கோம்பை நாய்கள், திருட்டுப் புலவர்கள், மனத்தின் போக்கு பற்றி அருணகிரிநாதர் (Post No.15,489)

Written by London Swaminathan

Post No. 15,489

Date uploaded in Kumbakonam, India –  12 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 42

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 42

***

ஆதிமக மாயி யம்பை … முதன்மை பெற்ற மாபெரும் தாயாரும்,

அம்பாளும்,

தேவி சிவனார்மகிழ்ந்த ஆவுடைய மாது … தேவியும், சிவபிரான் மகிழ்கின்ற ஆவுடையாள்* என்ற பெயர் கொண்டவளுமான உமாதேவியார்

தந்த குமரேசா … பெற்றருளிய குமாரக் கடவுளே,

***

திருட்டுப் புலவர்கள் மீது வசைமாரி

கருடன் மிசை வரு கரிய புயல் என … கருடன்மேல் வருகின்ற

கரு மேகம் போன்ற திருமால் நீ என்றும்,

கமல மணி என உலகோரை … தாமரை (பதும நிதி), சிந்தாமணி

நீ என்றும் உலகத்தில் உள்ளவர்களை

கதறி அவர் பெயர் செருகி மனம் அது கருதி … கூச்சலிட்டு,

பாடலில் பாடப்படுபவருடைய பெயரை வைத்து அழைத்து, மனத்தில்

மிக்க கருத்துடன்

முது மொழிகளை நாடி … பழைய செஞ் சொற்களைத் தேடியும்,

திருடி ஒரு படி நெருடி … திருடியும், ஒரு படி அளவுக்குத் திரித்து

அப்பாடலில் அமைத்தும்,

அறிவிலர் செவியில் நுழைவன கவி பாடி … அறிவில்லாத

மனிதர்களுடைய காதுகளில் நுழையும் படி பாடல்களைப் பாடியும்,

திரியும் அவர் சில புலவர் மொழிவது … திரிகின்றவர்களாகிய சில

புலவர்கள் கூறுவது,

சிறிதும் உணர் வகை அறியேனே … சற்றேனும் உணரும்படியான

வழியை நான் அறிந்திலேன்.

வருடை இனம் அது முருடு படும் … மலை ஆடுகளின் கூட்டமும்,

கரடு முரடு உள்ள

அகில் மரமும் மருதமும் அடி சாய … அகில், மருதம் ஆகிய

மரங்களும் அடி பெயர்ந்து சாயும்படி,

மதுரம் எனு(ம்) நதி பெருகி இரு கரை வழிய … மதுரம் என்ற

ஆறு பெருகி இரண்டு கரைகளும் வழிந்து ஓடி,

வகை வகை குதி பாயும் … பல வகையாகக் குதித்துப் பாய்கின்ற

குருடி மலை உறை முருக … குருடி மலையில்* வீற்றிருக்கும்

முருகனே,

குல வட குவடு தவிடு எழ மயில் ஏறும் … சிறந்த வட மலை

ஆகிய கிரெளஞ்சம் தவிடு பொடியாய்த் தூள் எழ மயிலில் ஏறும்,

குமர குருபர திமிர தினகர … குமரனே, குருபரனே, அஞ்ஞான

இருளுக்கு ஓர் சூரியனே,

குறைவில் இமையவர் பெருமாளே. … குறைவில்லாத தேவர்களின்

பெருமாளே.

குருடிமலை கோயமுத்தூருக்கு அருகில் துடியலூர் ரயில் நிலையத்துக்குப் பக்கத்தில் உள்ளது.

***

பங்கேருகனும் மருள சென்று ஏயும் அமரருடை சிறை மீள

செண்டு ஆடி அசுரர்களை … தாமரை மலரில் வாழும் பிரமனும்

மயங்கி அச்சமுற, சென்று முறையிட்ட தேவர்களுடைய சிறையை

நீக்கி, அசுரர்களைச் சிதற அடித்து,

ஒன்றாக அடியர் தொழும் தென் சேரி கிரியில் வரும்

பெருமாளே. … யாவரும் ஒன்று கூடி அடியார்கள் அனைவரும்

தொழுது வணங்க, தென் சேரி கிரியில்* வீற்றிருக்கும் பெருமாளே.

செஞ்சேரிமலை என்று இப்போது வழங்கப்படும் இத்தலம் கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்லடத்துக்கு தெற்கே 12 மைலில் உள்ளது.

***

முதலை உண்ட பாலகனை சுந்தரர் மீட்ட கதை

கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையில் … கொங்கு நாட்டில்

உயிர் மீளப்பெற்று வளர்ந்த தென்கரை நாட்டில் (திருப்புக்கொளியூரில்*)

அப்பரருள் கொண்டு உடலுற்ற பொருள் அருள்வாயே …

(அவிநாசி என்னும்) சிவபெருமான் அருள்பெற்று (* முதலை உண்ட பாலனது உடலில் மீண்டும் உயிர் பொருந்திய) ரகசியப் பொருளை எனக்கு அருள் புரிவாயாக.

குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றி பெறு … யானைமுகப்

பெருமானுக்கு இளையவனாம் கந்தன் என்ற வெற்றிப் புகழ் பெற்ற

கொங்கண கிரிக்குள் வளர் பெருமாளே. … கொங்கணகிரி

என்னும் மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

கொங்கணகிரி கோவை மாவட்டம் சோமனூருக்கு அருகே உள்ளது. திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார்,

வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது.

இந்த ரகசியப் பொருளை எனக்கும் அருள்க என்று

அருணகிரியார் வேண்டுகிறார்.

***

மனத்தின் போக்கு :அருணகிரி வருத்தம்

பாட்டி லுருகிலை … மனமே, நீ பாட்டின் பொருளை அறிந்து

உருகுதல் இல்லை,

கேட்டு முருகிலை … பாட்டின் பொருளைச் சொல்லக் கேட்டும்

உருகுதல் இல்லை,

கூற்று வருவழி பார்த்து முருகிலை … யமன் வரும் வழியைக்

கண்டும் இறைவனிடம் பக்தியால் உருகுவதில்லை,

பாட்டை யநுதினம் ஏற்றும் அறிகிலை … கஷ்டங்களை தினமும்

அனுபவித்தும் உண்மைப் பொருளை நீ அறிவதில்லை,

தினமானம் பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை …

நாள்தோறும், பாம்பை அணிந்த சிவபிரான் அருளும் மோக்ஷ

இன்பத்தை விரும்புவதும் இல்லை,

நாக்கின் நுனிகொடு ஏத்த அறிகிலை … நுனி நாக்காலாவது

இறைவனைப் போற்றும் துதி சொல்ல அறிகின்றாய் இல்லை,

பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது … பாழ்பட்ட இந்தப் பிறப்புக்களிலே மீண்டும் பிறப்பெடுத்து உழலும் மனமே,

நல் வழிபோக மாட்டம் எனுகிறை … நீ நல்ல வழியிலே

போகமாட்டேன் என்று சொல்கிறாய்.

கூட்டை விடுகிலை … உடல் சிறையாகிய இந்தக் கூட்டை

விடுகின்றதாக நீ இல்லை,

ஏட்டின் விதிவழி யோட்டம் அறிகிலை … ஏட்டில் உனக்கென

எழுதிவைத்த தலைவிதி எந்த வழியிலே உன்னைச் செலுத்துகிறது என்று நீ அறிகின்றிலை,

பார்த்தும் இனியொரு வார்த்தை அறைகுவன் இதுகேளாய் …

உன் நிலைமையைப் பார்த்தும் சும்மா இருக்க முடியாமல் நான் இனி உனக்கு ஒரு நல்வார்த்தை கூறுகிறேன் – இதை நீ கேட்பாயாக.

வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன் ஏத்த புகழ் …

அவனது திருப்புகழை ஓதி அவனைத் துதிக்க உனக்கு நல்ல வாக்கையும் உன் உள்ளத்தில் நல்ல தரிசனத்தையும் அவன் உனக்கு அருள்வான்.

அடியார்க்கும் எளியனை வாழ்த்த … அடியார்களுக்கு அவன்

வெகு எளியனானவன். அவனை வாழ்த்தினால்

இருவினை நீக்கு முருகனை மருவாயோ … நல்வினை தீவினை

இரண்டையுமே விலக்கும் முருகனை நீ இனி சிந்திப்பாயாக.

ஆட்டி வடவரை வாட்டி … உலகையே ஆட்டி வைப்பவரான

சிவபிரான் வடக்கில் உள்ள மேருமலையை வருத்தி வில்லாக வளைத்து,

அரவொடு பூட்டி திரிபுர மூட்டி … வாசுகி என்ற பாம்பை நாணாகக்

கட்டி, திரிபுரத்தில் தீ மூட்டி,

மறலியின் ஆட்டம்அற சரண் நீட்டி … யமனுடைய ஆணவம்

அழியும்படி பாதத்தை நீட்டி அவனை உதைத்துத் தள்ளி,

மதனுடல் திருநீறாய் ஆக்கி … மன்மதனுடைய உடலைச்

சாம்பலாகும்படி எரித்து

மகமதை வீட்டி யொருவனை ஆட்டின் முகமதை நாட்டி …

தக்ஷனின்* யாகத்தை அழித்து, அந்த தக்ஷனைக் கொன்று ஆட்டின் தலையை அவனது உடலின் மீது பொருத்தி,

மறைமகளார்க்கும் வடுவுற வாட்டும் … வேதவல்லி சரஸ்வதி

தேவியின் உடலில் காயம் ஏற்படும்படி அவளை வாட்டியவரும்,

உமையவன் அருள்பாலா … உமாதேவியின் கணவருமான

சிவபிரான் அருளிய பாலனே,

சீட்டை யெழுதி வையாற்றி லெதிருற ஓட்டி … திருப்பாசுரம்

எழுதிய ஏட்டை வைகையாற்று வெள்ளத்தில் எதிர்த்து ஏறும்படியாக

ஓட்டியும்,

அழல்பசை காட்டி சமணரை … நெருப்பிலே இட்ட ஏடு பச்சை

நிறத்துடன் விளங்கும்படி காட்டியும்,

சீற்ற மொடுகழு வேற்ற … (வாது செய்து தோற்ற) சமணர்களைக்

கோபித்துக் கழுவேற வைத்தும்,

அருளிய குருநாதா … அருள் செய்த (திருஞானசம்பந்தனாக வந்த)

குருநாதனே,

தீர்த்த எனதகம் ஏட்டையுடன் நினை … பரிசுத்தனே, என் மனம்

விருப்பத்துடன் உன்னை

ஏத்த அருளுட னோக்கி அருளுதி … துதிக்கும்படி நீ

திருவருளுடன் கண்பார்த்து அருள வேண்டும்.

தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் பெருமாளே. … தீர்த்தமலை**

நகரின் காவல் தெய்வமான பெருமாளே, இந்திராணி மகள்

தேவயானையின் பெருமாளே.

தக்ஷன் சிவபிரானின் மாமனார். சிவனையும் தன் மகள் தாக்ஷாயணியையும் மிகவும் அவமதித்து தக்ஷன் செய்த யாகத்தை சிவபிரான் வீரபத்திரர் உருவத்தில் வந்து அழித்து, தக்ஷனைக் கொன்று, ஆட்டுத்தலையை அவனது உடலில் பொருத்தினார். யாகத்துக்கு வந்த சரஸ்வதியின் முகத்தில் கோபத்துடன் காயம் ஏற்படுத்தினார் – கந்த புராணம்.

** தீர்த்தமலை சேலம் மாவட்டத்தில் மொரப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கில் 17 மைலில் உள்ளது.

***

கோம்பை நாய்கள் பற்றி

பாந்த(ள்) முடி மீது தாந்த திமி தோதி தாஞ் செகண சேசெ

என ஓசை … (காளிங்கன் என்ற) பாம்பின் முடியின் மேல் தாந்த

திமிதோதி தாஞ் செகண சேசெ என்ற இவ்வாறான தாள ஒத்துக்களோடு ஓசைகளை

பாங்கு பெற தாளம் ஏங்க நடமாடும் பாண்டவர் சகாயன்

மருகோனே … அழகாகத் தருகின்ற தாளம் ஒலிக்க நடனம்

ஆடியவனும், பாண்டவர்களின் துணைவனுமாகிய கண்ணனுடைய

மருகனே,

பூந்தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி

திகழ் சோலை … பூக்களும் தளிர்களும் விளங்கும் வேங்கை மரங்களும்,

பலா மரங்களும், அழகிய வாழை மரங்களும் கோடிக் கணக்காகத் திகழும் சோலைகளுடன்,

பூம் தடம் உலாவு கோம்பைகள் குலாவு பூம்பறையில் மேவும்

பெருமாளே. … அழகிய குளமும், உலவித் திரியும் கோம்பை* நாய்களும்

இருக்கும் பூம்பறையில்** வீற்றிருக்கும் பெருமாளே.

கோம்பை – செந்நிறமான உயர் ஜாதி நாய்கள். மதுரை மாவட்டத்தில் உள்ளன. காவலுக்கு ஏற்றவை.

** பூம்பாறை கொடைக்கானலுக்கு மேற்கே 12 மைலில் வராககிரி மீது உள்ளது.

கோம்பை அல்லது பாலிகர் நாய் என்பது தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்ட நாய் இனமாகும் பாரம்பரியமாக காவல் மற்றும் பாதுகாப்பிற்காக வளர்க்கப்படும் .

கோம்பை நாய்கள் அகலமான, குட்டையான, தசைநார், சக்திவாய்ந்த மற்றும் தடகள நாய்களாக விவரிக்கப்படுகின்றன, அவை பொதுவாக வெளிர் பழுப்பு முதல் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் மெல்லிய, கருப்பு, முகமூடி போன்ற முகவாய் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

மிகவும் புத்திசாலியாகவும், தங்களுக்குப் பரிச்சயமானவர்களிடம் மிகவும் விசுவாசமாகவும், பாசமாகவும் இருக்கும் .

தேனி மாவட்டத்தில் தோன்றிய இந்த இனம் கோம்பை நகரத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது .

–subham—

Tags- கோம்பை நாய்கள், திருட்டுப் புலவர்கள், மனத்தின் போக்கு, முதலை , சுந்தரர் மீட்ட கதை, அருணகிரிநாதர் , அரிய செய்திகள் Part 42

Leave a comment

Leave a comment