Post No. 15,482
Date uploaded in Kumbakonam, India – 10 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லண்டன் சுவாமிநாதன் எடுத்த படங்கள்
பாணி என்றால் கை. சார்ங்கம் என்னும் வில்லைத் தாங்கிய பெருமாளுக்கு ஒரு கோயில். சக்ரம் என்னும் சுதர்சன சக்கரத்தைத் தாங்கிய பெருமாளுக்கு ஒரு கோயில். இரண்டு பெருமாள் கோவில்களும் நல்ல பிரசித்தமானவை.
குடந்தை என்னும் கும்பகோணத்தில் சிவன் கோவில்களுக்கும் விஷ்ணு கோவில்களுக்கும் பஞ்சமில்லை. எண்ணற்ற புகழ்பெற்ற கோவில்கள் அடுத்தடுத்தே உள்ளன . போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தால் நடந்தே எல்லாக் கோவில்களையும் தரிசிக்கலாம். முதலில் நான் சார்ங்கபாணியைத் தரிசித்தேன் . மார்ச்-5 ஆம் தேதி ஓரே மூச்சில் சென்றேன்; நல்ல தரிசனம் கிடைத்தது.
சாரங்கபாணி கோவிலின் சிறப்புகள்
சாரங்கபாணி கோவில், 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதிக்கு அடுத்தபடியாக 3-வது முக்கியமான, விஷ்ணு தலம் ஆகும். தேர் வடிவிலான கருவறை, உத்ராயண மற்றும் தட்சிணாயன வாசல்கள், மற்றும் பூமிக்கு அடியில் இருக்கும் பாதாள ஸ்ரீனிவாசப் பெருமாள் சன்னதி ஆகியவை இக்கோவிலின் முக்கிய சிறப்பம்சங்களாகும்.
11 அடுக்கு ராஜகோபுரத்தின் உயரம் 173 அடி.
பூமிக்கு கீழ்மட்டத்தில் உள்ளது. படிகளில் இறங்கி கனிந்து பார்த்தால் மிகவும் அழகான ரூபத்தில் பெருமாளைக் காணலாம்
தேர் வடிவிலான கருவறை: சாரங்கபாணி பெருமாள் வைகுண்டத்திலிருந்து தேரில் வந்ததால், கருவறை தேர் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது, குதிரைகள் மற்றும் யானைகள் இழுப்பது போன்ற அமைப்பு உள்ளது.
இரண்டு வாசல்கள்
கருவறைக்கு உத்ராயண வாசல் (தை – ஆனி) மற்றும் தட்சிணாயன வாசல் (ஆடி – மார்கழி) என இரண்டு வாசல்கள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் ஆறு மாத காலத்திற்கு திறக்கப்படும்.
பள்ளிகொண்ட தோற்றம்: மூலவர் சாரங்கபாணி, ஆதிசேஷன் மீது சாய்ந்த கோலத்தில் (உத்தான சயனம்), கையில் வில்லுடன் காட்சியளிக்கிறார்.
108 திவ்ய தேசம் : 108 திவ்ய தேசங்களில் 3-வது முக்கிய இடமாகும். அதாவது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட கோயில்.
பரதநாட்டிய சிற்பங்கள்: தஞ்சை பெரிய கோவில் போன்று, இக்கோவில் கோபுரத்தின் முதல் அடுக்கில் பரதநாட்டியத்தின் 108 கரணங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கோமலவல்லி தாயார்: பெருமாள் தாயாரை மணக்க இங்கு தேரில் வந்ததால், சன்னதி தேர் போன்ற அமைப்பில் உள்ளது.
பொற்றாமரைக் குளம்: இக்கோவிலின் தீர்த்தம் பொற்றாமரை குளம் ஆகும்.
இக்கோவில் சோழ, விஜயநகர மற்றும் மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டுள்ளது .
இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் மூலவராக ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
ஹேமரிஷி என்ற முனிவருக்காக இந்துக் கடவுளான விஷ்ணுவின் அவதாரமான வைணவ தெய்வம் சாரங்கபாணி தோன்றினார் என்று கூறுகிறது தல புராணம் .
பன்னிரு ஆழ்வார்களுள் பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் இத்தலப் பெருமாளைப் போற்றிப் பாடியுள்ளனர். பெரியாழ்வார் இத்தலத்து இறைவனைப் பின்வருமாறு போற்றுகிறார்.
தூ நிலாமுற்றத்தே போந்துவிளையாட
வான் நிலா அம்புலீ! சந்திரா! வா என்று
நீ நிலா, நின் புகழாநின்ற ஆயர் தம்
கோ நிலாவக் கொட்டாய் சப்பாணி,
குடந்தைக் கிடந்தானே! சப்பாணி.
கோவிலின் பெரிய தேர் சித்தரை தேர் என அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோயில் தேர்களில் இது மூன்றாவது பெரிய தேராகும்.
இன்னொரு சிறப்பு 12 கருடசேவைகளில் ஒன்று ; கும்பகோணத்தில் சித்திரை மாதம் அட்சய திருதியையில்கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த பெருமாள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்..
· ஆராவமுதன்: இத்தலப் பெருமாள் ‘சாரங்கபாணி’ என்றும், ‘ஆராவமுதன்’ (ருசிக்க ருசிக்கத் திகட்டாத அமுதம்) என்றும் பாசுரங்களில் சிறப்பிக்கப்படுகிறார்.
· பதிகங்கள்: நம்மாழ்வார் திருவாய்மொழியில் இத்தலத்தைப் பற்றி 11 பாசுரங்களில் பாடியுள்ளார் (5.8).
· பாசுரத்தின் பொருள்: “குடந்தைக் கிடந்த எம் கோவே” – குடந்தையில் பள்ளி கொண்டிருக்கும் எங்கள் இறைவனே, என்று ஆராவமுதனின் கருணையைப் பாசுரங்கள் போற்றுகின்றன.
· திருமங்கையாழ்வார் பாசுரம்: “ஆவியே! அமுதே! என நினைந்துருகி” என்று குடந்தை சாரங்கபாணியை பக்தி பரவசத்துடன் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார்.
7 ஆழ்வார்கள் மொத்தம் 51 பாசுரங்களில் இத்தலத்தைப் பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர். “குடந்தைக் கிடந்த மாலாய்” என்று மங்களாசாசனம் செய்துள்ள, நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாசுரங்கள் மிகவும் போற்றப்படுகின்றன.
ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே*
சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர்த் திருக்குடந்தை
ஏர் ஆர் கோலம் திகழக் கிடந்தாய்! கண்டேன் எம்மானே
அரிஏறே! என் அம் பொன் சுடரே! செங்கண் கருமுகிலே!
எரி ஏய்! பவளக் குன்றே! நால் தோள் எந்தாய் உனது அருளே*
பிரியா அடிமை என்னைக் கொண்டாய் குடந்தைத் திருமாலே
தரியேன் இனி உன் சரணம் தந்து என் சன்மம் களையாயே.
****
சக்ரபாணியின் புகழ்
சார்ங்கபாணியைத் தரிசித்த பின்னர் சக்ரபாணி கோவிலுக்குச் சென்றேன்.
விஷ்ணுவின் சக்திவாய்ந்த சக்ராயுதத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு திருத்தலம் ஆகும். மூலவர் சக்ரபாணி பெருமாள், சிவனைப் போல மூன்றாவது கண் (நெற்றிக்கண்) கொண்டு, எட்டு கரங்களுடன் காட்சியளிப்பது இக்கோவிலின் மிக முக்கிய சிறப்பாகும். ஜலந்தராசுரன் என்ற அரக்கனை அழிக்க விஷ்ணு தன் சக்கரத்தை அனுப்பிய கதை, இத்தலத்தின் வரலாற்று சிறப்பைக் குறிக்கிறது.
பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலத்துக்குப் பாஸ்கர க்ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு
சக்ரபாணி கோவில் சிறப்புகள்:
மூன்றாவது கண்: சிவபெருமானைப் போல திருமால் நெற்றிக்கண்ணுடன் காட்சி தரும் அரிதான தலம் இது.
வில்வ அர்ச்சனை: பொதுவாக பெருமாள் கோவில்களில் துளசி பயன்படுத்தப்படும்., இங்கு சிவனுக்கு உகந்த வில்வ இலைகளால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யப்படுவது சிறப்பு.
பாஸ்கர ஷேத்திரம்: சக்ரபாணி பகவான் சூரியனின் (பாஸ்கரன்) செருக்கை அடக்கிய தலம் என்பதால், இது பாஸ்கர ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் பிரம்மா பூஜித்த சக்கரத்தின் ஒளியை மிஞ்ச சூரியன் முயன்றான்; அவனுடைய ஒளியைக் குறைத்து ஆணவத்தை அடக்கினார் விஷ்ணு. ஒளியிழந்த சூரியன் தன்னொளி தனக்கு மீளவும் கிடைக்க , இங்கே ஸ்ரீசக்கரத்தையே சரணடைந்து பிரார்த்திக்க வைகாசி மாத பௌர்ணமி திதியில் ஸ்ரீசக்கரத்திலிருந்து ஸ்ரீசக்கரபாணி சுவாமி மூன்று கண்களுடனும், எட்டு கைகளுடனும் அக்னி மயமான கேசத்துடனும் அருட்காட்சி தந்து ஆதவனின் ஒளியை மீளவும் தந்துஅருள் செய்தார். தன் பெயரில் பாஸ்கர க்ஷேத்திரம் என இத்தலம் அமையப்பெறவேண்டும் என வரம் பெற்ற சூரியன் ஸ்ரீசக்கரபாணி சுவாமிக்கு கோயில் நிர்மாணித்து பாஸ்கர க்ஷேத்திரம் என்னும் இத்திருத்தலத்தை வழிபாடு செய்தான்.
இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்ட மிகவும் பழமையான வைணவத்தலம் ஆகும்.
முதலாம் சரபோஜியின் காலத்தில் (CE 1712–1728) இக்கோயில் மேலும் புகழ்பெற்றது. இக்கோயில் மண்டபத்தில் சுமார் 6 அடி உயரமுடைய, நின்ற நிலையிலான அவருடைய பித்தளைச் சிற்பம் உள்ளது. அதற்கு அருகே சுமார் 3 அடி உயரமுடைய ஒரு பெண்ணின் உருவமும் பித்தளையில் உள்ளது. மராட்டியர் பாணியிலான தலைப்பாகை, நீண்ட அங்கிகளோடு கூடிய மராத்திய அரச உடை அணிந்து வலக் கையில் மலர் ஒன்றை ஏந்திய நிலையில் உள்ளார். மீசை மெலிந்து உள்ளது. அருகிலுள்ள பெண் இவருடைய மகளாக இருக்க வாய்ப்புள்ளது. தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் மகளுக்கு ஏற்பட்ட தீராத நோய், சக்கரபாணி சுவாமியை வழிபட்டதால் குணமானதாக கூறப்படுகிறது.
மூலவர்: சக்கரபாணி
தாயார்: விஜயவல்லி தாயார்
தீர்த்தம் சக்கர படிதுறை
காவிரியில் ஸ்ரீசக்கரம் தோன்றிய துறை, இப்பொழுதும் ‘சக்கர படித்துறை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சக்கரப் படித்துறையில் நீராடுவது, காசியில் கங்கை நதியில் நீராடுவதற்கு ஒப்பானது.
கோவில் உள்ளே உள்ள தீர்த்தம்
அமிர்தபுஷ்கரணி தீர்த்தம் காசியை விட மகிமை கூடியது
ஏழு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்திருக்கின்றனர்.
பிரம்மாவும், அக்னி மற்றும் மார்க்கண்டேயர்இங்கே விஷ்ணுவை வழிபட்டிருக்கின்றனர்.
இங்கு இறைவன் முக்கண்ணுடன் எழுந்தருளியுள்ளார். கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.
சிவபெருமானுக்கு உகந்தது வில்வ இலை. பொதுவாக சிவன் கோவில்களில்தான் வில்வ இலையால் அர்ச்சனை நடைபெறும். அதே நேரத்தில் பெருமாளுக்கு உகந்தது துளசி இலை. ஆனால் கும்பகோணத்தில் உள்ள சக்கரபாணி கோவிலில் பெருமாளுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்யப்படுகிறது.
சக்ரபாணி கோயில் ஒரு மாடக் கோயில்.
கருவறையில் வட்டமான சக்கரத்தின் நடுவில், அறுகோணத்தில் சாய்ந்து கொண்டு, பதும பீடத்தின் மேல் எட்டுத் திருக்கரங்களுடன் சேவை சாதிக்கிறார் சக்கரபாணி சுவாமி. எட்டு கரங்களிலும் திகிரி, உலக்கை, அங்குசம், தாமரை, சங்கு, வில் அம்பு, பாசம், கதை ஆகியவற்றை ஏற்றிக்கொண்டிருக்கிறார். ஜூவாலை வீசும் திருமுடியும், மூன்று கண்களுமாக காணப் படும் சக்கரபாணி சுவாமியின் அருகில், அபய, வரத முத்திரைகளுடன் சுதர்சனவல்லி தாயார் காட்சியளிக்கிறார்.
உட்பிரகாரத்தில் விநாயகர் சங்கு, சக்கரங்கள் ஏந்திய கோலத்தில் தரிசனம் தருகிறார்.
யோக நரசிம்மர் மற்றும் வடமேற்கு மூலையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீ சக்கர பாணி சுவாமி சன்னிதிக்கு வடக்கில், விஜயவல்லி தாயார் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
சுதர்சனம்
பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனுக்கு சங்கு, சக்கரம், கதை, வில், கத்தி என்று ஐந்து ஆயுதங்கள் உண்டு. அவை முறையே பாஞ்சஜன்யம், சுதர்சனம், கௌமோதகீ, சார்ங்கம், நந்தகம் என்று பெயர் கொண்டவை. இந்த ஐந்திலும் விசேஷமானது சுதர்சனம் என்கிற சக்கரம். சக்கரத்தாழ்வார் என்று போற்றப்படுபவர் இவர்தான்.
சுதர்சன ஹோமத்தை இத்தலத்தில் செய்தால் மிகுந்த நலன் தரும்.
திருவிழா:
மாதம்தோறும் மகம் மற்றும் சித்திரை நட்சத்திரங்களில் கருடசேவை நடக்கும். அட்சய திருதியை அன்றும், ரத சப்தமி அன்றும் திருக்கல்யாணம் நடத்தப்படும். வைகாசி விசாகத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது.
–subham—
Tags– குடந்தை, சாரங்க பாணி, சக்ர பாணி, கோயில், லண்டன் சுவாமிநாதன், எடுத்த படங்கள், பாஸ்கர க்ஷேத்திரம், திவ்யதேசம், சரபோஜி மன்னர் சிலை, உயர்ந்த கோபுரம், கும்பகோணம் , சுதர்சன சக்கரம், தேர் வடிவ கருவறை