WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,498
Date uploaded in London – 15 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
புகையிலைப் பாட்டு!
ச. நாகராஜன்
1201 பாடல்கள் அடங்கிய தனிப்பாடற்றிரட்டு என்ற நூல் மக்கிப் பொடிப்பொடியாகப் போகும் நிலையில் என்னிடம் உள்ளது.
அட்டையும் இல்லை. முதல் பக்கங்கள் சிலவும் இல்லை.
அதில் பல அழகிய பாடல்கள் உள்ளன.
பொது – பல வித்துவான்கள் பாடல் என்ற தலைப்பில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன.
அதில் உள்ள இந்த புகையிலைப் பாடலைக் கீழே தருகிறேன்.
புகையிலைப் பாட்டு
நாலெழுத் துப்பூ டுநடுவேநரம் பிருக்கும்
காலுந்தலையுங்கடைச்சாதி – மேலாக
ஒட்டிமுதலெழுத்துமோ துமூன்றாம்மெழுத்தும்
விட்டாபரமனுக்கு வீடு
புகையிலை – புலை- கைலை
நாலெழுத்து கொண்ட சொல்.
காலும் தலையும் கடை சாதி – புலை(யர்)
முதல் எழுத்தும் மூன்றாம் எழுத்தும் ஆக இவை இரண்டும் விட்டு விட்டால் வருவது கைலை. அது பரமனுக்கு வீடு.
சிவபிரான் உறையும் கைலாய மலை.
புகையிலைக்குள் இவ்வளவு அடங்கி இருக்கிறது என்கிறார் புலவர்.
இயற்றியவர் யார் என்று தெரியவில்லை.
இன்னொரு பாடல்:
காதலன் காதலிக்கு அடையாளச் செய்தி சொல்வது!
ஓதுமைந்திலொன்றிலைந்திலொன்று மன்னவன் பிதா
ஊர்திதொட்டவேருன் மீதிலுற்ற சாபநிருபனார்
தாதுகொண்டகாளி மாலை சூடி தப்பி தம்பி சேய்
தன் குடைப்பினைவன்மற்றலைசுகிரீடதுவாசனார்
காதனன்பன்றந்தைபாகன் பின்வன்பகைச்சுமைக்
கலையெடுத்தகையரையர்கதிபெறத் தவஞ் செய்தோன்
தீதிறாதைகொண்டுவந்தசிலைவதிந்துபதியினான்
சிரமரிந்தவன்கொள்பாரிசேரிலாலுறைந்ததே
பாடலைப் படித்தால் ஒன்றுமே புரியவில்லை. ஆனால் பிரித்துச் சிந்தித்துப் பார்த்தால் பொருள் விளங்கும்.
ஓதும் ஐந்தில் ஒன்று
ஓதும் – ஐந்து பஞ்ச பூதம்
ஐந்தில் ஒன்று – நிலம் (நிலம்,நீர், வான், காற்று, தீ ஆகிய பஞ்சபூதங்களுள் ஒன்று நிலம்)
ஐந்தில் ஒன்றில் ஐந்தில் ஒன்று
நிலத்தில் ஐந்து திணைகள் உண்டு.
அந்த ஐந்தில் ஒன்று குறிஞ்சி
அதற்கு மன்னவன் யார்? முருகன்! குறிஞ்சித் தெய்வம் முருகன் அல்லவா?
அவன் பிதா – யார்? சிவபிரான்!
அவன் ஊர்தி – சிவனின் வாகனம் எது? ரிஷபம்!
அதற்கு ஏழில் உள்ளது யார்?
ரிஷப ராசிக்கும் ஏழாம் ராசி விருச்சிகம்.
அதன் மீதில் உற்ற சாபம் தனுசு.
அதைக் கொண்ட நிருபன் (அரசன்) யார்? வில்லைக் கொண்டவன் இராமன்.
அவன் தம்பி பனை மாலை சூடிய பலராமன்.
அவன் தம்பி கிருஷ்ணன்.
அவன் சேய் மன்மதன்
அவன் குடை திங்கள்.
அதற்குப் பின் ஐவன் – சனி (செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி)
அவன் கிரீடம் கொடியாய் உடையோன் – துரியோதனன்
அவன் நண்பன் – கர்ணன்
அவன் தந்தை – கர்ணனின் தந்தை சூரியன்
அவன் பாகன் – அருணன்
அவன் பின்னானவன் – கருடன்
அவன் பகை – கருடனுக்குப் பகை யார்? ஆதிசேஷன்
அவன் சுமை பூமி – ஆதிசேஷன் சுமக்கும் பூமியில் உள்ளது கடல்
கலை எடுத்தல் – அந்தக் கடலை எடுத்தவர் யார்? அகத்தியர்
அவரையர் – அவரையர் யார்? பிரமதேவன்
அவர் கதிப் பெறத் தவம் செய்தோன் – தவம் செய்தவன் அனுமன்
அவன் தாதை – அவன் தந்தை வாயு பகவான்
அவன் கொண்டு வந்த சிலை வதிந்த பதியினான் – அவன் கொண்டு வந்த மேரு சிகரங்களைப் பதியாக – இருப்பிடமாகக் – கொண்டவன் இராவணன்
அவன் சிரம் அரிந்தவன் – அந்த இராவணனின் தலையை அறுத்தவன் யார்?
திருமால்!
அவன் கொள பாரி – திருமாலின் மனைவி இலட்சுமி
அவள் சேர்யில் – தாமரைப் பூ’(தாமரைப் பூவில் உறைந்திருப்பவள் லட்சுமி)
ஆல் உறைந்ததே – ஆலமரத்தின் கீழ் இருந்தது!
இந்தப் பாடல் பொருளைச் சம்பாதிப்பதற்காகக் காதலியை விட்டுப் பிரிந்த தலைவன் ஒருவன் ஆலமரத்தின் கீழ் வைத்த அலர்க்குறி – அடையாளக் குறி தாமரை! அதை அவனது காதலியின் தோழி பார்த்து தலைவிக்கு விஷயத்தை உணர்த்தினாள்.
போதும்டா சாமீ என்கிறீர்களா?
எழுதிய புலவர் யார் என்று தெரியவில்லை!
இது போல ஆயிரக் கணக்கில் உள்ள பாடல்கள் இனி அர்த்தத்துடன் கிடைக்குமா?
**