அருணகிரி நாதர் தொடுத்த விநோதப் பூ மாலை -Part 74 (Post No.15,614)

Written by London Swaminathan

Post No. 15,614

Date uploaded in London –13 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 74

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 74

***

கடவுளரிடையே புதிய உறவு முறைகள் !

மத்தக யானை உரித்தவர் பெற்ற குமார இலட்சுமி

மைத்துனனாகிய விக்ரமன் மருகோனே … கும்பத் தலத்தை

உடைய (கயாசுரன் என்ற) யானையின் தோலை உரித்தவராகிய

சிவபெருமான் அருளிய மகனே, லட்சுமிக்கு மைத்துன* முறையில் உள்ள வலிமையாளனான திருமாலுக்கு மருகனே,

வற்றிட வாரிதி முற்றிய வெற்றி கொள் சூரர் பதைப்பு உற

வற்பு உறு வேலை விடுத்து அருள் இளையோனே … கடல்

வற்றிப் போகவும், நிரம்ப வெற்றி மமதையுடன் விளங்கிய சூரர்கள்

பதைக்கும்படியாகவும், வலிமை உடைய வேலாயுதத்தைச் செலுத்தி

அருளிய இளையோனே,

சித்திரமான குறத்தியை உற்று ஒரு போது புனத்து இடை

சிக்கெனவே தழுவிப் புணர் மணவாளா … அழகிய குறப்பெண்

வள்ளியை அடைந்து, ஒரு சமயத்தில் தினைப் புனத்தில் சிக்கெனத்

தழுவிச் சேர்ந்த மணவாளனே,

செச்சை உலாவு பதத்தின மெய்த் தவர் வாழ்வு பெறத் தரு

சித்த விசாக இயல் சுரர் பெருமாளே. … வெட்சி மலர் சூழும்

பதத்தினனே, உண்மைத் தவசிகள் அழியாத இன்ப வாழ்க்கையைப்

பெறுமாறு உதவுகின்ற சித்த மூர்த்தியே, விசாகனே, தகுதியுள்ள

தேவர்களின் பெருமாளே.

ஒரு சமயம் திருமாலும், அவரது அம்சமான உபேந்திரரும், லக்ஷ்மியும் உரையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த கண்வ முநிவரைக் கவனிக்காததால், முநிவர் கடுங்கோபம் அடைந்து அவர்களை முறையே சிவ முநிவராகவும், வேடர் மன்னனாகவும், மானாகவும் பிறக்க சபித்து விடுகிறார். அடுத்த பிறப்பில் சிவமுநிவரான திருமாலுக்கும், மானாகிய லக்ஷ்மிக்கும் பிறக்கும் வள்ளியை உபேந்திரனான வேடர் மன்னன் நம்பிராஜன் கண்டெடுத்து வளர்க்கிறான். வள்ளியின் வளர்ப்புத் தந்தை உபேந்திரன் திருமாலின் தம்பியானதால் லக்ஷ்மிக்கு  மைத்துனன் முறை ஆகிறது. எனவே வள்ளியை மணந்த முருகன் லக்ஷ்மியின்  மைத்துனனின் மருகன் என்று இங்கு குறிப்பிடுகிறார்.

****

யாதுதானர் என்றால் பொருள் என்ன ?

ஆசார வீனன் அறிவிலி … ஒழுக்கக் குறைவு உடையவன்,

அறிவில்லாதவன்,

கோப அபராதி யவகுணன் … கோபம் காரணமாகக் குற்றங்கள்

பல செய்பவன், கெட்ட குணத்தை உடையவன்,

ஆகாத நீசன் அநுசிதன் … யாருக்கும் பயனாகாத இழிந்த

குணத்தவன், தகாத காரியங்களைச் செய்யும் அசுத்தன்,

விபரீதன் … மாறுபாடான புத்தியை உடையவன்,

ஆசாவிசார வெகுவித மோக ஆசரீத பரவசன் … (மண், பெண்,

பொன் என்ற) மூவாசைகளிலே எண்ணத்தை வைத்து, பலவிதமான

ஆசைச் செயல்களைச் செய்து தன்வசம் இழந்தவன்,

ஆகாச நீர்மண் அனல்வளி யுருமாறி … ஆகாயம், நீர், மண், தீ,

காற்று என்ற பஞ்சபூதச் சேர்க்கையால் வெவ்வேறு பிறவிகளில் பல

உடல்களை எடுத்து,

மாசான நாலெண் வகைதனை … குற்றங்களுடன் கலந்த

முப்பத்திரண்டு* தத்துவங்களைக் கொண்ட

நீநானெனாத அறிவுளம் வாயாத பாவி … இந்த உடல்களை நீ

என்பதும் நான் என்பதுமான பிரிவைக் காணாத, ஞான உள்ளம்

வாய்க்கப் பெறாத பாவி,

இவனெனநினையாமல் … இத்தனையும் இவன் என்று நினைத்து

என்னை நீ ஒதுக்கி விடாமல்,

மாதாபிதாவின் அருள் நல மாறா மகாரிலெனையினி … தாய்

தந்தையரின் அருள் நிறைந்த உபகாரச் செயல்கள் மாறாத குழந்தைகள்

போல, உன் குழந்தையாகிய என்மீது இனிமேலாயினும்

மாஞான போதம் அருள்செய நினைவாயே … சிறந்த

ஞானோபதேசத்தை அருள்வதற்கு உன் திருவுள்ளத்தில் நினைப்பாயாக.

வீசால வேலை சுவறிட … அகன்ற சமுத்திரமானது வற்றிப் போகவும்,

மாசூரர் மார்பு தொளைபட … பெரிய சூரன் முதலியோரது மார்புகள்

தொளைபடவும்,

வேதாள ராசி பசிகெட … வேதாள கணங்களின் பசி (சூர

சம்ஹாரத்தால்) தீர்ந்திடவும்,

அறைகூறி … போருக்கு வாருங்கள் என்று அசுரர்களைக் கூவி

அழைத்து,

மேக ஆரவார மெனஅதிர் போர் … மேகங்களின் பெரும்

ஆரவாரமான இடியோசை போல முழங்கும் போரில்,

யாது தானர்** எமபுர மீதேற … அரக்கர்கள் யம பட்டணம் போய்ச்

சேரும்படியாக,

வேல்கொடு அமர்செயும் இளையோனே … வேலைக் கொண்டு

போர் செய்த இளையோனே,

கூசாது வேடன் உமிழ்தரு நீராடி … கொஞ்சமும் தயங்காது

வேடன் கண்ணப்பன் வாயினின்று உமிழ்ந்த நீர் அபிஷேகத்தைப்

பெற்றுக்கொண்டு,

ஊனு ணெனுமுரை கூறா … இந்த மாமிசம் சுவையானது, இதை

உண்டருள்க என்று அவன் கூறிய சொல்லைக் கேட்டு,

மன் ஈய அவனுகர் தருசேடம் … நிரம்பவும் அவன் தருவதை, அந்த

வேடன் எச்சில் செய்து தந்த மீதம்

கோதாம் எனாமல் அமுதுசெய் … குற்றமுள்ளது என்று பாவிக்காமல்

அமுதாக எண்ணி உண்டு அருளியவரும்,

வேத ஆகமாதி முதல்தரு கோ … வேதங்களுக்கும் ஆகமங்களுங்கும்

ஆதி முதல்வர் ஆனவருமான சிவபிரான் பெற்றெடுத்த அரசனே,

லோக நாத குறமகள் பெருமாளே. … இந்த உலகத்துக்கெல்லாம்

நாதனே, குறமகள் வள்ளியின் பெருமாளே.

* 32 தத்துவங்கள் பின்வருமாறு:

ஆத்ம தத்துவம் 20, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.

** ‘யாது தானர்’ என்றால் திதியின் மக்கள் யாதுக்களும், தனுவின் மக்கள்  தானவருமாகிய அரக்கர்கள். இவர்களே அரக்கர்குல முன்னோடிகள் ஆவர். 

***

அருணகிரி நாதர் தொடுத்த விநோதப் பூ மாலை


ஆசைகூர் பத்தனேன் … உன் மீது ஆசை மிகுந்த பக்தியை

உடைய நான்

மனோ பத்மமானபூ வைத்து … மனம் எனப்படும் தாமரை மலரை

வைத்து,

நடுவேயன்பானநூலிட்டு … இடையில் அன்பு என்னும் நாரைக்

கொண்டு,

நாவிலே சித்ரமாகவே கட்டி … நாக்கு என்னும் இடத்திலே அழகான ஒரு மாலையைத் தொடுத்து,

ஒருஞான வாசம்வீசி … அந்த மாலையின் மீது ஒப்பற்ற ஞானம்

என்னும் நறுமணத்தைத் தடவி,

ப்ரகாசியா நிற்ப … அந்த மாலை மிக்க ஒளியுடன் விளங்கவும்,

மாசிலோர் புத்தி யளிபாட … அதைச் சுற்றி குற்றமற்ற ஒரு அறிவு

என்ற வண்டு மொய்த்துப் பாடவும்,

மாத்ருகா புஷ்ப மாலை … மாத்ருகா மந்திர* மாலையான இந்தப்

பூமாலையை

கோல ப்ரவாள பாதத்தில் அணிவேனோ … அழகிய பவளம்

போல் சிவந்த திருவடிகளில் அணிவிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ?

மூசுகானத்து மீதுவாழ் … சிள்வண்டுகள் மொய்க்கும் காட்டிலே

வாழ்கின்ற,

முத்த மூரல்வே டிச்சி தனபார மூழ்கு … முத்தை நிகர்த்த அழகிய

பற்களை உடைய, வேடர் குலப்பெண் வள்ளியின் மார்பகத்தில் முழுகி அழுந்திக் கிடக்கும்,

நீபப்ரதாப மார்பத்த … கடப்ப மாலையைச் சிறப்பாக அணியும்,

மார்பை உடைய ஐயனே,

மூரிவே ழத்தின் மயில்வாழ்வே … வலிமையான ஐராவத யானை

வளர்த்த மயிலின் சாயலுள்ள தேவயானையின் மணவாளனே,

வீசுமீன் அப் பயோதிவாய் விட்டு வேக … அலை வீசும், மீன்கள்

மிகுந்த, கடல் பேரொலியோடு வெந்து வற்ற,

வேதித்து வருமாசூர் வீழ … தேவர்களை வருத்தித் துன்புறுத்தி

வந்த பெரும் சூரன் அழிபட்டு விழ,

மோதிப் பராரை நாகத்து … தாக்குதல் செய்து, பருத்த

அடிப்பாகத்தை உடைய கிரெளஞ்சமலை மீது

வீரவேல் தொட்ட பெருமாளே. … வீரம் பொருந்திய

வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.

வடமொழியில் அ முதல் க்ஷ முடிய உள்ள 51 அக்ஷரங்களைக் கொண்ட மாத்ருகா புஷ்ப மாலை. சுப்ரமண்ய பராக்ரமம் என்ற நூலில் வரும் இந்த மந்திரம், முருகன் 51 அக்ஷர உருவில் இருப்பதை விளக்குகிறது.

–subham—

Tags– யாதுதானர், மாத்ருகா புஷ்ப மாலை, அருணகிரி நாதர் ,விநோதப் பூ மாலை, கடவுளரிடையே,  புதிய உறவு முறைகள் !

Leave a comment

Leave a comment