WRITTEN BY R. SESHADRINATHAN
Post No. 15,521
Date uploaded in London – 22 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம். ஓர் ஆய்வு – 7
(ஆர், சேஷாத்ரிநாதன்)
சிவஸ்துதி
அடுத்து சிவபெருமானைத் துதிக்கிறார் துளசிதாசர்.
मुक्ति जन्म महि जानि ग्यान खान अघ हानि कर।
जहँ बस संभु भवानि सो कासी सेइअ कस न ॥
எங்கு சிவபெருமானும், பார்வதியும் வசிக்கின்றனரோ, அந்தக் காசி என்ற க்ஷேத்ரம் முக்தியின் பிறப்பிடம். ஞானத்தின் சுரங்கம். பாபங்களை அழிப்பது. அதில் ஏன் வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடாது?. இங்கு காசியின் மகத்துவத்தைச் சொல்கிறார்.
जरत सकल सुर बृंद बिषम गरल जेहिं पान किय।
तेहि न भजसि मन मंद को कृपाल संकर सरिस॥
“எந்த ஆலகால விஷம் கண்டு தேவர்கள் கூட்டம் பொசுங்கிக் கொண்டிருந்ததோ, அதை எவர் அருந்தி விட்டாரோ, ஏ அசட்டு மனமே! அந்தச் சங்கர பகவானை ஏன் பற்ற மாட்டேன் என்கிறாய்? அவர் போல் கிருபை செய்பவர் யார்?” என்கிறார் துளசிதாசர்/
பாற்கடலைக் கடைந்தபோது கொடிய ஆலகால விஷம் வெளிவந்தது. அந்த விஷத்தின் சக்தியை தேவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். அந்த விஷத்தைச் சிவனே அருந்தினார் என்பது வரலாறு. ஸ்ரீமத் பாகவதம் எட்டாவது ஸ்கந்தம் ஏழாவது அத்யாயத்தில் கீழ்க்கண்ட ஸ்லோகங்கள் சிவனே சொல்வது போல வருகின்றன
आसां प्राणपरीप्सूनां विधेयमभयं हि मे ।
एतावान् हि प्रभोरर्थो यद्दीनपरिपालनम् ॥ ३८॥
तस्मादिदं गरं भुञ्जे प्रजानां स्वस्तिरस्तु मे
तद्विषं जग्धुमारेभे प्रभावज्ञान्वमोदत ॥ ४१
“இவர்கள் உயிர் பிழைக்க விரும்புகிறார்கள்; எனவே, அவர்களுக்கு அபயத்தை அளிப்பது என் கடமை. எனவே, இந்த விஷத்தை நான் குடிக்கிறேன். என் குடிமக்களுக்கு நன்மை உண்டாகட்டும்.அந்த விஷத்தைக் குடிக்க நான் முனைந்தேன்; என் சக்தியும் ஞானமும் அதில் மகிழ்ந்தன.” ஈசனின் (பரமாத்மாவின்) உண்மையான நோக்கம் இதுவே — துன்பத்தில் உள்ளவர்களை பாதுகாப்பது.
பக்தர்களுக்காக விஷத்தையே அருந்த முன்வந்த அந்த சிவபெருமானின் மீது ஏன் பற்று வைப்பதில்லை? என்று தன்னையே நொந்து கொள்கிறார் துளசிதாசர்.
சிவ பெருமான் தேவர்களுக்காக நஞ்சுண்ட விஷயம் மூன்றாம் திருமுறையில் திருஞானசம்பந்தரின் திருவுச் சாத்தனம் என்ற திருப்பதிகத்தில் வருகிறது. மேலும் இதில் இராமாயணம் பற்றிய செய்தியும் இடம் பெறுகிறது..
நீரிடைத் துயின்றவன்
தம்பிநீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீ
வன்னநு மான்றொழக்
காருடை நஞ்சுண்டு
காத்தருள் செய்தஎம்
சீருடைச் சேடர்வாழ்
திருவுசாத் தானமே.
பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலின் அவதாரமான இராமனும் இலக்ஷ்மணனும் ஜாம்பவான், சுக்ரீவன் ஹனுமான் ஆகியோரும் தொழுது வணங்கக் கருநிறம் நஞ்சை உண்டி காத்தருள் செய்த எம் பெருமைக்குரிய, எங்களை ஏவல் கொள்ளும் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவுசாத்தானம் ஆகும்.
மீண்டும் துளசிதாசர்
சிவ பெருமானின் பெருமையைச் சொல்லிவிட்டு காசியைப் பற்றியும் பாடினார். காசியைப் பற்றி வினய பத்ரிக என்ற நூலில் ஒன்பது சுலோகங்களில் விரிவாகப் பாடியுள்ளார்.
सइअ सहित सनेेह देह भरि,कामधेनु कलि कासी।
समनि सोक संताप पाप रूज, सकल-सुमंगल-रासी।1।
मरजादा चहुँ ओर चरनबर, सेवत सुरपुर-बासी।
तीरथ सब सुभ अंग रोम सिवलिंग अमित अविनासी।2।
अंतरऐन ऐन भल, थन फल, बच्छ बेद-बिस्वासी।
गलकंबल बरूना बिभा िजनु, लूम लसति, सरिताऽसि।3।
दंड पानि भैरव बिषान,तलरूचि-खलगन-भयदा-सी।
लोलदिनेस त्रिलोचन लोचन, करनघंट घंटा-सी।4।
मनिकर्निका बदन-ससि सुंदर, सुसरि-सुख सुखमा-सी।
स्वारथ परमारथ परिपूरन,पंचकोसि महिमा-सी।5।
बिस्वनाथ पालक कृपालुचित7 लालति नित गिरजा-सी।
सिद्धि, सची, सारद पूजहिं मन जोगवति रहति रमा-सी।
पंचााच्छरी प्रान7 मुद माधव7 गब्य सुपंचनदा-सी।
ब्रह्म-जीव-सम रामनाम जुग, आखर बिस्व बिकासी।7।
चारितु चरिति करम कुकरम करि, मरत जीवगन घासी।
लहत परम पद प्य पावन, जेहि चहत प्रपंच- उदासी।8।
कहत पुरान रची केसव निज कर-करतूति कला -सी।
तुलसी बसि हरपुरी राम जपु, जो भयो चहै सुपासी।9।
காசி (வராணசி) என்பது ஞானமும்) அன்பும் (ஸ்நேஹ) நிறைந்த உடலாக உள்ளது. கலியுகத்தில் காமதேனு (எல்லா ஆசைகளையும் நிறைவேற்றும் பசு) போன்றது. இது துன்பம், வேதனை, பாபம், நோய் ஆகியவற்றை அழித்து, அனைத்து நன்மைகளின் குவியலாக உள்ளது.. காசியின் எல்லைகள் நான்கு திசைகளிலும் புனித எல்லைகளால் சூழப்பட்டுள்ளன. தேவர்கள் இதை வணங்குகின்றனர். காமதேனுவின் ஒவ்வொரு ரோமமும் சிறந்த தீர்த்தமாகவும், உடலின் அங்கங்கள் அளவில்லாத அழியாத சிவலிங்கங்களாகவும் உள்ளன.
காசி நகரம் — கலியின் காமதேனு!
பாவம் பறந்தது, புனிதம் பரந்தது,
சிவனும், பக்தனும் ஒன்றாய் வாழும்
தர்மத்தின் தீபம் — காசி!
———–
மணிகர்ணிகா — மோட்ச வாசல்,
விஸ்வநாதர் — பரம் பாதுகாவலர்,
பைரவர் — பயம் நீக்கும் வீரன்,
பஞ்சகோசி — பரமார்த்த யாத்திரை!
————-
வேதம் பேசும் ஒலி — ராம நாமம்,
பிரம்மம் வாழும் ஒளி — காசி நாமம்,
சந்திர முகம் போல சாந்தம்,
அக்னி போல சுத்தி — காசி!
———
துளசி சொன்னான் — “இங்கே வாழ்ந்தால்
மாயை நீங்கும், பரம் பதம் கிடைக்கும்!”
அந்த நகரம் — நாமத்தின் நிழல்,
அழிவற்ற ஆனந்தத்தின் நிலம்!
இங்கு ஒரு கேள்வி எழலாம் . கிஷ்கிந்தா காண்டத்தில் காசிக்கு என்ன வேலை? இரண்டிற்கும் இடையே வெளிப்படையான தொடர்பு இல்லை. காசி என்பது ஒரு நபருக்கு முக்தி வழங்குவது போன்ற ஆன்மீகத் தகுதியை வழங்கும் ஏழு புனிதத் தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது., அந்தப் பட்டியலில் காசி நாலாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அயோத்தி உள்ளது. கிஷ்கிந்தா காண்டம் இராமாயணத்தில் நான்காவது இடம் என்பதலால் புனிதத்துவம் மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் காசி அதே நாலாவாது இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த ஏழு புனிதத் தளங்களாவன
1.அயோத்தி. 2.மதுரா. 3, மாயாபுரி 4, காசி 5. காஞ்சி 6. அவந்திக 7. பூரி
இதில் மாயாபுரி ஹரித்வாரைக் குறிக்கும். அவந்திகா என்பது உஜ்ஜைனைக் குறிக்கும்.
இனி துளசிதாசரைத் தொடர்வோம்
***