நடராஜர் உடலில் நமசிவாய எழுத்துக்கள்! அருணகிரிநாதரின் புது விளக்கம்- Part 72 (Post.15,606)

Written by London Swaminathan

Post No. 15,606

Date uploaded in London –11 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 72

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 72

***

வாடா போடா – ஏக வசனத் திருப்புகழ்!

அலை கடல் கோ கோ கோ கோ என உரை கூறா … அலை

வீசும் கடல் கோகோ கோகோ என்று கூச்சலிட்டு,

ஓடா அவுணரை வாடா போடா எனல் ஆகி … ஓடும்

அசுரர்களை வாடா போடா என்று அறை கூறிப் போருக்கு அழைப்பதாகி,

அழகிய வேலால் வாளால் நிலவிய சீராவாலே … அழகிய

வேலாலும் வாளாலும், ஒளி விடுகின்ற சிறு கத்தியாலும்,

அவர் உடல் வாழ் நாள் ஈரா எதிராகி மலை மிகு தோளா

போதா அழகிய வாலா பாலா … அந்த அசுரர்களின் உடலையும்

வாழ் நாளையும் முடியும்படி எதிர்த்துப் பிளந்த மலை போன்ற பெரிய தோள்களை உடைய ஞான சொரூபனே, அழகான பாலாம்பிகையின் குழந்தையே,

மகபதி வாழ்வே சேயே மயில் வீரா … இந்திரனுடைய செல்வமே,

இறைவனின் சேயே, மயில் வீரனே,

***

நரகத்துக்குப் போவோர் பட்டியல் !

ஓது வித்தவர் கூலி கொடாதவர் … கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு

அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கூலியைக் கொடுக்காதவர்கள்,

மாதவர்க்கு அதி பாதகம் ஆனவர் … சிறந்த தவசிகளுக்கு மிக்க

இடையூறுகளை விளைவித்தவர்கள்,

ஊசலில் கனலாய் எரி காளையர் … காமத்தின் வசத்தால் நெருப்புப்

போல் கொதித்து வேதனை உறும் காளைப் பருவத்தினர்,

மறையோர்கள் ஊர் தனக்கு இடரே செயும் ஏழைகள் … வேதம்

ஓதுபவர்கள் இருக்கும் ஊர்களுக்கு துன்பம் விளைவிக்கின்ற அறிவிலிகள்,

ஆர் தனக்கும் உதாசின தாரிகள் … யாவரிடத்தும் அலட்சியமாக

நடந்து கொள்ளுபவர்கள்,

ஓடி உத்தமர் ஊதியம் நாடினர் … வேகமாக வந்து, நல்லவர்களிடத்து

(ஏமாற்றி) இலாபம் அடைய விரும்புவர்கள்,

இரவோருக்கு ஏதும் இத்தனை தானம் இடாதவர் … இரந்து

கேட்போருக்கு கொஞ்சம் கூட தானம் செய்யாதவர்கள்,

பூதலத்தினில் ஓரம தானவர் … உலகில் ஒருதலைப்பட

(பாரபட்சமாகப்) பேசுபவர்கள்,

ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர் தமை இகழ்வோர்கள் …

சிவபெருமானையும், திருமாலையும் வழிபடுவர்களை தாழ்மையாகப்

பேசுபவர்கள்,

ஏக சித்த தியானம் இலாதவர் … ஒரு முகப்பட்ட மனதுடன்

தியானம் செய்யாதவர்கள்,

மோகம் உற்றிடு போகிதம் ஊறினர் … மிகுந்த காமத்துடன் இன்ப

நிலையில் மூழ்கி இருப்பவர்கள்,

ஈனர் இத்தனை பேர்களும் ஏழ் நரகு உழல்வாரே … இழி குணம்

படைத்தவர்கள், இவ்வளவு பேர்களும் ஏழு நரகங்களில் வீழ்ந்து

அலைச்சல் உறுவார்கள்.

………………………..

          சேகு செக்குகு சேகுகு சேகுகு …… செகுசேகு சே

எனப் பலர் ஆடிட … (இதே தாள ஒலிகளுடன்) பல மக்கள் கூத்தாட,

மா கலை ஆயும் உத்தமர் கூறிடும் வாசக … சிறந்த கலைகளை

ஆய்ந்துள்ள நற்குணம் உடையவர்கள் புகழ்ந்து போற்றிடும் தேவாரப்

பாக்களைச் (சம்பந்தராக வந்து) அருளியவனே,

சேகு சித்திரமாக நின்று ஆடிய பெருமாளே. … சிவந்த

நிறத்துடன் அழகாக நின்று கூத்து** ஆடிய பெருமாளே.

ஏழு நரகங்கள் பின்வருமாறு:கூடாசலம், கும்பிபாகம், அள்ளல், அதோகதி, ஆர்வம், பூதி, செந்து (பிங்கலம்).

** முருகவேள் சூரனை வென்றவுடன் ஆடிய கூத்து, துடிக் கூத்து. அசுரர் படைகளை எல்லாம் வென்றபின் ஆடிய கூத்து, குடைக் கூத்து.

***

சுகம் = கிளி பேரின்பம்

உனை உணர்ந்து ஒரு மவுன பஞ்சரம் பயில் தரும் சுக பதம்

அடைந்து இருந்து அருள் பொருந்தும் அது ஒரு நாளே …

உன்னைத் தியானித்து ஒப்பற்ற மெளனம் என்னும் கூட்டில்

விளையாடும் (கிளியின்)* பேரின்ப நிலையை அடைந்து அதில் நிலைத்து திருவருளைப் பொருந்தி மகிழ்வதாகிய ஒரு நாள் எனக்குக் கிட்டுமோ?

வட நெடும் சிலம்புகள் புலம்பிட மகிதலம் ப்ரியம் கொடு

மகிழ்ந்திட வரு புரந்தரன் தன புரம் பெற முது கோப மகர

வெம் கரும் கடல் ஒடுங்கிட … வடக்கே உள்ள பெரிய மலைகள்

கலக்குண்டு, பூமியில் உள்ளவர்கள் அன்பு கொண்டு மகிழ்ச்சி உற, வந்து அடைக்கலம் புகுந்த இந்திரன் தன்னுடைய பொன்னுலகை அடையும்படி மிக்கக் கோபம் கொண்டது போல் பொங்கினதும், மகர மீன்களை உள்ளதுமான பெரிய கரிய கடல் அடங்கவும்,

நிசிசரன் பெரும் குலம் ஓருங்கிற வனசன் நின்று அழும்படி

நெருங்கிய ஒரு சூதம் அடியொடும் பிடுங்கிய தடம் கர

வடிவ … அசுரனாகிய சூரனின் பெரிய சுற்றங்கள் முழுதும் அழிவுபட, பிரமன் நின்று அழுது ஓலமிடும்படி நெருங்கி வந்த மாமரமாகிய சூரனை அடியோடு பிடுங்கி பிளந்தெறிந்த பெருமை வாய்ந்த திருக் கரத்தை உடைய அழகனே,

சுகம் என்பதற்கு கிளி, பேரின்பம் என்ற இரு பொருள் உண்டு. முருகன் அருணகிரிநாதருக்கு இறுதியில் கிளி உருவமும் தந்து, முக்தியும் நல்கினான்.

****

மயில் தோகையில் ஆடை!

சங்க இலக்கியம் முழுதும் தழை உடை பற்றி வருகிறது ; அது இலை களாலும் தழைகளாலும் ஆன உடுப்பு . அருணகிரிநாதர் மயில் பீலி உடுப்பு பற்றிய செய்தியை நமக்கு அளிக்கிறார்

 நிறத்த நுபுர பாதார விந்தமும் உடுத்த பீலியும் வார் ஆர்

தனங்களும் நிறத்திலே படு வேலான கண்களும் வண்டு பாட

நெறித்த ஓதியுமாய் யான் மனம் பர தவிக்க மால் தரலாமோ …

(முருகன் வள்ளியிடம் பேசிய பேச்சு) ஒளி பொருந்திய, சிலம்பணிந்த

திருவடித் தாமரைகளும், உடுத்துள்ள மயில் தோகையும்*, கச்சு

அணிந்த மார்பகங்களும், என் மார்பிலே வந்து தாக்குகின்ற வேல்

போன்ற கண்களும், வண்டுகள் பாடி ஒலிக்க சுருள் கொண்ட

கூந்தலுமாய் என் முன் நின்று, நான் மனம் வேதனைப்படும்படியான

மோகத்தை எனக்கு நீ தருதல் நன்றோ?

வேட்டுவ மக்கள் மயில் பீலியை ஆடையாக உடுப்பர்.

****

நடராஜர் உடலில் நமச்சிவாய எழுத்துக்கள் !

நகரம் இரு பாதமாகி மகர(ம்) வயிறாகி … (‘நமசிவய’ என்னும்

பஞ்சாக்ஷரத்தில்*1 ‘ந’ என்னும் எழுத்து (நடராஜ மூர்த்தியின்) இரண்டு

பாதங்களாகும். ‘ம’ என்னும் எழுத்து அவருடைய திரு வயிறு ஆகும்.

மார்பு நடு சிகரம் ஆகி வாய் வகரமாகி நதி முடி ய சாரம்

ஆகி … நடுவில் உள்ள ‘சி’ என்னும் எழுத்து அவருடைய மார்பு ஆகும். ‘வ’ என்னும் எழுத்து அவருடைய வாய் ஆகும். கங்கையைத் தாங்கிய திருமுடி, ‘ய’ என்னும் எழுத்தின் சாரமாக விளங்கும்.

உதய திரு மேனி ஆகி நமசிவய மாமை ஆகி எழு(த்) தான …

இங்ஙனம் தோன்றி இறைவனது திருமேனியாக விளங்கும் ‘நமசிவாய’ என்னும் பஞ்சாக்ஷரம் ஆகிய அழகுடன் கூடிய ஐந்து எழுத்துக்களும்

அகர உகர ஏதர் ஓம சகர உணர்வான சூரன் அறிவில்

அறிவான பூரணமும் ஆகும் … அகரம், உகரம் என்னும் எழுத்துக்கள்

மூல காரணமாக உள்ளவருடைய ஓம் (அ+உ+ம்) என்று கூடிய

அப்பிரணவத்தின் பொருள் உணர்ந்த சூரபத்மனுடைய*2 அறிவின்

அறிவொளி பரி பூரணப் பொருளாகும்.

அதனை அடியேனும் ஓதி இதய கமல ஆலையாகி மருவும்

அவதான போதம் அருள்வாயே … அந்தப் பொருளை அடியேனும்

உணர்ந்து, எனது உள்ளத் தாமரையை ஆலயமாகக் கொண்டு விளங்கும் அனுபவ ஞானத்தை அருள்வாயாக.

குகனும் அருள் ஆண்மை கூர மகரம் என்னும் சாபதாரி குறை

அகல … (தன் தாய் பார்வதி தேவிக்கு உற்ற சாபத்தைப் பொறாத)

முருகன்*3 தன் அருளையும், ஆண்மையையும் நிரம்பக் காட்டுவதற்காக,

சுறா மீனாகச் சாபம் பெற்ற (சிவ வாகனமாகிய) நந்தி தேவரின் குறைநீங்குமாறு,

வேலை மீது தனி ஊரும் குழவி வடிவாகவே … (பார்வதி தேவியும்)

கடற்கரையில் தனியாகக் கிடந்த பெண்குழந்தை வடிவு கொண்டு,

நம் பரதர் தவம் ஆக மீறு குலவு திரை சேரும் மாது தனை

நாடி … நமது வலைஞர் குலத்தவர் செய்த தவத்தின் பயனாக மிக்கு

எழுகின்ற அலைகள் வீசும் கடற்கரையில் சேர்ந்த செம்படவப்

பெண்ணாக வளர்ந்த பார்வதியைத் தேடி வந்து,

அகில உலகோர்கள் காண அதிசயம் அதாக மேவி … எல்லா

உலகங்களில் உள்ளவர்களும் பார்க்கும்படி அதிசயமான (வலைஞர்)

உருவத்துடன் வந்து,

அரிய மணமே செய்து ஏகு அவ்வலை தேடி … அருமையான

திருமணம் செய்து நீங்கிய அந்த ‘வலை – தேடி’ யாக வந்த

சிவபெருமான்தான்

அறு முக வன் மீகரான … ஆறு முகத்தராய் எனக்கு விளங்கி வன்மீக நாதர் என்னும் பெயருடன் (இந்தத் திருவாரூரில்) விளங்கி நிற்க, பிறவி யம ராசை வீசும் அசபை செகர் சோதி நாத

பெருமாளே. … பிறப்பையும், யம ராஜனையும் (இறப்பையும்) ஒதுக்கித் தள்ள வல்ல அஜபா*4 மந்திரப் பொருளாகி, உலக மக்கள் காண ஜோதி வடிவமாய் விளங்கும் பெருமாளே.

இப்பாடலில் ஐந்தெழுத்து மந்திரத்தின் எழுத்து விளக்கமும், ஓம் என்னும் பிரணவத்தின் விளக்கமும், சிவபெருமானே ஆறு முக வள்ளலாகத் தோன்றினார் என்னும் தத்துவமும் விளக்கப் பட்டுள்ளன. சிவன் வேறு, முருகன் வேறு அல்ல என்பது கருத்து.

(*1) பஞ்சாக்ஷர விளக்கம்:

ந = திருவடி,   ம = வயிறு,   சி = தோள் (மார்பு),   வ = முகம்,   ய = தலை.

ஐந்து எழுத்தால் அமைந்த திருமேனியே திருவருளாகும். அத்திருமேனியே திருவடி உணர்வாகும்.

(*2) ‘ஓம் சகர உணர்வான சூரன்’:

ஓம்’ என்னும் பிரணவத்தின் பொருள் உணர்வை சூரபத்மன் அறிந்திருந்தான்.

யார்க்கும் மூல காரணமாய் நின்ற மூர்த்தியின் மூர்த்தி யன்றோ,

இப்பொழுதில் ஈசன் இவனெனும் தன்மை கண்டேன்”

… என்று சூரனுக்கு முருகவேள் தரிசனம் அளித்தபோது போற்றி நின்றான்- கந்த புராணம் 4.13.430. அந்த ஞானத்தை எனக்கும் அருள் புரிக என்று அருணகிரியார் வேண்டுகிறார்.

(*3) இது சிவபெருமான் வலை வீசிய திருவிளையாடலைக் குறிக்கும். தாய்க்கு உற்ற சாபத்தைக் கேட்ட விநாயகரும், முருகனும் கோபித்து சிவபெருமானின் புத்தகங்களைக் கடலில் வீசி எறிந்தனர். முருகனை நீ வணிகர் குலத்தில் ருத்திர சன்மன் என்ற ஊமைப் பிள்ளையாகப் பிறக்கக் கடவாய் என்று சபித்தார். தந்தை முன் அஞ்சாது நின்றதால் முருக வேள் ஆண்மையாளர் எனப்பட்டார். செம்படவப் பெண்ணாக வந்த பார்வதியை

சிவபெருமான் வலைஞராக வந்து மணந்தார்.

(*4) இது அஜபா மந்திரம்:

ஸோஹம் = ஸஹ + அஹம் = ‘அவன் நான்’ எனப்படும் ஸோஹம்.

அதாவது ‘ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று’ என்று பாவித்தல் வேண்டும் என்பது கருத்து.

–subham—

Tags- நடராஜர் உடல், நமசிவாய எழுத்துக்கள், அருணகிரிநாதரின் புது விளக்கம், Part 72, நரகத்துக்குப் போவோர் பட்டியல், வாடா போடா

Leave a comment

Leave a comment