
WRITTEN BY S NAGARAJAN
Post No. 15,520
Date uploaded in London – 22 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயணத்தில் வரங்கள் (46)
ராமாயணத்தில் வரங்கள் (46) அதிகாயன் உள்ளிட்டோர் பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றது!
ச. நாகராஜன்
யுத்தகாண்டத்தில் ‘நராந்தக வதம்’ என்ற அறுபத்தொன்பதாவது அத்தியாயத்தில் அதிகாயன் உள்ளிட்ட ராவணனது மூன்று புதல்வர்களும் பிரம்மாவிடமிருந்து வரம் பெற்றது பற்றிய ஒரு குறிப்பைக் காண்கிறோம்.
யுத்தத்தில் கும்பகர்ணன் வதம் செய்யப்பட்டதைக் கண்ட ராவணன் பலவாறாகப் புலம்பித் தவித்தான். அப்போது ராவணனைப் பார்த்து திரிசிரஸ்,
“எங்களது நடுத்தந்தை இறந்து விட்டார். சாமான்யன் போல வருந்த வேண்டாம். தங்களுக்கு பிரம்மதேவரால் அளிக்கப்பட்ட சக்தியாயுதம் இருக்கிறது. கவசமும், பாணமும், வில்லும், ரதமும் உள்ளன. அதனால் ராமனைக் கொல்வீராக! மன்னா! தாங்கள் இருங்கள், நான் போருக்குச் சென்று வருகின்றேன். என்னால் ராமன் கொல்லப்படுவான்” என்று வீரமொழி புகன்றான்.
திரிசிரஸின் சொல்லைக் கேட்டு தேவாந்தகனும், நராந்தகனும், அதிகாயனும் உற்சாகம் அடைந்தனர்.
இவர்களைப் பற்றிய வால்மீகி முனிவரின் வர்ணனையில் பல விஷயங்களை அறிகிறோம்.
“ராவணனின் புதல்வர்களான அவர்கள் இந்திரனுக்கொப்ப வீரியம் படைத்தவர்கள். எல்லோரும் ஆகாயத்தில் சஞ்சரிப்பவர்கள். எல்லோரும் மாயா நிபுணர்கள். அனைவரும் தேவர்களின் செருக்கை அழித்தவர்கள். யாவரும் போரில் வெல்லுதற்கரியவர்கள். மேலான பலம் பெற்றவர்கள்.” இப்படி இன்னும் பலவாறாக அவர்கள் புகழப்படுகின்றனர்.
சர்வே ச விதுஷோ வீரா: சர்வே யுத்த விஷாரதா: | சர்வே ப்ரவரவிஞ்ஞானா: சர்வே லப்தவராஸ்ததா ||
யுத்த காண்டம் 69வது அத்தியாயம் ஸ்லோக எண் 13
சர்வே – யாவரும் விதுஷ: – கற்றுணர்ந்த வீரா: – நிபுணர்கள் சர்வே – யாவரும் யுத்த விஷாரதா: – யுத்தத்தில் நிபுணர்கள் சர்வே – யாவரும் ப்ரவர விஞ்ஞானா: -மேம்பட்ட அறிவுடையவர்கள் சர்வே ச – யாவரும் லப்தவரா: – வரங்கள் பெற்றவர்கள்
இதில் அதிகாயன் உள்ளிட்டோர் பல வரங்களைப் பெற்ற செய்தியைக் காண்கிறோம். யாரால் எப்போது எதற்காக அவர்கள் வரங்கள் பெற்றனர் என்ற விவரம் தரப்படவில்லை. ஆனால் இவர்கள் மூவரும் வரம் பெற்றவர்கள் என்பதை மட்டும் வால்மீகி முனிவர் குறிப்பிடுகிறார்.