பாரதியும் அருணகிரியும்!  திருப்புகழில் துரியோதனன்- பீமன் கதை – Part 35 (Post No.15,467)

Written by London Swaminathan

Post No. 15,467

Date uploaded in Sydney, Australia –  1 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part35

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 35

எல்லா உயிரும் இன்பமாக வாழ பாரதியும் அருணகிரியும் வேண்டுதல்

மண்ணில் வாழும் அனைத்து உயிரினங்களும் இன்பமாக வாழ அருள்புரிவாயாகுக என்று பல அடியார்கள் வேண்டுகின்றனர்

சரவணபவ நிதி அறுமுக குருபர … சரவணபவனே நிதியே,

ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,

சரவணபவ நிதி அறுமுக குருபர … சரவணபவனே, நிதியே,

ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,

சரவணபவ நிதி அறுமுக குருபர … சரவணபவனே, நிதியே,

ஆறுமுகக் கடவுளே, குமரகுருபரனே,

எனவோதித் தமிழினி லுருகிய … என்று பல முறை தமிழினில்

ஓதிப் புகழ்ந்து உள்ளம் உருகுகின்ற

அடியவரிடமுறு … உன் அடியார்களுக்கு உற்ற

சனனமரணமதை யொழிவுற சிவமுற … பிறப்பு, இறப்பு என்பவை

நீங்கவும், சிவப்பேறு அடையவும்,

தருபிணி து(ள்)ள … வினைகள் தருகின்ற நோய்கள் துள்ளி ஓடவும்,

வரம் எமதுயிர் சுகமுற அருள்வாயே … வரத்தினை நீ எங்கள் உயிர்

இன்பம் அடையுமாறு தந்தருள்வாயாக.

கருணைய விழிபொழி … கண்களினின்றும் பொழிகின்ற கருணையை உடையவனே,

ஒருதனி முதலென வருகரி திருமுகர் … ஒப்பற்ற தனிப் பெரும்

தலைவனென வந்த யானைமுகக் கணபதியை

துணைகொளு மிளையவ … துணையாகக் கொண்ட இளையவனே,

கவிதை யமுதமொழி தருபவர் … கவிதைகளாகிய அமுத

மொழிகளை வழங்குபவருடைய

உயிர்பெற அருள்நேயா … உயிர் நற்கதியைப் பெறுமாறு அருள்

புரியும் நேசம் உடையவனே,

கடலுலகினில்வரும் உயிர்படும் அவதிகள் … கடல் சூழ்ந்த

இவ்வுலகில் உயிர்கள் படுகின்ற துன்பங்களும்,

கலகம் இனையதுள கழியவும் … கலக்கங்களும்இன்னும்

இத்தகையதாக உள்ள வேதனைகள் நீங்கும்படியும்,

நிலைபெறகதியும் … நிலைத்திருக்குமாறு நற்கதி பெறுதலையும்,

உனதுதிருவடிநிழல் தருவது ஒருநாளே … உனது திருவடி நிழல்

அருளக்கூடிய ஒருநாள் எனக்கும் உண்டோ?

***

இதோ பாரதி பாடல்

“பேசாப் பொருளை பேச நான் துணிந்தேன்

கேட்கா வரத்தை கேட்க நான் துணிந்தேன்

மண் மீதுள்ள மக்கள், பறவைகள்

விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்;

யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே

இன்பமுற் றன்புடன் இணங்கி வாழ்ந்திடவே

செய்தல் வேண்டும், தேவ தேவா!”

–பாரதியின் விநாயகர் நான் மணிமாலை

***

இல்லை என்ற கொடுமை—உலகில்

இல்லையாக வைப்பேன்

தனக்கு வரும் அஷ்ட ஐச்வர்யங்களையும் உலகில் இல்லை என்ற கொடுமை போகப் பயன்படுத்துவானாம்.

இன்னொரு இடத்தில்

“மண்ணில் யார்க்கும் துயரின்றிச் செய்வேன்

வறுமை என்பதை மண்மிசை மாய்ப்பேன்” என்கிறான்.

கடவுளை அவன் வேண்டியதெல்லாம் பிறருக்காக வாழத்தான்!

“வல்லமை தாராயோ, இந்த மாநிலம்

பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவ சக்தி—நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?”

***

“எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே

அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே”- தாயுமானவர்

வாழ்க அந்தணர், வானவர் ஆனினம்

வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக

ஆழ்க தீயதெல்லாம், அரன் நாமமே

சூழ்க, வையகமும் துயர் தீர்கவே!

சம்பந்தர் தேவாரம்

அந்தணர் முதலாவுள்ள நான்கு ஜாதி மக்களும் பசு முதலான எல்லா பிராணிகளும் வாழ வேண்டும் என்பதே பெருள்.

வான் முகில் வழாது பெய்க மலி வளம் சுரக்க மன்னன்

கோன் முறை அரசு செய்க குறைவு இலாது உயிர்கள் வாழ்க

நான் மறை அறங்கள் ஓங்க நல் தவம் வேள்வி மல்க

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.

கந்த புராணம்

***

துரியோதனன் – பீமன் கதை

நச்சுத் துச் சொப்பிச்சுக் குட்டத்துள் தக்க அட்டத்து

அசிகாண நடத்தி … விஷத்தை உண்ட (பீமன், அந்த விஷம்

தாக்காமல்) சோபித்து விளங்கவும், நீர் நிலையுள் தங்கும்படி குறுக்கே வைத்திருந்த வாள் முனைகள் இருக்கும் இடத்தைத் தெரியும்படி (அந்த பீமனுக்குக்) காட்டியும்*

விடத்தை யுடைத்த படத்தினில் நட(ம்) நவில் கடலிடை

அடுபடை தொடுமுகில் … விஷம் உடையும்படி (காளிங்கன் என்னும் பாம்பின்) பணாமுடியின் மீது நின்று நர்த்தனம் செய்தும், கடல் மீது கொல்லத் தக்க தமது பாணத்தை (ராமனாகச்) செலுத்தியும் (ஆடல் புரிந்த) மேக நிறத்துத் திருமால்,

நகைமுக திருவுறை மணிமார்பன் நத்தத்தைச் சக்ரத்தைப்

பத்மத்தைக் கைப் பற்றிப் பொரு மாயன் … சிரித்த முகத்தை

உடைய லக்ஷ்மி உறையும் அழகிய மார்பை உடையவன், சங்கையும் சக்கரத்தையும் தாமரை போன்ற கையில் பற்றி சண்டை செய்யும் மாயவனாகிய திருமால்,

நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்புற நசிதரு நிசிசரர் உட

குடல் இடல் செய்த நரகரி ஒரு திரு மருகோனே … நரிக்கும்,

வாளுக்கும், நெருப்புக்கும் விருப்பம் உண்டாகும்படி, அழிந்து போகின்ற அசுரர்களின் குடலை இடுதலைச் செய்தவனும், நரகாசுரனுக்குப்பகைவனுமான திருமாலுக்கும் ஒப்பற்ற திருமகளுக்கும் மருகனே,

இரண்டு சம்பவங்கள்

பீமன் மீது வெறுப்பும் பொறாமையும் கொண்டவன் துரியோதனன் ஒரு முறை அவனுக்கு  விஷத்தைக் கொடுத்து பாம்புகள் உள்ள ஆற்றில் தள்ளிவிட்டான் . அங்குள்ள விஷப் பாம்புகள் அவனைக் கடிக்கவே உடலில் உள்ள விஷம் முறிந்தது.  இன்னும் ஒரு முறை ஆற்றுக்குள் ஈட்டிகளை நட்டு அந்தக் குளத்தில் தள்ளிவிட்டான் அப்போது கண்ணன் அவனுக்கு வண்டுகள் மூலம் அதைக் குறிப்பால் உணர்த்தி அவனைக் காப்பாற்றினான்

ஆற்றில் கழு முனைகளை மறைவாக நிறுத்தி, அங்கே பீமனைக் குதித்து விளையாடச் செய்தான் துரியோதனன். அந்த ஆபத்தான இடத்தை வண்டுகளால் காட்டிப் பீமனைக் கண்ணன் காப்பாற்றினார்.

***

மீண்டும் சொல்கிறார் – திருப்பதியில் இருப்பது முருகனே !

வட வேங்கட மாமலையில் உறைவோனே … வட எல்லையில்

உள்ள திருவேங்கட மாமலையில் வாழ்பவனே,

வேண்டிய போதடியர் … உன் அடியார்கள் விரும்பிய போதெல்லாம்

வேண்டிய போகமது வேண்ட … அவர்கள் விரும்பிக் கேட்ட போக

பாக்கியங்களை உன்னிடம் விண்ணப்பிக்க,

வெறாது உதவு பெருமாளே. … வெறுக்காமல் அவர்களுக்குத்

தந்து அருள் புரிகின்ற பெருமாளே.

***

களமாண்டிடவே யொரு பாரதம் அதிலேகி … போர்க்களத்தில்

இறந்தழிய, ஒரு பாரதப் போர்க்களத்தில் சென்று,

கனபாண்டவர் தேர்தனி லே … பெருமைவாய்ந்த பாண்டவர்களின்

தேரிலே,

எழுபரிதூண்டிய சாரதி யாகிய … கிளம்பிப் பாயும் குதிரைகளைச்

செலுத்திய தேரோட்டி ஆனவனும்,

கதிரோங்கிய நேமியனாம் … ஒளி மிகுந்த சுதர் ன சக்கரத்தை

உடையவனுமான

அரி ரகுராமன் … ஹரி, ரகுராமன், ஆகிய திருமாலும்,

திரைநீண்டிரை வாரியும் வாலியும் … அலைகள் ஓங்கி ஒலிக்கும்

கடலையும், வாலியையும்,

நெடிதோங்குமராமரம் ஏழொடு … நீண்டு உயர்ந்த ஏழு

மராமரங்களையும்,

தெசமாஞ்சிர ராவணனார்முடி பொடியாக … பத்துத்

தலைகளையுடைய ராவணனின் சிரங்களையும் பொடிபடும்படி

சிலைவாங்கிய நாரணனார் மருமகனாங் குகனே … கோதண்ட

வில்லை வளைத்த (ராமனாக வந்த) நாராயணனின் மருகனான குகனே,

பொழில் சூழ்தரு திருவேங்கட மாமலை மேவிய

பெருமாளே. … சோலைகள் சூழ்ந்த திருவேங்கடமாம் திருமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

_–subham—

Tags–திருப்புகழில் ,அருணகிரிநாதர், அரிய செய்திகள் ,Part35, பாரதியும் அருணகிரியும், துரியோதனன் – பீமன் கதைதிருப்பதியில் முருகன்

Leave a comment

Leave a comment