
Post No. 15,501
Date uploaded in London – 16 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
அவ்வையார், அதியமான், அருணகிரிநாதர், ஆல்பிருனி, பாரதியார், சுவாமி சிவானந்தா – ஆகிய ஆறு பெரியோர்களும் நெல்லிக்கனியின் பெருமையை விதந்தோதியுள்ளார்கள்.
46திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 46
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 46
***
மேரு மலை வில் = பார்வதி கை
அணிசெவ்வியார் திரை சூழ்புவி … அழகு நிறைந்த மாதர் (பெண்),
கடல் சூழ்ந்த பூமி (மண்),
தன நிவ்வியே கரை யேறிட … செல்வம் (பொன்) என்ற
மூவாசைகளையும் கடந்தே கரை ஏறுவதற்கான
அறிவில்லியாம் அடியேன் இடரதுதீர … அறிவற்றவனாகிய
அடியேனது துயரங்கள் நீங்குவதற்கு வேண்டிய
அருள்வல்லையோ … திருவருளை வலிய அருள்வாயோ?
நெடு நாளினம் இருளில்லிலேயிடுமோ … அல்லது நீண்ட
காலத்துக்கு இன்னமும் என்னை இருள் சூழ்ந்த வீடுகளான
பிறவிகளிலே கொண்டு விட்டுவிடுமோ?
உனதருளில்லையோ … உனது திருவருள் என்மீது சிறிதும்
இல்லையோ?
இனமானவை யறியேனே … உன்அடியார் கூட்டத்தை நான்
அறியவில்லையே.
குணவில்லதா மக மேரினை … சீரான வில்லாக மகா மேருவைத் தாங்கிய*
அணிசெல்வியாய் அருணாசல குரு … அழகிய தாயார் பார்வதி தேவியுடன் கூடிய அண்ணாமலையாருக்கு குருநாதனே,
* சிவபிரான் இடது கரத்தில் மேருவை வில்லாகத் தாங்கினார். அது தேவியின் கை.
***
கரு நெல்லிக்காய் மஹிமை= விஷ்ணு
கருநெல்லி மேனி அரி மருகோனே … கருநெல்லிக்காய் போல
பச்சையும் கருப்பும் கலந்த நிறத்து மாலின் மருகனே,
கனவள்ளியார்கணவ முருகேசா … பெருமை வாய்ந்த வள்ளி
தேவியின் கணவனே, முருகேசா,
திருவல்லிதாயம் அதில் உறைவோனே … திருவலிதாயம்* என்ற
தலத்தில் வீற்றிருப்பவனே,
திகழ்வல்ல மாதவர்கள் பெருமாளே. … விளங்குகின்ற
பெருந்தவர்கள் போற்றும் பெருமாளே.
* திருவலிதாயம் இப்போது ‘பாடி’ எனப்படும். சென்னைக்கு அருகே வில்லிவாக்கத்திற்கு 2 மைல் மேற்கே உள்ளது.
யாரும் கிருஷ்ணனையோ விஷ்ணுவையோ கரு நெல்லிக் காய்க்கு ஒப்பிட்டத்தில்லை . வேறு என்னென்னவோ சொல்லி கருப்பு என்று பகர்ந்தார்கள்; காக்கை போல கருப்பு என்று கூடப் புகழந்துள்ளார்கள் ;கரு நெல்லிக்காய் என்பது அபூர்வ நெல்லிக்காய் அல்லது காய்ந்து உலர்ந்த நெல்லிக்காய் வற்றல் என்று சொல்லலாம். நெல்லிக்காய்க்குப் பொதுவாகவே அவ்வளவு மதிப்பு ! ஸ்யவனப் பிரகாஷ் என்ற நெல்லிக்காய் லேகியம் செய்து அதன் புகழைப் பரப்பினார் ரிஷிகேஷில் தெய்வ நெறிக் கழகம் ஸ்தாபித்த சுவாமி சிவானந்தா – பத்தமடையில் பிறந்து மலேஷியாவில் டாக்டர் தொழில் செய்தவர் !
அவ்வையாரும் ஆல்பெரூனியும் கரு நெல்லிக்காயின் மஹிமையை நமக்கு முன்னரே செப்பியுள்ளனர்; பாரதியாரையும் கூடச் சேர்த்துக் கொள்ளலாம்!
அதியமான், அவ்வையார், ஆல்பிரூனி, அருணகிரிநாதர் ஆகிய நால்வருக்கும் நெல்லிக்காயுக்கும் இடையே சுவையான தொடர்பு உண்டு.
அதியமான் நெடுமான் அஞ்சி என்ற குறுநில மன்னன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டின் தகடூர் பகுதியை ஆண்டு வந்தான்.தமிழ்ப் புலவர்களை ஆதரித்த வள்ளல்களில் முதல் வரிசையில் நின்றவன். ஒரு முறை அவனை தமிழ் மூதாட்டி அவ்வையார் சந்திக்க வந்தார். நல்ல விருந்து கொடுத்து நிறைய பரிசுகளையும் கொடுத்தான். தமிழ் கூறு நல்லுலகில் அவ்வைக்குள்ள புகழழாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்பால் புலவர்களில் ஒருவர் என்பதாலும் அவரை விஷேசமாகக் கவனிக்க விரும்பினான் அதியமான்.
நெல்லிக்காய் ஆரோக்கியம் தரும் ஒரு அருமருந்து. பழங்களையுயும் மிஞ்சும் அளவுக்கு சத்து உடையது. ஆயுளை வளர்க்கச் செய்வது. வைட்டமின் சி சத்தும் புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ் சத்தும் மிக்கது.
வட இந்தியாவில் ரத்த சுத்திக்குப் பயன்படுத்தும் திரிபலா சூர்ணத்திலும் சியவனப் ப்ராஷிலும் நெல்லிக்காய் பயன்படுத்தப் படுகிறது. தென் இந்தியாவில் ஊறுகாய், துவையல்,பச்சிடியில் முக்கிய அங்கம் வகிப்பது.
இவ்வளவு புகழ் உடைய நெல்லிக்காயிலும் ஒரு அரிய வகை நெல்லிக்காய் மரம் அதியமான் ஊரில் இருந்தது. அது கரு நெல்லி மரம். அதில் நன்கு வளர்ந்து முற்றிய ஒரு நெல்லிக்காய் மன்னன் கைக்கு வந்தது. நாட்டில் ஏதேனும் அரிதாகக் கிடைத்தால் அதை ஓடோடி வந்து மன்னரிடம் ஒப்படைப்பது பழங்கால இந்திய வழக்கம். புதையல் ஆனாலும் சரி, பெரிய வைரமானாலும் சரி, அரிதான பொருள் எல்லாம் இறைவனுக்குச் சமமான மன்னனுக்கே உரியது. இப்படிக் கிடைத்த அரிய நெல்லிக்காயை மன்னன் சாப்பிட்டால் நீண்ட காலம் வாழ்ந்து எல்லோருக்கும் மேலும் மேலும் உதவுவான் என்று மக்கள் எண்ணினர்.
ஆனால் அதியமானோ தமிழின் மீது ஆராக் காதல் கொண்டவன். நான் சாப்பிடுவதை விட, வயதான அவ்வைப் பாட்டி சாப்பிட்டு இன்னும் நீண்ட காலம் உயிர்வாழ்ந்தால் தமிழ் மொழியும் வாழும் உலகமும் உய்வு பெறும் என்று எண்ணி அதை அவ்வையாரிடம் கொடுக்கிறான். என்ன அதிசயம் பாருங்கள். அவ்வையார் வாழ்ந்தாரோ இல்லையோ அது பற்றி ஒன்றும் இலக்கியச் சான்று இல்லை. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளாக அதியமானின் புகழ் வாழ்கிறது. இன்னும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு தமிழ் வாழும் வரை அவன் புகழும் வாழும். தங்கமும் வைரமும் சாதிக்காத பணியை நெல்லிக்காய் சாதித்தது என்றால் அது அதிசிய நெல்லிதானே! இது காலத்தால் அழியாத புறநானூற்றுக் கவிதையில் (91) இடம் பெற்றுவிட்டது.
நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே! தொன்னிலைப்
பெருமலை விடர் அகத்து அருமிசை கொண்ட
சிறி இலை நெல்லி தீங்கினி குறியாது,
ஆதல் நின்னகத்து அடக்கிச்
சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே.
(அதியமான் நெடுமான் அஞ்சி மீது ஔவையார் பாடியது-புறம் 91)
பொருள்: மலைச் சரிவிலே கடு முயற்சியுடன் பெற்ற நெல்லியின் இனிய கனியைப் பெறுதற்கு அரிது என்றும் கருதாது, அதனால் விளயும் பலனையும் கூறாது, அதை உன் மனதில் மட்டும் வைத்துக் கொண்டு என் மரணத்தைத் தவிர்க்க எனக்குக் கொடுத்தாயே நீ சிவ பெருமான் போல நீண்ட புகழோடு வாழ்வாயாக.
இந்தியவியலின் தந்தை ஆல்பிரூனி
ஆல்பிருனி என்பவர் இஸ்லாமியர்களில் மாமேதை. லியார்னோ டா வின்சி போல அவர் பல் துறை வித்தகர். பன் மொழிப் புலவர். கணிதம், மருத்துவம் ,வான சாத்திரம், உயிரியல், மொழியியல் என்று எல்லா துறைகளிலும் புலமை பெற்றவர். ஒரு பாரசீக மன்னர், அவரை இந்தியாவுக்கு அனுப்பி இந்து மத சாத்திர ரகசியங்களை அறிந்துவர உத்தரவிட்டார். அவர் கி.பி.1017 முதல் இந்தியாவில 13 ஆண்டுகள் தங்கி இந்திய அறிவியல் ரகசியங்களை அராபியர் மூலம் உலகத்துக்கு அறிவித்தார். இந்தியவியல் (Father of Indology) படிப்பின் தந்தை என்று இன்று அவரை உலகம் பாராட்டுகிறது. அவர் இந்தியாவின் சரித்திரம் என்ற புத்தகம் எழுதியுள்ளர். கஜினி முகமது படை எடுப்பு பற்றியும் எழுதியுள்ளார். அவர் நெல்லிக்காய் மகிமையை இந்தியர்களிடமிருந்து அறிந்து தனது மருத்துவப் புத்தகத்தில் எழுதியுள்ளார். திரிபலா சூர்ணத்தில் பயன்படும் கடுக்காய் மகிமையையும் எழுதியுள்ளார். நெல்லிக்காய், புளி ஆகியவற்றுடன் தயாரிக்கும் சில பொருட்களை அவர் குறிப்பிடுகிறார்.
நெல்லிக்காய் நிற விஷ்ணு
அருணகிரிநாதர் திருப்புகழில் விஷ்ணுவை கரு நெல்லி நிறத்துடன் ஒப்பிடுவது வியப்பான ஒரு உவமை. ஒருவேளை நெல்லி போல விஷ்ணுவும் நமக்கு ஆரோக்கியம் அருள்வான் என்பதை அருணகிரி நாதர் நமக்குச் சொல்லாமல் சொல்ல நினைக்கிறாரோ!!
நெல்லிக்காயின் மகிமை 2000 ஆண்டுகளாக எழுதப்பட்டாலும் அந்த ஏழைகளின் ஆப்பிளுக்கு தமிழர்களிடையே இன்னும் சரியான புகழ் கிட்டவில்லை! வட இந்தியர்கள் இதை தங்க பஸ்பம் போல கருதி பயன்படுத்துகிறார்கள்.
பாரதியாரும் நெல்லிக்காயும்
பாரதியாரின் புதிய ஆத்திச்சூடியில் மொத்தமுள்ள 110 பொன்மொழிகளில் கடைசி பகுதிக்கு வந்து விட்டோம். இங்கு அவர் நமக்கு ஒரு புதிர் போடுகிறார்.
ரேகையில் கனி கொள் (94ஆவது அறிவுரை )
நெல்லிக்காயில் ரேகைகள் இருப்பதை நாம் அறிவோம்.. பாரதியார் நெல்லிக்காயை சொல்கிறாரா அல்லது வேறு ஏதாவது சொல்கிறாரா என்பது விளங்கவில்லை ; ஆகையால் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அறிஞர் சேக்கிழார் அடிப்பொடி டாக்டர் டி ,என் ராமச்சந்திரன் கூட இரு பொருள் தருகிறார்.
ரேகையில் கனி கொள் 94
CONSUME STREAKED BERRY/AMLA/NELLIKKAAY/GOOSEBERRY
OR
SEEK OUT VEINS OF LOVE
அன்பினை நாடு/ தேடு என்பது இரண்டாவது பொருள்.
பாரதியார் இறந்து 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது; அவர் உயிரோடு இருந்தால் ஐயா, கொஞ்சம் விளக்குங்கள் என்று கெஞ்சியிருக்கலாம்.
—SUBHAM—
TAGS- திருப்புகழில், அருணகிரிநாதர் , அரிய செய்திகள் Part 46, கரு நெல்லிக்காய் மஹிமை, ஆல்பிரூனி, அருணகிரிநாதர், பாரதியார், அதியமான் அஞ்சி, அவ்வையார், திரிபலா சூர்ணம், ஆறு பெரியோர்கள் ,பகுதி-46, மேரு மலை, பார்வதி கை