Post No. 15,522
Date uploaded in London – 22 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 52
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 52
***
ஏழு நரகங்களின் பெயர்கள்
அறம் விசாரியா மூடர் நரகு ஏழில் புரள வீழ்வர் … தருமம்
இன்னதென்று கூட விசாரணை செய்யாத மூடர்கள் ஏழு* நரகங்களிலும் புரளும்படி விழுவார்கள்.
ஈராறு கர விநோத சேய் சோதி … பன்னிரண்டு திருக் கரங்களை
உடைய விநோதனே, செவ்வேளே, ஜோதி வடிவானவனே,
புரணம் பூரணாகார முருகோனே … நிறைந்த ஒளி பொருந்திய
பூரண உருவத்தனே, முருகனே,
புயல் உலாவு சேணாடு பரவி நாளும் ஈடேறு புகலி மேவி
வாழ் தேவர் பெருமாளே. … மேகம் உலாவும் விண் நாட்டவர்
போற்றிப் பரவி நாள்தோறும் ஈடேறுகின்ற புகலி என்னும் சீகாழியில்** வீற்றிருந்து வாழ்கின்ற, தேவர்களின் பெருமாளே.
* ஏழு நரகங்கள் பின்வருமாறு:
கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).
***
மனித உடலுக்கு வெவ்வேறு பெயர்கள் !
ஊனத் தசை தோல்கள் சுமந்த காயப் பொதி … அழிந்து போகும் தன்மையுடைய மாமிசம், தோல்கள் (இவைகளைச்) சுமக்கும் உடற்சுமை,
மாயம் மிகுந்த ஊசல் சுடும் நாறும் குரம்பை … மாயம் மிக்கதும், ஊசிப்போவதும், கடைசியில் சுடப்படுவதும், நாறுவதுமான சிறுகுடிலாகிய இந்த உடல்
மறை நாலும் ஓதப் படும் நாலு முகன் த(ன்)னால் உற்றிடும்கோலம் எழுந்து … நான்கு வேதங்களால் ஓதப்படுகின்ற நான்முகன் பிரமனால் ஏற்படுத்தப்பட்ட அழகுடன் உருப்பெற்று எழுந்து,
ஓடித் தடுமாறி உழன்று தளர்வாகி … ஓடியும், தடுமாறியும், திரிந்தும், தளர்ச்சி அடைந்தும்,
கூனித் தடியோடு நடந்து … கூனித் தடிகொண்டு நடந்தும், ஈனப்படு கோழை மிகுந்த கூளச் சடம் ஈதை … இழிவைத் தரும் கோழை மிக்க குப்பையான இந்த உடலை,
உகந்து புவி மீதே கூசப் பிரமாண … மிக விரும்பி, இந்தப் பூமியில், நாணம் உறும்படியாக விதிப் பிரகாரம் செல்வதான
ப்ரபஞ்ச மாயக் கொடு நோய்கள் அகன்று … இந்த உலக
மயக்கத்தில் உண்டாகும் பிணிகள் நீங்கி,
கோலக் கழலே பெற இன்று அருள்வாயே … உனது அழகிய இரண்டு திருவடிகளை இன்று எனக்கு அருள் புரிவாயாக.
***
சொல் விளையாட்டு
முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. …
முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி
வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.
* மூன்று வகையான அக்கினிகள் பின்வருமாறு:
ஆகவனீயம் – வேதத்தை வழங்கச் செய்வது.
தக்ஷிணாக்கினி – தேவர்களுக்குக் காணிக்கை கொடுக்கச் செய்வது.
காருகபத்தியம் – பூலோகத்தை ரக்ஷிக்கச் செய்வது.
… திருமுருகாற்றுப்படை.
***
முருகனின் 16 அருமையான லக்ஷணங்கள்
சருவி யிகழ்ந்து மருண்டு வெகுண்டுறு சமயமும் … மதப்
போராட்டத்தில் ஒருவரை ஒருவர் இகழ்ந்தும், பயந்தும், கோபித்தும்
வருபவரான சமயவாதிகளும்,
ஒன்றிலை யென்ற வரும் … தெய்வம் என்ற ஒன்றே இல்லை
என்பவர்களும்,
பறிதலையரு நின்று கலங்க … பறிதலையராம்* சமண குருமாரும் -இவ்வாறு யாவரும் நின்று கலங்க,
விரும்பிய தமிழ்கூறுஞ் சலிகையு … அனைவரும் விரும்பத்தக்க
தமிழ்ப்பாடல்களை (திருஞானசம்பந்தராக) கூறும் செல்வாக்கையும்**,
நன்றியும் வென்றியு மங்கள பெருமைகளும் … உபகார
குணத்தையும், வெற்றியையும், மங்களகரமான பல பெருமைகளையும்,
கனமுங்குணமும்பயில் சரவணமும் … சீர்மையையும்,
நற்குணத்தையும், நீ குழந்தையாய் விளையாடிய சரவணப்
பொய்கையையும்,
பொறையும்புகழுந்திகழ் தனிவேலும் … உனது பொறுமையையும்,
புகழையும், விளங்கும் ஒப்பற்ற வேலையும்,
விருது துலங்க சிகண்டியில் … வெற்றிச் சின்னங்கள் விளங்க மயில் மீது அமர்ந்து
அண்டரும் உருகி வணங்கவரும்பதமும் … தேவர்களும் மனமுருகி வணங்கும்படியாக வரும் திருவடியையும்,
பல விதரணமுந்திறமுந் தரமும் … பலவிதமான
கொடைவண்மையையும், உன் சாமர்த்தியத்தையும், தகுதியையும்,
தினைபுனமானின் ம்ருகமத குங்கும கொங்கையில் நொந்து …
தினைப்புனத்து மானாகும் வள்ளியின் கஸ்தூரி, குங்குமம் அணிந்த மார்பிலே மயங்கி நொந்து,
அடி வருடி மணந்துபுணர்ந்ததுவும் … அவளது திருவடியை வருடி,
மணம் செய்து, அவளைக் கலந்து நின்றதையும்,
பல விஜயமும் அன்பின்மொழிந்துமொழிந்து இயல்
மறவேனே … மேலும் பல வெற்றிச் செயல்களையும் அன்புடனே
பலமுறை சொல்லிச் சொல்லி போற்றி, உன் பெருமையை என்றும் நான் மறக்கமாட்டேன்.
* பறிதலை என்பது:
சமணர்களில் ஒருவர் குருவாக ஆகும்போது மற்ற குருமார், இப்போது துக்கம் பிற்பாடு சுகம் என்ற மந்திரத்தைச் சொல்லி, அவரது தலைமயிர்களை ஒவ்வொன்றாகப் பறிக்கும் வழக்கம்.
** சலிகை என்றால் செல்வாக்கு – முருகனின் சலிகை முதலிய 16 அருமையான லக்ஷணங்களை இங்கு தொடங்கி விஜயமும் வரை வெகு அழகாக அருணகிரிநாதர் வரிசைப் படுத்தியது மிக்க இன்பம் தருகிறது.
***
சிவனுக்குப் பிடித்த இலைகள் – வில்வம், விளா, நாவல் ; பூக்கள் கொன்றை, மாதுளம் பூ
முந்தைய திருப்புகழ் பாடல்களில் அருகம் புல் முதலியவற்றையும் சேர்த்துள்ளார்
பூமாது உரமேயணி மால் … தாமரைமலர் மீது அமரும் லக்ஷ்மி தேவியை மார்பிலே தரித்துள்ள திருமாலும்,
மறை வாய்நாலுடையோன் … வேதம் சொல்லும் வாய் நான்கு உடையவனான பிரமனும்,
மலி வானவர் கோமான் … கூட்டமான தேவர்களின் தலைவனான இந்திரனும்,
முநிவோர்முதல் யாரும் … முநிவர்கள் முதலிய யாவரும்,
இயம்புவேதம் பூராயமதாய்மொழி நூல்களும் … இயம்பப்படும் வேதப்பொருளை ஆராய்ந்து கூறும் நூல்களில்
ஆராய்வதிலாத அடலாசுரர் … ஆராய்ச்சி செய்யாத வலிய அசுரர்கள் செய்யும்
போரால்மறை வாயுறு பீதியின் வந்துகூடி … போருக்குப் பயந்து,மறைந்து, அச்சத்துடன் வந்து ஒன்று கூடி,
நீ மாறு அருளாயென … நீ, பகைவர்களை அழிக்கவல்ல, ஒரு மாற்றுப் பகைவனை தந்தருள்வாயாக என்று
ஈசனை பாமாலைக ளால்தொழுதே … ஈசுவரனைப்
பாமாலைகளால் பாடித்தொழுது,
திருநீறார்தரு மேனிய … திருநீறால் அழகு விளங்கும்
திருமேனியனே,
தேனியல் கொன்றையோடு … தேன் பொதிந்த கொன்றை மலருடனே
நீரேர்தரு சானவி* மாமதி … நீர் அழகுடன் ததும்பும் கங்கையையும், சிறந்த நிலவையும்,
காகோதர மாதுளை கூவிளை … பாம்பையும், மாதுளம் பூவையும், வில்வ இலையையும்,
நேரோடம் விளாமுதலார்சடை யெம்பிரானே … நாவல் இலை, விளா இலை, முதலியன நிறைந்த சடையணியும் எங்கள் பெருமானே,
போமாறினி வேறெது வோதெனவே … நாங்கள் உய்ந்து போகும் வழி இனி உன்னையன்றி வேறு எது உள்ளது எனச் சொல்லி அருள்க என்று முறையிடவே,
ஆரருளாலவர் ஈதரு போர்வேலவ … நிறைந்த கருணையினால் அந்தச் சிவபெருமான் தந்தருளிய வேலவனே,
நீல கலாவி யிவர்ந்து … நீலத் தோகை மயில் மீது ஏறி
நீடு பூலோகமொடே யறு லோகமு … நீண்ட இந்தப்
பூலோகத்துடனே மீதி ஆறு லோகங்களையும்
நேரோர் நொடி யேவரு வோய … நேராக ஒரே நொடிப் பொழுதிலே சுற்றி வந்தவனே,
சுர சேனாபதி யாயவனே … தேவர்களின் சேனாதிபதி ஆனவனே,
உனை யன்பினோடுங் காமா அறு சோம சம ஆனன …
உன்னை அன்போடு, மன்மதனைப் போன்ற அழகனே, ஆறு பூரண சந்திரர்களுக்கு சமமான திருமுகங்களை உடையவனே,
தாமாமண மார்தரு நீப … மணம் நிறைந்து வீசும் கடப்பமாலைகளை அணிந்தவனே,
சுதாமாவெனவேதுதி யாது … நல்ல திவ்விய ஒளியை உடையவனே என்றெல்லாம் போற்றித் துதிக்காமல்
உழல் வஞ்சனேனைக் காவாய் … திரிகின்ற வஞ்சகனாகிய என்னைக் காத்தருள்வாயாக.
அடிநாள் அசு ரேசரையேசாடிய … அந்நாளில் அசுரர்களின் தலைவனான சூரன் முதலியவர்களை சம்ஹரித்த
கூர்வடி வேலவ … கூரிய வேலாயுதத்தை உடையவனே,
காரார்தரு காழியின் மேவிய தம்பிரானே. … மேகங்கள் நிறைந்த சீகாழிப்பதியில்** வீற்றிருக்கும் தம்பிரானே.
இப்பாடலின் முக்கால் பகுதி கந்த புராணச் சுருக்கமாக அமைந்துள்ளது.
* சானவி = ஜானவி, ஜன்னு என்ற முநிவரின் காது வழியே சென்றதனால் கங்கைக்கு ஜானவி என்ற பெயர் உண்டு.
** சீகாழி சிதம்பரத்திற்கு 11 மைல் தெற்கே உள்ளது.
சைவக் குறுவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த தலம்.
–SUBHAM—
TAGS- திருப்புகழில், அருணகிரிநாதர் , அரிய செய்திகள் ,Part 52 ஜானவி, சிவனுக்குப் பிடித்த, இலை பூ, முருகனின், 16 லக்ஷணங்கள்