ஜென் மாஸ்டர் ஹோஷினின் கடைசிக் கவிதை (Post No.3900)

Written by S NAGARAJAN

 

Date: 12 May 2017

 

Time uploaded in London:-  6-10 am

 

 

Post No.3900

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

ஜென் வழிகாட்டி

 

 

ஜென் மாஸ்டர் ஹோஷினின் கடைசிக் கவிதை

 

ச.நாகராஜன்

 

ஜப்பானைச் சேர்ந்த பெரிய ஜென் மாஸ்டர் ஹோஷின் (Hohin) சீனாவில் சில காலம் வாழ்ந்து வந்தார்.பின்னர் அவர் ஜப்பானின் வடகிழக்குப் பகுதிக்குத் திரும்பினார்.

 

ஒரு நாள் ஜப்பானில் தனது சீடர்களுக்குத் தான் சீனாவில் கேட்ட கதை ஒன்றைக் கூறலானார்.

இது தான் அந்தக் கதை;

 

டோகுஃபு (Tokufu) என்பவர் ஒரு பெரிய ஜென் மாஸ்டர். மிகுந்த வயதாகி முதுமையின் பிடியில் அவர் இருந்தார். ஒரு வருடம் டிசம்பர் மாதம் 25ஆம் நாள் தன் சீடர்களை அழைத்த அவர், “நான் அடுத்த வருடம் உயிரோடு இருக்க மாட்டேன். ஆகவே நீங்கள் அனைவரும் எனக்கு நல்ல விருந்து வைக்க வேண்டும்” என்றார்.

 

அவர் சும்மா வேடிக்கையாக அந்த வார்த்தைகளைச் சொல்கிறார் என்று அனைத்து சீடர்களும் நினைத்தனர். என்றாலும் அந்த மாஸ்டரை அனைவருக்கும் பிடிக்கும். பெரிய மனது படைத்த சிறந்த மாஸ்டர் அவர்.

 

ஆகவே  ஒவ்வொரு சீடரும் முறை போட்டுக் கொண்டு அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அவருக்கு விருந்து வைத்தனர்.

 

அடுத்த ஆண்டு பிறந்தது. அனைவரையும் அழைத்த டோகுஃபு, “நீங்கள் அனைவரும் எனக்கு நல்ல விருந்து வைத்தீர்கள். நாளை மதியம் பனி பொழிவது நின்றவுடன் நான் போய் விடுவேன்” என்றார்.

 

 

சீடர்கள் அனைவரும் சிரித்தனர். அவருக்கு வயதான காரணத்தால் ஏதேதோ சொல்கிறார் என்று அவர்கள் நினைத்தனர். குறிப்பாக முதல் நாள் இரவில் பனி பொழியவில்லை. நல்ல பனி இல்லாத வானம் இருந்தது. ஆகவே அவர் சொல்வதை அவர்கள் நம்பவில்லை.

ஆனால் திடிரென்று அன்றைய இரவில் பனி பொழிய் ஆரம்பித்தது. மறு நாள் பகலில் அவரைக் காணவில்லை. சீடர்கள் அனைவரும் தியான மண்டபத்திற்கு ஓடோடிச் சென்றனர்.

 

 

அங்கே அவர் இறந்து நிர்வாண நிலையை அடைந்திருந்தார்.

இந்தக் கதையைச் சொல்லி நிறுத்திய மாஸ்டர் ஹோஷின் தொடர்ந்து கூறினார்: “ ஒரு ஜென் மாஸ்டருக்குத் தான் எப்போது “போகப் போகிறோம்” என்பதைச் சொல்ல வேண்டுமென்கிற அவசியம் இல்லை. ஆனால் அவர் நிஜமாகவே சொல்ல  வேண்டுமென்று நினைத்தால் அதைச் சொல்லலாம்” என்றார்.

 

சீடர்களில் ஒருவர், “உங்களால் அப்படிச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார்.

 

“முடியுமே” என்று கூறிய ஹோஷின்,”உங்களுக்கு இன்றிலிருந்து ஏழாம் நாள் என்னால் போக முடியும் என்பதைக் காண்பிக்கிறேன்” என்றார்.

 

சீடர்களில் ஒருவரும் அவர் சொல்வதை நம்பவில்லை. அவர் கூறியதை பெரும்பாலானோர் மறந்தே விட்டனர்.

ஆனால் ஏழாம் நாளன்று அனைவரையும் அவர் அழைத்தார்.

 

 

“ஏழு நாட்களுக்கு முன்னர் நான் உங்களிடம் உங்களை விட்டுப் போய் விடுவேன் என்று கூறி இருந்தேன். போவதற்கு முன்னர் கடைசிக் கவிதை எழுதுவது சம்பிரதாயமாகத் தொன்று தொட்டு இருந்து வருகிறது. ஆனால் நானோ ஒரு கவிஞனும் இல்லை; எழுத்துக்களை அழகுற எழுதும் எழுத்தோவியரும் இல்லை. ஆகவே உங்களில் யாரேனும் ஒருவர் நான் சொல்லும் கடைசிக் கவிதையை எழுதுங்கள்” என்றார்.

அவர் வேடிக்கையாக இதைச் சொல்கிறார் என்று நினைத்த சீடர்கள், தங்களில் ஒருவரை அவர் சொல்வதை எழுதச் சொன்னார்கள்

 

அவரைப் பார்த்த ஹோஷின்,” நீ தயாரா?” என்றார்.

“ஆமாம், ஐயா” என்றார் சீடர்.

 

ஹோஷின் கவிதையைக் கூறலானார்:

“நான் பிரகாசத்திலிருந்து வந்தேன்.

 

மீண்டும் பிரகாசத்திற்குச் செல்கிறேன்.

 

என்ன இது?”

இத்தோடு நிறுத்தினார் அவர். சாதாரணமாக ஒரு கவிதை நான்கு வரிகளைக் கொண்டதாக இருத்த மரபு.

இப்போது ஒரு வரி குறைகிறது.

 

சீடர் அவரை நோக்கி, “மாஸ்டர், இன்னும் ஒரு வரி வேண்டும்” என்றார்.

சிங்கத்தை ஜெயிக்க நினைக்கும் ஒருவன் போடும் கூக்குரலான “கா” என்ற கர்ஜனைச் சொல்லை அவர் உதிர்த்தார்.

 

அத்தோடு அவர் மூச்சும் நின்றது.

 

சீடர்கள் பிரமித்து விக்கித்து நின்றனர்.

செய்தக்க அல்ல செயக்கெடும் –புத்தரும் வள்ளுவரும் செப்பியது ஒன்றே-2 (Post 3899)

Written by London Swaminathan

 

Date: 11 May 2017

 

Time uploaded in London: 21-58

 

Post No. 3899

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

(முதல் பகுதி நேற்று வெளியாகியது)

 

செய்தக்க அல்ல செயக்கெடும்  செய்தக்க

செய்யாமை  யானும் கெடும் (குறள் 466)

பொருள்:

ஒருவன் செய்யத் தகாதனவற்றைச் செய் தாலும் கெட்டுப்போவான்; மற்றும் செய்ய  வேண்டியதை செய்யாமல் இருந்தாலும் கெட்டழிவான்.

 

இதைத் தான், கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனுக்கும் சொன்னார். நீ க்ஷத்ரியன்; போர் செய்வது உன் தொழில். எழுந்திரு (உத்திஷ்ட) என்றார்.

 

புத்தனும் தம்மபதத்தில் (314) இதைச் சொல்கிறான்:

“கெட்டது செய்வதை விட அதைச் செய்யாமல் இருப்பதே மேல். கெட்டது செய்தால் துன்பம் நம்மைச் சுட்டெரிக்கும்.  ஆகையால் நல்லதையே செய்யுங்கள். ஏனெனில் நல்லது செய்வோருக்கு என்றும் துன்பம் இல்லை” – இது புத்தன் வாக்கு.

கண்ணனும் பகவத் கீதையில் “ந ஹி கல்யாண க்ருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி (6-40)-

“நல்லது செய்பவன் எவனும் தீய நிலையை அடையவே மாட்டான்” என்பது கண்ணன் வாக்கு.

 

ஒரு நீதிபதி இருக்கிறார். அவர் கொலைக் குற்றவாளிக்கு மரணதண்டனை அளிக்க வேண்டிய தருணத்தில் ஜீவகாருண்யம் பற்றிப் பேசிவிட்டு கடமையைச் செய்யமாட்டேன் என்று சொல்ல முடியாது. அவர் எத்தனை பேருக்கு மரண தண்டனை விதித்தாலும் அவர் கொலை செய்தவராகக்  கருதப்பட மாட்டார்.

 

இது போல போர் வீரர் ஜாதியில் பிறந்த அர்ஜுனன் போர் செய்யாமல் தப்பிக்க முயன்றபோது கிருஷ்ணன் கண்டிக்கிறான்

 

ச்ரேயான் ஸ்வதர்மஹ– அவனவன் தொழிலே சிறந்தது (3-36)  என்றும் கண்ணன்  மொழிகிறான்.

 

to be continued………………………….

 

–Subham–

ஜென் குருமார்களும் சீடர்களும் – சுவையான சம்பவங்கள்! (Post No.3894)

Written by S NAGARAJAN

 

Date: 10 May 2017

 

Time uploaded in London:-  5-50 am

 

 

Post No.3894

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஜென் குருமார்களும் சீடர்களும் –  சுவையான சம்பவங்கள்!

 

ச.நாகராஜன்

 

ஜென் பிரிவில் ஏராளமான குருமார்கள் உண்டு. அவர்களுக்கு நிறைய சீடர்களும் உண்டு.

ஜென் பிரிவைப் பொறுத்த மட்டில் பல்வேறு விதமாக அவர்கள் சீடர்களுக்குச் சொல்லித் தருவார்கள்.

புரிந்து கொள்ள வேண்டியது சீடனின் கடமை. புரியாவிட்டால் புரியும் வரை புரியும் படி அவர்கள் சொல்லித் தருவர்.

இதையொட்டிய நூற்றுக் கணக்கான சம்பவங்கள் உண்டு.

இரண்டை மட்டும் இங்கு பார்க்கலாம்.

 

  • கொள்ளிக்கட்டை பாடம்

ஹகுயின் (Hakuin) என்று ஒரு ஜென் மாஸ்டர். அவர் தன் சீடர்களிடம் டீக்க்டை வைத்திருக்கும் ஒரு பெணமணியைப் பற்றி வெகுவாகப் புகழ்வார். அவர் ஜென் மார்க்கத்தை நன்கு புரிந்திருக்கும் விதத்தை பெருமிதத்துடன் கூறுவார்.

அவரது சீடர்கள் அவர் கூறுவதை நம்ப மறுத்தனர்; சந்தேகப்பட்டனர். ஒரு சின்ன டீக்கடைவைத்திருக்கும் பெண்மணி எப்படி ஜென் பற்றி நன்கு தெரிந்து கொண்டிருக்க முடியும்?

இதைச் சோதிக்க சீடர்கள் ஒவ்வொருவராக அங்கு செல்வதுண்டு.  அவர்கள் வரும் போதெல்லாம் அந்தப் பெண்மணி வ்ருபவர்களை நோக்கி அவர்கள் டீ அருந்த வந்திருக்கிறார்களா அல்லது ஜென் பற்றி அறிய வந்திருக்கிறார்களா என்று கேட்பார்.

டீ அருந்தத் தான் என்று பதில் வந்தால் வழக்கத்திற்கு மாறாக அதிகப்படியான டீயை சுவைபடப் போட்டுத் தருவார்.

மாறாக ஜென் பற்றி அறியத்தான் வந்திருக்கிறோம் என்று சொன்னால் சமிக்ஞை மூலம் கடைக்குப் பின்னால் போகச் சொல்வார்.

பின்னர் கடையிலிருக்கும் அடுப்பிலிருந்து கொள்ளிக்கட்டையை எடுத்து  ஒரு அடி அடிப்பார்.

இதற்கு யாரும் தப்பியதே இல்லை.

  • சுவர் ஏறிக் குதிக்கும் சீடர்

செங்காய் (Sengai0 என்று ஒரு ஜென் மாஸ்டர். அவரிடம் தியானம் கற்க நிறைய சீடர்கள் வந்து சேர்ந்தனர்.  அந்த சீடர்களில் ஒருவர் மடாலயத்தின் சுவரேறிக் குதித்து வெளியேறி நகருக்கு உல்லாசமாகப் போய் வருவார்.

ஒரு நாள் சீடர்கள் தங்கும் விடுதிக்கு வந்த செங்காய் தனது சீடர்களில் ஒருவர் மட்டும் அங்கு இல்லை என்பதைக் கண்டார்.

ம்டாலயத்தைச் சுற்றி வருகையில் சுவரின் அருகே ஏறிக் குதிக்க ஒரு ஸ்டூல் இருந்ததைப் பார்த்து விஷயத்தைப் புரிந்து கொண்டார்.

உடனடியாக் அந்த ஸ்டூலை அகற்றி அந்த இடத்தில் தான் உட்கார்ந்து கொண்டார்.

தனது உல்லாசப் பயணத்தை முடித்த சீடர், திரும்பி வந்து சுவர் வழியே கீழே ஸ்டூலின் மீது காலை வைத்தார்.

அது ஸடூல் இல்லை, மாஸ்டரின் தலை.

கீழே தரையில் இறங்கியதும் தன் மாஸ்டரைப் பார்த்ததும் தான் மாஸ்டரின் தலையில் காலை வைத்ததை நினைத்து பயந்து போய் திகைத்து நின்று விட்டார்.

அவரை நோக்கிய செங்காய், “இதோ பார், வெளியில் ரொம்ப குளிராக இருக்கிறது. இதில் சளி அல்லவா பிடிக்கும். சளி பிடிக்காமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்” என்று கூறி விட்டு நகர்ந்தார்.

அந்த நாள் முதல் அந்த் சீடர் சுவ்ரேறிக் குதித்து வெளியே சென்றதே இல்லை!

ஜென் போதனை, தனி விதமான் போதனை!

*****

 

 

 

ஹிந்துவாக இருப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது? (Post No.3888)

 

Written by S NAGARAJAN

 

Date: 8 May 2017

 

Time uploaded in London:-  6-14 am

 

 

Post No.3888

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஹிந்து மதத்தின் பெருமை

ஒரு ஹிந்துவாக இருப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது? – 1

 

 

மூலம் : FRANCOIS GAUTIER

தமிழாக்கம் : ச.நாகராஜன்

 

 

  • கடவுள் மீது எனக்கு நம்பிக்கை – ஆஸ்தீகன் – சரி தான், ஏற்றுக்கொள்கிறோம்.
  • கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை – நாஸ்திகன் – சரி தான், உங்களை நாஸ்திகனாக ஏற்றுக்கொள்கிறேம்.
  • உருவ வழிபாட்டைச் செய்ய விரும்புகிறேன். – உம், தொடருங்கள். மூர்த்தி பூஜை செய்பவர் நீங்கள்.
  • உருவ வழிபாட்டைச் செய்ய விரும்பவில்லை – அதனாலென்ன, பரவாயில்லை, நீங்கள் நிர்குண பிரம்மத்தின் மீது கவனம் கொள்பவர்.
  • நமது மதத்தில் உள்ள சிலவற்றை விமர்சிக்க விரும்புபவரா, வாருங்கள், நாம் தர்க்கரீதியானவர்கள் தாம். நியாயம், தர்க்கம் முதலியவை ஹிந்து தர்மத்தின் அடிப்படைக் கோட்பாடுகளே.
  • நம்பிக்கைகளை அப்படியே ஏற்க விரும்புகிறேன். நிரம்ப மகிழ்ச்சி. அப்படியே தொடருங்கள்.

 

  • முதலில் பகவத்கீதையைப் படித்து விட்டு என் பயணத்தைத் தொடர விரும்புகிறேன். – நிச்சயமாக, அப்படியே ஆகட்டும்!
  • முதலில் உபநிஷத்துகளைப் படித்து விட்டு என் பயணத்தைத் தொடர விரும்புகிறேன். – நிச்சயமாக, அப்படியே ஆகட்டும்!

 

  • முதலில் புராணங்களைப் படித்து விட்டு என் பயணத்தைத் தொடர விரும்புகிறேன். – நிச்சயமாக, அப்படியே ஆகட்டும்
  • புராணங்களையோ இதர சாஸ்திரங்களையோ படிக்க விரும்பவில்லை. பிரச்சினையே இல்லை. பக்தி மார்க்கத்தில் செல்லலாம்,அன்பரே!
  • பக்தி மார்க்கம் பிடிக்கவில்லை. அதனாலென்ன, கர்மத்தைச் செய்யுங்கள். கர்ம யோகியாக இருங்கள்
  • வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிறேன். சரி தான், வாருங்கள், அது சார்வாக கொள்கை.
  • எல்லா வித இன்பங்களும் எனக்கு வேண்டாம். கடவுளை அடைய விரும்புகிறேன். ஓ, ஜெயம் உண்டாகட்டும், அது சாதுவின் வழி. சந்யாச மார்க்கம் அது.

14) கடவுள் என்ற கருத்தே எனக்குப் பிடிக்கவில்லை. – நீங்கள் இயற்கையை விரும்புகிறீர்கள். உங்களை வரவேற்கிறோம். (மரங்கள் நமது நண்பர்களே. பிரகிருதி அல்லது இயற்கை என் வழிபடுவதற்கான ஒன்றே தான்)

15)  ஒன்றே தெய்வம் என்பது எனக்குப் பிடிக்கிறது. உயரிய ஆற்றல் ஒன்று மட்டுமே உண்டு. சபாஷ்! அது தான் அத்வைதக் கொள்கை.

 

 

அடுத்த பகுதியுடன் இந்தக் கட்டுரை நிறைவுறும்.

ஆதாரம் : 28-04-2017 தேதியிட்ட TRUTH வார இதழ் (கல்கத்தாவிலிருந்து வெளி வருகிறது)

இதன் ஆங்கில மூலத்தைக் கீழே காணலாம்:

 

What is special about being a Hindu

by Francois Gautier

1) Believe in God ! – Aastik – Accepted.

2) Don’t believe in God! – You’re accepted as Nastik.

3) You want to worship idols– please go ahead. You are a murti pujak.

4) You dont want to worship idols– no problem. You can focus on Nirguna Brahman.

5) You want to criticise something in our religion. Come forward. We are logical. Nyaya, Tarka etc. are core Hindu schools.

6) You want to accept beliefs as it is. Most welcome. Please go ahead with it.

7) You want to start your journey by reading Bhagvad Gita– Sure!

8) You want to start your journey by reading Upanishads– Go ahead.

9) You want to start your journey by reading Purana– Be my guest.

10) You just don’t like reading Puranas or other books. No problem my dear. Go by Bhakti tradition. (bhakti– devotion)

11) You don’t like idea of Bhakti! No problem. Do your Karma. Be a karmayogi.

12)You want to enjoy life. Very good. No problem at all. This is Charvaka Philosophy.

13)You want to abstain from all the enjoyment of life and find God– Jai ho ! Be a Sadhu, an ascetic!

14)You don’t like the concept of God. You believe in Nature only– Welcome. (Trees are our friends and Prakriti or nature is worthy of worship).

15)You believe in one God or Supreme Energy. Superb! Follow Advaita philosophy.

 

நன்றி

28-04-2017 TRUTH

PART -2

 

ஒரு ஹிந்துவாக இருப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது? – 2

 

 

16) எனக்கு ஒரு குரு வேண்டும். – அப்படியே ஆகட்டும், ஒரு குருவிடம் செல்லுங்கள், ஞானத்தை அடையுங்கள்

17) எனக்கு குரு தேவையில்லை. அதனாலென்ன, நீங்களே தொடங்கலாம். தியானியுங்கள், படியுங்கள்.

18) சக்தி என்ற ஆற்றலை நம்புகிறேன். நீங்கள் ஒரு சக்தி உபாசகர்.

19) எல்லா மனிதரும் சமம் என்று நம்புபவன் நான் – ஓஹோ! அட, நீங்கள் ஹிந்து மதத்தைக் கொண்டாடுகிறீர்களே, “வஸுதைவ குடும்பகம்” – உலகனைத்தும் நமது குடும்பம் என்று அல்லவா அது சொல்கிறது!

20) வருகின்ற பண்டிகையை என்னால் கொண்டாட முடியவில்லையே. கவலை வேண்டாம். அடுத்த பண்டிகை இதோ வருகிறது. அதைக் கொண்டாடி மகிழுங்கள். வருடம் முழுவதும் ஒவ்வொரு நாளுமே பல பண்டிகைகளைக் கொண்டது ஹிந்து  மதம்.

21) தினசரி வேலை செய்யவே நேரம் முழுவதும் போகிறது  மத அனுஷ்டானம் செய்ய நேரமே இல்லை. – அதனால் பரவாயில்லை. நீங்கள் இன்னும்  ஒரு  ஹிந்து தான். எதுவும் கட்டாயமில்லை.

22)  ஆலயங்களுக்குச் சென்று வழி பட ஆசை – பக்தி மிகச் சிறந்ததே

 

23) ஆலயங்களுக்குச் செல்ல விருப்பமில்லை -அதனால் என்ன, ஆலயம் செல்லாவிட்டாலும் குட, நீங்களும் ஒரு ஹிந்து தான்.

24) ஹிந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. அதில் சர்வ சுதந்திரம் உண்டு.

25) ஒவ்வொன்றிலும் கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்கள். – சரி தான். அதனால் நீங்கள் தாய், தந்தை, குரு, மரம், நதி, மிருகங்கள், பூமி, பிரபஞ்சம் அனைத்துமே வழிபாட்டுக்கு உரியனவே என வழிபடுகிறீர்கள்.

26) எல்லாவற்றிலும் கடவுள் இருக்கிறார் என்பதில் எனக்கு உடன்பாடில்லை – ஒரு பிரச்சினையும் இல்லை. உங்கள் கருத்தை மதிக்கிறோம்.

27) “சர்வே ஜனா சுகினோ பவந்து” (அனைவரும் சந்தோஷத்துடன் இருக்கட்டும்) நீங்கள் இதையே கருத்தில் கொண்டுள்ளீர்கள்.

நீங்கள் உங்களுக்கு ஏற்புடையதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

எனது ஹிந்து நண்பரே!

இது தான் ஹிந்து மதத்தின் சாரம்! அனைத்தையும் உள்ளடக்கியது அது.

ஆகவே தான் காலத்தையெல்லாம் தாண்டி அது நிற்கிறது.

எத்தனை எத்தனை சோதனைகளை உள்ளும் புறமுமாக அது சந்தித்து வெற்றி கண்டிருக்கிறது. எல்லாவற்றையும் உட்கிரகித்து அனைத்து நல்லனவற்றையும் தன்னுள்ளே அது ஏற்றிக் கொண்டுள்ளது!

ஆகவே தான் அது சனாதனமாக உள்ளது.

மனித குலத்தில் தோன்றிய உலகின் ஆதி நூலாகிய ரிக்வேதத்தில் உள்ள ஒரு துதிப்பாடல் அனைத்தையும் சுருக்கமாகச் சொல்லி விடுகிறது இப்படி:

“உலகெங்கிலுமிருந்தும் எல்லா திசையிலிருந்தும் நல்லன அனைத்தும் எங்களிடம் வரட்டும்”

 

ஆதாரம் : 28-04-2017 தேதியிட்ட TRUTH வார இதழ் (கல்கத்தாவிலிருந்து வெளி வருகிறது)

இதன் ஆங்கில மூலத்தின் தொடர்ச்சியைக் கீழே காணலாம்:

16)You want a Guru. Go ahead. Receive gyaan.

17)You don’t want a Guru .. Help yourself! Meditate, Study!

18)You believe in Female energy! Shakti is worshipped.

19)You believe that every human being is equal. Yeah! You’re awesome, come on let’s celebrate Hinduism! “Vasudhaiva kutumbakam” (the world is a family).

20) You don’t have time to celebrate the festival. Don’t worry. One more festival is coming! There are multiple festivals every single day of the year.

21)You are a working person. Don’t have time for religion. Its okay. You will still be a Hindu.

22)You like to go to temples. Devotion is loved.

23)You don’t like to go to temples–no problem. You are still a Hindu!

24)You know that Hinduism is a way of life, with considerable freedom.

25)You believe that everything has God in it. So you worship your mother, father, guru, tree, river, prani-matra, earth, universe!

26)And if you don’t believe that everything has GOD in it– No problems. Respect your viewpoint.

27) “Sarve jana sukhino bhavantu” (May you all live happily), You represent this! You’re free to choose, my dear Hindu!

 

This is exactly the essence of Hinduism, all inclusive. That is why it has withstood the test of time in spite of repeated onslaught both from within and outside, and assimilated every good aspects from everything .

That is why it is eternal !!!

 

There is a saying in Rigveda , the first book ever known to mankind which depicts the Hinduism philosophy in a Nutshell “Ano bhadrah Krathavo Yanthu Vishwathah”– Let the knowledge come to us from every direction.

 

 

நன்றி

28-04-2017 TRUTH VOL.85 NO. 2

இத்துடன் இந்தக் கட்டுரை நிறைவுறுகிறது

–Subham–

எல்லோருக்கும் இரண்டு மனைவி, இரண்டு மகன்கள்! (Post No.3877)

Written by London swaminathan

Date: 4 May 2017

Time uploaded in London: 20-08

Post No. 3877

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

 

முருகனுக்கு இரண்டு மனைவி – -வள்ளி, தெய்வானை

 

விஷ்ணுவுக்கு இரண்டு மனைவி– ஸ்ரீ தேவி, பூதேவி

 

விநாயகருக்கு இரண்டு மனைவி – – சித்தி, புத்தி

 

கிருஷ்ணனுக்கு இரண்டு மனைவி – – ருக்மணி, சத்யபாமா

 

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்; இதில் நமக்குத் தெரிவது என்னவென்றால் இரண்டு மனைவியர் வரை “அனுமதி உண்டு” (allowed) ! ஆனால் நீங்களும் விநாயகரைப்போல, விஷ்ணுவைப் போல, முருகனைப் போல, கிருஷ்ணனைப் போல அபூர்வ சக்தி படைத்தவராக இருக்க வேண்டும்; மனைவி விஷயத்தில் மட்டும் இவர்களைப் பினபற்றுவேன் மற்ற விஷயங்களில் “நான் நான்தான்” என்று சொல்லக் கூடாது!!!

 

 

இரண்டுக்குப் பின்னர் எப்போதும் வேண்டாம் (ராம ராஜ்யத்தில்)!

இது ஒரு புறமிருக்க, மகன்கள் விஷயத்திலாவது நாம் கடவுளரைப் பின்பற்றலாம்:

 

சிவனுக்கு இரண்டே புதல்வர்கள் – விநாயகர், கந்தன்/முருகன்

வேதத்தில் வரும் அஸ்வினி குமாரர்கள் இரண்டே புதல்வர்கள்

 

ராமாயணத்தில்தான் அதிசய ஒற்றுமை; எல்லா சகோதர்களுக்கும் இரண்டிரண்டு புதல்வர்கள்! அது எப்படி சொல்லிவைத்த மாதிரி இரண்டு மட்டும் பெற்றார்கள்? ஒருவேளை மரபியல் அம்சமோ (Genetic factor) என்னவோ!

 

ராமனுக்கு இரண்டே புதல்வர்கள்- லவன் குசன்

மனைவி பெயர் – சீதை

 

பரதனுக்கு இரண்டே புதல்வர்கள் – தக்ஷன், புஷ்கலன்

மனைவி பெயர் மாண்டவி

 

லெட்சுமணனுக்கு இரண்டே புதல்வர்கள் –  அங்கதன், சந்திரகேது

மனைவி பெயர் ஊர்மிளை

 

சத்ருக்னனுக்கு இரண்டே புதல்வர்கள் – சத்ருகாதி, சுபாகு

மனைவி பெயர் ஸ்ருத கீர்த்தி

 

லவன், குசன் என்று ஏன் பெயர் வைத்தார்கள்?

 

स तौ कुशलवोन्मृष्टगर्भक्लेदौ तदाख्यया।
कविः कुशलवावेव चकार किल नामतः॥ १५-३२

sa tau kuśalavonmṛṣṭagarbhakledau tadākhyayā |
kaviḥ kuśalavāveva cakāra kila nāmataḥ|| 15-32

 

உலகப் புகழ் பெற்ற கவிஞர் காளிதாசர், அவரது ரகுவம்ச காவியத்தில் சொல்கிறார்:-

 

“கவி வால்மீகி தர்பைப் புல்லினாலும், பசுவின் வால் மயிரினாலும் துடைக்கப்பட்ட , அந்த சீதையின் குமாரர்களை பெயரிடும் விஷயத்திலும், அவைகளின் பெயராலேயே குசன் ,லவன் என்றே செய்தார்” (15-320

 

தர்ப்பைப் புல்லின் பெயர் குச; பசுவின் வால் மயிரின் பெயர் லவ; அதாவது குழந்தை பிறந்தவுடன் தீய சக்திகள் நெருங்காது இருப்பதற்காக, முனி பத்னிக்களின் கையில் இவ்விரண்டு பொருட்களையும் கொடுத்து குழந்தைகள் மீது தடவச் செய்தார். இது காளிதாசன் சொன்னது.

வால்மீகி ராமாயணத்தில் வேறு கதை!

 

ஆனால் ராமாயண உத்தர காண்டத்தில் தர்ப்பத்தின் முனைப் பகுதியினால் ஒருவனுக்கு குச என்றும் மற்றொருவனுக்கு தர்ப்பத்தின் அடிப்பகுதியால்

லவ என்றும் பெயரிடப் பட்டதாக ஸ்லோகம் உள்ளது.

 

குழந்தைகளுக்குப் பெயரிட்ட வால்மீகி அவ்விரு பெயர்களாலும் அவர்கள் பிரசித்தமடைவர் என்று சொன்னது உண்மையாகிவிட்டது. இரு குழந்தைகளுக்கும் வேதங்கள்,  சாத்திரங்களைக் கற்பித்ததோடு ராமனின் கதையையும் கற்பித்து பாட வைத்தார்.

 

அக்காலத்தில் சங்கீத உபந்யாசம் எவ்வளவு பிரபலமடைந்தது என்பதை லவ-குசனின் பாடல் ராமாயணம் காட்டுகிறது. அதுமட்டுமல்ல அது இன்றுவரையும் நீடித்து வருகிறது!

 

-Subahm–

 

ஐம்புரி பற்றி அப்பர் பெருமான் தகவல்! (Post No.3860)

Written by London swaminathan

Date: 28 APRIL 2017

Time uploaded in London:- 18-28

Post No. 3860

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

அப்பர் பாடிய தேவாரத்தில் ஆறாம் திருமுறையில் ஒரு பாடலில் ‘ஐம்புரி’  என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். இந்த ஐம்புரி  என்னும் சொல், பிராமணர்களிடத்தில் புழங்கும் சொல். அப்பரோ பிராமணர் அல்ல; ஆயினும் அவர் வேத பாராயணத்தில் புழங்கும் ஒரு சொல்லைப் பயன்படுத்தியது அவர் இந்த விஷயங்களில் எவ்வளவு அறிவுள்ளவர் என்பதைக் காட்டுகிறது. அது மட்டுமின்றி வேறு பல வியப்பான விஷயங்களையும்  தெரிவிக்கின்றது. முதலில் பாடலைக் காண்போம்:

 

இடிப்பான்காண், என் வினையை; ஏகம்பன் காண்;

எலும்பு ஆபரணன் காண்; எல்லாம் முன்னே

முடிப்பான் காண்; மூ உலகும் ஆயினான் காண்;

முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்

படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண்;

பராய்த்துறையான்; பழனம், பைஞ்ஞீலியான் காண்;

கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணியான் காண் —

காளத்தியான் அவன், என் கண் உளானே

 

–அப்பர் தேவாரம், ஆறாம் திருமுறை, காளத்தியில் பாடியது.

 

பொருள்:-

சிவபெருமான் என்னுடைய வினையைத் தீர்க்கும் பரம்பொருள்; ஏகம்பனாகக் கச்சியில் வீற்றிருப்பவர்; எலும்பு மாலையை ஆபரணமாக உடையவர். எல்லாச் செயல்களையும் வகுத்து நடத்துபவர்; மூன்று உலகங்களும் அவரே; ஐம்புரி முதலான வேத பாராயணத்தை வகுத்தளித்த பிரமனின் தலையைக் கொய்தவர். பசுபதியாகத் திகழ்பவர்; திருப்பழனம், திருப்பைஞ்ஞீலி ஆகிய திருத்தலங்களில் உறைபவர். நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சூடியவர்; திருக்காளத்தியில் வீற்றிருப்பவர். அவர் என் உள்ளத்தில் உறைபவர்.

 

 

இங்கு ஐம்புரி என்னும் சொல்லைப் பல உரைகாரர்களும் விளக்குவதில்லை; இது ஒரு அருமையான சொல்; இதற்கு சம்ஸ்கிருதத்தில் ‘பஞ்சாதி’ என்று பெயர்.

 

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) தனது உரை ஒன்றில் பிராமணர்கள் இந்த மண்ணின் மைந்தர்களே என்பதை அழகாக விளக்குகிறார். சங்கத் தமிழ் இலக்கியம் முழுதும் நூற்றுக்கணக்கான இடங்களில் பிராமணர்களையும் அவர்களுடைய வேதங்களையும் சடங்குகளையும் குறிக்க தூய தமிழ்ச் சொற்கள் ( மறை, வேள்வி, நான்மறையாளர், இருபிறப்பாளர், அந்தணர் ) பயன்படுத்தப்பட்டிருப்பதால் அவர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த மண்ணின் ஒரு பகுதியாக, சொந்தக்காரர்களாக இருப்பதை அறிய முடிகிறது என்பார். (கருத்து அவருடையது; சொற்கள் என்னுடையது)

 

அவ்வகையில் பார்த்தால் பஞ்சாதி என்பதையும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அழகாக தமிழில் ‘ஐம்புரி’ என்று சொல்லாக்கம் செய்தது சிறப்புடைத்து.

ஐம்புரி என்றால் என்ன?

 

பிராமணர்கள் போட்டிருக்கும் பூணூலில் மூன்று வடங்கள் இருப்பதால் முப்புரி நூல் என்பர். அவ்வகையில் பார்த்தால் ஐந்து புரிகள் இருப்பது ஐம்புரி. ஆனால் இது எங்கும் அணியும் நூல் அல்ல. கணக்குப் பார்க்க வகுத்த கால்குலேட்டர்/ கணக்கிடு கருவி!

 

பிராமணச் சிறுவர்கள், வேத பாட சாலைகளில் ஆசிரியரின் காலடியில் அமர்ந்து வேதம் கற்கும் போது அவர் ஐம்பது, ஐம்பது  சொற்களாகச் சொல்லிக் கொடுப்பார். அதை எல்லா மாணவர்களும் பத்து முறை சொல்ல வேண்டும். இதைத் தமிழில் அழகாக திருவை என்பர். திரும்பத் திரும்பச் சொல்லுவதால் திருவை.

இப்படி ஒரு ஐம்பது  சொற்களைச் சொல்லிக் கொடுத்தபின் அடுத்த வரிகளைச் சொல்லுவார். அந்த வரிகளில் ஐம்பாதாவது சொல் எங்கு வருகிறதோ அத்தோடு நிறுத்திவிட்டு அதைப் பத்து முறை சொல்லச் சொல்லுவார். இதுவே பஞ்சாதி; அதாவது ஒவ்வொரு 50 சொல்லும் ஒரு பஞ்சாதி= ஐம்புரி. இது அத்தோடு நிற்பதல்ல; இப்படி ஒவ்வொரு பத்து முறை சொன்னபிறகும் அந்த பிராமணச் சிறுவர்கள் அவர்கள் அணிந்திருக்கும் பூணூலை ஒரு விரலில் ஒரு சுற்று சுற்றிக் கொள்வர். இப்படி ஐந்து பஞ்சாதிகள் முடிந்த பின்னர் ஐந்து விரல்களிலும் நூல் சுற்றப்பட்டிருக்கும். இப்பொழுது அந்த நிமிடம் வரை சிறுவர்கள் எவ்வளவு சொற்களை மனப் பாடம் செய்தனர் அல்லது பத்துப் பத்து    முறை திருப்பிச் சொன்னார்கள் என்று அவர்களுக்கே கணக்குத் தெரியும்.

 

சிலேட்டு வேண்டாம்; குச்சி (பல்பம்) வேண்டாம்; நோட்டு வேண்டாம்; பென்சில் வேண்டாம்; கால்குலேட்டர் வேண்டாம். ஒரு சிறுவன் அந்த நிமிடம் வரை எத்தனைச் சொற்களைப் படித்திருக்கிறான் என்பதை அவன் கைவிரல்களே காட்டிவிடும். என்ன அற்புதமான முறை; அதற்கு என்ன அற்புதமான தமிழ் சொல்! அதை அற்புதமாக நமக்கு நினைவு படுத்தும் அப்பர் பெருமான்!

 

அப்பர் பெருமான் பாடல்களில் நிறைய அற்புத விஷயங்கள் இருக்கின்றன. நால்வரில் அதிக வயது வாழ்ந்தவர் அவர்; அதிக உலக அநுபவம் பெற்றவர் அவர். ஆகையால் போகிற போக்கில் நிறைய விஷயங்களைச் சொல்லுகிறார். அவர் பெரிய வரலாற்று நிபுணர். நரியைப் பரியாக்கிய திருவிளையாடலைச் சொல்லி மாணிக்கவாசகர் தமக்கு முன் னே வாழ்ந்தவர் என்பதைக் காட்டுகி றார். தருமி என்னும் பிராமணப் புலவன் தமிழ்ச் சங்கத்தின் படிக்கட்டுகளில் ஏறி நக்கீரருடன் மோதிய திருவிளையாடலை நமக்கு நினைவூட்டுகிறார். அந்தக் காலத்தில் எத்தனை வகைக் கோவில்கள் இருந்தன  என்பதை ஒரு பாடலில் அடுக்குகிறார். இன்னொரு பதிகத்தில் 1400 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்ப் பழமொழிகளைப் பட்டியல் இடுகிறார். மகேந்திர பல்லவனுடன் அவர் மோதிய செய்தி நாம் அனைவரும் அறிந்ததே. அப்பர் ஒரு சிவ பக்தர்; ஒரு வரலாற்றுப் பேரறிஞர்.

 

(திருவை, ஐம்புரி பற்றிய விஷயங்களை மாயூரம் சுவாமிநாத சிவாச்சாரியார், திருச்சி கல்யாண சுந்தர சிவாச்சார்யார் ஆகியோருடன் கலந்துரையாடியபோது அறிந்தேன்; நன்றி)

 

–subham–

 

இள வயதில் என் குழந்தை ஏன் இறந்தது? (Post No.3858)

Written by S NAGARAJAN

 

Date:28 April 2017

 

Time uploaded in London:-  6-11 am

 

 

Post No.3858

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

இள வயதில் என் குழந்தை ஏன் இறந்தது? தந்தையின் துக்கமும் பகவானின் பதிலும்!

 

ச.நாகராஜன்

 

18-9-1945. மதிய நேரம்.

 

ரமண மஹரிஷியின் ரமணாஸ்ரமத்திற்கு வஙகத்திலிருந்து சிலர் வந்திருந்தனர் அவர்களில் ஒருவர் சமீபத்தில் தன் குழந்தையை இழந்திருந்தார். அவ்ருக்கு ஒரே சோகம்.

 

 

அவர் பகவானிடம், “ ஏன் என் குழந்தை இந்த இளம் பிராயத்திலேயே இறந்தது? அது அந்தக் குழந்தையின் கர்மாவினால் தானா அல்லது நாங்கள் அந்த துக்கத்தை அடைய வேண்டுமென்ற எங்களின் கர்மாவினால் தானா?” என்று கேட்டார்.

இதற்கு பகவான் பதில் கூறினார் இப்படி:

 

 

“குழந்தையின் பிராரப்தம் இந்த உலகில் முடிவுக்கு வந்து விட்டதால் அது இறந்து விட்டது. உங்களைப் பொறுத்த வரை நீங்கள் அதைப் பற்றித் துக்கத்துடன் இருக்க வேண் டா.ம் ஆனால் மிக்க அமைதியுடன் எந்த வித பாதிப்பும் இன்றி அந்தக் குழந்தை கடவுளுடையதே. அவர் கொடுத்தார். அவரே எடுத்துக் கொண்டார் என்ற எண்ணத்துட்ன இருக்க வேண்டும்.” என்றார்.

இதைச் சற்று விள்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் பகவான் யோக வாசிஷ்டம் நூலை எடுத்தார்.

 

 

என்ன ஆச்சரியம், அவர் எதைச் சொல்ல நினைத்தாரோ அதே பக்கம் திறந்தது. அதில் உள்ள ஒரு கதை புண்ய, பாவத்தைப் பற்றிய கதை.

அதை அணுக்க பக்தரான ஏ. தேவராஜ முதலியாரிடம் கொடுத்து பகவான் படிக்கச் சொன்னார்.

 

 

அதில் புண்யம் தனது சகோதரன் பாவனாவை அவர்களின் பெற்றோர்கள் இறந்ததைக் குறித்து முட்டாள்தனமாக வருந்த வேண்டாமென்றும், பாவனா எண்ணற்ற பிறவிகளைக் கடந்த காலத்தில் எடுத்திருப்பதாகவும், ஒவ்வொரு பிறவியிலும் ஏராளமான உறவினர்களைக் கொண்டிருந்தார் எனவும் அந்த அனைத்து உறவினர்களையும் பற்றி இப்போது பாவனா துக்கித்து வருத்தப்படுவதில்லை என்றும் ஆகவே அதே போலவே இந்தப் பிறவியில் அவரது தந்தை இறந்ததற்குத் துக்கிக்க வேண்டாம் என்றும் அறிவுரை கூறியது.

 

 

வங்காள பக்தர் மேலும் கேட்டார்: “ஒரு குழந்தை இறந்து விட்டது, ஆனால் இன்னொருவரோ வாழ்ந்து கொண்டிருக்கிறார், இந்த இருவரில் அதிகப் பாவம் செய்தவர் யார்?”

பகவான்: என்னால் சொல்ல முடியாது.

 

உடனே தேவராஜ முதலியார் அவர் கொடுத்த விவரத்தின் மூலமாக யாராலும் யார் இதில் அதிக பாவம் செய்தவர் என்பதைக் கூற முடியாது என்று கூறினார்.

பக்தர்: ஒருவர் நீண்ட காலம் வாழ்ந்தால் ஞானம் பெறுவதற்காக தன்னை முழுமையாக்கிக் கொள்ள நிறைய வாய்ப்புகள் உண்டல்லவா?

 

பகவான்: இள்மையில் இறக்கும் ஒருவருக்கு சீக்கிரமே அடுத்த் பிறவி கிடைத்து அந்தப் பிறவியில் ஞானம் பெற இந்தப் பிறவியில் நீண்ட நாட்கள் வாழும் ஒருவரை விட இன்னும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம் இல்லையா?

குழுவினரில் ஒருவர் இதையொட்டி பகவானிடம்,  “எல்லாவற்றையும் துறந்து விட வேண்டுமென்று சொல்லும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு நமது செயல்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமா?” என்று கேட்டார்.

 

 

அதற்கு பகவான், : எல்லா செயல்களையும் துறந்து விடு என்பதற்கு அர்த்தம் அந்தச் செயல்களால் ஏற்படும் பலன்களைத் துறந்து விட் வேண்டுமென்று தான் அர்த்தம். நான் தான் இதைச் செய்கிறேன் என்ற பாவனையை விட்டு விட வேண்டும் என்றே அர்த்தம். இந்தச் செயல்களைச் செய்வதற்காக வந்திருக்கும் உடல் அவற்றைச் செய்தே ஆக வேண்டும். அந்தச் செயல்களைச் செய்யாமல் விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவற்றை ஒருவர் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, செய்தே ஆக வேண்டும்” என்று பதில் அளித்தார்.

 

 

பொருள் பொதிந்த இந்த ச்ம்பாஷணையில் தான் எத்தனை இரகசியங்களை நம்மால் உணர முடிகிறது, கற்க முடிகிறது!

எப்படி வாழ்க்கையில் வாழ வேண்டும், எடுத்த உடலை நன்கு பயன்படுத்தி எப்படி மறைய வேண்டும் என்பதை அழகாக சில சொற்களால் விளக்கி விடுகிறார் பகவான்.

 

 

எடுத்த பிறவிக்கு அணி அடுத்த பிறவி அடையாமல் இருப்பதே தான் என்றால் எடுத்த பிறவியில் எல்லா நல்ல காரியங்களையும் பலனை எதிர்பாராமல் செய் என்பதே பகவானின் அருளுரை!

***

Source : Day by Day Bhagavan by Sri A.Devaraja mudaliyar

 

பெரியாரைப் பகைக்காதே! தமிழ்ப் புலவர்கள் எச்சரிக்கை!! (Post No.3857)

Written by London swaminathan

Date: 27 APRIL 2017

Time uploaded in London:- 17-50

Post No. 3857

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

பெரியோர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் ஒரு நொடியில் பெரிய அரசாட்சியையும் கவிழ்த்துவிடக்கூடிய ஆற்றல் அவர்களுக்கு உண்டு என்று திருவள்ளுவர் உள்பட பல தமிழ்ப் புலவர்கள் எச்சரிக்கின்றனர்.

 

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியோடு

நின்றன்னார் மாய்வர் நிலத்து (குறள் 898)

பொருள்:-

“குணங்களால் குன்று போல உயர்ந்த பெரியவர்கள், ஒருவனை அழிக்க நினைத்தால், நிலைத்து நின்றவர்களும் கூடக் குலத்தோடு அழிந்து போவார்கள்”— என்று வள்ளுவன் எச்சரிக்கிறான்.

 

ஆனால் அவர்களுக்கு கோபம் வந்த வேகத்தில், தணிந்தும் விடும்.

 

குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது (குறள் 29)

 

நற்குணம் வாய்ந்தவர்கள், சிறு தவறுகளையும் பொறுக்க மாட்டார்கள். கோபப்படுவார்கள் (ஆகையால் கவனம் அவசியம்) — என்பது ஒரு பொருள்.

 

இன்னொரு பொருள்: அவர்கள் கோபப்பட்டாலும் அது கணப்பொழுதில் மறைந்து விடும்; சாபமே தந்தாலும், அந்த சாபத்துக்கு ஒரு விமோசனமும் கொடுத்து விடுவார்கள் என்பது இன்னும் ஒரு பொருள்.

 

நீதி வெண்பா பாடிய புலவர் (பெயர் கிடைக்கவில்லை) சொல்கிறார்:-

அந்தத் தமிழ்ப் புலவர் செப்புவது யாதெனின்:

 

கடவுளுக்கு அவமரியாதை செய்தாலும், மன்னிப்புக் கேட்டால் மன்னித்து விடுவான்; ஆனால் அவனது அடியார்களுக்குத் தீங்கிழைத்தால் கடவுளே கூட மன்னிக்க முடியாது. அந்த அடியாரே மனது வைத்து தயை கூர்ந்தால்தான் கதி விமோசனம்.

 

ஈசனெதிர் நின்றாலும் ஈசனருள் பெற்றுயர்ந்த

நேசரெதிர் நிற்ப தரிதாமே — தேசு வளர்

செங்கதிர்முன் நின்றாலுஞ் செங்கதிர் வன்கிரணந்

தங்கு மணல் நிற்கரிதே தான்

 

தேசுவளர் = ஒளி மிக்க

செங்கதிர் முன் = சூரியனுக்கு முன்னால்

நின்றாலும் = வெய்யிலில் நின்றாலும்

செங்கதிரவன் கிரணம் தங்கும் மணல் = அந்தச் சூரியனின் சூட்டைக் கிரகித்த ஆற்று மணலில்

நிற்க அரிது = நிற்க முடியாது

அது போல

ஈசன் எதிர் நின்றாலும் = எல்லாம் வல்ல கடவுளை எதிர்த்துப் பேசினாலும், செயல்பட்டாலும்

ஈசன் அருள் பெற்று = அந்த இறைவனின் அருள் பெற்ற

உயர்ந்த = உயர்ந்த இடத்தை அடைந்த

நேசர் எதிர் = அடியார்களுக்கு எதிராக

நிற்பது அரிது =நிற்றல் இயலாது.

 

நகுலன், சுமுகன், வேனன், நவநந்தர்கள் அழிந்தனர்!

 

அகந்தையால் அழிந்த மன்னர்களின் பட்டியலை மனு, தனது மானவ தர்ம சாத்திரத்தில் தருகிறார். அவர் சொல்லும் சுமுகன் என்பவன் யார் என்று யாருக்கும் தெரியாது. சுமேரியாவில் மட்டுமே சுமுகன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருக்கிறான்.

 

அகத்தியனைப் பகைத்த நகுலன் வீழ்ந்தான்;

மக்களைப் பகைத்த வேனன் விரட்டப்பட்டான்;

பரசுராமன் 21 தலைமுறை மன்னர்களை அழித்தான்;

பிராமணர்களைப் பகைத்த நந்த வம்சத்தை அடியோடு அழித்த சாணக்கியன், மகத சாம்ராஜ்யத்தை தாபிக்க உதவினான்.

 

முஸ்லீம் அரசர்களை வேருடன் சாய்க்க சிவாஜிக்கு சமர்த்த ராமதாசும், ஹரிஹரன், புக்கனுக்கு வித்யாரண்யரும் உதவினர்.

இதைக் கருத்திற்கொண்டே வள்ளுவன் பகர்வான்:-

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து

வேந்தனும் வேந்து கெடும் (குறள் 899)

 

பொருள்:-

உயர்ந்த கொள்கையுடையவர் கோபப்பட்டால், நாட்டை ஆளும் மன்னர்களும், இடை முறிந்து,  பதவியை இழப்பான் – என்பது வள்ளுவனின் எச்சரிக்கை.

 

எமனை அழைக்காதீர்கள்!

கூற்றத்தை கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்ன செயல் (குறள் 894)

 

பொருள்:-

பெரியவர்களுக்கு தீங்கு செய்தவர்கள், பின்னால் வரக்கூடிய யமனுக்கு அழைப்பிதழ்  அனுப்பி என்னை இப்போதே கூட்டிச் செல் என்று சொல்லுவதற்குச் சமம்.

—Subham–

ரமண தரிசனத்தின் போது கண்களில் நீர் வருவது ஏன்? (Post No.3855)

Written by S NAGARAJAN

 

Date:27 April 2017

 

Time uploaded in London:-  6-50 am

 

 

Post No.3855

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

 

 

ரமண சாரல்

 

ரமண தரிசனத்தின் போது கண்களில் நீர் வருவது ஏன்?

.நாகராஜன்

 

 

1945ஆம் வருடம். ஜூன் மாதம் 5ஆம் தேதி.

வங்க மொழியில் சிறந்த எழுத்தாளரும் கவிஞருமான ஹரீந்த்ரநாத் சட்டோபாத்யாயா பகவான் ரமண மஹரிஷியின் முன் அமர்ந்திருந்தார். ரமணாஸ்ரமத்திற்கு அவர் வருது இது மூன்றாவது முறை.

 

 

பேச்சுக்கள் பல திசையில் சென்று கொண்டிருந்தன. திடீரென்று அவர் பகவானிடம், “பகவானே! சில சமயம் உங்கள் முன்னால் பேச்சு வராமல் கண்களில் நீர் சொரிகிறதே, அது ஏன்?” என்று கேட்டார்.

 

‘தானாகவே இப்படி கண்களில் நீர் வர பேச்சற்று இருப்பது பக்தியினால் தான்’ என்று அருளினார் பகவான்.

அதைத் தொடர்ந்து தனது அனுபவங்களை அவர் சொல்லலானார்.

 

 

மதுரையில் அவர் கோவிலுக்குச் சென்று சிலையின் முன் நிறகும் போது “தானாகவே தன் கண்களிலும் நீர்ப் பெருக்கு ஏற்பட்டு வழிந்தோடும். இது ஆனந்தம் அல்லது வலியினால் அல்ல, பக்தியினால் தான்”என்று விவரித்த பகவான்,

“இங்கு திருவண்ணாமலைக்கு வந்தவுடன் கூட சில புத்தகங்களின் பகுதிகளைப் படிக்கும் போதோ அல்லது கேட்கும் போதோ கூட  கண்களில் நீர் வரும்” என்றார்.’

 

அதைத் தொடர்ந்து அவர் விரூபாக்‌க்ஷி குகையில் தனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தைச் சொன்னார்.

அப்போது அவருக்கு வயது 22 தான்.

 

ஒரு நாள் குகைக்கு வெளியில் இருந்த ஒரு பாறையின் மீது அவர் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது எட்டு அல்லது பத்து வய்து பையன் ஒருவன் அவரிடம் வந்தான். நல்ல களையுடைய இளைஞன் ஒருவன் இப்படி கஷ்டமான தவ வாழ்க்கையை மேற்கொண்டிருப்பதைப் பார்க்கச் சகிக்காத அவன் மிகுந்த இரக்கத்துடன் அவரிடம் வந்து கேவிக் கேவி அழலானான்.

 

 

இந்த சம்பவத்தைச் சொல்லி நிறுத்திய பகவான் சிறிது நேரம் கழித்து, “அவன் ஏன் அழுதான்  அவனுக்கு ஏன் என்னைப் பார்த்ததுமே கண்களில் நீர் வந்தது என்பதற்கான காரணத்தை யார் சொல்ல முடியும்?” என்று கூறி நிறுத்தினார்.

 

இதற்கு முன்பாக ஒரு நாள் பகவான் தான் மதுரையில் இருந்த போது கடவுள் எப்படி வருவார் எங்கே தோன்றுவார் என்று ஏங்கி இருந்தவாறே இருந்ததையும் ஆகாயத்தைப் பார்த்தவாறே அங்கிருந்து எப்போது வருவார் என்று நினைத்துக் கொண்டே இருந்ததையும் கூறினார்.

 

 

இப்படி பகவான் அபூர்வமாக தன்னைப் பற்றிய சில சம்பவங்களை அவ்வப்பொழுது கூறியதுண்டு.

 

இதிலிருந்தே அவர் மதுரையில் இருந்த போதே அந்த சின்ன வயதிலேயே அவரது இறை நாட்டம் முழு வீச்சில் இருந்தது என்பதையும் அது இறையருளால் அவர் ஆட்கொள்ளப்பட்டதையும் தெரிவிக்கிறது.

பகவானின் ஞானி நிலை ஒரு பக்கம் இருந்ததெனில் அவர் வாழ்ந்த உலகியலுக்கு ஏற்ப அவரது பக்தி நிலையும் அதனால் ஏற்பட்ட வெளிப்பாடுகளையும் கூட அவரது வாழ்க்கை வரலாற்றில் காண்கிறோம்.

 

 

பெரிய புராணத்தில் நாயன்மார்களின் சரித்திரத்தைப் படிக்கக் கேட்கும் போது அருவி போல அவர் கண்களிலிருந்து நீர் வழியும்.

முழு இறைபக்தியின் வெளிப்பாடாக ஒரு ஞானிக்கும் கூட கண்ணீர் வரும் என்பதையும் அவரே கூட கூறி இருக்கிறார் அல்லவா!

***

Source ; Day by Day with Bhagavan by Sri A.Devaraja mudaliyar

 

 

குரு ஏன் அவசியம்? தமிழ்ப் புலவரும் பரமஹம்சரும் தரும் தகவல் (Post No.3853)

Written by London swaminathan

Date: 26 APRIL 2017

Time uploaded in London:- 9-23 am

Post No. 3853

Pictures are taken from various sources; thanks.

contact; swami_48@yahoo.com

 

 

ஒருவருக்கு ஆன்மீகப் பாதையில் முன்னேற குரு அவசியம் என்பது இந்துக்களுக்குத் தெரியும். ஆயினும் ஏன் அவசியம் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றனர் நீதி வெண்பா பாடிய புலவரும் ராமகிருஷ்ண பரம்ஹம்சரும்.

 

இறைவன் என்பவன் எங்கும் நிறைந்த ஜோதி- காட்டுத்தீ

குரு என்பவர் விளக்கு

ஆயினும் வெளிச்சம் வேண்டுவோரோ அல்லது நெருப்பு வேண்டுவோரோ காட்டுத் தீயிடமோ சூரியனிடமோ நெருங்கிப் போக முடியுமா?

முடியாது.

விளக்கை நெருங்கலாம்; பயன்படுத்தலாம். வெளிச்சமும் கிடைக்கும்; அதி.லிருந்து நெருப்பை எடுத்து இன்னொரு விளக்கும் ஏற்றலாம்; அடுப்பையும் பற்றவைத்து சமைக்கலாம்.

 

முற்று மிறை செயலே முற்றிடினுந்  தன்னருளைப்

பெற்றவர்தம் பாலே பெரிதாகும் – பற்றுபெருந்

தாபத்  திடத்தே தழன்றிடினும் நற்சோதி

தீபத் திடத்தே சிறப்பு

நீதி வெண்பா பாடல் (புலவர் பெயர் தெரியாது)

 

பொருள்:–

நல் சோதி =நல்ல ஒளி

பற்று பெரு தாபத்திடத்து = பற்றக் கூடிய பெரிய காட்டுத் தீயினிடத்தில்

தழன்றிடினும் = ஒளி விட்டாலும்

தீபத்திடத்தே = விளக்கினிடத்திலேயே

சிறப்பு = அந்த ஒளிக்குச் சிறப்பு ஆகும்

(அது போல)

 

முற்றும் = உலகெங்கும்

இறை செயல் = கடவுளின் அருள்

முற்றிடினும் = நிறைந்திருந்தாலும்

தன் அருளைப் பெற்றவர்தம் பாலே = ஆண்டவனின் அருளைப் பெற்ற அடியாரிடத்திலேதான்

பெரிதாகும்= இறைவன் அருள் அதிகமாகக் கிடைக்கும்.

 

அதாவது எளிதில் பெறலாம்.

 

 

சதுரங்க (Chess செஸ்) விளையாட்டும் குருவும்

 

ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார்:- ” சதுரங்க விளையாட்டை ஆடிக் கொண்டிருப்பவர்களைவிட, ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எந்தக் காயை நகர்த்துவது சரியான ஆட்டமாகும் என்பதை நன்கு சொல்லக்கூடும். உலகத்திலுள்ள மனிதர்கள் தாங்கள் வெகு சமர்த்தர்கள் என்று கருதுகின்றனர். ஆனால் பணத்தாசை, கௌரவ (புகழ்) ஆசை, விஷய சுகங்கள் இவை போன்ற உலகப் பற்றுகள் அவர்களை விட்டபாடில்லை. விளையாட்டில் கலந்திருப்பதனால் சதுரங்கக் காயை சரியானபடி நகர்த்துவதற்குச் சாத்தியமில்லாமற் போகின்றது. உலகத்தைத் துறந்த புண்ய புருஷர்கள் அதனுள் சம்பந்தப் பட்டிருப்பது இல்லை.  அவர்கள் சதுரங்க ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் போன்றவர்கள்.  விஷயங்களின் உண்மைச் சுபாவம் அவர்களுக்குத் தெரிகின்றது.

 

உலகத்தில் உழலும் மனிதர்களைவிட அவர்களே விஷயங்களை நன்றாக எடை போடமுடியும். அதாலால் நல்ல வாழ்க்கையை விரும்புவோர், ஈசுவரனைத் தியானித்து அவனை நேரில் கண்டவர்களின் சொற்களில் நம்பிக்கை வைக்க வேண்டும். ஒரு வழக்கு தொடர்பாக ஆலோசனை கேட்க எப்படி வக்கீலிடம் போகிறோமோ அப்படி ஆன்மீக விஷயங்களுக்குக் குருவிடம் போக வேண்டும்.

 

ஒரே குரு ஏன்?

நமக்குக் கொஞ்சம் கொஞ்சம் விஷயங்களைக் கற்பிக்கும் ஒவ்வொருவரையும் குரு என்று சொல்லாமல் ஒரே ஒருவரை மட்டும் குரு என்று சொல்ல வேண்டிய  அவசியம் என்ன?

 

முன்பின்னறியாத தேசத்திற்கு நீ போனால், அவ்விடங்களில் பரிச்சயமுள்ள ஒரு வழிகாட்டியை (Guide கைடு)  நம்பி அவன் சொல்கிறபடி நீ நடக்க வேண்டும். அப்படி இல்லாமல் அங்கு பலபேர் சொல்கிறபடி நடந்தால் நீ நிச்சயமாகத் தடுமாறிப்போவாய். அது போல ஈசுவரனை அடையும் முயற்சியில், அவரிடம் போகும் வழியைத் தெரிந்துகொண்ட ஒருவரின் — ஒரு குருவின் — புத்திமதியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

24 குருக்கள்

 

குரு ஒருவராக இருப்பினும் உப குருக்கள் பலர் இருக்கலாம். எந்த ஒன்றையும் யாரிடமிருந்து கற்றாலும், அவர் ஒரு உப குரு ஆகின்றார். மஹானான அவதூதருக்கு அப்படிப்பட்ட உப குருக்கள் இருபத்து நான்கு பேர் இருந்தனர்”.

 

இது ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்னது.

–சுபம்–