5 சிவன் கோவில்களில் தரிசனம்! சனி பகவான் குடும்பத்தையும், சுக்கிரனையும் தரிசித்தேன்- Part1 (Post.15,615)

Written by London Swaminathan

Post No. 15,615

Date uploaded in London –13 April 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஐந்து சிவன் கோவில்களில் தரிசனம்; சனி பகவான் குடும்பத்தையும், சுக்கிரனையும் தரிசித்தேன்

Part one

கும்பகோணத்திலிருந்து காரில் புறப்பட்டு புகழ்பெற்ற திருவிடை மருதூர் , திருபுவனம் , திருவாவடுதுறைக் கோவில்களில் சிவபெருமானைத் தரிசித்தேன் . ஒரே பகல் பொழுதில் எளிதான , சுகமான தரிசனம்!. இதை மார்ச் 9- ஆம் தேதி மூன்றே மணி நேரத்தில் செய்து முடித்தேன் அத்துடன் போனஸ் பயணமாக கஞ்சனூர் சுக்கிரபகவானுடன் சிவ பெருமானையும் தரிசனம் செய் தேன்.

மார்ச் 12- ஆம் தேதி ஒரு சர்ப்ரைஸ் SURPRISE  காத்திருந்தது . திருநறையூர் (தற்போது நாச்சியார்கோயில்) என்று சொன்னவுடன் எல்லோருக்கும் கல் கருடனும் விஷ்ணு பகவானும்தான் நினைவுக்கு வரும் . அங்கு புகழ்பெற்ற சிவன் கோவில் இருப்பதும் அந்தக் கோவிலுக் குள்ளேயே சனிபகவான் குடும்பத்துடன் வீற்றிருந்து அருள் பாலிப்பதும் பலருக்கும் தெரிந்திராது.

ஐந்து கோவில்களையும் நான் சென்ற வரிசைக் கிரமத்தில் சுருக்கமாகக் காண்போம் . எல்லா இடங்களும் அருகருகில் இருக்கின்றன தஞ்சை, திருச்சி பிரதேசத்தில் தடுக்கி விழுந்தால் கோவில்தான் ; எதைப்  பார்ப்பது எதை விடுவது என்று திணறிப்போவோம்.

திருவிடைமருதூர்  (9-3-2026)

திருபுவனம்

திருவாவடு துறை

கஞ்சனூர்

திருநறையூர் (12-3-2026)

***

திரு என்ற சிறப்பு முன்னொட்டு இருப்பதால் இவை அனைத்தும் பாடல் பெற்ற தலங்கள் என்பது விளங்கும் ; அப்படியானால் குறைந்தது 1400 ஆண்டுகள் பழமையானவை; தேவார மூவரும் திருவாசக மாணிக்கவாசகரும் ஒரு கோவிலுக்குச் சென்று பாடி அது நமக்கு கிடைத்திருக்கிறதென்றால் அது அவர்களுக்கு முன்னரே பிரசித்தி பெற்று இருந்ததால்தான் அவர்கள் அங்கே சென்றனர் என்றும் நமக்குத் தெரிகிறது .

நான் முதலில் காலை ஒன்பது மணிக்குச் சென்றது திருவிடைமருதூர் சிவன் கோயில்.

திருவிடைமருதூர்

 (Thiruvidaimarudur) கும்பகோணத்திற்கு அருகில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது.  இத்தலத்தில் , புகழ்பெற்ற மகாலிங்கேஸ்வரர் கோயிலுள்ளது.  இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பட்ட தேவாரத் தலம்.

இறைவன்: மகாலிங்கேஸ்வரர் (மருதவாணர்), இறைவி: பிருகத்  சுந்தர  குஜாம்பிகை (பெருநலமுலையம்மை).

தல மரம்:  மருத மரம்  ;

தீர்த்தம் : அயிராவணத்துறை, காவிரி, காருண்ய அமிர்த தீர்த்தம் 

வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர் ,சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்த்தேவர், பரணதேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார், உமாதேவியார், ருத்திரர், மூத்த பிள்ளையார், முருகர் முதலியோர்.

பாண்டிய மன்னன் ஒருவன் பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட தலம் இதுதான் ; இங்கே தைப்பூசத் திருவிழா பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது .

சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயில், கம்பீரமான வீதிகளையும், கோபுரங்களையும் கொண்டது. பெரிய கோவில் ; ஆனால் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை .

கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில், மயிலாடுதுறை செல்லும் சாலையில் திருவிடைமருதூர் அமைந்துள்ளது.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் மூன்று மருத மரமுள்ள தலங்கள் பற்றி சொற்பொழிவு ஆற்றியுள்ளார் .

மூன்று மருத மர தலங்கள்

மருத மரத்தை தல விருட்சமாகக் கொண்டு, சிவனின் அருள்பெறும் முக்கிய மூன்று மருத மரத் தலங்கள் (அர்ஜுன ஷேத்திரங்கள்) :–

மல்லிகார்ஜுனம் (ஸ்ரீசைலம்): ஆந்திர மாநிலத்தில் உள்ளது, இது மேல்மருதூர் எனப்படுகிறது.

மத்யார்ஜுனம் (திருவிடைமருதூர்): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம், இது இடைமருதூர் எனப்படுகிறது.

புடார்ஜுனம் (திருப்புடைமருதூர்): திருநெல்வேலி மாவட்டத்தில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள தலம், இது கீழ்மருதூர் எனப்படுகிறது.

இந்த மூன்று தலங்களும் முறையே வடமருது, இடைமருது, கீழ்மருது என்று அழைக்கப்படுகின்றன.

அர்ஜுனம் என்பது மருத மரத்தைக் குறிக்கும், சிவன் மருத மரத்தின் அடியில் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.

திருவிடைமருதூர் லிங்கம் மஹாலிங்கம் என்று அழைக்கப்படுகிறது..

இத்தலப் பெருமையினை சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

மருதவனப் புராணம், திருவிடைமருதூர் உலா, திருவிடைமருதூர் கலம்பகம், திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, திருவிடைமருதூர் நொண்டி நாடகம் முதலிய இலக்கியங்களும் இத்தலச் சிறப்பை விளக்குகின்றன.

பத்திரகிரியார் பட்டிணத்தார் முறையே மேற்கு கிழக்கு கோபுரத்தில் காட்சி தருகின்றனர். பத்திரகிரியார் சிவனை கண்ட ஸ்தலம் .

பஞ்ச லிங்க தலம்

தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விசுவநாதர், ஆத்மநாதர்,

ரிஷிபுரீசுவரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மகாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலத்துக்குப் பஞ்சலிங்கத் தலமென்றும் பெயர்.

திருவிடை மருதூரில் சரபோஜி மன்னர் பாவை விளக்கு சிலை !

கும்பகோணம் சக்ரபாணி கோவிலைப் போலவே, திருவிடை மருதூரில் கோயிலிலும்  சரபோஜி மன்னர் நிறுவிய பாவை விளக்கு சிலை உள்ளது இது அவருடைய மகள் நோயிலிருந்து குணமானதற்காக வைக்கப்பட்டது .சரபோஜி  முதலிய மராட்டிய மன்னர்கள் இந்தக் கோவிலுடன் நெருங்கிய தொடார்புடைய வர்கள் ஆவர்.

***

2    

திருபுவனம்

13-ஆம் நூற்றாண்டில் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. சிவபெருமான் மற்றும் சரபேஸ்வரர் வழிபாட்டிற்கும், உயர்தர பட்டுச் சேலை உற்பத்திக்கும் இந்த ஊர் மிகவும் புகழ்பெற்றது

திருபுவனம் சிவன் கோயில் ; ஊர்ப்பெயரைச் சொன்னவுடன் பெண்களுக்கு நினைவுக்கு வருவது திருபுவனம் பட்டுச் சேலைதான் ; அதை விட்டுவிட்டு சிவபெருமானுக்கு வருவோம் ;

இறைவன் ‘கம்பஹரேஸ்வரர்’ (நடுக்கம் தீர்த்த நாயகன்)  அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ .


தல வரலாறு: பிரகலாதன், திருமால் மற்றும் தேவர்களின் நடுக்கத்தை (கம்பம்) நீக்கியதால், சிவபெருமான் கம்பஹரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

இது தஞ்சை பெரிய கோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் போன்று சோழர்களின் நான்கு முக்கியக் கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கோவில் சுவர்களில் இந்து புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

சிவராத்திரி விழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

கட்டிடக்கலை அழகு

திருபுவன மலர் மோகினி என்ற தலைப்பில் புகழ்பெற்ற தெய்வீக ஓவியர் சில்பி எழுதிய கட்டுரையில், ஒரு மோகினிப் பெண் பூங்கொடியை வளைத்துப்  பூக் கொய்யும் அழகினை வருணித்துள்ளார்; திருபுவன வீரபுரம் என்பது பழைய பெயர்; தருமபுர ஆதீனக் கட்டுப்பாட்டிலுள்ள  கோயில் என்று எழுதிவிட்டு பல மோகினி படங்களையும் வரைந்து காட்டியுள்ளார்.

சரபேஸ்வரர் சந்நிதி

பின்னர் சரபத்தின் வெற்றி என்ற தலைப்பில் இன்னொரு கட்டுரை எழுதியுள்ளார் அதில் அவர் சொல்லுவதாவது ,

“வடநாட்டில், தான் பெற்ற வெற்றிக்குச் சின்னமாக மூன்றாம் குலோத்துங்கன் தாராசுரம், திருபுவனம் முதலிய இடங்களில் கோயில் கட்டினான் ; அவன் நரசிம்மத்தை வெற்றிகொண்ட சரப மூர்த்தியை மனமுருகி வழிபட்டிருக்க வேண்டும் . இரண்டு இடங்களிலும் உள்ள சரப சிற்பங்களை கூர்ந்து கவனிக்கும்போது ஒரே சிற்பியால் இது உருவாகியிருக்க  வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். ஆயினும் சில வேறுபாடுகள் உள்ளன .

சிம்ஹக்னமூர்த்தி என்று அழைக்கப்பெறும் ருத்ரமூர்த்திக்குத் தாராசுரத்தில் எட்டுக்கால்கள், மூன்று கண்கள், இரண்டு சிறகுகள் ! இங்கே திருபுவனத்தில் அத்தனை கால்கள், கண்கள், சிறகுகளுடன் நான்கு கைகளும் சிவ சின்னங்களோடு சேர்ந்து காணப்படுகின்றன. இப்போது சரபர் இருக்கும் இடத்தில் ஆதியில் நடராஜர் இருந்ததாகத் தெரியவருகிறது…………..  சரப சின்னத்தின் பின் பாகம் லிங்க வடிவில் அமைந்திருக்கிறது . சரபர் சந்நிதி தெற்கு நோக்கியிருக்கிறது இங்குள்ள மோகினி சிறங்களைத்தான் நான் வெளியிட்டிருக்கிறேன்.”

ஆறரை அடி உயரத்தில் லிங்கோத்பவர் காட்சி தருகிறார்.

திருபுவன வீரன் என்ற விருதுப் பெயர்கொண்ட மூன்றாம் குலோத்துங்கன் வட நாட்டிலிருந்து ஞான குருக்களை அழைத்து வந்திருந்தான். அவர்களில் ஒருவர் ஈஸ்வர சிவனார் சித்தாந்த ரத்நாகர ஆசிரியரான ஸ்ரீஸ்கந்த ஷம்பு சிவாசார்யரின் புதல்வர்இவர். இவரைக்கொண்டு அரசன் கோயிலில் பிரதிஷ்டையும் கும்பாபிஷேகமும் நடத்திவைத்தான் என்கிறது ஒரு கல்வெட்டு. இந்த அரசன் காலம் CE 1178-  1218.

இவனைக் கம்பரும் தனது ராமாயணத்தில் தியாக விநோதன் என்ற பெயரில் சிறப்பித்திருக்கிறார்.

பிறகு அம்மன் சிலையான தர்ம சம்வர்த்தனியை  வருணித்து மூன்று கட்டுரைகள் எழுதியுள்ளார் . அம்மன் சந்நிதியிலுள்ள மூன்றாவது தர்ம சம்வர்த்தனியையாவது ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்வது நிர்வாகிகளின் கடமை” .(முதல் இரண்டு தர்மவர்த்தனி – அறம்  வளர்த்த நாயகி—களின் சின்னங்கள் பின்னப்பட்டுவிட்டன )

தென்னாட்டுச் செல்வங்கள் – பாகம் 1, படைப்பு -இறையருள் ஓவியர் சில்பி, விகடன் பிரசுரம் , ஆண்டு 2012.

இக்கோவிலில் உள்ள சரபேஸ்வரர் சந்நிதி மிகவும் சக்தி வாய்ந்தது, குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் இங்கு சிறப்பு வழிபாடு நடக்கும் .

நரசிம்மரின் கோபத்தைத் தணிப்பதற்காக சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்டது சரபேஸ்வரர்.

கும்பகோணத்திலிருந்து சுமார் 6-8 கி.மீ தொலைவில் திருபுவனம்

இருக்கிறது.

ஏனைய தலங்களைத் தொடர்ந்து காண்போம்……………………….

To be continued………………………

Tags- ஐந்து சிவன் கோவில், தரிசனம், சனி பகவான், சுக்கிரன், Part One, திருவிடைமருதூர்,  திருபுவனம், மூன்று மருத மர தலங்கள், சரபேஸ்வரர் , மஹாலிங்கம்

Leave a comment

Leave a comment