அய்யாவாடியில் பிரத்யங்கிரா தேவி தரிசனம்! (Post No.15,590)

Written by London Swaminathan

Post No. 15,590

Date uploaded in London – 7 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இரண்டு ஊர்களில் பிரத்யங்கிரா தேவியைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. ஏற்கனவே இரண்டு முறை சென்னை தாம்பரம் ஏரியாவில் ஸ்கந்தாஸ்ரமத்தில் இந்த தரிசனம் நிகழ்ந்தது; இப்போது 2026  மார்ச் 12-ஆம் தேதி கும்பகோணம் அருகிலுள்ள அய்யாவாடியில் நல்ல தரிசனம் கிடைத்தது.

அய்யாவாடி (Ayyavadi) , தமிழ்நாட்டில், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஆன்மீகத் தலம். இங்குள்ள அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் சக்தி வாய்ந்த மகா பிரத்யங்கிரா தேவி சன்னதி  அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில்  அமாவாசை சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுகிறது

பஞ்சபாண்டவர்கள் (ஐவர்) தங்களின் வனவாச காலத்தில், எதிரிகளை வெல்ல இங்கு அம்பாளை பூஜித்தனர். எனவே, இது ஐவர்பாடி என்று அழைக்கப்பட்டு, பின்னர் அய்யாவாடி என்றானது.

நூற்றாண்டுப் பழமையான புஸ்தகங்களில் இந்த தேவியின் உருவங்கள் தமிழ் நாட்டில் எந்த இடங்களில் உள்ளன என்று படங்கள் இருந்தாலும் புதுக்கோட்டை சாந்தானந்த சுவாமிகள்  மூலம் தமிழ் நாட்டில் தேவியின் வழிபாடு மீண்டும் புத்துணர்வு பெற்றுள்ளது ; ஏதேனும் ஒன்றில் வெற்றி பெறவும் எதிரிகளை ஒழிக்கவும் உதவும் இந்த உக்கிரமான தெய்வத்தின் வழிபாடு பெரிய யாகங்களுடன் நடத்தப்படுகிறது .

பார்வதியின்- சிவனின் மனைவியின் உக்கிர வடிவம் இது . சென்னை தாம்பரம் அருகிலுள்ள ராஜகீழ்பாக்கத்தில் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரம் உள்ளது.

***

அய்யாவாடி அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்

அய்யாவாடி அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் தனி சந்நிதியாக பிரத்யங்கிரா தேவி இருக்கிறாள் . அகத்தீஸ்வரர் (சிவன்) கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது

மூலவர்:  அகஸ்தீஸ்வரர் (சிவன்).

அம்மன்: தர்மசம்வர்த்தினி.

தல விருட்சம் – ஆலமரம்

***

பிரத்யங்கிரா தேவி (Pratyangira Devi) பார்வதி தேவியின் உக்கிரமான, அதீத சக்தி வாய்ந்த வடிவம். இவர் சிம்ம முகமும் (சிங்க முகம்) பெண் உடலும் கொண்டவர். எதிரிகளின் சூழ்ச்சி, பில்லி சூனியம், தீய சக்திகளை அழித்து, பக்தர்களைப் பாதுகாக்கும் தாயார். குறிப்பாக அமாவாசை நாட்களில் இவருக்கு நடத்தப்படும் நிகும்பலா ஹோமம் மிகவும் சிறப்பானது.

நரசிம்மரின் கோபத்தைத் தணிக்க, சிவனின் மூன்றாவது கண்ணிலிருந்து தோன்றியவர். இவர் நரசிம்ஹி, அதர்வன பத்ரகாளி, நிகும்பலா என்றும் அழைக்கப்படுகிறார்.

வழிபாடு: தீய சக்திகளில் இருந்து பாதுகாப்பு, தடைகள் நீங்குதல், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்விற்காக இவரை வழிபடலாம்.

அய்யாவாடி (மற்றும் ஹோசூர் கோயில்கள் பிரசித்தி பெற்றவை.

***

திருச்செங்கோடு, திருப்பராய்துறை போன்ற இடங்களிலுள்ள சிலைகளின் படங்கள், எச் கிருஷ்ண சாஸ்திரி வெளியிட்ட 1916 ஆம் ஆண்டு புஸ்தகத்தில் உள்ளன இவைகளை பத்ர காளி என்று பக்தர்கள் சொல்கின்றனர் .

பொதுவாக நான்கு கைகளில் கபாலம்த்ரிசூலம், உடுக்கை, நாக பாசம் ஆகியன இருக்க வேண்டும் ஆனால் திருச்செங்கோட்டில் கபாலம், பாசக்கயிற்றுக்குப் பதிலாக வாளும் கேடயமும் உள்ளன ; திருப்பராய்துறை பஞ்ச லோக விக்கிரகத்தில் சிங்கம் இல்லை .

தேவியின் வடிவம் உக்கிரமானது என்பதால், கடுமையான பக்தியுடன், முறையான வழிகாட்டுதலுடன் வழிபாடு செய்வது நலம் பயக்கும்.

****

ஸ்கந்தாஸ்ரம வெளியீட்டில் உள்ள தகவல் பின்வருமாறு :

ஹிரண்யகசிபுவை வதம் செய்த நரசிம்மரின் கோபம் தணியாததால் பரமேஸ்வரர் சரப பக்ஷியை அனுப்பினார்; அந்தப் பறவையின் இரண்டு சிறகுகளில் ஒன்று பிரத்யங்கிரா தேவி வடிவம் ஆகியது ; பத்ரகாளி என்றும் பெயர்.

சரபேஸ்வரரின் நெற்றிக் கண்ணிலிருந்து  அவள் தோன்றினாள் என்றும் சொல்வதுண்டு .

உமாபதி சிவம் இயற்றிய குஞ்சித்தாங்கிஸ்தவத்தில்  இரண்டு ஸ்லோகங்களில் தோற்ற வருணனை உள்ளது அங்கீரஸ் , ப்ரத்யங்கிரஸ் ஆகிய இரண்டு ரிஷிகள் இந்த தேவியின் மந்திரத்தைக் கண்டுபிடித்தனர் (ரிஷிகள் மந்திரங்களை இயற்றுவதில்லை; அவர்கள் மனக்கண்களில் காண்பதால் வேத மந்திரங்களைக் கண்டுபிடித்தார்கள் அல்லது வானிலிருந்து கேட்டனர் – சுருதி- கேள்வி – என்றே சொல்கிறோம் ).

சிவபெருமானை அவமதிக்க தட்சன் நடத்திய யாகத்தை வீரபத்திரரும் பிரத்யங்கிராவும் அழித்தனர். ராவணன் மகன் இந்திரஜித் , நிகும்பலா குகையில் பிரத்யங்கிரா யாகம் நடத்தச் சென்றான் ; அதை முடித்தானானால் இராவணன் வெற்றி பெறுவான் என்று அறிந்த லெட்சுமணன் , நிகும்பலா யாகத்தைத் தடுத்தான்; ராவணனும் வீழ்ந்தான் . ராம கிருஷ்ண பரம ஹம்சர் இவளை வணங்கி முக்திபெற்றார் என்ற செய்திகளை சென்னை ஸ்கந்தாச்ரம வெளியீடு சம்ஸ்க்ருத ஸ்லோககங்களுடன் நமக்குத் தருகிறது . பார்வதியின் கோபமே பிரத்யங்கிராவின் மறு வடிவம் ஆகும்..

யுக்தே பக்னோருகாயம் நரஹரி வபுஷம் கண்டபேருண்டரூபி

பூத்வா கர்ஜந்தே மக்ரே சரப ககபதிஹி யஸ்ய FAALAA /பாலாக்கினி குண்டாத்

உக்ரப்ரத்யங்கிராக்யாம் தச சத வதனாம் காலிகாம் ஆசு ச்ருட்வா

தஸ்யாஹா ஜிஹ்வாக்ர வஹ்னிம் சுதருவத் அந்யத் குஞ்சிதாங்க்ரிம் பஜே

 – உமாபதி சிவம்குஞ்சிதாங்கிரிஸ்தவம்

சென்னை ஸ்கந்தாஸ்ரமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மிகப்பெரிய பஞ்ச லோக விக்ரஹத்துக்கு நித்ய பூஜைகள் நடக்கின்றன அவ்வப்போது உபயதாரர்கள் மூலம் யாகங்களும் நடத்தப்படுகின்றன .

மேலும் புஸ்தகத்தில் தியான மந்திரங்களும் சம்ஸ்க்ருத மொழியில் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன (என்னிடம் புஸ்தகம் உள்ளதுவேண்டுவோர் எனக்கு எழுதலாம் )

இது சத்ருக்குக்களை /எதிரிகளை அழிக்கும் மந்திரம்.

***

கோவிலில் ஏமாற்றம்

திருப்பணி நடைபெறுவதால் உள்ளே செல்ல முடியாது என்று போர்டு மாட்டி அகஸ்தீஸ்வரரைத் தரிசிக்க முடியாமல் செய்துவிட்டனர் ; பொதுவாக இப்படி திருப்பணி நடைபெறும்போதும் சுவாமியைத் தரிசிக்க பாலாலயம் போன்றவைகளை நிறுவி வழி செய்வார்கள் . இங்கு ஏன் இப்படிச் செய்யவில்லை என்று தெரியவில்லை ; ஆனால் பிரத்யங்கிரா அம்மன் முகப்பிலேயே இருப்பதால் சுலபமாகத் தரிசிக்க முடிந்தது; கூட்டம் இல்லை.

·          கும்பகோணத்திலிருந்து திருநாகேஸ்வரம் செல்லும் வழியில், சுமார் 6 கி.மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

·         அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய அருமையான கோவில்; சந்நிதியின் சுவர் முழுதும் தேவிகளின் வர்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன ; புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று அர்ச்சகர் சொன்னதால் படம் எடுக்கவில்லை.

–SUBHAM—

TAGS- பிரத்யங்கிரா தேவி, அய்யாவாடி கோவில் , சென்னை ஸ்கந்தாஸ்ரமம் , தேவி மந்திரம் , தோற்றம், வருணனை, வழிபாடு, சரபேஸ்வரர் , சாந்தானந்த சுவாமிகள், உமாபதி சிவம்

Leave a comment

Leave a comment