
Post No. 15,518
Date uploaded in London – 21 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
51திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 51
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 51
கிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனம்
வசை அற்று முடிவு அற்று வளர் பற்றின் அளவு அற்ற வடிவு
உற்ற முகில் கிட்ணன் மருகோனே … பழிப்புக்கு இடம் இல்லாமல்,
முடிவில்லாது வளர்ந்திருந்த (பாண்டவர் மீது இருந்த) நேசத்தின்
காரணமாக, கணக்கற்ற வடிவங்களைக் கொண்ட* மேக நிறக்
கண்ணனது மருகனே,
மதுரச் செம் மொழி செப்பி அருள் பெற்ற சிவ பத்தர் வளர் …
இனிமை தரும் செம்மையான புகழ் மொழிகளைச் சொல்லி உனது
திருவருளைப் பெற்ற சிவ பக்தர்கள் நிரம்பியுள்ள
விர்த்த கிரி உற்ற பெருமாளே. … முது குன்றம் எனப்படும்
விருத்தாசலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* சகாதேவனின் அன்புக்குக் கட்டுப்பட்டு பாரதப் போருக்கு முன்பும், அர்ச்சுனனுக்கு கீதோபதேசத்தின் போதும், கண்ணன் விசுவரூப தரிசனம் தந்தது இங்கு குறிப்பிடப் பெறுகிறது.

***
நாரதரும் தும்புருவும்
நார (தர்) தும்பூர் கீதம் ஓத நின்றே ஆடு நாடகம் சேய்
தாளர் அருள் பாலா … நாரதர், தும்புரு ஆகியோர் இசை பாட, நின்று ஆடுகின்ற (ஊர்த்துவ) நடனத்தைச் செய்கின்ற திருவடியை உடைய சிவபெருமான் அருளிய குழந்தையே,
சூரர் அணங்கோடு ஆழி போய் கிடந்தே வாட சூரியன் தேர்
ஓட அயில் ஏவீ … சூரனும், அவன் வருத்தும் செயல்களும் கடலில் போய் (மாமரமாகக்) கிடந்தே அழியவும், சூரியனுடைய தேர் (பழைய முறைப்படி) ஓடவும் வேலைச் செலுத்தியவனே,
தூ நறும் காவேரி சேரும் ஒள் சீறாறு சூழ் கடம்பூர் தேவர்
பெருமாளே. … பரிசுத்தமான நறு மணம் வீசும் காவேரி நதியுடன்
சேர்கின்ற, ஒள்ளிய சிற்றாறு சூழ்கின்ற கடம்பூரில்* வீற்றிருக்கும்,
தேவர்கள் பெருமாளே.
* கடம்பூர் மன்னார்குடிக்கு அருகில் உள்ளது.
***
சீர்காழியின் பெயர்கள்
பெரு முனித் திரள் பரவு செய்ப்பதிப் ப்ரபல கொச்சையில்
சதுர் வேதச் சிறுவ … பெரிய முனிவர்களுடைய கூட்டங்கள் போற்றுகின்ற வயலூரில் புகழ் விளங்க வீற்றிருப்பவனே, கொச்சையில்
(சீகாழியில்*) நான்கு வேதங்களும் வல்லவனாய் வளர்ந்த (திருஞான சம்பந்தச்) சிறுவனே,
நிற்கு அருள் கவிகை நித்திலச் சிவிகையைக் கொடுத்து
அருள் ஈசன் … உன்பால் அருள் வைத்து (முத்துக்) குடையும் முத்துப் பல்லக்கும் கொடுத்தருளிய** சிவ பெருமான் வீற்றிருக்கும்
செக தலத்தினில் புகழ் படைத்த மெய்த் திருவரத் துறைப்
பெருமாளே. … பூமியில் புகழ் பெற்ற சத்தியபுரியாகிய திருவரத்துறையில்***வாழும் பெருமாளே.
* ‘கொச்சை’ சீகாழிக்கு உரிய பெயர்களில் ஒன்று.
சீகாழிக்கு உரிய பெயர்கள்:
சீகாழி – காளி என்னும் நாகம் பூஜித்த தலம்,
பிரமபுரம் – பிரமன் பூஜித்த தலம்,
வேணுபுரம் – கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன்
பூஜித்த தலம்,
தோணிபுரம் – பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது,
பூந்தராய் – பூவும் தாரையும் பூஜித்த தலம்,
சிரபுரம் – அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிக்கப்பட்ட ராகு, கேதுக்கள் தலையைத் திரும்பப் பெற பூஜித்த தலம்,
புறவம் – புறாவான பிரஜாபதி என்னும் முனிவர் தம் உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம்,
சண்பை – சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூஜித்த தலம்,
கொச்சை – பராசர முனிவர் மற்ற ரிஷிகளின் சாபத்தால் துர்க்கந்தம் உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம்,
வெங்குரு – பிரகஸ்பதி பூஜித்த தலம்,
கழுமலம் – ஆன்மாக்களின் மலம் கழுவப்படுகின்ற தலம்,
முதுநகர் – ,புகலி – … என்பன.
** பெண்ணாடகம் என்ற ஊரில் திருஞானசம்பந்தர் தரிசித்துவிட்டு
திருவரத்துறைக்குப் போகும் வழியில் அவர் களைத்ததைக் கண்ட சிவன் அவர் ஏறிச் செல்ல முத்துச் சிவிகை, குடை ஆகியவற்றைக் கொடுத்து அருளினார்.
*** திருவரத்துறை பெண்ணாடகத்துக்கு அருகில் உள்ளது.
****
முத்துக்களின் வகைகள் பற்றி அருணகிரிநாதர்

கழைமுத்து மாலை புயல்முத்து மாலை … கரும்பு தரும்
முத்தாலான மாலை, மேகம் தரும் மழைத்துளிகளால் ஆன மாலை,
கரிமுத்து மாலை … யானை தரும் முத்தாலான மாலை,
மலைமேவுங் கடிமுத்து மாலை … மலையிற் கிடைக்கும் சிறப்பான முத்தினால் ஆன மாலை,
வளைமுத்து மாலை … சங்கிலிருந்து கிடைக்கும் முத்தாலான மாலை,
கடல்முத்து மாலை … கடலில் பெறப்படும் முத்தாலான மாலை,
அரவீனும் அழல்முத்து மாலை … பாம்பு தரும் சூடுள்ள முத்தாலான மாலை,
இவைமுற்று மார்பின் அடைவொத்து உலாவ … இப்படி எல்லா மாலைகளும் மார்பிலே தகுதி பெற்றுப் புரண்டு அசைய,
அடியேன்முன் அடர்பச்சை மாவில் … அடியேனின் எதிரே அடர்ந்த பச்சை நிறத்துக் குதிரை போன்ற மயிலில்
அருளிற்பெணோடும் அடிமைக்கு ழாமொடு அருள்வாயே …இச்சா சக்தியாம் வள்ளியுடனும், உன் அடியார் கூட்டத்துடனும், வந்துஅருள் புரிவாயாக.
***

முத்து பிறக்கும் இருபது இடங்கள்
தந்தி வராக மருப்பிப்பி பூகந்தழை கதலி
நந்து சலஞ்சலம் மீன்றலை கொக்கு நளினமின்னார்
கந்தரஞ்சாலி கழைகன்ன லாவின் பல்கட்செவிக்கார்
இந்துவுடும்புகரா முத்தமீனுமிருபதுமே
—–உவமான சங்கிரகம், இரத்தினச் சுருக்கம்
யானைக் கொம்பு, பன்றிக்கொம்பு, முத்துச்சிப்பி, பாக்குமரம், வாழைமரம், நத்தை, சலஞ்சலம் (வலம்புரிச் சங்கு), மீ ன் தலை, கொடுக்குத் தலை, தாமரை, பெண்கள் கழுத்து, நெல், மூன்கில், கரும்பு, மாட்டுப்பல், பாம்பு, முகில், கர்ப்பூரம், முடலை, உடும்பு என்னும் இருபது இடங்களில் முத்து பிறக்கும்.
இந்த இருபது வகைகளில் கடலில் கிடைக்கும் முத்து ஒன்றுதான் அணிவரும் அணியும் முத்து.
1.தந்தி 2.வராகம் மருப்பு= யானை, பன்றி இவைகளின் கொம்புகள்
3.இப்பி = முத்துச் சிப்பிகளும்
4.பூகம் = கமுகங்காய் குல்லைகள்
5.தனி கதலி = ஒப்பற்ற வழைக்குலைகள்
6.நந்து = சங்கும்
7.சலஞ்சலம் = விசேஷ /அபூர்வ வலம்புரிர்ச்சங்கு
8.மீன்றலை = மீன் தலை
9.கொக்கு= கொக்கின் தலை
10.நளினம் = தாமரை
11.மின்னார் கந்தரம் = பெண்களின் கழுத்து
12.சாலி = செந்நெற் கதிர்க்குலை
13.கழை = மூங்கில்
14.கன்னல் = கரும்பு
15.ஆவின் பல் = பசுமாட்டின் பல்
16.கட்செவி = பாம்பு
17.கார் = மேகம்
18.இந்து = சந்திரன்
19.கரா =முதலை
20.உடும்பு= உடும்பின் தலை
***
காளிதாசன், பர்த்ருஹரி, வராக மிஹிரர் தரும் செய்திகள்
சுவாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழை சிப்பியின் வாய்க்குள் புகுந்து முத்து ஆகிறது என்று பர்த்ருஹரி சொன்னது கருவூர் கதப்பிள்ளையின் புறம் 380 பாடலில் உள்ளது.
காளிதாசனின் மாளவிகாக்னிமித்ரத்தில் உள்ளது (1-6)
யானைத் தந்தத்திலுள்ள முத்து பற்றி காளிதாசன் குறிப்பிடும் இடங்கள்:_ குமாரசம்பவம் — 1-6; ரகுவம்சம் 9-65;
தமிழ் இலக்கியத்தில் யானை முத்து, மூங்கில் முத்து பற்றி வரும் இடங்கள்:-
முருகு-304; மலைபடு-517; கலி 40-4; புறம் 170; ப.பத்து- 32; நற்.202; குறிஞ்சி 36; அகம் 282; 173
காளிதாசனுக்குப் பிடித்த உவமைகளில் முத்து மாலையும் ஒன்று.
பறவைகள் குடியேறும் போது ( Bird Migration) பறந்து செல்லுவது முத்துமாலை போல உள்ளது என்றும் நதிகளை மலை உச்சியிலிருந்து பார்க்கையில் அவை முத்துமாலை போலத் தென்படும் என்றும் (ரகு.13-48; மேகதூதம் 49) கூறுகிறான்.
வராஹமிகிரர் எழுதிய பிருஹத் ஜாதகம் என்னும் அற்புத சம்ஸ்கிருத கலைக்களஞ்சியத்தில் முத்துக்கள் உற்பத்தியாகும் எட்டு இடங்கள்:
த்விப: புஜக: சுப்தி: சங்க: அப்ர: வேணு: திமி: சூகர: சூதானி
முக்தா பலானி ஏஷாம் பஹூ சாது ச சுப்திஜம் பவதி
——-பிருஹத் சம்ஹிதா, அத்தியாயம் 81
பொருள்: யானை, பாம்பு, முத்துச் சிப்பி, சங்கு, மேகம், மூங்கில், திமிங்கிலம், காட்டுப் பன்றி ஆகிய இடங்களில் முத்து கிடைக்கும்..
வராக மிகிரர் இப்படிச் சொன்னாலும் விஞ்ஞானிகள் அறிந்த முத்துக்கள் கடலிலும் சில இடங்களில் ஆறுகளிலும் கிடைக்கும் முத்துக்கள் மட்டுமே. மற்றவை எல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாதவையே. வராஹ மிகிரரும் தனக்கு முன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலவி வரும் கருத்துக்களைத் தான் தொகுத்திருப்பதாகவே கூறுகிறார். அதனால் தன் நூலுக்கே சம்ஹிதை=தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளார்.
—subham—
Tags- திருப்புகழில், அருணகிரிநாதர், அரிய செய்திகள், Part 51, விஸ்வரூப தரிசனம் ,முத்து பிறக்கும் இடங்கள், சீர்காழி, நாரதர், தும்புரு