Written by London Swaminathan
Post No. 15,561
Date uploaded in London – 1 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 62
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 62
***
33 வகை தேவர்கள்
முத்து நவ ரத்ந மணி பத்தி நிறை சத்தி இடம் மொய்த்த கிரி …
முத்தும் நவரத்ன மணிகளும் வரிசையாக விளங்கும் பார்வதி (தமது) இடப் பாகத்தில் நெருங்கி இணைந்துள்ள மலை போன்றவரும்,
முத்தி தரு என ஓதும் முக்கண் இறைவர்க்கும் அருள் வைத்த
முருகக் கடவுள் … முக்திக் கனியை அளிக்கும் மரம் என்றெல்லாம்
ஓதப்படும் முக்கண்களை உடையவருமான சிவபெருமானுக்கும் அருள் பாலித்து உபதேசித்த முருகக் கடவுள்,
முப்பது முவர்க்க சுரர் அடி பேணி … முப்பத்து மூன்று* வகையான
தேவர்களும் (தமது) திருவடியைப் போற்றி விரும்ப,
பத்து முடி தத்தும் வகை உற்ற கணி விட்ட அரி …
(இராவணனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பைச் செலுத்திய (ராமனாகிய) திருமால்,
பற்குனனை வெற்றி பெற ரதம் ஊரும் … அருச்சுனன்
(மகாபாரதப்) போரில் வெற்றி பெறும் வகையில் (கண்ணனாக வந்து)தேரைச் செலுத்திய,
பச்சை நிறம் உற்ற புயல் அச்சம் அற வைத்த பொருள் … பச்சைநிறம் கொண்ட மேக நிறப் பெருமான் ஆகிய திருமால் (சூரபத்மன்,சிங்கமுகன், தாரகன் ஆகிய அசுரர்களிடத்தில் கொண்ட) பயத்தை நீங்கவைத்த முருகக் கடவுளே,
பத்தர் மனது உற்ற சிவம் அருள்வாயே … பக்தர்கள் மனத்தில் பொருந்தி விளங்கும் மங்கலத்தை எனக்கும் அருள் புரிவாயாக.
* முப்பத்து மூன்று வகைத் தேவர்கள் பின்வருமாறு:
ஆதித்தர் 12, ருத்திரர் 11, வசுக்கள் 8, மருத்தவர் 2 – ஆக 33 வகையின.
**
ஒப்பிடுக திருப்பாவை
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்ப முடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணவாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்.
பொருள்
“தேவர் கூட்டத்தையும், அவர்களூக்குத் தலைவர்களாக விளங்கும் முப்பத்துமூன்று தேவர்களையும், இடர்கள் நெருங்குவதற்கு முன்னமே, அவர்கள் அச்சத்தை விலக்கி, காத்தருளும் நாயகனே கண்ணா! கண் விழிப்பாயாக! எடுத்த காரியத்தை நிறைவுறச் செய்பவனே! குற்றமில்லாதவனே! மிக்க வலிமை பொருந்தியவனே! எங்கும் நிறைந்தவனே! பகைவருக்கு துன்பங்களைக் கொடுப்பவனே! உறக்கம் விட்டு எழுவாயாக!
கவிழ்த்த செப்பைப் போன்ற மென்மையான மார்பகங்களையும், சிவந்த உதடுகளைக் கொண்ட வாயையும், மெல்லிய இடையையும் உடைய நப்பின்னை பிராட்டியே! திருமகளைப் போன்றவளே! துயில் விட்டெழுவாய்! எங்கள் நோன்புக்குத் தேவையான ஆலவட்டத்தையும்(விசிறியையும்) கண்ணாடியையும் வழங்கி, உன் கணவனான கண்ணனையும் எங்களுடன் அனுப்பி, நாங்கள் நோன்பு நீராட வழி செய்வாயாக!”
***
இலஞ்சி பற்றிய சிலேடை
புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி
மணவாளா … உன்னைப் புகழ்ந்தும், (உனது ஆற்றலைக்) கண்டு
மகிழ்ந்தும், வணங்கியும் வழிபட்ட குணத்தைக் கொண்ட இந்திரனுடைய
வஞ்சிக் கொடி போன்ற நங்கையாகிய தேவயானையின் கணவனே,
இரும் புன மங்கை பெரும் புளகம் செய் குரும்பை மணந்த
மணி மார்பா … தினைப் புனத்தைக் காத்த மங்கையாகிய வள்ளியின்
நிரம்பப் புளகாங்கிதம் கொண்ட தென்னங் குரும்பை போன்ற மார்பை அணைந்து கலந்த அழகிய மார்பனே,
இலஞ்சியில் வந்த இலஞ்சியம் என்று இலஞ்சி அமர்ந்த
பெருமாளே. … (சரவணக்) குளத்தில் வந்த காரணத்தால் குளவன்
(குளத்தில் உற்பவித்தவன்) என்று திருப் பெயர் கொண்டு, இலஞ்சி*என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* இலஞ்சி தென்காசி ரயில் நிலையத்துக்கு 4 மைலில் உள்ள தலம். குற்றால அருவிக்கு மிக அருகில் உள்ளது.
***
பொய்யாமொழிப் புலவர்
கானில்நடந்த முருகோனே … (பொய்யாமொழிப் புலவர் வரும்)
காட்டில் (வேடனாய்) நடந்த முருகனே,*
கான மடந்தை நாண மொழிந்து … வள்ளி மலைக் காட்டில் இருந்த
பெண்ணாகிய வள்ளி நாணும்படியாக அவளிடம் பேசி,
காதல் இரங்கு குமரேசா … அவள்மீது உனக்கிருந்த காதலை
வெளிப்படுத்திய குமரேசனே,
சோலை வளைந்து சாலி விளைந்து சூழும் இலஞ்சி
மகிழ்வோனே … சோலைகள் சுற்றியும் உள்ள, நெற்பயிர் உள்ள
வயல்கள் விளைந்து சூழ்ந்துள்ள, இலஞ்சி** என்னும் நகரில் (வீற்றிருந்து) மகிழ்ச்சி கொண்டவனே,
சூரியன் அஞ்ச வாரியில் வந்த சூரனை வென்ற பெருமாளே. …
சூரியன் தான் உதிப்பது எப்படி என்று பயப்படும்படியாக, கடலில் நின்று கொண்டிருந்த (மாமரமாகிய) சூரனை வென்ற பெருமாளே.
* சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க, அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக வந்து காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.
பொய்யாமொழிப் புலவர் கதை
இவர் தொண்டை மண்டலத்தில் சைவ வேளாண் குடியில் தோன்றியவர் .இவர் தம் இளமைப் பருவத்தில் வயிரபுரம் என்னும் ஊரில் ஒரு தமிழாசிரியர்பால் கல்வி பயின்று வந்தார். ஒரு நாள் தம் ஆசிரியர் தம் பயிர்க்கொல்லையைக் காத்துவரக் கூறினார். அவ்வாறே சென்று காவல் புரிந்தார்; அப்போது அங்கிருந்த
காளி கோயில் ஒன்றின் மர நிழலில் படுத்துறங்கினார்; அப்போது பயிர்களைக் குதிரையொன்று வந்து மேய்வதாகக் கனவு கண்டார்; உடனே விரைந்து சென்று அக் குதிரையை ஓட்டினார். ஓட்டியும் அது, அப் பயிர் மேய்வதை விட்டுச் செல்ல வில்லை. உடனே காளி கோயிலுக்குச் சென்றார்;
காளியை வணங்கினார். தம் ஆசிரியர்க்குப் பிழை செய்ததாகக் கருதி, அப் பிழை நீங்க அருள்புரிய வேண்டிக் காளியை வாழ்த்தினார்; காளிதேவி அவருக்கு நேரில் காட்சியளித்து அருள் புரிந்தார் காளியின் அருளால் பாடல் இயற்றும் திறனும் பெற்றார். அக் கொல்லையின் பயிர் அக் குதிரையால் அழிவுற்றதற்குச் சினந்து,
‘வாய்த்த வயிரபுர மாகாளி அம்மையே
ஆய்த்த மணலில் அணிவரையில் – காய்த்த
கதிரைமா ளத்தின்னும் காளிங்கன் ஏறும்
குதிரைமா ளக்கொண்டு போ‘
என்னும் வெண்பாவைப் பாடினார். குதிரை கீழே வீழ்ந்து இறந்தது.. அதனைக் கண்ட அருகிலிருந்தோர் ஆசிரியரிடம் போய்க் கூறினர். ஆசிரியர் வந்து நேரிற் பார்த்தார்; ‘இது காளிங்கராயன் குதிரையன்றோ; அவன் அறியின் என்ன நேரிடுமோ!‘ எனக் கலங்கினார். அதனை அறிந்த பொய்யாமொழிப் புலவர், அவ் வெண்பாவின் ஈற்றடியை மட்டும் ‘குதிரைமீ ளக்கொண்டு வா‘ என்று
மாற்றிப் பாடினார். குதிரை உயிர் பெற்றெழுந்தது. ஆசிரியர் தம் அருமை மாணவரை பாராட்டினார்.
‘பொதியில் அகத்தியனாய்ப் பொய்யா மொழியாய்ச்
சிதைவில் புலவர் மணியாய்த் – துதிசேரும்
செங்காட்டங் கோட்டத் துறையூர் எனுந்தலத்தில்
தங்காட்டங் கொண்டிருப்பாய் தான்‘
என்னும் வெண்பாப் பாடி அவரை வாழ்த்தி நின்றார்.
***
அன்று முதல் ஆசிரியர் இட்ட காரணப் பெயரான, ‘பொய்யாமொழி‘ என்பதே பெயராக வழங்கிற்று.
இவர் காளி தேவியை மட்டுமே பாடிவந்தார்
ஒருநாள் முருகக் கடவுள் அடியார் கோலத்துடன் வந்து தம்மீது ஒரு பாடல் பாட வேண்டுமென்று கேட்டார். அதற்குப் புலவர்,
‘கோழியையும் பாடிக் குஞ்சையும் பாடுவேனோ‘ என்று மறுத்துரைத்தார். வேற்றுருவில் வந்த முருகவேள் நாணினார்.
பின்பு பொய்யாமொழி,மதுரைதமிழ்ச் சங்கத்தை மீண்டும் நிறுவ எண்ணி, மதுரைக்குப் புறப்பட்டார்; வழியில் திருச்சிராப்பள்ளியில் தங்கி, தாயுமானவரைப் போற்றினார்; அவர்மீது கலித்துறை ஒன்று பாடிப் பணிந்தார்.
பின்னர் தன்னந்தனியராக ஒரு காட்டின் வழியே மதுரையை நோக்கிப் புறப்பட்டார். அது கொடிய காடு. வெம்பரற் கற்களும் வேல முட்களும் படர்ந்த வெவ்விய அனல் கொளுத்தும் காடு. முருகக் கடவுள் அங்கே ஒரு வேட்டுவச் சிறுவன் போல் இவர் முன் தோன்றினார். ‘இவ்வழியாக இக் காட்டில் நீ செல்வது கூடாது,‘ எனக் கூறினார்.
பொய்யாமொழியார், ‘நாம் இன்று ஒரு கள்வனிடம் அகப்பட்டுக் கொண்டோம்‘ என்று கருதி அஞ்சி நின்றார்.
அப்போது முருக வேடன் ‘நீ யார்?‘ என்று கடுகடுத்த குரலுடன் ‘உனக்குப் பாடத் தெரியுமோ?‘ என்று வினவினார் முருகவேள். ‘தெரியும்‘ என்றார் புலவர்.
‘என்மீது ஒரு பாடல் பாடுக‘ என்று கூறினார். உடனே புலவர் ‘உன் பெயர் யா‘தெனக் கேட்டனர். அப்போது முன்,
‘குஞ்சையும் பாடுவேனோ‘ என்று மொழிந்ததை நினைவாகக் கொண்டு முருகவேள், ‘என் பெயர் முட்டை‘ என்றார். அப்போது புலவர்,
“பொன்போலும் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே
என்பேதை செல்லற் கியைந்தனளே – மின்போலும்
மானவேல் முட்டைக்கு மாறாய தெவ்வர்போம்
கானவேல் முட்டைக்குங் காடு”
என்னும் வெண்பாவைப் பாடினர். இச்செய்யுளைக் கேட்டுக்கொண்டிருந்த முருகவேடன், ‘இச் செய்யுளிற்
பொருள் குற்றமுளது. அஃதாவது கள்ளியே பொரிந்து தீயாகி அதன் பொறி பறக்குங் கானலில் வேல முட்கள் வெந்தெரிந்து போகாமல் கிடப்பதெங்ஙனம்?‘ என்று நகைத்தார். யான் பாடும் பாடலைக் கேள் என்று பொய்யாமொழியார் மீது,
“விழுந்ததுளி அந்தரத்தே வேமென்றும் வீழின்
எழுந்து சுடர்சுடுமென் றேங்கிச் – செழுங்கொண்டல்
பெய்யாத கானகத்திற் பெய்வளையும் சென்றனளே
பொய்யா மொழிப்பகைஞர் போல்”
என்னும் வெண்பாவைப் பாடினார். அப்பால் ‘நீ முன் குஞ்சைப் பாடேனென்று கூறிய வாயால் இப்போது முட்டையைப் பாடியது வியப்புக் குரித்தே,‘ என்று கூறினார். அப்போது புலவர், இவ்வுருவில் வந்துள்ளோர் முருகப்பெருமானே எனத் துணிந்தனர். தம் பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டி வணங்கியவுடன், முருகக் கடவுள் தம் தெய்வத் திருக்கோலத்தைக் காட்டிப் புலவர் நாவில் வேலால் எழுதி மறைந்தார்
–subham—
Tags- திருப்புகழில், அருணகிரிநாதர் ,அரிய செய்திகள் ,Part 62,
33 வகை தேவர்கள், பொய்யாமொழிப் புலவர் கதை, முருகனுடன் மோதிய புலவர்