திருப்புகழில் 18  கணங்கள், வாதம் செய்கின்ற எட்டு வகையான வாதிகள்- part 73 (Post No.15,610)

Written by London Swaminathan

Post No. 15,610

Date uploaded in London –12 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 73

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 73

***

18 கணங்கள் , வள்ளியின் பிறப்பு

மற்றைப் பதினெட்டுக் கண வகை சத்திக்க நடிக்கப் பல பல

வர்க்கத் தலை தத்தப் பொரு படை உடையோனே … மற்றும்

பதினெட்டு கண வகைகளும் ஒலி செய்து நடனமாட, பல வகையான ஜீவ ராசிகளின் தலைகள் சிதறுண்டு விழும்படியாக சண்டை செய்த வேலாயுதத்தை உடையவனே,

முத்திப் பரமத்தைக் கருதிய சித்தத்தினில் முற்றத் தவ முனி

முற்பட்டு உழை பெற்றுத் தரு குற மகள் மேல் மால் முற்றித்

திரி வெற்றிக் குருபர … முக்தி என்னும் மேலான பொருளைப் பெற

நினைத்த உள்ளத்தோடு, முதிர்ந்த தவ நிலையில் இருந்த சிவ முனிவரின் (உருவில் வந்த திருமாலின்) முன்னிலையில் நின்று லக்ஷ்மியாகிய பெண் மான் பெற்றுத் தந்த குற மகளாகிய வள்ளியின்* மேல் ஆசை நிரம்பக் ண்டு, (வள்ளி இருந்த தினைப் புனத்தில்) திரிந்த வெற்றி வீரனாகிய குரு மூர்த்தியே,

முற்பட்ட முரட்டுப் புலவனை முட்டைப் பெயர் செப்பிக் கவி

பெறு பெருமாளே. … எதிர்ப்பட்ட பிடிவாதம் பிடித்த பொய்யாமொழி**

என்னும் புலவனை முட்டை என்ற பெயர் என்று சொல்லி, அந்தப்

புலவனைத் தம் மீது பாடவைத்த பெருமாளே.

சிவ முனிவர் தவ நிலையில் இருக்க, திருமகள் மானுருவுடன் எதிரில் செல்ல, அந்த மான் ஒரு பெண் குழவியை ஈன்றது. இக்குழந்தை வேடர்களால் வளர்க்கப்பட்டு வள்ளிக் கிழங்கு தோண்டிய குழியில் இருந்ததால் வள்ளி எனப் பெயரிடப்பட்டது.

யார் அந்த 18 கணங்கள்?

புறநானூற்றில் மஹாதேவன் என்ற புலவர் சொன்ன 18 கணம் விஷயத்தை அருணகிரிநாதரும் பாடியுள்ளார்!

தேவார, திவ்யப் பிரபந்த காலம் வரை, கம்ப ராமாயண காலம் வரை மக்களையும் அவருக்கு மேலானவர்களையும் 18 பிரிவுகளாகப் பிரித்தனர்:-தேவர், அசுரர், முனிவர், கின்னரர், கிம்புருடர், கருடர், இயக்கர், இராக்கதர், கந்தருவர், சித்தர், சாரணர், வித்தியாதரர், நாகர், பூதம், வேதாளம், தாரா கணம் (நட்சத்திரவாசிகள்) , வானுலக வாசிகள், போகபூமியர்..

நாகர், கருடர் என்று சொன்னவுடன் பாம்பு, கருடன் என்னும் பறவை என்று எண்ணி விடாதீர்கள். அந்தக் காலத்தில் ஒவ்வொரு சின்னத்தை வைத்துக் கொண்டவர்கள் தங்களை கரடி (ஜாம்பவான்) கழுகு (ஜடாயு), குரங்கு (வானர) என்று அழைத்துக் கொண்டனர். இப்பொழுதும் உலகம் முழுதும் பழங்குடி மக்களிடையே இவ்வழக்கம் உள்ளது. வேத காலத்தில் துவங்கிய வழக்கம் இது.

இன்னும் ஒரு சுவையான விஷயம் 18 கணம் பற்றிய பழங்காலப் பாடலாகும்; இது அடியார்க்கு நல்லார் தரும் பாடல்:-

கின்னரர் கிம்புருடர் விச்சாதரர் கருடர்

பொன்னமர் பூதர் புகழியக்கர் – மன்னும் உரகர் சுரர் சாரணர்

முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்; கந்தருவர்

தாரகைகள் காணப் பிசாசகணம் ஏந்து புகழ் மேய விராக்கதரோ

டாய்ந்ததிறர் போகா வியல்புடைய போகபுவியுருடனே ஆகாசவாசிகளாவர்.

***

வெளி உலகவாசிகள் பற்றி புறநானூறு

புறநானூற்றில் பைலட் இல்லாத ஏரோப் பிளேன் (Pilotless Plane/ drone வலவன் ஏவா வான ஊர்தி- பாடல் 27) முதலிய பல அறிவியல் கூற்றுகள் இருப்பது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதிவிட்டேன். முதல் பாட்டில் வெளி உலகத்தில் அறிவுசார்ந்த உயிரினங்கள் உண்டு என்பதை உறுதிபடக்  கூறுகிறார் மிஸ்டர் மஹாதேவன். இவர் அந்தக் காலத்திலேயே மஹாபாரதத்தைத் தமிழில் பாடியதால் பாரதம் பாடிய பெருந்தேவானார் என்று அழைக்கப்படுகிறார். இவர் வானுலகவாசிகள் பற்றிச் சொல்லும் செய்தி சுவைமிக்கது; 18 கணங்களில் ஆகாசவாசிகள், நட்சத்திரங்கள் பற்றி வருகிறது. அர்ஜுனனை மாதரி என்பவன் வெளி உலகத்துக்கு அழைத்துச் சென்றபோது விண்வெளி ஓடத்திலிருந்து, ஒளிமிகுந்த பொருள்களைக் கண்டு ஆச்சர்யத்தோடு வினவுகிறான்.

இவைகளைத்தான் பூமியில் உள்ளோர் நட்சத்திரங்கள் என்று சொல்லுவர் என்று மாதரி விளக்குகிறான். இது மஹாபாரதம் வனபர்வத்தில் உள்ள விஷயம்.

எகிப்தியர்களும் மன்னர்கள் இறந்தவுடன் நட்சத்திரத்தோடு கலந்துவிடுவதாக நம்பினர். நாமும் துருவன், அகஸ்தியர், ஏழு ரிஷிகள் (ஸப்தரிஷி  மண்டலம்) , கார்த்திகை, ரோகிணி, அருந்ததி ஆகியோரை நட்சத்திரங்களாக வணங்குகிறோம்.

கண்ணி கார் நறுங் கொன்றை; காமர்

வண்ண மார்பின் தாரும் கொன்றை;

ஊர்தி வால் வெள்ளேறே; சிறந்த

சீர்கெழு கொடியும் அவ் ஏறு என்ப;

கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே;

பெண் உரு ஒரு திறன் ஆகின்று; அவ் உருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் சுரக்கும்;

பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப் பிறை

பதினென்கணனும் ஏத்தவும் படுமே —

எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய

நீர் அறவு அறியாக் கரகத்து,

தாழ்சடைப் பொலிந்த, அருந்தவத்தோற்கே

— புறநானூறு முதல் பாடல், பாரதம் பாடிய பெருந்தேவனார்/ MR MAHADEVAN

***

வாதம் செய்கின்ற எட்டு வகையான வாதிகள்

அகில வாதிகளுஞ்சம யங்களும் … மாறுபட்ட எல்லா வாதிகளும்*, சமயங்களும்

அடைய … ஒதுங்கிப் போய்விடவும்,

ஆமென அன்றென நின்றதை … உள்ளது என்றும், இல்லது

என்றும் நின்ற உண்மைப் பொருளை

அறிவி லேனறி யும்படி … அறிவில்லாத சிறிய அடியேன்

அறியும்படியாக

இன்றருள் புரிவாயே … இன்றைய தினம் உபதேசித்து அருள்

புரிவாயாக.

வாதம் செய்கின்ற எட்டு வகையான வாதிகள் பின்வருமாறு:

  தேக ஆத்மவாதி – உடம்புதான் ஆத்மா என வாதிப்பவன்,

  கரண ஆத்மவாதி – மனமும் புத்தியும்தான் ஆத்மா என வாதிப்பவன்,

  இந்திரிய ஆத்மவாதி – இந்திரியங்களே ஆத்மா என வாதிப்பவன்,

  ஏகாத்மவாதி – ஆத்மாவைத் தவிர வேறில்லை என வாதிப்பவன்,

  பிம்பப் ப்ரதிபிம்பவாதி – பிரமத்தின் நிழல்தான் உலகம் என வாதிப்பவன்,

  பரிணாமவாதி – பால் தயிராவது போல பிரமமே உலகானது என வாதிப்பவன்,

  விவர்த்தனவாதி – பிரமத்திலிருந்து தான் உலகம் வந்தது என வாதிப்பவன்,

  கணபங்கவாதி – கணந்தோறும் வேறுவேறு ஆத்மா உடம்பில் வருகிறது என வாதிப்பவன்.

***

ஆறு கெட்ட குணங்கள்!

ஆறும் மிடை வாள் அரக்கர் நீறு பட வேல் எடுத்த ஆறு

முகனே குறத்தி மணவாளா … ஆறு வகைக் கெட்ட குணங்கள்*

நிறைந்தவர்களும், வாட்படை ஏந்தியவர்களும் ஆகிய அசுரர்கள்

பொடிபட்டு அழிய வேலாயுதத்தைச் செலுத்திய ஆறுமுகப்பிரானே,

குறப் பெண் வள்ளியின் கணவனே.

ஆழி உலகு ஏழு அடக்கி வாசுகியை வாய் அடக்கி ஆலும்

மயில் ஏறி நிற்கும் இளையோனே … கடலால் சூழப்பட்ட ஏழு

உலகங்களையும் அடக்கி, வாசுகிப் பாம்பின் வாயை அடக்கிக்

கூச்சலிடும் மயில் மீது ஏறி விளங்கும் இளையோனே,

சீறு பட மேரு வெற்பை நீறு படவே சினத்த சேவலவ நீபம்

மொய்த்த திரள் தோளா … மிக்க சினத்துடன் மேருமலையை

பொடியாகும்படி கோபித்த சேவற் கொடியோனே, கடப்பமாலையை

நெருக்கமாய் அணிந்த திரண்ட தோளனே,

சேரும் அடலால் மிகுத்த சூரர் கொடு போய் அடைத்த தேவர்

சிறை மீள விட்ட பெருமாளே. … கூடியுள்ள வலிமையால் வெற்றி

மிக்குள்ள சூரர்கள் கொண்டு போய் அடைத்த தேவர்களின் சிறையை

நீக்கிய பெருமாளே.

ஆறு கெட்ட குணங்கள்:

காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாற்சர்யம்.

(மாற்சரியம் (māṟcariyam) என்பது பிறர் நலமுடன் வாழ்வதைக் கண்டு பொறாமைப்படுதல், பகைமை அல்லது காழ்ப்புணர்ச்சி கொள்ளுதல் மற்றும் பிறர் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணுவதைக் குறிக்கும்).

—subham—

Tags- ஆறு கெட்ட குணங்கள், 18 கணங்கள், எட்டு வகை வாதிகள், திருப்புகழில், அருணகிரிநாதர், அரிய செய்திகள் Part 73

Leave a comment

Leave a comment