அற்புதப் பாடல் ராகவனே ரமணா!

guru_teach_rama

Article No.1750; Date:- 26  March, 2015

Written by S NAGARAJAN

Uploaded at London time  6-15 GMT

 

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 15

ச.நாகராஜன்

ராகவனே ரமணா ரகுநாதா!

 

அற்புதப் பாடல் ராகவனே ரமணா

 

தமிழ் திரைப்படங்களில் அற்புதமான பாடலாக மலர்ந்து அழியாத இடம் பெற்று விட்ட ஒரு பாடல் ராகவனே ரமணா ரகுநாதா. இயக்குநர் மணிவண்ணன் இயக்கி, 1983ஆம் ஆண்டு வெளியான இளமைக் காலங்கள் படத்தில் இது இடம் பெற்றது.

தேனினும் இனிய குரலில் பி.சுசீலாவும் எஸ்.பி.சைலஜாவும் பாடிய இந்தப் பாடலை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். அப்படி அருமையாக, இனிமையாகப் பாடியுள்ளனர். இதற்கு இசை அமைத்துள்ளவர் இளையரயாஜா! வார்த்தைகளில் அவர் இசை விளையாடியதா, அல்லது அவரது இசைக்கென வார்த்தைகள் அபிநயம் பிடித்ததா என அனைவரும் வியக்கும் அளவில் பாடல் அமைந்திருக்கிறது.

rama guha

கவிஞர் முத்துலிங்கம் பாடல்! இளையராஜா இசை

 

பாடலை இயற்றியவர் கவிஞர் முத்துலிங்கம். இவர் ஒரு விழாவில் பேசுகையில் தான் சுமார் 1410 பாடல்களை இயற்றி உள்ளதாகவும், அவற்றில் இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்கள் ஹிட் என்றும் கூறினார். நடந்து கொண்டே சிந்தித்து எழுதும் பழக்கம் உடைய இவரது பல பாடல்களில் முன்னணிப் பாடலாக ராகவனே, ரமணா திகழும் என்பதில் ஐயமில்லை.

ராகவனே ரமணா ரகுநாதா                              பாற்கடல் வாசா .. ஜானகி நேசா                                               பாடுகின்றேன் வரம் தா .. ஆ ஆ  (ராகவனே)

கல்லான பெண் கூட உன்னாலே               பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே                                                     கல்லான பெண் கூட உன்னாலே                                               பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே

வைதேகி நாதா வடமலை ராஜா            வைதேகி நாதா வடமலை ராஜா                                                                                     ஆனந்தா… அன்பைத் தா           (ராகவனே)

தியாகேசர் உனை நெஞ்சில் பதித்தாரே             சங்கீத மலர் கொண்டு துதித்தாரே                                                 சங்கீத மலர் கொண்டு துதித்தாரே                          ஶ்ரீராமசந்த்ரா தசரத ராமா                                                     ஶ்ரீராமசந்த்ரா தசரத ராமா
ஆனந்தா… அன்பைத் தா           (ராகவனே)

 ramakoti

பாடலின் சிறப்பு

 

படத்தில் நடித்துப் புகழ் பெற்றோர் நடிகர் மோகன் மற்றும் நடிகை ரோஹிணி.

மோகனைப் பொறுத்த மட்டில் மைக்கின் முன்னால் நின்று ஒரு பாடலைப் பாடினாலேயே படம் வெற்றி தான் என்று திரைப்பட ரசிகர்கள் செல்லமாகக் கூறுவர். அலட்டிக் கொள்ளாமல் நடிக்கும் மோகனின் பல படங்கள் சுலபமாக நூறு நாட்களைத் தாண்டும். பயணங்கள் முடிவதில்லை, மௌன ராகம் என பல படங்களைச் சொல்லலாம்.

இளமையுடன் இருக்கும் ரோஹிணி நவராத்திரி கொலு முன்னர் பாட்டைப் பாடுவதாக காட்சி அமைப்பு உள்ளது. ராகவனே ரமணா ரகுநாதா என்ற பாடலை அவர் பாட ஆரம்பிக்க மோகன் அங்கு வந்து ஓரமாக நிற்கிறார்.

பாடலுக்கென பிரம்மாண்டமான இரு கைகள் விரித்திருக்கும்படியான ஒரு செட். அந்தக் கைகளில் அருமையாக அபிநயம் பிடித்து அனாயாசமாக ஆடுகிறார் ரோஹிணி. ஆனந்தா என்ற வார்த்தையில் இசை அபிநயம் பிடித்து ஆடுவதைப் பார்த்தும் கேட்டும் ரசிக்கலாம்!

அருமையான நாட்டியம். சிறந்த காமரா பதிவு. பாடல் முழுவதும் காமிராவின் விளையாட்டு சிறப்பாக இருப்பதால் நடிப்பு, பாடல், படப்பிடிப்பு, இசை என இந்த நான்கிலும் சிறந்து நிற்கிறது ராகவா ரமணா!

 ramayana

தியாகராஜர் போற்றும் பாதகமலங்கள்

 

பாடல் சொல்லும் கருத்தில் தியாகராஜர் உயர்கிறார்.

அவர் ராமரை நோக்கி கெஞ்சுவார்; அதட்டுவார்; உருகுவார்; கோபிப்பார்; சரணடைவார். சௌராஷ்டிர ராகத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஒரு கிருதியில் அவர் ராமர் பாத கமலங்களை எண்ணி எண்ணி வியக்கிறார்.

வினயமுனனு கௌஸிகுனி வெண்ட                                      சனினாங்க்ருலனு ஜுசுனதென்னடிகோ அந்து                                      வெனுக ராதினி நாதி ஜேஸின                                             சரணமுலனு ஜுகனதென்னடிகோ

என்ற பல்லவி கொண்ட பாடலில் ராமரின் பாதங்களை அவர் வியக்கும் விதம் இப்படி அமைந்துள்ளது

முதல் சரணம்

கனமைன ஸிவுனி சாபமு த்ருஞ்சின                                        பாதமுனு ஜூசுனதென்னடிகோ ஆ                                             ஜனக ராஜு பால கடிகினயா                                                      காள்ளனு ஜுகனதென்னடிகோ

விஸ்வாமித்திரரருடன் அடி நடந்து சென்ற அந்த பாதங்களை என்று நான் காண்பேனோ! அகல்யைக்கு சாப விமோசனம் தந்த அந்த பாதங்களை என்று நான் காண்பேனோ! சீதையின் ஸ்வயம்வரத்தில் சிவ தனுசை காலில் அழுத்தி நிறுத்திய

அந்த பாதங்களை என்று நான் காண்பேனோ! தன் திருமகள் கல்யாணத்தில், ஜனக மஹாராஜன் பாலினால் அலம்பிய அந்த பாதங்களை என்று நான் காண்பேனோ! என்று பொருள் தரும் அற்புதமான கிருதி இது.

தியாகையரையும் புகழ்ந்து அவர் துதித்த பாதங்களையும் கவிஞர் முத்துலிங்கத்தின் பாடல் சுட்டிக் காட்டுவதோடு,

“கல்லான பெண் கூட உன்னாலே                                               பெண்ணாகி எழுந்தாளே மண் மேலே”

என்ற வரிகள் மூலமாக தியாகையர் வியந்த பாதகமலச் சிறப்பையும் சுட்டிக் காட்டி விடுகிறது.

 ramalikita

கம்பனின் கவிதா வரிகள்

கம்பன் விஸ்வாமித்திரன் கௌதம முனிவரிடம் கூறுவதாகப் பாடியுள்ள அற்புத கவிதா வரிகளில் அஞ்சன வண்ணனின் கால் பட்டவுடன் நெஞ்சினால் பிழை இலாள் தன் முன்னைய உருவம் பெற்றாள் என்று சுவைபடக் கூறி இருக்கிறான் இப்படி:-

‘அஞ்சன வண்ணத்தான் தன்                                                          அடித்துகள் கதுவா முன்னம்

வஞ்சி போல் இடையாள் முன்னை

வண்ணத்தள் ஆகி நின்றாள்;

நெஞ்சினால் பிழை இலாளை,

நீ அழைத்திடுக’ என்னக்

கஞ்ச நாள் மலரோன் அன்ன

முனிவனும் கருத்துள் கொண்டான்    (அகலிகைப் படலம் பாடல் 85)

அகலிகை கல்லாக இருக்க அந்தக் கல்லின் மீது காகுத்தன் கால் பட்டதை கம்பன் அனுபவித்துக் கூறும் பாடல் இது:-

“கண்ட கல் மிசை காகுத்தன் கழல் துகள் கதுவ,

உண்ட பேதைமை மயக்கு அற, வேறுபட்டு, உருவம்

கொண்டு மெய் உணர்பவன் கழல் கூடியது ஒப்பப்

பண்டை வண்ணம் ஆய் நின்றனள்” மாமுனி பணிப்பான்

(அகலிகைப் படலம் பாடல் 71)

ஆக பல்வேறு சிறப்புக்களைக் கொண்டுள்ள பாடலான ராகவனே ரமணா ரகுநாதா காலத்தால் அழியாப் பாடல்களில் ஒன்றாக நிலை பெறுகிறது.

இதுவரை இந்தப் பாடலைக் கேட்கவில்லை எனில் உடனடியாகக் கேட்டு விட்டு மனமகிழ்ச்சியுடன் இதர வேலைகளைத் தொடரலாம்!

***************

பாவாஹரி பாபா கதை! கல் மனமும் கரைந்தது!

thief

Article No.1748; Date:- 25  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time  8-07

சொன்னவர்: சுதந்திரப்போராட்ட வீரர் ஸ்ரீயுத சுப்பிரமணிய சிவம் (சுதந்திராநந்தர்)

காசிபுரத்தில் குகை ஒன்றில் பாவாஹரி பாபா என்ற மஹான் வசித்து வந்தார். ஒரு நாள் அவர் பிரம்ம நிஷ்டையில் இருக்கும் போது ஒரு திருடன் குகைக்குள் வந்தான். அவருடைய பூஜா பாத்திரங்கள் அனைத்தையும் (பூஜைக்குப் பயன்படுத்தும் சாமான்கள்) மூட்டை கட்டிக் கொண்டு நழுவ முயன்றான். அந்த நேரத்தில், தியானம் கலைந்து பாபா முழித்துப் பார்த்தார்.

இதைக் கண்ட திருடன் பயந்து நடுக்கி மூட்டையைக் கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தான். பாபாவும் மூட்டையைக் கையில் எடுத்துக்கொண்டு அவர் பின்னால் ஓடினார். அவர் தொடர்ந்து வருவதைப் பார்த்த திருடனுக்கு பயம் அதிகரிக்கவே மேலும் வேகமாக ஓடினான். ஆனால் யோக சக்தியால் உடலைப் பக்குவமாக வைத்திருந்த பாபா, அவனை முந்திச் சென்று அவனைத் தடுத்து நிறுத்தினார். அவன் கால்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, “அன்பனே, இவை எனக்கு வேண்டாம். நீயே எடுத்துகொள்ளலாம்” என்று சொல்லி அவன் கைகளில் கொடுத்தார்.

அந்தக் கள்ளனின் கல் மனமும் உருகிவிட்டது. அன்றுமுதல் அவன் அவருடைய பக்தனாக மாறி, அவருக்குச் சேவகம் செய்வதையே தன் தொழிலாகக் கொண்டான்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?

(குறள் 71:– அன்பைப் பிறர் அறியாமல் மறைத்து வைக்கும் தாழ்ப்பாள் இருக்கிறதா? அன்புடையார் கண்களில் இருந்து வெளிப்படும் கண்ணீர்த் துளிகளே உள்ளத்தில் கிடக்கும் அன்பினை எல்லோருக்கும் காட்டிவிடும்)

ascetic

Image of an acetic

மற்றொரு சமயம் ஒரு கிருஷ்ண சர்ப்பம் (நாகப் பாம்பு) அவரைக் கடித்துவிட்டது. அப்போது அவர் நிஷ்டையில் இருந்தார். யாருக்கும் பக்கத்தில் செல்ல பயம். அவர் இறந்தேவிட்டார் என்று எல்லோரும் எண்ணினர். அவர் நிஷ்டை கழிந்து ஒன்றும் நடவாதவர் போல நடந்துவந்தார். பாம்பு கடித்தும் எப்படி உயிருடன் வந்தீர்கள்? என்று பக்தர்கள் வியப்புடன் கேட்டனர். “கடவுளின் தூதர் என்னைப் பார்த்துவிட்டுப் போனார்” – என்று அவர் பதில் கொடுத்தார்.

பேய்களை விரட்ட வெண் கடுகு!!

Mustard-Seed

வெண் கடுகு (ஐயவி)ம், சாதாரணக் கடுகும்

Research Article No.1745; Date:- 24  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time  காலை 9-25

(வெண்கடுகு =  ஐயவி = பஜ = சினாபிஸ் ஆல்பா அல்லது பிராஸ்ஸிகா ஆல்பா = ஒயிட் மஸ்டர்ட்)

“ஆ சேது ஹிமாசல பர்யந்தம்” – என்று சம்ஸ்கிருத மொழியில் ஒரு மரபுச் சொற்றொடர் உண்டு. இமயம் முதல் குமரி வரை – என்பது இதன் பொருளாம். சேது என்று குமரி முனைக்கும் ஒரு பெயர் முன்பொரு காலத்தில் இருந்தது. இதை அங்குள்ள பிராமணர்கள் தங்களுடைய பூஜை புனஸ்கார சங்கல்ப மந்திரங்களில் சொல்லி வருகின்றனர். இமயம் முதல் குமரி வரை ஒரே கலாசாரம் நிலவியதை நாம் பல கட்டுரைகளில் கண்டோம். இப்பொழுது எனது ஆராய்ச்சியில் மேலும் ஒரு சான்று கிடைத்துளது. அது என்ன புதிய சான்று?

பேய்களை விரட்ட அதர்வண வேதத்தில் சொல்லப்பட்ட அதே வெண் கடுகுப் (ஐயவி) பொடியைத் தான் சங்க காலத் தமிழர்களும் பயன்படுத்தினர் என்பதை 3000 ஆண்டுக்கும் மேலான பழமை உடைய அதர்வண வேத மந்திரங்களும் 2000 ஆண்டுப் பழமையுடைய சங்கத் தமிழ் இலக்கியங்களும் செப்புகின்றன.

white mustard

வேதத்தில் காணப்படும் கற்புக்கரசி அருந்ததி, புனித இமய மலை, புனித கங்கை நதி, மான்கள் விளையாடும் இமய மலையில் வாழும் முனிவர்கள், ராஜசூய யக்ஞம், பருந்து வடிவ ஹோம குண்டம், ஏழு அடி நடந்து சென்று விருந்தினர்களை வழி அனுப்புதல், ஆறு வகைப் பருவங்கள், நால் வகைப் படைகள், அறம்-பொருள்-இன்பம் (தர்மார்த்த காம), எண்வகைத் திருமணங்கள், நான் மறைகள், கொடிகள், வெண் கொற்றக் குடை, இந்திரன் -வருணன் – சிவன் – விஷ்ணு- வாஹனங்கள், சகுனம், சோதிடம், வெள்ளி கிரகம்-மழை தொடர்பு- ஆகிய நூற்றுக்கணக்கான விஷயங்கள் அப்படியே புறநானூற்றிலும் தொல்காப்பியத்திலும் இருப்பதை ஆதாரங்களுடன் கண்டோம்.

ஆரிய-திராவிடப் பிரிவினை வாதம் பேசியவர்களுக்கு இவை எல்லாம் அடி மேல் அடி கொடுத்து, அந்த வாதங்களைப் ‘புல்டோசர்’ கொண்டு, பொடிப் பொடியாக்கிவிட்டது. இனியும் இப்படி ஆரிய திராவிட இன பேதம் பேசுவோரின் சவப் பெட்டியில் மேலும் ஒரு ஆணி அறைய இதோ புறநானூற்றுச் சான்று:—

white-yellow-mustard-

கடுகுச் செடி

பேய்களை விரட்ட எட்டு அம்ச திட்டம்:-

1.வேப்ப மர இலைகளை வீட்டில் சொருக வேண்டும்

2.வெண் (ஐயவி) கடுகைப் புகைக்க வேண்டும்

3.வெண் கடுகை (ஐயவி) நெய்யுடன் கலந்து அப்ப வேண்டும்

4.யாழ் இசைக்க வேண்டும்

5.ஆம்பல் குழல் ஊதவேண்டும்

6.மணி அடிக்கவேண்டும்

7.காஞ்சி பாட வேண்டும்

8.அகில் புகை போட வேண்டும்

இதோ பாடல்கள்:—

புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்

நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென

உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் (புற.98)

 

தீ கனி இரவமொடு வேம்பு மனைச் சொரீஇ

வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கரங்க

கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி

ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி,

இசை மணி எறிந்து, காஞ்சி பாடி

நெடு நகர் வரைப்பில் கடி நறை புகை இ (புற.281)

 

வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்

நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும் (புற.296)

 

பொருள்:

 

போரில் காயம்பட்டுக் கிடக்கும் வீரர்களிடம் எமன் வராமல் இருக்கவும், பேய்கள் அண்டாமல் இருக்கவும், குழந்தை பிறந்த வீட்டில் குழந்தைக ளையும் பிள்ளை பெற்ற தாய்மார்களையும் பேய் கள் தாக்காமல் காக்கவும் வெண் கடுகு புகைப்பர் அல்லது நெய்யுடன் கலந்து அப்புவர்.

இதோ குழந்தை பெற்ற தாய்மார்கள் பற்றிய நற்றிணைப் பாடல்கள்:

புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச,

ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்

பசு நெய் கூர்த்த மென்மை யாக்கைச்

சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த (நற்.40)

 

நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்

விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட்குறுகி

புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து… (நற்.370)

 

பொருள்: நறுமணம் மிக்க மென்மையான படுக்கையில் செவிலித் தாயுடன் புதல்வன் உறங்க, சிறப்புமிக்க தலைவி வெண் சிறு கடுகு அணிந்த நெய்யாட்டு நிறைவேறிய அணிமைக் காலத்தில் நெய் விளங்கும் மெல்லிய உடம்போடு இரு இமைகளும் பொருந்தத் தூங்கினாள்……………..

நெய்யுடனே ஒளிவீசும் வெண் சிறுகடுகு முதலானவற்றைப் பூசி விளங்கிய நம் இல்லம் சிறப்புறுமாறு ஓய்ந்து படுத்திருந்தாள்…………….

திருமுருகாற்றுப் படை (228), மதுரைக் காஞ்சி ( வரி 287), நெடுநல்வடை (வரி 86) – ஆகிய சங்க நூல்களிலும் ஐயவி (வெண் கடுகு) பற்றிய குறிப்புகள் உண்டு. உரைகாரர்கள் எழுதிய உரைகளில் பேயை விரட்ட ஐயவி புகைக்கப்படுவது பற்றி விளக்கியுள்ளனர்.

Neem-flower

வேப்ப மரம்

அதர்வண வேத மந்திரங்கள்

அதர்வண வேதத்தில் கருச் சிதைவு நிகழாமல் இருக்கவும், கர்ப்பிணிப் பெண்களைப் பாதுகாக்க வும், கண்வ (2-25-3) எனப்படும் தீய சக்திகளை

விரட்டவும் வெண் கடுகு, ப்ரிஸ்னிபரணி மூலிகை கூறப்பட்டுள்ளது:–

கர்ப்பிணிகள் வெண் கடுகு தாயத்து உடலில் அணிய வேண்டும். தீய சக்திகள் உண்டாக்கும் கருச் சிதைவை இது அகற்றும் (அ.வே. 8-6-9)

தீய சக்திகள் இடுப்பு வலியை உண்டாக்கும் அல்லது கருவை விழுங்கிவிடும்.(8-6-23) குழந்தையை கருவிலோ பிறந்த பின்னரோ இறக்கச் செய்யும் தீய சக்திகள் (8-6-18);மலடித் தன்மை, குழந்தை இழப்பு ஆகியவற்றை வெண் கடுகு தடுக்கும் (8-6-26)

மேலும் ஆராய வேண்டும்!
கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு மேலாக வடவிமயம் முதல் தென்குமரி ஈறாக —16 லட்சம் சதுர மைல் பரப்பில் —- கர்ப்பிணிப் பெண்களும் காயமடைந்தோரும் வெண் கடுகைப் பயன்படுத்தியதால் இதன் மருத்துவ குணங்களை விஞ்ஞான முறையில் ஆராய்வது பலன்  தரும். இதில் பாக்டீரியா தடுப்பு, வைரஸ் தடுப்பு சக்திகள் இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

வாழ்க அதர்வண வேதம்! வளர்க சங்க இலக்கியம்!!

சொட்டை, யாராவது வந்திருக்கானா? குருகைக்காவலன் கேள்வி!

natha
நாதமுனி
Article No.1740; Date:- 22  March, 2015
Written by London swaminathan
Uploaded at London time 11-37 காலை

சொன்னவர்: சுதந்திரப்போராட்ட வீரர் ஸ்ரீயுத சுப்பிரமணிய சிவம் (சுதந்திராநந்தர்)

கங்கைகொண்ட சோழபுரத்தில் ஸ்ரீகுருகைக் காவலப்பன் என்ற பெரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரது பெருமையை மணக்கால் நம்பியிடமிருந்து அறிந்த ஆளவந்தார், அவரைக் காணச் சென்றார்.

ஆளவந்தார் என்பவர் ஸ்ரீ நாதமுனிகளின் பேரன். அவர் சென்ற நிமிடம் குருகைக் காவலப்பன் தியானத்தில் இருந்தார். ஆளவந்தாருக்கும் அவருக்கும் இடையே ஒரு பெரிய தட்டி இருந்தது. அதற்குப் பின்னால் நின்று அவர் நீண்ட நேரம் காத்திருந்தார்.

திடீரென்று ஒரு சத்தம் வந்தது, “ அங்கே யாராவது சொட்டை வந்திருக்கானா? என்று.

சொட்டை என்பது நாதமுனிகள் வம்சத்தினரின் குடும்பப்பெயர். ஆளவந்தாருக்கு மிகவும் ஆச்சரியம். குருகைக்காவலரைத் தரிசித்துவிட்டு, நான் மறைவான தட்டிக்கு அந்தப் பகத்தில் நின்றேனே, நான் வந்தது உங்களுக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டார்.

ஸ்ரீமன் நாராயணன் லெட்சுமி தேவி வந்தால் கூடத் திரும்பிப் பார்க்கமாட்டாதவர். அவர் என் தோள் பட்டையை அமுக்கிக்கொண்டு இரண்டு மூன்று தடவை நீ இருக்கும் திசையை எட்டிப் பார்த்தார். இப்படிப்பட்ட பாக்கியம் சொட்டை குடும்பத்துக்கு உண்டு என்று எனக்குத் தெரியும். ஆகையால்தான் அவரது குடும்பத்தினர் வந்திருக்கிறார்களோ என்று வினவினேன் என்றார்.

chotainambi alavandar

சொட்டை நம்பி ஆளவந்தார்

பேரழகி லெட்சுமி; பெரும் செல்வத்துக்கு அதிதேவதை; அவளுடைய வலையில் கூட எளிதில் சிக்காத பகவான், பக்தர்களின் வலையில் எளிதில் விழுந்துவிடுவான்! அவன் கருணைப் பெருங்கடல்!

ஆதாரம்: மோக்ஷ சாதன ரஹஸ்யம் (சுப்பிரமணிய சிவா எழுதியது)

தாலாட்டுப் பாடல்களில் ராமர்

yogya-ramayana-ballet-2084-r001-030

ராமாயண நாட்டிய நாடகம், இந்தோநேஷியா

Article No.1739; Date:- 22  March, 2015

Written by S Nagarajan

Uploaded at London time காலை 7-02

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 14

ச.நாகராஜன்

லாலி! லாலி! ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே!

 

தாலாட்டில் ராமர்

 

தமிழ் திரைப்படங்களில் தாலாட்டுப் பாடல்களுக்கு தனி இடம் ஒன்று உண்டு, ‘

‘ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ’ என்ற சோகமான பாகப்பிரிவினை படப் பாட்டு ஒரு ரகம் என்றால் ‘தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே’ என்ற நாயகன் படப் பாடல் இன்னொரு ரகம்.

ஆனால் ராமரையும் கௌஸல்யையும் கம்பனையும் வால்மீகியையும், தியாகையரையும் பாடல் வரிகளில் இடம் கொண்ட லாலி லாலி பாடல் அற்புதமான ஒரு பாடல்.

தெலுங்கு படமான ஸ்வாதி முத்யத்தில் இந்த தாலாட்டுப் பாட்டை எழுதியவர் டாக்டர் சி.வி. நாராயண ரெட்டி. தமிழில் சிப்பிக்குள் முத்து படத்திற்காக எழுதியவர் கவிஞர் வைரமுத்து.அற்புதமாக இதைப் பாடியிருப்பவர் பி.சுசீலா.

 

 

வால்மீகி என்னும் குயிலை வணங்குகிறேன்

        ராம பக்தரான ஶ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் 24000 கிருதிகளை இயற்றியவர். ஆனால் 700 கிருதிகளே நம்மிடம் இன்று உள்ளன. கம்பனோ பத்தாயிரம் பாடல்களில் ராமனைப் பாடிப் பாடி மகிழ்ந்தான். வால்மீகியோ 24000 ஸ்லோகங்களில் ராமனின் அமுதக் கதையை அமிர்தமாக வர்ஷித்தார். வால்மீகி ராமாயணத்தை பாராயணம் செய்யும் பக்தர்கள் அன்றாடம் சொல்லும் தியான ஸ்லோகங்களில்  வால்மீகிக்கு வணக்கம் தெரிவிக்கும் ஸ்லோகம் முக்கியமான ஒன்று; சுவையானதும் கூட!

 

 

கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம் I

ஆருஹ்ய கவிதாஷாகாம் வந்தே வால்மீகி கோகிலம் II

 

ஆருஹ்ய கவிதா ஷாகாம்கவிதை என்னும் மரத்தின் உச்சியில் ஏறி

கூஜந்தம் ராமராமேதி மதுரம் மதுராக்ஷரம்ராம ராம என்னும் இனிய அக்ஷரங்களை இனிமையாகக் கூவும்

வந்தே வால்மீகி கோகிலம்அந்த வால்மீகி என்னும் குயிலை வணங்குகிறேன்

 

முதல் காவியத்தை இயற்றியதால் வால்மீகி ஆதி கவி எனப்படுகிறார். முதல் காவியம் ராமாயணம் என்பதால் இது ஆதி காவியம் என அழைக்கப்படுகிறது. கவிதையின் சிகரத்தில் ஏறியவர் என்பதோடு ராம நாமத்தைக் கூவிக் கூவிப் பாடும் குயில் என வால்மீகி அழைக்கப்படுகிறார். அப்படிப்பட்ட ராம நாமம் கூவும் குயிலைக் கொண்டாடுவது குழந்தையின் தாலாட்டிலிருந்தே ஹிந்துப் பண்பாட்டுக் குடும்பங்களில் ஆரம்பித்து விடுகிறது!

im159.guimet-B

தெலுங்குப் பாடல்லாலி லாலி

 

டாக்டர் சி.வி.நாராயண ரெட்டி எழுதிய தெலுங்குப் பாடலின் ஒரு சில வரிகளை முதலில் பார்ப்போம்:-

வடபத்ரசாயிக்கு வரஹால லாலி
ராஜீவ நேத்ருனுக்கி ரத்னால லாலி
முரிபால கிருஷ்ணுனிக்கி முத்யால லாலி
ஜகமேல ஸ்வாமிக்கி பகடால லாலி

கல்யாண ராமுனிகி கௌஸல்யா லாலி

யதுவம்ச விபுனுகி யசோதை லாலி என்று இப்படி அற்புதமான வரிகளுடன் தெலுங்குப் பாடல் அமைந்திருக்கிறது.

 

பாடலுக்கு மிக அற்புதமாக இசை அமைத்திருப்பவர் இளையராஜா

 

 

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி

 

இந்தப் படத்தில் ராமன் கதை கேளுங்கள் பாடலைத் தொடர்ந்து ராமனை நினைவூட்டும் இரண்டாவது பாடல் இது. தமிழில் இதே இசைக்குத் தக ஆழ்ந்த  பொருளுடன் அமைக்கப்பட்ட பாடலைப் பார்ப்போம்:-

லாலி லாலி லாலி லாலி                 லாலி லாலி லாலி லாலி

வரம் தந்த சாமிக்கு பதமான லாலி      ராஜாதிராஜனுக்கு இதமான லாலி                          வரம் தந்த சாமிக்கு பதமான லாலி       ராஜாதிராஜனுக்கு இதமான லாலி                       குறும்பான கண்ணனுக்கு ஆ..         குறும்பான கண்ணனுக்கு சுகமான லாலி                    ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி (வரம் தந்த)

ஆரிராரோ ஆரிராரோ                  ஆரிராரோ ஆரிராரோ

கல்யாணராமனுக்கு கௌஸல்யை நானே

கல்யாணராமனுக்கு கௌஸல்யை நானே     யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே  யதுவம்ச வீரனுக்கு யசோதை நானே           கரு யானை முகனுக்கு மலையன்னை நானே           கரு யானை முகனுக்கு மலையன்னை நானே                                                       பார்போற்றும் முருகனுக்கு பார்வதியும் நானே (வரம் தந்த)

ஆரிராரோ ஆரிராரோ         ஆரிராரோ ஆரிராரோ

ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே            ஆனந்தக் கண்ணனுக்கு ஆழ்வாரும் நானே          ஶ்ரீராமன் பாட வந்த கம்பநாடன் நானே                                            ஶ்ரீராமன் பாட வந்த கம்பநாடன் நானே        ராமராஜனுக்கு வால்மீகி நானே                      ராமராஜனுக்கு வால்மீகி நானே                                                                                     ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே   ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே (வரம் தந்த)

ஆரிராரோ ஆரிராரோ        ஆரிராரோ ஆரிராரோ

ராதிகா துளியில் குழந்தையை ஆட்டுவதும், குழந்தையை முதுகில் சுமந்தவாறே கோலம் போடுவதும், தையல் மெஷினை இயக்குவதுமாக பின்னணிக் காட்சிகள் இருக்க பாடல்  பல கருத்துக்களை முன்னணியில் முன் வைக்கிறது!

 

lord rama,fb

கௌசல்யையும் யசோதையும்

 

பாரதத்தில் பிறந்த ஒவ்வொரு அன்னையும் பிள்ளையைப் பெற்றவுடன் அந்த வரத்தைத் தந்தருளிய இறைவனுக்கு நன்றி சொல்வது வழக்கம். புத் என்ற நரகம் செல்ல விடாமல் தடுப்பதனாலேயே புத்திரன் என்று அழைக்கப்படுகிறான்.

ஆக அப்படி வரம் தந்த சாமிக்கு பதமான லாலி பாடல் இசைக்கப்படுகிறது. தன் மகனை ஒரு ராமனாக, கண்ணனாக, கஜமுகனாக, முருகனாக நினைத்துப் பாடுகிறாள் தாய். தன்னை வால்மீகியாக, கம்பனாக, ஆழ்வாராக, தியாகையராக நினைத்துப் பாடும் இந்தப் பாடலின் கருத்தை எண்ணி மகிழலாம்.

குறிப்பாக தியாகராஜ ஸ்வாமிகள் (யதுகுல காம்போஜி ராகத்தில்) பாடியுள்ள கீர்த்தனையான

“ஶ்ரீராம ஜெயராம ச்ருங்கார ராமயநி

சிஞ்சிஞ்ச ராதே ஓ மனஸா

தலுகு செக்குல முது பேட்ட கௌசல்யா முனு

தபமேமி ஜேசெனொ தெலியா”

என்ற கீர்த்தனையில் கௌசல்யை ராமனின் முத்தம் பெற்று அவனை வளர்க்க என்ன தவம் செய்தாளோ என்று உருகுகிறார்!

அதே போல, பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியுள்ள அருமையான பாடலான

“என்ன தவம் செய்தனை யசோதா

என்ன தவம் செய்தனை

எங்கும் நிறை பரப்ரம்மம் – அம்மா வென்றழைக்க

என்ன தவம் செய்தனை

என்பதையும் இங்கு நினைவு கூரலாம்.

ஒரு தாலாட்டுப் பாடலில் பிரம்மாண்டமான பாரம்பரிய வரலாறுகளைச் சித்தரிக்கும் இந்தப் பாடல்  தாலாட்டுப் பாடல்களில் சிறந்த ஒன்று என்று தயங்காமல் கூறலாம்!

*****************

மிலேச்சர்களை அழிக்கும் கல்கி அவதாரம் எப்போது?

கல்கி

Research Article No.1736; Date:- 21  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time 6-05 am

விஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும் எந்த தேதியில் (திதியில்) நிகழும் என்று நம் முன்னோர்கள் அழகாக எழுதி வைத்துள்ளார்கள். அதைப் படிக்கையில் அடுத்த அவதாரம், அதாவது மிலேச்சர்களை ஒடுக்கும் கல்கி அவதாரம் எப்போது நிகழும் என்று தெரிகிறது.

1.சைத்ரே மாசி சிதே பக்ஷே த்ரயோதஸ்யாம் திதௌ விபு:

உதபூம் மத்ஸ்ய ரூபேண ரக்ஷார்தம்  அவனேர்ஹரி:

பொருள்:–சித்திரை மாத சுக்ல பட்சத்தில் த்ரயோதசி திதியில் (அமாவாசைக்குப் பின் 13-ஆவது நாள்), ஹரியானவர் உலகத்தைக் காப்பதற்காக மீன் உருவத்தில் பிறந்தார்.

2.ஜேஷ்ட மாசே ததா க்ருஷ்ண த்வாதஸ்யாம்  பகவான் அஜ:

மந்தரம் ப்ருஷ்டத: க்ருதவா கூர்மரூபீ ஹரிர்ததௌ

பொருள்:– ஆனி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் த்வாதசி திதியில் (பௌர்ணமிக்குப் பின்னர் 12-ஆவது நாள்) பகவான் மந்தர மலையை பின்னே வைத்து ஆமை உருவத்தில் பிறந்தார்.

3.சைத்ரக்ருஷ்ணே து பஞ்சம்யாம் ஜக்ஞே நாராயண ஸ்வயம்

புவம் வராஹரூபேண  ஸ்ருங்கப்யாம் உததேர் பலாத்

 

பொருள்:– சித்திரை மாத கிருஷ்ண பட்சத்தில் பஞ்சமி திதியில் (ஐந்தாவது நாள்) பன்றி உருவத்தில் பலத்துடன் பூமியைக் கொம்புகளில் சுமந்தவாறு நாராயணன் தோன்றினார்.

4.வைசாக சுக்லபக்ஷே து சதுர்தஸ்யாம் இனே அஸ்தகே

உத்பபூவ  அசுரத்வேசீ ந்ருசிம்ஹோ பக்தவத்சல:

 

பொருள்:– வைகாசி மாத சுக்ல பட்சத்தில் சதுர்தசியன்று (14-ஆவது நாள்), சூர்ய அஸ்தமன காலத்தில்  அசுரர்களின் எதிரியான பக்தர்களின் அன்புக்குப் பாத்திரனான நரசிம்மர் தோன்றினார்.

5.மாசி பாத்ரபதே சுக்ல த்வாதஸ்யாம் வாமனோ விபு:

அதித்யாம் கஸ்யபாஜ் ஜக்ஞே நியந்தும் பலிமோஜசா

 

பொருள்:– புரட்டாசி மாதத்தில் சுக்கில பட்ச த்வாதசி திதியில், அதிதி- கஸ்யபர் இருவரிடத்தில் பலியை அடக்குவதற்காக ஒளி பொருந்திய வாமனனாகத் தோன்றினார்.

பரசுராம

6.மார்கசீர்ஷே த்வீதிய்யாயாம் க்ருஷ்ணபக்ஷே து பார்கவ:

துஷ்ட க்ஷத்ரிய வித்வேசீ ராமோ அபூத் தாபசாக்ரணீ:

 

பொருள்:– மார்கழி மாத கிருஷ்ண பட்ச த்விதியை (இரண்டாம் நாள்) திதியில் துஷ்டர்களான க்ஷத்ரியர்களின் விரோதியான தபஸ்விகளில் முன்னோடியான பார்கவ ராமர் (பரசுராமர்) தோன்றினார்.

7.சைத்ர சுக்ல நவம்யாம் து மத்யன்ஹே ரகுநந்தன:

தசானன வதா காங்க்ஷீ ஜக்ஞே ராம: ஸ்வயம் ஹரி:

 

பொருள்:– சித்திரை மாதத்தில் சுக்கிலபட்சத்தில் நவமி திதியில் மத்தியான நேரத்தில், ரகு குலத்தில் ராவணனை வதை செய்ய

சாக்ஷாத் விஷ்ணுவானவர் ராமராக தோன்றினார்.

8.வைசாகே சுக்லபக்ஷே து த்ருதீயாயாம் ஹலாயுத:

சம்கர்ஷணோ பலோ ஜக்ஞே ராம: க்ருஷ்ணாக்ரஜோ ஹரி:

 

பொருள்:– வைகாசி மாத சுக்கில பட்ச திருதியை திதியில், கிருஷ்ணருக்கு மூத்தவரான ஹலாயுதன், சம்கர்ஷணன் (பலராமன்) தோன்றினார். ஹலாயுத= கலப்பை ஏந்தியவன்

balarama

9.மாசி து ஸ்ராவணி அஷ்டம்யாம் நிசீதே க்ருஷ்ணபக்ஷகே

ப்ரஜாபத்யக்ஷர் சம்யுக்தே க்ருஷ்ணம் தேவக்ய அஜீஜனத்

பொருள்:– ஆவணி மாத அஷ்டமி (எட்டாம் நாள்) திதியில் இரவில் தேவகியிடத்தில் கிருஷ்ணர் அவதரித்தார்.

10.மாசி பாத்ரபதே சுக்ல த்விதீயாயாம் ஜனார்தன:

ம்லேச்சாக்ராந்த கலாவந்தே கல்கிரூபோ பவிஷ்யதி

பொருள்:– கலியின் முடிவில் புரட்டாசி மாதத்தில் சுக்லபட்ச (இரண்டாம்) த்விதீயை திதியில் மிலேச்சர்களை ஒடுக்க கல்கி உருவத்தில் ஜனார்த்தனனாகிய விஷ்ணு அவதரிப்பார்.

kalki

மிலேச்சர்கள் யார்?

ரிக் வேதம் (5-29-10), சதபத பிராமணம் ஆகியன கொச்சை மொழி, மிலேச்ச பாஷை பற்றிச் சொன்னதை, சிந்துவெளியில் இருந்த திராவிடர்களைப் பற்றி சொன்னது என்று சில “அறிஞர்கள்’ அழகான கதை எட்டுக் கட்டினர். உண்மையில் வேற்று மொழி பேசும் எல்லோரையும் மற்றவர்கள் ‘’வன்சொல்’’ என்று கேலி செய்வது வழக்கம்.

தமிழர்களை தெலுங்கர்கள் அரவா (சத்தம்) என்று கேலி செய்வர். எபிரேய பைபிளில் அராபியர்களை ‘அரவா’ என்று அழைத்தனர். பார்லிமெண்ட் உறுப்பினர் சேட் கோவிந்த தாஸ், தமிழ் மொழியைக் கிண்டல் செய்யும் போது, ‘’ஒரு தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்குங்கள்—அதுதான் தமிழ் மொழி’’ — என்று கிண்டல் செய்தார். கிரேக்கர்கள், மற்ற எல்லோரையும் காட்டுமிராண்டிகள் (பார்பாரிக்) என்றழைத்தனர். முஸ்லீம்கள் மற்ற எல்லோரையும் ‘’காபிர்கள்’’ என்றும், கிறிஸ்தவர்கள் மற்ற எல்லோரையும் ‘’பேகன்கள்’’ என்றும் மட்டம் தட்டியது போலாகும் இது. ஆகையால் சிந்து சமவெளி ஆய்வாளர்கள் சொன்னதை ஒதுக்கி விடுதல் நலம் பயக்கும்.

யவனர்களை அடியார்க்கு நல்லார், “மிலேச்சர்கள்” என்று சொல்லியது சரியே. தேசியகவி சுப்பிரமணிய பாரதியும் முஸ்லீம் மன்னர்களை ‘’வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்’’ —- என்று வசை பாடுவதைக் காண்க. சுதந்திரப் போராட்டத் தலைவர்கள், வெள்ளைக் காரனையும் ‘’மிலேச்சன்’’ என்று இகழ்ந்ததையும் கருத்திற் கொள்க.

தமிழ் கலைக்களஞ்சியமான ‘’அபிதான சிந்தாமணி’’ யவனர் பற்றிக் கூறுவது:

அ)அரேபியா நாட்டு மிலேச்சர்

ஆ)யயாதியின் மகனான துர்வாசு மரபினர். ஒழுக்கங் குன்றி இவ்விடம் சேர்ந்து இப்பெயர் பெற்றனர்

இதைத் தொடர்ந்து தமிழ் இலக்கியத்தில் உள்ள குறிப்புகளும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டு  உள்ளன.

அவதாரங்கள்
‘மிலேச்ச’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப் பாட்டில் வருகிறது. மகாபாரதம் முதல் பல சம்ஸ்கிருத நூல்களிலும் கல்வெட்டுகளிலும் வருகிறது. எல்லா இடங்களிலும் பாரத நாட்டைச் சாராத ‘அந்நியன்’ அல்லது ‘அந்நிய மொழி’ யைப் பேசுவோன் என்ற சொல்லிலேயே புழங்கியிருக்கிறது. யவனர்கள் எனப்படும் கிரேக்கர்கள் அல்லது ரோமானியர்களை இப்படி அழைத்தனர். படை எடுத்து வந்த முஸ்லீம்களையும் பிரிட்டிஷ்காரர்களையும் இப்படி அழைத்தனர்.

பலுச்சிஸ்தான் என்ற பகுதியில் வசித்தவர்களையும் இப்படி அழைத்தனர். பலுச்சி என்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’ என்று அழைத்தனர். பிற்காலத்தில் இந்தச் சொல் அர்த்தம் மாறி தீய அர்த்தத்தில் மட்டும் வழக்கத்தில் வந்தது.
யாராவது ஏதாவது புரியாத விஷயத்தைச் சொன்னால் ஆங்கிலத்தில் “இட் இஸ் கிரீக் டு மீ” என்று சொல்லுவார்கள். இதற்கு கிரேக்க மொழி என்று பொருள் அல்ல. எனக்குப் புரியவில்லை என்று பொருள். ஆக இந்த இடங்களில் கிரீக், பார்பேரியன்ஸ் என்ற சொற்களை எப்படி அர்த்தம் செய்துகொள்கிறோமோ அப்படித்தான் நாமும் ‘மிலேச்ச’ என்ற சொல்லுக்குப் பொருள் காண வேண்டும்.

சிந்துவெளி ஆய்வை திசை திருப்பிய சொல்

சிந்து சமவெளியை மிளக்கா என்று பாபிலோனியர்கள் அழைத்தனர் என்றும் களிமண் ஏடுகளில் மிளக்கா என்பது உள்ளது என்றும் சொல்லி சிந்து வெளி ஆய்வை திசை திருப்பிய அறிஞர்களும் உண்டு. முன் கூறியது போல இது பலுச்சிஸ்தான் என்னும் குறுகிய நிலப்பரப்பில் வாழ்ந்த ஒரு இனத்தை மட்டும் குறித்திருக்கலாம். மலக் (மாலிக்) என்ற ஒரு தெய்வத்துக்கு இஸ்ரேலியர்கள் குழந்தைகளைப் பலி கொடுத்ததை பைபிள் இரண்டு இடங்களில் குறிப்பிடுகிறது. அவர்களும் மிலேச்சர்கள் என்ற சப்தத்துள் அடங்குவர்.
முல்லைப் பாட்டில் ரோமானிய மக்களைக் குறிக்கையில் வாய் பேசாதோர், ஊமை போன்று சைகை மொழியில் பேசுவோர் என்று மிலேச்ச என்ற சொல்லுக்குப் பொருள் கூறப்பட்டிருக்கிறது. ரிக் வேதத்திலும் கூட சிலரை வாய் பேசாதோர், மொழியே இல்லாதோர் என்றும் கூறியிருக்கின்றனர். இதன் பொருள் ‘நம் மொழியைப் பேசாதவர்’ என்பதே.

இந்தக் கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பில் வேல்ஸ் மக்களையும் ஜெர்மானியர்களையும் எப்படி மிலேச்சர்களாக கருதினர் என்ற எடுத்துக்காட்டுகளைக் கொடுத்துள்ளேன்

நரசிம்மர்
மாபாரத ஆதி பர்வத்தில் அரக்கு மாளிகை கட்டிய எஞ்சினீயரை மிலேச்சன் என்றும் மாபாரத யுத்தத்தில் பங்குகொண்ட (சாத்யகியால் கொல்லப்பட்ட சால்வன் ஒரு மிலேச்ச மன்னன்;கௌரவர்கள் தர்ப்பில் போரிட்ட அங்க என்பவனும் மிலேச்சன் என்கிறது மாபாரதம்) பல மன்னர்களை மிலேச்சர்கள் என்றும் சொல்லியிருக்கிறது. சேரன் செங்குட்டுவன் யவனர்களைப் பிடித்து மொட்டை அடித்து அவர்கள் தலையில் எண்ணை ஊற்றி அவமானம் செய்ததை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரத்தில் காணலாம். சகரர், ஹூணர், கிரேக்கர்கள் ஆகியோரை வட மொழிக் கல்வெட்டுகளும் நூல்களும் மிலேச்சர்கள் என்று கொச்சையாகத் திட்டுவதையும் காணலாம்.

சுருக்கமாகச் சொன்னால் மிலேச்சர்கள் தமிழோ சம்ஸ்கிருதமோ பேசாதவர்கள், இந்து மத நம்பிக்கைகளுக்குப் புறம்பானவர்கள் என்பதை 3000 ஆண்டு சொல் பிறப்பியல் வரலாறு காட்டும்.

ஆகவே சிந்து சமவெளி ‘மிளக்கா’வும் இல்லை, அங்கே பேசப்பட்ட மொழி ‘மிலேச்ச பாஷை’யும் அல்ல என்பது இக்கட்டுரையின் துணிபு.
முந்தைய கட்டுரைகள்:–

MLECHA: Most Misunderstood Word (Posted on 3 September,2012)

“மிலேச்ச” என்றால் என்ன? (Posted on 6 September,2012)

பிராமணன் மீது நஷ்ட ஈடு வழக்கு! ஒரு பழைய சுவையான கதை!

king

Article No.1734; Date:- 20th March, 2015

Written by London swaminathan

Uploaded at London time 9-04 am

மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி, பழி ஓரிடம் பாவம் வேறிடம்

 

பழி ஓரிடத்திலே பாரம் ஒரிடத்திலே என்றும், பாவம் ஓரிடத்திலே என்றும் ஒரு பழமொழி உண்டு. மௌனம் சம்மதத்துக்கு அறிகுறி அல்லது சமம் என்று மற்றொரு பழமொழி உண்டு. முட்டாள் களிடையே மௌனமாக இருப்பதே மேல் என்றும், புத்திசாலிகள் மௌனம் கடைப்பிடிப்பர் என்றும் சம்ஸ்கிருதத்தில் பழமொழிகள் இருக்கின்றன. மௌனம் என்பது அறியாமையைக் காட்டும் என்று நேர் எதிர்மாறாகக் கூறும் பழமொழியும் சம்ஸ்கிருத நூல்களில் வருகிறது. இதை விளக்க ஒரு சுவையான கதை இருக்கிறது.

மோக்ஷ சாதன ரஹஸ்யம் என்னும் நூலில் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவம் சொல்லும் கதையை என் சொற்களில் கூறுகிறேன்:-

ஒரு ஊரில் திருடன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு பணக்கார பிராமணன் வீட்டில் திருடுவதாற்காக இரவு நேரத்தில் சென்று சுவற்றில் கன்னம் வைத்தான் (ஓட்டை போடுதல்). அந்தச் சுவர் ஈரமான சுவர். உடனே இடிந்து விழுந்தது. மூச்சுவிட முடியாமல் திருடன் செத்தான்.

திருடர்களின் நண்பர்கள் நஷ்ட ஈடு கோரி பிராமணன் மீது வழக்குத் தொடுத்தனர். அவர், அது தனது குற்றம் இல்லை என்று சொல்லி வழக்கை மன்னன் முன்னிலையில் வைத்தார்.

மன்னன்: ஓய், பிராமணரே! ஏன் இடியும் அளவுக்கு ஈரத்துடன் சுவரைக் கட்டினீர்?

மன்னா! அதை நான் அறியேன். பெரிய கொத்தனார்தான் அதைக் கட்டினார். அவரைக் கேளுங்கள்.

brahmin

யார் அங்கே? பெரிய கொத்தனாரை இழுத்து வாருங்கள்.

ஓய் கொத்தனாரே! சுவற்றை இவ்வளவு ஈரத்துடன் கட்டியதால் திருடன் இறந்துவிட்டான். நீர்தான் நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்.

மன்னா! நான் என்ன செய்வேன்? வேலையாள் கலந்துகொடுத்த சிமெண்டை (காரையை) அப்படியே பூசினேன். ஈரக் கலவை பற்றி அவனைத் தான் கேட்க வேண்டும்

யார் அங்கே? சித்தாளை இழுத்து வாருங்கள்.

ஏய், ஏன் ஈரக் கலவையான காரையை அளித்தாய்?

மன்னர் மன்னா? வழக்கத்தைவிட பெரிய பானையை அன்று என் கையில் கொடுத்தான் குயவன். அதில் கொஞ்சம் தாண்ணீர் கூடுதலாகப் போய்விட்டது. நான் குயவனை நம்பியிருந்தேன்.

bricklayer_1

யார் அங்கே? குயவனை இழுத்து வாருங்கள்.

குயவரே! என்ன காரியம் செய்தாய்? வழக்கத்தைவிட பெரிய பானையைக் கொடுத்ததால் ஒரு மரணம் சம்பவித்துவிட்டது. நீயே நஷ்ட ஈடு கொடுக்கவேண்டும்.

மன்னர், மன்னா! உண்மையைச் சொல்லிவிடுகிறேன். அன்று நம்மூர் விபசாரி, பேரழகி பகல் நேரத்தில் மேனியை மினுக்கி குலுக்கி, நடந்து சென்றாள் —- அவள் அழகில் மயங்கி நின்றபோது இந்தத் தவறு நிகழ்ந்துவிட்டது. அவளை அழைத்து விசாரியுங்கள்.

யார் அங்கே? அந்தப் பேரழகியை இழுத்து வாருங்கள்.

மன்னா! எனது தொழில் தர்மப்படி நான் இரவு நேரத்தில்தான் வெளியே வருவேன். மேலும் எனது வாடிக்கையாளர்களின் நலன் கருத்தி துவைத்த, தூய ஆடைகளை அணிவதே வழக்கம். அன்று வண்ணான்,என் வீட்டுக்குத் துணிகளைக் கொண்டு வராததால் அவன் வீட்டுக்குப் பகலில் நடந்து போனேன். வண்ணான் ஏன் தாமதித்தான்? தயவுசெய்து அதை விசாரியுங்கள்.

potter

யார் அங்கே? அந்த வண்ணானை இழுத்து வாருங்கள்.

மன்னவனே! எனது தொழிலில் மிகவும் முக்கியமான கொள்கை காலத்தில் துணிகளைக் கொடுப்பது. நான் வழக்கம் போல காலையில் சலவைத் துறைக்குச் சென்றேன். அன்று ஒரு சந்யாசி ஆற்றங்கரையில் என் கல்லில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அவரைத் தடுக்க மனமில்லாமல் காத்திருந்தேன். அதனால் தாமதம் ஏற்பட்டது. அது என் பிழையன்று. அந்த சந்யாசி ஏன் என் படித்துறைக்கு அன்று வந்தார்?

யார் அங்கே? அந்த சந்யாசியை அழைத்து வாருங்கள்.

முனிவரே! ஏன் இப்படி வண்ணான் துறைக்கு வந்து துணி துவைத்தீர்?

அந்த முனிவர் அன்று மவுன விரதத்தில் இருந்ததால் எந்த பதிலும் சொல்லவில்லை. எத்தனை முறை கேட்டாலும் அவர் மவுனம் சாதித்தார்.

CIS:4660:1/(IS)

மன்னன்:– அமைச்சரே! இதற்கு என்ன பொருள்?

மன்னர் மன்னா! “மவுனம் சம்மதத்துக்கு அறிகுறி”. ஒருவர் தக்க விளக்கம் கூற முடியாதபோது அவர் அதை ஒப்புக்கொண்டதாகவே கொள்ளல் வேண்டும் என்று நமது  நீதி நூல்கள் பகர்கின்றன என்றார் அமைச்சர்.

அப்படியா? இந்த சந்யாசி நஷ்ட ஈடு கொடுக்கும் வரை இவரை சிறையில் அடையுங்கள் என்று மன்னன் உத்தரவிட்டான்.

பழி ஓர் இடம், பாவம் அல்லது பாரம் ஓர் இடம்.

washing clothes

மஹாபாரதத்தில் மாண்டவ்ய முனிவர் கதையிலும் இதையே காண்கிறோம். மிகச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். அரண்மனையில் கொள்ளையடித்த நகைகளுடன் திருடர்கள், அந்த ரிஷியின் வீட்டில் ஒளிந்து கொண்டனர். அப்போது ரிஷி, மௌன விரதம் அனுஷ்டித்து இருந்தார். ராஜாவின் சேவகர்கள், அந்த வீட்டில் தேடிப் பார்த்ததில் திருடர்களும் அரண்மனைச் செல்வங்களும் கிடைத்தன. மாண்டவ்யர்தான் அவர்களை ஒளித்து வைத்துவிட்டு, சும்மா மௌனம் இருப்பதாக பாசாங்கு செய்தார் என்று எண்ணி திருடர்களுடன் அவரையும் ராஜாவின் முன்னிலையில் நிறுத்தினர். எல்லோரையும் கழுவேற்றிக் கொல்ல மன்னன் உத்தரவிட்டான். கழுவில் அவர் மட்டும் உயிரோடு நின்றதால் அரசன் தன் தவற்றை உணர்ந்து அவரை விடுதலை செய்தான். மௌனம், ஆபத்தில் முடிந்த கதை இது!

“கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்” – கம்பன்

RAMAYANA-BALLET-WEB-BANNER2

இந்தோநேஷிய ராமாயண நாடகம்

கட்டுரை எண்: 1733 தேதி:- 20 மார்ச் 2015

லண்டன் நேரம்:– காலை 5-13

 

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 13

எழுதியவர்: — ச.நாகராஜன்

ராமன் கதை கேளுங்கள் !

 

சீதையின் திருமணம்

 

ராமன் சீதையை மிதிலையில் கண்டு சிவதனுசை ஒடித்து திருமணம் புரிந்து கொள்வதைக் கதையாகக் கேட்பதென்றால் அனைவருக்குமே காலம் காலமாக ஒரே மகிழ்ச்சி தான்!

கம்பன் சீதையின் முழு அழகை வர்ணிக்க முடியாமல் திணறுகிறான். ஏன், சீதையின் முத்துமாலை அணிவதைக் கூடத் தன்னால் திறம்பட வர்ணிக்க முடியவில்லை என்று அவனே கூறுகிறான் இப்படி:-

கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கோ?

வாள் நிலா வயங்கு செவ்வி வளர்பிறை வகிர்ந்தது என்கோ?

நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலாத் தவழ்ந்தது என்கோ?

பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை, யான் புகல்வது என்கோ?”

கோலங்காண் படலம் பாடல் 8

முத்துமாலை நட்சத்திரங்கள் கோர்த்த ஒன்றா! நகையில் நிலாத் தவழலா! மார்பில் தவழும் முத்து மாலையை என்ன சொல்லிப் புகல்வேன் நான்?”, என்கிறான் அவன்.

இராமன் வில்லை எடுத்து முறித்ததை அவன் சொல்லும் பாணி உலக இலக்கியத்தில் மிக்க ஏற்றம் பெற்ற தனி பாணி! (Unique style)

கையால் எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்

 

கார்முகப்படலம் பாடல் 34

அவ்வளவு தான்! சிவ தனுசை எடுத்தது கண்டனர்; பிறகு இற்றது கேட்டனர்!!

இதே இப்படி என்றால் திருமணத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்கிறான் கம்பன்! அப்படித் தனக்குத் திறமை இல்லை என்று சொல்லி அவன் வர்ணிக்கும் விதத்தைப் பார்த்தால் நமக்குத் தான் ரசிப்பதில் ரசனைத் திறமை இல்லை என்று நினைக்கத் தோன்றும்!!!

im159.guimet-D

கம்போடிய ராமாயண சிற்பங்கள், கெய்மே மியூசியம், பாரீஸ்

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு பாடலைப் பார்ப்போம்:-

ஆர்த்தன பேரிகள், ஆர்த்தன சங்கம்

ஆர்த்தன நால்மறை, ஆர்த்தனர் வானோர்

ஆர்த்தன பல்கலை, ஆர்த்தன பல்லாண்டு

ஆர்த்தன வண்டினம், ஆர்த்தன அண்டம்

கடிமணப் படலம் பாடல் 94

இப்படி ஒரு சில பாடல்களே மனதை மயக்குகிறது என்றால் முழு ராமாயணத்தையும் கேட்டால் நாம் சிறகடித்துப் பறக்க மாட்டோம்!

இராமாயணச் சாவடிகள்

காலம் காலமாக ராமாயணம் ஆங்காங்கே நகரங்களிலும் கிராமங்களிலும் ப்ரவசனகர்த்தாக்களால் சொல்லப்பட்டு வந்து கொண்டே இருந்ததை பல்வேறு கல்வெட்டுகள், நூல்கள், சுவடிகள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. பல சாவடிகள் இதற்கெனவே ஏற்படுத்தப்பட்டிருந்தன.

எடுத்துக்காட்டாக மதுரையில் வடக்குமாசிவீதியில் இராமாயணச் சாவடி என்ற  ஒரு மண்டபத்தை இன்றும் காணலாம். இது போல நாடெங்கும் ஆயிரக்கணக்கில் மண்டபங்கள் உள்ளன.

இது தவிர கோவில்களில் உள்ள மண்டபங்களிலும், ஆற்றங்கரை மேடைகளிலும், இப்படி ராமன் கதை கேட்பது வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.

சிப்பிக்குள் முத்து

இதைக் காட்சி அமைப்பாகக் கொண்ட ஒரு திரைப்படம் சிப்பிக்குள் முத்து. (தெலுங்கில் ஸ்வாதி முத்யம்). ஆடிஸத்தால் சற்று மனநலம் குன்றிய கமலஹாசன், அன்றைய கதாநாயகி ராதிகா ஆகியோர் நடித்து, தெலுங்கிலும் தமிழிலும் பெரும் வெற்றியைக் கொண்ட இந்தப் படம் வெளியான ஆண்டு 1986. படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனரான கே.விஸ்வநாத்.

பாடலை இயற்றியவர் வைரமுத்து. பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.

அழகிய ஆற்றங்கரை ஓரம் அமைந்த மேடையில் கதாகாலக்ஷேபமாக ராமன் கதை பாடப்படுகிறது.

தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டு வரும் ராம ஸ்தோத்திர வரிகளில் ஒன்றான “ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய நமஹ” என்பதும் பாடலில் இடம் பெறுகிறது.

ராமனும், ராமபத்ரனும், ராமசந்திரனும் ஆகிய ராமனுக்கு நமஸ்காரம் என்ற பொருள் உடைய இந்த ஸ்லோகத்தின் பகுதி மந்திரமாகக் கருதப்படும் ஒன்று.

0603 (1)

கர்நாடாக மாநிலம், ராமாயண சிற்பங்கள்

ராமன் கதை கேளுங்கள்

கமலஹாசன் செருப்பைக் கையில் ஏந்தி வந்து கூட்டத்தில் ஒருவராக அமர்வதையும், இளம் விதவையான ராதிகா தன் குழந்தையுடன் அங்கு இருப்பதையும் சுவாரசியமாக பாகவதர் கதை கூற பக்க வாத்தியங்கள் முழங்க கிராம மக்களுக்கு ஏற்ப எளிய தமிழில் ராமாயணம் இசையுடன் வழங்கப்படுவதையும் காட்சி சித்தரிக்கிறது. நீண்ட கதையாக சொல்லப்படுவதால் பாடல் 6 நிமிடம் 31 வினாடிகள் நீடிக்கிறது!

பாடலைப் பார்ப்போம்:-

ராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீ ரகுராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை

அவள் விழிகண்டு, குடிகொண்டு மணமாலை தந்த (ராமன் கதை கேளுங்கள்)

சீதையின் சுயம்வரம் நிச்சயிக்கப்பட்ட நாளிலே,

ஜனகனின் மண்டபத்தில் மாலை ஏந்தி வந்த ஜானகியை,

வெண்ணிலா மண்ணிலா வந்ததென்று மன்னவரெல்லாம் பார்க்க

ஶ்ரீ ராமசந்திர மூர்த்தி.. கண்ணெடுத்துப் பார்க்க மாட்டாரோ என்று கவலை கொண்டார்களாம் சீதாதேவியின் செல்லத்தோழிகள்

ராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீ ரகுராமன் கதை கேளுங்கள்

ராமன் கதை கேளுங்கள்

புலிகளின் பலம் கொண்ட புருஷர்கள் வந்திருந்தார்

யானையின் பலம் கொண்ட வேந்தர்கள் அங்கிருந்தார் (புலிகளின்)

தோளில் மலையைத் தூக்கிய வீரர் வந்தார்

இடிகளைக் கையில் பிடிப்பவர் பலர் இருந்தார்

ஆஹா!

நடந்தாள் .. சீதை நடந்தாள்

விழி மலர்ந்தாள் .. சபை அளந்தாள்

வரவு கண்டு, அவள் அழகு கண்டு

சிவ தனுசின் நாணும் வீணை போல அதிர்ந்தது! (ராமன் கதை)

வில்லொடிக்க அங்கு வந்த வேந்தர் தம் பல்லது

உடைபட விழுந்தார் – சிலர் எழுந்தார்

தொடை தட்டி எழுந்தவர்கள் முட்டி தெறித்துவிட,

சட்டென்று பூமியில் விழுந்தார்

காலும் நோக இரு கையும் நோக தம் தோளது நோகவே அழுதார்

சிலர் இடுப்பைப் பிடித்தபடி சுளுக்கு எடுத்தபடி ஆசனம் தேடி அமர்ந்தார்

ஆஹா! வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாருமில்லையா

ஆஹா! வீரமில்லையா, வில்லொடிக்க ஆண்கள் யாருமில்லையா (ஆஹா)

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய நமஹ

தசரத ராமன் தான் தாவி வந்தான்

வில்லையே ஒரு கண்ணால் பார்த்து நின்றான்

சீதையை மறு கண்ணால் பார்த்து நின்றான்

மறு நொடியில் வில்லெடுத்து அம்பு தொடுத்தான்

படபட படபட படபட படபட

ஒலியுடன் முறிந்தது சிவ தனுசு!

அந்த ஒலியுடன் சிரித்தது அவள் மனசு!!

ஜெயஜெய ராமா சீதையின் ராமா

ஜெயஜெய ராமா சீதையின் ராமா

தசரத ராமா ஜனகன் உன் மாமா

தசரத ராமா ஜனகன் உன் மாமா

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

காணக் காண அழகாகுமே

இன்னும் ஆயிரம் கண் வேண்டுமே (காண)

சீதா கல்யாண வைபோகமே

ஶ்ரீராம கல்யாண வைபோகமே

ஶ்ரீராமனே அதோ பாரப்பா.. ..

அலங்காரச் சீதை, அழகு அரசாளும் கோதை

அவள் விழிகண்டு, குடிகொண்டு மணமாலை தந்த (

ராமன் கதை கேளுங்கள்

ஶ்ரீரகுராமன் கதை கேளுங்கள்!

தசரத ராமா! ஜனகன் உன் மாமா!!

“வேந்தர் தம் பல்லது உடைபட விழுந்தார்”, “தசரத ராமா, ஜனகன் உன் மாமா”, போன்ற சொற்றொடர்கள் கிராமத்தினரை மனம் மகிழ வைக்கும், இல்லையா! இளையராஜாவின் இசைத்திறனை கம்பனின் பாணியில் ‘வர்ணிக்க வார்த்தைகள் இல்லை’ என்று சொல்லி விட வேண்டியது தான்!

ராமாயணத்தை, அதிலும் சீதா திருமணத்தைப் படம் தந்தது என்ற மகிழ்ச்சியில் அதைப் பாராட்டலாம் இல்லையா, நிச்சயமாக!

*******

கூப்பிடு தூரத்தில் இறைவன்!

disrobing-of-Draupadi-

Written by London swaminathan

Article No 1731; Date 19th March 2015

Uploaded at 9-48 am London Time (GMT)

கதை சொன்னவர் சுப்ரமண்ய சிவா; புத்தகத்தின் பெயர்: மோக்ஷ சாதன ரஹஸ்யம்; வெளியிட்ட ஆண்டு 1925

(சொற்கள் என்னுடையவை)

தஞ்சாவூரில் பெரியதாசர் என்று ஒரு சிறந்த பக்தர் இருந்தார். அவர் சதா சர்வ காலமும் இறை வழிபாட்டிலேயே நேரத்தைச் செலவிட்டு வந்தார். அவருடைய பெருமை அரசன் காதுகளையும் எட்டின. ஒரு நாள் அரசனே நேரே வந்தான். கொஞ்சம் பேச்சுக் கொடுத்துவிட்டு, கடவுள் எங்கே இருக்கிறார்? என்றார்.

உடனே பெரியதாசர் கொஞ்சமும் தயங்காமல் கடவுள் “கூப்பிடு தூரத்தில் இருக்கிறார்” என்றார். பெரிய தத்துவார்த்த பதிலை எதிர்பார்த்த அரசனுக்கு இப்படி அவர் பதில் கூறியது என்னவோ போல இருந்தது. தன்னை பெரியதாசர் கிண்டல் செய்கிறாரோ என்று தோன்றியது.

அப்படியா? இதோ என் சேவகர்களை அனுப்பி கூப்பிடு தூரத்தில் தேடிப் பார்க்கிறேன் என்றார்.

(ஒருவர் கூப்பிடும் குரல் எவ்வளவு தூரம் வரை கேட்கிறதோ அதைக் கூப்பிடு தூரம் என்று தமிழில் செப்புவர். ஆங்கிலத்தில் இதை Hailing Distance ஹெய்லிங் டிஸ்டன்ஸ் என்பர்)

சப்தம் போட்டுக் கூப்பிட்டுவிட்டு அவ்வளவு தூரம் வரை சேவகர்களை அனுப்பிப் பார்த்ததில் கடவுளின் சுவடே தெரிய இல்லை.

PONRHanumanSacredHeart400

பெரியதாசரிடம் அரசன் சொன்னார்: “அரசனிடம் பொய் சொல்லுவது பெரிய குற்றம். அது உங்களுக்குத் தெரியும். உண்மையைச் சொல்லுங்கள் கடவுள் எங்கே இருக்கிறார்?”

நான்  தான் முன்னமே சொன்னேனே! கடவுள் கூப்பிடு தூரத்தில் இருக்கிறார் என்று.

நான் தேடிப் பார்த்தேன் கடவுள் கூப்பிடு தூரத்தில் இல்லையே- என்றான் அரசன்.

பெரியதாசர் சொன்னார்: மன்னவனே; திரவுபதி கதை உனக்குத் தெரியாதா? அவளைத் துச்சாதனன் சபைக்கு இழுத்து வந்து அவளது புடவையை உருவினான். ஒரு பெண்ணுக்கு உலகில் இதைவிடப் பெரிய கொடுமை ஏதும் இல்லை. உயிரே போனாலும் பரவாயில்லை; மானம் போகக் கூடாது என்று பெண்கள் நினைப்பர். அவள் தனது இரு கைகளாலும் புடவையைப் பிடித்துக் கொண்டு, “அடே கண்ணா, துவாரகாபுரீவாசா, என்னைக் காப்பாற்று” – என்று கதறினாள்.

துவாரகாபுரீவாசன், நாமோ ரொம்ப தூரத்தில் உள்ளோம். அவளோ தன் புடவையைக் கெட்டியாகப் பிடித்திருக்கிறாள் என்று எண்ணிப் பேசாமல் இருந்துவிட்டார்.

நேரம் ஆக, ஆக திரவுபதிக்குத் தெரிந்துவிட்டது. இனி மனித முயற்சியில் ஒன்றும் நடவாது என்று உணர்ந்து, இரு கைகளையும் உயரே உயர்த்தி, “அடே ஹ்ருதய கமலவாசா! உன்னைத்தான் நம்பி இருக்கிறேன்”– என்று கதறினாள். அடுத்த நொடியில் உலக மஹா அற்புதம் நிகழ்ந்தது. துச்சாதனன் உருவிட, உருவிட புடவை வளர்ந்தது. அவன் மயக்கம்போட்டு வீழ்ந்தான். எப்படி?

துவாரகாபுரீ வாசா என்று அவனைத் தொலைவில் வைத்து, தன்னுடைய  இரு கைகள் மீது நம்பிக்கை வைத்த வரை கிருஷ்ணன் தனது ஆசனத்தை விட்டு அகலவில்லை.

இருதய கமல (இதய தாமரை) வாசா என்று “கூப்பிடு தூரத்துக்குள்” வைத்து அழைத்தவுடன், வெளியே குதித்த கண்ணன், அவளைக் காப்பாற்றினான். கூப்பிடு தூரம் என்பது அவரவர்கள் இறைவனைப் பக்கத்தில் வைத்திருக்கிறார்களா, இல்லையா என்பதைக் காட்டும் சொல் என்றார்.

ramais in heart

அரசனுக்கு இந்தப் பதில் நல்ல திருப்தியைத் தந்தது. பெரியதாசரின் பெருமையை உணர்ந்து அவரது காலடியில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்றான்!

அன்பர்களே, இந்தக் கதை புகட்டும் நீதி என்ன?

உள்ளத்தில் கடவுளை வையுங்கள்; அவன் மீது முழுநம்பிக்கை வையுங்கள். முழு நம்பிக்கையோடு கூப்பிட்டால் உடனே வருவான், அருள்வான்.

இருதய கமல வாசன் வாழ்க! இருதயங்கள் வெல்க!!

மன்னர் – முனிவர் இடையே சுவையான உரையாடல்!

guru_disciple-336x352

Article No 1729; Date 18th March 2015

Written by London swaminathan

லண்டன் நேரம் காலை 8-15

வைசம்பாயனர் – ஜனமேஜயன் உரையாடல்

ஆதாரம் – சுதந்திராநந்தர் சுப்ரமண்ய சிவா எழுதிய மோக்ஷ சாதன ரஹஸ்யம் – ஆண்டு 1925, புத்தக இருப்பிடம்- பிரிட்டிஷ் லைப்ரரி.

முனிவர் வைசம்பாயனர்:

மன்னர் மன்னவா! உனக்கு மஹாபாரதம் என்னும் மகத்தான இதிஹாசத்தை அறிமுகப்படுத்த ஆவல். தங்கள் சௌகரியம் எப்படியோ?

மன்னன் ஜனமேஜயன்:

முற்றும் துறந்த முனிவரே! உம்மைப் போன்ற அவகாசம் எமக்கில்லையே. இறைவன் இன்னும் இரண்டு கைகள் கொடுத்து, ஒரு நாளைக்கு 48 மணி நேரம் என்றால் கூட எனக்கு நேரம் போராதே! எனக்கு தலைக்கு மேலே பல வேலைகள் உள்ளன.

முனிவர் வைசம்பாயனர்:

மன்னா! கவலை வேண்டாம். மஹா பாரதத்தில் உள்ள 18 பர்வங்களையும் சொல்லாமல் ஒரே ஒரு பர்வம் மட்டும் சொல்கிறேன்.

மன்னன் ஜனமேஜயன்:

வேண்டவே வேண்டாம்; ஒரு நிமிட அவகாசம் கூட எனக்கில்லை.

முனிவர் வைசம்பாயனர்:

(பொறுமைக்கு இலக்கணமானவர் வைசம்பாயனர்; ஆகையால் விடவில்லை) – அதனால் என்ன மன்னா? ஒரு அத்தியாயம் மட்டும் சொல்கிறேனே!

மன்னன் ஜனமேஜயன்:

முனிவரே, உமக்கு அரசாட்சி என்றால் என்ன என்றே புரியவில்லை, பாரும்! இன்னும் எத்தனை முறை சொல்ல வேண்டும்? எனக்கு நேரமில்லை, எனக்கு நேரமில்லை, எனக்கு நேரமில்லை. இல்லவே இல்லை!

guru-shishya (1)

முனிவர் வைசம்பாயனர்:

புரிகிறது, புரிகிறது, நன்றாகவே புரிகிறது. மாபாரதத்தில் மொத்தம் ஒரு லட்சம் ஸ்லோகங்கள் இருக்கின்றன. ஒரே ஒரு ஸ்லோகம் மட்டும் சொல்லுகிறேனே!

மன்னன் ஜனமேஜயன்:

சரி, சரி! ஒன்றே ஒன்று. நேரத்தை வீணடிக்காமல் சட்டென்று சொல்லும்.

முனிவர் வைசம்பாயனர்:

துரியோதனன் போய் பசுக்களை அபகரித்து வந்தான் (ஆநிரை மீட்டல்). பெரிய யுத்தம் நேரிட்டது. துரியோதணன் செத்தான். போய்ட்டு வரட்டுமா?

இவ்வாறு சொல்லிக் கொண்டே எழுந்தார்.

மன்னன் ஜனமேஜயன்:

சுவாமிகளே! நில்லுங்கள். துரியோதணன் மாபெரும் மன்னன். அவன் போய், பசுக்களை எதற்காகத் திருட வேண்டும்? புரியவில்லையே. கதையில் ஏதோ தப்பு இருக்கிறது.

முனிவர் வைசம்பாயனர்:

ஓ, அதுவா? அவன் ஏன் பசுக்களைக் கவர்ந்தான் என்றால் …………………………………

இப்படியாக விளக்கம் சொல்லவும், ஜனமேஜயன் மேலும் ஆர்வம்கொண்டு பல துணைக் கேள்விகளைக் கேட்டான். ஒவ்வொன்றுக்காக அவர் பதில் சொல்லச் சொல்ல முழு மஹாபாரதத் தையும் சொல்ல வேண்டிவந்தது.

ஒரு லட்சம் பாடல்களைக் கொண்ட—இரண்டு லட்சம் வரிகளைக் கொண்ட – பத்து லட்சம் சொற்களைக் கொண்ட — ஏராளமான உபகதைகளைக் கொண்ட – மஹாபாரதம் – காலத்தை வென்ற ஒரு காவியம். கேட்கக் கேட்க தெவிட்டாத இலக்கியம். உலகிலுள்ள எல்லாம் அதில் உள. அதில் உள்ள எல்லாவற்றையும் உலகில் ஒரே இடத்தில் காண்பது அரிது.

வாழ்க மஹா பாரதம்! வளர்க சொற்பொழிவாளர்கள்!!