Written by London Swaminathan
Post No. 15,584
Date uploaded in London – 6 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 67
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 67
**
14 உலகங்களின் பெயர்கள்
நாகலோக மீரேழு பாருக்கு … சுவர்க்க லோகம் ஆகிய
பதினான்கு உலகங்களுக்கும்*
உரியோனே … உரிமைக்காரனாக விளங்குவோனே,
தீதி லாத வேல்வீர … தீமையே செய்யாத வேல் ஏந்தும் வீரனே,
சேவற்கொடியோனே … சேவலைக் கொடியாக உயர்த்தியவனே,
தேவ தேவ … தேவ தேவனே,
தேவாதி தேவப் பெருமாளே. … தேவாதி தேவர்களுக்கெல்லாம்
பெருமாளே.
* 14 உலகங்கள் பின்வருமாறு:
கீழ் உலகங்கள் ஏழு: அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், ரசாதலம், பாதாளம்.
மேல் உலகங்கள் ஏழு: பூலோகம், புவலோகம், சுவலோகம், ஜனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம்.
***
ஆவி ‘சாவி’யாகக் கூடாது!
ஆவி சாவி யாகாமல் நீசற்றருள்வாயே … உயிர் வீண் படாமல்
நீ சிறிது அருள் புரிவாயாக.
சூர சூர சூராதி சூரர்க்கெளிவாயா … சூரர்களுக்குச் சூரனான
சூரபத்மன் முதலியோருக்கு எளிதாகக் காட்சி கொடுத்தவனே,
தோகையா குமாரா கிராதக் கொடிகேள்வா … மயில் வாகனனே,
குமாரமூர்த்தியே, வேடர் குலக்கொடியாம் வள்ளியின் கணவனே,
தீர தீர தீராதி தீரப் பெரியோனே … மகா தீரம் உடையோய்,
தைரியமாதி மேம்பட்ட குணங்களில் உறுதி வாய்ந்த பெரியோனே,
தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே. … தேவதேவனே,
தேவாதி தேவர்களுக்கெல்லாம் பெருமாளாய் விளங்குபவனே.
சாவி = பாசன நீர்ப் பற்றாக்குறையால் வாடி விளைச்சல் இல்லாமல் போகும் பயிர்களை உழவர்கள் சாவி என்பர்.
***
உடல்= நவத்வார புரி= ஒன்பது வாயில் கோட்டை !
ஊனுந் தசையுடல் தானொன்பதுவழி … மாமிசமும் சதையும் கூடிய
இந்த உடல் தன்னுடன் ஒன்பது துவாரங்கள்*
ஊருங் கருவழி யொருகோடி … சேர்ந்துவரும் கருவின் வழி ஒரு
கோடிக் கணக்கானது. (அந்தப் பிறவித் துயரம் ஒழிய)
ஓதும் பலகலை கீதஞ் சகலமும் … நான் படிக்கின்ற சாத்திர
நூல்களையும், இசை ஞானத்தையும் மற்ற எல்லா கற்கவேண்டியவையும்
ஓரும் படியுனது அருள்பாடி … யான் உணரும்படியாக உன்னுடைய
திருவருளைத் துதித்துப் பாடி,
நானுன் திருவடி பேணும் படி … யான் உன்னுடைய திருவடிகளை
விரும்பிப் போற்றும்படி
இருபோதுங் கருணையில் மறவாது … காலை மாலை இரண்டு
வேளைகளிலும் உன் கருணைத்திறத்தில் ஞாபகம் வைத்து,
உன்நாமம் புகழ்பவர் பாதந் தொழ … உன் திருநாமங்களைப்
போற்றுவோரின் பாதங்களைத் தொழ
இனி நாடும் படியருள் புரிவாயே … இனியேனும் யான்
விரும்பும்வண்ணம் நீ திருவருள் புரிவாயாக.
***
எல்லா அடியார்களும் சொல்லும் இந்த விஷயம் இந்து மதத்தில் மட்டுமே உண்டு ; இதன் மூலம் அதர்வண வேதத்தில்உள்ளது.
இதோ அதர்வண வேத மந்திரம்:
ஒன்பது வாசல் உடைய இந்த உடலை நன்கு அறிந்தால் உனது சக்தியைப் பெருக்கு; அல்லது உனக்குப் பலன் இல்லை (5-16/9)
கடோபநிஷத்திலும், ஸ்வேதஸ்வதார உபநிஷத்திலும் இதே கருத்துகள் உள்ளன. அதர்வண வேத மந்திரம் தொடர்ச்சியாக உபநிஷத் வழியாக கீதை (மஹாபாரதத்தில் உள்ளது) மூலம் பாரதம் மூலம் பரவியது. இதையே மாணிக்க வாசகர் அவரது திருவாசகத்திலும், திருமூலர் அவரது திருமந்திரத்திலும், பட்டினத்தார் அவரது பாடல்களிலும் அவ்வையார் அவரது விநாயகர் அகவலிலும் பாடினர். ஆழ்வார்கள், நாயன்மார்களின் திவ்யப் பிரபந்த தேவாரத்திலும் சித்தர் பாடல்களிலும் இக்கருத்துகள் உள.
ஆதிசங்கரர் மட்டும் விவேக சூடமணியில் இவ்வுடலை அஷ்ட புரி (எட்டு நகரம்) என்பார்.
காளிதாசனும் குமார சம்பவ காவியத்தில் (3-50) பகவத் கீதை என்ன சொன்னதோ அதே கருத்தை எதிரொலிக்கிறார்.
सर्वकर्माणि मनसा संन्यस्यास्ते सुखं वशी |
नवद्वारे पुरे देही नैव कुर्वन्न कारयन् || 5-13||
sarva-karmāṇi manasā sannyasyāste sukhaṁ vaśhī
nava-dvāre pure dehī naiva kurvan na kārayan
The embodied beings who are self-controlled and detached reside happily in the city of nine gates free from thoughts that they are the doers or the cause of anything. Bhagavad Gita 5-13
ஆத்ம ஞானம் பெற்ற ஒருவன், பற்றுதலின்றி மனதால் அனைத்துச் செயல்களையும் துறந்து, ஒன்பது வாயில்கள் கொண்ட இந்த உடல் எனும் நகரத்தில் மகிழ்ச்சியாக வாழ்கிறான் என்று கூறுகிறது. அவன் செயல்பட்டாலும், செயல்களின் பலன்களில் பற்று இல்லாததால் பந்தப்படுவது இல்லை.
ஸர்வகர்மாணி மனஸா ஸன்யஸ்யாஸ்தே ஸுகம் வஶீ |
நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வன்ன காரயன்- பகவத் கீதை 5-13
**
அதிசயம்: காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள்

15-10-1932-ல் சென்னையில் ஆற்றிய உபந்யாசத்தில் காஞ்சி சங்கராசார்யார் (1894-1994) கூறிய அதிசயப் பாடல்:
“ ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தைச் சொல்லுகிறார் நாமெல்லாம் மரணமடைவது ஆச்சரியமன்று; இந்த உடம்பில் இருக்கிற ஒன்பது ஓட்டைகளுக்குள்ளே உயிரானது போகாமல் நிற்கிறதே, அதுதான் பெரிய ஆச்சரியம் என்று அவர் சொல்லியிருக்கிறார்.
நவத்வாரே சரீரே அஸ்மின் ஆயு: வசதி சந்ததம்
ஜீவததீ த்யத்புதம் தத்ர கச்சதீதி கிமத்புதம்
அதைப் போலவே பலவிதமான ஸந்தேஹங்களுக்கும் வித்யாஸங்களுக்கும் இடமான இந்த மதமானது எவ்வளவோ வருஷங்களாக இருக்கிறதே என்பதை நினைத்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது”.
—பக்கம் 109, ஸ்ரீ ஜகத்குருவின் உபதேசங்கள், முதற் பாகம், ஸ்ரீ காமகோடி கோசஸ்தானம், சென்னை-1, முதல் பதிப்பு ஆண்டு 1933, இரண்டாம் பதிப்பு 1957
பட்டினத்தார் பாடல்:
ஒன்பது வாய்த் தோற்பைக்கு ஒருநாளைப் போலவே
அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே! – வன் கழுக்கள்
தத்தித் தத்திச் செட்டை தட்டிக்கட்டிப்பிட்டுக்
கத்திக்குத்தித் தின்னக் கண்டு …………
திருமூலர் சொல்வது……………….
ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள்
ஒன்பது நாடி உடையதோர் ஓர் இடம்
ஒன்பது நாடி ஒடுங்க வலார்கட்கு
ஒன்பது காட்சி யிலை பலவாமே (திருமந்திரம் 638)
ஒன்பது துளைகளையுடைய இப்பிண்டமாகிய உடம்பகத்து வீங்காற்று ஒழிந்த ஏனைய ஒன்பது காற்றும் புகும் ஒன்பது நாடிகளையும் ஒடுக்கவல்ல யோகப் பயிற்சி உடையார் வல்லாராவர். அவர்கள் இந்த நாடிகள் சேரும் நாற்சந்தி இடத்தை அருளால் காண்பர். இவர்கள் அகத்தே கேட்கப்படுவது பல்வேறு ஓசைகளாகும்.
ஒன்பது வாசல்கள் யாவை?
இரண்டு காதுகள், இரண்டு கண்கள், மூக்கின் இரண்டு துளைகள், வாய், மல ஜலம் கழிக்கும் இரு உறுப்புகள் ஆக ஒன்பது துளைகள்.
திருவாசகம் எனும் தேனில் மாணிக்கவாசகர் சொல்வது,
அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி
புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி
மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய … (சிவபுராணம்)
சங்க காலம் முதல் ஆறு பேர் — அவ்வையார் —- என்னும் பெயரில் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிவுரைகள் பகன்றனர். அவர்களில் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அவ்வையார் பாடிய விநாயகர் அகவலில்,
தலம் ஒரு நன்கும் தந்து எனக்கருளி
மலம் ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறாதாரத்து அங்கிசை நிலையும் ……..
இவ்வாறு நூற்றுக் கணக்கான இடங்களில் ஒன்பது வாயில் குடில் பற்றி இமயம் முதல் குமரி வரை நம்மவர் பாடியது, இந்த நாடு ஏக பாரதம் என்பதையும், சொல் செயல் சிந்தனையால் இணைந்த ஒரே இனம் இது என்பதையும், இவர்களே இந்த நாட்டின் பூர்வ குடிகள் என்பதையும் ஐயமற விளக்கும்.
—-subham—-
Tags- உடல் , ஒன்பது வாசல் நகரம் , அதர்வண வேதம் பகவத் கீதை, திருப்புகழ் , 14 உலகங்கள் பெயர்கள் , ஆவி, சாவி, part 67