

Written by London Swaminathan
Post No. 15,588
Date uploaded in London – 7 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 68
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 68
****
ஒரு நாளைக்கு 21,600 சுவாசம் !
தீயும் பவனமும் நீரும் தரணியும் வானும் … தீ, காற்று, நீர், மண்,
விண் ஆகிய இந்த ஐந்து பூதங்களும்
செறி தரு பசு பாச … நிறைந்துள்ள ஜீவாத்மாவும் கட்டுக்கள் ஆகிய
ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் கூடியதான
தேகம் தனை நிலையே ஏய் ஒன்று(ம்) … இவ்வுடலை
நிலைத்திருக்கும்படிப் பொருந்த வைக்கத் தெரியாமல்,
இரு வினை தீரும் திறல் வினை அறியாதே … (நல்வினை,
தீவினை ஆகிய) இரண்டு வினைகளும் முடியும்படியான திறமை
வாய்ந்த செயல் எதையும் அறிந்து கொள்ளாமல்,
ஓயும்படி அறு நூறும் பதின் உறழ் நூறும் பதின் இருபது
நூறும் … பிறப்பு ஓயும்படியாக, அறு நூறும் (600), பதின் மடங்கு நூறும் (1,000), பதின் இருபது நூறும் (10 மடங்கு 2,000=20,000) மொத்தம்
600+1,000+20,000=21,600 மூச்சுகள்*
ஓடும் சிறு உயிர் மீளும்படி ந(ல்)ல யோகம் புரிவது
கிடையாதோ … (ஒவ்வொரு நாளும்) ஓடுகின்ற இந்தச் சிற்றுயிர்
விடுதலை அடையும்படி (அதாவது இனி பிறவி ஏற்படாதபடி), நல்ல
சிவ யோகத்தைப் பயிலும் பாக்கியம் எனக்குக் கிடைக்காதோ?
* நாழிகை ஒன்றுக்கு 360 சுவாசங்கள். ஒரு நாளில் உள்ள 60 நாழிகைக்கு (24 மணி நேரத்துக்கு), 21,600 சுவாசங்கள்.
***
அருணகிரி பாட்டில் அத்வைதம்!
ஊனே தானாய் ஓயா நோயால் ஊசாடு ஊசற் குடில்பேணா …
ஊன் பொருந்திய இவ்வுடலே நான்தான் என்று நினைத்து, என்றும்
முடிவில்லாத நோயாளனாய், அழிவுள்ளதும், ஊஞ்சலைப்போல் மாறி
மாறி வருகின்றதுமான இத்தேகத்தை விரும்பி,
ஓதா மோதா வாது ஆகாதே லோக ஆசாரத்து உளம்
வேறாய் … நூல்களை ஓதியும், தாக்கிப் பேசியும், செய்கின்ற சமய
வாதங்களில் ஈடுபடாமலும், உலக ஆசாரங்களில் கட்டுப்படாமல் உள்ளம் வேறுபட்டு,
நானே நீயாய் நீயே நானாய் … எனது ஜீவாத்மா பரமாத்மாவாகிய
உன்னிடம் ஒன்றுபட்டுப் பொருந்தி,
நானா வேதப் பொருளாலும் நாடா வீடாய் … பலவகையான
வேதப்பொருள் கொண்டு உன்னை நாடி விரும்பி வீடு பேற்றை
அடைந்தவனாய்,
ஈடேறாதே நாயேன் மாயக் கடவேனோ … என் ஜன்மம் சாபல்யம்
அடையாமல் நாயனைய அடியேன் இறந்துபோகக் கடவேனோ?
வானே காலே தீயே நீரே பாரே பாருக்கு உரியோனே …
விண், காற்று, தீ, நீர், பார் ஆகிய ஐந்து பூதங்களாக விளங்கி,
இவ்வுலகிலுள்ள பெரியோருக்கு உரியவனாகத் திகழ்பவனே,
***
மயிலின் பரத நாட்டியம் !
இன்றும் பெரிய கோவில் திருவிழாக்களில் மயில் டான்ஸ் ஆடிக்கொண்டு வாரும் பெண்களைக் காண்கிறோம்.
பரத நீல மாயூர வரத நாக கேயூர பரம யோகி மா தேசி மிகு
ஞான பரமர் தேசிகா … பரத நாட்டியம் ஆடவல்ல நீல மயில்
வாகனனே, வரத மூர்த்தியே, பாம்பைத் தோளணி வகையாக
அணிந்தவரும், பரம யோகியும், சிறந்த ஒளி வீசும் அழகு வாய்ந்தவரும், மிக்க ஞானம் நிறைந்த பரம மூர்த்தியுமான சிவபெருமானது குருமூர்த்தியே,
வேட பதி வ்ருதா சுசீ பாத பதும சேகரா வேலை மறவாத
கரதலா … வேடர் குலத்தில் வளர்ந்த, கற்பு நிறைந்த, தூயவள் வள்ளியின் திருவடித் தாமரையை முடியில் சூடுபவனே, வேலாயுதத்தை மறவாத திருக்கரத்தை உடையவனே,
விசாகா சகல கலாதரா போதக முக மூஷிக ஆரூட மத
தாரைக் கடவுள் தாதை சூழ் போதில் … விசாகனே, எல்லா
கலைகளிலும் வல்லவனே, யானை முகத்தை உடையவரும், மூஞ்சூறின் மேல் ஏறி வருபவரும், நீரொழுக்குப் போல் மதநீர் ஒழுகுதல் உள்ளவரும் ஆகிய கணபதியின் தந்தையாகிய சிவபெருமானை வலம் வந்த நேரத்துக்குள்
உலகம் ஏழு(ம்) சூழ்போது கருணை மேருவே தேவர்
பெருமாளே. … ஏழுலகையும் சுற்றி வந்த, மலர் போன்ற திருவடியை உடைய, கருணைப் பெரு மலையே, தேவர்களின் பெருமாளே.
***
திருப்புகழில் சாரதாபீடம்
அரிய சாரதாபீடம் அதனிலேறி ஈடேற … அருமையான
சரஸ்வதியின் இருப்பிடமான சங்கப்பலகையில்* ஏறி,
அகில நாலும் ஆராயும் இளையோனே … நான்கு திக்கிலும்
உள்ள உலகத்து உயிர்களை எல்லாம் ஆராய்ந்து காக்கும் இளையோனே,
கனக பாவனாகார பவள கோமளாகார … பொன் போன்ற தூய
உடம்பினனே, பவளம் போன்ற அழகிய சிவந்த மேனியனே,
கலப சாமளாகார மயிலேறும் கடவுளே … தோகை உடையதும்,
பச்சை நிறமானதுமான மயிலின் மீது ஏறும் கடவுளே,
க்ருபாகார கமல வேதனாகார … அருள்வடிவோனே, இதயத்
தாமரையில் பொருந்திய ஞான சொரூபனே,
கருணை மேருவே தேவர் பெருமாளே. … கருணைப்
பெருமலையே, தேவர்களின் பெருமாளே.
***
இரண்டு சாரதா பீடங்கள் உள்ளன ஒன்று சிருங்கேரியில் உள்ளது. ஆதிசங்கரர் ஸ்தாபித்த மடம் இது. இங்கு சாரதாம்பாள் கோவிலும் உள்ளது
இன்னொரு சாரதாபீடம் கல்ஹணர், யுவான் சுவாங் ஆகியோரால் குறிப்பிடப்பட்ட தலம் ஆகும்.
இது காஷ்மீரில், நீலம் ஆற்றின் கரையில் சாரதாவிற்கு அர்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். 51 சக்தி பீடங்களில் ஒன்றான இங்கு சாரதா தேவியின்/ சரசுவதியின் உருவம் சந்தன மரத்தினால் செய்யப்பட்டது.
சாரதா பீடம், புகழ் பெற்ற வேத கல்வி மையமாக விளங்கியது. ஆதிசங்கரர் இராமானுசர், பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை எழுதுவதற்காக காஷ்மீரின் சாரதா பீடத்திற்கு வந்தனர்.
சீனப் பயணி யுவான் சுவாங் சாரதா பீடத்திற்கு வருகை புரிந்து, இரண்டு ஆண்டுகள் தங்கி, பௌத்தம் தொடர்பான கல்வியைப் பயின்றார். காஷ்மீரப் பண்டிதரான மகாகவி கல்ஹணர், தான் எழுதிய ராஜதரங்கிணி எனும் நூலில் சாரதா பீடத்தை குறித்துள்ளார். வரலாற்று அறிஞரும், புவியியலாளருமான அல்-பிருனி (CE 973–1048), சாரதா பீடத்தின் கருவறையில் மரத்திலான சரசுவதியின் சிற்பம் காணப்பட்டதாக தமது குறிப்பில் குறித்துள்ளார்.
பதினான்காம் நூற்றாண்டிலும், 1947 இந்தியப் பிரிவினை போதும் ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்த சாரதா பீடத்தை முஸ்லீம்கள் இடித்து அழித்தனர்.
காஷ்மீர் மன்னர் குலாப் சிங் 19ஆம் நூற்றாண்டில் திருப்பணி செய்தார் . சிருங்கேரி சாராதா மடத்தின் ஆதரவுடன் மீண்டும் கோவில் கட்டப்பட்டுள்ளது. இப்போது நவராத்திரி , தீபாவளி பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது
எல்லைக் எல்லை கட்டுப்பாட்டு கோட்டிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதிக்குள் இருக்கிறது
****
மேலும் ஒரு விளக்கம்
மதுரையில் சரஸ்வதிதேவியின் 48 எழுத்துக்களின் அம்சங்கள் 48 புலவர்களாகத் தோன்றி, பாண்டியனின் ஆதரவோடு தமிழ்ச் சங்கம் அமைத்தனர். மதுரை சோமசுந்தரக்கடவுள் இவர்களுக்கு ஒரு சங்கப்பலகை தந்தருளினார். முருகன் இந்தச் சாரதாபீடத்தில் ருத்ரசன்மன் என்ற புலவராக அமர்ந்து மற்ற புலவர்களிடையே ஏற்பட்ட சண்டையைத் தீர்த்து வைத்தார் – திருவிளையாடற் புராணம்.
****
கடவுளர்கள் ஆடிய அற்புத நடனங்கள்!
Pitures are taken by A Narayanan, Sydney, Australia
அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட …… அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள …… மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட …… மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி …… வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருத லார்கள் மாசேனை …… பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடூதி …… அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் …… மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் …… பெருமாளே.
……… சொல் விளக்கம் ………
அதல சேடனார் … (பூமிக்கு கீழேயுள்ள) அதலத்தில் இருக்கும்
ஆதிசேஷன்
ஆட … நடனம் ஆடவும்,
அகில மேரு மீதாட … பூமி மீதுள்ள மேருமலை அசைந்தாடவும்,
அபின (அபின்ன) … மாறுபாடு இன்றி (சிவதாண்டவத்துக்கு)
ஒற்றுமையாக
காளி தானாட … காளி தான் ஆடவும்,
அவளோ(டு) அன்(று) அதிர … அக்காளியோடு அன்று அவள்
அதிர்ந்து நடுங்கும்படி
வீசி வாதாடும் … (காலை ஊர்த்துவகோலத்தில்) வீசி
போட்டியிட்டவரும்
விடையில் ஏறுவார் ஆட … ரிஷபத்தில் ஏறுவாரும் ஆகிய
சிவனும் ஆடவும்,
அருகு பூத வேதாளம் அவையாட … அருகில் பூதங்களும்
பேய்களும் ஆடவும்,
மதுர வாணி தானாட … இனிமை மிக்க சரஸ்வதியும் ஆடவும்,
மலரில் வேதனார் ஆட … தாமரை மலரில் அமரும் பிரமனும்
ஆடவும்,
மருவு வானு ளோராட … அருகில் பொருந்திய தேவர்கள்
எல்லாம் ஆடவும்,
மதியாட … சந்திரன் ஆடவும்,
வனஜ மாமி யாராட … தாமரையாள் நின் மாமியார் லக்ஷ்மியும்
ஆடவும்,
நெடிய மாம னாராட … விஸ்வரூபம் எடுத்த நின் மாமனார்
விஷ்ணுவும் ஆடவும்,
மயிலும் ஆடி … நீ ஏறிவரும் மயிலும் ஆடி,
நீ ஆடி வரவேணும் … நீ நடனம் ஆடி என்முன்னே வரவேண்டும்*
கதை விடாத தோள் வீமன் … கதாயுதத்தை தன் தோளினின்று
அகற்றாத வீமன்
எதிர்கொள் வாளியால் … எதிர்த்துச் செலுத்திய அம்பு மழையில்
நீடு கருதுலார்கள் … பெரும் பகைவர்களின் (கெளரவர்கள்)
மாசேனை பொடியாக … பெரிய சேனை பொடிபட (உதவியவரும்),
கதறு காலி போய்மீள … கதறிச் சென்ற பசுக்கள் மீண்டுவரக்
(குழலை ஊதியவரும்),
விஜயன் ஏறு தேர்மீது … அர்ச்சுனன் ஏறிய தேரின் பாகனாயிருந்து,
கனக வேத கோடூதி … தங்க மயமானதும், வேத ஒலியைத் தரும்
சங்கை ஊதியவரும்,
அலைமோதும் உததி மீதிலே … அலை வீசும் பாற்கடல் மீதிலே
சாயும் … (பாம்பணையில்) பள்ளி கொண்டவரும்,
உலக மூடு சீர்பாத … (வாமனாவதாரத்தில்) உலகத்தை அளந்து
மூடிய பாதத்தாரும்,
உவணம் ஊர்தி … கருடனை வாகனமாகக் கொண்டவரும்,
மாமாயன் மருகோனே … ஆன மாமாயன் திருமாலின் மருமகனே
உதய தாம மார்பான … அன்றலர்ந்த மலர் மாலையை அணிமார்பனாகிய
ப்ரபுடதேவ மாராஜ … (திருவண்ணாமலையை ஆண்ட) ப்ரபுட தேவ மஹாராஜனின்
உளமும் ஆட … உள்ளமும் மகிழ்ச்சியில் ஆடும் வண்ணம்
வாழ் தேவர் பெருமாளே. … அவனது நெஞ்சிலே வாழும் தேவர்
பெருமாளே.
* இப்பாடல் அருணகிரியார் வாழ்வில் மகத்தானது. சம்பந்தாண்டான் என்பவனோடு வாது செய்தபோது முருகனை திருவண்ணாமலை அரசன் ப்ரபுட தேவராஜனின் சபையில் வரவழைக்கப் பாடிய பாடல் இது. இந்த வரியைப் பாடும்போது, முருகன் வேலும் மயிலும் விளங்க நடனக் கோலத்திலேயே சபையில் தோன்றி தரிசனம் தந்தான்.
—subham—-
Tags– சம்பந்தாண்டான், ப்ரபுட தேவராஜன், அருணகிரிநாதர், அரிய செய்திகள், Part 68, 21,600 சுவாசம் திருப்புகழில் சாரதாபீடம்,அதல சேட னாராட