

Written by London Swaminathan
Post No. 15,565
Date uploaded in London – 2 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 63
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 63
***
மார்க்கண்டேயன் கதை

தாட்படக் கோபவிஷ பாப்பினில் … கால் பட்டாலே கோபத்துடன் சீறி எழும் விஷப் பாம்பைப் போல
பாலன்மிசை சாய்த்தொடுப் பாரவு … பாலன் மார்க்கண்டேயனிடம்(யமன்) குறிவைத்துத் தொடரவும்,
நிள் கழல்தாவி … தமது நீண்ட திருவடியை நீட்டி
சாற்றும் அக் கோரவுரு கூற்று உதைத்தார் … பாலகனை விடேன் என்று பேசிய அந்தக் கொடிய உருக்கொண்ட யமனை உதைத்த பரமசிவனார்
மவுலி தாழ்க்க … (உன்னிடம் வேத மந்திர உபதேசம் பெறுவதற்காக)தமது முடியைத் தாழ்த்தி வணங்க,
வஜ்ராயுதனும் இமையோரும் ஆட்பட … வஜ்ராயுதனாம்
இந்திரனும், தேவர்களும் உனக்கு ஆட்பட்டு நிற்க,
சாமபர மேட்டியைக் காவலிடும் … பொன்னிறமான பிரம்மனை சிறையிலிட்ட
ஆய்க்குடிக் காவல … ஆய்க்குடி* என்னும் தலத்தில் வீற்றிருக்கும்
அரசனே,
உததிமீதே ஆர்க்கும் அத் தானவரை … கடலிலே போர் புரிந்தஅந்தச் சூரன் முதலிய அசுரர்களையும்,
வேற் கரத் தால்வரையை … திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தால்
அந்த கிரெளஞ்சகிரியையும்
ஆர்ப்பெழச் சாடவல பெருமாளே. … பேரொலி உண்டாகும்படி அழிக்கவல்ல பெருமாளே.
* ஆய்க்குடி தென்காசியிலிருந்து வடகிழக்கே 5 மைலில் உள்ள தலம் – பால் பாயச நிவேதனம் சிறப்பு.
மார்க்கண்டேயன் கதை
சிவபெருமானை வேண்டி 16 வயதிலேயே மரணத்தை வென்ற ஒரு சிறுவனின் பக்தி வரலாறாகும். மிருகண்டு முனிவரின் புதல்வனான மார்க்கண்டேயன், தன் ஆயுள் முடியும் தருவாயில் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரரை சரணடைந்து, எமனின் பாசக்கயிற்றிலிருந்து சிவனால் காப்பாற்றப்பட்டு என்றும் பதினாறு வயதுடைய சிரஞ்சீவியாக வரம் பெற்றார்.
மார்க்கண்டேயன் கதை சுருக்கம்:
பிறப்பு: மிருகண்டு முனிவர் மற்றும் மித்ராவதி தம்பதியினருக்கு, சிவபெருமானின் அருளால் 16 வயது வரை மட்டுமே வாழக்கூடிய ஆனால் அறிவுள்ள புதல்வனாக மார்க்கண்டேயன் பிறந்தார்.
பக்தி: சிறுவயதிலிருந்தே சிவபக்தியில் சிறந்து விளங்கிய மார்க்கண்டேயன், தன் ஆயுள் காலம் முடியும் நாள் வரை தீவிரமான தவத்தில் ஈடுபட்டார்.
எமனின் வருகை: மார்க்கண்டேயனின் 16-வது வயதில், எமதர்மன் அவரது உயிரைப் பறிக்க பாசக்கயிற்றை வீசினார்.
சிவ தரிசனம்: பயப்படாமல் சிவலிங்கத்தைக் கட்டியணைத்து சிவனை வேண்டினார் மார்க்கண்டேயன். எமன் கயிறு லிங்கத்தின் மீதும் விழுந்ததால், கோபமடைந்த சிவபெருமான் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு எமனைத் தன் காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்தார்.
வரம்: சிவபெருமான் மார்க்கண்டேயனுக்கு “என்றும் 16 வயது” உடையவராக நிலைத்து வாழும் வரத்தை அளித்து, எமனை மீண்டும் உயிர்ப்பித்தார்.
இந்தக் கதை, மரணத்தைக் கூட பக்தி மற்றும் சிவ வழிபாடு வெல்லும் என்பதை உணர்த்துகிறது. மேலும், மார்க்கண்டேயர் ஒரு சிரஞ்சீவி (சாகாவரம் பெற்றவர்) என புராணங்கள் கூறுகின்றன.
***
அஷ்டதிக்கஜங்களின் பெயர்கள் என்ன?
திக்(கு) கயம் ஆடச் சிலசில பம்பைத் தத்தன தானத் தடுடுடு
என்கச் செப்பு அறை தாளம் தகு தொகு என்க … எட்டுத்
திக்குகளில் உள்ள யானைகள் (அஷ்ட திக்கஜங்கள்*) அசைந்து
ஆடவும், சிற்சில பறை வகைகள் தத்தன தானத் தடுடுடு என்று
முழங்க, தாளங்கள் செய்யும் ஒலி தகு தொகு என்று ஒலிக்க,
சில பேரி தடி படு சம்பத்து உற்பனமாக … சில முரசு
வாத்தியங்கள் மின்னல் மின்னுவது போலவும், இடி இடிப்பது போலவும் தோற்றம் கொடுக்க,
அற்புத மாகத்து அமரர் புரம் பெற்று உள் செல்வம் மேவிக்
கன மலர் சிந்தத் தொடு வேலா … அற்புதமான விண்ணுலகத்து
தேவர்களின் ஊராகிய பொன்னுலகத்தைத் திரும்பப் பெற்று, அங்கே
உள்ள செல்வங்களையும் அடைந்து பொன் மலர்களைச் சிந்த,
வேலாயுதத்தைச் செலுத்திய வேலனே,
உள் பொருள் ஞானக் குற மகள் உம்பல் சித்திரை நீடப் பரி
மயில் முன் பெற்று … உண்மைப் பொருளை அறிந்த ஞானியாகிய
குற மகள் வள்ளியும், (ஐராவதமாகிய) யானையால் வளர்க்கப்பட்ட அழகிய
தேவயானையும், மேம்பட்ட அந்த வாகனமாகிய மயிலும் விளங்கப் பெற்று,
உத்தர கோசத் தலம் உறை கந்தப் பெருமாளே. … உத்தர கோச
மங்கை** என்ற தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே.
* அஷ்டதிக்கஜங்கள் பின்வருமாறு:
ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புஷ்பதந்தம், சார்வபெளமம், சுப்ரதீபம்.
** உத்தரகோசமங்கை ராமநாதபுரத்துக்கு அருகில் உள்ளது.
***
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கதை
அகப்பட்டுத் தமிழ் தேர்த்த வித்தகர் சமத்துக் கட்டியில்
ஆத்தம் உற்றவன் … தமிழில் வல்ல அறிஞர்களிடத்தில் வசப்பட்டு*1
சாமர்த்தியமான கவியின் ஈற்றடியிலுள்ள இறுதிப் பொருளில் விருப்பம் கொண்டவனும்,
அலைக்குள் கண் செவி மேல் படுக்கையில் உறை மாயன் …
கடலில் (ஆதிசேஷன் என்னும்) பாம்பின் மேல் படுக்கை கொண்டிருக்கும் மாயனுமாகிய திருமாலுக்கு (முனிவர் உருவில் வந்தபோது) உழைக் கண் பொன் கொடி மாக் குலக் குயில் விருப்பு உற்று
புணர் தோள் க்ருபைக் கடல் … (லக்ஷ்மியாகிய) மானின் இடத்தே
பிறந்த அழகிய கொடி போன்ற சிறந்த குயில் அனைய வள்ளியின் மீது காதல் கொண்டு அவளை அணைந்த தோளை உடைய கருணைக் கடலே,
உறிக்குள் கைத்தல நீட்டும் அச்சுதன் மருகோனே …
உறிக்குள்ளே கையை நீட்டிய (வெண்ணெய் திருடிய) கண்ணனின்
மருகனே,
உரைக்கச் செட்டியனாய் பன் முத்தமிழ் மதித்திட்டு …
உண்மைப் பொருளைத் தெரிவிக்க (ருத்திர சன்மன் என்னும்)
செட்டியாக*2 பல சங்கப் புலவர்கள் கூறிய தமிழ்ப் பொருள்களை
ஆராய்ந்து மதித்து,
செறி நால் கவிப்பணர் ஒடுக்கத்துச் செறிவாய்த் தலத்து உறை
பெருமாளே. … நிறைந்த நால்வகைக் கவிகளிலும்*3 வல்ல கவிகளுடன் சேர்ந்து, ஒடுக்கத்து செறிவாய்*4 என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
(*1) திருமழிசை ஆழ்வாரின் சீடனாகிய கணிகண்டனுக்காக காஞ்சீபுரத்து வரதராஜப் பெருமாள் ஊரை விட்டு ஆழ்வார் பின் சென்ற வரலாற்றைக் குறிக்கும். ஆழ்வாரின் விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு, அவரது கவியின் ஈற்றடியில் வசப்பட்டு, காஞ்சியிலிருந்து வெளியேறியும் மீண்டும் குடியேறியும் செய்ததனால் பெருமாளுக்குச் சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது.
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கதை:
திருமழிசை ஆழ்வார் காஞ்சிபுரத்தில் வசித்து வந்தபோது, அவருடன் கனிவண்ணன் என்ற சீடரும் வசித்து வந்தார். கனிவண்ணன் மீது பெருமாள் மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.
கனிவண்ணனின் பக்தியை கண்டு பொறாமை கொண்ட பல்லவ மன்னன், அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு கட்டளையிட்டான்.
தன் சீடனுடன் பெருமாளும் பிரிந்து செல்வார் என்பதை அறிந்த திருமழிசை ஆழ்வார், “கனிவண்ணன் போகும்போது நீயும் (பெருமாள்) சயனக் கோலத்தை விட்டு, பாம்புப் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு என்னுடன் வா” என்று வேண்டினார்.
ஆழ்வார் சொன்னபடியே, பெருமாள் சயனத்தில் இருந்து எழுந்து, ஆதிசேஷன் மீது அமர்ந்து, கனிவண்ணனுடன் காஞ்சிபுரத்தை விட்டு வெளியேறினார்.
பெருமாள் சென்றதால் காஞ்சிபுரம் அழகு இழந்து, இருண்டு பாழானது. இதைக் கண்ட மன்னன் தவறை உணர்ந்து, ஆழ்வாரிடம் மன்னிப்பு கேட்டு, மீண்டும் பெருமாளையும், கனிவண்ணனையும் திரும்ப அழைத்துவருமாறு வேண்டினான்.
ஆழ்வார், “சொன்ன வண்ணம் செய்த பெருமாளே! மீண்டும் வந்து பள்ளி கொள்ளும்” என்று வேண்ட, பெருமாள் மீண்டும் திருவெக்காவில் சயனக் கோலத்தில் அருளினார்.
யதோக்தகாரி: சம்ஸ்கிருதத்தில் ‘யதா’ (எப்படி) + ‘உக்த’ (சொல்லப்பட்டது) + ‘காரி’ (செய்பவர்) – சொன்ன வண்ணம் செய்தவர்.
“கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி மணிவண்ணா நீ கிடக்க வேண்டா!
துணிவுடைய செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன் பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்”.– என்று திருமழிசை ஆழ்வார் பாடினார். இந்தப் பாடலைக் கேட்ட பெருமாள் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு ஆழ்வாரைப் பின்தொடர்ந்து சென்றார், இதனால் காஞ்சி மாநகரம் இருண்டது.
“என் மாணவன் கணிகண்ணன் போகிறான், அவனுடன் நானும் போகிறேன், காஞ்சி நகரத்து மணிவண்ணா! நீயும் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு வா” என்று திருமாலுக்குக் கட்டளையிடுகிறார் ஆழ்வார்.
அரசனும், தம் தவறுணர்ந்து தன் அமைச்சர்களோடு ஆழ்வாரைப் பின் தொடர்ந்து, “ஒரிர விருக்கை’ என்ற ஊரிலே திருமழிசை யாழ்வார், கணிகண்ணன் ஆகிய இருவரையும் கண்டு, காலில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கோரினன். ஆழ்வாரும் உள்ளம் நெகிழ்ந்து, தாம் சொன்ன வண்ணமே தமிழ்ப் பாட்டிற்குத் தலைசாய்த்த பெருமாளைப் பார்த்து,
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி மணிவண்ணு நீ கிடக்க வேண்டும்-துணிவுடைய செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன் பைங்காகப் பாய்படுத்துக் கொள்
என்ற அளவிலே, திருமால் மீண்டும் பழைய இடத்தில் எழுந் தருளினர் .
—subham—
Tags- கணிகண்ணன் போகின்றான், திருமழிசை ஆழ்வார், சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கதை, மார்க்கண்டேயன் கதை