ஐந்து விஷயங்களில் வெற்றியை படிப் படியாகத் தான் அடைய  முடியும்! (Post No.15,492)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,492

Date uploaded in Kumbakonam, India – 13 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம் 

ஐந்து விஷயங்களில் வெற்றியை படிப்படியாகத் தான் அடைய  முடியும்!

 ச. நாகராஜன்

 சில அருமையான சுபாஷிதங்கள் இதோ:

சாதுக்கள் மகிமை!

ஷைலே ஷைலே ந மாணிக்யம்மௌக்திகம் கஜே கஜே |

சாதவோ ந ஹி சர்வத்ர,  சந்தனம் ந வனே வனே ||

மாணிக்கமானது ஒவ்வொரு மலையிலும் காணப்படுவதில்லை.

முத்தானது ஒவ்வொரு யானையின் தலையிலும் கிடைப்பதில்லை.

சந்தன மரமானது ஒவ்வொரு காட்டிலும் வளர்வதில்லை.

சாதுக்கள் ஒவ்வொரு தெரு முனையிலும் காணப்படமாட்டார்கள்.

ஆன்மீக லாபத்தைத் தரும் மகான்கள் அரிதாகவே காணப்படுவர்.

ஒவ்வொரு தெருவிலும் இருக்க மாட்டார்கள். இது எது போல என்றால் மாணிக்கம், முத்து, சந்தனமரம் ஆகியவை அரிதாகவே கிடைப்பது போலத் தான்! 

நிலையை இழந்தால் மதிப்பை இழப்பர்!

ஸ்தானப்ரஷ்டா: ந சோபந்தேதந்தா: கேஷா நகா நரா: |

இதி சஞ்சிந்த்ய மதிமான் ஸ்வஸ்தானம் ந பரித்யஜேத் ||

பல், கேசம், நகம் ஆகியவை தனது மதிப்பை அது இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் வெளியே இருக்கும் போது பெறுவதில்லை.

அதே போலவே தனது நிலையிலிருந்து நழுவிய மனிதர்களும் உரிய மதிப்பைப் பெறுவதில்லை.  இதை மனதில் இருத்தியவாறு புத்திசாலிகள் தங்களது சரியான இடத்தை விட்டு விடக் கூடாது.

இதை வள்ளுவரின் ஒரு குறளுடன் ஒப்பிடலாம்.

“தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையின் இழிந்தக் கடை”

                      (குறள் 964) 

நல்ல குலத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஒழுக்கம் தவறிவிட்டால் தலையிலிருந்து கீழே விழுந்த மயிரைப் போல மதிக்கப்படமாட்டார்கள்.

நரைத்த தலையும் முகச் சுருக்கமும் யாருக்கு மதிப்பைத் தரும்?

அலங்கரோதி ஹி ஜராராஜாமாத்யபிஷக்யதீன் |

விடம்பயதி பன்யஸ்த்ரீ மல்லகாயகசேவகான் ||

நரைத்த தலை, முகச் சுருக்கங்கள் ஆகியவை அரசர்கள், மந்திரிகள், வைத்தியர்கள்,மகான்கள் ஆகியோருக்கு பெரும் மதிப்பைத் தரும். ஆனால் அதுவே விபசாரிகள், மல்யுத்த வீரர்கள், பாடகர்கள், வேலைக்காரர்கள் ஆகியோருக்கு இழிவைத் தரும்.

படிப்படியாக வெற்றியை நோக்கிச் செல்லும் ஐந்து விஷயங்கள்!

ஷனை: பந்தா: ஷனை: கந்தா: ஷனை: பர்வதமஸ்தகே |

ஷனை: வித்யா ஷனை: வித்தம் பஞ்சைதானி ஷனை: ஷனை: ||

நீண்ட தூரத்தை மெதுவாகத் தான் கடக்க வேண்டும்.

கந்தல் துணியைச் சீராக்க மெதுவாகத் தான் தைக்க வேண்டும்.

மலைச் சிகரத்தை அடைய மெதுவாகத் தான் ஏறி அடைய வேண்டும்.

வித்யையை அடைய மெதுவாகத் தான் கற்க வேண்டும்.

செல்வத்தைச் சேர்க்க மெதுவாகத் தான் சேர்க்க முடியும்.

இந்த ஐந்திலும்  வெற்றி என்பது மெதுவாக, படிப்படியாகத் தான் அடைய முடியும்.

பணக்காரனையும் ஏழையையும் ஒப்பிட முடியுமா?

ஶ்ரீமந்த: ஷ்ரமவந்த: ச நைவ துல்யா: கதாசன |

பாந்தி ரத்நோபலை: ஏகே ஷ்ரமவாரிகணை: பரே ||

ஒரு பணக்காரனையும் ஒரு தொழிலாளியையும் சரியாகவே ஒப்பிடவே முடியாது.

செல்வம் படைத்தவன் ரத்னங்களை அணிந்து ஜொலிப்பான்.

ஏழையோ நெற்றியிலிருந்து விழும் வியர்வைத் துளிகளுடன் இருப்பான்.

*

Leave a comment

Leave a comment