கண்கள் இருந்தும் காணாதார்- திருவாசகக் கதை! (Post No.3484)

Written by London swaminathan

 

Date: 26 December 2016

 

Time uploaded in London:-  7-12 AM

 

Post No.3484

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

தேனினும் இனிய திருவாசகத்தில் மாணிக்க வாசகர் பாடுகிறார்:-

 

உண்டோ ஒண்பொருளென்றுணர் வார்க்கெலாம்

பெண்டி ராணலி யென்றறி யொண்கிலை

தொண்டனேற்குள்ள வாவந்து தோன்றினாய்

கண்டுங் கண்டிலேன் என்ன கண் மாயமே!

—-திருச்சதகம் 42, திருவாசகம்

 

பொருள்:-

ஒப்பற்ற ஒளிவடிவான முதற்பொருள் உண்டு என்று அறிந்தோருக்கும் நீ ஆணா, பெண்ணா, அலியா என்று துணிந்து அறிய முடியவில்லை. ஆனால் அடியேனுக்கு காட்சி தந்தாய்; அப்படி இருந்தும் என்னுடைய அறியாமையினால் உன்னைக் கண்டும் காணதவன் போல் இருந்துவிட்டேன்; இது என்ன வகை கண் மயக்கமோ!

 

சில் நேரங்களில் நாம் ஒருவரையோ, ஒரு பொருளையோ கண்டாலும், கவனம் வேறு புறம் இருந்தால் அதை உணர மாட்டோம். இறைவன் எங்கும் உளன். ஆயினும் அவனைக் காணும் பக்குவமும் அதிர்ஷ்டமும் நமக்கு வரவேண்டும்.

 

இதற்கு திருவாசக உரைகாரர்கள் ஒரு கதை சொல்லுவர்:-

 

ஒரு ஏழை நடந்து போய்க்கொண்டிருந்தான். அப்போது பார்வதியும் பரமசிவனும் அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்தனர். ஒரு ஏழையைக் கண்டால் தாயின் உள்ள உருகத்தானே செய்யும்? சிவபெருமானை கேள்வி கேட்கத் துவங்கினார் பார்வதி:

ஐயோ பாவம், இந்த ஏழைக்கு மனம் இரங்கி ஏதேனும் கொஞ்சம் பணம் தரக்கூடாதா?

சிவன் சொன்னார்: அதற்கு காலமும் சூழ்நிலையும் இடம்தரவில்லையே; அவனுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இவ்வளவு நேரம் எல்லாம் கிடைத்திருக்குமே என்றார்.

பார்வதி விடவில்லை; சிவ பெருமானை நச்சரித்தார்.

அன்பே, ஆருயிரே! உன் சொல்லை நான் என்றாவது தட்டியதுண்டா? என்று சொல்லி சிரித்துக் கொண்டே அவன் முன்னால் ஒரு  தங்கக் காசு மூட்டையைத் தூக்கி எறிந்தார். சற்று முன்வரை முழித்துக் கொண்டு நடந்த அந்த மனித்தனுக்கு அப்போதுதான் ஒரு திடீர் யோசனை — விபரீத யோஜனை தோன்றி இருந்தது.

 

உலகில் பலருக்குக் கண் இல்லையே; அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று நாமும் செய்து பார்ப்போம் என்று கண்களை இறுகி மூடிக்கொண்டு சென்றான். பரமசிவன் அவன் வழியில் போட்டிருந்த தங்கக் காசு மூட்டை அவன் காலில் இடறியது. சீ, சீ, கண்ணில்லாதோர் வழியில் இப்படி மூட்டை இருந்தால் என்ன கஷ்டப்படுவர் என்று கண்களை மூடியவாறே அதை ஒரு எத்து எத்திவிட்டுச் சென்றான்.

பார்வதிக்கோ ஒரே வருத்தம்; பரமசிவனுக்கோ ஒரே சிரிப்பு.

இதுதான் மாணிக்க வாசகரின் நிலையும்; நீ என் முன் காட்சி அளித்த போது உன்னை உணரவில்லையே! கண்டும் கண்டிலேன் என்ன கண் மாயமோ? என்று வியக்கிறார்.

 

உண்மையில் மாணிக்க வாசகர் இறைவனைக் கண்டவரே. அவர் இப்படிப் பாடுவது எல்லாம் நம்மைப் போன்ற கண்ணிருந்தும் குருடர்களாய் இருப்பவரை மனதிற் வைத்துதான்.

 

ஒருவன் கோவிலுக்குச் சென்றான். இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து தீவாரதனை நடந்து கொண்டிருந்தது. எல்லோரும் அந்த அரிய காட்சியினைக் கண்டு பரவசம் அடைந்து கண்களை அகல விரித்துப் பார்த்துப் பரவசப்பட்டனர். ஒருவர் மட்டும் அதீத பக்தியினால் கண்களை மூடிக்கொண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டு மூர்த்திக்கு முன்னே நின்றார். இவரது கவனக் குறைவைக் கண்ட ஒரு ஜேப்படித் திருடன், அவருடைய பையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு நழுவிவிட்டான். அடடா, கண்ணிருந்தும் குருடனாக இருந்தேநே என்று அவர் வருந்தினார். இதுதான் நம்முடைய நிலை!! கடவுள் கண் முன் தோன்றினாலும் அந்த நேரத்தில் கண்ணை மூடிக்கொண்டு வாய்ப்பை நழுவ விடுவோம்.

 

இறைவனை அனுதினமும் வழிபடுவோருக்கு இத்தகைய கஷ்டங்கள் வராது.

 

 

–Subham—

 

 

அழகியின் ஆசையும் கோடீஸ்வரரின் புத்திமதியும்! (Post No.3483)

Written by S NAGARAJAN

 

Date: 26 December 2016

 

Time uploaded in London:- 5-42 am

 

Post No.3483

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

பாக்யா வார இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

 

அழகியின் ஆசையும் கோடீஸ்வரரின் புத்திமதியும்!

 

ச.நாகராஜன்

 

சில வருடங்களுக்கு முன் தன்னைப் பேரழகி என்று அழைத்துக் கொண்ட ஒரு இளம் பெண் தான் உலகின் மிகச் சிறந்த அழகி என்பதால் உலகின் மிகப் பெரிய பணக்காரனை மணந்து கொள்ள விருப்பப்படுவதாகவும் அது நியாயமான ஆசை தான் என்றும் கூறினாள். அதற்கு ஒரு கோடீஸ்வரர் அருமையாக பதில் அளித்தார்.

 

 

பல ஆண்டுகளாக இந்தக் கடிதம் அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்டு வந்தது.

 

இப்போது இண்டர்நெட் யுகம் என்பதால் இந்தச் சம்பவம் ஆண்டுகொரு முறை புதிய ரூபத்தில் வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் எத்தனை முறை படித்தாலும் அழகிகளும் சரி, ஏனையோரும் சரி இதை விரும்பத்தான் செய்கின்றனர்.

அழகி பகிரங்கமாகத் தன் கருத்துக்க்ளைத் தெரிவித்து எழுதிய கடிதம் இது:

 

 

“நான் மிகவும் நியாயமாகச் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். எனக்கு 25 வயது பிறந்து விட்டது. நான் ஒரு பேரழகி. மயக்கும் ஸ்டைலைக் கொண்டவள். விதவிதமான டேஸ்டும் உண்டு. என் அங்க லாவண்யங்களில் மயங்காதோர் நிச்சயம் இருக்க முடியாது.

 

 

ஐம்பது லட்சம் டாலரோ அல்லது அதற்கு மேலுமோ வருடாந்திர சம்பளத்தைப் பெறும் ஒருவரை மணக்க ஆசைப்படுகிறேன். வெறும் பத்து லட்சம் டாலர் சம்பளத்தைப் பெறுபவர் நியூயார்க்கைப் பொறுத்த மட்டில் மத்திய தர வர்க்கத்தினராகவே கருதப்படுகிறார்.

 

 

எனது ஆசை மிகவும் பேராசையான ஒன்று அல்ல. ஐம்பது லட்சம் டாலர் சம்பளம் பெறுகின்ற யாராவது ஒருவர் என்னை மணக்க ஆசைபப்டுகிறீர்களா?

 

 

இதுவரை நான் டேடிங் செய்த வாலிபர்களுள் அதிக பட்சமாக ஒருவர் 25 லட்சம் டாலர்களையே சம்பளமாகப் பெற்றுள்ளார். ஆனால் எனக்கு இது போதுமானதல்ல.

 

ஆகவே நான் சில விஷயங்களைத் தெரிந்து  கொள்ள விரும்புகிறேன். தயவுசெய்து தெரிந்தவர்கள் இதற்கு பதிலை அளியுங்கள்.

 

 

  • நல்ல பணக்கார வாலிபர்கள் எஙகு வருகிறார்கள்? தயவுசெய்து ஜிம், ஹோட்டல், கிளப் என்று சரியான முகவரியைத் தாருங்கள்

 

  • எந்த வயதினரைச் சந்தித்து நான் கவர முடியும்?

 

  • மிகப் பெரிய பணக்காரர்களின் மனைவிமார்கள் ஏன் சுமாரான அழகுடனேயே இருக்கிறார்கள்? நான் சந்தித்த சில பெண்கள் அழகிகளே இல்லை. பார்க்க சுமாராகத் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் மிகப் பெரிய பணக்காரர்களை மண்ந்து கொண்டிருக்கின்றனர்!

 

 

4) எப்படி நீங்கள் உங்கள் வருங்கால மனைவியைத் தீர்மானிக்கிறீர்கள்? உங்கள் கேர்ள்ஃப்ரண்டாக நீங்கள் யாரை எப்படி எதற்காகத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?”

இப்படிக்கு

 

பேரழகி

 

 

ஜே.பி. மார்கன் என்ற பிரபல நிறுவனத்தின் சொந்தக்காரரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கோடீஸ்வரர் பேரழகிக்கு இப்படி பதில் அளித்தார்.

அன்புள்ள பேரழகிக்கு,

 

உனது கடிதத்தை மிகுந்த ஆர்வத்துடன் படித்தேன். உன்னைப் போலவே ஏராளமான இளம் பேரழகிகள் இதே கேள்விகளுடன் இருக்கின்றனர்.

 

உனது நிலையை ஆய்ந்து பார்த்து இங்கே பதில் அளிக்கிறேன். நான் முதலீட்டுத் துறையின் தலை சிறந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி என்பதை நீ நினைவில் வைத்துக் கொள்!

 

எனது வருடாந்திர சம்பளம் நீ விரும்புகின்ற அதே ஐம்பது லட்சம் டாலர் தான்! ஆகவே உனது நேரத்தை நான் வீணடிப்பதாக  நினைக்க வேண்டாம்..

 

 

வணிக நோக்கில் பார்த்தால் உன்னை மணப்பது என்பது ஒரு மோசமான முடிவாகவே இருக்கும். ஏன் என்பதை இங்கே விளக்குகிறேன்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் உனது ‘பேரழகை’ இன்னொருவரின் ‘பணத்திற்கு’ மாற்ற விருப்பப்படுகிறாய்! அதாவது ‘ஏ’ என்பவரின் அழகுக்கு ‘பி’ என்பவர் பணம் தருகிறார்!

மிகச் சரியான பேரம் தான்!

 

என்றாலும் கூட இங்கு ஒரு மிக மோசமான பிரச்சினை எழுகிறது. உனது பேரழகு ஒரு நாள் போய் விடும். ஆனால் எனது பணமோ அசம்பாவிதமாக ஏதாவது நடந்தால் ஒழிய அழியாது.

 

 

உண்மை என்னவென்றால் எனது வருமானம் வருடா வருடம் அதிகரிக்குமே தவிர குறையாது.

 

 

ஆகவே பொருளாதார நோக்கில் பார்த்தால் நான் அதிகரித்துக் கொண்டே போகும் சொத்து. நீயோ தேய்ந்து கொண்டே போகும் ஒரு சொத்து. நீ சாதாரணமாக தேயும் சொத்து இல்லை. பல ம்டங்கு அதிகரித்துத் தேயும் சொத்து. உனது அழகு தான் உனது சொத்து என்றால் அது பத்து வருடங்கள் கழித்து மிக மோசமான நிலையில் அல்லவா இருக்கும்!

 

 

இங்கு வால் ஸ்ட்ரீட்டில் ஒவ்வொரு விற்பனைக்கும்  நிலை எனப்படும் ஒரு பொஸிஷன் உண்டு. உன்னுடன் டேடிங் செய்வதும் கூட ஒரு வகை பொஸிஷன் தான்!

 

வணிக மதிப்பு குறைந்து விட்டது என்றால் பொருளை நாங்கள் உடனே விற்று விடுவோம். அதை நீண்ட காலம் வைத்திருபப்து ஒரு நல்ல முடிவு இல்லை.

 

 

இதே தான் உன்னை  மணப்பதிலும் ஏற்படுகிறது.. ஒரு சிறந்த வணிகர் மோசமாகத் தேய்ந்து வரும் ஒரு சொத்தை ஒன்று லீஸுக்கு விடுவார் அல்லது விற்று விடுவார்.

 

ஐம்பது லட்சம் டாலர் சம்பாதிக்கும் ஒருவர் முட்டாள் இல்லை. அவர் உன்னை டேடிங் செய்ய ம்ட்டுமே விரும்புவார். மணக்க விரும்ப மாட்டார்.

 

 

உனக்கு ஒரே ஒரு சின்ன புத்திமதியைத் தான் என்னால் தர முடியும். ஒரு பெரிய பணக்காரனை மணக்க எந்த வித உபயோககரமான குறிப்பையும் என்னால் தர முடியாது. அதை மறந்து விடு என்பது தான்!

 

நீயே ஐமபது லட்சம் டாலர் சம்பாதிக்கும் வழியை ஆராய்ந்து அதை சம்பாதிக்க முயற்சி செய்! ஒரு பணக்கார முட்டாளைப் பிடிப்பதில் உனது வேலையை இது சுலபமாக்கும்.

இந்த பதில் உனக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன்.

 

அன்புள்ள

ஜே.பி,மார்கன்

 

இன்றளவும் பேராசைப்படும் பேரழகிகளுக்கு பயனுள்ள ஒரு அறிவுரையாக இது அமைகிறது!

**********

.
.

5 ஜோதிகளும், 4 விளக்குகளும்: திருமூலர், அப்பர் தரும் அரிய தகவல் (Post No.3482)

Written by London swaminathan

 

Date: 25 December 2016

 

Time uploaded in London:-  8-09 AM

 

Post No.3482

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

 

உலகிலேயே மிகப் பழைய நூலான ரிக்வேதம் முதல் முதலில் கடவுளை ஜோதி வடிவில் கும்பிட எல்லோருக்கும் காயத்ரீ மந்திரத்தைச் சொல்லித் தந்தது.

 

ஓம் பூர் புவஸ்ஸுவஹ, தத்சவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹீ

தியோ யோநஹ பிரசோதயாத்

–என்ற இந்த மந்திரத்தை எல்லோரும் அறிந்து பயன் பெறுவதற்காக மஹாகவி பாரதியார்

செங்கதிர்த் தேவன் ஒளியினைத் தேர்ந்து தெளிகின்றோம் அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக

—-என்று அழகிய தமிழில் மொழிபெயர்த்து அருளினார்.

 

ரிக்வேதத்துக்குப் பின்னர் வந்த பிருஹத் ஆரண்யக (பெருங்காட்டு) உபநிஷத்தில் தமஸோ மா ஜ்யோதிர் கமய (இருளிலிருந்து என்னை ஒளிக்கு அழைத்துச் செல்வாய்) என்ற மந்திரத்திலும் ஒளி இடம் பெற்றது.

அருணகிரிநாதரோ திருப்புகழில் தீப மங்கள ஜோதீ நமோ நம என்று பாடினார். அவருக்குப் பின்னர் வந்த அருட்பிரகாச வள்ளலாரோ அருட் பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை என்று பாடினார்.

 

அருணகிரிக்கும் வள்ளலாருக்கும் முன்னால் வாழ்ந்த திருமூலர் ஐந்து ஜோதிகள் பற்றிப் பாடினார். திருமூலருக்கும் முன்னால் வாழ்ந்த அப்பரோ நான்கு விளக்குகள் பற்றிப் பாடினார்.

 

இந்த ஐந்து ஜோதி (ஒளி), நான்கு விளக்குகள் பற்றிப் புரிந்துகொள்ள பாரதியாரின்  சில வரிகள் உதவும்:-

 

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடர் எல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்  – என்று பாரதி பாடினார்.

 

நமக்குத் தெரிந்த ஒளி எல்லாம் விளக்கின் மூலம் வரும் ஒளிதான். ஆனால் ஞானிகளுக்கும் கவிஞர்களுக்கும் மனத்தின் ஒளி (உள்ளத்தில் ஒளி), அறிவு ஒளி (ஞானதீபம்) முதலியனவும் தெரியும்.

 

எப்படி சூரியன் சந்திரன் அக்னி (நெருப்பு) ஆகிய மூன்றும் ஒளியை உண்டாக்கி இருளகற்றுகின்றனவோ அதே போல ஞான ஒளி அறியாமை என்னும் இருளை அகற்றும்.  நம்மைப் போன்ற ‘கண்ணிருந்தும் குருடராய்’ வாழ்வோரை வாக்கினிலேயுள்ள ஒளி மூலம் பெரியோர்கள் கரை ஏற்றுவர். பாரதியார் சொன்னதைப் போலவே அவருக்கும் 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தேவார மூவரும் திருவாசகப் பெரியாரும், திருமூலரும் பாடி வைத்தனர்.

 

 

சோதி=  ஜோதி= ஒளி = விளக்கு

 

அப்பர் காட்டும் 4 விளக்கு

 

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது

சொல்லக விளக்கது சோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.

அப்பர் தேவாரம் 4-11-8

 

 

பொருள்

 

1.இல்லத்தினுள் உள்ள விளக்கானது இருளை கெடுப்பது. அதாவது ஒளி தருவது;

 

  1. சொல்லினுள் உள்ள விளக்கானது ஜோதி வடிவில் உள்ளது;

3.பலருடைய மனதில் உள்ள விளக்கு அது எல்லோரும் காண்பது.

 

4.நல்லவர்களின் மனதில் உள்ள விளக்கு நமச்சிவாய” என்ற மந்திரம்

 

நமச்சிவாய என்னும் விளக்கு அறியாமை எனும் இருளை அகற்றும்; சிவஜோதியில் கலக்க உதவும்.

 

 

திருமூலர் சொல்லும் 5 ஜோதி

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்

பிண்ட ஒளியுடன் பிதற்றும் பெருமையை

உண்டவெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது

கொண்டகுறியைக் குலைத்ததுதானே

–திருமூலரின் திருமந்திரம் 1975

 

பொருள்:-

மானிடர் உடம்பைச் சூழ்ந்துள்ள அண்ட ஒளியானது, உலகில் வானமண்டலத்தில் விளங்கும் ஒளியுடன்  — உடலிலுள்ள உட்கருவிகளின்  அறிவால் பிதற்றும்  வீணான பெருமையை விழுங்கி —  உடல் கடந்துள்ள ஆகாய வெளியில் திகழும்  ஒளியினுள்ளே மறைந்தது. அதனால் உடலின் அமைப்புகள் காணாமல் போகும்; உடலும் ஒளியாய்த் திகழும்.

 

ஐந்து வகை ஜோதிகள்:-

 

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் — என்ற மாணிக்க வாசகரின் (திருவாசக/திருவெம்பாவை) பாடலுக்கு உரை எழுதிய திரு தண்டபாணி தேசிகர் மேற்கூறிய திருமந்திரப் பாடலை மேற்கோள் காட்டிப் பின் வருமாறு எழுதுகிறார்:-

 

“சோதியுள் அண்ட ஜோதி, பிண்ட ஜோதி, மன ஜோதி, ஞான ஜோதி, சிவ ஜோதி என ஐந்து என்பார் திருமூலர். அவற்றுள் அண்ட ஒளி ஒவ்வோர் அண்டங்களிலும் உள்ள சூரியன் சந்திரன் அங்கி (தீ), விண்மீன் முதலியன (திருமந்திரம் 1975).

பிண்ட ஒளி உடம்போடு கூடிய உயிர் அறிவின் கண்ணதாய் —  மல நாசம் விளைக்க உபாயமாகும் பசுஞான ஒளி (பாடல் 1985);

உயிரைச் சூரியன், சந்திரன், அனல், கலையாகிய நான்குமாக அறிதல் மனவொளி (பாடல் 1990);

ஞான ஒளி பர நாதத்தின் செயலாய்  வைகரியாதி வாக்குகள் உதயமானதற்கு இடமாய் இருப்பது.

 

Kartikai Deepa on top of Tiruvannamalai

சிவ ஒளி :-

முற்கூறிய நான்கு ஒளிகளும் சிவ ஒளியின் முன், இருள் போல அகன்றொழியும் —  குடங்கள் தோறும் (அதிலுள்ள நீரில்) சூரிய ஒளி தோன்றினும், அந்தக் குடங்களின் வாயை மூடச் சூரிய ஒளி அந்தக் குடங்களில் மட்டும் அடங்கியதாகச் சொல்ல முடியாததுபோல எல்லா உயிர்களிடத்தும் விளங்குவதாயிருப்பது அகண்ட ஒளி எனப்படும்.

 

இம்மந்திரத்தினுள்ளும் அண்ட ஒளி, பிண்ட ஒளி, பிதற்றும் பெருமையை உண்ட வெளியாகிய மனத்துள் விளங்கும் ஒளியாம் மனவொளி, அவ்வொளிக்குள் ஒளியாகிய ஞான ஒளி, அகண்ட ஒளி என்று ஐந்து கூறுதல் காண்க. இவ்வண்ணம் இறைவன் நால்வகை ஒளியினும் சிறந்து, பெரிய ஒளியாகிய சிவஞானமாகிய முதற்படியில் நின்றாரும் அரிதற்கரிதாய் இருத்தலின் அரும்பெருஞ் சோதியை  என்றார் மாணிக்கவாசகர்.

 

திருவெம்பாவை இயற்றப்பட்ட இடம் திருவண்ணாமலையாதலின் திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் தேடி அறிய முடியாத ஒளிப் பிழம்பாக நின்றார் இறைவன் என்னும் தல புராண வரலாற்றை அடக்கிக் கூறியதாக உரைத்தலுமாம்” — என்பது தண்ட பாணி தேசிகரின் உரை.

பாரதியாரும் சோதிமிக்க நவகவிதை என்று பாடுவதைக் காண்க.

 

–சுபம்-

 

 

திரு/ ஸ்ரீ என்ற சொல் ‘ஸர்’ ஆக மாறியது எப்படி? (Post No. 3480)

73ed7-shri

Research Article Written by London swaminathan

 

Date: 25 December 2016

 

Time uploaded in London:-  6-01 AM

 

Post No.3480

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

திரு என்ற சொல்லுக்கு செல்வம், அதிர்ஷ்டம், வளமை, லெட்சுமி, ஒளி— என்று பல பொருள் உண்டு. தற்காலத்தில் பெயருக்கு முன்பாகவும் கோவில், புனித நூல்கள், ஊர்கள், நாடுகளுக்கு முன்பாகவும் இதைப் பயன்படுத்தி வருகிறோம்.

9cf2c-shri-ganesh

மொழி இயல் ரீதியில் பார்த்தால் இது ‘ஸ்ரீ’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து (S=T) வந்தது தெரியும். அது மட்டுமல்ல; இதுவே ஆங்கிலத்தில் ஸர் SIR என்னும் பட்டத்தையும் ஸார் Sir (ஐயா) என்ற சொல்லையும் கொடுத்தது என்பதும் புலப்படும். திரு என்ற சொல்லுக்கு என்ன பொருள் உண்டோ, என்ன என்ன உபயோகம் உண்டோ அது அததனையும் சம்ஸ்கிருதத்திலும் ஸ்ரீ — என்ற சொல்லுக்கும் உண்டு. 3000 ஆண்டுகளுக்கு முன் இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து பிரிந்து இரண்டு பெரிய மொழிகளாக உருவாயின. பிரித்தாளும் சூழ்ச்சியுடைய வெளி நாட்டார் திராவிட மொழிக் குடும்பம் என்ற ஒன்றை செயற்கையாக உருவாக்கி புதுக் கதைகளை எட்டுக்கட்டிவிட்டனர். உலகிலுள்ள பழைய மொழிகளின் சொற்களை தமிழ் அல்லது சம்ஸ்கிருத மூலத்துடன் எளிதில் தொடர்பு படுத்தலாம். ஆங்கிலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள் இருப்பதே இதற்கு எடுத்துக்காட்டு.

 

ஆங்கில நாட்டில் ஒரு காலத்தில் வீரதீரச் செயல்கள் செய்தோருக்கு ‘ஸர்’ என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. இதற்கு 13-ஆம் நூற்றாண்டிலிருந்து சான்றுகள் உள. ஆனால் பிற்காலத்தில் சிறப்பான செய்கைகள் சாதனைகள் புரிந்தோர் அனைவருக்கும் இப்பட்டம் கொடுக்கப்பட்டது. பிரிட்டிஷார் ஆட்சியிலுருந்து வெளியேறி பின்னர் காமன்வெல்த்COMMON WEALTH என்னும் அமைப்பிலுள்ள நாட்டு சாதனையாளருக்கும் இப்பட்டம் வழங்கப்படுகிறது.

 

‘ஸ்ரீ’ என்ற சொல்லின் இடமாறு தோற்றப் (Sri = Sir) பிழைதான் ஸர். நாம் எப்படி மதுரை என்பதை மருதை, குதிரை என்பதை குருதை, வாயில் என்பதை இல்வாய் என்றெல்லாம் மாற்றிச் சொல்ல்கிறோமோ அது போலத்தான் ச்ரீ என்பது ஸர் ஆகியது. இந்தியில் கூட தர்ம என்ற சொல்லை தரம் என்பர்.

 

இதற்கு இன்னொரு முறையிலும் விளக்கம் உண்டு. திரு என்பதே ஸர்(ரு) ஆனது என்று. ‘ச’ அல்லது ‘ஸ்’ என்பத ‘த’ அல்லது ‘த்’ ஆக மாறும். ஆழ்வார்களும் நாயன்மார்களும் வி’த்’தை என்பதை வி’ச்’சை என்பர். த்யூதம் என்ற சொல் தமிழில் சூது எனப்படுகிறது. ஆங்கிலத்தில் எடுகேடியான் EDUCATION என்று எழுதி அதை எடுகேஷன் என்று உச்சரிப்பர். இவ்வாறு நூற்றுக்கணக்கான சொற்கள் டியான் TION என்று எழுதபட்டாலும் ஷன் SION என்றே உச்சரிக்கப்படும் அங்கும் டி என்பது ஷ ஆக மாறியதைக் காணலாம்.

 

ஆங்கிலத்தில் ஸர் SIR  பட்டம் சாதனை புரிந்தோருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. நமது நாட்டிலும் திரு, ஸ்ரீ என்பன எல்லாம் புனித அல்லது சாதனையாளருக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. இப்போழுது சர்வ சாதாரணமாக திருவாளர், திருமதி என்று எல்லோர் பெயர்க்கு முன்னாலும் போடத் துவங்கி விட்டோம். ஸர் என்பதும் ஒருவரை மரியாதையாக ஸார் (ஐயா Sir) என்று கூப்பிடுவதும் தொடர்புடைய சொற்களே. எப்படி நாம் திரு என்பதை மலிவான சரக்காக்கி எல்லோருக்கும் பயன் படுத்துகிறோமோ அப்படி அவர்களும் ஸார் என்பதை பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

74595-sri

அது சரி, உங்கள் இஷடப்படி இப்படி வியாக்கியானம் செய்கிறீர்களே. ஆங்கிலத்தில் ஆக்ஸ்போர்ட் (ETYMOLOGICAL) அகராதி போன்ற நூல்கள் இந்த சொல்லின் பிறப்பு (etymology) பற்றி என்ன கூறுகிறது? என மொழியியல் அறிஞர் வினவலாம். அவர்களும் பேந்தப் பேந்த முழிக்கிறார்கள். இது லத்தீன் மொழியில் அல்லது பழைய பிரெஞ்சு மொழியில் (Latin or Old French) இருந்து வந்திருக்கலாம் என்று ஆயிரம் ஆண்டுக் கதையை மட்டுமே சொல்லுவர். அதற்கு முன் லத்தீனும் அதிலிருந்து தோன்றிய பிரெஞ்சு முதலிய மொழிகளும் சம்ஸ்கிருத மூலத்தை உடையவை என்பதை அவர்களே ஒப்புக்கொள்ளுவர்.  கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையே! என்போர் கதையாக சம்ஸ்கிருதம் என்பதை நேராக ஒப்புக்கொள்ளாமல் அதற்கும் ஒரு மூல மொழி இருந்ததாகவும் அதிலிருந்து பிரிந்ததாக்கும் என்றும் தட்டி மழுப்புவர்!

 

மேலும் அவர்கள் கூறும் பழைய சொற்கள் இன்றும் உலகில் புழக்கத்தில் உள்ளன. அவர்கள் இது செரி SERE என்பதிலிருந்து ஸர் SIR ஆகி இருக்கலாம் என்பர். இன்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஸ்ரீ என்பதை செரி SERE என்றுதான் எழுதுகின்றனர். இன்னும் சிலர் செயுர், சிர், சிரி என்பனவற்றிலிருந்து மருவியிருக்கலாம் என்பர். அதையும் இலங்கையில் காணலாம அவர்கள் ஸ்ரீ மாவோ என்பதை சிறீ (siri) மாவோ என்பர். சிறீலங்கா (SRI LANKA) என்றே எழுதுவர். ஸ்ரீ லங்கா என்றால் ஒளிமிகு இலங்கை என்று பொருள்.

 

இந்தியாவில் ஸர் (SIR) பட்டம் பெற்றோர்:

ரவீந்திரநாத் தாகூர், ஜகதீஷ் சந்திர போஸ், சி.பி.ராமஸ்வாமி அய்யர், அண்மையில் சசின் டெண்டூல்கர் மற்றும் பலர்.

 

திரு அல்லது ஸ்ரீ அடை மொழி உடைய நூல்கள், ஊர்கள் (சில எடுத்துக்காட்டுகள் மட்டும்):-

 

ஸ்ரீ சைலம், ஸ்ரீ நகர், ஸ்ரீ பெரும்புதூர்

d6814-shri-symbol-svg

திருவாரூர், திருவையாறு முதலிய 400 பாடல் பெற்ற சிவ, விஷ்ணு தலங்கள்.

 

திருவாசகம், திருக்கோவையார் முதலிய நூல்கள்

ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம்

 

–Subham–

 

‘தேவர் கோ அறியாத தேவ தேவன்’ யார்? திருவாசகக் கதை (Post No.3478)

Written by London swaminathan

 

Date: 24 December 2016

 

Time uploaded in London:-  5-59 AM

 

Post No.3478

 

 

Pictures are taken from different sources; thanks.

 

 

contact; swami_48@yahoo.com

 

 

திருவாசகத்தில் மாணிக்க வாசகர் பாடுகிறார்: சிவ பெருமானே உன்னை இந்திரனாலும் கண்டு கொள்ள முடியவில்லையே! என்று.

 

தேவர் கோ அறியாத தேவ தேவன்

செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை

மூவர் கோனாய் நின்ற முதல்வன்

பாடல் 30, திருச்சதகம்

இன்னொரு பாட்டிலும் இதே கருத்தை முன்வைக்கிறார்

மேலை வானவரும் அறியாததோர் கோலமே யெனை ஆட்கொண்ட கூத்தனே — பாடல 43, திருச்சதகம்

 

தேவர் கோ= தேவர்களுக்கு அரசனான இந்திரன்; வானவர்=தேவர்கள்

 

 

அது என்ன கதை?

இந்திரன் தலைமையிலுள்ள தேவர்கள் ஒருமுறை அசுரர்களை வென்றவுடன் தலைக் கனம் ஏறிவிட்டது. ஆண்டவன் அருளால் கிடைத்த வெற்றியைத் தாங்களே போராடிக் கிடைத்த வெற்றி என்று யான், எனது என்னும் செருக்கில் (அஹங்காரம் – யான், மமகாரம்/மமதை=எனது) மிதந்தார்கள் இவர்களுடைய இறுமாப்பை வெட்டி வீழ்த்த சிவபெருமான் அவர்கள் முன்னால் ஒரு யக்ஷனாகத் தோன்றினார். யக்ஷன் என்பது மரங்களில் வாழும் பேய். ஒரு பெரிய ஆசனத்தில் உடகார்ந்தார். அது இந்திரலோகத்தில் இந்திரன் அமரும் ஆசானத்தைவிடப் பெரியது. இந்திரனுக்கு யார் இந்த ஆள் என்று தெரியவில்லை. உடனே அக்னியை அழைத்து, நீ போய் யார்?  என்ன? என்று விசாரித்து வா ஏன்று அனுப்பினான்.

 

அக்னி போய் கேள்வி மேல் கேள்வி கேட்ட உடனே யக்ஷன் கேட்டான்:

நீ யார்?

நானா? நாந்தான் அக்னி/நெருப்பு;  எதையும் எரிக்கும் வல்லமை படைத்தவன்.

யக்ஷன் சிரித்துக்கொண்டே, அப்படியா? இதோ ஒரு துரும்பு; இதை எரித்துக்காட்டு என்றான்

அக்னி எவ்வளவு முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை. உடனே இந்திரனிடம் உள்ளதை உள்ளபடியே சொல்லிவிட்டான்.

 

இந்திரன் வியப்புற்று, அப்படியா சேதி? என்று சொல்லி வருண பகவானை அழைத்தான். அவன் அங்கே சென்றபோது அந்த யக்ஷன், துரும்பை நனைக்க முடியுமா  என்று கேட்டான். வருணன் சிரித்துக் கொண்டே துரும்பின் மீது மழையைக் கொட்டுவிப்போம் என்று சங்கல்பித்தான். ஆனால் ஒரு சொட்டுத் தண்ணீரும் விழவில்லை. அவன் பயந்துபோய் இந்திரனிடம் சொல்லவே வாயு பகவனை அனுப்பினான். அவனும் எதையும் நகர்த்த சக்தி இல்லாதவனாக திரும்பி வந்தான்.

 

உடனே இந்திரன் நான் போய் என் வலைமையைக் காட்டுவேன் என்று புறப்பட்டான். முதலில் யக்ஷனைப் பார்த்து யார் என்று கேட்டான. உடனே யக்ஷன் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தார். அப்போது உமையம்மை அவன் முன் தோன்றி, அவனுடைய கேள்விக்குப் பதில் சொன்னாள்:- யக்ஷன் வடிவில் வந்தவர் தனது கணவரே என்றும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்றும் சொன்னாள். அப்போதுதான் தேவர்களின் செருக்கு அழிந்தது. பின்னர் இந்திரனும் சிவனை வழிபட்டு பெரும்பேறு பெற்றான் என்ற கதை கேனோபநிஷத்தில் இருக்கிறது. இது சிவ பெருமானே முழுமுதற் கடவுள் என்பதைக் காட்டும் கதை ஆகும்.

 

இப்போது  திருவாசகப் பாடலைப்  படித்தால் பொருள் நன்கு விளங்கும்:-

 

மேலை வானவரும் அறியாததோர்

கோலமே எனை ஆட்கொண்ட கூத்தனே

ஞால மேவிசும்பே வந்து போங்

காலமேயுனை என்று கொல் காண்பதே (43)

 

பொருள்:-

மேலான பதவிகளில் உள்ள தேவர்களும் அறிய முடியாத ஒப்பற்ற திருவுருவே! அடியேனையும் ஒரு பொருட்டாகக் கருதி ஆட்கொண்டவனே! மண்ணும் விண்ணும் தோன்றி அழிதற்குக் காரணமான கால வடிவானவனே! உன்னை நான் காண்பது எப்போது?

 

தேவர் கோ அறியாத தேவ தேவன்

செழும்பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை

மூவர் கோனாய் நின்ற முதல்வன் மூர்த்தி

மூதாதை மாதாளும் பாகத் தெந்தை

யாவர்கோன் என்னையும் வந்தாண்டு கொண்டான்

யாமார்க்கும் குடியல்லோம் யாதும் அஞ்சோம்

மேவினோம் அவன் அடியார்  அடியாரோடு

மேன்மேலுலுங் குடைந்தாடி யாடுவோமே

பாடல் 30, திருச்சதகம்

பொருள்:-

தேவர்களின் அரசனான இந்திரனும் அறியப்படாத தேவ தேவனும், செழுமையான உலகங்கள் அனைத்தையும் படைத்துக் காத்து அழிக்கும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவர்க்கும் தலைவனாய் நிற்கும் முதற்பொருளும், அம்மூவர் வடிவும் தன் மேனியில் கொண்டவனும், அவர்கட்கு மூதாதையும், உமாதேவியை இடப்பக்கத்தில் வைத்தாடும் எந்தையும் யாவர்க்கும் தலவனாக இருப்பவன் சிவன்; அவன் அடியேனையும் வலிய வந்து ஆட்கொண்டான். ஆகையால் நாம் எவர்க்கும் அடிமையல்ல; எவர்க்கும் அஞ்சோம்; அவனுடைய அடியார்க்கும் அடியார் ஆவோம்; மேலும் மேலும் இந்த ஆனந்த வெள்ளத்துள் மூழ்கிக் குடைந்தாடுவோம்.

(இந்தப் பாட்டிலுள்ள வரிகளை அப்பரும் நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம் என்ற பாட்டில் பயன்படுத்துவது குறிப்பிடத் தக்கது. அப்பர் தேவாரத்தில் மாணிக்க வாசகரின் தாக்கத்தை தனி ஒரு கட்டுரையில் காண்போம்.)

 

–சுபம்–

 

தமிழ் இலக்கியத்தில் ஓம்காரத்தின் பெருமை (Post No. 3461)

Written by London swaminathan

 

Date: 18 December 2016

 

Time uploaded in London:- 10-44 AM

 

Post No.3461

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

உலகின் மிகப்   பழமையான நூல் ரிக்வேதம். அது ஓம்காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும்.

ஓம் அக்னிமீளே புரோஹிதம் என்று துவங்கி இறுதியில் ஹரி: ஓம் என்று முடிப்பர்.

 

ஓம்காரத்தில் வேதம் துவங்குவதை  யார் சொன்னார்?

உலகப் புகழ்பெற்ற கவிஞன் காளிதாசன் சொன்னான்:

 

வைவஸ்வதோ மனுர் நாம மானனீயோ மனீஷிணாம்

ஆசித் மஹீக்ஷிதாம் ஆத்ய: ப்ரணவ: சந்தசாம் இவ

–ரகுவம்சம் 1-11

 

வேதங்களுக்கெல்லாம் முதலில் பிரணவம் இருப்பது போல அரசர்களுக்கெல்லாம் முதல் அரசராக இருந்தவர் வைவஸ்வத மனு என்பவர். அவர் சூரியனுடைய புத்ரர். அறிவாளிகளாலும் மதிக்கத் தக்கவராய் இருந்தார்.

 

திருவாசகத்தில்

 

ஓம்காரத்தின் மற்றொரு பெயர் பிரணவம். இதை ஏகாக்ஷரம் என்று பகவத் கீதை பகரும். எப்படி ரிக்வேதம் ஓம்காரத்தில் துவங்கியதோ அப்படி மாணிக்க வாசகரின் திருவாசகமும் ஓம்காரத்தில்  துவங்கி அதில் முடிவடைகிறது. திருவாசகத்தில் 51 பாடற் பகுதிகளில் முதலில் உள்ளது சிவ புராணம். அதில்

உய்ய என்னுள்ளத்துள் ஓம்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா – என்று சிவபுராணத்தில் ஓம்காரத்தை அமைத்துள்ளார்.

 

கடைசியாக அமைந்த பாடற்பகுதி அச்சோ பதிகம். அதிலும், உய்யு நெறி காட்டுவித்திட்டோங்காரத்துட் பொருளை ஐயனெனக்கருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே – என்று சொல்லி முத்தாய்ப்பு வைக்கிறார்.

மாணிக்கவாசகர் செய்த எல்லாவற்றையும் செய்ய முயன்ரறவர் பாரதியார். மணிவாசகப் பெருமானைப்போல திருப்பள்ளி எழுச்சி, அகவல், திருத்த்சாங்கம்,  குயிற்பாட்டு முதலிய பல செய்யுட்களை யாத்த பாரதி, அவரது புகழ் மிகு நூலான பாஞ்சாலி சபதத்தையும் ஓம்காரத்தில் துவங்கி அதிலேயே முடிக்கிறார்.

 

பாரதி பாடலில்

பாஞ்சாலி சபதத்தின் முதல் பாடல்:

ஓமெனப் பெரியோர்கள் – என்றும்

ஓதுவதாய் வினை மோதுவதாய்,

தீமைகள் மாய்ப்பதுவாய் – துயர்

தேய்ப்பதுவாய் நலம் வாய்ப்பதுவாய்

நாமமும் உருவும் அற்றே – மனம்

நாடரிதாய் புந்தி தேடரிதாய்

ஆமெனும் பொருளனைத்தாய் – வெறும்

அறிவுடன் ஆனந்த இயல்புடைத்தாய்

 

நின்றிடும் பிரமம் என்பார் – அந்த

நிர்மலப் பொருளினை நினைத்திடுவேன்

 

என்று பாடுகிறார். இதில் ஓம்காரத்தின் பெருமை முழுதும் கூறப்பட்டுள்ளது.

 

 

 

பாஞ்சாலி சபதத்தின் முடிவுப் பாடல் ஓம்கார கர்ஜனையுடன் முடிகிறது:

 

ஓமென்றுரைத்தனர் தேவர் – ஓம்

ஓமென்று சொல்லி உறுமிற்று வானம்

பூமியதிர்ச்சி உண்டாச்சு – விண்ணை

பூழிப்படுத்தியதாஞ் சுழற் காற்று

சாமி தருமன் புவிக்கே – என்று

சாட்சியுரைத்தன பூதங்களைந்தும்!

நாமுங் கதையை முடித்தோம் – இந்த

நானில முற்றும் நல்லின்பத்தில் வாழ்க.

 

அருமையான முடிவு.

 

திருமந்திரத்தில்

 

ஓம்காரத்து உள்ளே உதித்த ஐம்பூதங்கள்

ஓம்காரத்து உள்ளே உதித்த சராசரம்

ஓம்கார தீதத்து உயிர் மூன்றும் உற்றன

ஓம்கார சீவ பரசிவ ரூபமே

பொருள்:-

நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களும் ஓம் என்னும் பிரணவத்திலிருந்தே உண்டாயின –ஓம்காரத்திலிருந்துதான் அசையும், அசையாப் பொருட்கள் உண்டாயின. ஓம் எனும் பிரணவத்துள்ளே விஞ்ஞானகலர் (ஆணவ மலம் பற்றிய ஆன்மா), பிரளயாகலர் (ஆணவம், கன்மம் இரண்டும்), சகலர் (ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் பற்றிய ஆன்மா) ஆகிய மூன்று வகைப்பட்ட உயிர்களும் ஒடுங்கியுள்ளன. ஓம்காரம் என்பது சிவ சொரூபமாகவும் பரசிவ வடிவமாகவும் அமைந்தது. ஓம் எனும் பிரணவம் மந்திரம் மட்டும் அல்ல; மகேசனின் உருவமும் ஆகும்.

 

திருப்புகழில்

 

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் நிறைய இடங்களில் ஓம்காரப் பெருமை கூறப்படுகிறது. இதோ ஒரே ஒரு திருப்புபுகழ்:

காமியத்தில் அழுந்தி இளையாதே

காலர் கைப்படிந்து மடியாதே

ஓமெழுத்தில் அன்பு மிகவூறி

ஓவியத்தில் அந்தமருள்வாயே

தூமமெய்க் கணிந்த சுக லீலா

சூரனைக் கடிந்த கதிர்வேலா

ஏமவெற்புயர்ந்த மயில்வீரா

ஏரகத்தமர்ந்த பெருமாளே

 

வள்ளலார் பாடலில்

அகத்திய முனிவனுக்கு முருகப் பெருமான் ஓம்கார மகிமையை உபதேசித்ததை, தெய்வ மணிமாலையில் வள்ளலாரும் பாடுகிறார்:-

 

சேமமிகு மாமறையின் ஓமெனும் அருட்பதத்

திறனருளி மலைய முனிவன்

சிந்தனையின் வந்தனையும் வந்த மெய்ஞ்ஞானசிவ

தேசிகாரத்னமே

 

என்று புகழ்கிறார்.

 

 

சம்ஸ்கிருத ஸ்லோகம் ஒன்று சொல்லும்:–

ஓம்காரஸ்ச அதசப்தஸ்ச த்வாவேதௌ ப்ரஹ்மண: புரா

கண்டம் பித்வா விநிர்யாதௌ தஸ்மான் மாங்கலிகாஉபௌ

–பாதஞ்ஜலதர்சனம்

பொருள்:– ஓம், அத என்ற இரண்டு சொற்களும் பிரம்மனின் திருவாயிலிருந்து வெளிவந்ததால் இரண்டும் மங்கலச் சொற்களாக கருதப்படும்.

பழங்கால சம்ஸ்கிருத நூல்கள் அனைத்தும் இவ்விரு சொற்களுடனேயே துவங்கும்.

சுவாமி விவேகாநந்தர்  ஒரு அருமையான கருத்தை முன்வைக்கிறார்; எல்லா எண்ணங்களுக்கும் ஒரு சொல் உண்டு. சொல்லையும் அந்த எண்ணத்தையும் (Thought and Word cannot be separated) பிரிக்கமுடியாது. எல்லாப் பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு அவை இரண்டையும் பிரிக்க முடியாது (Word and Meaning). ஆனால் ஒவ்வொரு எண்ணத்துக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் பல சொற்கள் இருக்கும்– கடவுள் என்றால் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல் இருக்கும்— தண்ணீர் என்றால் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு சொல் இருக்கும். ஆகையால் ஒரே சொல்லை வைத்து அந்தப் பொருளை விளக்கமுடியாது. ஆனால் ஓம் என்ற சொல் மட்டும் மொழிக்கு அப்பாற்பட்ட சப்தம் – அது இறைவனையே குறிக்கும். வைஷ்ணவர்கள் விஷ்ணு என்றால்தான் கடவுள் என்று ஒப்புக்கொள்வர்; சைவர்கள் சிவன் என்றால்தான் கடவுள் என்று ஒப்புக்கொள்வர். ஆனால் ஓம் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். சைவ வைஷ்ணவ சாக்தர்கள் மட்டுமின்றி, சமணர்கள், பௌத்தர்கள் சீக்கியர்களும் ஓம்காரத்தை ஒப்புக் கொள்கின்றனர் என்பார்.

 

இது மிகப்பெரிய உண்மை: இந்தியாவில் தோன்றிய எல்லா மதங்களுக்கும் ஓம் என்பது பொது; அதை சம்ஸ்கிருதத்திலும் எழுதலாம்; தமிழிலும் எழுதலாம் வெவ்வேறு உருவில் இருக்கும். ஆனால் சப்தம் ஒன்றே!

கடவுளை சப்தப் பிரம்ம என்பர்; இந்த உலகமே ஓம்காரத்தில் துவங்கியது. ஓம்காரத்தின் பெருமையை எல்லா முக்கிய உபநிஷத்துகளும் பறை சாற்றுகின்றன.

 

சிவபரத்துவ நிச்சயம் 

பாடல் 2

பிரணவத்தின் அர்த்த மாத்திரையிற் சிவலோக மிருக்குமென்பதால் அவ்வர்த்த மாத்ரா தெய்வம் சிவ பிரானே யென்பது.

 

அவ்வதி லிருக்கும் பூமி யந்தர மிருக்கு முவ்வில் 

மவ்வதி லிருக்குஞ் சொர்க்கம் வாக்கொடு மனமுஞ் செல்லாத 

திவ்விய வுமைவாழ் பாகச் சிவபிரான் சோம லோக 

மெவ்வமி லருத்தந் தன்னி லிருக்குமென் றுரைக்கும் வேதம். 

 

(அ-ரை) அந்தரம் – அந்தரிக்ஷம்; உமைவாழ் பாகச்சிவபிரான் என்றது சோமன் என்றதை விளக்கியபடி; சோமலோகம் – சிவலோகம்; எவ்வம் – கேடு; அருந்தந் தன்னில் – அருத்த மாத்திரையில்.

 

‘கேவலமகாரோகார மகாரார்த மாத்ரா ஸஹிதம் ப்ரணவமூஹ்ய’ என்ற ராம ரஹஸ்யோபநிஷத்தும், ‘அகாரோகார மகாரார்த மாத்ராத்மிகா’ என்ற வராகோபநிஷத்தும், ‘அர்த்தமாத்ரா ஸமாயுக்த: ப்ரணவோ மோக்ஷதாயக:’, “ப்ருதிவி – – அகாரே – – அந்தரிக்ஷம் – – உகாரே – – த்யெள: – – மகாரே – – பஞ்ச தைவதம் ஓங்காரம் ‘ என்ற தியாநபிந்தூப நிஷத்தும், ‘ப்ருதிவ்யகார: – – அந்த ரிக்ஷம் ஸ உகார: – – த்யெள: ஸ மகார: – – ஸோமலோக ஒங்கார:’ என்ற நரஸிம்ஹ பூர்வ உத்தாதாபிநியுபநிஷத்துக்களும் அதர்வ சிகோபநிஷத்தும், ‘அரைமாத்திரையி லடங்கும்மடி’ என்ற தேவாரமும், ‘மஹோசாநமவாங்மநஸகோசரம்’ என்ற சரபோநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.

 

ஓமின் புகழை ஒரு கட்டுரையில் அடக்க முடியாது.சுட்டிக்காட்டவே இயலும்!

ஓம் நம சிவாய; ஓம் நமோ நாராயணாய

 

–subam–

 

 

பயப்பட வேண்டும்: வள்ளுவர் அறிவுரை! (Post No.3455)

Compiled by London swaminathan

 

Date: 16 December 2016

 

Time uploaded in London:- 19-57

 

Post No.3455

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடைமையடா! — என்றெல்லாம் ஒலி பெருக்கி அலறும்.

 

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே

உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலும்

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது இல்லையே

–என்று பாரதியார் பாடுவார்.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் — என்று அப்பர் பெருமான் பாடுவார்; ஆடுவார்.

 

ஆனால் மாணிக்க வாசகரும் வள்ளுவரும் மட்டும் “பயப்படுங்கள்” என்று அறிவுரை வழங்குவர்!

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில் (குறள் 428)

 

பயப்படவேண்டியதைக் கண்டு பயப்படாமல் இருபது முட்டாள்தனம். பயப்பட வேண்டிய பழி,பாவங்களுக்கெல்லாம் அஞ்சுவது புத்திசாலிகளின் செயல் என்கிறார் வள்ளுவர்.

 

இதே கருத்தை புத்தரும் தம்மபதத்தில் (317) சொல்கிறார். சங்க இலக்கியத்தில் கலித்தொகையிலும் புற நானூற்றிலும் புலவர்கள் பாடுகின்றனர்:-

 

அஞ்சுவதஞ்சா அறனிலி ( கலித்தொகை 42-26)

 

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சி,

புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின்

உலகுடன் பெறினும் கொள்ளலர் — புறம் 182

 

 

வள்ளுவர், கடலுள் மாய்ந்த இளம்பெரும்வழுதி (புறம் 182) ஆகியோர் பொதுப்படையாக பயப்பட வேண்டிய விஷயங்களுக்குப் பயப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டனர்.

 

ஆனால் பயப்பட வேண்டிய விஷயங்கள் என்ன என்று சொல்லி பட்டியல் ஏதும் தரவில்லை. மாணிக்கவாசகர் மட்டும் ஒரு பட்டியல் தருகிறார்.

 

நமக்குத் தெரியும்: எதை நாம் நாலு பேருக்கு முன்னால்,குறிப்பாக, தாய் தந்தையருக்கு முன்னால் செய்ய அஞ்சுவோமோ அவை எல்லாம் பயப்பட வேண்டிய விஷயங்கள். ஆயினும் மாணிக்கவாசகர் பட்டியல் கொஞ்சம் விளக்கமாகவே அமைந்துள்ளது.

 

மாணிக்கவாசகர் இதற்காக தனியாக பத்துப் பாடல்களே பாடிவிட்டார். அவை திருவாசகத்தில் அச்சப்பத்து என்ற பகுதியில் உள்ளன.

 

“பாம்புக்குப் பயப்ப்ட மாட்டேன்; சிவன் திருவடிகளை அடைந்தும் வேறு ஒரு தெய்வம் உண்டு என்று கருதி சிவன் புகழைப் பாடாமல் இருக்கிறார்களே அவர்களைக் கண்டு அஞ்சுவேன்; அதாவது மதம் மாறிய சைவர்கள் அச்சத்திற்குரியோர்.

 

ஆசை எழுந்தாலும் வினைக்கடலில் அழுந்தினாலும் பயப்பட மாட்டேன்; ஆனால் சிவனைத் தவிர மற்ற தேவர்களைக் கொண்டாடுவோரைக் கண்டால் அஞ்சுவேன்

 

வேலாயுதத்துக்கு பயப்பட மாட்டேன். வேல் விழியாளுக்கும் பயப்படமாட்டேன். ஆனால் சிவனை வெறுப்போரைக் கண்டால் பயப்படுவேன்

மாதர்களை கண்டு அஞ்சேன். சிவனைத் தொழாதவரைக் காணின் அஞ்சுவேன்

 

நோய்களுக்கு அஞ்சேன்; பிறப்பு-இறப்புச் சுழலுக்கு அஞ்சேன்; சிவனடியார்களில் திருநீறு அணியாதோரைக் கண்டால் அஞ்சுவேன்

 

நெருப்புக்கு அஞ்சேன்; பெரிய மலைகளே பெயர்ந்தாலும் அஞ்சேன்;

திருநீறு அணியாதவர்கலைளைக் கண்டால் பயம் வந்துவிடும்.

 

பழிகள், மரணம் இவைகளுக்கெல்லாம் பயமில்லை. சிவனடிகளைப் பெரிய தாமரைப்பூக்களைக் கொண்டு அர்ச்சிக்காதோரைக்கண்டு அஞ்சுவேன். தில்லைக் கூத்தனின் நடனத்தைப் பார்காதவரைக் கண்டால் அஞ்சுவேன்

 

யமனுக்கோ கூரான ஆயுதங்களுக்கோ அஞ்சமாட்டேன். ஆனால் சிவ பெருமானைத் தியானித்து நெஞ்சம் உருகாதோரைக் கண்டு அஞ்சுவேன் என்று கூறி அச்சப்பத்து பாடல்களை முடிக்கிறார்.

 

–சுபம்–

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 22 (Post No.3453)

Article written by S NAGARAJAN

 

Date: 16 December 2016

 

Time uploaded in London:- 6-30 AM

 

Post No.3453

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 22

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வ்யது 82.

வசந்த காலம் வந்தது. யூனான் மாகாணத்திற்கு ஜு பின் ஜென் என்பவர் கவர்னராக ஆனார்.

 

 

ஆண்டின் இரண்டாம் மாதத்திலிருந்து ஏழாம் மாதம் முடிய மழை. மழையோ மழை. ஒவ்வொரு நாளும் நகரின் பிரதான வாயிலுள்ள கோபுரத்திலிருந்து பலமான குண்டுகள் மேகத்தை நோக்கி அதைக் கலைக்க வீசப்பட்டன. ஆனால் பயனில்லை.

ஏழாம் மாதம் முதல் ஒரு பஞ்சம் வந்து ஆட்கொண்டது. ஆகவே குளிர்காலத்தில் நதியிலிருந்து தூசு கிளம்பி நகரை ஆக்ரமித்தது.

 

 

தொடர்ந்து உருவாகிய டிப்தீரியா வியாதிக்கு பல்லாயிரக் கணக்கானோர் பலி ஆகினர்.

ஸு யுன் ஹூவா டிங்  மடாலயத்தில் அப்போது தங்கி இருந்தார்.

 

ஒரு நாள் நகருக்குச் சென்ற ஸு யுன், திரும்பி வரும் போது  ஒரு மர நிழலில் இளைப்பாற அமர்ந்தார்.

மரத்தின் அருகே ஒரு மூட்டை கிடந்தது. யாரும் அருகில் இல்லை.ஆகவே அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தார் ஸு யுன்.

உள்ளே  தங்கம் மற்றும் மரகத்தத்திலான ப்ரேஸ்லெட், தங்க கொண்டை ஊசிகள், காதணிகள், ஒரு வாட்ச், 8000 யூனான் டாலர்கள், பத்தாயிரம் சீன பியாஸ்டர் (எனப்படும் நோட்டுகள்) இருந்தன.

 

இதை விட்டுவிட்டுப் போன உரிமையாளருக்காக நெடுநேரம் காத்திருந்த ஸு யுன், யாரும் வராமல் இருககவே, அதைக் கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினார். மறு நாள் பேப்பரில் விளம்பரம் கொடுத்து உரியவரிடம் ஒப்படைத்து விடலாம் என்று அவர் எண்ணினார்.

 

 

மவுண்டனின் அடிவாரத்தை அடைந்த சமயம் அங்குள்ள ஏரியைக் கடக்க் முயன்ற ஸு யுன், ஒரு இளம் பெண் ஏரியில் குதிப்பதைக் கண்டார்.

 

உடனே அவளைக் காப்பாற்ற ஸு யுன் முயன்றார். அவளோ மூழ்க ஆரம்பித்தாள். உடனே தண்ணீரில் குதித்த ஸு யுன் அவளைக் காப்பாற்ற நீந்திச் சென்றார். அவளோ தன்னைக் காப்பாற்ற விடவில்லை. ஆகவே அவளை வலுக் கட்டாயமாக இழுத்துக் கொண்டு கரை சேர்ந்தார் ஸு யுன்.

 

அவள் தன் உயிரை மாய்த்துக் கொள்வதிலேயே குறியாய் இருந்ததை உணர்ந்த ஸு யுன் அவளைத் தன்னுடன் மடாலயத்திற்கு அழைத்துச் சென்றார்.

 

இரவு நெருங்கி விட்டது. அந்தப் பெண்ணிற்கு ஆடைகளைக் கொடுத்து பின்னர் உணவையும் கொடுக்கப் பணித்தார் ஸு யுன்.

பின்னர் அவளுக்குத் தேறுதல் வார்த்தைகள் கூறி அவள் யார் என்ற விவரத்தை அவர் கேட்டார்.

 

அவள் தன் கதையைக் கூறலானாள்.

அவள் பெயர் ஜூ. அவளுக்கு வயது 18. சங்ஷா என்ற இடத்தைச் சேர்ந்தவள். அந்த நகரில் புசான் தெருவில் மருந்து வியாபாரம் செய்து வந்த ஒரு வியாபாரியின் மகள் அவள்.

சன் என்ற டிவிஷனல் கமாண்டர் ஒரு நாள் அவளைப் பார்த்தான். உடனே அவளைத் தன் மாளிகைக்கு அழைத்தான். அங்கு அவளிடம் அவளை  மணந்து கொள்ள விருப்பப்படுவதாகக் கூறிய சன், அவளது பெற்றோரையும் அழைத்துத் தன் எண்ணத்தைக் கூறினான்.

 

 

திருமணம் முடிந்தது. பின்னர் தான் தெரிந்தது ஜுவுக்கு, அந்த கமாண்டருக்கு ஏற்கனவே மண்மாகி விட்டிருந்தது என்று. ஒன்றும் செய்ய இயலாத நிலையில் அந்த வீட்டில் புகுந்த ஜூவை கமாண்டரின் முதல் மனைவி அடி அடி என்று அடிக்க ஆரம்பித்தாள். ஜூவைக் காப்பாற்ற பலர் முயன்றும் பலன் இல்லாமல் போய் விட்டது. பெற்றோரோ கமாண்டரின் படை பலத்திற்கு பயந்து நடுங்கினர்.

 

ஒரு நாள் விரக்தியின் விளிம்பிற்கு வந்த ஜூ தன்னுடைய உடைமைகளை ஒரு மூட்டையாகக் கட்டிக் கொண்டு வீட்டை விட்டு ஓட ஆரம்பித்தாள். அவள்து எண்ணம் மாஸ்டர் ஸு யுன்னைச் சந்த்தித்து ஒரு பிட்சுணியாக ஆக வேண்டும் என்பது தான்.

 

 

ஆனால் காக்ஃபுட் மவுண்டன் செல்லும் வழி அவளுக்குத் தெரியவில்லை. இரண்டு நாட்கள் அலைந்தாள். கமாண்டரின் படைவீரர்களிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பதில் குறியாக் இருந்ததில் வழியில் அவளது மூட்டையையும் இழ்ந்தாள்.

இனி வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்த அவள் ஏரியில் குதித்து உயிரை மாய்க்கத் துணிந்தாள்.

 

 

ஸு யுன் அவள் மூட்டையில் இருந்த பொருள்களின் விவரத்தைக் கேட்டார். பின்னர் அவளிடம் அது தன்னிடம் பத்திரமாக இருக்கிறது என்று கூறி அதை அவளிடம் சேர்ப்பித்தார்.

 

பின்னர் சரணாகதி சூத்ரங்களைச் சொல்லி அதை அவளுக்கு விளக்கினார்.

மறுநாள் காலை ஜூ குடும்பத்தினரையும் சன் குடும்பத்தினரையும் ஆலயத்திற்கு வரவழைத்தார். பேச்சு வார்த்தை ஆரம்பமானது ஸு யுன் தர்ம சூத்திரங்களை அவர்களுக்கு விளக்கினார்.

 

அதைக் கேட்டவுடன் கமாண்டர் சன்னும் அவரது முதல் மனைவியும் ஸு யுன் கால்களில் பணிவாக விழுந்து வணங்கினர்.

 

பின்னர் புத்த தர்மத்தை ஸு யுன் விளக்கலானார். கமாண்டரும் அவர் முதல் மனைவியும் புத்தரின் திரு உருவச் சிலைக்கு முன்னர் விழுந்து வணங்கினர். தங்கள் செயலுக்கு  மனமார அவர்கள் வருந்தினர்.

 

 

கமாண்டரின் மனைவி ஜூவைக் கட்டித் தழுவிக் கண்ணீர் வடித்துத் தேம்பித் தேம்பி அழுதாள்.

இரு குடும்ப உறுப்பினர்களும் இந்தக் காட்சியைக் கண்டு நெகிழ்ந்து மனம் உருகினர்.

 

முப்பதுக்கும் மேற்பட்ட அந்தக் குடும்ப உறுப்பினர்கள் மூன்று நாட்கள் ஆலயத்தில் தங்கி இருந்தனர். அவர்களிடையே இருந்த மனக்கசப்பு, வெறுப்பு எல்லாம் போயே போயின.

அனைவரும் புத்த தர்மத்தில் சேர்ந்தனர்.

 

புத்தரின் அருள் பிரசாதத்தை வாங்கிக் கொண்டு பிரிய மனமில்லாமல் அவர்கள் அனைவரும் பின்னர் திரும்பிச் சென்றனர். புத்தரின் போதனைகளையும் எடுத்துச் செல்ல அவர்கள்  மறக்கவில்லை!

*********.

 

 

 

பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1 (Post No.3450)

Written by S NAGARAJAN

 

Date: 15 December 2016

 

Time uploaded in London:- 5-56 am

 

Post No.3450

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 15

இந்தக் கட்டூரையில் பரிபாடலில் வரும் முதல் பாடலில் வேதம் பற்றியும் நாவல் அந்தணர் பற்றியும் வரும் குறிப்புகளைக் காணலாம்..

 

 

       பரிபாடலில் அந்தணரும் வேதமும் – 1

 

                             ச.நாகராஜன்

 

 

பரிபாடல்

 

எட்டுத்தொகை நூல்களில் ஒன்று பரிபாடல். அதில் 70 பாடல்கள் இருந்தன. நமக்குக் கிடைத்திருப்பது இருபத்துநான்கு பாடல்களே. மகாமகோபாத்தியாய உ.வே.சாமிநாதையர் அவர்களின் பெருமுயற்சி காரணமாக இந்த பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. அதைப் பதிப்பித்து தமிழுக்குத் தந்தவர் அவரே.

பரிபாடலின் பாடல்களில் திருமாலுக்கு உரியவையாக எட்டும், முருகனுக்கு முப்பத்தொரு பாடல்களும், கொற்றவைக்கு ஒன்றும் வைகை நதிக்கு இருபத்தாறும் மதுரைக்கு நான்கு பாடல்களும் உள்ளன. ஆனால் நமக்குக் கிடைத்திருப்பதோ திருமாலுக்கு ஏழு, முருகனுக்கு எட்டு, வைகைக்கு ஒன்பது

25 அடி முதல் 400 அடிகள் வரை பரிபாடல் கொண்டிருக்கும் என்கிறது இலக்கணம். பரிபாடல அரிய இசையைக் கொண்டிருக்கும் ஒன்று. ப்ரிபாடலில் உள்ள ஒவ்வொரு பாடலையும் எழுதியவர் யார், அதற்கு இசை அமைத்தவர் யார் என்ற குறிப்பும் பாடலின் அடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரிபாடலின் காலத்தை நிர்ணயிக்க விழையும் அறிஞர்கள் அது சங்க காலத்தின் இறுதியில் தோன்றியிருக்கலாம் என்று  கருதுகின்றனர்.

இதில் தொட்ட இடங்களிலெல்லாம் இறை  ம்ணம் கமழும்.

அற்புதமான பக்தி வரிகள் மின்னும். ஹிந்து தத்துவங்கள் தவழும்.

பாடலை நாமே ரசித்துப் படிக்க வேண்டும், அப்போது தான் அதன் பெருமையை உணர முடியும்.

 

வேதத்தின் பல பெயர்கள்

வேதத்தை நான்மறை, மறை, வேதம், சுருதி,கேள்வி, வாய்மொழி, முதுமொழி, புலம் என்றெல்லாம் பரிபாடல் கூறி அதன் பெருமையை எடுத்துரைக்கிறது.பரிபாடலின் முதல் பாடல் திருமாலின் பெருமையை விளக்குகிறது.

ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலை என ஆதிசேஷனைக் குறிப்பிட்டு ஆரம்பிக்கும் பாடலில் இறுதி மூன்று வரிகள் வேதத்தையும் அந்தணரையும் பற்றிக் கூறுகிறது.

 

“சேவல் அம் கொடியோய் நின் வல் வயின் நிறுத்தும்            மேவலுள் பணிந்தமை கூறும்

நாவல் அந்தணர் அரு மறைப் பொருளே” (வரிகள் 11 12 13)

 

சேவல் அம் கொடியோய் – கருடனைக் கொடியில் கொண்டவனே!

மேவலுள் – உன் கருணையுடன்

நின் வல் வயின் நிறுத்தும் – உன் வலது பக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ள மனிதர்கள்

பணிந்தமை கூறும் –  உன்னை வழிபடும் தன்மை அறிந்து வழிபடுவோர்.

நாவல் அந்தணர் –  நாவில் மிகத் திறமை கொண்ட அந்தணர்கள் ஒதுகின்ற

அருமறைப் பொருளே – அரிய வேதத்தின் அர்த்தமாக விளங்குகின்றவனே!

அந்தணர்கள் வேதத்தை ஓதுகின்ற நல்ல திறன் உடையவர்கள் என்பதை  மிக மிக அழகாக நாவல் அந்தணர் என்ற சொற்றொடர் விளக்குகிறது

திருமால் அரிய வேதத்தின் உட்பொருளாய் விளங்குகிறான் என்பதையும் அருமறைப் பொருள் என்ற அழகிய சொற்றொடர் விளக்குகிறது.

இப்படி முதல் பாடலிலேயே அந்தணரின் புகழையும் அவர் நாவில் தவழும் வேதத்தின் பெருமையையும் பரிபாடல் விளக்குகிறது.

 

இந்தப் பாடலை இயற்றிய புலவர் பெயரும் இதற்கு இசை அமைத்தவர் பெயரும் நமக்குக் கிடைக்கவில்லை.

 

–Subham–

அதிசய புத்த துறவி ஸு யுன்! – 21(Post No.3440)

Article Written by S NAGARAJAN

 

Date: 12 December 2016

 

Time uploaded in London:- 10-47 am

 

Post No.3440

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

 

100 வயது வாழ்ந்த பெரியோர்

 

120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! – 21

ச.நாகராஜன்

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 80.

 

வசந்த காலத்தில் போதிமண்டலம் என்னும் ஒரு விசேஷ ச்டங்கு இறந்தவர்கள் நற்கதி அடைவதற்காகவும் அடுத்த பிற்வியில் நல்ல பிறவி பெறுவதற்காகவும் செய்யப்பட்டது.

 

கொள்ளைக்காரர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்பட்டதோடு மிருகங்களை பலியிடுவதும் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டது.

கவர்னர் டாங் வூவுடனும் அவ்ர் சகாவுடனும் பேச்சு வார்த்தை நடத்த அரசு அதிகாரிகளை அனுப்பினார். அவர்கள் இருவரும் ராணுவ கமாண்டர்களாக நியமிக்கப்பட்டனர்.

 

ஒரு குறிப்பிடத்தகுந்த அதிசய விஷயம் என்னவென்றால் இறுதிச் சடங்கு நடத்தப்பட்ட போது பல இடங்களிலும் ஆரமபத்தில் பல மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டன. அந்த மெழுகுவர்த்திகளின் ஜ்வாலைகள் எல்லாம் வெவ்வேறு விதமான மலர்களின் வ்டிவைக் கொண்டிருந்தன!

 

 

சில ஜ்வாலைகள் தாமரை வடிவிலும் வேறு சில வேறு வண்ணங்களிலும் வடிவங்களிலும் தோன்றின!

ஆலயத்தில் வழிபாடு செய்ய வந்த பக்தர்கள் அனைவரும் இந்த அதிசய வண்ண வடிவங்களைப் பார்த்து பிரமித்தனர். பரவசமாயினர்.

49ஆம் நாள் சடங்கு முடியும் போது வானத்தில் மேகங்கள் பெரிய பந்தல் வடிவிலும்  ரத்தின தோரணங்கள் போன்றும் தோன்றின!

சடங்குகள் முடிந்த பின்னா கவர்னர் டாங் ஸு யுன்னை அவரது இல்லத்திற்கு வருகை புரியுமாறு அழைப்பு விடுத்தார். அங்கு இறந்து போன டாங்கின் உறவினர்களுக்கு  சூத்ரங்கள் இசைக்கப்பட்டன.

 

 

இதனால் அவருக்கு தர்மத்தில் அதிக நம்பிக்கையும் பற்றும் ஏற்பட்டது.

அவருடன் சேர்ந்திருந்த அனைவரும் புத்த தர்மத்திற்கு மாறி விட்டனர்.

குளிர்காலம் வந்தது, ஸு யுன் குன்மிங்கிலேயே தங்கினார்.

 

 

ஸு யுன்னுக்கு இப்போது வயது 81

 

கவர்னர் டாங் ஸு யுன்னிடம் இன்னொரு போதி மண்டலம் நடத்துமாறு வேண்டிக் கொண்டார்.

ஹூவா டிங் மடாலயம் குன்மிங்கின் மேற்குப் பக்கம் உள்ள மலையில் இருந்தது, அருமையான அந்த ஆலயத்தை அங்குள்ள துறவிகள் சரியாகப் பராமரிக்கவில்லை. ஆகவே அது சிதிலமடைந்த நிலையில் இருந்தது. அதை அவர்கள் ஐரோப்பியர்களுக்கு விற்கத் தீர்மானித்திருந்தனர்.

 

ஐரோப்பியர்களோ அங்கு ஒரு க்ளப்-ஹவுஸ் கட்ட முடிவு செய்திருந்தனர். இதற்கு உரிய அனுமதியையும் அரசு அதிகாரிகளிடமிருந்து அவர்கள் பெற்று விட்டனர்.

இதையெல்லாம் அறிந்த ஸு யுன் மிகவும் வருத்தமுற்றார்.

கவ்ர்னர் டாங்கைச் சந்தித்து அந்தப் புனிதத் தலத்தை அப்படியே நன்கு பராமரிக்குமாறு வேண்டிக் கொண்டார்.

 

ஸு யுன் சொன்னதை உன்னிப்புடன் கேட்ட டாங் உள்ளூர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

அந்த அதிகாரிகளுள் ஒருவரான ஜாங் ஸு ஸியான் என்பவர் ஸு யுன்னை ஒரு சைவு உணவு விருந்திற்கு அழைத்தார்.

அங்கு அவரிடம் ஒரு சிவப்புத் தாளில் ஒரு அழைப்பிதழ் தரப்பட்டது.

 

ஹூவா டிங் மடாலயத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அதை புனருத்தாரணம் செய்ய அதில் வேண்டுகோள் விடப்பட்டிருந்தது.

மூன்று முறை இதை அவர்கள் வாய்மொழியாகவும் சொன்ன பின்னர் ஸு யுன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

 

உபாசகர் ஜாங் இரண்டு வாத்துகளை வாங்கி ம்டாலயத்தில் விட்டார். அவற்றிற்கு முன்னர் ஸு யுன் அகதிகள் சூத்திரத்தை இசைத்தார். அதை அவை மௌனமாகக் கேட்டன.

 

அன்றிலிருந்து துறவிகளுடன அவையும் பிரதான ஹாலில் சூத்திரங்கள் இசைக்கப்படும் போது அதைக் கேட்க வந்து விடும்.

மூன்று வருடங்கள் இது தவறாமல் நடந்து வந்தது,

துறவிகளுடன அவையும் ஊர்வலத்தில் இணைந்து கொண்டு  புத்தரின் சிலைகளை பிரதக்ஷிணம் செய்யும்.

ஆலயத்தில் இருந்த ஒவ்வொருவரும் அவற்றை அன்புடன் நடத்தினர்.

 

ஒரு நாள் பெண் வாத்து  பிரதான ஹாலின் வாயிலில் வந்து நின்று பார்த்தது. பின்னர் மூன்று முறை பிரதக்ஷிணம் செய்தது. தனது தலையை உயர்த்தி புத்த சிலையைப் பார்த்து உயிரை விட்டது. அதன் இறக்கைகள் ஒளியுடன் இருந்தன. அது ஒரு பேழையில் வைத்து புதைக்கப்பட்டது.

 

அதன் இணையான் ஆண் வாத்து தன் துணையின் பிரிவைத் தாங்க முடியாமல் சில நாட்கள் கழித்து  பிரதான ஹாலுக்கு வந்து நின்று சிலைகளைப் பார்த்தத்து. இறகுகளை விரித்துப் பின்னர் இறந்தது.

அது ஒரு பேழையில் வைக்கப்பட்டு பெண் வாத்துக்கு அருகில் புதைக்கப்பட்டது

 

(அரசியல் நிலைமையோ வேறு விதமானது.இலையுதிர்காலத்தில் கவர்னர் டாங்கை வீழ்த்த ஒரு சதி நடந்தது. அவர் ஸு யுன்னின் ஆலோசனையைக் கேட்டார்.

 

மக்கள் மனதில் நீங்கள் இருந்தாலும், பலம் பொருந்திய ராணுவப் படையை உங்களால் எதிர்கொள்ள முடியாது. ஆகவே இப்போது  இங்கிருந்து சென்று விடுங்கள். காலம் கனியும் போது திரும்பலாம் என்றார் ஸு யுன். அதைக் கேட்டு அவர் நகரிலிருந்து வெளியேறினார்.

 

இந்த விவரம் பத்து வருடங்களுக்குப் பின்னர் ஸு யுன் தனது சிஷ்யரிடம் கூறினார்.)

 

*****