WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,514
Date uploaded in London – 20 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் (45)
ராமாயணத்தில் வரங்கள் (45) கும்பகர்ணன் பல வரங்கள் பெற்றது!
ச. நாகராஜன்
யுத்தகாண்டத்தில் ‘ஶ்ரீ ராமரிடம் கும்பகர்ணனை வர்ணிப்பது’ என்ற அறுபத்தோராவது அத்தியாயத்தில் கும்பகர்ணன் பல வரங்கள் பெற்றது பற்றிய ஒரு குறிப்பைக் காண்கிறோம்.
மகாபலசாலியான கும்பகர்ணனை யுத்தத்தில் பார்த்த ராமர் பெருத்த ஆச்சரியம் கொண்டு, விபீஷணனை நோக்கி, “ மலை போன்று காணப்படும் இவன் யார்?” என்று வினவுகிறார்.
உடனே விபீஷணன் கும்பகர்ணனைப் பற்றி ராமருக்குக் கூற ஆரம்பிக்கிறார்.
“எவனால் யமன் போரில் முறியடிக்கப்பட்டானோ, இந்திரனும் அவ்வாறே முறியடிக்கப்பட்டானோ அந்த விஸ்ரவஸரின் புதல்வனான கும்பகர்ணன் இவன் தான்! இவனது ஆகிருதியோடு ஒத்த இன்னொரு ராக்ஷஸன் இல்லை.
போரில் ஆயிரக்கணக்கான தேவர்களும், தானவர்களும், யக்ஷர்களும், நாகர்களும், ராக்ஷஸர்களும், கந்தர்வர்களும், வித்யாதரர்களும், கின்னரர்களும் இவனால் முறியடிக்கப்பட்டனர். தேவர்கள், சூலாயுதத்தைக் கையில் ஏந்தியவனும், விகாரமான கண்களை உடையவனும், மகா பலசாலியுமான கும்பகர்ணனை, “இவன் சம்ஹாரகர்த்தாவாகிய ருத்ரன்” என்று பயந்து கொண்டு கொல்ல முடியாதவர்களாக இருக்கிறார்கள்.”
இவ்வாறு கூறிய விபீஷணன் மேலும் கூறுகிறார்.
ப்ரக்ருத்யா ஹ்யேஷ தேஜஸ்வீ கும்பகர்ணோ மஹாபல: |
அன்யேஷாம் ராக்ஷஸேந்த்ராணாம் வரதானக்ருதம் பலம் ||
யுத்த காண்டம் 61ம் அத்தியாயம், ஸ்லோக எண் 14
ஏஷ: – இந்த
கும்பகர்ண: – கும்பகர்ணன்
ப்ரக்ருத்யா – பிறவியிலேயே
தேஜஸ்வீ – ஆண்மை படைக்கப்பெற்றவன்
மஹாபல: – மகா பராக்ரமசாலி
அன்யேஷாம் – இதர
ராக்ஷஸேந்த்ராணாம் ஹி – ராக்ஷஸோத்தமர்களை விட
பலம் – பலமானது
வரதானக்ருதம் – வரம் பெற்றதால் விளைந்தது.
இதில் கும்பகர்ணன் வரம் பெற்ற விஷயம் மட்டும் நம்மால் காணமுடிகிறது. யாரிடமிருந்து எப்போது எதற்காக எத்தனை வரங்களைப் பெற்றான் என்ற விவரங்கள் வால்மீகியால் இங்கு தரப்படவில்லை.
வரம் பெற்ற பலசாலி கும்பகர்ணன் என்ற குறிப்பை மட்டும் இங்கு நாம் பெறுகிறோம்.
**