வாஞ்சிநாதனை தரிசித்தேன் (Post No.15,562)

Written by London Swaminathan

Post No. 15,562

Date uploaded in London – 1 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

முதல் தடவையாக 6-3-2026 அன்று ஸ்ரீவாஞ்சியத்துக்குச் சென்று வாஞ்சிநாதனை தரிசித்தேன். ஸ்ரீவாஞ்சியம் (Srivanchiyam) தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சிவஸ்தலமாகும்.  இங்கு, எமதர்மராஜனுக்கு தனி சன்னதி உள்ளது அவன் சிவபெருமானை வணங்கிய தலம்.

இறைவன் பெயர் -வாஞ்சிநாதர்

இறைவியின் பெயர் -மங்களாம்பிகை

தீர்த்தம்: குப்த கங்கை.

தல மரம்:  சந்தன மரம் (Sandalwood Tree)   வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், திருமால், பிரமன், யமன், இந்திரன், பராசரர், அத்ரி முதலியோர்.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரம் படியிருப்பதால் குறைந்தது 1400 ஆண்டுகளுக்கு முன்னரே புகழ்பெற்றது தெளிவாகிறது . அப்பர் , சம்பந்தர் மஹேந்திர பல்லவன் (600 CE) காலத்தில் வாழ்ந்தவர்கள்.

இறைவன் திருக்கயிலையிலிருந்து இத்தலத்திற்கு வந்ததால், அம்பிகைக்கு  “வாழ வந்த நாயகி” என்ற பெயர். பராசர முனிவர் ,அத்திரி முனிவர், உரோமச முனிவர் நீராடியது பற்றிய கதைகள் தல புராணத்தில் உள்ளன.   பூமகள், திருமகள் இருவர்க்கும் ஏற்பட்ட பிணக்கால் திருமகள் திருமாலை விட்டுப் பிரிந்தாள் என்றும், திருமால் திருவாஞ்சியத்தை அடைந்து இவ்விறைவனை வழிபட்டு, திருமகளை வாஞ்சித்துப் பெற்றதால் திருவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது என்றும் தலபுராணம் கூறுகிறது.

மகுடவர்த்தனன் என்னும் மன்னன் பகைவர்களால் உண்டாகும் அச்சம் நீங்கப்பெற்றான். மகாதனு என்ற மன்னன் அரக்க உருவம் நீங்கி மகிழ்ச்சி அடைந்தான். இவ்வாறு தல புராணம் பல கதைகளைச்  சொல்கிறது.

எமன் பற்றி தலபுராணம் கூறும் தகவல்

யமன் எல்லா உயிர்களையும் கவரும் தன் பாவம் தீர இத்தலத்து இறைவரை வழிபட்டுப் பாவம் நீங்கப்பெற்று, இவ்விறைவனுக்கு வாகனமாகும் பேற்றையும் பெற்றான். யமனுக்கு மூலஸ்தானம் தனியே உள்ளது.  யமனுக்கு இறைவன் காட்சி கொடுத்த  திருவிழா மாசி மாதம் பரணியில் நிகழ்கின்றது.

திருவாஞ்சியம் – சம்பந்தர் தேவாரம்

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்

பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார்

தென்ன வென்று வரிவண்டு இசைசெய் திருவாஞ்சியம்

என்னையாளுடையான் இடமாக உகந்ததே.

***

அப்பர் தேவாரப்பாடல்

படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்-

உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்,

புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம்

அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.

அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்

திருத்தும் சேவடியான் திகழும் நகர்

ஒருத்தி பாகம் உகந்தவன், வாஞ்சியம்

அருத்தியால் அடைவார்க்கு இல்லை, அல்லலே.

***

சுந்தரர் தேவாரப்பாடல்

பொருவனார்; புரிநூலர்; புணர் முலை உமையவளோடு

மருவனார்; மருவார் பால் வருவதும் இல்லை, நம் அடிகள்;

திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்

ஒருவனார்; அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே

***

நான் சென்றபோது கூட்டம் இல்லை. திருப்புகலூரில் தரிசனத்தை முடித்துக்கொண்டு இங்கு வந்தேன். பல புகைப்படங்களையும் எடுத்தேன்; இணைப்பில் காண்க .

காசிக்கு நிகராக ஆறு திருத்தலங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் இத்தலமும் ஒன்று. ஸ்ரீவாஞ்சியம்  காவிரியின்  தென் கரையில் உள்ளது. இது   காவேரிக்கரையில் உள்ள 6 ஸ்தலங்களைக் காசிக்கு சமமாகச் சொல்வார்கள். அவற்றில் இதுவும் ஒன்று. உண்மையில் இதை ‘காசிக்கு வீசம் (1/16)அதிகம்’ என்றே சொல்வார்கள். [ பிற தலங்கள் :1.திருவையாறு 2. வேதாரண்யம் 3. மயிலாடுதுறை 4. திருவிடைமருதூர் 5. திருவெண்காடு ] கிரகண சமயங்களில் மற்ற அனைத்து கோயில்களும் நடையடைக்கப்படுவது வழக்கம். ஆனால் வாஞ்சியம் திருக்கோயிலில் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனாருக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடத்தப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் ஈசனும், தேவியும் பிரகார வலம் வந்து குப்தகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியருள்கின்றனர். திருவாஞ்சியம் கோயில் 3.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி இயமனையும் ஊர்தியாகக் கொண்ட பெருமையுடையவர்.

குப்தகங்கை எனும் இவ்வாலயத் திருக்குளம் சுமார் 440 அடி நீளமுள்ளது. இந்தத் தீர்த்தமும் தொன்மைச் சிறப்புடையது.

·         தேரோட்டம்: மாசி மாத பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, வாஞ்சிநாத சுவாமி மற்றும் மங்களாம்பிகை தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

****

இது அருணகிரி நாதர் தரிசித்த 49வது தலம்.

திருப்புகழில் திருவாஞ்சியம்

உபசாந்த சித்த குருகுல

பவபாண்ட வர்க்கு வரதன்மை

யுருவோன்ப்ர சித்த நெடியவன்                      ரிஷிகேசன்

உலகீன்ற பச்சை யுமையணன்

வடவேங்க டத்தி லுறைபவ

னுயர்சார்ங்க சக்ர கரதலன்                               மருகோனே

த்ரிபுராந்த கற்கு வரசுத

ரதிகாந்தன் மைத்து னமுருக

திறல்பூண்ட சுப்ர மணியஷண்                            முகவேலா

திரைபாய்ந்த பத்ம தடவய

லியில்வேந்த முத்தி யருள்தரு

திருவாஞ்சி யத்தி லமரர்கள்                                  பெருமாளே.

இபமாந்தர் சக்ர பதிசெறி

படையாண்டு சக்ர வரிசைக

ளிடவாழ்ந்து திக்கு விசயம                                  ணரசாகி

இறுமாந்து வட்ட வணைமிசை

விரிசார்ந்து வெற்றி மலர்தொடை

யெழிலார்ந்த பட்டி வகைபரி                               மளலேபந்

தபனாங்க ரத்ந வணிகல

னிவைசேர்ந்த விச்சு வடிவது

தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு                               வியபோது

தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு

பிடிசாம்பல் பட்ட தறிகிலர்

தனவாஞ்சை மிக்கு னடிதொழ                          நினையாரே

–SUBHAM—

TAGS- ஸ்ரீவாஞ்சியம் (Srivanchiyam) , சிவன் கோவில், தேவார தலம்,

வாஞ்சிநாதர், மங்களாம்பிகை, லண்டன் சுவாமிநாதன் படங்கள்

முருகப் பெருமானிடம் மோதி, தோல்வி அடைந்த புலவர் கதை- Part 62 (Post No.15,561)

Written by London Swaminathan

Post No. 15,561

Date uploaded in London – 1 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 62

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 62

***

33 வகை தேவர்கள்

முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி …

முத்தும் நவரத்ன மணிகளும் வரிசையாக விளங்கும் பார்வதி (தமது) இடப் பாகத்தில் நெருங்கி இணைந்துள்ள மலை போன்றவரும்,

முத்தி தரு என ஓதும் முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த

முருகக் கடவுள் … முக்திக் கனியை அளிக்கும் மரம் என்றெல்லாம்

ஓதப்படும் முக்கண்களை உடையவருமான சிவபெருமானுக்கும் அருள் பாலித்து உபதேசித்த முருகக் கடவுள்,

முப்பது முவர்க்க சுரர் அடி பேணி … முப்பத்து மூன்று* வகையான

தேவர்களும் (தமது) திருவடியைப் போற்றி விரும்ப,

பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி …

(இராவணனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பைச் செலுத்திய (ராமனாகிய) திருமால்,

பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் … அருச்சுனன்

(மகாபாரதப்) போரில் வெற்றி பெறும் வகையில் (கண்ணனாக வந்து)தேரைச் செலுத்திய,

பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் … பச்சைநிறம் கொண்ட மேக நிறப் பெருமான் ஆகிய திருமால் (சூரபத்மன்,சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களிடத்தில் கொண்ட) பயத்தை நீங்கவைத்த முருகக் கடவுளே,

பத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே … பக்தர்கள் மனத்தில் பொருந்தி விளங்கும் மங்கலத்தை எனக்கும் அருள் புரிவாயாக.

முப்பத்து மூன்று வகைத் தேவர்கள் பின்வருமாறு:

ஆதித்தர் 12, ருத்திரர் 11, வசுக்கள் 8, மருத்தவர் 2 – ஆக 33 வகையின.

**

ஒப்பிடுக திருப்பாவை

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்

செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்

செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணவாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.

பொருள்

“தேவர் கூட்டத்தையும், அவர்களூக்குத் தலைவர்களாக விளங்கும் முப்பத்துமூன்று தேவர்களையும், இடர்கள் நெருங்குவதற்கு முன்னமே, அவர்கள் அச்சத்தை விலக்கி, காத்தருளும் நாயகனே கண்ணா! கண் விழிப்பாயாக! எடுத்த காரியத்தை நிறைவுறச் செய்பவனே! குற்றமில்லாதவனே! மிக்க வலிமை பொருந்தியவனே! எங்கும் நிறைந்தவனே! பகைவருக்கு துன்பங்களைக் கொடுப்பவனே! உறக்கம் விட்டு எழுவாயாக!

கவிழ்த்த செப்பைப் போன்ற மென்மையான மார்பகங்களையும், சிவந்த உதடுகளைக் கொண்ட வாயையும், மெல்லிய இடையையும் உடைய நப்பின்னை பிராட்டியே! திருமகளைப் போன்றவளே! துயில் விட்டெழுவாய்! எங்கள் நோன்புக்குத் தேவையான ஆலவட்டத்தையும்(விசிறியையும்) கண்ணாடியையும் வழங்கி, உன் கணவனான கண்ணனையும் எங்களுடன் அனுப்பி, நாங்கள் நோன்பு நீராட வழி செய்வாயாக!”

***

இலஞ்சி பற்றிய சிலேடை

புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி

மணவாளா … உன்னைப் புகழ்ந்தும், (உனது ஆற்றலைக்) கண்டு

மகிழ்ந்தும், வணங்கியும் வழிபட்ட குணத்தைக் கொண்ட இந்திரனுடைய

வஞ்சிக் கொடி போன்ற நங்கையாகிய தேவயானையின் கணவனே,

இரும் புன மங்கை பெரும் புளகம் செய் குரும்பை மணந்த

மணி மார்பா … தினைப் புனத்தைக் காத்த மங்கையாகிய வள்ளியின்

நிரம்பப் புளகாங்கிதம் கொண்ட தென்னங் குரும்பை போன்ற மார்பை அணைந்து கலந்த அழகிய மார்பனே,

இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சி அமர்ந்த

பெருமாளே. … (சரவணக்) குளத்தில் வந்த காரணத்தால் குளவன்

(குளத்தில் உற்பவித்தவன்) என்று திருப் பெயர் கொண்டு, இலஞ்சி*என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

* இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றால அருவிக்கு மிக அருகில் உள்ளது.

***


பொய்யாமொழிப் புலவர்

 கானில்நடந்த முருகோனே … (பொய்யாமொழிப் புலவர் வரும்)

காட்டில் (வேடனாய்) நடந்த முருகனே,*

கான மடந்தை நாண மொழிந்து … வள்ளி மலைக் காட்டில் இருந்த

பெண்ணாகிய வள்ளி நாணும்படியாக அவளிடம் பேசி,

காதல் இரங்கு குமரேசா … அவள்மீது உனக்கிருந்த காதலை

வெளிப்படுத்திய குமரேசனே,

சோலை வளைந்து சாலி விளைந்து சூழும் இலஞ்சி

மகிழ்வோனே … சோலைகள் சுற்றியும் உள்ள, நெற்பயிர் உள்ள

வயல்கள் விளைந்து சூழ்ந்துள்ள, இலஞ்சி** என்னும் நகரில் (வீற்றிருந்து) மகிழ்ச்சி கொண்டவனே,

சூரியன் அஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற பெருமாளே. …

சூரியன் தான் உதிப்பது எப்படி என்று பயப்படும்படியாக, கடலில் நின்று கொண்டிருந்த (மாமரமாகிய) சூரனை வென்ற பெருமாளே.

சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.

பொய்யாமொழிப் புலவர் கதை

இவர்  தொண்டை  மண்டலத்தில்  சைவ வேளாண் குடியில் தோன்றியவர் .இவர் தம் இளமைப் பருவத்தில் வயிரபுரம் என்னும் ஊரில் ஒரு தமிழாசிரியர்பால்  கல்வி பயின்று வந்தார்.  ஒரு  நாள் தம் ஆசிரியர்  தம்  பயிர்க்கொல்லையைக்  காத்துவரக் கூறினார். அவ்வாறே சென்று காவல் புரிந்தார்; அப்போது அங்கிருந்த

காளி கோயில் ஒன்றின் மர  நிழலில் படுத்துறங்கினார்; அப்போது பயிர்களைக்  குதிரையொன்று  வந்து   மேய்வதாகக்  கனவு   கண்டார்; உடனே விரைந்து  சென்று  அக்  குதிரையை  ஓட்டினார்.  ஓட்டியும்  அது,  அப்  பயிர் மேய்வதை  விட்டுச்  செல்ல  வில்லை.  உடனே  காளி கோயிலுக்குச் சென்றார்;

காளியை வணங்கினார். தம் ஆசிரியர்க்குப் பிழை செய்ததாகக் கருதி, அப் பிழை நீங்க அருள்புரிய வேண்டிக் காளியை வாழ்த்தினார்; காளிதேவி அவருக்கு நேரில் காட்சியளித்து அருள் புரிந்தார் காளியின் அருளால் பாடல் இயற்றும் திறனும் பெற்றார்.  அக்  கொல்லையின்  பயிர்  அக் குதிரையால் அழிவுற்றதற்குச் சினந்து,

 ‘வாய்த்த வயிரபுர மாகாளி அம்மையே

ஆய்த்த மணலில் அணிவரையில் – காய்த்த

கதிரைமா ளத்தின்னும் காளிங்கன் ஏறும்

குதிரைமா ளக்கொண்டு போ‘

என்னும்  வெண்பாவைப்  பாடினார்.  குதிரை கீழே வீழ்ந்து இறந்தது.. அதனைக்  கண்ட  அருகிலிருந்தோர் ஆசிரியரிடம்   போய்க் கூறினர். ஆசிரியர் வந்து நேரிற் பார்த்தார்; ‘இது காளிங்கராயன்  குதிரையன்றோ; அவன் அறியின்   என்ன நேரிடுமோ!‘ எனக் கலங்கினார். அதனை அறிந்த பொய்யாமொழிப் புலவர், அவ் வெண்பாவின் ஈற்றடியை மட்டும் ‘குதிரைமீ ளக்கொண்டு வா‘ என்று

மாற்றிப் பாடினார்.  குதிரை உயிர் பெற்றெழுந்தது.   ஆசிரியர்  தம்  அருமை  மாணவரை பாராட்டினார்.

பொதியில் அகத்தியனாய்ப் பொய்யா மொழியாய்ச்

சிதைவில் புலவர் மணியாய்த் – துதிசேரும்

செங்காட்டங் கோட்டத் துறையூர் எனுந்தலத்தில்

தங்காட்டங் கொண்டிருப்பாய் தான்‘

என்னும் வெண்பாப் பாடி அவரை வாழ்த்தி நின்றார்.

***

அன்று  முதல்  ஆசிரியர்  இட்ட  காரணப்  பெயரான,  ‘பொய்யாமொழி‘ என்பதே  பெயராக  வழங்கிற்று.

இவர் காளி   தேவியை மட்டுமே பாடிவந்தார்

ஒருநாள் முருகக் கடவுள் அடியார் கோலத்துடன் வந்து தம்மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று கேட்டார். அதற்குப் புலவர்,

‘கோழியையும் பாடிக்  குஞ்சையும்  பாடுவேனோ‘    என்று    மறுத்துரைத்தார். வேற்றுருவில் வந்த முருகவேள் நாணினார்.

பின்பு பொய்யாமொழி,மதுரைதமிழ்ச் சங்கத்தை  மீண்டும் நிறுவ எண்ணி, மதுரைக்குப் புறப்பட்டார்; வழியில் திருச்சிராப்பள்ளியில் தங்கி, தாயுமானவரைப் போற்றினார்; அவர்மீது கலித்துறை ஒன்று பாடிப் பணிந்தார்.

பின்னர் தன்னந்தனியராக ஒரு காட்டின் வழியே மதுரையை நோக்கிப் புறப்பட்டார். அது கொடிய காடு. வெம்பரற் கற்களும் வேல முட்களும் படர்ந்த வெவ்விய அனல்  கொளுத்தும் காடு.  முருகக் கடவுள்  அங்கே ஒரு  வேட்டுவச் சிறுவன் போல்  இவர் முன் தோன்றினார்.  ‘இவ்வழியாக இக் காட்டில் நீ செல்வது கூடாது,‘ எனக் கூறினார்.

பொய்யாமொழியார்,  ‘நாம் இன்று ஒரு கள்வனிடம்  அகப்பட்டுக் கொண்டோம்‘  என்று  கருதி  அஞ்சி  நின்றார்.

அப்போது முருக வேடன் ‘நீ யார்?‘ என்று கடுகடுத்த குரலுடன் ‘உனக்குப் பாடத் தெரியுமோ?‘  என்று  வினவினார் முருகவேள்.   ‘தெரியும்‘  என்றார்  புலவர்.

 ‘என்மீது ஒரு  பாடல் பாடுக‘ என்று கூறினார். உடனே புலவர்  ‘உன் பெயர் யா‘தெனக் கேட்டனர்.  அப்போது முன்,

‘குஞ்சையும் பாடுவேனோ‘ என்று மொழிந்ததை நினைவாகக் கொண்டு முருகவேள், ‘என் பெயர் முட்டை‘ என்றார். அப்போது புலவர்,

பொன்போலும் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே

என்பேதை செல்லற் கியைந்தனளே – மின்போலும்

மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போம்

கானவேல் முட்டைக்குங் காடு”

என்னும் வெண்பாவைப் பாடினர். இச்செய்யுளைக்   கேட்டுக்கொண்டிருந்த  முருகவேடன்,   ‘இச் செய்யுளிற்

பொருள் குற்றமுளது.  அஃதாவது  கள்ளியே  பொரிந்து  தீயாகி  அதன் பொறி பறக்குங் கானலில் வேல  முட்கள் வெந்தெரிந்து  போகாமல் கிடப்பதெங்ஙனம்?‘ என்று  நகைத்தார்.  யான் பாடும் பாடலைக் கேள்  என்று பொய்யாமொழியார் மீது,

விழுந்ததுளி அந்தரத்தே வேமென்றும் வீழின்

எழுந்து சுடர்சுடுமென் றேங்கிச் – செழுங்கொண்டல்

பெய்யாத கானகத்திற் பெய்வளையும் சென்றனளே

பொய்யா மொழிப்பகைஞர் போல்”

என்னும்  வெண்பாவைப்  பாடினார்.  அப்பால் ‘நீ முன் குஞ்சைப் பாடேனென்று கூறிய  வாயால்  இப்போது  முட்டையைப்  பாடியது  வியப்புக் குரித்தே,‘ என்று கூறினார்.  அப்போது புலவர்,  இவ்வுருவில்  வந்துள்ளோர்   முருகப்பெருமானே எனத் துணிந்தனர்.  தம் பிழையைப்  பொறுத்தருளுமாறு  வேண்டி  வணங்கியவுடன்,  முருகக்  கடவுள்  தம்  தெய்வத்  திருக்கோலத்தைக்  காட்டிப் புலவர் நாவில் வேலால் எழுதி மறைந்தார்

–subham—

Tags- திருப்புகழில், அருணகிரிநாதர் ,அரிய செய்திகள் ,Part 62,

33 வகை தேவர்கள், பொய்யாமொழிப் புலவர் கதை, முருகனுடன் மோதிய புலவர்

விதிக்கு பாரபட்சம் கிடையாது! கர்மபலனை ஒருவன் அனுபவித்தே ஆக வேண்டும்! (Post.15,560)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,560

Date uploaded in London – 1 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம்

விதிக்கு பாரபட்சம் கிடையாது! கர்மபலனை ஒருவன் அனுபவித்தே ஆக வேண்டும்!

ச. நாகராஜன் 

கர்மபலனை அனைவரும் அனுபவிக்க வேண்டும்! 

உத்தானமபிஜானந்தி சர்வபூதானி பாரத |

ப்ரத்யக்ஷம் பலமஷ்னந்தி கர்மணாம் லோகசாக்ஷிகம் ||

மஹாபாரதத்தில் வரும் ஸ்லோகம் இது.

முந்தைய ஜென்மத்தின் உத்வேகத்தின் தூண்டுதலால், எல்ல உயிர்களும் இந்த உலகத்தில் தங்களது கர்மத்தின் பலனை ப்ரத்யக்ஷமாக அனுபவிக்கின்றன.

 மாக கவியின் சிறப்பு! 

உபமா காளிதாஸஸ்ய பாரவேர்த்தகௌரவம் |

தண்டின: பதலாலித்யம் மாகே சந்தி த்ரயோ குணா: || 

உவமை சொல்வதில் திறமை பெற்றவர் காளிதாஸர்.

ஆழ்ந்த அர்த்தம் சொல்வதில் வல்லவர் பாரவி.

சொற்களின் இனிமையால் – பத லாலித்யத்தால் – தண்டி புகழ் பெறுகிறார்.

ஆனால் இந்த மூன்றும் இணைந்து மாக கவியிடம் காணப்படுகின்றன.

தேன் துளியைப் பருகலாமா? 

ஏகைகோசங்க்யஜீவானாம் தாததோ மதுன: கண:|

நிஷ்பத்யதே யதஸ்தேன மத்வஷ்னாதி கதம் புத: || 

ஏராளமான உயிர்களை அழித்தே ஒவ்வொரு தேன் துளியும் பெறப்படுகிறது. இப்படி இருக்கும் போது அறிவாளியான ஒருவன் எப்படி தேனைப் பருகுவான்!

சிங்கம் சிங்கம் தான்! 

ஏன: க்ரீடதி ஷூகரஸ்ச கனதி த்வீபி ச கர்வாயதே

  கோஷ்டா: கந்ததி வல்கதே ச ஷஷ்கோ வேகாத் ருருதார்வதி |

நிஸ் ஷங்க: கரிபோதகஸ்தருலதாமுன்மோடதே லீலயா

   ஹம்ஹோ சிம்ஹ வினா த்வயாத்ய விபினே கீத்ருக்தஷா வர்ததே ||

மான் விளையாடுகிறது. கரடி (இரை தேடி) குழி தோண்டுகிறது.

சிறுத்தை கர்வம் கொள்கிறது. நரி ஊளையிடுகிறது. முயல் துள்ளிக் குதிக்கிறது. ருரு மான்கள் வேகமாக ஓடுகின்றன. எதிர்க்க யாருமின்றி யானைகள் தனது இஷ்டப்படி பயமின்றி மரங்களையும் கொடிகளையும் முறிக்கின்றன; அறுக்கின்றன.

உண்மையாகச் சொல்லப் போனால், ஓ! சிங்கமே! காட்டில் நீ இல்லையென்றால் எந்த மாதிரி நிலைமை இருக்கிறது! 

பாரபட்சம் காட்டாத விதி! 

ஐஸ்வர்யே வா சுவிஸ்தீனே வ்யஸனே வா சுதாருணே |

ரஜ்ஜவேவ புருஷம் பதத்வா க்ருதாந்த: பரிஜர்ஷதி || 

சந்தோஷமாக இருக்கும் பணக்காரர்களையும், துன்பத்தை அனுபவிக்கும் ஏழைகளையும் விதியானது பாரபட்சம் பார்க்காது.  ஒரு கயிறினால் கட்டி இழுப்பது போல அனைவரையும் அது அங்கும் இங்கும் அலைக்கழிக்கிறது.

 **