
Written by London Swaminathan
Post No. 15,579
Date uploaded in London – 5 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 66
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 66
***
நவ நாத சித்தர்கள் குகையில் உள்ளனர் ; வியாசருக்கு பிள்ளையார் உதவி
குகையில்நவ நாத ருஞ்சி றந்த
முகைவனச சாத னுந்த யங்கு
குணமுமசு ரேச ருந்த ரங்க …… முரல்வேதக்
குரகதபு ராரி யும்ப்ர சண்ட
மரகதமு ராரி யுஞ்செ யங்கொள்
குலிசகைவ லாரி யுங்கொ டுங்க …… ணறநூலும்
அகலியபு ராண மும்ப்ர பஞ்ச
சகலகலை நூல்க ளும்ப ரந்த
அருமறைய நேக முங்கு விந்தும் …… அறியாத
அறிவுமறி யாமை யுங்க டந்த
அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன்
அருணசர ணார விந்த மென்று …… அடைவேனோ
பகைகொள்துரி யோத னன்பி றந்து
படைபொருத பார தந்தெ ரிந்து
பரியதொரு கோடு கொண்டு சண்ட …… வரைமீதே
பழுதறவி யாச னன்றி யம்ப
எழுதியவி நாய கன்சி வந்த
பவளமத யானை பின்பு வந்த …… முருகோனே
மிகுதமர சாக ரங்க லங்க
எழுசிகர பூத ரங்கு லுங்க
விபரிதநி சாச ரன்தி யங்க …… அமராடி
விபுதர்குல வேழ மங்கை துங்க
பரிமளப டீர கும்ப விம்ப
ம்ருகமதப யோத ரம்பு ணர்ந்த …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
குகையில்நவ நாதரும் … குகையில் தவம் புரியும் நவநாதராகிய*
பெருஞ்சித்தர்களும்,
சிறந்த முகை வனச சாதனும் … திருமாலின் தொப்புளாம் தாமரை
மொட்டில் தோன்றிய பிரமனும்,
தயங்கு குணமும் … விளங்கும் ( த்வம், ரஜோ, தாம ம் ஆகிய)
முக்குணங்களும்,
அசுரேசரும் … அசுரரின் தலைவர்களும்,
தரங்க முரல்வேதக் குரகத புராரியும் … அலைகடல் போல்
ஒலிக்கும் வேதங்களை நான்கு குதிரைகளாகப் பூட்டி திரிபுரத்தை
அழித்த சிவபிரானும்,
ப்ரசண்ட மரகத முராரியும் … வீரம் மிகுந்த, மரகதப்பச்சை
வண்ணனானவனும், முரன் என்ற அசுரனைக் கொன்ற முராரியாம்
திருமாலும்,
செயங்கொள் குலிச கை வலாரியும் … வெற்றி பெற்ற
வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தி வலன் என்ற அசுரனைக் கொன்ற
இந்திரனும்,
கொடுங்கண் அறநூலும் … கடுமையான விதிகளை வகுக்கும்
சாஸ்திர நூல்களும்,
அகலிய புராணமும் … விரிவான புராணங்களும்,
ப்ரபஞ்ச சகலகலை நூல்களும் … உலகிலுள்ள எல்லாக் கலை
நூல்களும்,
பரந்த அருமறை யநேகமும் … விரிந்துள்ள வேதநூல்கள் பலவும்,
குவிந்தும் அறியாத … இவை யாவும் ஒன்று கூடிச் சேர்ந்து முயன்று தேடியும் அறிய முடியாத,
அறிவும் அறியாமையுங் கடந்த … அறிவு, அறியாமை ஆகிய
இரண்டுக்கும் அப்பால் உள்ள
அறிவு திருமேனி யென்று உணர்ந்து … அறிவொளி எதுவோ
அதுவே உன் திருமேனி என நான் உணர்ந்து,
உன் அருண சரணாரவிந்தம் என்று அடைவேனோ … உன்
சிவந்த தாமரை மலரன்ன திருவடியை என்று சேர்வேனோ?
பகைகொள்துரி யோதனன்பி றந்து … பகைமையே உருவான
துரியோதனன் தோன்றி
படைபொருத பாரதந்தெரிந்து … படைகளோடு போர் செய்த
மகாபாரத வரலாற்றை அறிந்து,
பரியதொரு கோடு கொண்டு சண்ட வரைமீதே … பருத்த தனது
ஒற்றைத் தந்தத்தால் பெருமலையாம் மேருமலை மீது,
பழுதற வியாசன் அன்றியம்ப … குற்றமற்ற வகையில் வியாச
முநிவர் முன்பொருநாள் சொல்லிவர,
எழுதிய வி நாயகன் … அந்தப் பாரதத்தை எழுதிய விநாயக மூர்த்தி,
சிவந்த பவள மதயானை … சிவந்த பவள நிறத்தைக் கொண்ட
மதயானை முகத்துக் கணபதியின்
பின்பு வந்த முருகோனே … பின்பு, தம்பியாக வந்த முருகனே,
மிகுதமர சாகரம் கலங்க … மிகுந்த ஒலிசெய்யும் கடல் கலங்குமாறும்,
எழுசிகர பூதரம் குலுங்க … ஏழு சிகரங்களை உடைய மலைகள்
யாவும் குலுங்குமாறும்,
விபரித நிசாசரன்தியங்க அமராடி … மாறுபட்ட புத்தியைக்
கொண்ட சூரன் திகைக்கும்படியாகவும் போர் செய்து,
விபுதர்குல வேழ மங்கை … தேவர் குலத்தவளும், யானை
(ஐராவதம்) வளர்த்தவளுமான தேவயானையின்
துங்க பரிமள படீர கும்ப விம்ப ம்ருகமத … பரிசுத்தமான சந்தன
மணம் வீசும், கும்பம் போன்று ஒளிவிடும், கஸ்தூரி வாசம் மிக்க
பயோதரம் புணர்ந்த பெருமாளே. … திருமார்பைத் தழுவிய பெருமாளே.
* நவநாதராகிய பெருஞ் சித்தர் பின்வருமாறு:
சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர். இவர்கள் குகைகளில் இருந்து சிவனைக் குறித்துத் தவம் செய்து சித்தராயினர்.
****
சிவபெருமானுக்கு விஷ்ணு உதவிய தகவல்
வெற்பால் மத்தாக்கிக் கடல் கடை மைச்சு ஆவிக் காக்கைக்
கடவுளை விட்டார் முக்கோட்டைக்கு ஒரு கிரி இரு காலும்
வில் போலக் கோட்டி … மந்தர மலையையே மத்தாக அமைத்து
திருப்பாற்கடலைக் கடைந்து, கறு நிறம் கொண்டு உயிர்களைக் காக்கின்ற கடவுள் திருமாலின்* திருவிளையாட்டால் தர்மவழியைப் பின்பற்றாது (சிவ பூஜையை) விடடவர்களாகிய திரிபுரத் தலைவர் மூவர்களின் மும்மதிலுக்கும் மேம்பட்ட ஒப்பற்ற மேரு மலையின் இரண்டு முனைப் பக்கங்களையும் வில்லை வளைப்பது போல வளைத்து,
பிறகு ஒரு சற்றே பல் காட்டி தழல் எழு வித்தார் தத்வார்த்தக்
குருபரன் என ஓதும் பொற்பா … பின்பு ஒரு சிறிது புன்னகை செய்து
நெருப்பு மூள வைத்த சிவ பெருமானுக்கு, உண்மைப் பொருளை
உபதேசித்த குரு பர மூர்த்தி என்று சொல்லப்படுகின்ற அழகனே,
பற்றாக்கை புது மலர் பெட்டு ஏயப் பாற்பட்டு உயரிய பொன்
தோளில் சேர்த்துக் கருணை செய் என மாலாய் … அம்புத் திரள்
கட்டும் கயிற்றினின்று (மன்மதன்) தன் மலர்ப் பாணங்களை விரைவாக எய்ய, (அந்த அம்புகளால் காம வசத்தில்) அகப்பட்டு, பெருமை பொருந்திய (உனது) அழகிய தோளில் (என்னை) அணைந்து அருள் புரிவாயாக என்று (வள்ளியிடம் கூறி) ஆசை பூண்டவனாய்,
புள் கானத்து ஓச்சிக் கிரி மிசை பச்சேனல் காத்துத் திரி தரு
பொன் பூவை பேச்சுக்கு உருகிய பெருமாளே. … பறவைகளை
தினைப்புனத்தில் ஓட்டி, வள்ளிமலை மீது பசுமையான தினைப்
பயிர்களைக் காத்துத் திரிந்த அழகிய பூப் போன்ற வள்ளியின் பேச்சுக்கு மனம் உருகிய பெருமாளே.
* திரிபுராதிகள் சிவ பூஜையை விட்டால் ஒழிய அவர்களை வெல்ல முடியாதென உணர்ந்த திருமால் பல அற்புதங்களைக் காட்டி அசுரர்களை மயக்கிச் சிவ பூஜையைக் கைவிடச் செய்தார். அதன் பின்னரே திரிபுரம் எரிந்தது.
***
ஏழு வகைப் பிறப்புகள்
ஏடுமலர் உற்ற ஆடல் மதன் உய்க்கும் ஏ(ய் அ)து பழிக்கும்
விழியாலே … இதழ்களை உடைய மலர்ப் பாணங்களைக் கொண்டு
போர் புரியும் மன்மதன் செலுத்தும் அம்பையும் தமது கொடுமைத்திறத்தால் வென்று பழிக்கவல்ல கண்களாலே,
ஏதையும் அழிக்கு(ம்) மாதர் தம் மயக்கிலே மருவி மெத்த
மருளாகி … எல்லாப் பொருள்களையும் அழிக்கவல்ல மாதர்களின்
மயக்கு என்பதிலே நான் சிக்கி, மிகவும் காம மயக்கம் பூண்டு,
நாடு நகர் மிக்க வீடு தன மக்கள் நாரியர்கள் சுற்றம் இவை
பேணா … என் நாட்டையும், நகரையும், நிறைந்த வீடுகளையும்,
செல்வத்தையும், பெண்களையும், குழந்தைகளையும், சுற்றத்தாரையும்
பேணி நின்று விரும்பி,
ஞானஉணர்வு அற்று நான் எழு பிறப்பும் நாடி நரகத்தில்
விழலாமோ … ஞான உணர்ச்சியே இல்லாமல், ஏழுவகையான
பிறப்புக்களையே* தேடி நின்று நரகத்தில் விழலாமோ?
ஏழு வகையான பிறப்பு:
தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம்.
—subham—
Tags- ஏழு வகை பிறப்பு, நவ நாத சித்தர்கள் ,வியாசருக்கு பிள்ளையார் உதவி, அருணகிரிநாதர், அரிய செய்திகள் , Part 66