின் செயலைப் போல, பிராண வாயு என்னும் கயிற்றின் உதவியால் ஆடி இயங்கி இருக்கும்போது,

விதம் தெரியாமலே மல சலமொடு உடல் நகர்ந்து அழுது

ஆறியே … இவ்வாறு போகின்றது என்னும் உணர்ச்சி இல்லாமல் மலசலம் கழியும் உடலுடன் தவழ்ந்தும், அழுதும், பிறகு அழுகை ஓய்ந்தும்,

அ(ன்)னை முலையின் மயம் அயின்று ஒரு பாலனாய் இகம்

உடைய செயல் மேவி … தாயின் முலைமயமான பாலை நன்கு உண்டு,ஒரு குழந்தையாய் இப்பிறப்பில் செய்யும்படி விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து,

வடிவம் முன் செய்த தீமையால் எயும் உனையும் அற மறந்து

அகம் மீது போய் … உருவமானது முன்பு செய்த தீவினை காரணமாக எவ்வாறோ அமைந்து, உன்னையும் அடியோடு மறந்து, பாவம் மேலும் மேலும் வளர,

தின(ம்) தினமும் மனம் அழிந்து உடல் நாறினேன் இனி

உனது கழல் தாராய் … நாள்தோறும் மனம் உடைந்து, உருக்

குலைந்து கெடுகின்றேன். இனி உனது திருவடிகளைத் தந்து

அருள்வாயாக.

–subham—

Tags- திருப்பபுகழ், அருணகிரிநாதர், ,அரிய செய்திகள் Part 34

Leave a comment

Leave a comment