யாசிப்பதை விட உழுதுண்டு வாழ்வதே சிறந்தது! புலவரின் முடிவு!! (Post No.15,503)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,503

Date uploaded in London – 17 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

தனிப்பாடல் தமிழ் இன்பம்!

யாசிப்பதை விட உழுதுண்டு வாழ்வதே சிறந்தது! புலவரின் முடிவு!!

ச. நாகராஜன் 

ஒரு புலவர். மிகவும் வறுமையில் வாடினார். யாசித்துப் பார்த்தார். ஒன்றும் கிடைக்கவில்லை.

சரி, சிவபிரானிடமே சென்று முறையிடுவோம் என்று நேராக கோவிலுக்குச் சென்று முறையிட்டார்.

நடந்தது என்ன? அவரே ஒரு பாடலாகப் பாடி சொல்லி விட்டார்! 

வஞ்சகர்பால் நடந்தலைந்த காலிற் புண்ணும்

     வாசர்தொறு முட்டுண்ட தலையிற் புண்ணும்

செஞ்சொல்லை நினைந்துருகு நெஞ்சிற் புண்ணும்

     தீருமென்றே சங்கரன்பாற் சேர்ந்தே னப்பா

கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்

     கொடுங்காலா லுதைத்த புண்ணுங் கோப மாகப்

பஞ்சவரி லொருவன் வில்லா லடித்த புண்ணும்

     பாரென்றே காட்டி நின்றான் பரமன் றானே

இதன் பொருள்;

வஞ்சகர் பால் – வஞ்சகரிடத்தில்

நடந்து அலைந்த – நடந்து நடந்து அலைந்துஅதனால் உண்டான

காலில் புண்ணும் – என் காலில் உள்ள புண்ணையும்

வாசல் தோறும் – வீட்டு வாசல்படிகள் தோறும்

முட்டுண்ட – முட்டுண்டதனால் உண்டான

தலையில் புண்ணும் – தலையில் ஏற்பட்ட புண்ணையும்

செஞ்சொல்லை – கவி பாடுவதற்கு செம்மையாகிய சொற்களை

நினைந்து உருகும் – ஆலோசித்து உருகுதலால் உண்டான

நெஞ்சில் புண்ணும் – மனதில் ஏற்பட்ட புண்ணையும்

தீரும் என்று – நீக்கி அருளுவீர் என்று

சங்கரன் பால் – சிவபிரானிடத்து

சேர்ந்தேன் – சென்று சேர்ந்தேன். (வேண்டினேன்)

அங்கு சேர்ந்தவுடன்

பரமன் – சிவபெருமான் என்னை நோக்கி

அப்பா – அப்பா

கொஞ்சம் அல்ல – உன் போல சிறிது அல்ல

பிரம்படியின் புண்ணும் – பாண்டியனது பிரம்பினால் அடித்து உண்டாகிய புண்ணையும்

வேடன் – வேடனாகிய கண்ணப்பன்

கொடு காலால் – வலிமை மிகுந்த காலினால்

உதைத்த புண்ணும் – உதைத்தனால் ஏற்பட்ட புண்ணையும்

பஞ்சவரில் ஒருவன் – பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன்

கோபம் ஆக – தனக்கு ஏற்பட்ட கோபத்தினால்

வில்லால் அடித்த புண்ணும் – பாசுபத அஸ்திரம் பெற வந்த போது வில்லினால் அடித்ததனால் உண்டான புண்ணையும்

பார் என – இதோ பார் என்று

காட்டி நின்றான் – எனக்குக் காட்டி நின்றான்.

இதைப் பாடியவர் இராமசந்திர கவிராயர். அற்புதமான ஏராளமான பாடல்களை வித்தியாசமாகப் புனைந்து அனைவரையும் மகிழ்விப்பவர் இவர்.

அடுத்து இன்னொரு பாடல்:

இதைப் பாடியவர் சிவப்பிரகாச சுவாமிகள்.

அச்சுதனலிப்பினில் முமது நேயன் வித்தையருளுவன் பலபத்திர்ன்

    அலமுதவுவன் சமன் பகடீவனந்தமக் காளதோ ரெருதுமுண்டே

முச்சிரவயிற் படையினைக் கொழுவதாக்குவே மொம்புடனிழுத்திருக்க

முந்தியவடகயிற் றுடன்மற்று நமன்தமர் முன்போ யிரந்து                                                          கொள்வோம்

இச்சையுடை நமதிளைய தனயனாகிய கந்தனி னிமையொடு மாடு   ̀̀̀ 

மேய்ப்பான்

      இனியுழுதுபயிரிடுதநன்றுநன்றிதை விட்டிரந்துண்ப தீனமெனவோ

கச்சுமுலை மாதுமையுரைத் திடும் புத்தியைக் கைக்கொண்  

                                                     டுளத்திலிதுநற்,

    காரியமெனக் கருதி மெத்தக் களித்திடுங் கண்ணுதலுமைக் காக்கவே

இந்தப் பாடலின் பொருள்;

அச்சுதன் – திருமால்

நிலம் அளிப்பன் – (நாம் வேண்டுகின்ற) பூமியைக் கொடுத்து அருள்வான்

உமது நேயன் – உமது தோழனாகிய குபேரன்

வித்தை அருளுவன் – வித்தையைக் கொடுப்பான்

பலபத்திரன் அலம் உதவுவான் – பலராமன் கலப்பையைக் கொடுத்து உதவி செய்வான்

சமன் பகடு ஈவன் – யமன் எருமைக் கடாவைக் கொடுப்பான்

நந்தமக்கு ஆனது ஓர் எருதும் உண்டே – நமக்கு ஆளாய் இருப்பதாகிய ஒரு எருதும் உண்டே

முச்சிர அயில் படையினை – முத்தலைச் சூலத்தைக்

கொழு ஆக்குவோம் – கொழு ஆக்கிக் கொள்வோம்

மொம்புடன் இழுத்து இறுக்க – வலிமையோடு இழுத்து இறுக்குதற்கு

முந்திய வடக் கயிற்றுடன் – முதன்மையாகிய வடக் கயிற்றோடு

மற்றும் – மற்று வேண்டுவன யாவும்

நமது தமர் முன் போய் இரந்து கொள்வோம்- நமது அன்பர்களிடத்தில் யாசித்துப் பெற்றுக் கொள்வோம்

இச்சை உடை – விருப்பத்தை உடைய

நமது இளைய தனயன் ஆகிய கந்தன் – நமது இளைய குமாரனாகிய முருகன்

இனிமையொடு மாடு  மேய்ப்பான் – இனிதாக மாடு மேய்ப்பான்

இனி உழுது பயிரிடுதல் நன்று – இனி உழுது பயிரிடுதலே சிறந்தது

இதை விட்டு – இதை விட்டுவிட்டு

இரந்துண்பது – யாசித்து உண்பது

ஈனம் என – இழிவானது என்று

கச்சுமுலைமாது உமை உரைத்திடும்  புத்தியை – கச்சணிந்த மார்பகங்களை உடைய உமாதேவி சொல்லும் புத்திமதியை

கைக்கொண்டு – ஏற்றுக் கொண்டு

உளத்தில் – மனதில்

இது நற்காரியம் எனக் கருதி – இது நல்ல காரியம் என்று எண்ணி

மெத்தக் களித்திடும் – மிகவும் மகிழ்கின்ற

கண்ணுதல் – நெற்றிக்கண்ணை உடைய பரமசிவன்

உமை காக்க – உம்மைக் காப்பாற்றுவானாக!

யாசித்து உண்பதை விட உழுது பயிரிட்டு வாழ்தலே நன்று என்று சிவபிரானே முடிவு செய்வதாக ஒரு கற்பனை! சிவப்பிரகாச சுவாமிகள் இதை அருளிச் செய்திருக்கிறார்.

சிவன் வழியைப் புலவர் பின்பற்ற நினைக்கிறார்!

**

Leave a comment

Leave a comment