எனது புதுச்சேரி பயணம்: மணக்குளம் விநாயகர் ஆலயம், அரவிந்தர் ஆஸ்ரமம், மியூஸியம் (Post.15,512)

Puducherry Museum 

Puducherry Museum, London Swaminathan

Written by London Swaminathan

Post No. 15,512

Date uploaded in London – 19 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஸ்ரீவத்சம் முதியோர் இல்லத்தில் உள்ள ஹோட்டலில் பத்து நாள் தங்கி சுகமான சாப்பாடு சாப்பிட்டுவிட்டு கும்பகோணத்திலிருந்து காரில் புதுச்சேரிக்குப் பயணித்தேன். இந்த முறை மூன்று குறியிலக்குகளுடன் சென்றேன்; ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்தேன் ; மணக்குளம் விநாயகர் ஆலயம், அரவிந்தர் ஆஸ்ரமம்,  மியூஸியம் ஆகிய மூன்று இடங்களையும் கண்டு ஆனந்தம் அடைந்தேன் .

பாரதியார் தங்குதலாலும், வணக்கத்தாலும் புதுவையும், விநாயகர் ஆலயமும் தமிழர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பெற்றது.

பாண்டிச்சேரி / புதுச்சேரி முன்காலத்தில் குடிகாரத் தமிழர்களின் சொர்க்க பூமி ; இப்போதும் பெட்ரோலும், மதுபானங்களும் தமிழ் நாட்டினை வீட மலிவு என்று என்னுடைய டாக்சி ட்ரைவர் சொன்னார்;  ஆகையால் கீழ்ஜாதிகளிடம் இன்னும் மவுசு குறையவில்லை.

***

மணக்குளம் விநாயகர் ஆலயம்

மணக்குளம் விநாயகர் கோயிலுக்கு இதற்கு முன்னரும் சென்றேன். இம்முறை கூட்டம் அதிகம் இல்லாததால் நல்ல தரிசனம் . இலவசமாகக் கடவுளை தரிசிக்க ஒவ்வொரு நிமிடமும் டூரிஸ்டுகள் நுழைந்த வண்ணம் இருந்தனர்; ஆனால் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. முக்கிய சந்நிதியோடு வேறு சில விநாயகர் சந்நிதிகளும், கடவுளர் சந்நிதிகளும் இருந்தன; சுவர் முழுவதும் பலவித விநாயகர் வடிவங்களும் புராணக் கதைகளும் வடிக்கப்பட்டுள்ளன. கோவில், பெரிய மண்டபத்தில் உள்ளது; அரை மணிநேரத்தில் தரிசனம் முடிந்தது! வெளியே வரும்போது தொன்னையில் தயிர்சாத பிரசாதமும் கிடைத்தது .

பாரதியார் இவர் மீது விநாயகர் நான்மணி மாலை என்ற நூலை இயற்றினார். அற்புதமான நாற்பது பாடல்கள் அடங்கியுள்ள இந்த நூலில் தான், “நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்ற தன் அமர வரிகளை வடித்தார் அவர். “புதுவை விநாயகனே” என்றும்  “மணக்குளத்து வள்ளல் பாத மணிமலரே” என்றும் போற்றிய அவர், “மங்கள குணபதி மணக்குளக் கணபதி நெஞ்சக் கமலத்து நிறைந்து அருள் புரிவாய்” என்று வேண்டினார்.

பாண்டிச்சேரியின் பிரபலமான, கவர்னர் ஜெனராலான, டூப்ளே விநாயகரின் பெரும் பக்தரானார். அவர் உள்ளிட்ட பல வெள்ளையருக்கும் அருள் பாலித்ததால் வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரையும் மணக்குள விநாயகர் பெற்றார். மேலும் விநாயகரின் மனைவிகளாக சித்தி, புத்தி ஆகிய இருவரும் இங்கு எழுந்தருளியுள்ளனர். சித்தி புத்தி விநாயகருக்கு கல்யாண உற்சவமும் இங்கு உண்டு.

ஒருகாலத்தில் விநாயகர் அருகில் மணல் கரையுள்ள குளம் இருந்ததால் அவருக்கு இந்தப் பெயர்; சுமார் 500 ஆண்டு பழமை உடைத்து; பிரெஞ்சுக் காரர்கள் ஆட்சியின்போது விநாயகரை வணங்கத் தடை விதித்தனர்; கிறிஸ்தவப் பாதிரிகளோ கோவிலையே தகர்க்க த் திட்டமிட்டனர் ; எதுவும் பலிக்க வில்லை ; விநாயகர் வெற்றி பெற்றார். 1954-ஆம் ஆண்டில் பிரெஞ்சுகா ர்கள் புதுச்சேரியைக் காலி செய்து நாட்டுக்குத் திரும்பினர். ஆயினும் இன்றும் வீதிகளின் பெயர்கள் பிரெஞ்சு  மொழியில் உள்ளன. பிரான்ஸ் நா ட்டில் தேர்தல் நடக்கும்போதெல்லாம் இங்கிருந்தே தமிழர்கள் ஓட்டுப்போடும் உரிமையும் உள்ளது ஆங்கியேலரை எதிர்த்த அரவிந்தர், பாரதியார் போன்ற தலைவர்களுக்கு பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியில் அடைக்கலம் கொடுத்ததை நன்றியுடன் நினைவிற் கொள்ள வேண்டும்.

***

அரவிந்தர், அன்னை சமாதிகள்

மணக்குளம் விநாயகர் ஆலயத்துக்கு எதிரில் உள்ள  தெருவில் புகழ்பெற்ற, புனிதம் நிறைந்த அரவிந்தர் மற்றும் அன்னை சமாதிகள் உள்ளன காலை  11-30 க்கு மூடிவிட்டால் மீண்டும் பகல் இரண்டு மணிக்குத்தான் திறக்கும் என்பதால் விரைந்து சென்றேன். வெளியேயுள்ள ஆள் எல்லோருடைய மொபைல் போன்களையும்   வாங்கி ஆப்  off  செய்து கொடுக்கிறார் ஆகையால் படம் எடுக்கமுடியாது உள்ளே  பரி பூரண அமைதி; புனித உணர்வலைகள் !

அரவிந்தரும், அவருடன் வாழ்ந்த புனித அன்னையும் MOTHER  ஒரே இடத்தில் சமாதி வைக்கப்பட்டுள்ளனர்; பளிங்குக்கல் சமாதியைத் தொட்டு வணங்கலாம்; பலரும் சமாதி மீது தலையை வைத்து அஞ் சலி  செலுத்தினர். நானும் தொட்டுக் கும்பிட்டேன். ஆனால் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் வரிசை போல, அரை நிமிடம் கூட நிற்க முடியாது ; போங்கள், போங்கள் என்று ஆஸ்ரமத் தொண்டர்கள் சொல்கின்றனர் . ஆயினும் கூட்டம் இல்லாவிடில் எத்தனை முறை வேண்டுமானாலும் வலம் வரலாம்; சமாதியின் மேல் மலர் மலைகள், மலர்ச் செண்டுகள்; வெளியே உண்மையான வண்ண வண்ண பூச்செடிகள் பூத்துக் குலுங்குகின்றன ஆஸ்ரமத்துக்கு உள்ளேயும் வெளியேயும் புஸ்தகக்    கடைகளில் அரவிந்தர் புஸ்தகங்களை வாங்கலாம்.

எனது தந்தை மதுரை தினமணி செய்தி ஆசிரியர்  வெ. சந்தானம் ஏற்கனவே அரவிந்தர் தொடர்பான எல்லாப் புஸ்தகங்களையும் வைகறை மேகஸின்களையும் சேகரித்து எங்களுக்கு விட்டுச் சென்றதால் நான் புஸ்தகம் வாங்கவில்லை .

அரவிந்தர் நூல்களில் நான் அடிக்கடி பயன்படுத்துவது வேதிக் க்ளோசாரி VEDIC GLOSSARY நூல் ஆகும்; பசு என்பதை ஐம்புலன்களுக்குப் பயன்படுத்தினார் திருமூலர் ; யானை என்பதை ஐம்புலன்களுக்குப் பயன்படுத்தினார் வள்ளுவர் ; இதே போல வேதத்தில் பசு என்பதை பல பொருட்களில், மறை பொருட்களில் ரிஷிகள் பயன்படுத்தினர்; அதை வெள்ளைக்கார மண்டுகள், மாடு என்றே மொழிபெயர்த்தார்கள் . அரவிந்தர் ஆங்ககாங்கே சொற்களுக்கு மறை பொருளை, ரகசிய அர்த்தத்தை விளம்பியுள்ளார் . அனைவரும்படிக்க வேண்டிய நூல் அது. நிற்க

.யார் இந்த அரவிந்தர்?, யார் இந்த அன்னை  ?

அரவிந்த மஹரிஷி பிறந்த தினம் ஆகஸ்ட் 15.

ஸ்ரீ அராவிந்த கோஷ் 15-8-1872 – 5-12-1950)

சுதந்திர தினம், அரவிந்தர் பிறந்த தினம்

இந்திய தத்துவ ஞானி, யோகி, கவிஞர், வேத விற்பன்னர்,சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாளர், புதுச்சேரி அரவிந்த ஆஸ்ரம ஸ்தாபகர்.

அரவிந்த மகரிஷி பற்றி பாரதிதாசன் கவிதை எழுதியுள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரவாதியாக இருந்து அலிப்பூர் குண்டு வெடிப்பு சம்பவத்தால் சிறை சென்ற அரவித்தருக்கு தெய்வீக கனவுகள் ஏற்படவே யோகியாக மாறினார் ; புதுவைக்கு வந்தார் ஆஸ்ரமம் அமைத்தார் ; அன்னை MOTHER என்ற வெளிநாட்டுப் பெண்மணி அவருடைய பணிகளைத்தொடர்ந்தார்

அன்னை

Mirra Alfassa (21 February 1878 – 17 November 1973), மீரா அல்பாஸா  என்ற பிரெஞ்சுப் பெண்மணி அரவிந்தரால் ஈர்ர்க்கப்பட்டு அவருடன் ஆசிரமத்தில் வாழ் ந்தார்; அவரும் நிறைய ஆன்மீக அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் ; பல அற்புதங்களையும் புரிந்தார்; அரவிந்த பக்தர் வீடுகளில் அன்னை – மதர்- படங்களும் இருக்கும்.

புதுச்சேரி மியூசியத்தில் ஏமாற்றம்

புதுச்சேரி மியூசியம் என்பது கொழும்பு , சென்னை மியூசியங்களை ஒப்பிடுகையில் மிகச் சிறியது ; ஆயினும் அருமையான செப்புத் திருமேனிகள் அங்கே உள்ளன ; புகைப்படம் எடுக்க அனுமதிக்காதது பெரிய ஏமாற்றத்தை அளித்தது; அவர்களுடைய வெப்சைட்டுகளில் உள்ள படங்களின் தரம் மிகவும் தாழ்ந்தது ;

திங்கள்கிழமை விடுமுறை .

நுழைவுக்கட்டணம் உலகிலேயே மிகக்குறைவான கட்டணம் உள்ள மியூசியம் ; பத்து ரூபாய்தான் . பல துறைகள் இருப்பதாக அவர்கள் வெப் சைட்டுகளில் கண்டாலும் செப்புத் திருமேனிகள் பிரிவும், ஓவிய பிரிவும்தான் சிறப்பானவை; சுற்றிப்பார்க்க அரை மணிநேரம் போதும். மியூசியம் பற்றி புஸ்தமும் இல்லாதது மிகப்பெரிய குறை.

உலகத்தில் எந்த மியூசியத்துக்குப் போனாலும் அது பற்றிய புஸ்தகம் கிடைக்கும். அங்குள்ள முக்கிய பொருட்களை பட அட்டைகளாக PICTURE POST CARDS விற்பார்கள். புகைப்படம் எடுக்கவும் பெரும்பாலும் அனுமதிக்கிறார்கள். வெளிநாடுகளில் மியூசியம் நடத்துவது பெரிய பிசினஸ்; அதை புதுவை கற்க வேண்டும்.

எதிர்காலக்  காட்சியகத்துக்குச்  சில யோசனைகள்

மியூசியம் உள்ள இடத்தை பெரிய கட்டிடத்துக்கு மாற்றி விளக்க அட்டைகளை/ போர்டுகளை வைக்க வேண்டும்;

நுழைவுக் கட்டணத்தை உயர்த்திவிட்டு, புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும்;

மியூசியம் பற்றிய நல்ல தரமான புஸ்தகத்தை விற்பனைக்குத் தரவேண்டும்; பட அட்டைகளை PICTURE POST CARDS விற்க வேண்டும் ; கொழும்பு மியூசியத்தில் கூட நான் பட அட்டைகளை வாங்கினேன். லண்டனில் ஒவ்வொரு மியசியத்திலும் கடைகள் உண்டு .

காற்றில், மழையில் பட்டுப்போன சிலைகளை மட்டும் மியூசியத்துக்கு வெளியே வைத்துள்ளனர் ; அந்த வெளிறிப்போன சிலைகளுடன் போட்டோ எடுத்து திருப்தி அடையலாம்.  இருந்தபோதிலும் பத்து ரூபாய்க்கு என்ன கிடைக்குமோ அது கிடைத்துவிடும்!!

Puducherry Museum Paintings

–subham –

Tags– எனது, புதுச்சேரி பயணம், மணக்குளம் விநாயகர் ஆலயம் ,அரவிந்தர் ஆஸ்ரமம் , மியூஸியம், அன்னை,  ஏமாற்றம், பாரதியார், பாரதிதாசன் பாடல்கள், புதுவை, சமாதிகள், பாண்டிச்சேரி

Leave a comment

Leave a comment