சீனர்களின் அபார ஜோதிட நம்பிக்கை! (Post No. 2497)

IMG_1565

Written by london swaminathan

Date: 1 February 2016

 

Post No. 2497

 

Time uploaded in London :–  10-11 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

இந்துக்கள், ராசிச் சக்கரத்தை மேஷ, ரிஷபம் முதலிய 12 ராசிகளாகப் பிரித்து, அதனடிப்படையில் பொதுப் பலன்களைக் காண்கிறார்கள். இன்றும் கூட ஆங்கில, தமிழ் பத்திரிக்கைகள் ஜோதிடப் பலன் கூறும் பகுதிகளை வெளியிடுகின்றன. இது போலவே சீனர்கள் ராசிச் சக்கரத்தை 12 ஆகப் பிரித்து அவைகளுக்கு பிராணிகளின் பெயர்களைக் கொடுத்திருக்கிறார்கள். பிப்ரவரி 8, 2016 ஆம் ஆண்டு முதல் ஓராண்டு, குரங்கு ராசியின் கீழ் வருகிறது. இதற்கான பலன்கள் சீனப் பத்திரிக்கைகளில் உள்ளன.

நான் ஜனவரி 2016ல் ஹாங்காங்கிலும் ஆஸ்திரேலியாவிலும் 16 நாட்கள் சுற்றுப் பயணம் செய்தபோது கண்ட காட்சிகளை மட்டும் எழுதுகிறேன்.

 

1.நான் சாப்பிடப் போன பெரும்பாலான வீடுகளிலும், உணவு விடுதிகளிலும் சிவப்பு நிற ரிப்பனில் சீன எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அதிர்ஷ்டப் பட்டைகள் தொங்கின. எனது குடும்பத்தினரும், என்றாவது ஒரு நாள் லாட்டரி பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஹாங்காங் மார்க்கெட்டில் சில அதிர்ஷ்ட சின்னங்களை விலைக்கு வாங்கினர்.

எல்லாருடைய வீடுகளிலும் கடையிலும் சிரிக்கும் புத்தர் சிலைகள் இருக்கின்றன. இதுவும் ஒரு அதிர்ஷ்டச் சின்னம்.

  1. ஹாங்காங்கில் பெரிய அலங்காரத் தோட்டத்துடன் உள்ள புகழ்பெற்ற Wong Tai Sin கோவிலுக்குப் போனோம். வாங் டாய் என்பவர் 1600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு புனிதர். அவர் பெயரில் இக்கோவில் இருந்தாலும், மும்மதத்தினரின் சின்னங்கள், சிலைகள் இங்கே உள்ளன. அங்கு கன்பூஷியஸ், டாவோ, புத்தர் போன்ற பெரியோர்களை வணங்குகின்றனர். கோவிலுக்கு வெளியே பிரகாரத்தில் 12 ராசிகளைக் குறிக்கும் 12 பிராணிகளும் இரண்டு ஆள் உயரத்துக்கு சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன் கீழ், அந்தந்த ராசிக்காரர்கள் நின்று தனது விருப்பத்தைச் சொன்னால், அது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாக எல்லா சீனர்களும் அதன் கீழ் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

இங்கு 5 பெங்சுயி சின்னங்களும் (உலோகம், மரம், நிலம், நீர், தீ) இருக்கின்றன. மேலும் கோவிலுக்கு வெளியே குறிசொல்லுவோர் கடைகளும் இருக்கின்றன. அங்கு போய், காசு கொடுத்து சோதிடம் கேட்கலாம். மூன்று முனிவர் மண்டபம், கன்பூசியஸ் மண்டபம் ஆகியன உள்ளன.

 

கோவிலுக்கு வருவோர் மண்டியிட்டு, ஊதுவத்தி கொளுத்தி வழிபடுவர். நம்பிக்கையுடையோர் ‘கௌசிம்’ முறையில் ஜோதிடம் பார்ப்பர். ஒரு மூங்கில் குழாயிலுள்ள அதிர்ஷ்டக் குச்சிகள் விழுமாறு குலுக்குவர். அப்படிக் குலுக்குபவர், தன் மனதில் என்ன வேண்டுமோ அதை நினைத்துக் குலுக்குவர். முதலில் விழும் குச்சியைக் கொடுத்து அதே நம்பருள்ள ஒரு சீட்டை வாங்குவர். அதைசோதிடரிடம் காட்டினால் அவர் அதற்கு விளக்க்ம் சொல்லுவார். நம்மூரில் கிளி எடுத்துக் கொடுக்கும் கார்டை, ஒரு கிளி ஜோசியன் படித்து விளக்குவது போல இது.

 

உங்கள் ராசி எது?

இத்துடன் பிரசுரிக்கப்படும் சீன ராசிச் சக்கரத்தைப் பார்த்தால் உங்கள் ராசி எது என்று தெரியும்.

chinese-zodiac_3551491b

ஒவ்வொரு சிலையும் சிவப்பு நிற ரிப்பனால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சீனர்களுக்கும் புத்த மதத்தினருக்கும் சிவப்பு- அதிர்ஷ்ட வர்ணம். இந்துக்களுக்கும் அப்படியே. கல்யாணக் கூரைப்புடவை முதல் அம்மனுக்கு சார்த்தும் புடவை வரை எல்லாம் சிவப்பு வர்ணத்திலேயே இருக்கும்.

 

வாங் டாய் சின் கோவிலைச் சுற்றி பெரிய தோட்டம் இருக்கிறது. சின்னக் குளம், நீர்வீழ்ச்சி, சீன பாணி அலங்கார மண்டபங்கள் ஆகியன உண்டு.

 

3.ஆஸ்திரேலியாவில் மிகப் பெரிய புத்தர் கோவில் இருக்கிறது. பூமியின் தென்பகுதியில் மிகப்பெரிய கோவில் இந்த  நான் டியன் Nan Tien Temple கோவில்தான். இது சிட்னி நகரிலிருந்து 50 மைல் தொலைவில் உல்லாங்காங் என்னுமிடத்தில் இருக்கிறது. மூன்று அடுக்குகளில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் ஒரு புத்தர், 3 புத்தர்கள், 5 புத்தர்கள் என்று வெவ்வேறு சந்நிதிகள் உள்ளன. மேலேயுள்ள இரண்டு இடங்களிலும் செருப்புகள் அணியக்கூடாது. மற்ற எல்லா புத்தர் கோவில்களிலும் செருப்புகளை அணிந்தவாறு வழிபடலாம்.

 

இங்கும் சரி, ஹாங்காங் புத்தர் கோவிலிலும் சரி ஏராளமான கூட்டம். ஹாங்காங் கோவிலில் ஜேப்படித் திருடர்கள் (பிக் பாக்கெட்) ஜாக்கிரதை என்று ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டே இருக்கின்றனர்.

4.சிட்னி அருகிலுள்ள கோவிலில் சீனர்களின் ஜோதிட நம்பிக்கையை மேலும் காண முடிந்தது. கற்பக மரம் போல விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் ஒரு மரம் இருக்கிறது. கோவிலில் விற்கும் சிவப்பு நிற ரிப்பனை பத்து டாலர் கொடுத்து வாங்கி அந்த மரத்தின் மீது எறிகிறார்கள். இப்படிச் செய்தால் நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெறும். நாங்களும் 20 டாலருக்கு ரிப்பன் வாங்கி எறிந்தோம். லாட்டரி பரிசு விழுந்தால் உங்களுக்கும் சொல்லுவேன். நீங்களும் செய்யலாம்.

 

5.கோவிலுக்கு வெளியேயுள்ள திறந்த வெளியில் சீன ராசிச் சக்கரத்தின் 12 பிராணிகளும் பெரிய – ஆளுயர – பொம்மைகளாக நிற்கின்றன. அதன் கீழ் சீன மொழியிலும், ஆங்கிலத்திலும் ஒவ்வொரு ராசிக்கான பலன்களும் எழுதப்பட்டுள்ளன. அவரவர்கள் தனது ராசிக்கான பிராணியின் கீழ் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

சீனர்கள், ஜோதிட நம்பிக்கைக்காக எவ்வளவு செலவழிக்கின்றனர் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. கம்யூனிசமோ, மாவோவின் கலாசாரப் புரட்சியோ, அவர்களின் நம்பிக்கையை அசைக்கவில்லை.

6.ஹாங்காங்கில் ஒரு முக்கிய சுற்றுலா இடம் விக்டோரியா பீக் அல்லது பீக் ட்ராம் (Victoria Peak or Peak Tram) என்பதாகும். ஒரு ட்ராம் ரயிலில் மிக உயரத்துக்குக் கொண்டு செல்லுவார்கள். அங்கிருந்து ஹாங் காங் முழுவதையும் ஒரு பறவை பார்ப்பது போலப் பார்க்கலாம். அங்கும் கூட 12 ராசிகளைச் சித்தரிக்கும் அதிர்ஷ்ட சின்னத்தை வைத்திருக்கின்றனர். சீனர்கள் எங்கெங்கு வசிக்கிறார்களோ அங்கெங்கெல்லாம் நான் மேலே சொன்ன எல்லா சின்னங்களையும் காணலாம்!

7.சிட்னியிலிருந்து லண்டனுக்குத் திரும்பும் வழியில், மீண்டும் ஹாங்காங் வந்தோம். அங்கு விமான நிலையத்தில் 15-ஆம் எண் ‘கேட்’டில் விமானத்தில் ஏறும் வழியில், பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ், பெரிய குரங்கு (Year of Monkey) பொம்மையுடன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். அங்கே ஜோதிட நம்பிக்கையும் கலாசார நம்பிக்கையும் ஒன்றுடன் ஒன்று இணைந்து எல்லைகள் மறைந்து விடுகின்றன.

IMG_9473

-சுபம்-

 

புது வகை அமேஸான் விளையாட்டு! (Post No.2496)

IMG_2678

Picture from Nan Tien Temple, Australia

 

Written by S Nagarajan

 

Date: 1 February 2016

 

Post No. 2496

 

Time uploaded in London :–  9-12  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

 

29-1-2016 பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

புத்தர் வழி

 

அமேஸான் விளையாட்டு!

 

ச.நாகராஜன்

IMG_2704

நல்ல புத்திசாலியான ஒருவன் எப்போழுதும் எதிலும் முதலாவதாக வந்து கொண்டிருந்தான். விளையாட்டுக்களிலும் அவன் தான் முதல். யாருடனும் சேராமல் இருந்த அவனை அவனது நண்பர்கள் ஊருக்கு வந்திருந்த ‘புத்த பிட்சு ஒருவரை பார்க்கப் போகலாம்,வா’ என்று கூறினர்.

புத்த பிட்சுவை தரிசித்த அவன், அவரிடம் எப்படி வாழ வேண்டும் என்று ஒரு கேள்வியைக் கேட்டான்.

 

அவர் புன்சிரிப்புடன், “உனக்கு அமேஸான் விளையாட்டு தெரியுமா?” என்று கேட்டார்.

 

“அமேஸான் விளையாட்டா? கிரிக்கட், ஃபுட் பால், டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களை கேள்விப் பட்டிருக்கிறேன். அதென்ன அமேஸான் விளையாட்டு?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.

 

பிட்சு புன்முறுவல் மாறாமல். “அது நிஜமாகவே நடக்கும் ஒரு விளையாட்டு. அமேஸான் காடுகளில், பாய்ந்து வரும் அழகிய அமேஸான் நதிக் கரையோரம் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். அவர்கள் ஆடும் விளையாட்டு அந்த அமேஸான் விளையாட்டு. அங்கு பணியாற்றச் சென்ற பிரிட்டிஷ் தன்னார்வத் தொண்டர் ஒருவர் அந்த விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்தார். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆட்டமும் புரியவில்லை, ஆட்டத்தின் விதிகளும் புரியவில்லை.

 

 

முதலில் அங்குள்ளோர் எல்லோரும் ஆண், பெண் வித்தியாசம், வயது வித்தியாசம் பாராமல் முதலில் ஒன்று சேர்ந்தனர். பின்னர் இரண்டு குழுக்களாகப் பிரிந்தனர். அந்தக் குழுக்களில் எண்ணிக்கை சரி பாதியாகவும் இல்லை. ஆண்கள், பெண்கள், மூத்தவர், இளையவர் என்ற வயது வித்தியாசம் பலசாலி, பலமில்லாதவர் என்று எந்த பேதமும் இல்லை.

இப்படி இரண்டு குழுக்களாகப் பிரிந்தவர்கள் திடீரென வரிசையாக நின்று ஒரு மரத்தைத் தோளில் தூக்கிக் கொண்டனர்.  இன்னொரு போட்டியாளர் வரிசையும் ஒரு மரத்தைத் தூக்கிக் கொண்டது. மரத்திலாவது எடை, நீளம் ஆகியவற்றில் ஒரு சமத்தன்மை நிலவியதா என்றால் அதுவும் இல்லை. அணிக்கு ஏதோ ஒரு மரம், அவ்வளவு தான்!

 

 

சற்று தூரத்தில் – சுமார் 100 மீட்டர் தூரம் – இருக்கும் எல்லையை நோக்கி ஆரவாரக் கூச்சலிட்டுக் கொண்டே அவர்கள் ஓடினர்.

எல்லையை முதலில் அடைந்த கோஷ்டியிலிருந்து வெற்றி பெறாத கோஷ்டிக்கு ஒரு உறுப்பினர் மாறினார். மீண்டும் பந்தயம் தொடங்கியது. இப்படி வெற்றி பெறாத கோஷ்டிக்கு அவனோ அல்லது அவளோ மாறிக் கொண்டே இருந்தனர். போகப் போக விளையாட்டு சூடு பிடித்தது. இரு அணிகளும் கிட்டத்தட்ட சமபலம் உடையவர்களாக ஆகிக் கொண்டு வந்தனர்.. இரு அணிகளுக்கும் தூரத்தில் உள்ள இடைவெளியும் குறுகிக் கொண்டே வந்தது. நேரம் ஆக ஆக ஒரே ஆரவாரம்.

கடைசியில் இரு அணிகளும் ஒரே சமயத்தில் எல்லைக் கோட்டைத் தொட்டது.

 

 

இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்”

புத்த பிட்சு பேச்சை நிறுத்தினார்.

 

IMG_2703

sculptures of Nan Tien Temple, Australia

பின்னர் மெதுவாகத் தொடர்ந்தார். “விளையாட்டைப் பற்றி ஒன்றுமே புரியவில்லை என்ற பிரிட்டிஷ் தன்னார்வத் தொண்டருக்கு இப்போது எல்லாம் புரிந்து விட்டது. பரவசத்தின் உச்சத்தில் இருந்த அவர் இது போன்ற ஒரு விளையாட்டைப் பார்த்ததே இல்லை என்று எண்ணி மகிழ்ந்தார்.”

பேச்சை நிறுத்திய பிட்சு கேள்வி கேட்ட புத்திசாலியை கூர்மையாக நோக்கினார்.

 

 

“என்ன கேள்வி கேட்டாய்? எப்படி வாழ்வது என்றா? அது சரி, இந்த அமேஸான் விளையாட்டிலிருந்து உனக்கு என்ன புரிகிறது, அதை முதலில் சொல்!” என்றார்.

 

புத்திசாலியாகத் திகழ்ந்த அவன் கண்களில் நீர் துளிர்த்தது.

புத்த பிட்சுவை நமஸ்கரித்து வணங்கினான்;”ஐயனே! எனக்கு வாழும் வழி புரிந்து விட்டது. சொன்னதற்கு என்றும் உங்களுக்கும் புத்தருக்கும் கடமைப்பட்டுள்ளேன்” என்றான்.

அனைவரும் அவனை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.

பிட்சு என்ன சொன்னார்? இவன் என்ன புரிந்து கொண்டான்?

அந்த புத்திசாலியே விளக்கினான்.

 

 

“புரியவில்லையா! உலகில் பல்வேறு வித்தியாசங்களுடன் மக்கள் இருக்கத் தான் செய்வர். பலமுள்ளவன் பலமில்லாதவனுக்கு, அறிவாளி படிப்பில்லாதவனுக்கு, செல்வமுள்ளவன் வறியவனுக்கு உதவிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது சமுதாயம் சமநிலை உள்ளதாக மாறும். அப்போது வென்றவன் தோற்றவன் என்று எவனும் இல்லை. எல்லோரும் வென்றவரே.

விட்டுக் கொடுத்து பரஸ்பரம் உதவி செய்து வாழ்க! என்பதே புத்தரின் அறிவுரை. அதை விளக்குகிறது இந்த அமேஸான் விளையாட்டு. அதைத் தான் எனக்கு அருளுரையாக இந்த மகான் கூறினார்!”

 

IMITATION BUDDHA

 

பிட்சு கால்நடையாக அடுத்த ஊரில் உள்ள இன்னொரு புத்திசாலியைப் பார்க்க மெதுவாக நடந்து போனார். அவரை நோக்கி அனைவரும் கைகூப்பித் தொழுத வண்ணம் பிரியாவிடை கொடுத்தனர்.

 

அவன் அன்று முதல் அனைவருக்கும் உதவி செய்பவனாக மாறினான். உயர்ந்தான்!

 

புத்தர் காட்டும் வழி : – ஒருவருக்கொருவர் கொள்ளும் ஆன்மீக நட்பு என்பது தயை, இரக்கம், சேவை, ஒழுக்கம் ஆகியவற்றை உயர்த்தும் ஒரு வழிமுறை.!

 

*************

 

 

நல்லதும் கெட்டதும் ஏன் ஏற்படுகிறது? (Post No. 2484)

good bad 2

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

Date: 13 January 2016

Post No. 2484

Time uploaded in London :–  6-36 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

ஆன்மீக இரகசியம்

 

காரண காரிய தொடர்பு அறிவது கஷ்டமான ஒன்று!

 

.நாகராஜன்

 

நல்லதும் கெட்டதும் ஏன் ஏற்படுகிறது?

 

மனித வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கான அனுபவங்கள். ஆயிரக் கணக்கான சிந்தனைகள்.

எதிர்பாராமல் ஒருவரைச் சந்திக்கிறோம். அந்தச் சந்திப்பு வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. உயரத்தில் ஏற்றி விடுகிறது.

ஒரு சிறிய சறுக்கல். சின்ன விபத்து. அது வாழ்க்கையையே ஏமாற்றி விடுகிறது. ஒரு அங்கம் பழுதானால் வாழ்க்கையே ப்ழுதாகி விடுகிறது.

 

இந்த நல்லதும் கெட்டதும் எதனால் ஏற்படுகிறது.

இது யாருக்கும் தெரிவதில்லை; புரிவதில்லை.

முற்றும் துறந்த மகான்கல் சிலருக்கே இந்த மர்மம் புரிகிறது. ஆனால் அவர்களும் தன்னை தரிசிக்கும் சிலருக்கே, இந்த காரண காரிய தொடர்பினால் அவர்கள் துயருறும் போது, உரிய நிவாரணத்தை வழங்குகின்றனர்.

எல்லோருக்கும் எப்பொழுதும் துயரை உடனே போக்கி விடுவதில்லை.

 

 

Good versus bad

Good versus bad crossword concept on white background

நல்லதையே செய்: எளிய விதி

 

இந்த புண்ய பாப கர்ம பலன் மிகவும் சிக்கலானது. எளிதில் அறிந்து கொள்ள முடியாதது.

ஆனால் இதை அறிந்து கொள்ளத் தேவை இல்லை என்று பெரியோர் முடிவு கட்டினர். தபஸ்விகளினாலேயே முடியாததை சாமான்யனால் எப்படி அறிய முடியும்?

ஆகவே தான் சுலபமாக இந்த கர்ம பலன்கள் தரும் புண்ய பாவ சுழற்சியிலிருந்து மீள சுலபமான வழியைச் சொல்லி வைத்தனர்.

இறைவனை வழிபடு; நல்லதைச் செய்; அதையும் அவனுக்கே அர்ப்பணித்து விடு!

 

கர்மண்யேவாதிகாரஸ்தே; மா ஃபலேஷு கதாசன;

கர்மம் செய்தற்குத் தான் உனக்கு அதிகாரம்; அதன் பயனில் ஒரு பொழுதும் (கதாசன) இல்லை.

 

 

சிங்காங்கும் ஆமையும்

 

இதை விளக்க புத்த மதத்தில் அற்புதமான சம்பவம் ஒன்று உண்டு.

 

சிங்-காங் ஒரு நாள் வீதி வழியே சென்று கொண்டிருந்தார். மீனவன் ஒருவன் ஆமை ஒன்றைக் கடலிலிருந்து பிடித்து வீதி வழியே நடந்து வந்து கொண்டிருந்தான். அதை சந்தையில் விற்பதே அவனது எண்ணம்.  சந்தையில் யாரோ ஒருவர் வாங்கி விட அந்த ஆமை உணவாக சமைக்கப்படப் போவது நிச்சயம்.

உயிர் மீது கருணை கொண்ட சிங்-காங் பரிதாபப்பட்டார். அதை மீனவனிடமிருந்து தானே வாங்கினார். நேராகக் கடலுக்குப் போனார். அதைக் கடலில் தூக்கிப் போட்டார்.

கடலில் தூக்கிப் போடும் போது ஆமை தன் தலையை இடது புறமாகத் திருப்பி சிங்- காங்கை நன்றாகப் பார்த்தது. இப்படி மூன்று முறை பார்த்தது.

 

பின்னர் வெகு வேகமாகக் கடல் நீரில் பாய்ந்து விரைந்து சென்றது.

 

சிங்-காங் வீடு திரும்பினார். இந்தச் சம்பவத்தை அவர் மறந்தே போனார்.

 

காலம் சென்றது. சிங்-காங் அவர் இருந்த நகரில் மேயரானார்.

சின்ன நகரம் அது. அந்த நகரத்தின் சம்பிரதாயப்படி மேயரான ஒருவர் தனக்கான இலச்சினையை தானே வடிவமைத்துக் கொண்டு உபயோகிக்கலாம். (சீனாவிலும் ஜப்பானிலும் இது ஒரு சம்பிரதாயம். மரத்திலோ அல்லது கல்லிலோ செய்து கொள்வார்கள்.)

 

சிங்-காங் வாழ்ந்த நாளில் வழக்கமாக தங்கத்தில் இலச்சினையைச் செய்து அதன் மேல் ஆமையின் உருவத்தைப் பொறிப்பார்கள்.

 

சிங்-காங் பொற்கொல்லர் ஒருவரைக் கூப்பிட்டுத் தனக்கான இலச்சினையைத் தந்து அதை செய்யச் சொன்னார்.

பொற்கொல்லந்னும் அதைச் செய்து சிங்-காங்கிடம் கொண்டு வந்து காண்பித்தான். எல்லாம் சரியாக இருந்த போதிலும் ஒரு சின்ன மாறுதல் அதில் இருந்தது.

 

சின்னத்தின் மேல் இருந்த ஆமையின் தலை இடது பக்கம் பார்த்துக் கொண்டிருந்தது.

 

தவறைச் சுட்டிக் காட்டிய சிங்-காங் அதைச் சரி செய்யுமாறு பொற்கொல்லனிடம் கூறினர். பொற்கொல்லன் தான் சரியாகத் தான் செய்ததாகவும் ஆமை எப்படியோ திரும்பி இருக்கிறது என்று கூறி விட்டு மீண்டும் அதைச் செய்தான்.

இரண்டாம் முறையும் அது தலையை இடது புறம் பார்த்துத் திரும்பி இருந்தது.

 

மூன்றாம் முறையாக பொற்கொல்லன் அதை செய்தான்.

என்ன ஆச்சரியம்,இந்த முறையும் ஆமையின் தலை இடது புறம் பார்த்தே திரும்பி இருந்தது.

 

பொற்கொல்லனிடம் மூன்றாம் முறையாக இலச்சினையைப் பெற்ற சிங்-காங் திகைத்தார். ஒரு நிமிடம் சிந்தித்தார்.

அவருக்கு எல்லாம் புரிந்து விட்டது.

 

அந்த ஆமையின் தலை இடது புறம் பார்த்து திரும்பியே இருக்கட்டும் என்று கூறி அதையே தன் இலச்சினையாகக் கொண்டார்.

அவர் புரிந்து கொண்டது- உலகின் எல்லா விஷயங்களும் சும்மா நடப்பதில்லை. ஒரு காரண-காரியத் தொடர்புடன் தான் நடக்கிறது.

அசைவற்றதும், அசைவுள்ளதும், உயிருள்ளதும் இல்லாததும் ஒன்றுடன் ஒன்று இணைந்து பின்னப்பட்டிருக்கிறது.

மூன்று முறை இடது புறம் தலையைத் திருப்பித் தன்னைப் பார்த்த ஆமை அல்லவா மேயர் என்ற உயர்ந்த அரியணையில் தன்னை உட்கார்த்தி வைத்திருக்கிறது! கர்ம பலன் விதியை சிங்-காங் நன்றாகவே புரிந்து கொண்டார்.

 

(for more articles go to tamilandvedas.com OR swamiinology.blogspot.com)

894_Bhagwat_Gita_thumb[13]

சிக்கலானது கர்ம பலன் விதி

 

சிறிய நல்ல விஷயமும் பெரிய நல்ல பலனைத் தரும்.

சாமானிய எளிய மனிதர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியாது. சிக்கலான விதிகள் மகான்களுக்கே புரிவது கஷ்டம் எனில் சாமானியர்களுக்கு எப்படி விளங்கும்?

ஆனால் இவை விளங்கித் தான் ஆக வேண்டுமென்பதில்லை.

நல்ல காரியங்களை எப்போதும் எங்கும் எல்லோருக்கும் செய்வோம். நல்லதைப் பெறுவோம்.

 

ஆமை உரிய நேரத்தில் நம்மை உயர்த்தி வைத்து இடது புறம் தலையைத் திருப்பிப் பார்க்கும்.

 

காரண காரியத் தொடர்பை விளக்கும் அபூர்வமான இந்த சீனக் கதை விளக்குவதோ, பெரிய யோகிகளாலும் எளிதில் அறிய முடியாத காரண காரிய கர்ம பலனின் விதியைப் பற்றி!

ஆகவே தான் புத்தர் தனது எட்டு விதிகளில் நல்ல பார்வை, நல்ல நோக்கம், நல்ல பேச்சு, நல்ல செயல் ஆகியவற்றை முதல் நான்கில் வைத்தார்.

 

(நல்ல வாழ்க்கை முறை, நல்ல முயற்சி, நல்ல மனம், நல்ல மனக் குவிப்பு ஆகியவை அடுத்த நான்காக இடம் பெறும்)

விஞ்ஞான ரீதியாக பட்டர் ஃபிளை எபெக்ட் இதைத் தானே இன்று விளக்குகிறது!!!

*******

(இந்தக் கட்டுரையாளர் எழுதிய பட்டர் ஃப்ளை எபெக்ட், டைம்   ட்ராவல் ஆகியவை பற்றிய ஆன்மீக இரகசியங்களை விளக்கும் கட்டுரைகள் ஹ்யூ எவரெட் போன்ற விஞ்ஞானிகளின் விதிகளோடு எழுதப்பட்டதை நேயர்கள் படிக்க விரும்பலாம். படியுங்கள்)

contact swami_48@yahoo.com

 

 

 

 

வாரியார் சொன்ன ஸஜ்ஜன சாருகர் கதை: ‘அவ்வினைக்கு இவ்வினை’ (Post No. 2483)

What-to-see-in-Pandharpur

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 12 January 2016

 

Post No. 2483

 

Time uploaded in London :– 9-38 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

(லண்டன் ஸ்ரீ முருகன் கோவில் மஹா கும்பாபிஷேக மலர், 1984)

 

“நாம் இப்போது நுகர்கின்ற இன்ப துன்பங்கட்கு முற்பிறப்பில் செய்த நல்வினை, தீவினைகளே காரணமாகும். அவரவர் செய்தவினை ஊழாக மாறிவந்து உருத்து வந்தூட்டும். நம் உடம்பின் நிழல் நாம் நடந்தால் நம்மைத் தொடர்ந்து வருமாப்போல நாம் செய்த வினையும் நம்முடன் தொடர்ந்துவரும்.

 

இறைவன் நடுநிலை தவறாதவன். நாம் செய்த நல்வினைகளுக்கு ஏற்ப சுக, துக்கங்களை வகுத்து விதிக்கின்றான். இறைவனுடைய அருளாணையால் விதிக்கப்படட்டது ‘விதி’ எனப்படும்.

 

“விதி காணும் உடம்பைவிடா வினையேன்

கதிகாண மலர்க்கழல் என்றருள்வாய்”

என்பது கந்தரனுபூதி. விதியை வென்றவர் எவருமிலர். விதி வழி மதி செல்லும்.

“அவ்வினைக்கு இவ்வினை”

 

முதிர்தவ ராயினும் முனிவ ராயினும்

மதியின ராயினும் மன்னராயினும்

பொதுவறு திருவொடு பொலிவராயினும்

விதியினை யாவரே வெல்லும் நீர்மையார்?

–கந்த புராணம்

 

நாட்டையும் நகரத்தையும் பொன்னையும் மணியையும் விலையுயர்ந்த உடைகளையும் தூசாக எண்ணித் துறந்து உடுத்த உடையுடன் கானகம் சென்ற குணவதியாகிய சீதா தேவி ஒரு மானை விரும்பினாள் – கணவனுக்குக் கட்டளையிடாத அக்கற்புக்கரசி கணவனைப் பார்த்து “இம்மானைப் பிடித்துக்கொடும்” என்று ஏவினாள். கண்ணை இமை காத்து நின்றது போல் காத்துநின்ற பரம பக்தனாகிய இலெட்சுமணனை உள்ளம் வருந்த சூடாக வைது நெடிய வனத்திடை அனுப்பினாள்.

 

ஒருபோதும் மனைவியின் வார்த்தையையும் கேளாத வீர ராகவர் மனைவியின் சொல்லைக் கேட்டு கோதண்டமாகிய வில்லைத் தூக்கி மான் பின்னே சென்றார். வில்லையா தூக்கினார்? இல்லை பழிச் சொல்லைத் தூக்கினார். இவைகட்கு காரணம் விதிதான்.

வாரியார் 1

“வெஞ்சின விதியினை வெல்ல – வல்லமோ?”

 

அதிசயம் ஒருவரால் அமைக்கலாகுமோ

துதியறு பிறவியின் இன்ப துன்பந்தான்

விதிவயம் என்பதை மேற்கொள்ளாவிடின்

மதிவலி யான்விதி வெல்ல வல்லமோ

–கம்பராமாயணம்

 

விதியின் வலிமையை விளக்க ஒரு சான்று

ஒரு குளக்கரையில் ஓரந்தணர் மான் தோல்மீது அமர்ந்து காயத்திரி மந்திரம் ஜெபம் செய்துகொண்டிருந்தார். ஒரு புலையன் பசுவை வெட்டும்பொருட்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தான்.அறிவுள்ள அப்பசு, நம்மைக் கொல்லும்பொருட்டே இவன் கத்தியைத் தீட்டுகின்றான் என்று அறிந்து கட்டுத் தறியை அறுத்துக்கொண்டு அக்குளக்கரை வழியே ஓடியது. அந்தப் புலையன் பசுவைத் தேடிக்கொண்டு வந்தான்.அந்த ஜெபம் புரியும் பிராமணனைப் பார்த்து, “ஐயரே, பசு இந்த வழியாகச் சென்றதா?” என்று கேட்டான்.

 

ஜெபம் செய்துகொண்டிருந்த அந்தணர் இருகரங்களையும் நீட்டி பசு ஓடின வழியைக் காட்டினார். அவர் காட்டிய வழியே சென்று புலையன் பசுவைக் கொலை செய்துவிட்டான்.

 

வட நாட்டில் தாழ்ந்த குலத்தில் ஸஜ்ஜன சாருகர் என்பவர் பிறந்தார். சாருகர் என்ற குலத்தில் பிறந்தவர் உயர்ந்த குணங்களை உடையவராக விளங்கினார். அதனால் ஸஜ்ஜன சாருகர் என்று பெயர் பெற்றார். அவர் இளமையிலிருந்தே உத்தம குணங்களுக்கு உறைவிடமாகத் திகழ்ந்தார். அடக்கம், பொறுமை, சாந்தம், ஈஸ்வர பக்தி ஒழுக்கம், பண்பு முதலிய நற்குணங்களை அணிகலமாக அணிந்த அவர் ஆசார சீலராக இருந்தார். அவர் பண்டரிநாதனை உபாசனை புரிந்துவந்தார். பண்டரி நாதா! பண்டரிநாதா! எனு கூறி அலறுவார்.”விட்டல், விட்டல்” என்று பஜனை செய்வார். இரவு பகலாக எட்டெழுத்தை ஓதி உள்ளம் உருகுவார்., கண்ணீர் பெருகுவார்.

 

பண்டரீபுரம் பூலோக வைகுந்தம். அந்த க்ஷேத்திரத்தில் சதா தம்புராவின் நாதம் முழங்கிக்கொண்டிருக்கும். பக்த ஜனங்கள் மத்தளம், ஜால்ரா முதலிய வாத்தியங்களை ஒலித்து ஆடியும் பாடியும் பரவசம் அடைவார்கள் பாண்டுரங்கனைச் சேவிக்க வருகிற பக்த கோடிகளின் கூட்டம் அளவிட முடியாது. பாண்டுரங்கன், பக்தர்களின் வினைகளைக் களைந்து, விரும்பிய நலன்களை வழங்கி வரத மூர்த்தியாக விளங்கினார்.

Miracles-at-Pandharpur-2

பண்டரீபுரத்துக்கு அருகே சந்திரபாகா என்ற நதி அழகாக ஓடிக்கொண்டிருக்கும். அந்த நதி பன்னிரு ஜோதிலிங்கங்களில் ஒன்றான பீமா சங்கர் என்ற இடத்திலிருந்து உற்பத்தியாவது. அதனால் பீமாநதி என்று பெயர் பெற்றது. பண்டரீபுரத்துக்கு அருகில் பிறைச் சந்திரனைப் போல் வளைந்து போவதால் சந்திர பாகா என்ற பெயர் பெற்றது. தூய்மையான நீர் சல சலவென்று ஓடிக் கொண்டிருக்கும். நாமதேவர், துர்காராம், சக்குபாய், கோராகும்பர், ராமதாசர், கபீர்தாசர் முதலிய பலப்பல பக்தர்கள் வழிபட்டு முக்தியடைந்த திருத்தலம். பல ஞானியர்களின் சமாதிக் கோயில்கள் அங்கே காட்சி தருகின்றன.

 

ஸஜ்ஜன சாருகருக்கு பண்டரீபுரம் சென்று விட்டல நாதனைச் சேவிக்க வேண்டும் என்ற தாகம் மேலிட்டது. “பண்டரிநாதா, உன்னைச் சேவிக்கும் நாள் எந்நாளோ, அருட்கடலே! கருணைத் தெய்வமே! உன்னைக் கண்ட கண்களே கண்கள். உன்னை வணங்கும் பேறு எல்லோருக்கும் கிடைக்குமா? பல பிறவிகளில் செய்த புண்ணிய பலன் இருந்தால்தானே உன் தெரிசனம் கிடைக்கும்” என்று கூறிப் புலம்புவார், திசை நோக்கித் தொழுவார், அழுவார், மூர்ச்சித்து விழுவார்.“ நாளை பண்டரிக்குப் புறப்படலாம்” என்று கூறுவார். ஒரு சமயம் துணிந்து பண்டரிபுரத்தை நோக்கிப் புறப்பட்டார்.

 

 

அந்தக் காலத்தில் ரயில் பஸ் முதலிய வாகன வசதிகள் கிடையா. சாருகர் பஜனை செய்துகொண்டு நடந்து போகிறார். பகல் முழுதும் நடப்பார். பொழுதுபோன ஊரில் பிட்சை எடுத்து உண்டு சத்திரங்களில் தங்கி பஜனை செய்வார்.

 

ஒருநாள் ஒரு நகரத்தில் தங்கினார்.இரவில் வேறு  இடமின்மையால் ஒரு தனவந்தரின் வீட்டுத் திண்ணயில் அமர்ந்து ஜெபம் செய்துகொண்டிருந்தார். இரவு ஒரு மணி. நகரம் இருள் சூழ்ந்திருந்தது. ஒலியடங்கி இருந்தது. அங்கங்கே நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன. அந்த வீட்டுப் பெண் சிறுநீர் கழிக்க கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். சாருகரைக் கண்டாள். அவர் மீது மையல் கொண்டாள். அவரருகே சென்று, “தாங்கள் பூலோக மன்மதரைப் போல காட்சி தருகிறீரே! தாங்கள் யார்? என்று கேட்டாள்.

 

“அம்மா! வணக்கம், நான் ஒரு யாத்ரீகன்.என் பேர் சாருகன். நான் பண்டரிபுரம் போகின்றேன். “என் உள்ளததைக் கொள்ளைகொண்ட உத்தமரே! தாங்கள் என் இதய ராஜா. நான் உங்கள் இதய ராணி. இந்த விநாடி முதல் தாங்கள் என் இன்னுயிர்க் கணவர்.”

 

“அம்மா! இந்த உலகம் கடுகளவு. பாவத்தால் வரும் துன்பம் மலையளவு. நான் மனத்தினாலும் மாதரைத் தீண்டாதவன். பிரம்மச்சாரி. தாங்கள் உங்களுடைய கணவருடன் வாழ்வதுதான் கண்ணியம்; கற்பு நெறியில் நிற்பதுதான் புண்ணியம். அவநெறியில் புக வேண்டாம்.”

 

அவள் வெறி பிடித்தவளைப் போல ஓடி கொடுவாளை எடுத்து அயர்ந்து தூங்குகின்ற கணவனுடைய தலையை வெட்டித் துணித்தாள். “என் உயிரினும் இனிய உத்தமரே! என் கணவரைக் கொன்றுவிட்டேன். இனி நீர்தான் என் கணவர்”—என்று கூறி அவரைக் கட்டித் தழுவ வந்தாள்.

 

இந்தக் கொடுஞ்செயலைக் கண்டு சாருகர் நடுநடுங்கினார். ஐயோ! கணவரைக் கொன்ற இவள் ஒரு பெண்ணா? பூதமா?பேயா? என்று எண்ணித் திண்ணையை விட்டுக் குதித்து ஓடினார். அந்தப் பெண் அவரைத் தொடர்ந்தாள்.சாருகரைப் பற்ற முடியவில்லை. நான்கு தெரு கூடுமிடத்தில் நின்று அப்பெண் ஓவென்று கதறி ஓலமிட்டாள். அங்கு உறங்கியிருந்தவர்கள் கூடினார்கள்.

 

“பெரியோர்களே! இந்தப் பாவி எங்கள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். நான் சிறு நீர் கழிப்பதற்காக கதவைத் திறந்து வெளியே வந்தேன். என் கணவரை வெட்டிவிட்டு என்னைக் கற்பழிக்க என்னைத் துரத்தி வந்தான் என்று கூறி கதறியழுதாள்.

வாரியார் 2

ஊரவர், சாருகரைப் பிடித்து அடித்துத் துன்புறுத்தினர். காவல் துறையினர், அவரைச் சிறையில் அடைத்தார்கள். பொழுது விடிந்தபின். அவ்வூர் சிற்றரசன் வழக்கை விசாரித்தான். “எல்லாம் பாண்டுரங்கன் அறிவான். நான் ஒரு குற்றமும் செய்யவில்லை: என நடந்ததை உள்ளபடி சொன்னார். குற்றம்புரிந்தவன் ஒப்புக்கொள்வானா? என்று எல்லோரும் சொன்னார்கள். சாருகருடைய கரங்களைத் துண்டிக்குமாறு அரசன் ஆணையிட்டான். சாருகருடைய இரு கரங்களும் துண்டிக்கப்பட்டன. குற்றம் செய்யாத குணப் பெருங்குன்றான அவர் துடிதுடித்தார்.

 

“பாண்டுரங்கா! பரம தயாளா!அருட் பெருங்கடலே! ஒழுங்கு நெறியில் நின்ற எனக்கு இந்த தண்டனையா?ஐயனே! சர்வ பூத சாட்சியான தேவரீரை நம்பிய எனக்கு இத்துன்பமா? என்று கூறி அழுதார்.

 

பின்னர் எங்கும் தங்காமல் பண்டரீபுரம் வந்து சேர்ந்தார். அன்றிரவில் கோயில் அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், தக்கார்களின் கனவில் பண்டரீநாதர் தோன்றி, “நமது பரம பக்தனான ஸஜ்ஜன சாருகன் வருகிறான். கோயில் மேளம், குடை, சுருட்டி, பூரண கும்பம் வைத்து உபசரித்து அழைத்து வாருங்கள்” என்று பணித்தருளினார்.

 

எல்லோரும் வந்து சாருகருக்கு கோவில் பரிவட்டம் கட்டி கனவில் பாண்டுரங்கன் கூறியதைச் சொல்லி பேரன்பு காட்டினர். சாருகர் இதனைக் கேட்டு அழுதார். பாண்டுரங்கன் திருவுருவம் முன் நின்றார். கைகளில்லாமையால் தொழ முடிய வில்லையே என்று கதறினார்.”தேவ தேவா! உன்னை என்னடியார் என்று அருள் புரிந்தனையே. அன்று அரசன் என் கரங்களை வெட்டுமாறு ஆனையிட்டானே. அப்போது இவன் குற்றமற்றவன் என்று அசரீரியாகவாது ஒரு குரல் கொடுத்திருக்கலாமே. அன்று என்னைக் கை நழுவவிட்டீரே. இது நியாயமா? இதுதான் உன் கருணையா? இது தருமமா? நான் இப்பிறவியில் எவருக்கும் எந்தத்தீங்கும் செய்யவில்லையே. உன்னைக் கையெடுத்துக் கும்பிடக்கூட முடியவில்லையே என்று சொல்லி அழுதார்.

 

பாண்டுரங்கண் கூறினார்: “அன்பனே அழாதே. அவரவர் வினைகளை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும். அன்று ஒரு நாள் குளக்கரையில் ஓரந்தணன் காயத்ரி மந்திரம் ஜெபித்துக் கொண்டிருந்தான். பசுவை வெட்ட வந்த புலையன் பசு ஒடிப்போன வழியைக் கேட்டவுடன் இரு கரங்களையும் நீட்டி அது போன பக்கத்தைக் காட்டினான். புலையன் அவ்வழியே சென்று பூலோக காமதேனுவாகிய பசுவைக் கொன்று விட்டான். நீதான் அந்த காயத்ரி ஜபம் செய்த அந்தணன். பசுவின் கொலைக்குக் காரணமான உனது இரு கரங்களும் வெட்டப்பட்டன. கொலையுண்ட பசுதான் அப்பெண் (தனவந்தனின் மனைவி); பசுவைக் கொலை செய்த புலையன்தான், அவளுடைய கணவன். ஆகையால் இவை அனைத்தும் முற்பிறப்பில் செய்த தீவினையால் வந்தவை என்று கூறினார். பண்டரிநாதனின் திருவாக்குகளைக் கேட்டவுடன், அவர் ஆறுதலடைந்தார். பண்டரீநாதன் கருணையால் அவர் கரங்கள் வளர்ந்தன. பண்டரிநாதனின் இரு பாத மலரினைத் தொட்டுக் கட்டித் தழுவி அருச்சித்த காலத்தில் சஜ்ஜனசாருகர் பரமபதம் அடைந்தார்.

–சுபம்-

 

காயத்ரி மந்திரம் உச்சரித்த முஸ்லீம் பெரியார்! (Post No. 2481)

gayatri (2)

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

Date: 12 January 2016

Post No. 2481

Time uploaded in London :–  5- 46 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

 

 

ஆன்மீக இரகசியம் 

காயத்ரி மந்திரம் உச்சரித்த முஸ்லீம் பெரியார்!

 

ச.நாகராஜன்

 

 

108 புத்தகங்களை எழுதிய ஸ்ரீராம் சர்மா ஆசார்ய!

 

மந்திரங்களில் மகோன்னதமானது காயத்ரி மந்திரம். இதன் அருமை பெருமைகளை அற்புதமாக உணர்த்தியவர் காயத்ரி பரிவார் அமைப்பை நிறுவிய ஸ்ரீராம் சர்மா ஆசார்ய! அவர் 108 அரிய புத்தகங்களை (ஹிந்தியில்) எழுதியுள்ளார். அவற்றில் பல ஹிந்து தர்ம மேன்மைகளையும் காயத்ரி பற்றிய அரிய இரகசியங்களையும் விளக்குபவை.

 

காயத்ரி  மந்திரத்தை உச்சரிப்பதால் ஏற்படும் பிரத்யட்ச பலன்களைத் தொகுத்து அவர் தந்துள்ளவற்றில் ஒரு சம்பவம் இது!

 

 pandit shri ram sharma acharya     head_i4

 

பாபா ராம்பரோஸேயின் பயணம்

 

மஹராஷ்டிர மாநிலத்தில் அகோலா ஜில்லாவில் பாபா ராம்பரோஸேவின் பெயர் மிகவும் பிரசித்தமான ஒன்று.

காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பதால் வரும் பலன்களைப் பற்றி அவர் அற்புதமாகக் கூறியுள்ளார்.

 

பாபா ராம்பரோஸே பிறவியில் ஒரு முஸ்லீமாகப் பிறந்தவர்.

தான் பிறந்த இஸ்லாம் சமயத்தை நன்கு அனுஷ்டித்து வந்ததால் உருவ வழிபாட்டை அவர் ஏற்கவில்லை.

ஒரு நாள் ஏதோ ஒரு விஷயமாக அவர் அயலூர் செல்ல நேர்ந்தது. இருள் சூழ்ந்த நேரத்தில் அவர் ஒரு காட்டு வழியே செல்ல நேர்ந்தது.

 

காலை விடிந்தவுடன் பயணத்தைத் தொடரலாம் என்ற முடிவுக்கு வந்த அவர் காட்டில் இருந்த ஒரு சிவாலயத்தில் தங்கினார்.

 

 gayatri homam2

Gayatri Homa by boys from face book.

கனவில் கண்ட காட்சி

 

இரவில் அவருக்கு நேரடியாக அநுபவிப்பது போன்ற ஒரு கனவு வந்ததுஅதில் ஒரு சாது தோன்றி அவரைப் பார்த்து, “நீ போன ஜன்மத்தில் ஒரு ஹிந்துவாக இருந்தாய். மாமிச உணவைச் சாப்பிட்ட காரணத்தினால் இந்த ஜன்மத்தில் முஸ்லீமாகப் பிறந்திருக்கிறாய். எந்த கிராமத்திற்கு நீ இப்போது செல்ல இருக்கிறாயோ அது தான் உன் பூர்வ ஜன்ம கிராமம்.

 

அங்கே தான் உன் அன்னை தந்தை உள்ளிட்ட அனைவரும் உள்ளனர் என்றார். கனவில் அனைவரது பெயர்களும் தெளிவாகக் கூறப்பட்டன!

 

கனவில் சாது இன்னொன்றையும் தெளிவாகக் கூறினார்: நீ காயத்ரியை உபாசனை செய்ய ஆரம்பி. நீ உத்தாரணம் அடைவாய்!

 

 

பொழுது புலர்ந்தது. தான் கண்ட கனவினால் பிரமித்துப் போனவர் பயணத்தைத் தொடர்ந்து செல்லவிருந்த கிராமத்தை அடைந்தார்.

என்ன ஆச்சரியம்!கனவில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மையாக இருந்தது. அந்தப் பயணம் அவர் வாழ்க்கையையே மாற்றி விட்டது.

 

 

 

காயத்ரி மந்திர உபதேசம்

 

காயத்ரி மந்திரத்தை விதிப்படி உச்சரிக்க உபதேசத்தைப் பெற்றார்.

அதை ஆயிரக்கணக்கில் சொல்ல ஆரம்பித்தார். (புரஸ்சரணம் என இதைச் சொல்வர்)

 

தேவியின் தரிசனம் அவருக்குக் கிடைத்தது.

ஏராளமான பக்தர்களுக்கு காயத்ரியின் பெருமையைச் சொல்ல ஆரம்பித்தார் அவர்.

அவரிடம் நூற்றுக்கணக்கானோர் சீடர்களாக மாறி காயத்ரி உபாஸனையை மேற்கொண்டனர்.

 

இது போன்ற ஏராளமான சம்பவங்களை ஸ்ரீராம் சர்மா ஆசார்ய  தொகுத்துள்ளார்.

ஸ்ரீராம் சர்மா ஆசார்ய அவர்களின் வாழ்க்கையே அதி அற்புதமானது.

(அதை இன்னொரு கட்டுரை வாயிலாகக் காண்போம்)

காயத்ரி மந்திரத்தை உச்சரிப்போம். உய்வோம்!

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact 

 

swami_48@yahoo.com)

 

*******

வள்ளுவரின் சுடும் குறள்கள்! (Post No. 2469)

punul valluvar

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 8 January 2016

 

Post No. 2469

 

Time uploaded in London :–  5-16 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

திருக்குறள் தெளிவு

 

வள்ளுவரின் சுடும் குறள்கள்!

 

.நாகராஜன்

 

சுடும் குறள்கள் ஐந்து

 

வள்ளுவரின் சில குறள்கள் நம்மைக் குளிர்விக்கும். சில அறிவுரை தரும். சில கேள்விகளைக் கேட்கும். சில கேள்விகளைக் கேட்டு பதிலும் தரும்.

இன்னும் சில குறள்களோ  சுடும்

 

என்ன சுடுமா? ஆம், சுடும் குறள்கள் அனைத்தையும் இங்கு பார்ப்போம்.

 

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை    உள்ளினும் உள்ளம் சுடும்   (குறள் 799)

 

 

ஒருவனின் உள்ளம் எப்போது சுடும்?

பதில் தருகிறார் வள்ளுவர்.

மரணம் வரும் போது நினைத்தால் கூட (அடுங்காலை) உள்ளம் சுடும் – ஒரு கேடு நமக்கு வரும் போது உதவாமல் ந்ம்மைக் கைவிடுபவரின் நட்பை மரண நேரத்தில் நினைத்தால் கூட உள்ளம் சுடும்!

 

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்                உள்ளினும் உள்ளம் சுடும்    (குறள் 1207)

 

 

எனது காதலனை மறக்காமல் இடை விடாது நினைத்துக் கொண்டிருக்கும் போதே இந்த உள்ளம் சுடுகிறதே, ஒரு வேளை நினைக்காமல் மறக்க நேர்ந்தால் நான் என்ன ஆவேன்?

 

காதல் பற்றிய உணர்வை ஒரு பெண் சொல்லுகின்ற குறளில் உள்ளம் ஏன் சுடுகிறது என்பதை அறிய சுவையாக இருக்கிறது.

valluvar iyengar

தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்                  தன்னெஞ்சே தன்னைச் சுடும்       (குறள் 293)

 

 

உன் நெஞ்சம் தானாகவே உன்னைச் சுடும் என்ற எச்சரிக்கைக் குறள் இது. எப்போது சுடும்?

தன் நெஞ்சம் அறிந்த உண்மையைக் கூறாமல் பொய் கூறினால் தன் நெஞ்சே தன்னைச் சுடும்.

அந்தச் சூடு இருக்க, தனியே வேறு இறந்த பிறகு மயானத்தில் சுட வேண்டாம். இறந்த பின் சுடுவது சில மணி நேரமே. ஆனால் நெஞ்சம் சுடுவதோ வாழ்நாள் இருக்கும் வரைக்கும்!

 

 

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்           ஏமப் புணையைச் சுடும்    (குறள் 306)

 

 

சேர்ந்தவுடன் ஒருவரை அழிக்கும் அபூர்வப் பொருள் உள்ளது. அது தான் நெருப்பு. சேர்ந்தாரைக் கொல்லி – நெருப்பு.

ஏமப்புணை என்பது நமக்குத் துணையாக இருக்கும் பாதுகாவலர்.

நெருப்பு பரவினால் அனைத்தையும் அல்லவா சுட்டெரிக்கும்.

 

சினம் அதாவது கோபம் நெருப்பு போன்றது. அது கோபப்பட்டவரை மட்டும் அது அழிக்காது. உடன் துணையாக இருக்கும் பாதுகாவலரையும் சுடும்.

சேர்ந்தாரைக் கொல்லி உடன் இருந்தாரையும் அல்லவா சுட்டு விடும்! ஜாக்கிரதை!

 

 

tirukkural seminar

குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்             நாணின்மை நின்றக் கடை    (குறள் 1019)

 

ஒருவன் தான் கொண்ட கொள்கை தவறினால் (கொள்கை பிழைப்பின்) அது அவனுடைய குலத்தைச் சுடும்; அழிக்கும். ஆனால் செய்யத் தகாத செயல்களைச் செய்வதில் வெட்கப் படாவிட்டால் (நாணின்மை நின்றக் கடை) எல்லா நன்மையையும் அது அழிக்கும் (நலம் சுடும்)

 

ஐந்தும் சுடும் குறள்கள்.

 

ஒன்று உன் உள்ளத்தைச் சுட்டே உன்னை சாகும் வரைக்கும் எரிக்கும் என்கிறது — நெஞ்சம் அறிந்து பொய் சொல்லாதே

அடுத்தது மரண சமயத்தில் நினைத்தால் கூட உள்ளம் சுடும் என்கிறது -ஆபத்துக் காலத்தில் கைவிட்ட நண்பனை நினைத்தால்!

 

இன்னொன்று காதலியின் உணர்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது. சதா ‘அவன்’ நினைவாக இருக்கும் போதே சுடுகிறதே, மறந்தேன் என்றால், ஐயையோ… அந்த நிலையை நினைக்கவும் முடியுமா?

 

அடுத்தது கொள்கையை விட்டு விட்டால் குலம் அழியும்; வெட்கப்பட வேண்டிய செயல்களை விடாவிட்டால் எல்லா நன்மையும் அழியும் என்கிறது.

 

இன்னொன்று, கோபப்படாதே. கோபம் சேர்ந்தவரை அழிக்கும் சேர்ந்தாரைக் கொல்லி. அது உன்னை மட்டும் அழிக்காது, உன் துணையையும் அழித்து விடும் என்கிறது.

 

 

அபூர்வமான சுடும் குறள்கள் நெஞ்சத்திற்கு இதமான உண்மைகளை அல்லவா கூறுகிறது!

 

valluvar gold

 

சுடுவதை ஒப்பிடும் குறள்கள் நான்கு

 

 

சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்                 சுடச்சுட நோற்கிற்பவர்க்கு  (குறள் 267)

 

தவம் செய்கிறான் ஒருவன் அவனது தவம் மேம்பட மேம்பட ஒளி மயம் ஆவான். எது போல? சுடச் சுட  மாசு நீங்கி ஒளிரும் பொன் போல! தவம் மாசைக் களையும். மாயையை அழிக்கும். ஒளியைத் தரும்!

 

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல                        விடிற் கடல் ஆற்றுமோ தீ    (குறள் 1159)

 

 

நெருப்பு தன்னைத் தொட்டவரை மட்டும் தான் சுடும். ஆனால் இந்த காம நோய் இருக்கிறதே, விட்டு நீங்கியவரை கூட சுடுகிறதே, அந்த நெருப்புக்கு இந்த ஆற்றல் இல்லையே!

நெருப்புக்கும் காம நோய்க்கும் உள்ள வேற்றுமை தெரிந்து விடுகிறது! எப்போதும் உடலை தகிக்க வைப்பது காமம்!

 

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்              பெரியார்ப் பிழைத்தொழுகுவார்   (குறள் 896)

 

தீயினால் சுடப்பட்டால் கூட ஒரு வேளை உயிர் தப்பி வாழ ஒருவனுக்கு வழி உண்டு. (எரியால் சுடப்படினும் உய்வுண்டாம்)

ஆனால் ஒருவன் பெரியோரிடத்தில் குற்றம் செய்து விட்டாலோ உய்வதற்கு வழியே இல்லை.

பெரியோரிடம் தவறு இழைக்காதே!

 

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே                  நாவினால் சுட்ட வடு  (குறள் 129)

 

 

தீயினால் சுட்ட புண் கூட ஆறி விடும். ஆனால் நாவினால் ஒருவனைச் சுட்டு விட்டால் அது அவன் நினைவில் நீங்காத வடுவாக அல்லவா நிலைத்து நிற்கும். நாவினால் யாரையும் சுடாதே!

 

எப்படி இருக்கிறது ஐந்து சுடும் குறள்களும் நான்கு சுடுவது பற்றி ஒப்பிடும் குறள்களும்.

 

நவ (9) குறள்களும் நவமான (புதிதாக இருக்கும்) குறள்கள் – இன்று நோக்கினாலும், என்று நோக்கினாலும்!

*******

துப்பறியும் கதை நிபுணரை அசத்திய டாக்ஸி டிரைவர்! (Post No. 2465)

conan doyle

COMPILED BY LONDON SWAMINATHAN

 

Date: 6 January 2016

 

Post No. 2465

 

Time uploaded in London :–  13-31

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

ஆங்கிலக் கதை படிக்கும் அனைவர்க்கும் தெரிந்த துப்பறியும் கதா பாத்திரம் ஷெர்லாக் ஹோம்ஸ். அந்தக் கற்பனைக் கதா பாத்திரத்தை உருவாக்கியவர் சர் ஆர்தர் கானன் டாய்ல். அப்பேற்பட்ட துப்பறியும் நிபுணரை ஒரு டாக்சி டிரைவர் பிரமிக்கவைத்த ஒரு சம்பவம்:-

 

நாவல் ஆசிரியர் ஆர்தர்,  பாரிஸில் வந்து இறங்கினார். ரயில்வே ஸ்டேஷன் வாசலில் வரிசையாக நிற்கும் ஒரு டாக்ஸியில் ஏறினார். ஹோட்டல் வாசல் வந்தவுடன் கட்டணத்தைக் கையில் கொடுத்தார் சர் ஆர்தர் கானன் டாயில்.

 

நன்றி, திரு.கானன் டாயில் – என்றார் டாக்சி ட்ரைவர்.

ஆர்தர்: ஏய், நில். என் பெயர் எப்படி உனக்குத் தெரியும்?

டாக்ஸி டிரைவர்: அதுவா? இன்று காலையில் பத்திரிக்கையில் ஒரு செய்தி படித்தேன். அதில் நீங்கள் இன்று தென் பிரான்ஸ் பகுதியிலிருந்து பாரீஸ் மாநகரம் வரப்போவதை அறிந்தேன். நீங்கள் வந்தவுடன் உங்கள் முகத்தைப் பார்த்தவுடன் ஆங்கிலேயன் என்று புரிந்துகொண்டேன். எங்களுக்கு உங்கள் நாட்டுக்காரர்களின் நடை, உடை, பாவனை எல்லாம் அத்துபடி. மேலும் உங்கள் தலையைப் பார்த்தேன். தென் பிரான்ஸ் பகுதி நாவிதர்கள் முடிவெட்டிய பாணி (ஸ்டைல்) அதில் தெரிந்தது. உடனே நீங்கள்தான் சர் ஆர்தர் கானன் டாயில் என்று நினைத்தேன்.

ஆர்தர்- பலே, பலே! இதைவைத்து மட்டும் கண்டுபிடித்த உன் மூளை அபார மூளை. சரி, அது எப்படி நான் தான் ஆர்தர் என்று உறுதி செய்தாய்?

 

டாக்ஸி டிரைவர்: ஓ, அதுவா? உங்கள் பெட்டியில் தொங்கும் அடையாள அட்டையில் உங்கள் பெயர் எழுதியிருக்கிறதே!!!!!!!

ஆர்தர்:- !!!!! ??? !!!!!! ???? !!!!!!!!!!!!!!

sherlock holms

Xxx

நிர்வாணப் பெண் ஓட்டம்!

 

நியூயார்க் நகர போலீஸ் “வாக்கி டாக்கி” அலறியது:

“அவசரம், அவசரம்! கார் நம்பர் 13 கவனிக்கவும். உடனே மூன்றாவது அவென்யூ 14ஆவது தெருவுக்கு விரைக. ஒரு பெண் ஆடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறாள்”.

ஒரு சில வினாடிகளுக்கு ஒரே அமைதி!

இப்படி அறிவித்தவருக்கு சுரீர் என்று உரைத்தது! அடப் பாவி மகனே! நான் பெரிய தப்புச் செய்துவிட்டேனே! இப்போது எல்லா போலீஸ்  கார்களும் அங்கு போய்விடுமே என்ற எண்ணம் நிழலாட மீண்டும் மைக்ரோபோனை எடுத்தார்.

“கார் எண் 13 மட்டும் விரைக. மற்றவர் அனைவரும் அவர்தம் பணியில் ஆங்காங்கே நிற்க!

Xxx

-சுபம்-

 

 

 

 

மாணாக்கராற்றுப்படை: பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்

IMG_1490

 

Date: 2 January 2016

 

Post No. 2451

 

Time uploaded in London :–  7-58 (காலைப்பொழுது)

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சங்க இலக்கியத்தில் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பொன்ற ஆற்றுபடை நூல்களை நாம் படித்திருக்கிறோம். அதே வழியில் மாணவர்களை ஆற்றுப்படுத்தும் ஒரு நூலை பின்னத்தூர் பிரம்மஸ்ரீ அ. நாராயணசாமி ஐயர், 1900 ஆம் ஆண்டில்  யாத்தார். இந்த அரிய நூல் பிரிட்டிஷ் லைப்ரரியில் கிடைத்தது. இதற்கு உரையும் எழுதுவதாக முகவுரையில் எழுதியிருக்கிறார். அது கிடைக்கும்போது அதையும் வெளியிடுவேன்.

 

இவர் 18 நூல்களுக்கு மேல் இயற்றியுள்ளார். நற்றிணை முதலிய சங்க இலக்கிய நூல்களுக்கு அருமையான உரைகளை வெளியிட்டிருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ் வளர்த்த பெரியார்களில் இவர்தம் பணி குறிப்பிடத்தக்கது.

IMG_8897

 

IMG_8898

 

IMG_8899

 

IMG_8900

 

IMG_8901

 

IMG_8903

 

IMG_8904

 

IMG_8905

 

IMG_8906IMG_1491IMG_1492IMG_1493IMG_1494IMG_1495

–சுபம்–

உயிருடன் புதையுண்டு மீண்டும் வந்த யோகிகள்! (Post No.2424)

1306_Maharshi_Dadhichi

Written by S NAGARAJAN

Post No.2424

Date : 25th December 2015

Time uploaded in London: 6-45 AM

 

25-12-2015 பாக்யா இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளி வந்த கட்டுரை

 

உயிருடன் புதையுண்டு மீண்டும் உயிர்த்தெழுந்த யோகிகள்!

.நாகராஜன்

 

“நாம் அனுபவிக்கும் ஒவ்வொன்றையும் தர்க்கத்தாலோ அல்லது விஞ்ஞானத்தாலோ விளக்க முடியாது” – லிண்டா வெஸ்ட்பால்

 

‘LIVING BURIAL’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உயிருடன் புதையுண்டு மீண்டும் உயிர்த்தெழும் ச சாமானியர்களுக்கு மட்டுமல்ல, விஞ்ஞானிகளுக்கும் கூட ஒரு சுவாரசியமான விஷயம் தான்!

 

 

இங்கிலாந்து, அமெரிக்கா முதலிய மேலை நாடுகளில் ஆவிகள் பற்றிய ஆராய்ச்சி மும்முரமாக நடந்த கால கட்டத்தில் அதையும் மிஞ்சும் விஷயமாக இது நேரடியாகப் பலமுறை செய்து காட்டப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் இதில் ஆர்வம் கொண்டனர்; இதை ஆராய முன் வந்தனர்.

 

இதில் முதலிடம் பெற்றவர்கள் இந்திய யோகிகள். இது அவர்களுக்கு சர்வ சாதாரண விஷயமாக இருந்தது.

1870ஆம் ஆண்டு அல்ஜீரியாவிலிருந்து லண்டனுக்கு வந்த யோகிகள் குழு செய்த செய்கைகள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. அவர்கள் தங்கள் உடலில் ஆழமான வெட்டுக் காயங்களை ஏற்படுத்திக் காண்பித்தனர். அந்தக் காயங்களால் அவர்கள் வ்லியில் துடிக்கவில்லை. இதே போன்ற காட்சிகளை பாரிஸில் நடந்த ஒரு கண்காட்சியில் அல்ஜீரியாவைச் சேர்ந்த மகமதியர்கள் சிலர் செய்து காட்டினர். இதை நேரில் இருந்து பார்த்து ஆய்வு நடத்திய டாக்டர்கள் நாகல், சாபௌட், பாரட் ஆகியோர் (UEBERSINNLICHE WELT என்ற) ஜெர்மானிய பத்திரிகையில் தாங்கள் பார்த்தவற்றைப் போட்டோக்களுடன் வெளியிட்டனர்.

 

651-Saint-Arunagirinathar

உடல் மீது தங்களுக்கு முழு ஆதிக்கம் உண்டு என்று இப்படிச் செய்து காட்டியவர்களுள் முக்கியமானவர்கள் தாரா பே, ரஹ்மான் பே மற்றும் ஹமித் பே ஆகியோராவர். ஆழமான வெட்டுக் காயங்களை ஏற்படுத்திக் கொண்ட இவர்கள் அத்துடன் நிற்கவில்லை, தங்களை உயிருடன் புதைக்கச் செய்து மீண்டும் உயிருடன் வெளியே வந்து காண்பித்தனர். வெட்டுக் காயங்கள் ஏற்படும் போது சாதாரணமாக குபுகுபுவெனப் பொங்கும் இரத்தத்தை இவர்கள் கட்டுப்ப்டுத்தி இரத்தம் வெளிப்படாமல் இருக்கச் செய்தனர். நாடித்துடிப்பைக் குறைத்துக் கொண்டே வருவது, இடது கையில் ஒரு நாடித் துடிப்பு வலது கையில் இன்னொரு நாடித் துடிப்பு என்று இப்படி இவர்கள் செய்து காட்டிய செயல்கள் அனைவரையும் திகைக்க வைத்தது.

 

 

சவம் போல மாறி தங்களை உயிருடன் புதைக்குமாறு செய்து கொண்ட அவர்கள், சவப்பெட்டியில்லாமல் வெறும் மண்ணிலேயே புதையுண்டனர். அனைத்து பத்திரிகையாளர்களும் டாக்டர்களும் இதை நேரில் பார்க்க அழைக்கப்பட்டனர். ஒரு குழுவாக தங்களை அமைத்துக் கொண்ட ஆய்வாளர்கள் புதைபடும் இடத்தைத் தாங்களே தேர்ந்தெடுத்தனர்.

 

புதையுண்டவர்களின் நாடித்துடிப்பு படிப்படியாக குறைந்து நின்றே போனது. இதயத்துடிப்பு இல்லை! சுவாசமும் இல்லை. மூக்கிலும் காதிலும் பஞ்சு வைக்கப்பட்டது.

ஐந்து நிமிடங்கள் கழித்து அவர்கள் உயிருடன் மீண்டனர். அவர்கள் தங்கள் இதயத்துடிப்பை தாமாகவே நிறுத்திக் கொண்டதுடன் தலையிலும் கழுத்திலும் சில ந்ரம்பு மண்டல புள்ளிகளில் அழுத்தம் கொடுத்துக் கொண்டனர்.

 

 

“இறக்கும் நிலையில்” அவர்கள் இருக்கும் நேரத்தை அவர்கள் ஆழ்மனம் அபாரமாகக் கையாண்டது. சரியாகக் குறிப்பிட்ட நேரத்தில் அவர்கள் மீண்டும் உயிருடன் எழுந்தனர்.

 

ரஹமான் பே செய்வது போலத் தன்னாலும் செய்து காண்பிக்க முடியும் என்று சவால் விட்ட பிரபல மாஜிக் நிபுணர் ஹௌடினி ஒரு உலோகத்திலான பெட்டியில் தன்னை அடைத்துக் கொண்டு அந்தப் பெட்டியை நீரில் ஆழ்த்தி சுமார் ஒன்றரை மணி நேரம் இருந்து காண்பித்தார். நீரில் இருந்த பெட்டியிலிருந்து கொண்டு டெலிபோன் மூலம் தன் உதவியாளருடன் பேசிக் கொண்டே இருந்த ஹௌடினி தான் மூச்சை மெதுவாக விட்டு இந்தச் சாதனையைச் செய்வதாகக் கூறினார்.

 

இந்திய யோகிகள் இப்படி சர்வ சாதாரண்மாக உயிருடன் புதையுண்டு இருந்த செய்திகளைத் தொகுத்து தான் நேரில் பார்த்தவற்றையும் சேர்த்து ஜேம்ஸ் ப்ரெய்ட் (JAMES BRAID) என்பவர், அப்ஸர்வேஷன் ஆன் ட்ரான்ஸ்: (OBSERVATION ON TRANCE OR HUMAN HYBERNATION) என்ற ஒரு சிறிய புத்தகத்தை எழுதினார்.

 

2494-Maharshi-Patanjali-India-Stamp-Block-of-4

அதில் அவர் குறிப்பிட்ட விஷயம் சுவாரசியமானது! இந்திய யோகிகள் இரு கண்களையும் புருவ மத்தியை நோக்கி வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொள்கின்றனர். அப்போது அவர்களுக்கு ஒரு மனித உருவம் தெரிகிறது. எப்போது அந்த உருவத்தின் தலையை அவர்களால் காண முடியவில்லையோ அப்போது தங்களின் ஆயுள் முடியும் நிலைக்கு வந்து விட்டது என்பதை உணர்ந்து கொள்கின்றனர். உடனே உயிருடன் தங்களைப் புதைத்துக் கொள்கின்றனர் என்று இவ்வாறு தனது கண்டுபிடிப்பை அவர் எழுதி வைத்தார்.

 

இப்படிப் புதையுண்ட யோகிகளைத் தோண்டி எடுத்து அவர்களை உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

 

இந்திய மஹாராஜாக்கள் தங்கள் சபைகளில் யோகிகளை வரவழைத்து அவர்கள் காட்டும் உடல் மீதான் ஆதிக்கத்தைக் கண்டு களித்து அவர்களைப் போற்றி வணங்குவது வழக்கம்.

ஆங்கிலேயர் நம்மை ஆண்ட போது பல மஹாராஜாக்கள் இங்கிலாந்திலிருந்து விஞ்ஞானிகளை தங்கள் சபைக்கு வரவழைத்து அவர்கள் முன்னர் யோகிகளை இப்படிப்பட்ட அபூர்வ செயல்களைச் செய்து காண்பிக்க வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

 

 

இதில் கலந்து கொண்ட மேலை நாட்டினர் தங்கள் ஊர்களுக்குச் சென்று இந்த விந்தையைச் சொல்லி மகிழ்ந்ததோடு புத்தகத்திலும் எழுதி வைத்துள்ளன்ர்.

அறிவியலில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்த யோகிகளின் உயிருடன் புதைக்கும் நிகழ்வு உதவியாக இருந்து வருவது உண்மையே!

 

 

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. ..

ஜெர்மானிய-பிரிட்டிஷ்  உயிரியல் விஞ்ஞானியான வில்ஹெம் ஃபெல்ட்பெர்க் (Wilhelm Feldberg : பிறப்பு 19-11-1900 இறப்பு 23-10-1993) உயிரியல் கண்டுபிடிப்புகளுக்குப் பெயர் பெற்றவர். ஆனால் அவர் தனது சோதனைகளுக்காக மிருகங்களை, குறிப்பாக முயல்களைக் கொடுமைப் படுத்துகிறார் என்று அவப்பெயர் பெற்றார்.

 

ஒரு நாள் மிருகங்களை நேசிக்கும் தன்னார்வத் தொண்டர்கள் இருவர் அவரது சோதனைச்சாலைக்குச் சென்றனர். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்புவதாக அவர்கள் கூறி அந்த சோதனைச்சாலையில் நடப்பதை ஒரு படமாகவும் பிடித்தனர். அங்கு சோதனைக்குள்ளாக்கப்படும் முயல்கள் மயக்கமருந்து இல்லாமலேயே அறுக்கப்படுவதாகவும் கொடுமைப்படுத்தப் படுவதாகவும் அப்படியே புதைக்கப்படுவதாகவும் அவர்கள் பத்திரிகைகளுக்குத் தகவல் தந்து தாகங்ள் எடுத்த படத்தைத் திரையிட்டும் காட்டினர். ஒரு பெரிய சர்ச்சை எழுந்தது.

1202-Dayanand-Arya-Vidyalaya-Centenary-India-Stamp-1989

 

இதனால் 1990ஆம் ஆண்டு அவரது விஞ்ஞான சோதனைகள் ஒரு முடிவுக்கு வந்தன. படம் பிடித்த இருவரில் ஒருவரான பெண்மணி மெலடி மக்டொனால்ட் ஒரு நூலையே எழுதி வெளியிட்டார். காட் இன் தி ஆக்ட்: தி ஃபெல்ட்பெர்க் இன்வெஸ்டிகேஷன் (Caught in the act: the Feldberg investigation)  என்ற அந்த நூல் பெரும் பரபரப்பை ஊட்டியது.

 

பெரிய விஞ்ஞானி தான் என்றாலும் கூட, மிருகங்களைக் கொடுமைப்படுத்தியதால் அவப் பெயர் பெற்றதோடு தனது 90ஆம் வயதில் சோதனைகள் செய்வதிலிருந்து ஃபெல்ட்பெர்க் ஓய்வும் பெற்றார்.

 

 

Ramakrishna_India_SriLanka_Stamp

******

 

 

 

செட்டியார் தந்திரம் பலிக்கவில்லை! (Post No. 2420)

GOLU CHETTI

Compiled by london swaminathan

Date: 24 December 2015

Post No. 2420

Time uploaded in London:- 7-49 AM
( Thanks for the Pictures  )

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பூலோக இன்ப துன்பம் – என்ற பழைய தமிழ்  நூலிலிருந்து எடுக்கப்பட்ட கதை; பழைய தமிழ் நடையில் இருக்கும்:–

 

 

“ஓர் ஊரிலிருக்கும் வைசியனொருவன் தனது கடையை மூடிவிட்டு, வீட்டுக்கு வந்து ஸ்நானபானஞ் செய்துவிட்டு சாப்பிடப்போகும் சமயத்தில் வெளியே வந்து “ஐயோ யாதொரு பிச்சைக்கரனும் காண்கிலனே” யென்று வருத்தபடுபவன் போற் பாசாங்கு செய்துவிட்டு திடீரென்று போய் வீட்டுக் கதவைத் தாளிட்டுக் கொண்டு சாப்பிடுவான். யாராவது அன்னக் காவடிகளாகத் திரியும் ஆண்டிப் பரதேசிகள் வந்து ‘அன்னமோ, அன்னம்’ என்று கூச்சலிட்டால், அடுத்தவீட்டுத் திண்ணையில் படுத்திருப்பவர், “அடடா, உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை; இப்பொழுதுதான் செட்டியார் கதவைத் தாளிட்டுச் சாப்பிடப்போனார்” என்பார்.

 

இப்படியிருக்கையில் ஒரு நாள் ஒரு கிழட்டு சந்யாசி, பக்கத்து வீட்டிற்றானே வெகுநேரம் உகார்ந்திருந்தனன். செட்டியார் வழக்கம்போல கடையை மூடிவிட்டு வீட்டுக்கு வந்து தான் சாப்பிடப்போகும் தருணம் வெளியில் வந்து, நாற்புறமும் சுற்றிப்பார்த்து, யாதொரு பிச்சைக்கரரும் காணப்படாததால், “ஆரையா, ஆண்டிப் பரதேசிகளே! அன்னம் புசிக்க வாருங்களென்று” கூச்சலிட்டான்.

 

அண்டை வீட்டுத் திண்ணையில் சண்டிபோல் உட்கார்ந்திருந்த கிழட்டு சந்யாசி, “இதோ வந்தேனையா, புண்ணியமாய்ப் போச்சு!” என்று சொல்லி ஓடிவந்தான்.

 

லோபியாகிய வைசியன் மனம் மெலிந்து திகிலுற்று “ஐயோ! நாம் யாரும் இல்லையென்று கூச்சலிட்டால் இவன் எப்படியோ வந்துவிட்டானே. இல்லையென்றாலும் இத்தனை நாளாய் நம்மை மெத்த தர்மவானென்று புகழ்ந்து கொண்டிருந்த ஆட்களெல்லாம் நம்மை பரிகசிப்பரே” யென்று பயந்து வாய்ப்பேச்சுக்குப் பஞ்சமில்லாதவன் போல, “வாருமையா, சாமி” என்று சொல்லி, சந்யாசி வீட்டிற்குள் வருவதற்குள் தன் பெண்சாதியை மெதுவாக நாலைந்து அடி அடித்தனன். அந்த வஞ்சகி சந்யாசி சோற்றுக்கு வருவதை உணர்ந்து  நமது கணவன் உஷார் படுத்துகிறாரென்று ஊகித்து குய்யோமுய்யோவென்று கூச்சலிட்டழத்தொடங்கினாள். வந்த விருந்தாளியாகிய சந்யாசி மனமிரண்டு ஈதென்ன கர்மம், இவ்வளவு நேரம் காத்திருந்தும் வயிற்றுக்குக் கஞ்சியகப்படாமல் கலகாரம்பமாய்விட்டதேயென்றெண்ணி, ஓடிப்போய், நடையிலிருக்கும் தொம்பக்கூண்டின் (நெற்கூடு) பின்னால் போய் ஒளிந்துகொண்டான். ஈது உணரா வைசியன், பீடை ஒழிந்ததென்று போய் வாசற்கதவைத் தாளிட்டுவிட்டு மிகவும் சந்தோஷமாய் பெண்சாதியிடம் வந்து,

 

golu vedam madhu (2)  golu, seetharam2 (2)

“பெண்ணே! நான் நோகாமல்தானே அடித்தேன்?” என்றான்

அவள் உடனே “நான் ஓயாமல்தானே அழுதேன்” என்று சொல்லி சிரித்தாள். ஒளிந்திருந்த சந்யாசி இதையெல்லாம் பார்த்துவிட்டு திடீரென்று அவர்கள் முன் குதித்து,

“யானும் போகாமல்தானே இருந்தேன்” என்றார்.

 

செட்டியாரும் மரியாதைக்கஞ்சி தான் சாப்பிடவைத்திருந்த சோற்றைப் போட்டு இனிமேல் வரவேண்டாமென்று சொல்லி அனுப்பினார்.

–சுபம்–

(இப்படிச் சந்தி பிரிக்காமல் நீண்ட வாக்கியங்களை எழுதுவது உலகில் இரண்டே மொழிகளில்தான் உண்டு; சம்ஸ்கிருதமும் தமிழும்; இதற்கு இந்த இரண்டு மொழிகளில் மட்டுமே இலக்கணமும் உண்டு. ஆகையால் இவ்விரு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து உதித்தவை என்பதை முன்னரே சில ஆராய்ச்சிக்கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன். படித்து மகிழ்க!)