Post No. 15,507
Date uploaded in London – 18 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
48திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 48
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 48
அகச் சமயம் ஆறு, புறச் சமயம் ஆறு
* அகச் சமயம் ஆறு: வைரவம், வாமம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், பிங்கலம்.
புறச் சமயம் ஆறு: சைவம், வைணவம், சாக்தம், செளரம், காணாபத்யம், கெளமாரம்.
** திருப்போரூர் செங்கற்பட்டுக்கு வடகிழக்கே 16 மைலில் உள்ளது.
இப்பாடல் முழுவதும் துதியாகவே அமைந்து, வேண்டுதல் ஏதும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.
***
வெளி உலகவாசிகள் பற்றி அருணகிரிநாதர்!
சுருதி மறைகள் … வேதங்கள், உபநிஷதம் முதலிய ஆகமங்கள்,
இருநாலு திசையில் அதிபர் முநிவோர்கள் … எட்டுத் திக்குப்
பாலகர்கள்*1, முநிவர்கள்
துகளில் இருடி யெழுபேர்கள் சுடர்மூவர் … குற்றமில்லாத ரிஷிகள்
ஏழு பேர்*2, சூரியன், சந்திரன், அக்கினி எனப்படும் மூன்று சுடர்கள்,
சொலவில் முடிவில் முகியாத பகுதி புருடர் நவநாதர் …
சொல்லுவதற்கு முடிவிலே முடியாத பிரகிருதி புருஷர்களான பிரபஞ்ச மாயா அதிகாரிகள், பிரதானசித்தர்களான ஒன்பது நாதர்கள்*3,
தொலைவில் உடுவின் உலகோர்கள் மறையோர்கள் … வெகு
தூரத்தில் உள்ள நக்ஷத்திர உலகில் வாழ்பவர்கள், வேதம் வல்லவர்கள்,
அரிய சமய மொருகோடி அமரர் சரணர் சதகோடி …
அருமையான சமயங்கள் கோடிக்கணக்கானவை, தேவர்கள், நூற்றுக்
கோடிக்கணக்கான அடியார்கள்,
அரியும் அயனும் ஒருகோடி யிவர்கூடி … திருமால், பிரமன், ஒரு
கோடி பேர் – இவர்களெல்லாம் கூடி,
அறிய அறிய அறியாத அடிகள் அறிய … அறிந்து கொள்ள,
அறிந்து கொள்ள (எத்தனை முயன்றும்) அறிய முடியாத உனது
திருவடிகளை,
அடியேனும் அறிவுள் அறியும் அறிவூற அருள்வாயே …
அடியேனும் எனது அறிவுக்கு உள்ளேயே அறிந்து கொள்ள வல்லதான அறிவு ஊறும்படி நீ அருள்புரிவாயாக.
(*1) அஷ்டதிக்குப் பாலகர்கள் (எண்திசையைக் காப்பவர்கள்) பின்வருமாறு: இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.
(*2) சப்தரிஷிகள் பின்வருமாறு: அகஸ்தியர், புலஸ்தியர், ஆங்கீரசர், கெளதமர், வசிஷ்டர், காச்யபர், மார்க்கண்டர்.
(*3) நவநாதராகிய பெருஞ் சித்தர் பின்வருமாறு:
சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர். இவர்கள் குகைகளில் இருந்து சிவனைக் குறித்துத் தவம் செய்து சித்தராயினர்.
***
ஐந்து எண்ணின் சிறப்புகள்
அம்பை வாணி பஞ்ச பாணி தந்த முருகோனே … அம்பிகை,
கலைமகளை ஒரு கூறாகவும், ஐந்து மலர்ப் பாணங்களை
உடையவளுமான, பார்வதி தேவியும் தந்தளித்த பால முருகனே,
மாயை யைந்து வேக மைந்து பூத மைந்து நாத மைந்து … ஐந்து
மாயை*1, ஐந்து வேகம்*2, ஐந்து பூதம்*3, ஐந்து நாதம்*4
வாழ்பெருஞ் சராசரங்கள் உறைவோனே … இவை வாழ்கின்ற
அசையும் பொருள்கள், அசையாப் பொருள்கள் யாவிலும் உறைபவனே,
வேலையன்பு கூர வந்த ஏக தந்த யானை கண்டு … வேண்டிய
சமயத்தில் அன்பு மிக்கு வந்த ஒற்றைக் கொம்பர் விநாயகமூர்த்தியாம் யானையைக் கண்டு
வேடர் மங்கை யோடி யஞ்ச அணைவோனே … வேடர்குலப்
பெண் வள்ளி பயந்தோடியபோது அவளை அணைந்தவனே,
வீர மங்கை வாரி மங்கை பாரின் மங்கை மேவுகின்ற … வீர
லக்ஷ்மி, பாற்கடலில் தோன்றிய லக்ஷ்மி, பூமாதேவி இவர்கள் யாவரும் மங்களமாக வீற்றிருக்கிற
மேரு மங்கை யாள வந்த பெருமாளே. … உத்தர மேரூரில்*5
ஆட்சிபுரியும் பெருமாளே.
(*1) மாயை ஐந்து:
தமம், மாயை, மோகம், அவித்தை, அநிர்தம்.
(*2) வேகம் ஐந்து பலவகைப்படும்
வாயுவேகம், மனோவேகம், ஒளிவேகம், ஒலிவேகம், அசுவவேகம்.
வேகம் சக்தியென கொண்டால் – இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி, சிற்சக்தி, பராசக்தி.
வேகம் புலனாகக் கொண்டால் – சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.
(*3) ஐந்து பூதம்:
நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம்.
(*4) ஐந்து நாதம்:
தோல் கருவி – மத்தளம், உடுக்கை,
துளைக் கருவி – குழல், நாதஸ்வரம்,
நரம்புக் கருவி – யாழ், வீணை,
கஞ்சக் கருவி – ஜாலரா, ஜலதரங்கம்,
மிடற்றுக் கருவி – வாய்ப்பாட்டு, கொன்னக்கோல்.
(*5) உத்தரமேரூர் செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 18 மைலில் உள்ளது.
***
பிராமணர் எண்ணிக்கை CENSUS !
ஆழியில் துயில்வோனும் மா மலரப் பிரமாவும் …
திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரையில்
வீற்றிருக்கும் பிரமனும்,
ஆகமப் பொருளோரும் அனைவோரும் … சிவாகமத்துக்கு உரிய
மூல முதல்வராகிய சிவபெருமானும், பிறர் யாவரும்,
ஆனை மத்தகவோனும் ஞானம் உற்று இயல்வோரும் …
ஆனைமுகமும் மத்தகமும் கொண்ட கணபதியும், ஞானம் அடைந்து
உலவும் ஞானிகளும்,
ஆயிரத்து இருநூறு மறையோரும் வாழும் உத்தரமேரூர்
மேவி … ஆயிரத்து இரு நூறு* மறையவர்களும் வாழ்கின்ற
உத்தரமேரூரில்** வீற்றிருந்து,
அற்புதமாக வாகு சித்திர தோகை மயில் ஏறி … அற்புதமாக,
அழகிய விசித்திரமான கலாபத்தைக் கொண்ட மயிலின் மேல் ஏறி,
மாறு என பொரு சூரன் நீறு எழ பொரும் வேல … பகைவன்
எனச் சண்டை செய்யும் சூரன் தூளாக போர் செய்த வேலனே,
மான் மகட்கு உளனான பெருமாளே. … மான் பெற்ற மகளான
வள்ளிக்கு உரியவனாக விளங்கி நிற்கும் பெருமாளே.
* இவ்வாறே மற்ற ஊர்களிலும் வாழும் மறையவர் எண்ணிக்கை வருமாறு:
திருப்பெருந்துறை = 300, தில்லை = 3,000, திரு ஆக்கூர் = 1,000,
திருவீழிமிழலை = 500, சீகாழி = 400, மதுரை = 48,000.
***
பெருச்சாளி வாகனம்!
தாபர(ம்) சங்கமம் என ஓம்புறு தாவன வம்பு அடர் தகு
தாம்பிர சேவித ரஞ்சித உம்பர் வாழ்வே … அசையாப் பொருள்,
அசையும் பொருள் என்றவாறு அனைத்தையும் பாது காத்தல் செய்யப் படைத்தவனே, புதுமை நிறைந்த, தக்கதான, தாம்பிரசூடம்** எனப்படும் சேவலால் வணங்கப் படுபவனே, இன்பம் தருகின்ற தேவர்கள் செல்வமே,
முன வா(வு)ம் பத மூடிக வந்தன(ம்) முயல்வான் பிடி மாடு
இமை ஐங்கரர் முகதா ஆம் பி(ன்)ன … (முருக வேள் நினைக்கும்)
முன்னே, தாண்டி வேகமாய் வந்த திருவடிகளை உடையவரும்,
பெருச்சாளி*** வணக்கம் செய்யும்படி முயற்சி எடுத்துக் கொண்டவரும், பெண் யானை போன்ற வள்ளியின் பக்கத்தில் இமைப்பொழுதில் (காட்டானையாக) ஒளி விட்டு விளங்கியவருமான, ஐங்கரருமான விநாயக மூர்த்தியின் எதிரில் தோன்றிய தம்பியே,
மேவுறு சம்ப்ரம சம் கண ஆறு முக காம்பிரமோடு அமர்
சம்ப(ன்)ன … பொருந்தியுள்ள களிப்பு நிறைந்த அழகு செய்கின்ற
கூட்டமாகிய ஆறு திரு முகங்களுடன் கம்பீரமாக வீற்றிருக்கின்ற
பாக்கியவானே,
மதுராந்தக மா நகரம் திகழ் முருகா அம் திரமோடு அமர்
உம்பர்கள் தம்பிரானே. … மதுராந்தகமாகிய**** சிறந்த நகரில்
விளங்கும் முருகனே, நல்ல உறுதியான பக்தியுடன் உள்ள தேவர்களின் தம்பிரானே.
* முருக வேளின் விசுவ ரூப நிலை தேவர் கூட்டத்துக்கு சானுவில் (முழந்தாளில்) காணப்பட்டது.
** தாம்பிர சூடம்:
இது சிவந்த கொண்டையை உடைய சேவலைக் குறிக்கும். சூரனின் ஒரு பகுதி சேவலாக மாறி, முருகனது கொடியில் அமர்ந்து சேவை செய்தது.
*** கஜாமுகாசுரன் பெருச்சாளி வடிவத்துடன் விநாயகரை எதிர்க்க வந்தான். அப்போது அதன் மீதேறி அவனை வீழ்த்தி வாகனமாக ஆக்கிக் கொண்டார்.
—Subham—
Tags- வெளி உலகவாசிகள் ET, ALIEN CIVILIZATION, பிராமணர் எண்ணிக்கை CENSUS பற்றி அருணகிரிநாதர்! -48, திருப்புகழில், அருணகிரிநாதர், அரிய செய்திகள் Part 48, அகச் சமயம் ஆறு, புறச் சமயம் ஆறு, தாம்பிரசூடம்