Post No. 15,530
Date uploaded in London – 24 March 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ?
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
கண்ணிலேன், மற்றோர் களைகண் இல்லேன்,
சுழல் அடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுள்ளே ஒன்பது வாசல் வைத்தாய்,
ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்,
புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே
பொருள்:
இறைவா! உனது திருவடிகளைத் தவிர நான் வேறென்ன நினைப்பேன்? வேறு புகலிடம் எனக்கு இல்லை. இந்த ஒன்பது வாசல்கள் கொண்ட உடலை (ஒக்க அடைக்கும் போது) உயிர் பிரியும் காலத்தில், உன்னை நினைத்து உணரமாட்டேன். அதனால், இப்போதே உன் பாதங்களை வணங்கி சரணடைகிறேன் என, பூம்புகலூர் இறைவனைப் போற்றி அப்பர் பாடியுள்ளார்.
***
மார்ச் ஆறாம் தேதி (2026) அப்பர் பெருமானையும் அக்னீச்வரரையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது கும்பகோணம் முதியோர் இல்லமான ஸ்ரீவத்சம் கட்டிடத்திலுள்ள டிவைன் இன் DIVINE INN ஹோட்டல் அறையிலிருந்து புறப்பட்டு திருச்செங்காட்டன் குடி, திருப்புகலூர் , திருவாஞ்சியம் ஆகிய மூன்று சிவன் கோவில்களையும் மூன்றே மணி நேரத்தில் தரிசித்தேன். நான் எடுத்த புகைப்படங்களையும் கண்டு களியுங்கள்.
திருப்புகலூர், பாடல் பெற்ற சிவத்தலமாகும். அக்னி பகவான் சிவனை வழிபட்ட தலமாகவும், திருநாவுக்கரசர் முக்தி அடைந்த இடமாகவும், சுந்தரருக்குச் செங்கல்லைப் பொன்னாக்கிய அற்புதத் தலமாகவும் இது போற்றப்படுகிறது.
இறைவர் திருப்பெயர்: அக்னீஸ்வரர், சரண்ய புரீஸ்வரர், கோணப்பிரான்.
இறைவியார் திருப்பெயர்: கருந்தார்குழலி, சூளிகாம்பாள்.
தல மரம்: புன்னை மரம் – Punnai (Alexandrian Laurel) Tree
தீர்த்தம்: அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்.
கோவிலின் எதிர்ப்புறம் அழகான குளம் உள்ளது
வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர்,கபிலதேவ நாயனார், பரணதேவ நாயனார்,பட்டினத்துப் பிள்ளையார்,நம்பியாண்டார் நம்பி,சேக்கிழார், அக்னி, முதலியோர்
முக்தி தலம்: திருநாவுக்கரசர் தனது 81-வது வயதில் திருப்புகலூர் (அக்னீஸ்வர சுவாமி திருக்கோயில்) என்னும் தலத்தில் சிவபெருமானுடன் ஐக்கியமானார்.
இறுதி பதிகம்: “எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேன்” எனத் தொடங்கி, “புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்” என முடியும் பதிகத்தை பாடினார்.
சிறப்பு: இங்கு அப்பருக்கெனத் தனியாகத் திருமடம் மற்றும் நந்தவனம் உள்ளன. இத்தலம் திருநாவுக்கரசர் மட்டுமின்றி, முருக நாயனார் அவதரித்த தலமாகவும், சுந்தரர் பாடிய தலமாகவும் போற்றப்படுகிறது.
இங்குள்ள அக்னீஸ்வரர் கோயிலில் அப்பர் தனது இறுதி நாட்களைக் கழித்துச் சிவத்தொண்டு புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Appar/ Tiru Navukkarasar
நன்னிலம் – நாகப்பட்டினம் சாலையில் உள்ள தலம். நன்னிலத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் தலம் இருக்கிறது.
இறைவன் அக்னீஸ்வரர் ஆலயத்தின் உள்ளே கோணப்பிரான் சந்நிதியின் அருகே திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலமும் அமைந்திருக்கிறது.
திருப்புகலூருக்கு அருகில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருக்கண்ணபுரம் மற்றும் இராமனதீச்சுரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலமும் உள்ளன.
சிறப்பு: திருநாவுக்கரசர் சிவனுடன் கலந்த இடம். திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய 75-வது காவிரி தென்கரைத் தலம்.
சிறப்பம்சம்: அக்னி பகவான் காட்சியளிக்கும் அபூர்வ தலம்.
அக்னி வழிபட்ட தலம்: அக்னி பகவான் இத்தலத்தில் சிவனை வணங்கித் தன் பாவம் நீங்கப் பெற்றதால், இறைவன் அக்னீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
செங்கல்லைப் பொன்னாக்கியது: சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூருக்குச் செல்லும்போது, அவருக்காகச் சிவபெருமான் இத்தலத்தில் செங்கற்களைப் பொன் கற்களாக மாற்றிய அற்புதத் தலம்.
வேளக்குறிச்சி ஆதீனம் கட்டுப்பாட்டில் உள்ளது இந்தக் கோவில்
கிழக்கு நோக்கிய ராஜ கோபுரத்திற்கு எதிரில் அகழி இருப்பதைப் பார்க்கிறோம். இந்தத் தீர்த்தம், அக்கினி தீர்த்தம் எனப்படுகிறது.அதன் படிக்கட்டருகே சந்திர சேகரர் சன்னதி அமைந்துள்ளது.
ராஜ கோபுர வாயிலைக் கடந்தவுடன் நமது வலப்புறம் தெற்கு நோக்கியவாறு அம்பிகையின் சன்னதியைக் காண்கிறோம். கருந்தாழ் குழலி என்று இந்த அம்பிகை இத்தலத்துத் தேவாரப் பாடலில் குறிப்பிடப்படுகிறாள். வடமொழியில் இந்த இறைவியை சூளிகாம்பாள் என்று அழைக்கின்றனர்.
இத்தலத்தின் முக்கிய சன்னதி அக்னீசுவரர். சரண்யபுரீசுவரர், கோணப்பிரான் என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. இதை ஒட்டி மற்றும் ஓர் சிவ சன்னதி உள்ளது . அங்குள்ள சுவாமிக்கு வர்தமாநீசுவரர் என்றும் அம்பிகைக்கு மனோன்மணி என்றும் பெயர்கள். இந்தப் பெருமானுக்குப் புஷ்ப கைங்கர்யம் செய்தவர் முருக நாயனார் ஆவார். அக்நீசுவரரைப் பாடிய திருஞானசம்பந்தர் வர்த்தமானீசுவரரையும் ஒரு பதிகத்தால் பாடியிருக்கிறார். அதில் முருக நாயனாரது தொண்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது.
உட்ப்ராகாரத்தில் கணபதி ,பூதேஸ்வரர், பவிஷ்யேசுவரர், அகோர லிங்கம், சிந்தாமணீசுவரர் ஆகிய மூர்த்திகளும், ததீசி, பராசரர், பிருகு, புலஸ்தியர்,ஜாபாலி, பாரத்வாஜர், வாமதேவர், ஆகியோர் பூஜித்த சிவலிங்கங்களையும் தரிசிக்கலாம். உள் பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் அப்பர் (திருநாவுக்கரசர்) சன்னதியும் உள்ளது.
***
அப்பர் ஐக்கிய விழா பத்து நாள் நிகழ்வுகள்
இத்தலத்தின் பிரமோற்சவம் வைகாசி விசாகத்தை முன்னிட்டுப் பத்து நாட்கள் நடைபெறுகிறது
முதல் நாளன்று, சூலை நோய் தீரப் பெற்ற வரலாற்று நிகழ்ச்சி விழாவும், இரண்டாம் நாள் பல்லவ மன்னன் அவரை நீற்றறையில் இட்ட பொது, ” மாசில் வீணையும் ” என்ற பதிகம் பாடி சிவானந்தத்தில் திளைத்திருந்ததும், மூன்றாம் நாள் சமணர்கள் ஏவிய யானை இவரைத் தீங்கு செய்யாது வணங்கிச் சென்றதும், நான்காம் நாள் சமணர்கள் இவரைக் கல்லில் கட்டிக் கடலில் இட்டபோது, நமசிவாயப் பதிகம் பாடிக் கரை ஏறியதும், ஐந்தாம் நாள், பெண்ணாகடத்தில் சூலக் குறியும், ரிஷபக் குறியும் தோள்களில் பொறிக்கப் பெற்றதும், ஆறாம் நாள் , திருநல்லூரில் திருவடி தீக்ஷை பெற்றதும், ஏழாம் நாள் திங்களூரில் அப்பூதி அடிகளின் பாம்பு தீண்டிய மகனைப் பதிகம் பாடி உயிர்ப்பித்ததும், எட்டாம் நாளன்று திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றதும், திருமறைக்காட்டில் மூடியிருந்த ஆலயக் கதவைப் பதிகம் பாடித் திறந்ததும், ஒன்பதாம் நாள் பழையாறை வடதளியில் சமணர்களால் மூடப்பட்டிருந்த ஆலயத்தைப் பதிகம் பாடித் திறந்ததும், கயிலை யாத்திரை செய்து, திருவையாற்றில் கயிலைக் காட்சியைக் கண்டதும், பத்தாம் நாள் காலையில் திருப்பைஞ்ஞீ லியில் கட்டமுது பெற்றதும் ஆகிய நிகழ்ச்சிகள் ஐதீக விழாக்களாக நடைபெறுகின்றன.
பத்தாம் திருநாளான சித்திரை சதயத்தன்று மாலை அப்பர் பெருமான் ,ப்ராகாரத்திலுள்ள கட்டமுது மண்டபத்திலிருந்து புறப்பாடாகிப் பிராகாரத்தில் எழுந்தருளுகிறார். அவர் உழவாரப் பணி செய்ததை நினைவு கூறுவதாகப் பிராகாரத்தில் உழவாரப் பணி செய்யப்படுகிறது.
அப்போது இறைவன் அவரைச் சோதிக்க வேண்டி அவ்விடத்தில் பொன்னும்,மணிகளும் தோன்றச் செய்தபோது, நாட்டம் எதுவும் கொள்ளாமல் அவற்றைப் பருக்கைக் கற்களோடு கோயிலுக்கு வெளியில் அகற்றிய வரலாறும் நடத்திக் காட்டப் படுகிறது. அப்பரது பெருமையை உலகறியச் செய்வதற்காக சிவபெருமான் தேவ லோக அரம்பையர்களை அவருக்கு முன்னே தோன்றி நடனமாடச் செய்தபோது, ஐம்புலன்களையும் வென்ற நாவுக்கரசர், ” பொய்ம்மாயப் பெருங் கடலில்.. ” எனத் துவங்கும் பதிகத்தைப் பாடியவுடன் அவரது உறுதியைக் கண்ட அரம்பையர்கள் அங்கிருந்து அகன்ற வரலாற்றைப் பிராகாரத்தில் செய்து காட்டுகிறார்கள். சிறுமியர்கள் நடனம் ஆடிவிட்டுப் பிறகு அப்பர் பெருமானை வலம் வந்து திருநீறு பெற்றுக் கொண்டு செல்வதாக நடத்திக் காட்டுகிறார்கள். இந்நிகழ்ச்சிகள், இவ்வாலயத்தை நிர்வகிக்கும் வேளக்குறிச்சி ஆதீன கர்த்தரின் முன்னிலையில் நடை பெறுகிறது.
பிறகு இரவு 12 மணி அளவில் ப்ராகாரத்திலுள்ள அப்பர் சன்னதியில் மூலவருக்கும் உற்சவ மூர்த்திக்கும் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெறுகிறது. பின்னர் உற்சவ மூர்த்திக்கு அலங்காரமாகி வீதி புறப்பாடு நடைபெற்று,மீண்டும் கோயிலுக்குக் காலை சுமார் 5 மணிக்கு வந்து சேர்ந்தவுடன், அப்பர் சுவாமிகள் நேராக அக்னீசுவரப் பெருமான் சன்னதிக்கு, “எண்ணுகேன் ” எனத் தொடங்கும் திருத்தாண்டகம் பாடியவாறு வந்தடைகிறார். சுவாமி சன்னதிக்குள் சென்றதும் நாம் காண்பது ஒளிப் பிழம்பு மட்டுமே. ” அண்ணலார் சேவடிக் கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார் ” என்று சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் குறிப்பிடுவதை நேரில் காண்கையில் புல்லரிக்கும்; பேரானந்தம் கிடைக்கும் .
Muruga Nayaanr
Sundrar got Golden Bricks
Appar Shrine
செங்கற்கள் பொற்கட்டிகளாக மாறியது:
இங்கு வந்த சுந்தரர், ஆலயம் மூடியிருக்கவே, களைத்தவராக, அங்கிருந்த செங்கல்லைத் தலைக்கு வைத்தவாறு உறங்கி விட்டுக் கண் விழித்த போது ,அக்கல்லானது செம் பொன்னாக மாறி இருப்பதைக் கண்டு பரவசமாகித் , ” தம்மையே புகழ்ந்து .. ” எனத் தொடங்கும் தேவாரப் பதிகம் பாடினார்
திருவாரூரில் பங்குனி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெறும். ஒரு சமயம் அவ்வாறு பங்குனி விழாவின் போது தனது மனைவி பரவையார் செலவிற்குப் பொன் பெற விரும்பி சுந்தரர் திருப்புகலூர் வந்தார். திருப்புகலூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கி தனது கருத்தைப் பதிகத்தில் வைத்துப் பாடினார். பிறகு மற்ற அடியார்களுடன் கோவிலில் சிறிது நேரம் இளைப்பாறினார். தூங்குவதற்காக அங்கிருக்கும் செங்கற்களை தலைக்கு உயரமாக வைத்துத் தம் மேலாடையாகிய வெண்பட்டை விரித்துப் படுத்தார். துயில் நீங்கி சுந்தரர் எழுந்தபோது தம் தலையணையாக வைத்திருந்த செங்கற்களெல்லாம் பொற்கட்டிகளாக மாறி இருக்கக் கண்டு வியப்படைந்தார். இறைவனை ‘தம்மையே புகழ்ந்து‘ என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி வணங்கினார்.
ஆலய முகவரி
அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோவில்
திருப்புகலூர், நாகப்பட்டிணம் மாவட்டம்
PIN – 609704
Subham-
Tags- திருப்புகலூர், அக்னீஸ்வரர் தரிசனம் , அப்பர் , திருநாவுக்கரசர் , சதயம், ஐக்கிய விழா ,எண்ணுகேன் என்சொல்லி எண்ணுகேனோ?, pictures of Tiruppugalur, London Swaminathan