வாஞ்சிநாதனை தரிசித்தேன் (Post No.15,562)

Written by London Swaminathan

Post No. 15,562

Date uploaded in London – 1 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

முதல் தடவையாக 6-3-2026 அன்று ஸ்ரீவாஞ்சியத்துக்குச் சென்று வாஞ்சிநாதனை தரிசித்தேன். ஸ்ரீவாஞ்சியம் (Srivanchiyam) தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலத்திற்கு அருகில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற சிவஸ்தலமாகும்.  இங்கு, எமதர்மராஜனுக்கு தனி சன்னதி உள்ளது அவன் சிவபெருமானை வணங்கிய தலம்.

இறைவன் பெயர் -வாஞ்சிநாதர்

இறைவியின் பெயர் -மங்களாம்பிகை

தீர்த்தம்: குப்த கங்கை.

தல மரம்:  சந்தன மரம் (Sandalwood Tree)   வழிபட்டோர்:சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேக்கிழார், திருமால், பிரமன், யமன், இந்திரன், பராசரர், அத்ரி முதலியோர்.

சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரம் படியிருப்பதால் குறைந்தது 1400 ஆண்டுகளுக்கு முன்னரே புகழ்பெற்றது தெளிவாகிறது . அப்பர் , சம்பந்தர் மஹேந்திர பல்லவன் (600 CE) காலத்தில் வாழ்ந்தவர்கள்.

இறைவன் திருக்கயிலையிலிருந்து இத்தலத்திற்கு வந்ததால், அம்பிகைக்கு  “வாழ வந்த நாயகி” என்ற பெயர். பராசர முனிவர் ,அத்திரி முனிவர், உரோமச முனிவர் நீராடியது பற்றிய கதைகள் தல புராணத்தில் உள்ளன.   பூமகள், திருமகள் இருவர்க்கும் ஏற்பட்ட பிணக்கால் திருமகள் திருமாலை விட்டுப் பிரிந்தாள் என்றும், திருமால் திருவாஞ்சியத்தை அடைந்து இவ்விறைவனை வழிபட்டு, திருமகளை வாஞ்சித்துப் பெற்றதால் திருவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது என்றும் தலபுராணம் கூறுகிறது.

மகுடவர்த்தனன் என்னும் மன்னன் பகைவர்களால் உண்டாகும் அச்சம் நீங்கப்பெற்றான். மகாதனு என்ற மன்னன் அரக்க உருவம் நீங்கி மகிழ்ச்சி அடைந்தான். இவ்வாறு தல புராணம் பல கதைகளைச்  சொல்கிறது.

எமன் பற்றி தலபுராணம் கூறும் தகவல்

யமன் எல்லா உயிர்களையும் கவரும் தன் பாவம் தீர இத்தலத்து இறைவரை வழிபட்டுப் பாவம் நீங்கப்பெற்று, இவ்விறைவனுக்கு வாகனமாகும் பேற்றையும் பெற்றான். யமனுக்கு மூலஸ்தானம் தனியே உள்ளது.  யமனுக்கு இறைவன் காட்சி கொடுத்த  திருவிழா மாசி மாதம் பரணியில் நிகழ்கின்றது.

திருவாஞ்சியம் – சம்பந்தர் தேவாரம்

வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்

பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார்

தென்ன வென்று வரிவண்டு இசைசெய் திருவாஞ்சியம்

என்னையாளுடையான் இடமாக உகந்ததே.

***

அப்பர் தேவாரப்பாடல்

படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்-

உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம்,

புடை நிலாவிய பூம்பொழில், வாஞ்சியம்

அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே.

அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள்

திருத்தும் சேவடியான் திகழும் நகர்

ஒருத்தி பாகம் உகந்தவன், வாஞ்சியம்

அருத்தியால் அடைவார்க்கு இல்லை, அல்லலே.

***

சுந்தரர் தேவாரப்பாடல்

பொருவனார்; புரிநூலர்; புணர் முலை உமையவளோடு

மருவனார்; மருவார் பால் வருவதும் இல்லை, நம் அடிகள்;

திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்

ஒருவனார்; அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே

***

நான் சென்றபோது கூட்டம் இல்லை. திருப்புகலூரில் தரிசனத்தை முடித்துக்கொண்டு இங்கு வந்தேன். பல புகைப்படங்களையும் எடுத்தேன்; இணைப்பில் காண்க .

காசிக்கு நிகராக ஆறு திருத்தலங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் இத்தலமும் ஒன்று. ஸ்ரீவாஞ்சியம்  காவிரியின்  தென் கரையில் உள்ளது. இது   காவேரிக்கரையில் உள்ள 6 ஸ்தலங்களைக் காசிக்கு சமமாகச் சொல்வார்கள். அவற்றில் இதுவும் ஒன்று. உண்மையில் இதை ‘காசிக்கு வீசம் (1/16)அதிகம்’ என்றே சொல்வார்கள். [ பிற தலங்கள் :1.திருவையாறு 2. வேதாரண்யம் 3. மயிலாடுதுறை 4. திருவிடைமருதூர் 5. திருவெண்காடு ] கிரகண சமயங்களில் மற்ற அனைத்து கோயில்களும் நடையடைக்கப்படுவது வழக்கம். ஆனால் வாஞ்சியம் திருக்கோயிலில் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனாருக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடத்தப்படுகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை நேரத்தில் ஈசனும், தேவியும் பிரகார வலம் வந்து குப்தகங்கை தீர்த்தக் கிழக்குக் கரையில் பக்தர்களுக்கு ஆசி வழங்கியருள்கின்றனர். திருவாஞ்சியம் கோயில் 3.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி இயமனையும் ஊர்தியாகக் கொண்ட பெருமையுடையவர்.

குப்தகங்கை எனும் இவ்வாலயத் திருக்குளம் சுமார் 440 அடி நீளமுள்ளது. இந்தத் தீர்த்தமும் தொன்மைச் சிறப்புடையது.

·         தேரோட்டம்: மாசி மாத பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, வாஞ்சிநாத சுவாமி மற்றும் மங்களாம்பிகை தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்கள்.

****

இது அருணகிரி நாதர் தரிசித்த 49வது தலம்.

திருப்புகழில் திருவாஞ்சியம்

உபசாந்த சித்த குருகுல

பவபாண்ட வர்க்கு வரதன்மை

யுருவோன்ப்ர சித்த நெடியவன்                      ரிஷிகேசன்

உலகீன்ற பச்சை யுமையணன்

வடவேங்க டத்தி லுறைபவ

னுயர்சார்ங்க சக்ர கரதலன்                               மருகோனே

த்ரிபுராந்த கற்கு வரசுத

ரதிகாந்தன் மைத்து னமுருக

திறல்பூண்ட சுப்ர மணியஷண்                            முகவேலா

திரைபாய்ந்த பத்ம தடவய

லியில்வேந்த முத்தி யருள்தரு

திருவாஞ்சி யத்தி லமரர்கள்                                  பெருமாளே.

இபமாந்தர் சக்ர பதிசெறி

படையாண்டு சக்ர வரிசைக

ளிடவாழ்ந்து திக்கு விசயம                                  ணரசாகி

இறுமாந்து வட்ட வணைமிசை

விரிசார்ந்து வெற்றி மலர்தொடை

யெழிலார்ந்த பட்டி வகைபரி                               மளலேபந்

தபனாங்க ரத்ந வணிகல

னிவைசேர்ந்த விச்சு வடிவது

தமர்சூழ்ந்து மிக்க வுயிர்நழு                               வியபோது

தழல்தாங்கொ ளுத்தி யிடவொரு

பிடிசாம்பல் பட்ட தறிகிலர்

தனவாஞ்சை மிக்கு னடிதொழ                          நினையாரே

–SUBHAM—

TAGS- ஸ்ரீவாஞ்சியம் (Srivanchiyam) , சிவன் கோவில், தேவார தலம்,

வாஞ்சிநாதர், மங்களாம்பிகை, லண்டன் சுவாமிநாதன் படங்கள்

Leave a comment

Leave a comment