Post No. 15,471
Date uploaded in Sydney, Australia – 2 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 36
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 36
முருகனுக்கே முதல் பரிசு! பார்வதி முடிவு!
Picture by A Narayanan, Sydney, Australia.
கல் அசல மங்கை எல்லையில் விரிந்த கல்வி கரை கண்ட
புலவோனே … (இமய) மலை மகளான பார்வதி அளவு இல்லாத கல்விப் போட்டியில் தலை இடம் பெற்ற சகல கலா வல்லவன் நீதான்* என்னும்படி விளங்கிய புலவனே,
கள் ஒழுகு கொன்றை வள்ளல் தொழ அன்று கல்லல் அற
ஒன்றை அருள்வோனே … தேன் ஒழுகும் கொன்றையைச் சடையில்
சூடிய வள்ளலாகிய சிவபெருமான் அன்று வணங்கி நிற்க, ஐயம்
இல்லாதபடி ஒப்பற்ற பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே,
வல் அசுரர் அஞ்ச நல்ல சுரர் விஞ்ச வல்லமை தெரிந்த மயில்
வீரா … வன்மை வாய்ந்த அசுரர்கள் பயப்பட, நற்குணம் படைத்த
தேவர்கள் மகிழ்ச்சி அடைய, உனது சாமர்த்தியத்தைக் காட்டிய மயில் வீரனே.
வள்ளி படர்கின்ற வள்ளி மலை சென்று வள்ளியை மணந்த
பெருமாளே. … வள்ளிக் கொடிகள் படர்கின்ற வள்ளி மலைக்குப்**
போய், வள்ளி நாயகியை அங்கு மணம் புரிந்த பெருமாளே.
* பெரியோருக்குச் செய்யும் முதல் மரியாதை (வித்வத் தாம்பூலம்) யாருக்குக் கொடுப்பது என்ற வாதத்தில் ஔவையார், இந்திரன், சரஸ்வதி, அகத்தியர், ஆகியோர் தமக்கு அப்பரிசு பெற தகுதி இல்லை என மறுத்ததும், தேவர்களும் முனிவர்களும் பார்வதியை அணுகினர். தேவி புன்னகை புரிந்து, நான் வாழைப் பழத்தின் தோல் போன்றவள். எனக்குள் இருக்கும் கனி, முத்துக் குமரனே இப்பரிசுக்குத் தக்கவன் என்று கூறினாள் – கந்த புராணம்.
** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராயவேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில், திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.
***
சிவபெருமானைத் தொழும் கழுகுகளின் பெயர்கள்
கழுகுதொழு … கழுகுகள்* தொழுகின்ற
வேதகிரி சிகரி வீறு … வேதமலையின் உச்சியில் விளங்கும்,
கதிருலவு வாசல் நிறைவானோர் … ஒளிவீசும் வாசலில் நிறைந்த
தேவர்கள்
கடலொலிய தான … கடலின் அலை ஓசை போன்று ஓம் என்று
மறைதமிழ்க ளோது … வேதமந்திரங்களையும் தமிழ் மறைகளையும்
ஓதுகின்ற,
கதலிவனம் மேவு பெருமாளே. … கதலிவனம்** (என்ற
திருக்கழுக்குன்றத்தில்) வாழுகின்ற பெருமாளே.
* எல்லா யுகங்களிலும் கீழ்க்கண்ட இரண்டு கழுகுகள் இந்த வேதமலையை பூஜித்தன:
கிருத யுகம் – சண்டன், பிரசண்டன்,
திரேதா யுகம் – ஜம்பாதி, ஜடாயு,
துவாபர யுகம் – சம்புகுத்தன், மாகுத்தன்,
கலி யுகம் – சம்பு, ஆதி.
** திருக்கழுக்குன்றத்தின் தலவிருட்சம் வாழையாதலால் இதற்கு ‘கதலிவனம்’ என்றும் பெயர்.
***
சிவன், ஊர்த்வதாண்டவம் ஆடியது என் ?
Lord Siva pacifying angry Parvati; pictures by A Narayanan, Sydney, Australia.
காதும் உக்ர வீர பத்ர காளி … வெகுண்டு வந்த வீரபத்திரரின்
துணைவியான காளி
வெட்க மகுடத்தை ஆகாச முட்ட வீசி விட்ட காலர் … நாணம்
அடையும்படி தமது கிரீடத்தை வானில் முட்டும்படி உயரமாக வீசி விட்டு (ஊர்த்துவ தாண்டவம்) ஆடிய பாதத்தை உடைய பரமசிவன்,*
பத்தி இமையோரை … பக்தியுள்ள தேவர்களுக்கு
ஓது வித்த நாதர் கற்க … கற்பித்த நாதராகிய சிவபெருமான்,
உன்னிடம் பாடம் கேட்கவும்,
ஓது வித்த முநிநாண … சிவனால் ஓதுவிக்கப்பட்ட பிரமன்
வெட்கமடையவும்,
ஓரெழுத்தில் ஆறெழுத்தை … ஓரெழுத்தாகிய ஒப்பற்ற ஓம்கார
ப்ரணவத்தில், ஆறெழுத்தாகிய ஓம்நமசிவாய அல்லது சரவணபவ
மந்திரமே அடங்கியுள்ள தன்மையை விளக்கி
ஓது வித்த பெருமாளே. … அந்தச் சிவனுக்கே உபதேசித்த
பெருமாளே.
* திருக்கழுக்குன்றம் செங்கற்பட்டு ரயில் நிலையத்துக்கு தென்கிழக்கில் 9 மைலில் உள்ளது.
** தக்ஷ யாகத்தை அழிக்க சிவனும் உமையும் வீரபத்திரராகவும் காளியாகவும் வந்தனர். காளி நாணும்படி சிவன் ஊர்த்துவ தாண்டவம் ஆடியது இங்கு குறிப்பிடப்படுகிறது.
****
போட்டியில் அருணகிரி வெற்றி
சயிலம் எறிந்த கை வேல் கொடு மயிலினில் வந்து எனை
ஆட்கொளல் சகம் அறியும்படி காட்டிய குருநாதா … கிரெளஞ்ச
மலை பொடிபடச் செலுத்திய கை வேலை விளங்க ஏந்தி மயில் மீது வந்து என்னை ஆட்கொண்ட திருவருளை உலகம் முழுவதும் அறியும் வண்ணம் காட்டிய குரு நாதனே**,
திரி புவனம் தொழு பார்த்திபன் மருவிய மண்டப கோட்டிகள்
தெருவில் விளங்குச் சிராப் ப(ள்)ளி மலைமீதே தெரிய
இருந்த பராக்ரம … மூன்று உலகங்களும் வணங்கும் பல்லவ
அரசனால் கட்டப்பட்ட மண்டபங்களும் கோபுரங்களும் தெருவிலே
தோற்றம் தரும் திரிசிராப்பள்ளி மலையின் மேல் விளக்கமுற வீற்றிருந்த vவீரனே,
உரு வளர் குன்று உடையார்க்கு ஒரு திலதம் எனும் படி
தோற்றிய பெருமாளே. … அழகிய உருவுடன் திரிசிராமலைக் குன்று
உடையவராகிய தாயுமானவரான சிவபெருமானின் நெற்றிப் பொட்டுப் போலச் சிறந்து விளங்கிய பெருமாளே.
** திருவண்ணாமலையில் சம்பந்தாண்டானோடு அருணகிரியார் வாது செய்த போது தேவியைச் சபையில் வரவழைப்பேன் என்ற சம்பந்தாண்டான் அங்ஙனம் செய்ய இயலாது தோல்வி அடைந்தான். அருணகிரியார் ‘அதல சேடனார் ஆட’ என்னும் திருப்புகழைப் பாட முருகன் கைவேலுடன் கம்பத்தினின்று வெளிவந்து மயில் வாகனனாக காட்சி அளித்தான்.
—- subham—
Tags– முருகனுக்கே முதல் பரிசு! பார்வதி முடிவு! திருப்புகழில் அரிய செய்திகள் -Part 36 ,சிவபெருமானைத் தொழும், கழுகுகளின் பெயர்கள்