Written by London Swaminathan
Post No. 15,592
Date uploaded in London –8 April 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 69
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 69
****
மகர முகர திமிர உததி உதரம் அது பீற … மகர மீன்கள்
உலாவுவதும், பேரொலி செய்வதும், இருண்டதுமான கடல் தனது வயிற்றின் உட்பாகம் கிழிய,
அயரும் அமரர் சரண நிகள(ம்) முறிய எறியும் அயில் வீரா …சோர்வடைந்த தேவர்களின் காலில் இருந்த விலங்குகள் உடைபடச் செலுத்திய வேல் வீரனே.
அறிவும் உரமும் அறமு(ம்) நிறமும் அழகும் உடைய
பெருமாளே. … ஞானமும், வலிமையும், தரும நெறியும், ஒளியும்,அழகும் உடைய பெருமாளே.
***
கோபியர் கதை
இது அகநானுற்றிலும் உள்ளதால் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் நன்கு அறிந்த கதை ஆகும் .
குருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் மருகோனே …
குருந்த* மரத்தில் ஏறியவனும் மேகவண்ணனுமான திருமாலின்
மருமகனே,குரங்குலாவுங் குன்றுறை குறமகள் மணவாளா … குரங்குகள் உலாவும் குன்றாகிய வள்ளிமலையில் வாசம் செய்யும் குறமகள் வள்ளியின் மணவாளனே,
திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு புலவோனே … திருத்தமான
முறையில் வேதத்தை இன்பமான தமிழ்மொழியில் தேவாரமாக உலகோர் அறியத் தந்தருளிய (சம்பந்தப்) புலவனே,
சிவந்த காலுந் தண்டையும் அழகிய பெருமாளே. … செம்மை
வாய்ந்த திருவடியும் அதில் திகழும் தண்டையும் அழகு பொலிய விளங்கும் பெருமாளே.
* கோபியரின் சேலைகளைக் கவர்ந்து ஒளிக்க, கண்ணன் யமுனைக் கரையில் குருந்த மரத்தின் மீது ஏறினான்.
***
அகத்தியரின் தமிழ் டீச்சர் முருகன்
பட அரவில் சிறந்த இடம் இது எனத் துயின்ற பசு முகிலுக்கு
உகந்த மருகோனே … படம் கொண்ட (ஆதிசேஷன் என்னும்)
பாம்பாகிய படுக்கையை மிகத் தக்க இடம் இது என்று கொண்டு அதில் பள்ளி கொண்ட கரிய மேகம் போன்ற திருமாலுக்குப் பிரியமான மருகனே,
குட முனி கற்க அன்று தமிழ் செவியில் பகர்ந்த குமர குறத்தி
நம்பு(ம்) பெருமாளே. … அகத்திய முனிவர் கற்க*, அன்று தமிழ்
ஞானத்தை அவர் காதில் சொல்லி ஊட்டிய குமரனே, குறத்தியாகிய வள்ளி நம்பித் தொழும் பெருமாளே.
* அகத்தியர் சிவபெருமானை வணங்கி தமிழ் ஞானம் வேண்ட, அவர் முனிவரைத் திருத்தணிகை முருகனை அணுகுமாறு பணித்தார். அங்ஙனமே அகத்தியர் முருக வேளைப் பூஜித்துத் தமிழ் ஞானம் பெற்றார்.
***
எருமை மாட்டில்பவனி வரும் எமன் ‘தர்மராஜன்’ !
பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் யமனைப் புகழும் வேத மந்திரத்தைச் சொல்கிறார்கள். அதில் யமனுக்கு வரும் பல பெயர்களில் ஒன்று தர்மன் ராஜன்!
கடை நாளே எருமையில் ஏறித் தருமனும் வாவுற்று … இறுதி
நாள் வர, எருமைக் கடா வாகனத்தில் ஏறி யமதர்மனும் வீட்டு வாசற்படி தாண்டி வந்து,
இறுகிய பாசக் கயிறாலே எனை வளையாமல் … அழுத்திக் கட்டிய பாசக் கயிற்றால் என்னை வளைத்து இழுக்காமல்,
துணை நினைவேனுக்கு இயல் இசை பாடத் தரவேணும் … உன்னையே துணையாக நினைக்கின்ற எனக்கு, இயற்றமிழ் இசைத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்ல வரத்தைத் தந்தருள வேண்டும்.
***
முருகனுக்கும் மூன்று கண்கள்!
பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல்நாட்ட குமரேசா -பகைவர்களாகிய அசுரர்களின் பாசறையில் முற்றியநெருப்பை ஊட்டுவித்த ஒளி விடுவதான நெற்றிக் கண்ணைக்*கொண்ட குமரேசனே
மறைகள் கூட்டி உரை செய் தமிழ் பாட்டை அடைவு கேட்ட முருகோனே -அருமையான வேத மொழிகளைச்சேர்த்து உரைக்கப்பட்ட (சங்கத்) தமிழ்ப் பாடலை(திருமுருகாற்றுப்படையை) முற்ற முழுவதும் கேட்ட முருகனே
கடலில் ஈட்ட அவுணர் தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட பெருமாளே.-அலை வீசும் கடலில் கூட்டமாய் இருந்த அசுரர்களை
விரட்டி ஓடும்படிச் செய்து, தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த
பெருமாளே.
* முருகன் சிவனது அம்சமே ஆதலால், சிவனைப் போன்று அக்னி உள்ள நெற்றிக் கண் முருகனுக்கும் உண்டு.
என்னுடைய கருத்து
முருகப்பெருமான் அக்கினி தேவனின் அம்சம் ; சிவனின் ஆறு தீப்பொறிகளில் தோன்றியவன்; அப்படிப் பார்த்தால் அக்கினியால் எரித்ததாகவும் சொல்லலாம்.
***
கடலின் மீது ராமனுக்கு கோபம்
வளையும் அலை கடல் சுவற விடு பகழி வரதன் இரு
மருதினொடு பொருது அருளும் அபிராமன் … வளைந்ததாக
உள்ள அலை கடல் வற்றிப் போகும்படி செலுத்திய அம்பைக்
கொண்டவனும்*, அடியார்களுக்கு வரங்களைத் தருபவனுமான திருமால், இரண்டு மருத மரங்களைத் தகர்த்து (கண்ணனாக) அருள் பாலித்த அழகன்,
வரி அரவின் மிசை துயிலும் வரத ஜய மகள் கொழுநன்
மருக … கோடுகளை உடைய (ஆதிசேஷன் என்னும்) பாம்பின் மேல் துயில்கின்ற வரதன், விஜயலக்ஷ்மியின் கணவனாகிய திருமாலின் மருகனே,
* கடற்கரையில் வருண மந்திரம் ஜெபித்தும் சமுத்திரராஜன் வந்து வழி விடாததால் ராமர் கோபித்துக் கடல் மீது பாணம் விட்டார்.
***
முயலகனை மிதித்த கதை!
உடலு(ம்) முயலகன் முதுகு நெறுநெறு என எழு திமிர(ம்)
உரகர் பில(ம்) முடிய ஒரு பதம் ஓடி உருவ முது ககன முகடு
இடிய மதி முடி பெயர … கோபத்துடன் வந்த முயலகன்* என்னும்
பூதத்தின முதுகு நெறு நெறு என்று முறிய, இருள் பரந்த நாக லோகமும் பாதாள முழுதும் ஒப்பற்ற அடி ஓடி உருவவும், பழமையான ஆகாயத்தின் உச்சி இடியவும், சந்திரனின் முடி நகரவும்,
உயர அகில புவனம் அதிர வீசி கடக(ம்) கர தலம் இலக
நடனம் இடும் இறைவர் மகிழ் கருத அரிய விதமோடு
அழகுடன் ஆடும் கலப கக மயில் கடவி … (நடனத்தின் போது)
உயரும் போது, சகல உலகங்களும் அதிர்ச்சி உறவும், வீசி கங்கணம்
அணிந்த கைகள் விளங்க நடனம் செய்யும் சிவபெருமான் மகிழும்படியான அழகுடன், எண்ணுதற்கரிய வகையில் எழிலுடன் ஆடுகின்ற தோகைப் பட்சியாகிய மயிலை நடத்தி,
நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத
பெருமாளே. … அசுரர்களின் (நாற்படைகளான) யானை, தேர்,
குதிரை, காலாட்படைளுடன் போர் புரிந்த பெருமாளே.
* தாருக வனத்து முனிவர்கள் சிவனை வெறுத்து வேள்வி செய்தனர். பலி ஏற்க சிவன் அங்கு சென்றபோது, முனிவர்களின் மங்கையர் அவர் அழகைக் கண்டு மோகம் கொண்டனர். முனிவர்கள் கோபம் கொண்டு சிவனைக் கொல்ல
ஒரு கொடிய வேள்வியை ஆற்றினர். வேள்வியில் ஒரு புலி எழுந்தது. புலியைக் கொன்று அதன் தோலை உடுத்திக் கொண்டார். வேள்வியிலிருந்து பின் மழு, மான், அரவம், பூதங்கள், வெண்டலை, துடி, முயலகன் என்ற பூதம், தீ இவைகள் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. சிவன் முயலகனைத் தள்ளி மிதித்து நடனம் ஆடினார் .. சிவபுராணம்.
***
உடலும் மாமரமும் – நல்ல உருவகம்!
உடல் பற்றிப் பாடும்போது ஒவ்வொரு பாடலிலும் உடலை பல சொற்களால் வருணிக்கிறார் இங்கே ஆதபத்தி (குடை) , மாமரம் என்கிறார்!
எழுபிறவி நீர்நிலத்தில் … ஏழு பிறவிகள் என்னும் நீர் கொண்ட
நிலத்திலே,
இருவினைகள் வேர்பிடித்து … நல்வினை, தீவினை என்ற வேர்களில் ஊன்றிக்கொண்டு,
இடர்முளைகளே முளைத்து வளர் … துன்பம் என்ற முளைகள்
முளைக்க வளர்ந்து,
மாயை எனும் உலவையே பணைத்து … பொய்த் தோற்ற
உணர்ச்சிகள் என்ற கிளைகள் செழிப்புற்றுப் பெருத்து,
விரககுழையே குழைத்து … காமம் என்ற தளிர்கள் துளிர்விட்டு,
இருளிலைகளே தழைத்து மிகநீளும் … அஞ்ஞானம் என்ற
இலைகள் செழிப்புடன் தழைத்து மிகப் பெரிதாகி,
இழவுநனையேபிடித்து … கேடு என்னும் பூ மொட்டுக்கள்
அரும்புவிட்டு,
மரணபழமே பழுத்து … இறப்பு என்னும் பழம் பழுத்து,
இடியுமுடல் மாமரத்தின் … கடைசியில் முறிந்து அழிந்து போகின்ற உடல் என்னும் மாமரத்தின்
அருநீழல் இசையில்விழ … அருமையான நிழல் அதன் பண்பிழந்து வீழ்ந்து போக,
ஆதபத்தி* யழியுமுன மேயெனக்கு … (உடல் என்னும் நிழல் தரும்
மாமரக்) குடை அழிந்து போகும் முன்னரே
இனியதொரு போதகத்தை யருள்வாயே … இனிமைதரும் ஒப்பற்ற
உபதேச மொழியை அருள்வாயாக.
***
காளீய நர்த்தன கதை !
தட மகுட நாக ரத்ந பட(ம்) நெளிய ஆடு பத்ம சரண யுக
மாயனுக்கு மருகோனே … விசாலமான மகுடங்களைக் கொண்ட, நாக ரத்தினம் உள்ள (காளிங்கன் என்னும் பாம்பின்) படம் நெகிழ்வு உற நடனமாடிய தாமரை அன்ன இரண்டு திருவடிகளை உடைய
திருமாலுக்கு மருகோனே,
சரவணமிலே உதித்த குமர முருகேச சக்ர சயிலம் வலமாய்
நடத்து மயில் வீரா … சரவணப் பொய்கையில் அவதரித்த குமரனே,
முருகேசனே, சக்ரவாள கிரியை வலம் வரும்படிச் செலுத்திய மயில் வீரனே,
—subham—
Tags- திருப்புகழில் ,அருணகிரிநாதர் , அரிய செய்திகள் ,Part 69, காளியன், கோபியர், ராமர் கோபம், உடல், ஆதபத்தி, மாமரம் , உருவகம் முயலகன் அகத்தியர், தமிழ் ஆசிரியர்