‘மதுரை பார்க்காதவன் கழுதை’

meenakshi temple

By London Swaminathan Post No. 898 Dated 10th March 2014

(Please read my earlier post to know the mysteries of the Madurai temple
“The Wonder that is Madurai Meenakshi Temple” — posted in September in tamilandvedas.wordpress.com and in October 2011 in swamiindology.blogspot.com)

மதுரை பார்க்காதவன் கழுதை என்று மலையாளப் பகுதியில் ஒரு பழமொழி உண்டாம்! மதுரை நகரின் அழகையும் கோவிலின் அழகையும் கண்டவர்கள் கட்டாயம் ‘’ஆமாம் இது உண்மையே’’ — என்று ஒப்புக் கொள்வார்கள். மேலும் மதுரை என்பது கேரளத்தின் எந்தப் பகுதியில் இருந்து பயணம் செய்தாலும் வெகுதூரம் இல்லை.

விவேக சிந்தாமணி ஆசிரியரோவெனில் புனிதத் தலங்கள் எதற்கும் போகாதவர்களை கழுதை என்கிறார்!

பூதலத்தில் மானிடராய்ப் பிறப்பதரிது எனப்
புகல்வர்; பிறந்தோர் தாமும்
ஆதிமறை நூலின் முறை அருள் கீர்த்தி ஆம்
தலங்கள் அன்பாய்ச் சென்று
நீதி வழுவாத வகை வழக்குரைத்து
நல்லோரை நேசம் கொண்டு
காதவழி பேர் இல்லார், கழுதை எனப்
பாரில் உள்ளோர் கருதுவரே.

பொருள்: மானிடராய்ப் பிறப்பதரிது. பிறந்தாலும் சாத்திரப்படி தயவு, புகழுடன் வாழ்ந்து, தல யாத்திரை செய்யவேண்டும் நியாயம் தவறாமல் வழக்கு தீர்த்து, நல்லோருடன் பழகி ஒரு பத்து மைல் தூரத்துக்காவது புகழ் பரவ வேண்டும் அல்லது அவனைக் கழுதையின் மறு பிறப்பே என்று உலகம் கருதும்!

details2

ஆதி சங்கரர் என்ன சொல்கிறார்?

ஆதி சங்கரர் எழுதிய வினா – விடை துதியில் (பிரஸ்னோத்தர ரத்ன மாலிகா) ஒரு கேள்விக்கு அழகான பதில் தருகிறார்:
யார் முடமானவன்? என்ற கேள்விக்கு சங்கரர் தரும் பதில்
கடைசி காலத்தில் யாத்திரை செல்பவன் முடமானவன்.
அதாவது, இளமைக் காலம் முழுதும் மற்ற விஷயங்களில் செலவழித்து விட்டு சாகிற நேரத்தில் சங்கரா, சங்கரா என்பவர்களையே ஆதி சங்கரர் இப்படி முடமானவன் என்கிறார்.

திருமூலரும் யாத்திரை பற்றிப் பின்வருமாறு சொல்லுவார்:

நாடும் நகரமும் நல் திருக்கோயிலும்
தேடித் திரிந்து சிவபெருமான் என்று
பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே

பொருள்: நாடு நகரம் தோறும் உள்ள எல்லா கோவில்களுக்கும் சென்று சிவ பெருமானைப் பாடிப் போற்றி துதியுங்கள். இப்படிச் செய்தால் அவன் உங்கள் பக்தியை மெச்சி உள்ளக் கோவிலில் எழுந்தருளி உங்களுக்கு அருள் புரிந்து கொண்டே இருப்பான்.
details

இதையே தேவார மூவரும், மாணிக்க வாசகரும், ஆழ்வார்களும் செய்தனர். ஏறத் தாழ 300 ஊர்களில் உள்ள கோவில்கள் அவர்களால் புத்துயிர் பெற்றன. சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனார், அவ்வையார் ஆகியோர் கயிலாய யாத்திரை சென்றனர். கண்ணின் சகோதரன் பாரதப் போரில் ப்ங்கேற்காமல் யாத்திரை சென்றான். பாரதம் முழுதும் வலம் வந்தான். ஆதிசங்கரர் நாடு முழுதும் வலம் வந்து நான்கு மடங்களைத் தாபித்தார். சென்ற இடமெல்லாம் கோவில்களில் சக்கரங்களைப் பதித்து மந்திர உருவையும் ஆகர்ஷண சக்தியையும் உண்டாக்கினார்.

சிலப்பதிகாரத்தில் வடக்கில் இருந்து கன்யாகுமரிக்கு யாத்திரை வந்தோர் பற்றிய குறிப்புகள் உண்டு. மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் யாத்திரையின் பெருமை பேசப்படுகிறது.

tower close up

அப்பர் என்ன சொல்கிறார்?

ஆயினும் கங்கையில் நீராடினாலும் காவிரியில் நீராடினாலும் உண்மை பக்தி இல்லாவிடில் பயனில்லை என்கிறார் அப்பர்:

கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்
கொங்கு தண் குமரித்துறை ஆடிலென்
ஓங்கு மாகடல் ஓதநீர் ஆடில் என்
எங்கும் ஈசன் என்னாதவர்க்கு இல்லையே (5-99-2)

கங்கை, காவிரி நதிகள், கன்யாகுமரிக் கடல் ஆகியவற்றில் நீராடும் போது மட்டுமில்லாமல், எப்போதும் இறைவன் பற்றிய சிந்தனை இல்லாவிடில் பயன் ஒன்றும் இல்லை. ராமகிருஷ்ண பரமஹம்சரும் இதையே வேறு ஒரு விதமாகக் கூறுவார். கங்கை நதியில் நீராடினால் பாவம் எல்லாம் போய்விடும் என்றால் அதில் வாழும் மீன்கள் எல்லாம் நமக்கும் முன்னால் சொர்க்கத்துக்குப் போய்விடும்என்று. இதன் பொருள் என்னவென்றால் பழைய பாவங்களுக்கு மனம் வருந்தி இனி எக்காலத்தும் பாவம் செய்ய உறுதி எடுக்க வேண்டும் என்பதாம். சுற்றுலாப் பயணங்களின் ஒரு பகுதியாக ரிஷிகேஷ், ஹரித்வார் செலுவோருக்கு ஏதோ கொஞ்சம் பயன் கிட்டும்.

சித்தர்கள் என்ன சொல்கிறார்கள்?
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணுத்துச் சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ
durga

என்று சிவவாக்கியர் இன்னும் அழகாகச் சொல்லுவார். பானைக்குள் சுவையான சர்க்கரைப் பொங்கல் இருக்கிறது. அதன் சுவை சுட்ட சட்டிக்கும், சட்டுவத்துக்கும் (கரண்டி) தெரியுமா? இது போல அர்த்தமின்றி சடங்குகளைச் செய்வோருக்கு என்ன பயன். உள்ளுக்குள்ளே உறையும் இறைவனை விட்டு ஊர் ஊராக யாத்திரை போய், கல்லின் மீது நாலு புஷ்பங்களை மட்டும் போட்டால் முக்தி கிடைத்து விடுமா?

நிற்க.

கொஞ்சம் சுய சரிதை!
25 ஆண்டுகளுக்கு முன் பி.பி.சி. தமிழோசையில் பணியாற்றியபோது எனது ‘’வினவுங்கள் விடை தருவோம்’’ நிகழ்ச்சிக்காக வாரம் தோறும் புத்தகம் வாங்க கடைகளுக்குப் போவேன். லண்டன் டாட்டன்ஹாம் ரோடு வழியே சென்றபோது ‘’100 உலக அதிசயங்கள்’’ என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் பார்த்தேன். நிறைய நேயர்கள் எனக்கு உலக அதிசயங்கள் பற்றி கேள்விகளை அனுப்பியதால் புத்தகத்தைப் புரட்டினேன். முதலில் தென்பட்டது மதுரை மீனாட்சி கோவில்தான்! ஒரே ஆச்சரியம்!! உடனே ‘’டில்’’லுக்குப் போய் பணத்தைக் கொடுத்துவிட்டு ரயில் (அண்டர்கிரவுண்ட்) பயணத்தின் போதே புத்தகத்தைப் படிக்கத் துவங்கினேன். அதை வெளியிட்டவர்கள் நம்மவர் இல்லை. பிரிட்டிஷ் ஆட்டோமொபைல் அஸோசியேஷன் வெளியிட்டது அது. மதுரையின் பெருமையை இன்று உலகமே அறியும். 25 ஆண்டுகளுக்கு முன் இந்த அளவுக்குத் தெரியாது. கூட்டம் மிகக் குறைவு.

1858 Madurai

Madurai in 1858

தினமும் மாலை வேளைகளில் மதுரை சித்திரை வீதியில் ஒரு ஆடிட்டர் வீட்டுத் திண்ணையில் நடக்கும் இலவச சம்ஸ்கிருத வகுப்புக்குச் செல்லும்போது நானும் என் சகோதரர்களும் மீனாட்சி கோவில் ஆடி வீதிகளில் ஓடிப் பிடித்து விளையாடுவோம். இப்பொழுது அங்குள்ள கூட்டத்தைப் பார்த்தால் கற்பனையும் செய்யமுடியாது. புதுக்கோட்டை ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் சஹஸ்ர சண்டி மஹா யக்ஞம் நடத்துவதற்காக நிதி சேர்க்க நாங்கள் ஆடி வீதியில் ஸ்ரீ அனந்தராம தீட்சிதரின் உபந்யாசம் ஏற்பாடு செய்திருந்தோம். அந்த 40 நாட்களிலும் ஆன்மீகப் புத்தகக் கடை வைத்து அதன் முலமும் நிதி உண்டாக்கிக் கொடுத்தோம் .அதுபோன்ற தருணங்களில் ஆடிவீதி 10,000 பேருடன் நிரம்பி வழியும். அல்லது சித்திரைத் திருவிழா நடக்கும் காலங்களில் மட்டும் கூட்டம் இருக்கும். இப்போதோ திருப்பதி பாலாஜி கோவிலுடன் போட்டியில் இறங்கிவிட்டாள் என் அன்னை மீனாட்சி!!

‘’மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’’ – வாழ்க !!
எம் அன்னை மீனாட்சி புகழ் ஓங்குக!!

Contact swami_48@yahoo.com

‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’

nepali kutti sanyasi

Picture: Little boy from Nepal.

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண் 853 தேதி 20, பிப்ரவரி 2014

This is a translation of my Post No 832 posted in English on 10th February 2014 in this blog.

புறநானூற்றில் ஒரு அருமையான தமிழ் பாட்டு இருக்கிறது. எல்லோருக்கும் முதல் வரி மட்டும் தெரியும்: யாதும் ஊரே; யாவரும் கேளிர்; அதற்கு அடுத்த வரியோ, அந்தப் பாட்டின் முழுப் பொருளோ பலருக்கும் தெரியாது. ஆகையால் இரண்டாவது வரியை தலைப்பாகக் கொடுத்துள்ளேன். இது இந்துக்களின் கர்ம வினைக் கொள்கையை அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. “ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லும் மிதவை போல”– என்ற சித்திர உவமையை இந்து சந்யாசிகளும் புத்தரும் பயன்படுத்துகிறார்கள். இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் ஆகிய அனைவரும் மறு பிறப்பு, கர்மா கொள்கைகளில் நம்பிக்கை உடையோர்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;
சாதலும் புதுவதன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; ’மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம்’ புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

—-புறம்.192, கனியன் பூங்குன்றன் ( பொருண்மொழிக் காஞ்சித் துறை))
இந்து தர்மக் கோட்பாடுகளை விளக்கும் அருமையான பாட்டு இது.

இவை அத்தனையும் பகவத் கீதையில் உள்ள வரிகள்!!!

வசுதைவ குடும்பகம்

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகு இன்பக் கேணி என்றே—மிக
நன்று பல்வேதம் வரைந்த கை பாரத
நாயகி தன் திருக்கை (Subramanya Bharati)

என்று பாரதி பாடுகிறார். 3000 ஆண்டுகளுக்கு முன் அதர்வண வேதத்திலும் ‘பூமி என் தாய், நான் அதன் மகன்’ என்ற வரி உள்ளது. மஹோபநிஷத்திலுல் (6-71), பஞ்ச தந்திரத்திலும் (5-3-37), ஹிதோப தேசத்திலும் (1-3-71) ‘வசுதைவ குடும்பகம்’ (உலகம் ஒரே குடும்பம்) என்ற கோட்பாடு உள்ளது. ஆக உலகம் “ஒரே குடும்பம் நாம் எல்லோரும் அதன் மக்கள்” என்ற கருத்து வேத காலம் முதலே இருக்கிறது.

சாதலும் புதுவதன்றே; வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே

இறந்து போவது ஒன்றும் புதிது அல்ல. ஆகையால் வாழ்வதிலும் பெரிய இன்பம் கிடையாது. அதற்காக அதை வெறுத்து ஒதுக்குவதும் எங்களிடம் இல்லை. இந்தக் கருத்து கீதை முழுதும் பல இடங்களில் வருகிறது.

ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர், த்ருவம் ஜன்ம முதஸ்ய ச
தஸ்மாத் அபரிஹர்யேர்த்தே ந த்வம் சோசிதும் அர்ஹஸி (2-27)

பகவத் கீதை 2—27

பொருள்: பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் நிச்சயமாக இருக்கிறது. ஆகையால் தவிர்க்க முடியாத விஷயத்தில் வருத்தப்பட ஒன்றும் இல்லை.

தமிழ் திரைப் படப் பாடலிலும் இதே கருத்தைக் காண்கிறோம்:

போனால் போகட்டும் போடா
போனால் போகட்டும் போடா – இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா
ஒஹோஹோ… ஒஹோஹோ…
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த
மண்ணில் நமக்கே இடமேது?

வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்
ஜனனம் என்பது வரவாகும் – அதில்
மரணம் என்பது செலவாகும்

(படம்- பாசமலர்; பாடல்-கவிஞர் கண்ணதாசன்)

இதையே புத்த மதப் பாடலிலும் காணலாம்:

“Weep not, for such is here the life of man
Unasked he came, unbidden went he hence
Lo! Ask thyself again whence came thy son
To bide on earth this little breathing space
By one way come and by another gone…..
So hither and so hence— why should ye weep?”

— Psalms of Sisters (E.T. by Mrs Rhys Davids (1909) quoted by Dr S Radhakrishnan in his Bhagavad Gita commentary.

மஹா பாரதத்திலும் வியாசர் உலகிலேயே மிக அதிசயமான விஷயம் எது என்ற கேள்விக்கு தருமன் வாய் மொழியாக விடை கூறியதை யக்ஷப் ப்ரஸ்னத்திலும் ‘உலகிலேயே எது பெரிய அதிசயம்? எது ஆச்சர்யம்?’ என்ற கட்டுரையிலும் ஏற்கனவே எழுதிவிட்டேன். வள்ளுவனும் இந்த ஆச்சரியத்தைக் (குறள் 336) குறிப்பிட்டதையும் எழுதிவிட்டேன்.

தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன;

ஒருவருக்கு நல்லதும் கெட்டதும் பிறர் தருவதில்லை. நமக்கு நாமே உண்டாக்கிக் கொள்கிறோம். தினை விதைத்தவன் தினை அறுப்பான் ,வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்றும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றும் தமிழ் சான்றோர்கள் பகர்வர். வேதகாலம் முதல் இந்தியாவில் இந்தக் கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். பாவ புண்ணியம் என்பது இந்தியாவில் பிறந்த எல்லோருக்கும் தெரிந்த கருத்து.

கருட புராணத்தில் வரும் ஒரு ஸ்லோகத்தை டாக்டர் ராதாகிருஷ்ணன் எடுத்தாள்கிறார்:

Garuda Purana says
Sukhasya dukkhasya na kopi data
Paro dadatiti kubhuddir esa
Swayam krtam svena phalena yujyate
Sarira he nistara yat tvatya krtam

இன்பமும் துன்பமும் பிறர் தருவது இல்லை. மற்றவர்கள் நமக்குக் கெடுதி செய்துவிட்டனர் என்பது தவறு. நாம் என்ன விதைத்தோமோ அதுதான் பழம் ஆகி பலன் தருகிறது.

’மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம்’ புணை போல் ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின்,

devotion

பெரியாறு என்பது தமிழ்நாடு—கேரள எல்லையில் இருக்கிறது. புலவர் இதையும் சொல்லி இருக்கலாம். அல்லது பொதுவாக கங்கை முதலிய பெரிய நதிகளில் வரும் தெப்பத்தையும் (படகு) சொல்லி இருக்கலாம். வாழ்க்கை என்பது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் படகு போன்றது. அது போய்ச் சேர வேண்டிய இடத்துக்குச் சேரும் என்பது அறிஞர்கள் கண்ட உண்மை என்று கனியன் பூங்குன்றன் கூறுகிறார். ஆதிசங்கரரின் விவேக சூடாமணி யிலும் இதைக் காணலாம் ஆனால் தமிழ்ப் புலவர் இதைப் படித்துதான் எழுத வேண்டும் என்பதில்லை. பெரியோர்கள் ஒரேமாதிரி சிந்திப்பர்:

ஆதிசங்கரரின் விவேக சூடாமணி (பாடல் 550): ஆற்று வெள்ளத்தில் மிதக்கும் ஒரு கட்டை அதன் போக்கில் உயர்ந்தோ தாழ்ந்தோ ஏறி இறங்கிச் செல்லும். அதே போல கடந்த கால செயல்களுக்கு ஏற்ப (அவரவர் கர்மாப் படி) ஒவ்வொருவரும் அவற்றின் பலன்களை அனுபவிப்பர்.
சிலப்பதிகாரம் என்னும் தமிழ் காவியம் முழுதும் ஊழ்வினையின் விளையாட்டைக் காணலாம்.

பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

ஆகையால் பெரியவர்களைக் கண்டால் அவர்களைப் புகழ்வதும் இல்லை. சிறியவர்களைக் கண்டால் இகழ்வது என்பதும் கொஞ்சமும் இல்லை என்கிறார் புலவர் பூங்குன்றன். இதைத் தான் சமத்துவ பாவனை என்பர். சான்றோர்களுக்கு எல்லோரும் ஒன்றே.

“ஸமத்துவ பாவனையே அச்சுதனுக்கு செய்யும் ஆராதனையாம்”

(ஸமத்வ- மாராதன-மச்யுதஸ்யாம், பிரஹ்லாதன்; விஷ்ணுபுராணம், 1-17-90)

வித்யா – விநய – ஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி
சுனி சைவ ச்வபாகே ச பண்டிதா: ஸமதர்சின: ( கீதை 5-18)

பொருள்: கல்வியும் அடக்கமும் நிறைந்த பிராமணனிடத்தும், பசுவி னிடத்தும்,யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலைய னிடத்தும் ஆத்ம ஞானிகள் (பண்டிதர்கள்) சமதர்சனம் (ஒரே பார்வை) உடையவர்கள்.

(ஆதாரம்:– அண்ணா எழுதிய ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பாஷ்யம், மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதை, இரண்டு புத்தகங்களும் ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியீடுகள், மயிலாப்பூர், சென்னை)

ஆக கனியன் பூங்குன்றனின் கருத்துகள் இந்திய தத்துவம்; இது பாரதம் முழுதும் ஒன்றே என்பதைக் காட்டும்.

தொடர்பு கொள்க: swami_48@yahoo.com

கால்டுவெல் பாதிரியார் தவறுகள்

Please click here for the article:

கால்டுவெல் பாதிரியார் தவறுகள்

caldwell

ussher-chart-top

scalcs

Images of Dr Caldwell and Christian belief about the Date of Creation.

மணலில் புதைந்த 2 தமிழ் நகரங்கள்

sandstorm11 (1)sudan

Picture of sand storm in Sudan

லண்டன் சுவாமிநாதன்

முனிவர்களோ புலவரோ சீறினால் சாம்ராஜ்யங்கள் சரிந்துவிடும். நகரங்கள் தீக்கிரையாகும். வெள்ளத்தில் தீயோர் அடித்துச் செல்லப்படுவர். திருவள்ளுவரும் இதைத்தெளிவாகவே கூறுகிறார் (894, 898, 899). பெரியாரைப் பகைப்பது எமதர்ம ராஜனை, “வாடா சண்டைக்கு என்று கை தட்டிக் கூப்பிடுவதற்குச் சமம்”– என்று அழகாக உவமிக்கிறார்.

ஒரு முனிவரின் கோபத்தால் உறையூர் அழிந்தது. ஒரு புலவர் கோபத்தால் திருமலைராயன் பட்டிணம் அழிந்தது. இதற்கு முன் நான் எழுதிய கட்டுரைகளில் ஆண்டாள், சம்பந்தர், வள்ளலார், திருப்பாண் ஆழ்வார், நந்தனார் முதலிய பல இந்து சாது, சன்யாசிகள் ஜோதியில் மாயமாய் மறைந்தது எப்படி? என்று விவரித்தேன். உளம் கடந்த செயல்கள் துறை விஞ்ஞானமும் இது முடியும் என்று ஒப்புக்கொள்கிறது. கண்ணகி மதுரையை அழித்ததையும், ஆதி சங்கரரும் பட்டினத்தடிகளும் அற்புதமாக அன்னையரின் சிதைக்குத் தீ மூட்டியதையும், தான்சேன் தீயை உண்டாக்கும் ராகத்தைப் பாடியதையும், முத்துசுவாமி தீட்சிதர் மழையை உண்டாக்கும் ராகத்தைப் பாடியதையும் தனித் தனி கட்டுரைகளில் எழுதிவிட்டேன்.

sandstorm10 (1)OZ
Picture of a sand storm in Australia

இதோ மணல் புயல் உண்டாக்கிய இரண்டு சம்பவங்கள்:

உறையூர் என்பது தற்கால திருச்சியின் பகுதி. 2000 ஆண்டுகளுக்கு முன் கரிகாலன் முதலிய சக்தி வாய்ந்த சோழ மன்னர்களின் தலைநகரம். அங்கிருந்த நீதி மன்றத்தால் ‘அறம் துஞ்சும் உறந்தை’ எனப் புகழ் பெற்றது. கரிகால வளவனைப் பின் பற்றி பிரிட்டிஷ் நீதிபதிகள் இன்றும் வெள்ளை முடி அணிந்து தீர்ப்புக் கூறுவதை ஏற்கனவே கட்டுரையாக எழுதிவிட்டேன். இந்த உறையூர் பற்றி சிலப்பதிகாரமும் சங்கத் தமிழ் நூல்களும் வேறு ஒரு அதிசயத் தகவலையும் தருகின்றன.

ஒரு சோழ மன்னன் யானையில் வருகையில் பட்டத்து யானையை ஒரு சேவற் கோழி யானையின் கண்களில் கொத்தி அதை அடித்து விரட்டியதையும் அதனால் இந்த ஊருக்கு கோழியூர் என்று பெயர் ஏற்பட்டதையும் அவை எடுத்துக் காட்டுகின்றன. அதன் பின்னர் அந்த வீர மண்ணில் ஒரு நகரம் உதயமாகி சோழ சாம்ராஜ்யத்தின் தலை நகர் என்னும் சிறப்பை அடைந்தது.
இப்படிப் புகழ் வாய்ந்த உறையூரில் பராந்தகன் என்னும் சோழன் ஆளுகையில் சாரமா முனிவர் என்பவர் ஒரு நந்தவனத்தை உருவாக்கி சிவபெருமானுக்காக செவ்வந்தி மலர்ச் செடிககளை வளர்த்து வந்தார். மிக அழகான அந்த செவ்வந்தி மலர்களை ஒரு ராஜாங்க ஊழியன் திருடிக் கொண்டுபோய் அரசனுக்குத் தந்தான். அவனும் அதை விரும்பவே இந்தத் திருட்டு, வாடிக்கையாக நடக்கத் துவங்கியது.

திருட்டுப் பொருள் என்று தெரிந்துமே அரசன் இப்படி வாங்கியது முனிவருக்குப் பெருங்கோபத்தை உண்டாகியது. பெரியார் சீறினால் சிறியார் பிழைப்பரோ? பெரும் மணல் புயல் உண்டாகி உறையூரை மணலுக்குள் மன்னனோடு புதைத்தது என்பது செவி வழிக் கதையாகும்.
sandstorm07 (1)Texas
Picture of a sand storm in Texas,USA

தற்காலத்தில் உறையூரில் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டபோதும் இந்த சம்பவத்துக்கான தெளிவான சான்று கிடைத்ததாகத் தெரியவில்லை. ‘பராந்தகன்’ என்ற சம்ஸ்கிருத விருதைப் பல மன்னர்களும் சூடி இருப்பதால் எந்த பராந்தகன் என்பதும் தெரியவில்லை. எது எப்படியாகிலும் தீ இல்லாமல் புகையுமா? ஒரு காரணம் இருப்பதால்தானே இந்தக் கதைகள் இன்றுவரை உலவுகின்றன.

காளமேகம் அழித்த பட்டினம்

கவி காளமேகத்தை அறியாதோர் இல்லை. சிலேடைக் கவி சக்ரவர்த்தி; ஆசு கவி மன்னன். மழை போல் கவி பொழிபவன்; ஒரு முறை திருமலைராயன் பட்டினம் சென்றபோது அரசவையில் கவிபாடினார். பொறாமை கொண்ட ஆஸ்தான கவிஞர்கள் பல தடைகளை எழுப்பவே இவர் அத்தனைக்கும் விடை பகன்றார். ஆயினும் மன்னர் ஓரச் சார்பாக நடந்துகொண்டு தனது அவைக்கள புலவர்களே வென்றதாகக் கூறினான். அவமானம் தாளாத ஆசுகவி காளமேகம் அறம் பாடினார்.

வடமொழியில் மந்திரங்கள் உள்ளது போலவே தமிழிலும் ‘அறம் பாடுதல்’ என்ற வழக்கம் உண்டு. உள்ளத்தால் பொய்யாது ஒழுகும் உத்தம புலவர்களுக்கும் சாது சன்யாசிகளுக்கும் இந்த அபூர்வ சக்தி கிடைக்கும். அவர்கள் கரு நாக்கில் விழுந்தவர்கள் பிழைக்க முடியாது. கருப்பு நிற ராஜ நாகத்தைவிடக் கொடியது அவர்களின் சொல்லாற்றல்.

காளமேகம் பாடி முடித்தவுடன் மணல் புயல் வீசி ஊரையே அழித்தது!

இதோ அவர் பாடிய பாடல்கள்:

“செய்யாத செய்த திருமலை ராயன் வரையில்
அய்யா அரனே அரை நொடியில்—வெய்ய தழற்
கண்மாரியால் மதனைக் கட்டழித்தாற் போற்றீயோர்
மண்மாரியால் அழியவாட்டு”

“கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்ற ஊர்
களைகளாய் நின்று கதறும் ஊர்— நாளையே
விண்மாரியற்று வெளுத்து மிகக் கறுத்து
மண்மாரி பெய்கவிந்த வான்”

sandstorm05 (1)Arizona

Picture os a sand storm in Arizona, USA
காளமேகம் ஆகட்டும், கண்ணகி ஆகட்டும் தீயோரை மட்டுமே அழிக்கும்படி பாடியது குறிப்பிடத்தக்கது. சாபங்களும் வரங்களும் என்ற எனது ஆங்கிலக் கட்டுரையிலும் பெரியோர்கள் மரணம் பற்றிய உண்மைகள் என்ற தமிழ்க் கட்டுரையிலும் மேலும் பல அதிசய விசயங்களை எழுதியுள்ளேன்.
கல்மாரி, மண்மாரி கதைகள் இன்னும் பல உள்ளன. மீண்டும் எழுதுவேன். எகிப்திய பாரோவுக்கு எதிராக மோசஸ் செய்த அற்புதங்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டில் உள்ளன. அற்புதங்கள் என்பவை எல்லா மதங்களுக்கும் பொதுவானவை.
contact swami_48@yahoo.com

கருமமே கண்ணாயினார்!

kumaragurupara

16.சம்ஸ்கிருதச் செல்வம்

ச.நாகராஜன்

சம்ஸ்கிருத இலக்கியத்தில் தனக்கென அழியாத இடத்தைப் பெற்ற மாபெரும் கவிஞரான பர்த்ருஹரியின் நீதி சதகத்திலிருந்து ஒரு பாடலை முன்பு பார்த்தோம்.(அத்தியாயம் 9). இன்னொரு பாடலை இப்போது பார்க்கலாம்.

ஒரு தீரனான மனிதன் கார்ய சித்தியைப் பெறுவது பற்றி அழகுற நீதி சதகத்தில் 73ஆம் பாடலில் கூறுகிறார் அவர். பாடல் இதோ:

க்வசித் ப்ருத்வீசய்ய: க்வசிதபி பர்யங்க ஸயக:
க்வசித் சாகாஹார: க்வசிதபிச ஸால்யோ தன ருசி: I
க்வசித் கந்தாதாரீ க்வசிதபிச திவ்யாம்பரதர:
மநஸ்வீ கார்யார்த்தி ந கணயதி துக்கம் ந ச சுகம் II

கார்யார்த்தி : கார்யசித்தி பெற விரும்பும் (ஒரு காரியத்தில் வெற்றி பெற விரும்பும்)
மநஸ்வீ : தீரனான ஒரு மனிதன்
துக்கம் : துக்கத்தையோ
சுகம் : சுகத்தையோ
ந கணயதி : பாராட்ட மாட்டான்
க்வசித் ப்ருத்வீசய்ய: : சில சந்தர்ப்பங்களில் வெறும் பூமியில் படுப்பான்
க்வசிதபி பர்யங்க ஸயக: : வேறு சந்தர்ப்பத்தில் உயர்ந்த கட்டிலிலும் படுப்பான்
க்வசித் சாகாஹார: : ஒரு சமயம் வெறும் காய் கிழங்குகளையே புசிப்பான்
க்வசித் ஸால்யோ தன ருசி: : இன்னொரு சமயம் உயர்ந்த சம்பா அரிசி சாதத்தைப் புசிப்பதில் ருசி கொள்வான்
க்வசித் கந்தாதாரீ : ஒரு சமயம் கந்தை ஆடையை அணிவான்
க்வசிதபிச திவ்யாம்பரதர: : இன்னொரு சமயமோ திவ்யமான ஆடையை அணிவான்

ஆக வெற்றியை விரும்பும் ஒரு மனிதன் சுக துக்கங்களைப் பொருட்படுத்தமாட்டான். இப்படி வெற்றி பெற இலக்கணம் வகுக்கிறார் பர்த்ருஹரி.

இந்தப் பாடலை குமர குருபரர் எழுதிய பாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். நீதி நெறி விளக்கத்தில் 53ஆவது பாடலாக இது மலர்கிறது.

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண் துஞ்சார்,
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்

இதன் பொருள்: ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று முனைப்புடன் இறங்கியவர்கள் தனது உடலில் உண்டாகும் நோவைப் பொருட்படுத்தமாட்டார் பசியைப் பார்க்க மாட்டார், தூங்க மாட்டார், யார் தீங்கு செய்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்,காலத்தின் அருமையைப் பற்றியும் கவலைப்படமாட்டார். அடுத்தவர் கூறும் அவமதிப்பான சொற்களைக் கேட்கமாட்டார் தங்கள் காரியத்திலேயே கண்ணாயிருந்து அதில் வெற்றி பெறுவதிலேயே கவனமாக இருப்பார்.

எடுத்த காரியத்திற்குத் தடைகள் செய்வோர் ஏராளம். அதை விட்டு விடுமாறு கூறுவதோடு அவமதிப்பைச் செய்வோரும் ஏராளம்.ஆனால் அதையெல்லாம் மீறி தனது உறுதியை விடாமல் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுபவனே உண்மையில் தீரன் ஆவான்.

புராணங்களில் புகழுடன் திகழும் துருவன், நசிகேதன், பகீரதன் என ஏராளமானோர் நமக்கு உத்வேகம் ஊட்டுகின்றனர்.
நல்ல காரியத்தை லட்சியமாகக் கொள்வோம்; அதை முடித்து வெற்றியும் பெறுவோம்!

நாகராஜன் எழுதிய 60 கட்டுரைகளும் லண்டன் சுவாமிநாதன் 600 (60+600=660) கட்டுரைகளும் இந்த பிளாக்கில் கிடைக்கும். படித்து மகிழ்க.

தமிழில் யமன்!!

??????????????????????????

எழுதியவர் சந்தானம்/லண்டன் சுவாமிநாதன்

English version of this article is posted already.

இந்துக்கள், குறிப்பாக பிராமணர்கள், தினமும் யமனை வழிபடுகின்றனர். மரண தேவனை பயமில்லாமல் கும்பிடும் ஒரே இனம் இந்துக்களாகத் தான் இருப்பார்கள். பிராமணர்கள் தினமும் காலை, மதியம், மாலையில் சூரியனை நோக்கி சந்தியாவந்தனம் செய்வர். இதில் தெற்கு திசையை நோக்கி யமனைப் பார்த்து சொல்லும் மந்திரமும் வருகிறது. இதில் யமனைக் கருப்பன் என்று கூறுகிறது. காளி, கலி, சனிக் கிரஹம், கிருஷ்ணன், விஷ்ணு, ராமன் போல யமனும் ஒரு கருப்பன். வெள்ளைத் தோல் தெய்வங்கள் ஆரிய தெய்வங்கள் என்றும் கருப்புத்தோல் தெய்வங்கள் திராவிட தெய்வங்கள் என்றும் எழுதி இந்துக்களை பிளவுபடுத்தி இந்தியாவை சீர்குலைக்க எழுதிய வெள்ளைத்தோல் அறிஞர்களுக்கு யமன் சரியான அடி கொடுக்கிறான்.

யமனைப் பற்றி சங்கத் தமிழ் இலக்கியங்களிலும் பல குறிப்புகள் வருகின்றன. ஏற்கனவே இந்திரனையும் வருணனையும் தமிழர் தெய்வங்கள் என்று தொல்காப்பியம் கூறியதைக் கொடுத்தேன். இப்போது சங்கத் தமிழ் இலக்கியம் யமதர்மன் பற்றிக் கூறுவதையும் காண்போம். அதில் ஞமன் என்றும் கூறுவர்.

சங்கத் தமிழில் புறநானூறு மிகவும் பழமையான பகுதி. அதில் பாடல் 4,13,19,22,56,195, 226,294 ஆகியவற்றிலும் பதிற்றுப்பத்தில் பாடல் 13, 14 கலித்தொகையில் பாடல் 105, 120 ஆகியவற்றிலும் காலன் என்ற பெயரில் புறநானூறு பாடல் 23, 41, 240, பதிற்றுப்பத்தில் பாடல் 39 ,கலித்தொகையில் பாடல் 105, 143 ஆகியவற்றிலும் யமதர்மராஜா பவனி வருகிறார்.

ஞமன் என்ற பெயரும் எருமை வாஹனமும் பரிபாடலில் வருகிறது (3, 5, 8 ஆம் பாடல்கள்) மீளி, மறலி, கணிச்சிப்படையோன், மடங்கல், கூற்றம் என்ற பெயரிலும் யமன் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன.

ஆரிய திராவிட வாதத்தை நகைப்புள்ளாக்கும் யமனைப் பற்றிய குறிப்புகளை மட்டும் பார்ப்போம்:

கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

பிணிக்கும் காலை, இரங்குவீர் மாதோ (புறம் 195)

பொருள்: கடுந்திறலோடு மழுப்படையுடன் கூற்றுவன் பாசத்தால் கட்டி இழுத்துச் செல்லும்போது வருத்தப்படுவீர்கள்.

இந்துமதத்தில் இன்றுள்ள நம்பிக்கையை 2000 ஆண்டுகளுக்கு முன் நரிவெரூவுத்தலையாரும் பாடிவிட்டார். எருமை வாஹனம் உடையவன் என்பதும் புராணக் கருத்தாகும்.

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை இடைக்காடனார் பாடிய பாடலிலும் (புறம் 42) ‘’கணிச்சி என்னும் படைக் கலத்தை உயிரை வருந்தச் சுழற்றி வரும் கூற்றம்’’ என்று யமன் வருணிக்கப்படுகிறான்.

TIBET15_Yama, 16c

ஒரு மன்னரின் சீற்றத்தை விவரிக்கும் போது, தமிழ், வடமொழி இலக்கியங்கள் மன்னனை யமனுக்கு ஒப்பிடுவது வழக்கம்.

திருக்குறளில் கூற்று/யமன் என்ற சொல் 326, 765, 1050, 1083ல் வரும். கலித்தொகை, பரிபாடல் ஆகிய இரண்டும் யமன் பற்றி மட்டுமின்றி ஏராளமான புராணக் கதைகளையும் உவமைகளையும் கையாளுகின்றன.

பிராமணர்கள் தினமும் மும்முறை சொல்லும் யம வந்தனத்தில் யமன் பற்றி 13 பெயர்கள் வரும். இதை தெற்கு திசை நோக்கி நின்றுகொண்டு சொல்லுவர். இறந்த மனிதர்கள் தென் திசைக்குச் செல்லுவர் என்னும் இந்து மதக் கருத்தை ஆணித் தரமாக, அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, ஆரிய திராவிட வாதத்துக்கு ஆப்பு வைக்கிறான் வள்ளுவன்:

‘’தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’’ ( குறள் 43)

இந்துக்கள் தினமும் பஞ்ச யக்ஞம் செய்யவேண்டும் என்பதை வள்ளுவன் இரண்டே வரிகளில் சொல்லும் குறள் இது. ஆறாவது பகுதி தானியத்தை மன்னனுக்கு வரியாகச் செலுத்தவேண்டும்.

தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்

பொன்போல் புதல்வர் பெறா அதீரும் (புறம்-9)

என்று சொல்லி நெட்டிமையார் என்னும் புலவரும் ஆரிய திராவிட வாதத்துக்கு செமை அடி கொடுப்பார். இறந்தோருக்கு திதி, தர்ப்பணம் செய்வதை அழகாக எடுத்துரைக்கிறார் புறநானூற்றுப் புலவர்.

சித்திரகுப்தன் யார்: யமனுடைய காரியதரிசி ஒரு தனி ஆள் அல்ல. சித்திரகுப்தன் என்றால் ‘’ரகசிய வரைபடம்’’ என்று தமிழில் பொருள். நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் செயல் வடிவம் பெரும் முன் சித்திரமாகப் படியும். அப்பொழுதே யமன் நமக்கு மதிப்பெண் போட்டு விடுகிறான். அதன் படியே, புண்ணிய பாபங்கள் ஏற்படும். அதன் அடிப்படையில் நாம் நரகத்துக்கோ, சுவர்க்கத்துக்கோ செல்கிறோம். இதையே சித்திர குப்தன் (ரகசிய=குப்த, வரைபடம்=சித்திர) என்போம். ஒரு கம்ப்யூட்டரும் மூளையும் கோடிக் கோடி கணக்குகளைப் போடும். சித்திரகுப்தன் கணக்கு சூப்பர், சூப்பர் கம்ப்யூட்டருக்கும் மேல்!

yama

இந்துக்கள் ஏன் மரணதேவதையை வழிபடுகிறார்கள்?

மஹாபாரதத்தில் மிகவும் சுவையான கதை ‘’ஒரு பேயின் கேள்விகள்’’ ( யக்ஷப் ப்ரஸ்னம்) என்ற பகுதியாகும். இதில், ‘’உலகிலேயே அதிசயமான விஷயம் என்ன?’’ என்ற கடைசி கேள்விக்குப் பதில் கொடுத்த தருமன் ‘’ உலகில் தினமும் எவ்வளவோ பேர் இறந்து போகிறார்கள். அதைப் பார்த்த பின்னரும் எல்லோரும் தினமும் வாழப் போகிறோம் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறார்களே’’ என்பதாகும். ஆக நாம் எல்லோரும் எந்தக் கணத்திலும் இறக்கலாம் என்பதை நினைவு படுத்தவே இப்படி தினசரி ய்ம தர்மன் வழிபாடு போலும்.

திருவள்ளுவரும் மஹாபாரத ஸ்லோகத்தை ‘’நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு’’ (குறள் 336) என்ற குறளில் தந்துள்ளார்.

மற்றொரு காரணமும் உண்டு. இது கார்களில், வண்டிகளில் உள்ள ‘’ஷாக் அப்சார்பர்’’ போன்றது. குழந்தைகள் பிறக்கும் போது மகிழும் மனிதன், ஒரு உறவினர் இறக்கும்போது,உலகமே பறிபோய்விட்டது போல மயங்கி பறிதவிக்கிறான். இறப்பும் ஒரு இயற்கை நிகழ்வே என்பதை மறந்து விடுகிறான்.  தினமும் மரண தேவனை நினைத்து வழிபட்டால் அதுவே  ‘’குஷன் மெத்தை’’ போல செயல்படும். மரண பயம் நீங்கும். நமது ஆயுளும் நூறு ஆண்டு நீடிக்கும். ஏனெனில் பிராமணர்களின் மதிய வேளை சந்தியாவந்தனத்தில் ‘’நூறாண்டுக்காலம் வாழ்க, நோய் நொடியில்லாமல் வாழ்க’’ (பஸ்யேமஸ் சரதஸ் சதம், ஜீவேம சரதஸ் சதம், நந்தாம சரதஸ் சதம்  என்ற மந்திரமும் வருகிறது. இதையே கண்ணதாசன் திரைப்படத்தில் பாடி இருக்கிறார்.

 

யமனைப் பற்றிய சில சுவையான குறிப்புகளையும் காண்போம்:

1.யமன் தென் திசைக்கு அதிபன். யமன் பற்றி உலகிலேயே பழமையான மத நூலான ரிக் வேதத்திலும் வருகிறது. யம என்ற வார்த்தைக்கு இரட்டையர் என்ற பொருளும் உண்டு. அவனுடன் பிறந்தவள் யமி.

2.யமன் தான் உலகில் இறந்த முதல் மனிதன் என இந்துமத நூல்கள் பேசும். யமனுக்கு உதவி செய்ய ஒரு கணக்குப் பிள்ளை உண்டு. அவன் பெயர் சித்திர குப்தன்.

3.யமனிடம் இரண்டு நாய்கள் உண்டு அதன் பெயர் சரமா. அதற்கு ஒவ்வொன்றுக்கும் நான்கு கண்கள்.

4.யமனுடைய மனைவியர்  பெயர்கள் ஹேமமாலா, சுசீலா, விஜயா.

5. யமனுக்குப் பல கோவில்களும் தனி சந்நிதிகளும் இருக்கின்றன.

6.யமன் மிகவும் நியாயமானவன். அவரவர் புண்ணிய பாபத்தால் கிடைப்பதைப் பாரபட்சமின்றி கொடுப்பதால் அவனுக்கு தர்மராஜன் என்று பெயர்.

7.யமனுடைய அப்பா பெயர் விஸ்வவத். இதனால் யமனை வைவஸ்வதன் என்றும் அழைப்பர். அம்மா பெயர் சரண்யு.

8. இவன் கருப்பன் என்பதால் ‘’நீலாய’’ என்றும் அழைப்பர்.

யமனுடைய வாஹனமும் கருப்பு— எருமை!

9.யமன் கையில் உள்ள ஆயுதத்தை கணிச்சி என்று சங்கத் தமிழ் இலக்கியங்கள் பகரும். அவனுடைய கையில் பாசக் கயிறும் இருக்கும்.

10. யமனுடைய ‘பெர்சொனல் அஸ்ஸிஸ்டன்ட்’ சித்திர குப்தனின் கையில் இருக்கும் ரெஜிஸ்டருக்குப் பெயர் ‘’அக்ர சந்தனி’’.

ஆக, ஆரிய யமனும் இல்லை, திராவிட யமனும் இல்லை; ஒரே ஒரு யமன் தான்! அவன் இந்தியாவையும் இந்துமதத்தையும் சீர்குலைக்க எண்ணுவோரின் உயிர்குடிக்கும் இந்திய யமன்!!

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்தக் கட்டுரையை வேறு எங்காவது வெளியிடுகையில் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ அல்லது பிளாக் பெயரையோ வெளியிட்டு தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டுகிறேன். தமிழுக்குத் துரோகம் செய்யாதீர்கள். தமிழ்த் தாய் பொறுக்கமாட்டாள்.)

Pictures are taken from various websites;thanks. contact swami_48@yahoo.com

சோழர்கள் தமிழர்களா?

SibiBorobudur

Sibi Story in sculptures, Borobudur, Indonesia.

By London Swaminathan

தமிழ் நாட்டை ஆண்ட சேர, சோழ, பாண்டியர்கள் ஆகிய மூவேந்தர்களும் குறைந்தது 2500 ஆண்டுகளாக வரலாற்றில் இடம்பெறுகிறார்கள். போதாயனர், காத்யாயனர், வால்மீகி, வியாசர், அர்த்தசாஸ்திரம் எழுதிய சாணக்கியர், மாமன்னன் அசோகன், கலிங்க மன்னன் காரவேலன், இலங்கையின் மஹாவம்சம், கிரேக்க தூதன் மெகஸ்தனீஸ், காளிதாஸ் முதலிய பலராலும் பாராட்டப்பட்டவர்கள்.

 

1.தமிழ் இனத்தின் வயது என்ன?, 2.சுமேரியாவில் தமிழ்ப் பறவை, 3.தமிழ்-கிரேக்க தொடர்பு 4. திராவிட ராணி கி.மு.1320 (5) தமிழ் பூதமும் கிரேக்க பூதமும் 6. வியட்நாமை ஆண்ட பாண்டிய மன்னன் முதலிய பல கட்டுரைகளில் ஏற்கனவே தமிழ் இனத்தின் பழமையை, பெருமையை விளக்கிவிட்டேன்.

 

சேரர்களுக்கு முன்பாக பாண்டியர் பெயரும் சோழர் பெயரும் அடிபடுகின்றன. எல்லோரும் வடபுல மன்னர்களுடன் சொந்தம் பந்தம் கொண்டாடினாலும் சோழர்கள் பற்றிய செய்திகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. பிற்காலச் செப்பேட்டிலும், கல்வெட்டுகளிலும் மட்டும் இச்செய்தி வந்திருந்தால் இதைப் பலரும் வெறும் புகழுரை என்று ஒதுக்கி இருப்பார்கள். ஆனால் சங்கத் தமிழ் இலக்கியத்தின் பழமையான பகுதி என்று கருதப்படும் புறநானூற்றில் இச் செய்தி ஒன்றுக்கும் மேற்பட்ட புலவர்களால் பாடப்படுவதால் இதில் உண்மை இருக்கவேண்டும்.

(ஆரிய திராவிட வாதம் பேசும் பேதிலிகளுக்குப் புறநானூறும் ஏனைய சங்க இலக்கிய நூல்களும் தரும் பதில் இதோ):

 

சோழர்களின் மூதாதையர்கள் இந்தியாவின் வடக்கு, வடமேற்குப் பகுதில் இருந்து வந்தவர்கள்என்று தோன்றுகிறது. தமிழர்களின் ஆட்சி அவ்வளவு தூரம் பரவியிருந்தது என்று சொல்ல முயலலாம். ஆயினும் பெயர்கள் எல்லாம் சம்ஸ்கிருதத்தில், புராணத்தில் உள்ள மன்னர் பெயர்களாக இருக்கின்றன. பாண்டவர்களின் சந்திரகுலத்துடன் பாண்டியர்கள் சொந்தம் கொண்டாடுவது போல இவர்கள் ஸ்ரீ இராமனின் சூரிய குலத்துடன் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

புறநானூற்றின் பாடல் 37, 39, 43, 46, 228 ஆகியவற்றில் சோழர்களின் முன்னோடியாக சிபிச் சக்ரவர்த்தி கூறப்படுகிறான். சிபிச் சக்ரவர்த்தியின் கதை புராண, இதிஹாசங்களிலும் பவுத்த ஜாதகக் கதைகளிலும் வருகிறது. ஒரு புறாவுக்காக தன்னையே தராசில் நிறுத்தவன் அவன். தியாகத்தின் சின்னம் அவன். மஹாபாரதம் வன பர்வத்தில் வரும் (அத்தியாயம் 200) வரும் சிபி- கழுகு, புறாக் கதையை சங்க இலக்கியம் அப்படியே கூறுகிறது.

chola-flag-2

Choza’s Tiger Flag

சிபியின் வழித்தோன்றல் என்பது சம்ஸ்கிருதத்தில் ‘சைப்ய’ என்று வரும். அதைத் தமிழில் செம்பியன் என்று தமிழ்படுத்தினர். அகநானூறு பாடல் 36, நற்றிணைப் பாடல் 14 ஆகியவற்றில் சோழர்கள் செம்பியன் என்றே அழைக்கப்படுகிறான். வடமொழி ஆசிரியர்கள் தண்டி, வராஹமிகிரர் ஆகியோரும் சோழர்களை சிபியின் குடியினராகவே கருதுவர். அமராவதி, நாகார்ஜுனகொண்டா, பர்ஹுத், இந்தோநேசியாவில் போரோபுதூர் புடைப்புச் சிற்பங்களில் சிபியின் கதைகள் சித்திர வடிவம் பெற்றன.

 

சிபி குலத்தை ரிக்வேதமும் ,ஐதரேய பிராமணமும் குறிப்பிடுகின்றன. குறைந்தது 3500 ஆண்டுக்கு முந்தியவர்கள் சிபி குலத்தினர். பஞ்சாபில் ஜீனாப் நதிக்கரையில் சிபிபுரம் உள்ளது. இதைத் தான் பாணினி சிவபுரம் என்று குறிப்பிட்டதாகவும் சில அறிஞர் கருதுவர். சிபிகள் செய்த கண் தானத்தை புத்த ஜாதகமும் அவன் வேள்விகள் இயற்றி சொர்க்கம் சென்றதை மஹாபாரத ஆதிபர்வமும் விளக்கும்.

 

மேலும் பல வியப்பான செய்திகள்

அகத்திய முனிவரின் ஆணையை ஏற்று, தொடித்தோள் செம்பியன் என்ற சோழன், 28 நாள் இந்திர விழாவினை ஏற்பாடு செய்ததாக மணிமேகலை காப்பியத்தில் காணலாம் (1-1-10). அவன் சிவபெருமான் போல அசுரர்களின் மூன்று ஆகாயக் கோட்டைகளத் தகர்த்ததை நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் தருகிறார் (தொல். பொருள் 102 உரை). புறநானூறும் (பாடல் 39) சிறுபாணாற்றுப்படையும் (81-82), சிலப்பதிகாரமும் (29-17) இதையே கூறும்.

 

சிலப்பதிகாரம், மணிமேகலை முதல் உள்ள இலக்கியங்கள் அனைத்தும், கல்வெட்டுகள், மெய் கீர்த்திகள், செப்பேடுகள் அனைத்தும் சோழர்களின் சூரியகுலத்தைப் போற்றிப் புகழ்கின்றன.

 

மாந்தாதாவின் மகனான முசுகுந்தன் என்னும் சோழன் இந்திரனின் தலைநகரான அமராவதியைக் அசுரரிடமிருந்து காத்தான் என்றும் அதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான் காவல் பூதமும் ஐவகை மன்றமும் அனுப்பிவைத்தான் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது (5-65/67; 6-7/17)

 

புராண, இதிஹாசங்களில் சிபிச் சக்ரவர்த்தி சூரிய குல மன்னனாகக் காட்டபடவில்லை. இதில் வியப்பு ஒன்றுமில்லை. சூரியகுல, சந்திரகுலக் கலப்புத் திருமணத்தில் எதுவும் சாத்தியமே.

வரலாற்றுப் பேரறிஞர், தொல்பொருட் துறை நிபுணர் டாக்டர் இரா.நாகசாமி எழுதிய புத்தகத்தில் (யாவரும் கேளிர்) பல அரிய செய்திகளைத் தருகிறார்:

சோழ மன்னர்கள் காஸ்யப கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அவர்களுடைய செப்பேடுகளில் இருந்து அறியலாம். காச்யபர், அத்ரி ஆகிய இரண்டு ரிஷிகளின் பெயர்களும் அவர்களுடைய குடி முதல்வர்களாகக் குறிக்கப்பட்டுள்ளன.

sibi colour

சோழ மன்னர்கள் திலீபன், அரிச்சந்திரன், மாந்தாதா, முசுகுந்தன், நாபாகன், காகுத்தன், பகீரதன், தசரதன், ராமன் முதலியோர் தங்கள் குலத்தவர் என்று கூறிக்கொள்வதை கன்யாகுமரிக் கல்வெட்டும், திருவாலங்காட்டுச் செப்பேடும், கலிங்கத்துப் பரணியும், மூவர் உலாக்களும் கூறுவதைக் காணலாம்.

இமயத்தில் சின்னம் பொறித்தது, மஹாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு உதவியது, இந்திரனுக்குச் சமமாக ஆசனத்தில் அமர்ந்தது ஆகியவற்றை மூவேந்தர்களும் தாங்கள் செய்ததாகக் கூறிக்கொள்கின்றனர்.

மாந்தாதா என்ற சோழன் ஒரே துறையில் புலியும் மானும் நீருண்ணும்படி பகை நீக்கி ஆண்டான் என்றும், ஒரு சோழன் உத்தரகுரு என்னும் போகபுரியை ஆண்டான் என்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன.

 

ஒருமன்னன் குட மலையை அறுத்து பொன்னி நதியக் கொண்டுவந்தான் என்றும் இன்னொருவன் மேல்கடல் நீரைக் கீழ்க்கடலில் விட்டான் என்றும் நாபாகன் என்ற சோழன் முதுமக்கள் தாழியை வழக்கத்தில் கொணர்ந்தான் என்றும், மனுநீதிச் சோழன் தனது மகனையே தேர்க்காலில் இட்டதையும், நரைமுடி தரித்து நீதி வழங்கியதையும் கல்வெட்டுகளும் இலக்கியங்களும் கூறும்.

 

கரிகால் சோழன் பருந்து (கழுகு) வடிவ யாக குண்டம் அமைத்து வேள்வி இயற்றியதையும் பருவக் காற்றைப் பயன்படுத்தி கப்பல் விட்டதையும் ஏற்கனவே எழுதிவிட்டேன் கீழே காண்க.

இந்தியர்களை ஆரியர், திராவிடர் என்று இனம் பிரித்து சூது வாது புரிந்தவர்களுக்கு புறநானூறு நல்ல சூடு போடுகிறது.

உதவிய நூல்கள்: 1.சங்கத் தமிழ் இலக்கியம், 2.இரு பெரும் காப்பியங்கள் 3.இந்தியப் பண்பாடும் தமிழரும்— எழுதியவர் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எஸ். இராமகிருஷ்ணன்  4. யாவரும் கேளிர்— தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி

 

Please read my earlier posts:

1.Indra festival in the Vedas and Tamil Epics 2.Bull fighting: Indus valley to Spain via Tamil Nadu 3.Karikal Choza and Eagle shaped Fire Altar 4.Why do British judges follow a Tamil king? 5.Flags : Indus Valley- Egypt Similarity 6.தமிழ் முனிவர் அகஸ்தியர் 7.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 8.கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி—எகிப்து அதிசிய ஒற்றுமை 9.வீரத் தாயும் வீர மாதாவும் 10.Veera Matha in the Vedas and Tamil Literature 11.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும் 12.கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம் 13.பருவக்காற்றைக் கண்டுபிடித்தது தமிழனா?  14.பிரிட்டிஷ் நீதிபதிகள் நரை முடி தரிப்பது ஏன்? 15.தமிழ் இனத்தின் வயது என்ன? 16.தொல்காப்பியர் காலம் தவறு ( ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரைகள்).17. Pandya king who Ruled Vietnam.+ 560 articles about Indian Culture.

Pictures are taken from various sites;thanks; contact swami_48@yahoo.com

sibi

 

Sibi in modern Pakistan

தொல்காப்பியத்தில் வருணன்

Image

தமிழில் கிடைத்த பழைய நூல் தொல்காப்பியம். பெரும்பாலான அறிஞர்கள் இதை கி.மு அல்லது கி.பி. முதல் நூற்றாண்டில் வைக்கின்றனர். கார்த்திகேசு சிவதம்பி, வையாபுரிப் பிள்ளை போன்றோர் போல நானும் இதை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வைத்துள்ளேன். (தொல்காப்பியர் காலம் பற்றிய எனது (ஐந்து பகுதிகள்) கட்டுரையில் காண்க).

ரிக் வேதத்தில் வருணன் மிக முக்கியமான கடவுள். உலகம் ஒரு சட்ட நியதிக்குள் இயங்க உதவுபவர் வருணன். மேலும் கடல், நீர் நிலைகள், மழை ஆகியவற்றுக்குப் பொறுப்பானவர். இந்திரன் கிழக்கு திக்குக்கு அதிபதி, வருணன் மேற்கு திக்கிற்கு அதிபதி. மித்ரன் என்ற ஒளிக் கடவுளுடன் இவர் ஜோடியாக வைக்கப்படுகிறார். வேத மந்திரங்கள் இவரை மித்ரனுடன் சேர்த்துப் பாடுகின்றன. இது பழந் தமிழர் நம்பிக்கையுடன் மிகவும் பொருந்துகின்றன. வருணனின் வாஹனம் சுறா மீன், முதலை அல்லது கடல் மிருகம்.

 

மித்ரன் வருணன் ஜோடியை அறிஞர்கள் ஒளி/இருள் என்றும் சூரியன்/சந்திரன் என்றும் ஆக்க சக்தி/அழிவு சக்தி என்றும், உற்பத்தி/மறைவு=சூரிய உதயம்/அஸ்தமனம் என்றும், கிழக்கு/மேற்கு என்றும் வியாக்கியானம் செய்கின்றனர். அதாவது ஒரு மின்சார பேட்டரியில் உள்ள பாசிடிவ்/நெகடிவ் போன்றவர் மித்ர- வருணன் ஜோடி.

வருணனின் மகன் தமிழ் முனிவன் அகஸ்தியர். அந்த வகையில் வருணனும் தமிழுக்கு மிகவும் நெருங்கி வந்து விடுகிறார்

தற்காலத்தில் பிராமணர்கள் நாள் தோறும் மூன்று முறை செய்யும் சந்தியா வந்தன மந்திரத்தில் வருண வழிபாடு இருக்கிறது. மழை பெய்யாமல் வறட்சி நிலவும் காலங்களில் வருண ஜபம் என்னும் வேத மந்திரச் சடங்கு நடத்தப்படுகிறது.

 

தொல்காப்பிய பொருள் அதிகாரம் (1-5)

‘’ மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையால் சொல்லவும் படுமே’’

 

தொல்காப்பியர் தனது பொருளதிகார சூத்திரத்தில் கடலும் கடலைச் சார்ந்த நிலமும் ஆன நெய்தல் நில மக்களின் கடவுள் வருணன் என்று சொல்லுவார். அவர்கள் பரதவர் என்று அழைக்கப்படுவர்.

((இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டு கோள்: எனது கட்டுரைகளைத் தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஆனால் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ , அல்லது பிளாக் பெயரையோ தயவு செய்து போட்டு தமிழுக்குத் தொண்டு செய்யுங்கள். தமிழ் எழுத்தாளர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்)).

பட்டினப்பாலை என்னும் நூலில் வருண வழிபாடு பற்றிய சுவையான செய்திகள் கிடைகின்றன; வள்ளுவனும் மறைமுகமாக வருணனைப் புகழ்கிறான்:

Image

‘’ வெண்கூதாளத்துத் தண்பூங்கோதையர்

சினைச் சுறவின் கோடு நட்டு

மனைச் சேர்த்திய வல்லணங்கினான்

மடற்றாழை மலர்மலிந்தும்

பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்

புன்றலை இரும் பரதவர்

பனிதழை மா மகளிரொடு

பாயிரும் பனிக்கடல் வேடஞ் செல்லா

துவவுமடிந்துண்டாடியும்’’ (பட்டினப்பாலை 85-93)

 

பொருள்: பரதவர்கள் சுறாமீனின் கோட்டினை மணலில் நட்டு மலர் மாலை சார்த்தி வணங்கினர். அதில் தெய்வம் ஏறியதாக நம்பினர் பவுர்ணமி நாட்களில் இதைச் செய்வர். பனங்கள்ளையும் நெற்கள்ளையும் அருந்துவர். மீனையும் இறைச்சியையும் கடவுளுக்குப் படைப்பர்.

வாரணம்= கடல் என்ற வடமொழிச் சொல்லும் வருணன்= கடல் தெய்வம் உடன் தொடர்புடையது.

 

மேற்கூறிய சங்க கால பட்டினப் பாலைப் பாடல் ரிக்வேத கருத்துடன் மிகவும் அணுசரணையாக இருக்கிறது: 1. பரதவர் என்போர் ரிக்வேத பரதர்களுடன் தொடர்புடையோராக இருக்கலாம் 2. வருணனின் வாகனமான மகரம் (மீன்/முதலை/சுறா), கடலோர பரதவர் வழிபாட்டில் இடம் பெற்றது 3. வருணன் ஒரு கடல் தெய்வம் என்பது ரிக்வேதத்தில் பல இடங்களில் வருகிறது; தமிழர்களும் கடல் தெய்வமாகவே வணங்கினர் 4. முழு நிலவுக்கும் இரவுக்கும் வருணனுக்கும் உள்ள தொடர்பு வேதத்திலும் உள்ளது. வருணன் என்பவன் சோமனுக்கும் அமிர்த்துக்கும் அதிபதி. சோமன், அமிர்த கிரணங்கள் என்பது சந்திரனுக்கும் சோம பானத்துக்கும் பொருந்தும் 5.தொல்காப்பியரும் வருணன் என்ற அதே வடமொழிப் பெயரைப் பயன்படுத்துகிறார்.. மழை என்பது கடலில் இருந்து மேகமாக உற்பத்தியாகி பூமியில் பெய்கிறது என்ற கருத்து வடமொழி, தமிழ் மொழி நூல்களில் நூற்றுக் கணக்கான இடங்களில் வருகிறது.

 

வள்ளுவன் போற்றிய வருணன்

இந்திரன் என்ற சொல்லைப் பயன்படுத்திய வள்ளுவன் , வருணன் என்ற வேத காலக் கடவுள் பெயரை நேரடியாகப் பயன்படுத்தவில்லை. ஆயினும் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக வான் சிறப்பு என்ற அதிகாரத்தை வைத்து பூசனை, தானம் தவம் என்ற சம்ஸ்கிருத சொற்களால் வர்ண பகவானை வாழ்த்துகிறான் வள்ளுவன் :

‘’சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு’’ (குறள் 18)

‘’தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்

வானம் வழங்காது எனின்’’ (குறள் 19)

பொருள்: வானம் வறண்டு மழை இல்லாது போனால், இந்த உலகில் வானோர்க்கு எடுக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள்தோறும் செய்யும் பூஜையும் நடைபெறாது;

 

மழை இல்லாது போனால், இந்த பரந்த உலகத்தில் தானம் கொடுத்தலும், தவம் செய்தலும் இல்லாமல் போகும்.

மேற்கூறிய இரண்டு குறட்பாக்களில் வள்ளுவன் கூறும் பூஜை என்ன? விழா (க்கள்) என்ன? வருண வழிபாடு, இந்திர, வருண விழாக்கள் என்றால் பொருத்தமாகவே இருக்கும். கடவுள் வாழ்த்துக்கு அடுத்தபடியாக வான் சிறப்பை வைத்ததற்கு இதை விட வேறு விளக்கம் என்ன இருக்க முடியும். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இன்றும் இந்திர விழா பல பெயர்களில் ( நீர் விழா, மழை விழா) கொண்டாடப் படுகிறது. தமிழில் பரிபாடலில் மேலும் பல நீர் விழாச் செய்திகள் உள்ளன.

தமிழர் கலாசாரம் வேறு, ஆரியர்-திராவிடர் வேறு என்பவர்க்கு தொல்காப்பியரும் வள்ளுவரும் கொடுக்கும் பதிலைத் தவிர வேறு பதிலும் தேவையா?

Image

Slavs in Russia and Ukraine worship Varun as Perun

என்னுடைய முந்தைய கட்டுரைகளையும் காண்க:

1.தொல்காப்பியத்தில் இந்திரன்

2.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும்

3.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்

4.அதிசயத் தமிழ் முனிவர்/புலவர் வால்மீகி

5.சோம பானமும் சுரா பானமும்

6.வீரத்தாயும் வீர மாதாவும்

7.சிந்து சமவெளியில் பேய் முத்திரை + 570 ஆராய்ச்சிக் கட்டுரைகள்

 

சிவனுக்கும் தமிழர்களுக்கும் மரங்கள்- சுவீகார புத்ரர்கள்!

Deodar means Tree of Gods

 

Picture of Deodar; Deodar means Tree of the Gods.

குழந்தை இல்லாதோர் மற்றவர்களின் குழந்தைகளை தத்து எடுத்தலையும் சுவீகாரம் எடுப்பதையும் நாம் அறிவோம். சிவ பெருமானும், தமிழர்களும் மரங்களை தத்து எடுத்து புத்திரர்களாக வளர்த்ததைப் பலர் அறியார். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளாலார் பெருமான் நமது முன்னோர்களின் கருத்தைத்தான் மீண்டும் சொல்லி இருக்கிறார்.

 

2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உலகப் புகழ் பெற்ற வடமொழிக் கவிஞன் காளிதாசன் ஒரு புதிய செய்தியைக் கூறுகிறார். சிவ பெருமான் ஒரு தேவதாரு மரத்தை மகனாக வளர்த்தார் என்று. இதே போல நற்றிணைக் கவிஞன் ஒருவன் ஒரு தமிழ்ப் பெண், அவளுடைய மகளாக வளர்த்த ஒரு புன்னை மரம் பற்றிய சுவையான செய்தியைக் கூறுகிறார். மேலே படியுங்கள்:

 

((இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டு கோள்: எனது கட்டுரைகளைத் தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஆனால் லண்டன் சுவாமிநாதன் எழுதியது என்றோ , அல்லது பிளாக் பெயரையோ தயவு செய்து போட்டு தமிழுக்குத் தொண்டு செய்யுங்கள். தமிழ் எழுத்தாளர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்)).

 

ரகுவம்ச காவியத்தில் காளிதாசன் கூறுகிறான்:’’அதோ அந்த தேவ தரு மரத்தைப் பார். அதை சிவ பெருமான் மகன் போல வளர்த்தார். பார்வதி தேவி தனது இரண்டு ஸ்தனங்களால் முருகப் பெருமானுக்கு எப்படி பால் ஊட்டினாரோ அதே போல இந்த மரத்துக்கும் தங்கக் குடங்களால் தண்ணீர் வார்த்தார். ஒரு நாள், ஒரு காட்டு யானை அதன் தலையை இதன் பட்டையில் உரசவே அது உதிர்ந்தது. தேவிக்கு மிக வருத்தம். முருகப் பெருமானை அசுரர்கள தாக்கி காயப் படுத்தியது போல அவர் வருத்தப் பட்டார்’’.–(ரகு.2–36/39)

 

இதே கருத்தை மேக தூதத்திலும் (பாட்டு 74) கூறுவார்: ‘’ஏ மேகமே! அங்கே ஒரு மந்தார மரத்தைப் பார்ப்பாய். என் மகன் போல வளர்த்த மரம். இப்போது அதுப் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும். என் காதலி அதனை எளிதாகப் பறிக்கும் அளவுக்கு அது வளைந்து தொங்கும். (இந்தக் கருத்து நற்றிணைப் பாடல் 170-இல் எதிரொலிப்பதைக் கீழே கொடுத்திருக்கிறேன்).

 

காளிதாசனின் உலகப் புகழ்பெற்ற நாடகம் சாகுந்தலத்தில் முழுக்க முழுக்க தாவர, பிராணிகள் அன்புச் செய்திகளைக் கண்கிறோம். மல்லிகைக் கொடிகளை சகுந்தலை, தனது சகோதரி என்று அழைக்கிறார். ஒரு மல்லிகைக் கொடிக்கு ‘வனஜோத்ஸ்னி’ என்று பெயரும் சூட்டுகிறார். மான்களையும் சகோதரி என்றே அழைக்கிறார்.  சாகுந்தலம் நாலாவது காட்சி முழுதும் இந்த வசனங்கள் வருகின்றன. ஓரிடத்தில் தோழி சொல்கிறார்: ‘’அதோ பார். மாதவி பூப் பந்தல். உனது தந்தை கண்வ மகரிஷி உன்னை வளர்த்தது போல அன்பாக ஊற்றி வளர்த்தாரே, நினைவு இருக்கிறதா?’’

 

குமார சம்பவம் (2-55) என்னும் காவியத்தில் விஷ மரத்தையும் கூட யாரும் அடியோடு வெட்ட மாட்டானே எனற வசனமும், சாகுந்தலத்தில் (4-1) மல்லிகைக் கொடியில் எந்த மகா பாவியாவது வெந்நீரை ஊற்றுவானா? என்ற வசனமும் வருகிறது. இவை அத்தனையும் தமிழிலும் இருக்கின்றன.

punnai-tree

Picture of Punnai Tree

தமிழ் மரம் ஒரு தங்கை

நற்றிணையில் (172) ஒரு அற்புதமான பாடல். எழுதியவர் பெயர் பாடற்குறிப்பில் இல்லை:

‘’யாம் தோழிமாரோடு விளையாடும்போது வெண்மையான மணலில் புதைத்து மறந்து கைவிட்ட புன்னை மர விதை முளைத்து வெளிவந்தது. அதற்குத் தேன் கலந்த இனிய பாலை ஊற்றி வளர்த்தோம். அது வளர்ந்து மரமாகியது. அப்போது அன்னை, ‘’நும்மிலும் சிறந்தது புன்னை; அது நும் தங்கையாகும்’’ என்று புன்னையது சிறப்பைக் கூறினாள். ஆகையால் புன்னையின் கீழ் உள்ள நிழலில் நும்மொடு அளவளாவலை யாம் நாணுகிறோம்’’.

 

சகுந்தலை சொன்னதை அப்படியே இந்தப் பாடலில் காண்கிறோம். நான் ஏற்கனவே எழுதிய ஏழு கட்டுரைகளில் காளிதாசன், சங்க இலக்கிய காலத்துக்கு முன் , கி.மு. முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று சொன்னதற்கு இது மேலும் ஒரு சான்று.

 

நற்றிணை 230 ஆம் பாடலில், நான் வாடிய பயிருக்கு தண்ணீர் ஊற்றியது போல மகிழ்கிறேன் என்று பாடுகிறான் ஒரு கவி. இன்னொரு பாடலில் மருந்து மரத்தைக் கூட யாரும் முழுதும் வெட்ட மாட்டார்களே என்று வசனம் பேசுகிறான் ஒரு தமிழ்ப் புலவன் (நற்றிணை 226-கணி பூங்குன்றனார்).

தாவரங்கள், பிராணிகள் பால் அன்பு மழை பொழிந்த கடை எழு வள்ளல்கள் பாரியும் பேகனும் உலகிற்கே உதாரணமாகத் திகழ்கிறார்கள். முல்லைக்குத் தேர் ஈந்தான் பாரி. கொழு கொம்பு இல்லாமல் காற்றில் பட படத்தவுடன் அவன் மனமும் படபடுத்தது, பரிதவித்தது. பேகன்,  மழை மேகம் கண்டு ஆடிய மயிலைக் குளிரில் நடுங்குகிறது என்று எண்ணி தனது விலை மிகு சால்வையைப் போர்த்தினான் அன்றோ. இவர்கள் எல்லாம் சகுந்தலையின் சகோதரர்கள் என்றால் மிகையாகா.

 

ராமன், சீதை, கண்ணகி, சகுந்தலை பிரிவைப் பொறுக்க முடியாமல் பிராணிகளும் தாவரங்களும் என்ன என்ன செய்தன என்பது பற்றீ நூற்றூக் கணக்கான உதாரணங்கள் உள. எழுத இடம் போதா.

ரிஷி முனிவர்களைச் சந்திக்க காட்டிற்குள் நுழைந்த அரசர்கள் தொலை தூரத்தில் சேனை சைன்யங்களை நிறுத்திவிட்டு வருவார்கள். இதற்குக் காரணம் கூறும் காளிதாசன், செடி கொடி மரங்களை சேதமுறாமல் தடுக்கவே என்பான் (ரகு 11-52). புறச் சூழல் பாதுகாப்பிலும் மரங்கள் பாதுகாப்பிலும் எத்தனை கவனம்!! இன்று பத்திரிகைகளில் பெரிதாக வரும் விஷயங்களை 2000 ஆண்டுகளுக்கு முன் போகிற போக்கில் கவிதையில் தந்த வடமொழி, தென் மொழிக் கவிஞர்கள், ஒரே நாடு ஒரே சிந்தனை என்ற கொள்கைக்கு வலுச் சேர்ப்பர்.

 

இந்து மதத்தில் மர வழிபாடு முக்கிய இடம் பெறுகிறது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஒரே (பைகஸ்) குடும்பத்தைச் சேர்ந்த ஆல மரம், அரச மரம், அத்தி மரம் ஆகிய மூன்றும் விஷ்ணுவின் அம்சமாகக் கருதப்படுகிறது. சிந்து சமவெளி முதல் பிராமணர்களின் அன்றாட யாகம் சமிதாதானம் ஆகியன முதல் முக்கியத்துவம் பெறும் அரச மரத்தில் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூவரும் இருப்பதாக வட மொழி ஸ்லோகம் கூறுகிறது.

cedus deodara in Kumaon, Himalayas painting at London Kew Gardens

 

Picture of Himalayan Deodars; painting from Kew Gardens, London

மரங்கள் வாழ்க! ’’காடு வளர்ப்போம், நல்ல கலை வளர்ப்போம்’’:-பாரதி

Please read my earlier posts on Kalidasa:

1.Gem stones in Kalidasa and Tamil Sangam Literature

2.Holy River Ganges in Kalidasa and Sangam Tamil Literature

3.Gajalakshmi in Kalidasa and Sangam Tamil Literature

4.Sea in Kalidasa and Sangam Tamil Literature

5. Bird Migration in Kalidasa and Tamil literature

6.Hindu Vahanas in Kalidasa and tamil literature

7.Amazing Statistics on Kalidasa

8.Kalidasa’s age: Tamil works confirm 1st Century BC

9.சங்கத்தமிழ் இலக்கியத்தில் காளிதாசன் உவமைகள்

10. காளிதாசனின் னூதன் உத்திகள்: தமிழிலும் உண்டு

Contact swami_48@yahoo.com; pictures are used from other websites;thanks.

1800 ஆண்டுக்கு முந்தைய தமிழகக் கோவில்கள்

TPK temple silpi

Picture of Tirupparankundram drawn by Silpi from Ananda Vikatan magazine

 

1800 ஆண்டுக்கு முந்தைய தமிழகக் கோவில்கள்

தமிழர்கள் மிகவும் தெய்வ பக்தி உடையவர்கள். திருக் குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்திலேயே பத்து குறள்களில் முத்து முத்தாகக் இறை வழிபாட்டைக் கோர்த்து வைத்துவிட்டார். அது மட்டுமல்ல, பத்து குறள்களில் ஏழு குறள்களில் இறைவனின் பாதங்களில் (தாள், அடி) நமஸ்காரம் செய்தும் எழுதிவிட்டார். உருவ வழிபாட்டுக்குரிய விக்ரகங்கள் அவர் கண் முன்னர் இருந்ததால்தான் இப்படி பாத நமஸ்காரம் செய்யும் 7 குறள்களை எடுத்த எடுப்பிலேயே எழுதிவிட்டார்.

 

இவருக்கு முன்வந்த தொல்காப்பியரோ, வேத கால தெய்வங்களான இந்திரன் (வேந்தன்) வருணன், விஷ்ணு (மாயோன்), ஸ்கந்தன்/ சேயோன் (சிவப்பு நிறமானவன்) ஆகியோரே தமிழர்களின்  தெய்வங்கள் என்று அடித்துச் சொல்லிவிட்டார்.

 

பல பாடல்களில் இறைவனின் வாகனங்களையும், கொடிகளையும் நக்கீரர், காவிரிப் பூம்பட்டிணத்து காரிக்கண்ணனார் ஆகியோர் சித்தரிப்பதால் கட்டாயம் சிலைகளுடன் கூடிய கோவில்கள் இருந்திருக்க வேண்டும். ஐந்து ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை, –காரைக்கால் அம்மையார் முதல் சுந்தரர் வரை– ஊர் ஊராகச் சென்று பாடிய தலங்களே சுமார் 300 தலங்கள் ஆகும். இவர்களுக்கு முன் வாழ்ந்த மாணிக்கவாசகர் கூறும் சில தலங்கள் என்ன வென்றே கண்டுபிடிக்க முடியவில்லை. ஆழ்வார்களும் நூற்றுக்கும் மேலான தலங்களைப் பாடிவிட்டனர். இப்படி 400, 500 இடங்களில் புகழ்பெற்ற கோவில்கள் இருந்து, அவர்களை ஊர் ஊராக பாத யாத்திரை செய்ய வைத்தது என்றால், அந்தக் கோவில்கள் அவர்களுக்கும் முன்னரே பல காலமாக இருந்திருக்க வேண்டும்.

 

சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில் அறு படை வீடுகளைக் காண்கிறோம். பரிபாடலில் தாமரை வடிவில் அமைந்த மதுரை நகரின் மத்தியில் கோவில் இருந்ததைப் படிக்கிறோம். ஆக 1800 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர் வாழ்வில் கோவில்கள் இரண்டறக் கலந்துவிட்டன.

 

இதோ பழந்தமிழ் இலக்கியத்தில் காணப்படும் கோவில் பட்டியல்:

“பிறவா யாக்கைப் பெரியோன் கோவிலும்

அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயிலும்

வால்வளை மேனி வாலியோன் கோயிலும்

நீலமேனி நெடியோன் கோயிலும்

மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்” (சிலம்பு)

 

“ அமரர் தருக் கோட்டம் வெள்யானை கோட்டப்

புகர் வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்

உச்சிக்கிழான் கோட்டம் ஊர்க் கோட்டம் வேற் கோட்டம்

வச்சிரக் கோட்டம் புறப்பணையான் வாழ் கோட்டம்

நிக்கந்தன் கோட்டம் நிலாக் கோட்டம்” (சிலம்பு)

 

 

alagarkoil

Picture of Alagar Koil drawn by Silpi for Ananda Viaktan

 

பூம்புகார் எனப்படும் புகாரில் இருந்த கோவில்கள்:

1.பிறவா யாக்கைப் பெரியோன் கோயில்= சிவ பெருமான் கோவில்

2.அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயில் = முருகன் கோவில்

3.வால்வளை மேனி வலியோன் கோயில் = பலராமன் கோவில்

4.நீலமேனி நெடியோன் கோவில் = கண்ண பிரான் கோயில்

5.மாலை வெண்கொடை மன்னவன் கோயில்= இந்திரன் கோவில்

6.அமரர்தருக் கோட்டம்= கற்பகத் தரு கோட்டம்

7.வெள்யானை கோட்டம்= ஐராவதம்/யானை கோவில்

8.புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம்= பலதேவன்

9.பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டம்= சூரிய தேவன் கோவில்

10.ஊர்க்கோட்டம்= ஊர் காவல் தெய்வமக் கோவில்

11.காமவேள் கோட்டம்= மன்மதன் கோவில்

 

12.வேற்கோட்டம்= முருகன் கோவில்

13.வச்சிரக் கோட்டம்=இந்திரனின் வஜ்ராயுதக் கோவில்

14.புறப்பனையான் வாழ் கோட்டம்= ஐயனார் கோவில்

15.நிக்கந்தன் கோட்டம் = அருகன் கோவில்

16.நிலாக் கோட்டம்= சந்திரன் கோவில்

இவை அனைத்தும் சிலப்பதிகாரத்தில் காணப்படுபவை.

17 முதல் 22 வரை சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையில் அறு படை வீடுகள் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (செந்தூர்), திரு ஆவினன் குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோராடல்(திருத்தணி) , பழமுதிர்ச்சோலை( அழகர் கோவில்)

 

23.மதுரை நகர் கோவில்

மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை

பூவொடு புரையும் சீறுர் பூவின்

இதழகத்தனைய தெருவம் இதழகத்து

அரும்பொகுட்டனைத்தே அண்ணல் கோயில் (பரிபாடல்)

 

பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வெண்குடை மதுரை நகரின் கோயிலை வலம் வரும்போது மட்டும் தாழ்வாக இருக்குமாம். பிராமணர்கள் வாழ்த்தும் போது மட்டும் அவன் தலை தாழுமாம் (புறநானூறு பாட்ல 6, காரிகிழார்)

 

பணியியர் அத்தை நின்குடையே; முனிவர்

முக்கண் செல்வர் நகர்வலம் செயற்கே!

இறைஞ்சுக, பெரும, நின் சென்னி; சிறந்த

நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே! (புறம்.6)

 

இது தவிர கொல்லிப் பாவை முதலிய தெய்வங்கள் பற்றிய குறிப்புகளும், குமரிக் கடற்கரை தெய்வம் பற்றிய குறிப்பும் சங்க இலக்கியத்தில் உள்ளன.

 

கொடிகள் , வாகனங்கள் பற்றிய எனது கட்டுரைகளையும் படிக்கவும்:

1.சங்க இலக்கியத்தில் வாகனங்கள்

2.Flags of Ancient Indian Kings

3.Hindu Vahanas in Kalidasa and Tamil Literature

 

(இலக்கியத் திருடர்களுக்கு அன்பான வேண்டுகோள்: இந்தக் கட்டுரையை வேறு இடத்தில் பயன்படுத்துவதானால் ‘பிளாக்’-கின் பெயரையோ கட்டுரையாளர் (லண்டன் சுவாமிநாதன்) பெயரையோ வெளியிடுங்கள். பெயர் இல்லாமல் தங்கள் கட்டுரை போல வெளியிடுவது–தமிழுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும் செய்யும் துரோகம் ஆகும்)