WRITTEN BY R. SESHADRINATHAN
Post No. 15,569
Date uploaded in London – 3 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
(ஆர், சேஷாத்ரிநாதன்)
ஹனுமனின் பிராமண வேடம்
இங்கு ஒரு கேள்வி எழலாம். சுக்ரீவன் ஹனுமனை ஒரு பிராம்மண பிரம்மச்சாரியாக அனுப்புவதன் காரணம் என்ன? இராமன் மற்றும் இலக்ஷ்மணன் இருவரும் வில் மற்றும் ஆயுதங்கள் ஏந்தி இருந்தனர். இடுப்பில் அம்புறாத்தூணி கட்டப்பட்டிருந்தது. அவர்களின் உறுதியான நடை அவர்களை கண்ணியமான அரச வீரர்களாகக் காட்டியது. உன்னதமான போர் வீரரர்கள் போல் தெரிந்தனர். எந்த நோக்கத்துடன் அவர்கள் வந்துள்ளனர் என்று தெரியாத நிலையில் சுக்ரீவன் ஆபத்தை எதிர்கொள்ள விரும்பாததால் மிக்கக் கவனமாக இருந்தான்.
பொதுவாக மனிதர்கள் வானரங்களுடன் நட்புடன் இருப்பதில்லை. அதனால் ஹனுமனை ஒரு பிராம்மண பிரமச்சாரி வேடம் அணிந்து செல்லச் சொன்னான். காரணம் அரச குடும்பத்தினர் பிராமணர்களை மதிப்பவர்கள் . அவர்களை நம்புவபர்கள். ஆகவே ஹனுமனை ஒரு பிராம்மண மாணவனாக அனுப்பினால் அந்த அன்னியர்கள் தீங்கு விளைவிக்கும் வாய்ப்புகள் குறைவு..
மீண்டும் ஒரு கேள்வி. சுக்ரீவன் ஹனுமனை ஏன் வயதான் பிராம்மணனாக அனுப்பாமல் இளம் பிரம்மச்சாரி மாணவனாக அனுப்புகிறான்? இராமனும் இலக்ஷ்மணனும் இருந்த பகுதி கொடிய மிருகங்கள் இருக்கும் அடர்த்தியான காடு. நகரத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ளது. அங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனிதர்கள் வாழ்வதற்க்கான அறிகுறி ஏதும் இல்லை. பொதுவாக வயதான் பிராமணர்கள் எதற்க்காக வருவர்? தான தருமம் மற்றும் உணவு கேட்டு வருவர். யாருமே இல்லாத இடத்தில், வயதான பிராமணர் வந்தால் இராம இலக்ஷ்மனர்களுக்கு சந்தேகம் வர வாய்ப்பு உண்டு.
ஆனால் இளம் பிராமண மாணவன் வந்தால் அவர்களுக்கு சந்தேகம் வர வாய்ப்பில்லை. காரணம் அந்தக் காலக் கட்டத்தில் கல்வி கற்பதற்காகவும், நல்ல குருவைத் தேடியும் மாணவர்கள் காடு, மலை இவற்றை எல்லாம் பொருட் படுத்தாமல் சென்று கல்வி கற்றனர். ஆதலால் ஹனுமன் இளம் பிராமண மாணவனாகச் சென்றால் அவர்களுக்குச் சந்தேகம் வராது என்று முடிவு செய்து அவ்வாறு செய்தான் சுக்ரீவன். மேலும் ஒரு இளம் மாணாக்கன் தவறு செய்தால் பெரியவர்கள் அதைப் பொருட்படுத்தமாட்டார்கள். மேலும் இளம் மாணாக்கன் தன்னைவிட வயது கூடியவர்களிடம் வணங்கி மரியாதை செய்தால், அவர்களும் மாணாக்கனது நல்ல குணத்தைப் பார்த்து பதிலுக்கு மரியாதை செலுத்துவதுடன் அந்த மாணாக்கனிடம் விஷயங்களையும் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பும் அதிகம் என்று சுக்ரீவன் எண்ணினான் என்னவிதமான ஒரு முன் யோசனை?
ஹனுமன் அவதாரம்
இங்கு ஹனுமானைப் பற்றி நாம் பார்த்து விடலாம்.
ஹனுமன் காற்றின் கடவுளான வாயுவின் புதல்வன். ஹனுமனின் பிறப்பைப் பற்றி பல கதைகள் உள்ளன.
புஞ்சிகாஸ்தல ஒரு மோகினி அவள் குரு பிரஹஸ்பதியின் வேலைக்காரி. ஒரு நாள் அவள் ஒரு தோட்டத்தில் தனது குருவுக்காக பூக்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபோது, இளைஞர்களும் பெண்களும் கூட்டமாக காம விளையாட்டுகளுக்காகத் தோட்டத்திற்கு வந்தனர். அவர்கள் தோட்டத்தில் ஜோடிகளாக சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர், அனைத்து வகையான சிற்றின்பச் செயல்களைச் செய்தனர், புஞ்சிகாஸ்தலா அவர்களன் செயல்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். இதேபோன்ற வாழ்க்கையை அனுபவிக்கக் கணவன் இல்லாத தனது துயரமான நிலையைப் பற்றி சிந்தித்து அவள் ஆஸ்ரமதிற்குத் திரும்பினாள். அவள் ஆஸ்ரமத்திற்குத் திரும்பியபோது மனமெங்கும் காமம் நிறைந்திருந்தாள்.
தனது குரு பிரஹஸ்பதியைப் பார்த்ததும் அவள் அவரது கையைப் பிடித்து தனது காமத்தைத் திருப்திப்படுத்துமாறு கெஞ்சினாள். இந்த முறையற்ற வேண்டுகோளைக் கேட்டுக் கோபமடைந்த பிரஹஸ்பதி அவளைச் சபித்தார், “உன் மனதில் அழுக்கு நிறைந்துள்ளது. . பிறருடைய காம விளையாட்டுகளைப் பார்த்துக் காம வெறி பிடித்து அலைகிறாய். . நீ குரங்காக பிறக்கக் கடவாய்.. இந்த ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறு” என்றார்.
புஞ்சிகாஸ்தலா சுயநினைவுக்கு வந்து, தனது அவசரச் செயலுக்கு வருத்தம் தெரிவித்து, சாபத்திலிருந்து விடுதலை அளிக்குமாறு தனது குருவிடம் மன்றாடினாள். பிரஹஸ்பதி அவள் மீது பரிதாபப்பட்டு, “நீ மிகவும் விரும்பும் ஒரு காதலனுடன் போய் உன் முழு பாலியல் வாழ்க்கையை அனுபவித்து மகிழு. அப்பொழுது சிவனின் உயிர்ச்சக்தியிலிருந்து ஒரு மகன் கிடைக்கும். அந்த மகன் பிறக்கும்போது நீ சாபத்திலிருந்து விடுதலையாகி, பரலோகத்திற்குச் செல்வாய்” என்றார்.
அவள் உடனடியாக அஞ்சனா என்ற குரங்குப் பெண்ணாக மாறி அந்த பெயரில் ஒரு காட்டில் வாழத் தொடங்கினாள். அங்கு கேசரி என்ற குரங்குச் சிறுவனைக் காதலித்துப் பல ஆண்டுகள் காம வாழ்க்கையை அனுபவித்து வந்தாள். பல வருடங்களுக்குப் பிறகும் அவளுக்கு குழந்தை பிறக்கவில்லை, பின்னர் அவள் ஒரு குழந்தைக்காக சிவனிடம் பிரார்த்தனை செய்தாள்.
அந்த நேரத்தில்தான் பார்வதியும் பரமேஸ்வரரும் குரங்குகள் வடிவில் அன்பு விளையாட்டுகளை விளையாடினர், பார்வதி கர்ப்பமானார். பார்வதி ஒரு குரங்குக் குழந்தையின் தாயாக இருக்க தயக்கம் காட்டினார், பின்னர் சிவன் தனது தெய்வீக சக்திகளால் தனது விந்தணுவை வாயுபகவான் (காற்றின் கடவுள்) மூலம் அஞ்சனாவின் கருப்பையில் செலுத்தினார், அவர் அப்போது ஒரு குழந்தைக்காக அவரிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். இதை நாரதன் மூலம் அறிந்து, அஞ்சனவுக்கு அத்தகைய குரங்கு பிறந்தால் குரங்குகள் மீதான தனது பிரபுத்துவம் இழந்துவிடுமோ என்று அஞ்சிய வாயு அஞ்சனாவின் வயிற்றில் பஞ்சலோஹ (ஐந்து உலோகங்கள்) உருகிய திரவத்தை ஊற்றினார். அஞ்சனா சிறிதளவுகூட காயமடையவில்லை, அவள் சரியான நேரத்தில் ஒரு குரங்கின் தோற்றத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்தாள், அவர் இராம-ராவண மோதலின் உயிர் சக்தியான புகழ்பெற்ற ஹனுமன் ஆனார். Ref: Puranic Encyclopedia by Vettam Mani page no.615)
மற்றொரு கதை
புஞ்சிகாஸ்தலா என்ற ஒரு அப்சரஸ் குஞ்ஜர் என்ற குரங்கின் மகளாகப் பிறந்தாள். அவள் பெயர் அஞ்சனா., அவள் கேசரியை மணந்தாள். ஒரு நாள் அஞ்சனா ஒரு மனிதப் பெண் வடிவத்தை எடுத்தாள்., தன்னை அலங்காரங்களாலும், சிறந்த மலர் மாலைகளாலும் அலங்கரித்துக் கொண்டாள், சுற்றிலும் பரவியிருந்த இயற்கையின் அழகை ரசிக்க ஒரு மலையின் உச்சிக்குச் சென்றாள்.அவளுடைய மயக்கும் அழகு காற்றுக் கடவுளின் கவனத்தை ஈர்த்தது, அவர் அவளைத் தழுவினார். (அவளைச் சுற்றிலும் சுழன்ற ஒரு மென்மையான, இனிமையான மற்றும் மணம் மிக்க காற்றின் வடிவத்தில், அவளை எல்லா பக்கங்களிலிருந்தும் சூழ்ந்து கொண்டார்).
இந்த அணைப்பின் விளைவாக, அஞ்சனா ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். காற்றுக் கடவுளின் அனைத்து சிறந்த நற்பண்புகளையும் கொண்டிருந்ததது அந்தக் குழந்தை.: அற்புதமான சக்திகளைக் கொண்டிருந்தது. அபார வலிமை, வீரம் மற்றும் துணிச்சல், புத்திசாலித்தனம் நல்ல ஞானம் கொண்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு இணையாக வேறு எவரும் இல்லை., தெய்வீக ஒளியைப் போல அதனிடமிருந்து பிரகாசம் வெளிப்பட்டது, அக்குழந்தை மகிமை மற்றும் சிறப்பின் உருவகப்படுத்தப்பட்ட வடிவம். அதனால் தான் அவரை வாயு புத்திரன் என்று அழைக்கின்றனர்.
பல புராணங்கள் ஹனுமனை சிவபெருமானின் வெளிப்பாடு (manifestation) என்று சொல்கின்றன. அதாவது ஹனுமன் ருத்ரனின் அம்சமாகப் பார்க்கப்படுகிறார். இதற்கான கதைதான் மேலே சொல்லப்பட்டுள்ளது. சிவமகா புராணத்தில் இதை சற்று வித்தியாசமாகச் சொல்லி உள்ளனர்.
एकस्मिन्समये शम्भुरद्भुतोतिकरः प्रभुः। ददर्श मोहिनीरूपं विष्णोः स हि वसद्गुणः॥ ३॥
चक्रे स्वं क्षुभितं शम्भुः कामबाणहतो यथा। स्वं वीर्यमपातयामास रामकार्यार्थमीश्वरः॥ ४॥
तद्वीर्यं स्थापयामासुः पत्रे सप्तर्षयश्च ते। प्रेरिता मनसा तेन रामकार्यार्थमादरात्॥ ५॥
तैर्गौतमसुतायां तद्वीर्यं शम्भोर्महर्षिभिः। कर्णद्वारा तथाञ्जन्यां रामकार्यार्थमाहितम्॥ ६
அதாவது நந்தி பகவான் ராமபிரானுக்கு எந்தெந்த வழிகளில் சிவபெருமான் உதவினார் என்று இந்த நிகழ்வைச் சொல்கிறார்.. இது சிவபுராணத்தில் உள்ளது. அதாவது ஹனுமனின் தாயாரான அஞ்சனா தேவி தனக்கு சிவனைப் போன்ற புதல்வன் வேண்டும் சிவனை நோக்கி தவம் செய்ய சிவனும் அகமகிழ்ந்து தனது பதினோராவது ஸ்வரூபமான ருத்ர அவதாரமாக பிள்ளை பிறப்பான் என்று வரமளிக்கிறார்.
ஒரு நாள் சிவபெருமான் விஷ்ணுவின் மோகினி அவதாரத்தில் மயங்கி நிற்கிறார். மன்மதன் அம்புகளை எய்ய காமவயப்பட்ட சிவன் தனது வீரியத்தை (விந்தை) வெளியிட (அதாவது இராவணனைக் கொல்லும் முயற்சியில் இராமனுக்கு உதவுவதற்காக அதைச் செய்ய) இதை அறிந்த ஏழு முனிவர்கள் அதை ஒரு இலையில் ஏந்தி கௌதம முனிவரின் மகளான அஞ்சனா தேவியின் காதின் மூலம் உள்ளே செலுத்தினர்.. உரிய நேரம் வந்ததும் ருத்ர ஸ்வரூபத்துடன் சிவபெருமான் வானர உடலுடன் ஹனுமனாக அவதரித்தார்.
துளசிதாசரும் தனது ஹனுமான் சாலிசா வில் ஹனுமான் சிவனின் ஒளி பொருந்திய அவதாரம் என்று குறிப்பிடுகிறார்.
शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महा जग वंदन
ஸ்கந்த புராணத்தின் எட்டாவது அத்யாயத்தில் ஹனுமனை நந்தி பகவானின் அவதாரம் என்று கூறப்பட்டுள்ளது. நந்தியும் சிவனின் ஒரு அம்சம்தானே.
“हरिणा प्रार्थितो नन्दी रामकार्यचिकीर्षया।
हनूमन्तं हरिरूपं ससर्ज कपिकुञ्जरम्॥”
மும்மூர்த்திகளில் மூன்று கடவுள்கள் உள்ளனர். அதாவது பிரம்மா படைப்பாளர். விஷ்ணு படைப்பைப் பேணுபவர் மற்றும் பாதுகாவலர். அதை நேரம் வரும்போது முடிவுக்கு கொண்டுவருபவர் சிவ பெருமான். இராமாயணக் கதையில் விஷ்ணு அயோத்தி அரசின் இளவரசன் இராமனாக அவதாரம் எடுத்தார். பிரம்மா கரடிகளின் சமூகத்தின் வயதான புத்திசாலியான தலைவன் ஜாம்பவனாக அவதாரம் எடுத்தார். கிஷ்கிந்தாவில் சிவபெருமான் ஹனுமனாக அவதாரம் எடுத்தார். அவர் இராமனின் தீவிரமான மற்றும் உண்மையுள்ள பக்தர் மற்றும் சுக்ரீவனின் தலைமை ஆலோசகர்களில் ஒருவர் அதாவது சிவபெருமான் இராமனுக்குச் சேவை செய்யவேண்டிய நேரம் வந்தபோது அந்த வாய்ப்பை இழக்க விரும்பாமல் ஹனுமனாக பூமியில் அவதரித்தார்.
தனது அன்பான இறைவனுக்கு உதவியாக இருப்பதற்கும், அவருக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்வதற்கும் ஒரு வாய்ப்பு, மற்றும் இந்த பணியில், இராமனுக்கு முழு பாதுகாப்பை வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதற்காகவும் ஹனுமனாக அவதரித்தார் சிவ பெருமான். உண்மையில் ஹனுமன் தான் அசுர மன்னனால் கடத்தப்பட்ட இராமனின் மனைவி சீதையை இலங்கைச் சிறையில் கண்டுபிடித்தவன். கிஷ்கிந்தையின் குரங்குகள் மற்றும் கரடிகளைக் கொண்ட வானரப் படைகள் இராவணனின் படைகளுடன் போரிட்ட போது அதில் வெற்றி கிடைத்திட முக்கிய பங்கு ஆற்றியவன் ஹனுமன்.
** தொடரும்