இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன்! (Post No. 2457)

kambaar

WRITTEN BY S NAGARAJAN, BANGALORE

 

Date: 4 January 2016

 

Post No. 2457

 

Time uploaded in London :–  5-40 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

kambar2

இராமாயண வழிகாட்டி

 

இராவணனை வென்றவனை வென்றவனை வென்றவன்: கம்பர் காட்டும் இரகசிய குறிப்பு

 

ச.நாகராஜன்

 

 

மஹாகவி கம்பனின் திறமை

 

மஹாகவிகளின் மனம் ஒரு பெரும் சாகரம் போன்றது. அகன்றது. ஆழ்ந்தது. பல்வேறு நற்பொருள்களைக் கொண்டுள்ள பாற்கடல் போன்றது. அங்கு நாம் விரும்பித் தேடினால் கற்பக மரம் கிடைக்கும் காமதேனு கிடைக்கும்!

மஹாகவி கம்பனின் இராம காதை பாற்கடல் போல அமைந்த சுவை சாகரம்!

சுந்தர காண்டத்தில் ஒரு பாடல்.(நிந்தனைப் படலம் 50ஆம் பாடல்)

 

 

 

மனிசனால் அழிவா?

 

இராவணன் சீதையை அசோகவனத்தில் சந்தித்து தன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்துகிறான். இதனால் வெகுண்ட சீதை, “உனக்கு அழிவு காலம் வந்து விட்டது. அழியப் போகிறாய்” என்று கூறுகிறாள்.

 

கேவலமான ஒரு “மனிசனால்” தனக்குச் சாவு என்பதை நினைத்தாலே இராவணனுக்குச் சிரிப்பு தான் வருகிறது.

ஆனால் இங்கு சீதை ‘இராவணஜித்’தைப் பற்றிச் சொல்கிறாள்.

இராவணஜித் என்றால் இராவணனை வென்றவன் என்பது பொருள்.

 

இராவணனை வெல்ல இருப்பவன் இராமன் ஆயிற்றே. அப்படியானால் இராவணஜித் யார்?

 

மானுயர் இவர் என மனங் கொண்டாயோ எனின்                

கான் உயர் வரை நிகர் கார்த்த வீரியன்                    

தானொரு மனிதனாற் தளார்ந்துளா எனில்                    

தேனுயர் தெரியலான் தன்மை தேர்தியால்

 

 

பாடலின் பொருள்: இந்த இராமனை மனிதன் என்று அலட்சியமாக நினைத்தாய் எனில் (ஒரு விஷயம் சொல்கிறேன் கேள்!)

 

காட்டில் உயர்ந்து தோன்றுகின்ற மலைகளை நிகர்த்த கார்த்த வீர்யாஜுனன் பரசுராமன் என்னும் ஒரு மனிதனால் வலிமை ஒருங்கினான். அல்லவா? அந்த பரசுராமனின் வலிமையையும் ஒடுக்கிய தேன் நிறைந்த மலர் மாலையை அணிந்த இராமபிரானது தன்மையை ஆலோசித்துப் பார்!

 

இங்கு கார்த்த வீர்யார்ஜுனனைப் பற்றியும் பலராமனைப்பற்றியும் சீதை குறிப்பிடுவதை கவிஞருக்கே உரிய தனித் தன்மை  மூலம் ஒரு இரகசியக் குறிப்பை அறிவிப்பதில் கம்பன் தன் திறமையைக் காட்டுகிறான்.

 

 

கார்த்தவீர்யார்ஜுனனே இராவணஜித்

 

முன்னொரு காலத்தில் நடந்த விஷயம்!

அனைவரையும் வெல்ல வேண்டும் என்ற வெறியில் திக்விஜயம் செய்த இராவணன் மாகிஷ்மதி நகருக்கு வந்தான். அதை ஆண்டு வந்த கார்த்தவீர்யார்ஜுனன் ஆயிரம் கைகள் கொண்ட மாவீரன்.

அந்த நகரத்தில் உள்ளோர்,” எங்கள் மன்னர் தமக்குரிய பெண்களுடன் நீர் விளையாட நர்மதை நதிக்குச் சென்றிருக்கிறார்” என்று கூறினர்.

உடனே இராவணன் நர்மதை நதிக்கு வந்தான். அதில் நீராடி மணலால் சிவலிங்கம் அமைத்துச் சிவபூஜை செய்ய ஆரம்பித்தான்.

 

 

நர்மதியின் மேற்குக் கரையில் இருந்த கார்த்தவீர்யார்ஜுனனுக்கு தனது நீர் விளையாடலுக்கு நர்மதை நதி போதுமானதாக இல்லை. ஆகவே ஐநூறு கைகளினால் ஓடுகின்ற நீரைத் தடுத்து அணை கட்டி மீதி இருக்கும் ஐநூறு கைகளைக் கொண்டு பல வித விளையாட்டுக்களைச் செய்து மகிழ ஆரம்பித்தான்.

எதிர்த்து ஓடி வரும் நீரானது இராவணன் பக்கம் வரவே தனது மணலால் ஆன சிவலிங்கம் அழிந்து விடுமே என்று ஆவேசப்பட்ட இராவணன் கார்த்தவீர்யார்ஜுனன் மீது பாய்ந்தான்.

அவனோ இதற்கெல்லாம் அசரும் ஆள் இல்லையே.

தன் இருபது கரங்களினால் இராவணனைப் பற்றித் தூக்கினான். இதர 980 கைகளினால் அவனைத் துன்புறுத்தியவாறே மாகிஷமதி நகர் சென்று அங்கு இராவணனைச் சிறையில் அடைத்தான்.

நடந்ததை அறிந்த விபீஷணன் ஓடோடிச் சென்று  பாட்டனாராகிய புலஸ்தியரிடம் நடந்ததைச் சொன்னான்.

உடனே புலஸ்தியர் கார்த்தவீர்யார்ஜுனனிடம் வந்தார். மத்யஸ்த பேச்சு துவங்கியது.

 

 

உனக்கு “இராவணஜித்” என்ற பட்டப்பெயரைத் தருகிறேன். அவனை விட்டு விடு என்றார்.

திக்விஜயம் செய்ய வந்தவனையே வெல்லும் பட்டம் தனக்குக் கிடைக்க இராவணனை சிறையிலிருந்து விடுவித்தான் கார்த்தவீர்யார்ஜுனன்.

 

yakshagana

இராவணஜித்தை வென்ற பரசுராமன்

 

அப்படிப்பட்ட மாபெரும் வீரன் ஒரு சமயம் ஜமதக்னி முனிவரின் ஆசிரமம் சென்று அங்கு விருந்துண்டு மகிழ்ந்தான். அங்கிருந்த பல வளங்களுக்கும் காரணம் அவரிடமிருந்த ஓமதேனு என்பதை அறிந்த அவன் அதைக் கவர்ந்து சென்றான்.

இதை அறிந்த ஜமதக்னியின் புதல்வரான பரசுராமர் வெகுண்டெழுந்தார்.

 

 

அவனுடன் போர் செய்யப் புறப்பட்டார். கார்த்த வீர்யனின் பதினோரு அக்ஷௌகினி சேனையை அழித்தொழித்து அவனது ஆயிரம் தலைகளையும் தோள்களையும் தனது கோடாலியால் வெட்டி வீழ்த்தினார். வெற்றி கொண்டார்.

சீதை இந்த வரலாறை இலேசாக ஞாபகப்படுத்தினாள் இராவணனுக்கு.

 

 

பரசுராமனை வென்ற இராமபிரான்

 

“உன்னை வென்றவனை- இராவணஜித்தை – கார்த்தவீரியனை வென்றானே பரசுராமன், அவனையும் வென்ற மாவிரன் இராமன்.

உன்னை வென்றவனை வென்றவனை வென்றவன் அவன்” – இது தான் சீதை சொன்ன சேதி!

 

 

அழகுற நான்கே அடிகளில் கம்பன் மாபெரும் வரலாற்றைச் சொல்லி தன் நயத்தையும் தான் கருப்பொருளாக எடுத்துக் கொண்ட நாயகன் நயத்தையும் காட்டுகிறான்.

கம்பன் போல் ஒரு கவிஞன் இனிப் பிறப்பானா!

*******

 

மரகதஜோதி வீரன் அர்ஜுனன், இராமனே! (Post No. 2430)

rama sky

Written by S NAGARAJAN

Date: 27 December 2015

 

Post No. 2430

 

Time uploaded in London :– காலை 5-37

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

வில்லிபாரதம்

 

மரகதஜோதி வீரன் அர்ஜுனன், இராமனே!

ச.நாகராஜன்

 

வில்லிபாரதம்

 

தமிழின் செழுமையைக் காட்டும் அற்புத இலக்கியங்களில் வில்லிப்புத்தூரார் இயற்றிய பாரதமும் ஒன்று.

சொற்சுவையும் பொருள் சுவையும் மஹாபாரதத்திற்கே உரித்தான சிறப்புத் தன்மையும் சேர்ந்த கலவை செந்தமிழில் கிடைக்கிறது என்றால் அதன் பெருமையைச் சொல்லவா வேண்டும்.

 

 

உலக இலக்கியங்களில் எல்லாம் தலை சிறந்த தனி இடத்தைப் பிடித்திருக்கும் அர்ஜுனன் சிறந்த சிவ பக்தன். அவன் சிவனை நோக்கித் தவம் செய்து பாசுபதாஸ்திரத்தைப் பெறுகிறான்.

 

இந்த அருமையான சம்பவத்தை வில்லிப்புத்தூரார் விவரிக்கும் விதமே தனி!

 

சிவனைப் போற்றும் போதெல்லாம் அர்ஜுனனையும் போற்றுகிறார்.

 

 

 rama_tirumanjanam

 

கோதண்ட இராமனே காண்டீவ அர்ஜுனன்

 

சிவனைத் துதிக்கும் அர்ஜுனன் யார் என்பதில் ஒரு இரகசியம் பொதிந்து இருக்கிறது அந்த மாபெரும் இரகசியத்தை வில்லிப்புத்தூரார் படிப்படியாக பல்வேறு விதமா சொல்லிக் கொண்டே வருகிறார்.

 

 

காண்டீவம் ஏந்திய மரகதஜோதி வீரன் அர்ஜுனன் கோதண்டம் ஏந்திய இராமனே தான் என்பதே அந்த இரகசியம்.

அர்ஜுனன் மரகதம் போல் ஜொலிப்பதால் மரகதஜோதி வீரன் என்று அவனை அழைக்கிறார் வில்லிப்புத்தூரார்.

‘மையோ, மரகதமோ, மறிகடலோ, மழைமுகிலோ, ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான் என்று இராமனை வர்ணிக்கிறான் மஹாகவி கம்பன்.

இராமனு அர்ஜுனனும் ஒரே நிறம்!

 

 ramaswami temple,Kutanthai

வேடனாக உருத்தரித்து சிவன் அர்ஜுனனுடம் போர் புரியும் சம்பவத்தை அர்ஜுனன் தவநிலைச் சருக்கத்தில் சொல்ல வருகிறார் வில்லிப்புத்தூரார்.

 

விராதன் ஆதி நிசாசரேசரை வென்று முச்சிகரத்தின் மேல் இராதவாறு அடல் அமர் புரிந்த இராமனே நிகர் ஏவினான்

 

 

      (புராதனாகம வேத எனத் தொடரங்கும் பாடல் – 92)

 

விராதன் முதலான ராக்ஷஸத் தலைவர்களை ஜயித்து மூன்று சிகரங்களை உடைய திரிகூடகிரியில் (அதாவது இலங்கையில்) இல்லாதவா கொடிய போரைச் செய்த இராமனையே ஒத்த அம்புத் தொழிலைச் செய்யும் அர்ஜுனன் என்பதே இதன் பொருள்.

 

மாதலி கூற்று

 

அடுத்து நிவாதகவசர் காலகேயர் வதைச் சருக்கத்தில் இந்திரனின் சாரதியான மாதலி அர்ஜுனனிடம் அவனை ஏற்றிச் செல்லும் தேரைப் பற்றிச் சொல்கிறான்.

‘நீ ஏறி வரும் இந்தத் தேர் ஜம்புவன், ஜம்புமாலி என்னும் பெயருடைய அசுரர் இருவரை இந்திரன் வதைத்த அந்த நாளில் ஏறி வந்த அதே தேர் தான். இராவணனை வதை செய்து இராமன் வென்ற பிறகு அந்த நாளில் ஏறிய அதே தேர் தான் இது

 

“தும்பையஞ்சடையான் வெற்பைத் துளக்கிய சூரன் மாள  விம்பவார் சிலை இராமன் வென்ற நாள் ஊர்ந்தது இத்தேர்

 

(பொருள்: தும்பைப் பூவைச் சூடிய அழகிய சடையினை உடைய சிவபிரானின் கைலாச மலையை அசைத்த சூரனாகிய இராவணனை வட்டமாக வளைந்த, நீண்ட கோதண்டம் என்னும் வில்லை உடைய ராமபிரான் ஜயித்த காலத்தில் ஏறிச் சென்றது இந்தத் தேர்)

 

கோதண்டம் என்ற வில் சக்கரம் போல வளையும் தன்மை (விம்பம் வார் சிலை) உடையது.

 

காண்டீவம் என்னும் அர்ஜுனனின் வில்லும் இதே போலச் சக்கரம் போல வளையும் தன்மை உடையது. என்ன ஒற்றுமை!

 ramayana picture

இராமன் போல அம்பு வீசும் அர்ஜுனன்

 

இன்னுமொரு ஒற்றுமையைச் சுட்டிக் காட்டுகிறார் தமிழ்க் கவிஞர்!

காஸ்யப முனிவரின் மனைவியான திதிக்குப் பிறந்த அசுரர்கள் அர்ஜுனன் மீது அம்புகளை வீச அர்ஜுனன் வைஷ்ணவாஸ்திரத்தை அவர்கள் மீது செலுத்துகிறான்.

அது வெள்ளம் போல அசுரர் படைகளை மாய்க்கிறது. இது எப்படி இருக்கிறது?

 

 

முன்னொரு நாளில் இராமன் கடல்நீர் வெள்ளத்தை வற்றச் செய்த விதம் போல இது இருக்கிறது.

 

வண்ணவிற்படை இராமன் வாரிதி வெள்ளம் வீத்த      பண்ணெனப் படுத்தது அந்தப் பைந்துழாய்ப் பரமன் வாளி

 (நிவாதகவசர் காலகேயர் வதைச் சருக்கம் விண்ணிடத்தசனி எனத் தொடங்கும் பாடல் – எண் 78)

 

பைந்துழாய்ப் பரமன் வாளி என்பது வைஷ்ணாவாஸ்திரம்.

 

அர்ஜுனன் இராமன் தானோ!

தன் ஒற்றை வில்லைக் கொண்டு அம்பு மழை பொழிகிறான் அர்ஜுனன்.

அதை வில்லிப்புத்தூரார் வர்ணிக்கிறார் இப்படி:

“தவரினுக்கு இராகவன் கொல் என வரும் தனஞ்சயன்

 

 

     (அவர் விடுத்த எனத் தொடங்கும் பாடல் – எண்126)

(தவரினுக்கு – வில் வித்தையில் இராகவன் கொல் என – இராகவன் தானோ என்று சொல்லும்படி வரும் – அவதரித்த

தனஞ்சயன் – அர்ஜுனன்)

 

 

 arjun-big2

அர்ஜுனன் இராமனே!

அர்ஜுனன் இராமன் தானோ என்று சொல்லும்படி இருந்தது என்ற வில்லிப்புத்தூரார் கடைசியில் இந்திரன் வாயிலாக அர்ஜுனன் இராமனே என உறுதிப் படுத்துகிறார்.

 

 

பாடலைப் பார்ப்போம்:-

 

ஆதி நாயகன் மாமாயன் அமரர் தம் துயரும் ஏனைப்      பூதல மடந்தைக்கு உற்ற புன்மையும் தீர்ப்பான் எண்ணிச்       சீதை தன் கொழுநநான திண்டிறல் இராமன் போல             ஓத நீருலகில் மீண்டும் அர்ஜுனன் உருவம் கொண்டான்

 

 

இந்திரன் கூறுவதாக வரும் இந்தப் பாடலின் பொருள் :

முதல் கடவுளாகிய திருமால் தேவர்களது துன்பத்தையும் மற்ற பூமி தேவிக்கு உற்ற துயரத்தையும் தீர்ப்பதற்காக சீதையின் கணவனான மிக்க வலிமை உடைய இராமனாக அவதரித்தது போல கடல் நீர் சூழ்ந்த உலகில் மறுபடியும் அர்ஜுனனது உருவம் எடுத்து அவதரித்தான்.

 

 

அர்ஜுனன் இராமனே என்பதைப் படிப்படியாக வில்லிப்புத்தூரார் சொல்லும் பான்மை சிறந்த கவிகளுக்கே உரித்தான நாடக பாணியில் அமைந்துள்ளது சுவாரசியமான விஷயம்!

 

அனைத்தையும் சுவைத்துப் படித்தால் மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும்.

 

கம்பசூத்திரம் என்பது போல வில்லி சூத்திரமும் இருக்கிறது!

*******

 

 

 

இராவணனைப் பற்றிய இரு சுவையான பாடல்கள்!( Post No. 2407)

ravana

Written by S NAGARAJAN

Date: 20 December 2015

 

Post No. 2407

 

Time uploaded in London :– காலை 6-23

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

இராவணனைப் பற்றிய இரு சுவையான பாடல்கள்!

 

ச.நாகராஜன்

 

 

சம்ஸ்கிருதம் அகன்ற, ஆழ்ந்த ஒரு பெருங்கடல். அதில் மூழ்கி கோடானு கோடி நல்முத்துக்களை எடுக்கலாம். இராவணனைப் பற்றிய சுவையான இரண்டு கவிதைகளைப் பார்க்கலாம்.

 

 

இராவணனின் இருபது கண்கள்

 

இராவணனுக்கு பத்துத் தலைகள். ஆகவே இருபது கண்கள் உண்டு என்பதை அறிவோம்.

 

அந்த இருபது கண்கள் என்ன செய்கின்றன – ஒரே சமயத்தில்? கவிஞர் தன் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டார். பிறந்தது பாடல்.

 

 

இராவணனின் இருபது கண்களில் ஒன்று வளைந்து இருக்கிறது. இன்னொன்று குறுகி இருக்கிறது. அடுத்தது ஆவலுடையதாக இருக்கிறது. நான்காவது புன்சிரிப்புடன் இருக்கிறது. அடுத்ததோ ஏதோ அர்த்தத்துடன் ஒன்றைப் பிரதானமாகக் கொண்டுள்ளது. அடுத்ததோ அரைக் கண்ணாக முடியிருக்கிறது. அடுத்தது கறுப்பாக ஆகியுள்ளது ,அடுத்தது எதையோ தூரத்தில் பார்க்கிறது. ஒன்பதாவது கண்ணோ மகிழ்ச்சியுடன் திகழ்கிறது. பத்தாவது அரும்பு போல மூடியிருக்கிறது. அடுத்தது  நடுங்குகிறது. பன்னிரெண்டாவது கண்ணோ நிலையாக நேர் பார்வையைக் கொண்டுள்ளது. அடுத்தது சுழல்கிறது. பதிநான்காவது கண்ணோ இமையோரத்தில் நகர்ந்துள்ளது; அடுத்தது நீர்த்துள்ளது பதினாறாவது கண்ணோ சோர்வைக் காண்பிக்கிறது. அடுத்தது அலை போன்ற இயக்கத்தைக் காண்பிக்கிறது. கடைசி மூன்று கண்களும் கண்ணீரால் நிரம்பியிருக்கிறது.

 

 

இப்படி ஒவ்வொரு கண்ணும் ஒரு குறிப்பிட்ட நிலைக்குத் தக்கபடி ஒவ்வொரு வித்தியாசமான விதத்தில் தன் நிலையைக் காண்பிக்கிறது!

 

 

கவிஞர் ஸ்வபாவோக்தி என்ற அலங்காரத்தைக் காட்டுமாறு இதை அமைத்துள்ளார்.

 

 

இதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பை – ரஸிக்லால் சி.பரீக் (Rasiklal C Parikh) செய்துள்ளதையும் – கீழே காணலாம்:

 

One of the twenty eyes of Ravana is bent,another is contracted, a third is eager, a fourth is smiling, the fifth is full of significance: the sixth is half-closed, the seventh is turned back; the eighth is having a long-range; the ninth is full of joy; the tenth is contracted like a bud; the eleventh is trembling; the twelfth is steady; the thirteenth is rolling’ the fourteenth is moving to its corner; the fifteenth is diluted; the sixteenth is drooping; the seventeenth is full of wave-like movements; the last three are full of tears.

(Thus owing to some particular condition every eye is working in a different way!)

 

India Hindu Festival

An Indian girl watches as a man displays effigies of ten-headed demon king Ravana for the upcoming Dussehra festival in Hyderabad, India, Saturday, Oct. 17, 2015. The Hindu festival of Dussehra commemorates the triumph of Hindu God Rama over Ravana, marking the victory of good over evil. (AP Photo/Mahesh Kumar A.)

குபேரபுரியில் கொண்டாட்டம்

 

மஹா வீரனான இராவணன் இறந்து விட்டான். உடனே விழா எடுக்கப்பட்டு விட்டது.

 

வானர சேனைகள் இருந்த இலங்கைக் கடற்கரையிலா? இல்லை! சுக்ரீவனின் கிஷ்கிந்தையிலா, அங்கும் இல்லை!

குபேர புரியில் கொண்டாட்டம்!

குபேரனின் அளகாபுரியில் ஒரே கொண்டாட்டமாம். யட்சர்கள் வசிக்கும் நகரில் மாதர்களுக்கு ஒரே மகிழ்ச்சி!

பாடலைப் பார்ப்போம்:

 

கைலாஸாசகர்ணிகேயமளாகா நேத்ரைகபேயா புரோ

தேவஸ்ய த்ரவிணப்ரபோ: கிமபரம் ஸ்ருங்காரஸாரஸ்யம்: I

அஸ்யாமஸ்தமிதே ஹி ராக்ஷஸபதௌ யக்ஷாங்கநாநாமமீ

வர்தந்தே ப்ரதிசத்வரம் ப்ரதிக்ருஹம் ப்ரத்யாபணம் சோத்ஸதா: II

 

 

இதன் பொருள் :- கண்களுக்கு விருந்தளிக்கும் அளகாபுரி,  செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் தலைநகர், மேலும் காமக்களியாட்டங்களின் மொத்த சாரத்தைக் கொண்டுள்ள நகர், கைலாஸத்தின் செவியில் உள்ள ஆபரணமாய் அமைந்துள்ளது. ராக்ஷஸர்களின் அதிபனான ராவணன் இறந்து விட்டான் என்று தெரிந்தவுட யட்ச பெண்மணிகள் ஒவ்வொரு நாற்சந்தியிலும் கூடிக் கொன்ண்டாடினர்.ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாட்டம் தான்!

 

 

 

குபேரனின் புஷ்பக விமானத்தை அபகரித்ததிலிருந்து ராவணனின் ஒவ்வொரு செய்கையும் பாதித்தது அளகாபுரி மக்களைத் தான்! அவன் ஒழிந்தான் என்றவுடன் இன்ப புரியில் இன்ப லோகக் கொண்டாட்டம் தான்! குறிப்பாக மாதர்கள் ஸ்த்ரீலோலன் ஒழிந்தான் என்று மகிழ்ந்தனர்.

 

பெரும் வாழ்நாள் கொண்டிருந்தாலும், வேத விற்பன்னனாக இருந்தாலும், சிவ பக்தனாக இருந்தாலும் அடுத்தவர் மனைவி மீது ஆசைப்பட்டு அநியாயமாகத் தூக்கிக் கொண்டு வந்தவந் ஒழிவது தானே தர்மம்!

 

 

கவிஞரின் கற்பனையை நாம் கொண்டாட வேண்டியது தான்.சார்த்தூலவிக்ரிதித சந்தத்தில் அமைந்துள்ள இதை பகதத்த ஜலஹணர் என்பவர் தொகுத்த சுக்திமுக்தாவளியில் காணலாம்.

ராவணனைப் பற்றி இப்படி ஏராளமான தனிப் பாடல்கள் உண்டு. ஒவ்வொன்றும் மிகச் சுவையானது!

 

******

கவிஞர்களின் பார்வையில் சீதை, ராமர், சுக்ரீவன்! (Post No. 2402)

rama_guha

Written by S NAGARAJAN

Date: 18 December 2015

 

Post No. 2402

 

Time uploaded in London :– காலை 8-41

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

கவிஞர்களின் பார்வையில் சீதை, ராமர், சுக்ரீவன்!

 

ச.நாகராஜன்

 RAMAYAN STATUES2,FB

கவிஞர்களின் பார்வையில் பட்ட எதுவுமே கவிதையாகும்! அதுவும் ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாஸங்களிலும் புராணங்களிலும் வரும் கதாபாத்திரங்கள், நிகழ்ச்சிகள் மீது அவர்கள் பார்வை பட்டதென்றால் நமக்கு சுவையான கவிதைகள் தானே, கிடைக்கும்! கவிதைகள், தானே கிடைக்கும்!

 

1872ஆம் ஆண்டு பம்பாயில் வெளியிடப்பட்ட சுபாஷித ரத்னாகர(ம்) என்ற நூலில் இடம் பெறும் சம்ஸ்கிருதப் பாடல் இது.

 

சீதை ராமர் ஆக, ராமர் சீதை ஆவார்

 

கீடோயம் ப்ரமரி பவேத்விரதத்யானாத்தயா சேதஹம்                

ராம: ஸ்யாம் த்ரிஜடே ஹதாஸ்மி புரதோ தாம்பத்ய சௌக்யச்யுதா  I                   

 

 

ஏவம் சேத் க்ருதக்ருத்யதைவ பவிதா ராமஸ்தவ தியானம்                          

சீதா த்வம் ச நிஹத்ய ராவணரிபும் கந்தாஸி ராமாந்திகம் II

 

கீடம் – புழு ; ப்ரமர் – வண்டு ; ரிபு — எதிரி

 

 

சுவாரசியமான கருத்தைத் தெரிவிக்கிறார் கவிஞர் இதில். இதன் பொருளைப் பார்ப்போம்.

 

சீதையும், விபீஷணனின் பெண்ணான த்ரிஜடையும் அசோகவனத்தில் சம்பாஷித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சீதை த்ரிஜடையை நோக்கி, “ ஓ, த்ரிஜடை! புழுவானது இடைவிடாமல் வண்டை நினைத்துக் கொண்டிருப்பதால் அது வண்டாக மாறி விடும் என்று சொல்லப்படுவது உண்மையா? அப்படியென்றால் (ராமனை இடைவிடாமல் தியானிக்கும்) நான் ராமனாக மாறி விடுவேன்.எனது அன்புக்குரிய கணவரின் அன்பு இல்லாமல் தள்ளி தூர இருப்பதிலிருந்து விடுபட்டு விடுவேன்” என்றாள்

 

 

இதைக் கேட்ட த்ரிஜடை உடனே சீதையை நோக்கிப் பதில் கூறுகிறாள் : “ அப்படி என்றால் அது நல்லதற்குத் தான்! ஏனெனில் நீங்கள் ராமர் ஆகி விடுவீர்கள். உங்களை இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்கும் ராமர் சீதை ஆகி விடுவார்!

RAMA,SITTINNG,FB

 

நீங்கள் (ராமராக ஆகி விடுவதால்) எதிரியான ராவணனைக் கொன்று விடுவீர்கள். உடனே ராமருக்கு அருகில் சென்று விடுவீர்கள். (அவரவர் தம் தம் உருவை எடுத்துக் கொள்வீர்கள்!)

எப்படிப்பட்ட அபாரமான கற்பனை!

 

 

இது அமைந்துள்ள விருத்தம் சார்த்தூலவிக்ரிதிதம் என்ற சந்தத்தில் அமைந்துள்ள அருமையான செய்யுள்!

 

 

 

ராகவேந்திரரும் வானரேந்திரரும்

 

ராகவேந்திரருக்கும் (ராமர்) வானரேந்திரருக்கும் (சுக்ரீவர்) ஒரே பிரச்சினை தான்! அதனால் என்ன நடந்தது? இருவரும் நண்பராக ஆகி விட்டார்கள். கவிஞ÷ ´ÕÅரின் கவிதையைப் பார்ப்போம்:

 

 

ச ராகவேந்த்ரோ ஹ்ருதராஜதார: ச வானரேந்த்ரோ ஹ்ருதராஜதார: I          

ஏவம் தயோரத்வனி தைவயோகாத் சமானஷ்கிலவ்யசேஷு சக்யம் II

 

ரகுவம்சத் தலைவனான ராமன் தன் மனைவியை அபகரித்த நிலையில் இருந்தான். வானரத் தலைவனான சுக்ரீவனும் அதே போல தன் மனைவி அபகரிக்கப்பட்டவனாக இருந்தான்! விதியின் விளைவாக இருவரும் சந்தித்தனர். இருவருக்கும் ஒரே பிரச்சினை இருந்ததால் நண்பர்களாக ஆகி விட்டனர்!

தாரம் இழந்த ராகவேந்திரன், தாரம் இழந்த வானரேந்திரனைச் சந்திக்கவே சக்யம் (நட்பு) ஏற்பட்டது – இருவருக்கும் பிரச்சினை ஒன்றே என்பதால்!

 

 

நல்ல கற்பனையில் நமக்குக் கிடைத்தது அற்புதமான ஒரு செய்யுள்!

 

 

இது போன்ற தனிப்பாடல்கள் ஏராளம் சம்ஸ்கிருதத்தில் உள்ளன. தமிழிலும் உள்ளன.

சுவைக்க நேரமும், மனமும் வேண்டும்!

 

சம்ஸ்கிருதம், தமிழில் உள்ளவற்றை மனமூன்றிப் படிப்போம்; உயர்வோம்!!

***********

 

 

 

ஒரு ராமாயண ஜோக் — குட்டிக் குரங்கினால் நேர்ந்த விநோதம்!!! (Post No. 2368)

Sundarakanda1

Compiled by London swaminathan

Date: 27 November 2015

Post No. 2368

 

Time uploaded in London :– 13-55

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

ஸ்ரீ  ராமர், கிஷ்கிந்தை மஹாஜனங்களாகிய வானரக் கூட்டங்களுடன் ராவணனை ஜெயித்து, விபீஷணர்க்கும் பட்டங்கட்டி, சீதையை மீட்டுத் திரும்பி வருங்கால், பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் அனைவர்க்கும் விருந்து நடந்தது.

 

அதில் கறிவகைகளில் மொச்சக்கொட்டையும் போடப்பட்டிருந்தது. அப்போது சேஷ்டை மிக்க ஒரு குட்டிக் குரங்கு சும்மா இராமல், மொச்சக் கொட்டையைக் கையில் எடுத்து வைத்து அதைப் பிதுக்கிற்று. உடனே அதிலிருந்து பருப்பு விடுபட்டு மேலே எழும்பியது. அதனைப் பிடிக்க குட்டிக் குரங்கு மேலே பாய்ந்தது. அதனைப் பிடிக்க இன்னொரு குரங்கு பாய்ந்தது. அந்தக் குரங்கைப் பிடிக்க இன்னுமொரு குரங்கு பாய்ந்தது. இப்படியே வானர சைன்யங்கள் பூராவும் பாய்ந்தன.

 

தன்னினத்தார் எல்லாரும் பாய்வதைக் கண்ட அனுமார், ஏதோ அபாயம் வந்துவிட்டதென்று எண்ணி,  எல்லோருக்கும் மேலே எகிறி ஒரு குதி குதித்தார். இதனைக் கண்ட லெட்சுமணப் பெருமாள், அனுமாரே பாய்வதென்றால், பெரும் ஆபத்து வருகிறது என்று கணக்குப் போட்டு, வில்லை நாணேற்றி சங்கத்வனி செய்ய ஆரம்பித்தார். அதைப் பார்த்த ராமர், யாரோ புது பகைவர் வந்துவிட்டார்கள் என்று கருதி படபடப்புடன் வில்லை நானேற்றித் திரும்பித் திரும்பி நாலா புறமும் பார்த்தார். ஒருவரையும் காணோம். பிறகு சங்கதியை விசாரிக்க குட்டிக் குரங்கின் சேஷ்டையே இவ்வளவுக்கும் காரணம் என்று தெரிந்தது. எல்லோரும் சிரித்து மகிழ்ந்தனர்!!

IMG_2647

-சுபம்–