உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் எவை? இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது? (Post.15,609)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,609

Date uploaded in London – 12 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகள் எவை? இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது? 

ச. நாகராஜன் 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20ம் நாள் உலக மகிழ்ச்சி தினமாக (வோர்ல்ட் ஹாப்பினெஸ் டே) கொண்டாடப்படுகிறது. அன்று வோர்ல்ட் ஹாப்பினெஸ் ரிபோர்ட் வெளியாகிறது. அதன்படி 2026ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி வெளிவந்த உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் தர வரிசை அறிவிக்கப்பட்டு விட்டது.

இதன் படி 140 நாடுகளில் முதல் 20 இடங்களைப் பிடித்த நாடுகள் இவை தான்:    

1)      பின்லாந்து

2)      ஐஸ்லாந்து

3)      டென்மார்க்

4)      கோஸ்டா ரிகா

5)      ஸ்வீடன்

6)      நார்வே

7)      நெதர்லாந்து

8)      இஸ்ரேல்

9)      லக்ஸம்பர்க்

10)   ஸ்விட்சர்லாந்து

11)   நியூஜிலாந்து

12)   மெக்ஸிகோ

13)   அயர்லாந்து

14)   பெல்ஜியம்

15)   ஆஸ்திரேலியா

16)   கொஸோவோ

17)   ஜெர்மனி

18)   ஸ்லோவெனியா

19)   ஆஸ்திரியா

20)   செக்கியா

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் நல ஆய்வு மையமானது ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல குழுக்களுடன் சேர்ந்து இந்த ஆய்வை நடத்தி முடிவை வருடந்தோறும் அறிவிக்கிறது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோரிடம் தங்களின் வாழ்க்கை முறையை ஒன்று முதல் பத்து வரை உள்ள தர வரிசையில் குறிக்குமாறு கேட்கப்படுகின்றனர். இது காலப் வோர்ல்ட் போல் என்ற தரவு மையத்திற்குச் சென்று தரவுகளின் அடிப்படையில் முடிவு அறிவிக்கப்படுகிறது/

ஆங்கிலம் பேசும் நாடுகள் இரண்டாவது வருடமாக முதல் பத்து இடங்களைப் பிடிக்கவில்லை. அமெரிக்கா 23வது இடம், கனடா 25வது இடம். இங்கிலாந்தோ 29வது இடம். நார்டிக் நாடுகள் எனப்படும் வட ஐரோப்பா நாடுகள் தாம் எப்போதுமே முதல் வரிசையில் அணி வகுக்கின்றன.

10 எண் தரவரிசையில் 7.764 என்ற எண்ணைப் பெற்று பின்லாந்து வழக்கம் போல முதலிடத்தைப் பிடித்து விட்டது.

சரி, இந்தியாவின் நிலை என்ன என்று பார்ப்போமா?

இந்தியா 116வது இடத்தில் இருக்கிறது. மகிழ்ச்சிகரமான விஷயம் என்னவெனில் 2023ம் ஆண்தில் 126 இடம், 2024ல் 118 இடம் என்று இருந்த நாம் இருபடி முன்னேறி 116வது இடத்தைப் பிடித்திருக்கிறோம்.

அண்டைநாடுகளான நேபாளம் 99வது இடம், பாகிஸ்தான் 104வது இடம், பங்களா தேஷ் 127வது இடம். உலகில் மிக மோசமான 147வது இடத்தைப் பிடித்து மகிழ்ச்சியே இல்லாத நாடாக ஆப்கானிஸ்தான் இருக்கிறது.

அது சரி, மகிழ்ச்சி எப்படி அளக்கப்படுகிறது?

ஆறு முக்கிய அம்சங்களை வைத்து மகிழ்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது.

வருவாய், ஆரோக்கியமாக வாழும் ஆயுள் எல்லை, கஷ்டம் வரும்போது ஒருவருக்கு உதவ தயாராக இருப்பது, தாராள மனப்பான்மை, சுதந்திரம், விஸ்வாசம் ஆகிய ஆறு அம்சங்களைச் சுட்டிக் காட்டி ஒன்று முதல் பத்து வரை உள்ள ஏணி வரிசையில் எங்கு நிற்கிறீர்கள் என்று ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரம் பேரிடம் கேட்கப்படுகிறது. நாட்டின் ஜனத்தொகையைப் பொறுத்து இந்த எண்ணிக்கை மாறும். 

இந்த ஆய்வின் முடிவு நம்பிக்கைக்குரியது தானா என்பதில் கருத்து வேறுபாடும் இருக்கிறது. மேலை நாட்டு வாழ்க்கைமுறையின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகள் இந்தியாவின் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைக்குப் பொருந்தாது என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது.

தாராள மனப்பான்மை என்பது ஒருவர் கொடுக்கும் பணத்தை வைத்து நிர்ணயிக்கப்படாமல் எத்தனை பேர் கொடுத்தார்கள் என்பதை வைத்து நிர்ணயிக்கப்படுகிறது.

என்றாலும் மகிழ்ச்சி அறிக்கை மகிழ்ச்சி அறிக்கை தான்! 

இந்தியாவில் பின்லாந்தின் தூதுவராக இருக்கும் கிம்மோ லாடெவிர்டா சொன்னதை இந்தியர்களாகிய நாம் ஏற்க வேண்டியது தான். 2026ம் ஆண்டு அறிக்கையில் பின்லாந்து முதல் இடத்தை வழக்கம் போல பிடித்தவுடன் அவர் கூறினார்: “பின்லாந்து தான் உலகின் மகிச்சிகரமான நாடு என்பது குறிப்பிடத்தகுந்தது.  இந்தியர்கள் தாம் உலகிலேயே நன்னம்பிக்கையுடைய ஆப்டிமிஸ்டிக் மக்கள் என்று நான் கருதுகிறேன். ஆகவே இந்திய நன்னம்பிக்கையும் பின்லாந்து மகிழ்ச்சியும் இணைந்தால் அதுவே வெற்றிக்கான இணைவுப் பொருத்தமாக இருக்கும்.” 

எங்கள் வாழ்க்கைமுறை திருப்தியான வாழ்க்கை முறை என்பதே இந்திய மக்கள் கூறும் பொதுவான கருத்து!

**

Leave a comment

Leave a comment