ஶ்ரீ ராமருக்கு இந்திரன் ரதம், ஆயுதம் தந்து உதவியது! வரம் அளித்தது!! (Post No.15,587)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,587

Date uploaded in London – 7 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (47)   

ராமாயணத்தில் வரங்கள் (47) ஶ்ரீ ராமருக்கு இந்திரன் ரதம், ஆயுதம் தந்து உதவியது! வரம் அளித்தது!!

ச. நாகராஜன்

யுத்தகாண்டத்தில் ‘இந்திரனது தேரிலேறிக்கொண்டு போர் புரிவது’ என்ற நூற்றுமூன்றாவது அத்தியாயத்தில் ஶ்ரீ ராமருக்கு இந்திரன் ரதம், ஆயுதம் உள்ளிட்டவற்றைத் தந்து உதவியது பற்றிய ஒரு குறிப்பைக் காண்கிறோம்.

ராம ராவண யுத்தம் ஆரம்பமாகிறது. ராவணன் தன் ரதத்தில் இருக்க ஶ்ரீ ராமர் தரையில் நின்று கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த தேவர்கள், கின்னரர்கள் உள்ளிட்ட அனைவரும், ராவணன் தேரில் இருக்க ராமர் தரையில் அல்லவா நிற்கிறார். இந்த யுத்தம் சமமான யுத்தம் இல்லையே” என்றனர். உடனே தேவேந்திரன் தனது சாரதியான மாதலியை அழைத்து, “ நீ எனது ரதத்தை எடுத்துச் சென்று ராமருக்கு அளி.” என்றான்.

அதன்படியே மாதலி ரதத்தைக் கொண்டு வந்து ஶ்ரீ ராமருக்கு அளித்தான்.

பின்னர் கூறுகிறான்:

சஹஸ்ராக்ஷேண காகுத்ஸ்த ரதோயம் விஜயாய் தே |              தத்தஸ்தவ மஹாசத்வ ஶ்ரீ மச்சசத்ருநிவர்ஹண |

இதமைந்த்ரம் மஹச்சாபம் கவசம் சாக்னிசன்னிபம் | |ஷராஸ்சாதித்யசங்காஷா: சக்திஸ்ச விமலா ஷிதா ||

யுத்தகாண்டம், 103ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 11,12

சத்ரு நிவர்ஹண – சத்ருக்களை சங்கரிக்கும்                          மஹா சத்வ – பேராற்றல் கொண்ட                                    ஶ்ரீமன் – ஶ்ரீ மிகும்                                               

தே – தேவரீரது                                                    விஜயாய – வெற்றிக்காக                                   சஹஸ்ராக்ஷேண – இந்திரனால்                                     அயம் – இந்த                                                         

ரத: – ரதமானது                                                      தவ- தேவரீருக்கு தத்த: – அளிக்கப்பட்டிருக்கிறது

இதம் – இந்த                                                                  மஹத் – மகிமை வாய்ந்த                                            ஐந்த்ரம் – இந்திரனது     சாபம் – வில்லும்          அக்னிசன்னிபம் – அக்னியை நிகர்த்த                                 கவசம் ச – கவசமும்             ஆதித்யசங்காஷா: – சூரியனை நிகர்த்த                                  ஷரா: ச – பாணங்களும் விமலா – நிர்மலமானதும்                       ஷிதா – கூரியதுமான சக்தி: – சக்தியும்                                     ச – அப்படியே அளிக்கப்பட்டிருக்கின்றன

இப்படிக் கூறிய மாதலி ஶ்ரீ ராமரிடம், “இந்த ரதத்தில் சாரதியாகிய என்னுடன் வீற்றிருந்து தேவேந்திரர் அசுரர்களை வென்றது போல ராவணனை வெற்றி கொள்வீராக” என்று வேண்டுகிறான்.

அதன்படியே ராமர் அந்தத் தேரில் ஏறி ராவணனை வெற்றி கொள்கிறார். சீதையின் கற்பை நிரூபிக்கும் வண்ணம் அக்னி ப்ரவேசமும் நடந்து முடிகிறது.

அப்போது தசரதர் ராம. லக்ஷ்மண, சீதா தேவி முன்னர் தோன்றி அவர்களை ஆசீர்வதித்து விட்டு இந்திரலோகம் செல்கிறார்.

அடுத்து நூற்றிருபத்து மூன்றாவது அத்தியாயமான மாண்ட வானரர்கள் உயிர் பெறல் என்ற அத்தியாயத்தில் ஶ்ரீ ராமர் இந்திரனிடம் போரில் மாண்ட அனைத்து வானரவீரர்களும் உயிர் பிழைக்க வேண்டும் என்ற வரத்தை வேண்டுகிறார். இந்திரனும் அப்படியே வரம் அருள்கிறார்.

அதை 123ம் அத்தியாயம் இப்படி விவரிக்கிறது:

அப்போது அங்கு வந்த இந்திரனை நோக்கி ராமர் கூறுகிறார்:-

“எல்லா தேவர்களுக்கும் வேந்தரே! என்னிடம் ப்ரீதியானது ஏற்பட்டிருக்கிறதென்றால் விண்ணப்பித்துக் கொள்வேன். பேசுபவர்களுள் உத்தமரே! தேவரீரது திருவாக்கை சத்யமாய செய்தருள்வீராக!

எனது நிமித்தமாக பிரதாபத்தை மேற்கொண்ட எந்த வானரர்கள் யமனுலகத்தை அடைந்தார்களோ அவர்கள் யாவரும் உயிர் பெற்று எழுந்திருக்கட்டும்.

கௌரவத்தைக் கொடுப்பவரே! எந்த வானரர்கள் எனக்காகவே புத்திரர்களையும் மனைவிகளையும் விட்டுப் பிரிந்தார்களோ அவர்கள் யாவரையும் சந்துஷ்டி கொண்ட மனத்தினர்களாய்ப் பார்க்க விரும்புகிறேன்

தேவேந்திரரே! பிரதாபம் மேற்கொண்டு பெருமுயற்சி கொண்டவர்களான சூரர்கள் மரணமடைந்தவர்களாய் மரணத்தையும் மதிக்காமல் இருந்தார்கள். அவர்களைப் பிழைப்பித்து அருள்வீராக!

எனது விருப்பங்களிலேயே அசஞ்சலாப்பற்றைக் கொண்டு மரணத்தையும் மதியாதிருந்தார்கள். அவர்கள் தேவரீரது அனுக்ரஹத்தால் எழுவார்களாக! நான் இந்த வரத்தை வேண்டுகிறேன்.

இப்படி “அஹம் ஏதத் வரம் வ்ருணே” என்று வரத்தை ராமர் யாசிக்க தேவேந்திரன், “அப்பா, ஶ்ரீ ராகவ! உன்னால் கூறப்பட்ட இந்த வரமானது மிகப் பெரிது. என்னால் இருவிதமாகச் சொல்லப்பட்டதே இல்லை. ஆகையால் இது அப்படியே ஆகும்” என்கிறான்.

இப்படி ஶ்ரீ ராமருக்கு ரதம், ஆயுதம் தந்து உதவியதோடு, வானரர்கள் பிழைக்க வரமும் அருள்கிறான் தேவேந்திரன்.

அற்புதமாக விவரிக்கப்பட்டிருக்கும் இந்த சம்பவத்தை வால்மீகி மிக அழகாக விளக்குகிறார்.

**

Leave a comment

Leave a comment