பீதாம்பரதாரியும் நீலாம்பரதாரியும், மதுப் ப்ரியனும் மாது ப்ரியனும்

-Balarama_kolkatta8
Balaraman in Kolkatta Museum

கட்டுரை மன்னன்: லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:1324; தேதி:– 3 அக்டோபர் 2014.

என்றும் நீல உடை அணிபவன் – பலராமன் ( நீலாம்பரன் )
என்றும் மஞ்சள் உடை அணிபவன் – கிருஷ்ணன் ( பீதாம்பரன் )

மதுப் ப்ரியன் – பலராமன் ( மது அருந்துபவர் )
மாதுப் ப்ரியன் – கிருஷ்ணன் ( கோபியர் பின்னால் சென்றவர் )

வெள்ளைக் காரன் – பலராமன்
கருப்பன் – கிருஷ்ணன்

பனைக் கொடி ஏந்தியவன் – பலராமன்
கருடக் கொடி ஏந்தியவன் – கிருஷ்ணன்

இந்த விஷயங்களை எல்லாம் நமக்குச் சொல்பவர்கள் யார் புராணங்களையும் இதிஹாசங்களையும் எழுதியோர் — அவர்கள் உண்மை விளம்பிகள் — எதையும் மறைக்காதவர்கள் — மிகவும் கூர்ந்து கவனிப்பவர்கள். — நல்லது, கெட்டது அனைத்தையும் பட்டியலிடுவோர். இப்படி எல்லா விஷயங்களையும் சொல்வதிலிருந்து புராணங்கள் பொய் சொல்லாது என்பது நமக்குப் புரிகிறது.

கண்ணனும் பலராமனும் ஒரே தாய்க்குப் பிறந்தவர்கள். ஆயினும் அவர்களிடையே எத்தனை வேறுபாடுகள்!!! இதைப் படிக்கையில் வியப்பு மேலிடுகிறது.
bala big
Balaraman at he British Museum in London

இந்துக்கள் வர்ணங்களை ஆராய்வதில் மன்னர்கள். சிவபெருமானுடைய ஐந்து முகங்களுக்கும் ஐந்து வண்ணங்களைக் கூறுவர். இதைப் பார்த்து பௌத்தர்களும் மாயா நாகரீக மன்னர்களும் திசைகளுக்கும் வர்ணம் சொன்னார்கள்.

பலராமன் அண்ணன் — கிருஷ்ணன் தம்பி — இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவ்வளவு அன்பு. இருந்த போதிலும் அண்ணன் ஒரு கட்சி — தம்பி வேறு ஒரு கட்சி!!

மாபாரதப் போரில் பாண்டவர்களை ஆதரித்தான் கண்ணன். பலராமன் சுவிட்சர்லாந்து மாதிரி எந்தக் கட்சியிலும் சேராமல் நடுநிலை வகித்தார். மாபாரதம் யுத்தம் முடியும் 18ஆவது நாளில் தீர்த்த யாத்திரையில் இருந்து திரும்பி வந்தார். அன்றுதான் பீமனுக்கும் துரியோதணனுக்கும் இறுதி யுத்தம் — கதாயுதப் போர் — அப்போது கள்ளக் கிருஷ்ணன் சொன்னதைக் கேட்டு விதியை மீறி துரியோதணன் தொடையில் அடித்தான் பீமன். இவ்விருவருக்கும் கதாயுதப் பயிற்சி கொடுத்தது பலராமன் தான். பீமன் தவறு செய்தது கண்டு பொறுக்காமல் களத்தில் குதிக்கத் தயாரானான் பலராமன். கிருஷ்ணன் அவனைத் தடுத்து நிறுத்தினான். அதர்மம் தோற்பதற்காக ஒன்றிரண்டு தப்புகள் செய்யலாம் என்பது கண்ணன் கட்சியின் வாதம்.

அண்ணனும் தம்பியும் இப்படி மோதிக் கொண்டது பல இடங்களில் நடந்தது. கிருஷ்ணனுக்கு ருக்மினி காதல் கடிதம் எழுதினாள். உடனே கிருஷ்ணன் அவளைக் கடத்தி வந்தான். ருக்மினியின் தந்தை ருக்மின் என்பவன் போருக்கு வந்தான். உடனே பலராமன் களத்தில் குதித்து ருக்மினைக் கொன்றான். ருக்மின் மகள் ருக்மினியை கண்ணன் கல்யாணம் செய்தான்.

இதேபோல அர்ஜுனன், சுபத்ரா என்னும் காதலியைக் கடத்திவந்தான். அது தவறு என்று எதிர்த்தான் பலராமன்.

கிருஷ்ணனுடைய பேரன் சம்பா, துரியோதணன் மகள் லெட்சுமனாவை கடத்த முயற்சித்தான். துரியோதனன், அவனைப் பிடித்து வைத்தான். அப்போது சம்ரசத்துக்குப் போன பலராமன் இருவரும் ஒருவரை ஒருவர் மணம் முடிக்க உதவினான். இப்படி மூன்று காதல் – கடத்தல் விஷயத்தில் மூன்று நிலை!! இதுதான் பலராமன்.

Krishna_meets_parents
Blue for Balaraman, Yellow for Krishna; meeting parents.

எப்போதும் நீல நிற உடை அணிவான். கையில் கலப்பை வைத்திருப்பான், உலக்கையும் வைத்திருப்பான். பனைக்கொடி ஏந்திச் செல்வான். ஒருகாலத்தில் இந்தியா முழுதும் கண்ணன் கோவிலில் பலராமன் சந்நிதியும் உண்டு. இவனது வழிபாடு 2300 ஆண்டுகளுக்கு முன்னரே நடந்தது என்பது சாணக்கியன் எழுதிய அர்த்தசாஸ்திரத்தில் தெரிகிறது. கிரேக்க- இந்திய மன்னர்கள், மௌரியப் பேரசர்கள் ஆகியோர் இவனுக்கும் கண்னனுக்கும் நாணயங்கள் வெளியிட்டனர். ஆழ்வார் பாடல்களில் இருந்து இவரது வழிபாடு தமிழ் நாட்டுக் கோவில்களில் ஏழாம் எட்டாம் நூற்றண்டுவரை இருந்ததை அறிகிறோம்.

பலராமனின் பனைக்கொடியை தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். புற நானூற்றுப் பாடலில் கண்ணனையும் அவன் அண்ணனையும் நக்கீரர் (புறம். 56) புகழ்கிறார். காளிதாசன் மேகதூத காவியத்தில் ( பாடல் 51, பாடல் 61) சொன்னதை தமிழ் கவிஞர்கள் பல இடங்களில் பாடுவர்.

மாபாரதம் ஒரு விநோதக் கதை சொல்லும். வெள்ளை கருப்பு ஆகிய இரண்டு நிற முடிகளை தேவகியின் வயிற்றில் வைத்தானாம் விட்டுணு! ஆகவே இரு நிறக் குழந்தைகள்!! ‘’ஆல்பினிஸம்’’ என்பது தோலில் நிறமிகள் இல்லாமல் செய்யும் ஒரு குறைபாடு. ஒருவேளை மாபாரதக் கதை இதைத்தான் இப்படி முடிக் கதையால் மூடி மறைத்து விட்டதோ !!!

அமரகோஷம் என்னும் அற்புத நிகண்டு பலராமனுக்கு 15 பெயர்களைச் சொல்கிறது. உலக்கைத் தடியன், பனைக் கொடியோன், கலப்பைக் கையன், நீல ஆடையன், யமுனைத் திருப்பி, ரோகிணி மைந்தன், ரேவதியின் காதலன் என்னும் பொருள்படும் பல சொற்கள் பலராமனின் புகழ் பாடுகின்றன.
Death_of_Bala_Rama
Balarama’s death; white snake may be Adi sesah or Kundalini power. He left his body by yoga.

பலராமன் பற்றிய எனது ஆராய்ச்சி

பலராமன் எப்போதும் கலப்பை கொண்டு செல்பவர். அவன் ஒரு விவசாயி. கள் குடிப்பதில் பிரியம் இருந்ததால் பனை மரத்தைக் கொடியில் வைத்தார். கிருஷ்ணனுக்கு அரசியலில் விருப்பம், பலராமனுக்கோ விவசாயத்தில் விருப்பம். அது இல்லாவிடில் கலப்பையைக் கையில் ஏந்தித் திரிய நியாயமே இல்லை. அது மட்டுமல்ல. அவரைப் பற்றி ஒரு சுவையான கதையும் உண்டு. ஒரு நாள் குடிபோதை மயக்கத்தில் ஏ! யமுனை நதியே என் அருகில் வா! என்றாரம். அது மறுத்தவுடன் கலப்பையால் கீறியவுடமன் அது பயந்து கொண்டு சொன்ன இடத்துக்கு எல்லாம் வந்ததாம். இந்தக் கதை புராணம் பயன்படுத்தும் பரிபாஷை! அதாவது யமுனை நதியில் இருந்து பாசனக் காலவாய் வெட்டிப் பயிர் செய்தான் என்பதையே புராணங்கள் இப்படி சுவைபடச் சொல்லும்.

அகத்தியர் கடலைக் குடித்தார், விந்திய மலையைக் கர்வ பங்கம் செய்தார் என்பது எல்லாம் பெரிய எஞ்சினீயரிங் சாதனைகள் என்பதைப் பல கட்டுரைகளில் விளக்கமாகக் கொடுத்துவிட்டேன். அது போன்றதே பலராமன் யமுனையை இழுத்த கதையும்.
baladevakrishna
Balarama and Krishna on Indo-Greek coins

பலராமனின் பெயர்கள்

பலபத்ரன், ப்ராலம்பக்னன், பலதேவன், அச்யுதக்ரஜன், காமபாலன், ஹலாயுதன், நீலாம்பரன், ரோகிணேயன், தாலங்கன், முசலிஹலி, சங்கர்ஷனன், க்ஷீரபாணி, காளிந்தி பேதனன், காளிந்தி ஹர்ஷணன், ஹல ப்ரித், லாங்கலி, குப்த சரன் (ரகசிய நடமாட்டம்).

இவை அனைத்தும் மேற்கூறிய அவனது சாதனைகளை விளக்கும் வடமொழிச் சொற்கள் ஆகும்.
வெள்ளைப் பாண்டி என்று யாதவ குல மக்களிடையே பெயர் உண்டு. இதுவும் பலராமன் பெயராக இருக்கலாம்.

MauryanBalaramaCoin3rd-2ndCenturyCE
Balaraman on Maurya coins;Third century BCE

பலராமன் புள்ளிவிவரம்

1.ஆதிசேஷன் அவதாரம்
2.புரி தேர்த் திருவிழாவில் நீல நிற பனைக்கொடி பொறித்த தேரில் பவனி வருவான்
3.மனைவி பெயர்- ரேவதி
4.வளர்ப்புத் தாய்- ரோகிணி
5.தாய் தந்தை – தேவகி, வசுதேவன்
6.தம்பி பெயர் – கள்ளக் கிருஷ்ணன்
7.கையில் இருப்பது – கலப்பை
8.கொடியில் திகழ்வது – பனை மரம்
9.குடிக்கப் பிடிப்பது – மது
10.எடுக்கப் பிடிப்பது – முசலி எனும் உலக்கை
11.காதல் விவகாரத் தொடர்புகள்: ருக்மினி- கிருஷ்ணன் காதலுக்கு ஆதரவு; சுபத்ரா- அர்ஜுனன் காதலுக்கு எதிர்ப்பு; லெட்சுமனா- சம்பா காதலில் நடுநிலை.
12.மகன்கள் பெயர்:- உள்முகன், நிஷதன்
13.பிடித்த பொழுது போக்கு – ஊர் சுற்றல் (தல யாத்திரை)
14.தம்பியுடன் சேர்ந்து செய்த துஷ்ட நிக்ரஹம்: தேனுகாசுரன், கம்சன், முஷ்டிகன், ரோமஹர்ஷணன், த்விவிடன், ருக்மின், ப்ரலம்பன்.
rath-yatra-and-appliqua
Balaraman chariot along with other chariots in Puri, Orissa.

15.இதில் ரோமஹர்ஷனன் கொலை மட்டும் முன்கோபத்தில் தெரியாமல் செய்தது — அந்தப் பாவத்தைத் தீர்ப்பதற்காக தீர்த்த யாத்திரை சென்றார். இவன் மிகுந்த பலசாலீ. பெயரில் பல தேவன், பல பத்ரன், பல ராமன் என்பதில் இருந்தே புலப்படும் — நல்ல மல்யுத்த வீரன் — எதிரிகளின் காலைப் பிடித்து சுழற்றி மரத்தின் மீது எறியும் வல்லமை படைத்தவன்.

நக்கீரனும் சங்க காலப் புலவர் பலரும் காளிதாசனும் பாடியது போல நாமும் பலராமன் புகழ் பாடுவோம்.

Balabhadra_Subhadra_Jagannath
Balabhadra, Subhadra, Jaganatha in Puri.

அகத்தியரை நியூசிலாந்து மயோரி பழங்குடியினர் வழிபடுவது ஏன்?

candi banon

எழுதியவர்:—- கட்டுரை மன்னன் லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:- 1320; தேதி:– 1st October 2014

அகத்தியர் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் கடந்த நான்கு ஆண்டுகளில் பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். இதுவரை எழுதிய கட்டுரைகளின் சுருக்கம்:

1.அகத்தியர் என்பவர் தமிழர்களுக்கு மிகவும் நெருக்கமான வடக்கத்திய ரிஷி. ஜனத்தொகை பெருக்கத்தைச் சமாளிக்க, சிவபெருமான் இவரை தெற்கே அனுப்பினார். அதுதான் உலகின் முதல் ஜனத்தொகைப் பிரச்சனை. (ஆதாரம்: திருவிளையாடல் புராணம்)

2.அகத்தியர் ‘’விந்திய மலையின் கர்வத்தை பங்கம் செய்தார்’’. ‘’கடலைக் குடித்தார்’’ — இது புராணம் தரும் தகவல் — இதன் பொருள்:– அவர்தான் முதல் முதலில் வடக்கிற்கும் தெற்கிற்கும் விந்திய மலை வழியாக சாலை மார்கம் கண்டவர். அவர்தான் முதல் முதலில் கடலைக் கடந்து தென்கிழக்காசிய நாடுகளில் இந்து கலாசாரத்தைப் பரப்பியவர். இதையே புராணங்கள் வேடிக்கையான பரிபாஷையில் அப்படிச் சொல்லும். தென் கிழக்காசிய நாடுகளில் இவர் சிலைகளும் வழிபாடும் அதிகம். உலகில் அதிக நாடுகளில் வழிபடப்படும் முனிவர் என்ற (கின்னஸ்) சாதனை படைத்தவர்!!

3.அகத்தியர் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் (கி.மு.1000 வாக்கில்) 18 குடிகளை அழைத்துக் கொண்டு தெற்கே வந்தார் (ஆதாரம் கபிலரின் புறநானூற்றுப் பாடல் 201 மற்றும் அதற்கு நச்சினார்க்கினியர் முதலியோர் தரும் விளக்கம்)

map_sirius_web
Canopus is at the bottom right.

4.அவர் ரிக்வேத கால அகத்தியர் அல்ல. அதற்குப் பின் அதே கோத்திரத்தில் உதித்தவர். பல அகத்தியர்கள் இருந்ததால் பல காலங்களில் பல இடங்களில் அவர் ஆஸ்ரமம் இருந்ததாக புராண, இதிஹாசங்கள் பகரும். இது குழப்பத்திற்கு வழிவகை செய்யும்.

5.தமிழில் சித்த வைத்தியத்தில் வரும் அகத்தியர் மிகவும் பிற்காலத்தில் இருந்த ஒரு சித்தர். தமிழ் மொழிப் பாடலே அவர் காலத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டது. ஒருவேளை பழங்கால அகத்தியரின் கருத்துக்களை ஒரு புலவர் அவர்தம் கால தமிழில் பாடி இருக்கும் வாய்ப்பும் உளது.

6.அகத்தியருக்கும் அகத்திக்கீரை, நீர் நிலைகள் ஆகியவற்றுக்கும் உள்ள தொடர்பு அந்த நட்சத்திரக் கால உதயத்தில் இருக்கும் காலநிலை (பருவநிலை) பற்றிய குறிப்புகளாகும்.

7. கி.மு.முதல் நூற்றாண்டில் வாழ்ந்த காளிதாசன் என்னும் உலகப் புகழ்பெற்ற கவிஞன் பாண்டியர்களுக்கும் அகத்தியருக்கும் உள்ள நெருக்கத்தை ரகுவம்ச காவியத்தில் அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறான்.

agastyanepal, carole R Bolon
Agastya in Nepal by Carole

8.வேதகால அகத்தியர் லோபாமுத்ரா என்னும் பேரழகியை மணந்ததார். அவர் ராஜ வம்த்தில் பிறந்த இளவரசி. இவர் ரிக்வேதகால முனிவர். இவரை குடத்தில் பிறந்தவர் என்று புராணங்கள் புகலும்.

9.அகத்தியர், தமிழுக்கு இலக்கணம் வகுத்தார். மாபெரும் மொழியியல் நிபுணர். அவர் மிகப் பெரிய எஞ்ஜினீயர். காவிரி நதியை திசை திருப்பிவிட்டது, கடல் வழியாக தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றது, விந்தியமலை வழியாக ரோடு போட்டது ஆகியன இதற்குச் சான்றுகள். நான் எழுதிய கீழ்கண்ட ஆங்கிலக் கட்டுரைகளிலும் அதேகாலத்தில் வெளியான எனது தமிழ்க் கட்டுரைகளிலும் மேல்விவரம் காண்க

sriagathiyarlopamudratemple72

Agastya in kalyani Thirtham, modern installation

My previous articles on Agastya in the past four years:

Is Brahmastra a Nuclear Weapon?
Agastya in Jataka Tales and Kalidasa
Did Agastya drink ocean?
Population Explosion: Oldest reference in Hindu scriptures
Ravana-Pandya Peace Treaty! Kalidasa solves a Tamil Puzzle
New Zealand Maoris and Chinese worship Agastya!

சீனாவிலும் நியூசிலாந்திலும் அகத்தியர் பற்றிக் கிடைத்த புதிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

அகத்திய நட்சத்திரம் என்பது தென் வானத்தில் பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரத்தின் பெயர். இதைவிடப் பிரகாசமானது சிரியஸ் நட்சத்திரம். இவைகளை ஐரோப்பிய நாடுகளில் உள்ளவர்கள் காணமுடியாது. ஆகவே இவைகளுக்கு கிரேக்க, லத்தின் மொழி விளக்கங்கள், பெயர்கள் இருந்தாலும் அவை அனைத்தும் இந்துக்களிடம் இருந்து கடன் வாங்கி மாற்றி எழுதப்பட்டனவே. உண்மைப் பொருள் விளங்கா நேரத்தில் புதுக்கதைகள் எட்டுக்கட்டுவதை சுமேரிய, பாபிலோனிய, கிரேக்க நாகரீகங்களிலும் காண்கிறோம்.

Chinese_temple_malaysia
Cinese Temple of Fu Lu Shou in Malaysia

சீனாவில் அதிர்ஷ்டம் தரும் தேவர்கள் என்று மூவரை வழிபடுவர். அவர்கள் பெயர்கள்: பூ, லூ, ஷூ. இவர்கள் மூவரும் குரு எனப்படும் வியாழன் மற்றும் வசிஷ்ட நட்சத்திரம், அகத்திய நட்சத்திரம் ஆகிய மூவராக வானத்தில் தோன்றுகின்றனர். அவர்கள் மகிழ்ச்சி, வளமை, நீண்ட நோயற்ற வாழ்வு ஆகியவற்றை நல்குவர். இதிலும் கூட அகத்திய நட்சத்திரம் நோயற்ற தீர்க்க ஆயுஸ் உடன் தொடர்பு படுத்தப்படுவதால் சித்த வைத்திய நூல்கள் அவர்தம் பெயரில் இருப்பதன் பொருத்தத்தை எடுத்துக்காட்டும். இதில் குறிப்பிடப்படும் அகத்தியர், வசிட்டர் ஆகியோருக்கு தமிழ் வடமொழி நூல்களில் மட்டுமே முழு விளக்கம் இருப்பதால் இவை நம்மூர் கதைகள் என்பது புலப்படும். மேலும் தெற்கத்திய வானத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் சீனாவில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் தெரியாது. ஐரோப்பியர்களுக்கும் தெரியாது.

450px-agastyaprambananindonesia
Agastya from Prambanan, Indonesia

நியூசிலாந்து நாட்டில் பழங்குடி வழிபாடு

பாலிநேசியர்கள் எனப்படும் இன மக்கள் பசிபிக் தீவுகள் முழுவதும் வசிக்கின்றனர். இவர்கள் தாய்வான் எனப்படும் சீனப் பகுதியில் இருந்து அலை அலையாக தெற்கு நோக்கி வந்தது அண்மைக்கால ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது. ஆகவே இவர்கள் பூ, லூ, ஷூ என்னும் சீனக் கதைகளையோ அல்லது ஏற்கனவே இந்து நாகரீகம் இருந்த இந்தோநேஷியக் கதைகளையோ பாலிநேசியாவுக்குக் கொண்டு வந்திருக்கலாம். இந்தோநேசியாவில் இருந்த அகத்தியர் சிலைகள் உலக மியூசியங்களில் அமர்ந்து இன்றும் புகழைப் பரப்பிக் கொண்டிருக்கின்றன.

நியூசிலாந்து நாட்டில் மயோரி Maori எனப்படும் பழங்குடி இன மக்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக அங்கே வசிக்கின்றனர். இவர்கள் அகத்திய நட்சத்திரத்தை வழிபடுகின்றனர். அவருக்கு அரிசி உணவையும் படைக்கின்றனர். அவருடைய பெயர்கள் பாலிநேசிய மொழியில் இருந்தாலும் அவை அனைத்தும் அகத்திய என்னும் சொல்லின் மரூஉ என்பது தெளிவு. மேலும் அவர்கள் அகத்தியர் பற்றிச் சொல்லும் கதையும் இந்துமதக் கதைகளை ஒட்டி அமைந்துள்ளது. கடவுள் கூடை பின்னிய போது கூடைக்கு வெளியே விடப்படதால் இவர் தெற்கில் ஜொலிப்பதக அவர்கள் கதை சொல்லுவர். கூடை, குடத்தில் பிறந்தவர் என்ற கருத்துக்களில் உள்ள நெருக்கத்தைக் காணலாம். இதைவிட அவர்தம் பெயர்களே காட்டிக் கொடுத்துவிடும்:

dr k ravi kumaragastya

இந்து புராணங்கள் “அவர் கலசத்தில் பிறந்த ஒளிவீசும் மீன்” என்று பாடுகின்றன.

அரிகி= உயர்குலத்தில் பிறந்தவர் (அகத்தியர் ஒரு பிராமணர்)
அதுதாஹி, அயதாஹி = அகத்தி என்ற சொல்லின் மரூஉ.
தப = தவ முனிவன் (தபஸ் என்ற வடமொழிச் சொல்)

ஆங்கிலத்தில் அகத்திய நட்சத்திரம் (Star Canopus) கனோபஸ் எனப்படும். இதன் பொருள் குடம், ஜாடி என்பதாகும். ஆனால் இந்துக் கதைகளை அறியாதோர் பின்னர் இதை கிரேக்க கதா பாத்திரங்களுடன் தொடர்பு படுத்தினர். இதே போல அகத்தி என்ற சபதத்தை அறியாதோர் பாலிநேசிய (மயோரி) மொழிகளில் அவைகளுக்குப் புதுப் பொருள் கண்டனர்.

இந்துப் புராணங்களில் அகத்தியரின் பெயர்கள்: குடமுனி, கும்பசம்பவ, கலசி சுத, கடோத்பவ — இவை எல்லாம் கடம்/பானை, கலசம், கும்பம், குடம் ஆகியவற்றையே குறிப்பிடும். இவர் சோதனைக்குழாய் முறையில் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்ட குழந்தையோ என்று எண்ண வேண்டி இருக்கிறது. மேலும் மேலும் விஞ்ஞானம் வளர, வளர நாம் புதுப் பொருள் காண இயலும். இது பற்றி காந்தாரி கர்ப்பம் முதலிய கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன்.

agastya ashram

ரிக்வேத ஆராய்ச்சியில் அண்மைக் காலத்தில் கொடிகட்டிப் பறக்கும் ஸ்ரீகாந்த் தலகரி என்பவர் அகத்திய ரிஷி எவ்வளவு பழமையான ரிஷி என்பதற்கு ஒரு காரணம் காட்டுவார்: ரிக் வேதத்தில் வரும் பெண் தெய் வங்களான பாரதி, ஈலா, சரஸ்வதி என்ற கடவுளரை ஐந்து ரிஷிகள் மட்டும் இதே வரிசையில் பாடுவர். அவர்களில் அகத்தியரும் ஒருவர். ஏனைய ரிஷிகள் வரிசை மாற்றிப் பாடுவர்.

அகத்தியர் புகழ் பாடும் வேதங்கள் இவர் இரண்டு வர்ணத்தாருக்கு உரியவர் என்றும் செப்பும் — அதாவது தேவர்கள் அசுரர் (RV 1-179) ஆகிய இருவரும் ஒப்புக் கொள்ளும் முனிவர் என்று சொல்லலாம். இல்வலன், வாதாபி என்ற அரக்கரும் கூட இவரை விருந்துக்கழைத்த கதையை நாம் அறிவோம்.

அகத்தியர் இருக்கும் இடத்தில் நீர்தெளிவாக இருக்கும் (Agastyodaye jalani prasidanti ) என்ற வடமொழிப் பொன்மொழி இவருக்கும் கடலுக்கும் உள்ள தொடர்பைக் கட்டும் என்றும் இவர் கடலோடிகளின் காப்புத் தெய்வம் என்றும் ‘’ஆரியதரங்கிணி’’ என்னும் நூலை எழுதிய திரு கல்யாணராமன் (Mr A Kalyanaraman, author of Aryatarangini ) குறிப்பிடுவார். அவர்தம் நூலில் மயோரி- இந்துக்கள் தொடர்பு பற்றிய அவருடைய ஆராய்ச்சிகளை வெளியிட்டுள்ளார். இந்துக்களும் கூட பிண்டம் (அரிசிச் சோறு) வைக்கும் சிரார்த்த மந்திரத்தில் அகஸ்தியர் பெயரைச் சொல்லுவதை அவர் எடுத்துக் காட்டுகிறார்.

Contact swami_48@yahoo.com

சீனா, ஜப்பான், தமிழ் சிலப்பதிகாரம் அதிசய ஒற்றுமை!

waterfall clear
otowa girls

Three waterfalls at Kiyo Mizu Dera Temple in Kyoto

எழுதியவர்:—- கட்டுரை மன்னன் லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1318; தேதி:– 30 September 2014.

லண்டனில் எங்கள் குடும்ப நண்பர்கள் டாக்டர் ரெங்கநாதன் தம்பதியினருடன் நேற்று பேசிக் கொண்டிருந்தேன். ஜப்பானில் க்யோடோ (Kyoto) என்னும் நகருக்குப் போனபோது ‘மூன்று நீர்வீழ்ச்சிக் கோவிலை’ப் பார்த்ததாகவும் மூன்றாகப் பிரிந்து விழும் நீர்த்தாரையில் ஒரு நீர்த்தாரையின் நீரைக் குடித்தால் நீண்ட காலம் வாழலாம் என்றும் இன்னொன்றின் நீர் நல்ல அறிவைக் கொடுக்கும் என்றும் மற்றொன்று ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்றும் சொன்னார். அட, இதே போல தமிழ் காப்பியம் சிலப்பதிகாரத்திலும் இருகிறதே என்று சொன்னேன். ஆக இருவரும் வியப்பான செய்திகளைப் பரிமாறிக்கொண்டோம். இதோ அந்த விவரங்கள்:

ஜப்பானில் ஒடொவா மலை மீது கியோ மிசு டேரா (Kiyo Mizu Dera) என்ற போதிசத்வர் கோவில் இருக்கிறது. 800 ஆண்டுகளுக்கு முன்னர், ஜப்பானில் மிகப் பழமையான புத்தமதப் பிரிவு இந்தக் கோவிலைக் கட்டியது. இது கலை வேலைப்பாடு மிக்க ஒரு அற்புதமான பொக்கிஷம். இதனால் யுனெஸ்கோ நிறுவனம் இதை உலகப் பாரம்பர்ய சுற்றுலாத் தலம் என்று அறிவித்துவிட்டது.

கியோ மிசு தேரா என்றால் ‘’தூய நீர்ப்பெருக்கு’’ என்று பொருள். மலையில் இருந்து வரும் ஒரு சிற்றாற்றின் நீர் மூன்றாகப் பிரிந்து விழுகிறது. முன் சொன்னது போல ஒவ்வொன்றைக் குடித்தால் ஒரு பலன் கிட்டும். ஆயினும் மூன்றையும் ஒருவர் குடிப்பது பேராசைக்குச் சமம் என்று ஒரு ஐதீகம் இருப்பதால் எதேனும் இரண்டின் நீரை மட்டும் ஒரு கரண்டி மூலம் பிடித்து மக்கள் குடிக்கின்றனர்.

kiyomizudera_temple_kyoto

இந்தக் கோவிலின் வேறு சில சிறப்புகள்:
1).கோவிலின் முக்கிய மண்டபம் தேசிய கலைப் பொக்கிஷம். இங்கே 15 வர்ண ஓவிய அறைகள் இருக்கின்றன. 2) மூன்று பகோடாக்கள் கோபுரத்தை அலங்கரிக்கின்றன.3) நாற்பது அடி உயர மரத்தூண்கள் மீது ஒரு ஆணி கூட இல்லாமல் மண்டபம் அமைக்கப்பட்டது. இதில் 410 மரப் பலகைகளை இணைத்து மேடை போட்டுள்ளனர். 4) 11 தலைகளும் ஆயிரம் கைகளும் உடைய போதிசத்துவர் அங்கே இருக்கிறார். 5) பெரிய அலங்கார வாயில்கள் இருக்கின்றன. 6) பல முறை தீவிபத்துக்கு உள்ளான இக்கோவிலின் இப்போதைய அமைப்புகள் 400 ஆண்டுக்கு முன்னால்தான் கட்டப்பட்டன.

இந்த நீர்வீழ்ச்சி நீரைகுடித்தால் படிப்பு வரும் (அறிவு) என்பதால் நிறைய மாணவர்களும் இதை நோக்கிப் படை எடுக்கின்றனர்.

map
Kiyo Mizu Dera Temple map

சிலப்பதிகார அதிசயம்
சிலப்பதிகாரத்தில் இதே போன்ற நம்பிக்கை இருப்பதைக் காணமுடிகிறது. சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு வரும் கண்ணகியும் கோவலனும் வழியில் யாக யக்ஞங்களைச் செய்யும் ஒரு பிராமண அறிஞரைச் சந்தித்தனர். அவரிடம் மதுரைக்கு வழிகேட்ட போது அவர் கோவலனிடம் கூறுவதாவது.

பாதை ஓரிடத்தில் இரண்டாகக் கிளை விடும். அதில் வலப்பக்கமாகப் போனால் இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே மதுரைக்குப் போகலாம். இடப் பக்கமாகப் போவீரானால் மூன்று பொய்கைகள் இருக்கும்.

விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின்
புண்ணிய சரவணம் பவகாரணியோடு
இட்டசித்தி எனும் பெரபோகி
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை
முட்டாச் சிறப்பின் மூன்று உள.. – காடுகாண் காதை, சிலப்பதிகாரம்.

முதலில் திருமாலிருங்குன்றத்தைக் காண்பீர்கள். பின்னர் ஒரு குகை வரும். அதுவழியாகப் போனால் புண்ணிய சரவணம், பவகாரணி, இட்ட சித்தி என்ற மூன்று குளங்கள் இருக்கும். புண்ணிய சரவணத்தில் நீராடினால் ஐந்திரம் கற்ற பெருந்தமிழ் வல்லுனர் ஆவீர். பவகாரணியில் நீராடினால் சென்ற பிறப்பில் என்ன செய்ததால் இப்பிறப்பில் ஏன் இப்படிப் பிறந்தீர்கள் என்பதை அறியலாம். இட்ட சித்தியில் மூழ்கினாலோ நினைத்த பொருள் எல்லாம் கிட்டும். இதற்குப் பின் வரோத்தமை என்பவளைப் பார்ப்பீர்கள். அவள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லாவிடினும் அவள் உங்களை அக்கரையில் சேர்த்துவிடுவாள்.

இந்த மூன்று பொய்கை தரும் பலன்களும் ஓரளவு ஜப்பானிய நீர்வீழ்ச்சிப் பலன்களை ஒத்து இருக்கும். இரண்டு இடங்களிலும் புனித நீர் முன்னிலையில் தான் இப்படி அற்புதங்கள் நடகும். நாங்கள் மதுரையில் வசித்த காலத்தில் அடிக்கடி அழகர் கோவில் சென்று மலைமீதுள்ள பழமுதிர்ச் சோலைக்கும் அதையும் தாண்டி மேலேயுள்ள சிலம்பாற்று நீர்வீழ்ச்சிக்கும் செல்வோம். அங்கு சிலம்பாறு என்னும் ஆற்றின் நீர் ஜப்பானில் விழுவதுபோலவே மெல்லிசாக ‘’நூபுர கங்கை’’ என்ற பெயரில் விழும். அதில் குளிப்போம்.

Fulushouqi
Fu Lu Shou

சீனாவில் பூ– லூ – ஷூ

சீனாவிலும் கூட 800 ஆண்டுகளாக இப்படி ஒரு நம்பிக்கை இருக்கிறது. பூ– லூ – ஷூ (Fu Lu Shou) என்ற மூன்று நட்சத்திர தேவர்கள் இருப்பதாகவும், இவர்கள் மூவரும் சந்தோஷம், சௌபாக்கியம், நீண்ட ஆயுளை வழங்குவர் என்றும் சொல்லுவர். இந்த மூன்று தேவர்களும் இந்தியக் கடவுள் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனெனில் பூ என்னும் தேவன் குரு/வியாழன் (Jupiter) கிரகம் என்பர். லூ என்பவர் சப்தரிஷி மண்டலத்தில் இந்துக்கள் வணங்கும் வசிஷ்ட நடசத்திரம் (Ursa Major constellation) என்பர். வசிட்டர் மனைவி அருந்ததி பற்றி சங்கத் தமிழ் இலக்கியத்தில் பல பாடல்கள் வரும். மூன்றாவது நட்சத்திரமான சூ என்பவர் அகத்திய (Canopus) நட்சத்திரம் என்பர். தென் வானத்தில் ஜொலிக்கும் அகத்திய நட்சத்திரத்தை சீனாவின் வடகோடியில் உள்ளவர்கள் பார்க்கக்கூட முடியாது. ஆகவே இவர்கள் இந்தியரிடமிருந்தே இவற்றைக் கற்றனர்.

((அகத்திய நட்சத்திரம் வட அட்ச ரேகையில் வசிப்போருக்கு ஒரு எல்லை வரைதான் தெரியும். எடுத்துக்காட்டாக லண்டனில் வசிக்கும் நாங்கள் அகத்திய நட்சத்திரத்தைப் பார்க்கமுடியாது. இந்தியாவில் இருந்தபோது பிரகாசமான அகத்திய நட்சத்திரத்தையும் திரிசங்கு நட்சத்திரத்தையும் பார்த்து மகிழ்ந்தோம்.))

swami_48@yahoo.com

பட்டினத்தாரின் 31 முக்கிய பாடல்கள்

patti.temple
Sri Pattinathar Temple at Tiruvotriyur, Chennai

சிந்தனைச் சிற்பிகள் (ஜய வருடம்) 2014 அக்டோபர் மாத காலண்டர்
(( பட்டினத்தாரின் முக்கிய பாடல் மேற்கோள்கள் ))

Post No. 1316; Date: 29 செப்டம்பர் 2014
Prepared by London swaminathan (copyright)

பட்டினத்தார் பாடல்களிலிருந்து முக்கிய 31 மேற்கோள்கள் இந்த அக்டோபர் மாத காலண்டரை அலங்கரிக்கின்றன.

முக்கிய நாட்கள்: அக்டோபர் 2: சரஸ்வதி பூஜை, 3 விஜய தசமி/தசரா; 22, 23 தீபாவளி (தமிழ் நாட்டில் 22, வடக்கில் 23).
அமாவாசை:23; சுபமுஹூர்த்த நாள்:– 30; பௌர்ணமி – 8, ஏகாதசி- 4, 19

My Previous Articles on Pattinathar:
1.Alexander and Tamil Saint Pattinathar, Posted on 19th June 2013
2.Miracles at Crematorium, Posted on 11th February 2013
3.God’s Notebook, Posted on 16th March 2014
4.Tamil Saint Pattinathar’s Warning, Posted on 4th April 2014
5.பட்டினத்தாருடன் 60 வினாடி பேட்டி Posted on 25 ஜனவரி 2012

அக்டோபர் 1 புதன் கிழமை
பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா
திறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்கச்சி ஏகம்பனே

அக்டோபர் 2 வியாழக் கிழமை
“உலகப் பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க
பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்”

அக்டோபர் 3 வெள்ளிக் கிழமை
நாய்க்குண்டு தெண்டு, நமக்குண்டு பிச்சை, நமனை வெல்ல
வாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சரம், மதியாமல் வரும்
பேய்க்குண்டு நீறு, திகைப்புண்டு நின்ற பிறவிப்பிணி
நோய்க்குண்டு தேசிகன் தன் அருள், நோக்கங்கள் நோக்குதற்கே (43,பொது)

அக்டோபர் 4 சனிக் கிழமை
கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே (2, திருவேகம்பமாலை)

அக்டோபர் 5 ஞாயிற்றுக் கிழமை
மனையாளும் மக்களும் வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே, வழிக்கு ஏது துணை ?
தினையாமனவு எள் அளவாகினும் முன்பு செய்த தவம்
தனை ஆள என்றும் பரலோகம் சித்திக்கும் சத்தியமே (12,பொது)

pattinathar wrapper0002

அக்டோபர் 6 திங்கள் கிழமை
என் பெற்ற தாயாரும் என்னைப் பிணம் என்று இகழ்ந்துவிட்டார்
பொன் பெற்ற மாதரும் போ என்று சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்
உன் பற்று ஒழிய ஒரு பற்றுமிலை உடையவனே (28,பொது)

அக்டோபர் 7 செவ்வாய்க் கிழமை
முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.

அக்டோபர் 8 புதன் கிழமை
காம்பவிழ்த்துதிர்ந்த கனியுறுக் கண்டு / வேம்புகட்கெல்லாம் விதானம் அமைத்தும்
விரும்பின கொடுக்கை பரம்பரற்கென்று / புரி‘குழல்தேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுண தேவர்’’

அக்டோபர் 9 வியாழக் கிழமை
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே

அக்டோபர் 10 வெள்ளிக் கிழமை
வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தை
போதுற்ற எப்போதும் புகலும் நெஞ்சே? இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியம் என்?
காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே

pattinathar3

அக்டோபர் 11 சனிக் கிழமை
உடை கோவணம் உண்டு, உறங்கப் புறத் திண்ணை உண்டு உணவு இங்கு
அடை காய் இலை உண்டு, அருந்தத் தண்ணீர் உண்டு, அருந் துணைக்கே
விடை ஏறும் ஈசர் திரு நாமம் உண்டு இந்த மேதினியில்
வட கோடு உயர்ந்தென்ன, தென் கோடு சாய்ந்தென்ன வான் பிறைக்கே?

அக்டோபர் 12 ஞாயிற்றுக் கிழமை
வீடு நமக்குத் திரு ஆலங்காடு, விமலர் தந்த
ஓடு நமக்கு உண்டு வற்றாத பாத்திரம்

அக்டோபர் 13 திங்கள் கிழமை
தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்

அக்டோபர் 14 செவ்வாய்க் கிழமை
முன்னை இட்ட தீ முப்புறத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ மூள்க மூள்கவே

அக்டோபர் 15 புதன் கிழமை
ஒன்று என்று இரு; தெய்வம் உண்டு என்று இரு
உயர் செல்வம் எல்லாம் அன்று என்று இரு; பசித்தோர் முகம் பார்
நல் அறமும் நட்பும் நன்று என்று இரு; நடு நீங்காமலே நமக்கு இட்ட படி
என்றுன்றிரு; மனமே உனக்கு உபதேசம் இதே!

pattinathar2

அக்டோபர் 16 வியாழக் கிழமை
வாளால் மகவு அரிந்து ஊட்ட வல்லேன் அல்லன்; மாது சொன்ன
சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன்; தொண்டு செய்து
நாள் ஆறில் கண் இடத்து அப்ப வல்லேன் அல்லன்; நான் இனிச் சென்று
ஆள் ஆவது எப்படியோ திருக் காளத்தி அப்பனுக்கே.

அக்டோபர் 17 வெள்ளிக் கிழமை
ஆரூரர் இங்கு இருக்க அவ்வூர் திருநாள் என்று ஊர்கள் தோறும்
உழலுவீர்;–நேரே உளக் குறிப்பை நாடாத ஊமர்காள்! நீவீர்
விளக்கு இருக்க தீ தேடுவீர்

அக்டோபர் 18 சனிக் கிழமை
நேமங்கள் நிட்டைகள் வேதங்கள் ஆகம நீதி நெறி
ஓமங்கள் தர்ப்பணம் சந்தி செப மந்திர யோக நிலை
நாமங்கள் சந்தனம் வெண்ணீறு பூசி நலமுடனே
சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே

அக்டோபர் 19 ஞாயிற்றுக் கிழமை
உளியிட்ட கல்லையும் ஒப்பற்ற சாந்தையும் ஊத்தை அறப்
புளியிட்ட செம்பையும் போற்றுகிலேன்

அக்டோபர் 20 திங்கள் கிழமை
ஆசாரம் இல்லா அசடருடன் கூடிப் / பாசாங்கு பேசிப் பதி இழந்து கெட்டேனே
குரு மார்க்கம் இல்லா குருடருடன் கூடிக் / கரு மார்க்கத்துள்ளே கருத்தழிந்து கெட்டேனே
ஆலம் அருந்தும் அரன் பெருமை எண்ணாமல் / பாலர் பெண்டிர் மெய் என்று பதி இழந்து கெட்டேனே

pattinathar1

அக்டோபர் 21 செவ்வாய்க் கிழமை
நரிக்கோ கழுகு பருந்தினுக்கோ வெய்ய நாய் தனக்கோ
எரிக்கோ விரையெதுக்கோ விறை வாகச்சி ஏகம்பனே

அக்டோபர் 22 புதன் கிழமை
ஈயா மனிதரை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பனே

அக்டோபர் 23 வியாழக் கிழமை
சொன்னபடி நில்லார் அறத்தை நினையார் நின் நாமம் நினைவிற் சற்றும் இலார் இருந்தென் இறந்தென் புகல் கச்சி ஏகம்பனே

அக்டோபர் 24 வெள்ளிக் கிழமை
பட்டப் பகலில் வெளிமயக்கே செயும் பாவையர் மேல்
இட்டத்தை நீ தவிர்ப்பாய் விறை வாகச்சி ஏகம்பனே

அக்டோபர் 25 சனிக் கிழமை
உருகி எலும்பு கருகி அடங்கி ஓர் பிடி நீறுமிலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே

pattinathartemple19

அக்டோபர் 26 ஞாயிற்றுக் கிழமை
பாவலன் ஒருவன் செந்தமிழ்க்கிரங்கிப்
பரவையாருடைய மாற்ற ஏவலாளாகி இரவெலாம்
உழன்ற இறைவனே ஏக நாயகனே

அக்டோபர் 27 திங்கள் கிழமை
உண்டதே உண்டு உடுத்ததே உடுத்தும்
அடுத்தடுத்து உரைத்ததே உரைத்தும்
கண்டதே கண்டும் கேட்டதே கேட்டும்
கழிந்தன கடவுள் நாள் எல்லாம்

அக்டோபர் 28 செவ்வாய்க் கிழமை
நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியந் தேடி நலமொன்றும் அறியாத நாரியரைக் கூடி /
பூப்பிளக்கப் பொய்யுரைத்துப் புற்றீசல் போலப் புலபுலெனக் கலகலனப் புதல்வர்களைப் பெறுவீர் / காப்பதற்கும் வழி அறியீர் கைவிடவும் மாட்டீர் கவர் பிளந்த மரத்துளையிற் கால் நுழைத்துக் கொண்டே / ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல அகப்பட்டீர் கிடந்து உழல அகப்பட்டீரே.

அக்டோபர் 29 புதன் கிழமை
முதல் சங்கு அமுதூட்டு மொய்குழலாராசை
நடுச் சங்கு நல் விலங்கு பூட்டும் – கடைச் சங்கம்
ஆம்போது அது ஊதும் அம்மட்டோ விம்மட்டோ
நாம் பூமி வாழ்ந்த நலம்.

அக்டோபர் 30 வியாழக் கிழமை
ஆசைக் கயிற்றிலாடு பம்பரத்தைக்
காசிற் பணத்திற் சுழலுங் காற்றாடியை
மக்கள் வினையின் மயக்குந் திகிரியை- – – –
அம்பலத்தரசே அடைக்கலம் உனக்கே

அக்டோபர் 31 வெள்ளிக் கிழமை
“தம்மை மறந்து நின்னை நினைப்பவர் / செம்மை மனத்தினும் தில்லை மன்றினும் நடம்
ஆடும் அம்பல வாண!——————– / நிந்தமர் பெயர் எழுதிய வரிநெடும் புத்தகத்து
என்னையும் எழுத வேண்டுவன், நின்னருள் / ஆனை வைப்பில், காணொனா அணுவும்
வானுற நிமிர்ந்து காட்டும்.”

—-பட்டினத்தாரின் கோயில் நான்மணி மாலை

Pictures are taken from pattinatharkasi.blogspot.com and other sites;thanks.
contact swami_48@yahoo.com

அசோகனுக்கு ஒரே நாளில் 84,000 கடிதங்கள்!!

letter-writing

ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியவர் — லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1314; தேதி:– 28 September 2014.

மகாவம்ச ஆராய்ச்சிக் கட்டுரை வரிசையில் இது 12-வது கட்டுரை.

மகாவம்சத்தில் கடிதம் எழுதும் கலை!

இந்தியர்களுக்கு எழுதத் தெரியுமா, தெரியாதா? அப்படி எழுதத் தெரிந்தால் அதை யாரிடம் கற்றார்கள்? என்று 100 ஆண்டுகளுக்கு முன் வெள்ளைக்காரர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி —ஆங்கிலத்தில் எழுதி!!!!! — பல கட்டுரைகளை வெளியிட்டார்கள். இந்தியர்களுக்கு எழுதத்தெரியாது அதை சுமேரியர்கள் அல்லது பீனிசியர்கள் இடமிருந்து கற்றார்கள் என்று எழுதி முடித்தார்கள். மார்கசீய வரலாற்று ‘’அறிஞர்களும்’’ ஆமாம், ஆமாம் அது உண்மையே என்று முத்திரை குத்தினார்கள்.

அதாவது கிரேக்கர்கள், எகிப்தியர்கள், சுமேரியர்கள், மாயா இன மக்கள், சீனர்கள் ஆகிய எல்லோரும் எழுத்துக்களைத் தானாக உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள். ‘’முட்டாள் இந்தியர்கள்’’ மட்டும் எதையுமே இறக்குமதி செய்யும் ‘’கடன் வாங்கிகள்’’ என்று முத்திரை குத்தினர். நம்மூர் திராவிடங்களுக்கும், அதுகளுக்கும் இதுகளுக்கும் ஒரே மகிழ்ச்சி. ஆமாம் ஆமாம், ஆரியப் பார்ப்பனர்கள் சைபிரீயவிலிருந்து வந்த காட்டு மிராண்டிகள் என்று மேடை போட்டு முழக்கி தமிழர்களுக்கு இருந்த மூளை எல்லாவற்றையும் மழுங்கடித்தனர்.

உண்மை என்ன?

கடிதம் எழுதும் கலை, 2500 ஆண்டுகளுக்கு முன் எப்படி வளர்ச்சி அடைந்தது என்பதற்கு மகாவம்சம் என்னும் இலங்கை வரலாற்று காவியத்தில் குறந்தது ஆறு எடுத்துக்காட்டுகள் உள.
அசோகன் என்னும் மாமன்னன் கல்லிலே எழுத்துக்களைப் பொறித்ததால் நமக்குக் கொஞ்சமாவது தடயங்கள் கிடைத்தன. அதே காலத்தில் – 2300 ஆண்டுகளுக்கு முன்னர் —- இலங்கையிலும் கல்வெட்டுகள் உள. இதிலிருந்து நாம் அறிவதென்ன?

காஷ்மீர் முதல் கண்டி வரை எழுத்துக்கள் இருந்தன. அது மட்டுமல்ல. அதை எல்லோரும் படிக்க முடியும் அளவுக்கு அறிவுத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அப்படி இல்லையானால் ஆப்கனிஸ்தான் முதல் கர்நாடகம் வரை அசோகன் கல்வெட்டில் எழுதி இருக்கமாட்டான்.

அது சரி! 2300 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலவரம் என்ன? நம்மிடையே இருக்கும் சிந்து சமவெளி எழுத்துக்கள் 4000 ஆண்டு பழமை உடையவை. ஆனால் அவர்கள் என்ன எழுதினர் என்பதை இதுவரை கண்டறிய முடியவில்லை. மேலும் அசோகனுக்கும் சிந்து வெளி நாகரீகத்திற்கும் இடையே 1500 முதல் 2000 ஆண்டுவரை இடைவெளி இருக்கிறது. இந்தியர்கள் எழுத்தையே மறந்துவிட்டார்களா?

இல்லை! இந்தியர்கள் எழுதிக் கொண்டேதான் இருந்தார்கள். ஆனால் மரவுரியிலும், பனை ஓலைகளிலும் எழுதினார்கள். அவை சில நூறு ஆண்டுகளுக்கு மேல் இரா. அழியக்கூடிய பொருட்கள்.
இதற்கு என்ன ஆதாரம்?

சிசுபாலவாதம் என்னும் நாடகத்தில் ருக்மினி, கிருஷ்ண பரமாத்மாவுக்கு எழுதிய காதல் கடிதம் பற்றி வருகிறது.

Love Letters from Ancient India – posted on 21st April 2012
Techniques of Secret Writing in India –posted on 19th March 2013

இதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி இருக்கிறேன். பெண்கள் ரகசிய சங்கேத மொழியில் எப்படிக் கடிதம் எழுத வேண்டும் என்று 64 கலைகளைப் பட்டியலிட்டுக் கொடுத்த காமசூத்திர ஆசிரியர் வத்ஸ்யாயன மகரிக்ஷி கற்றுத் தருகிறார். அதையும் மேற்கூறிய இரு கட்டுரைகளில் காண்க. பத்தாம் நூற்றாண்டில் சிலை வடித்த சிற்பிகளும்கூட பெண்கள் கடிதம் எழுதுவது போல சிலை வடித்தானேயன்றி ஆண்கள் எழுதுவது போல வடிக்கவில்லை!!

கிருஷ்ணர் காலம் கி.மு. 3100-க்கு முன்னர். அதாவது கலியுகம் தொடங்கியதற்கு முன்னர். அதே காலத்தில் வாழ்ந்த வியாசன் என்னும் மாமுனிவன் மஹாபாரதம் என்னும் உலகிலேயே நீண்ட காவியத்தை எழுத முயன்றபோது பிள்ளையாரை அழைத்ததையும் அதற்கு ஒருவருக்கு ஒருவர் ‘’நிபந்தனை– பதில் நிபந்தனை’’ என்று போட்ட கதையையும் நாம் அறிவோம்.

letter writing

மஹாபாரதத்துக்கு முந்தி நடந்தது ராமாயணம். அதில் ராமன் என்ற பெயர் அம்புகளில் எழுதப்பட்டதையும். இலங்கைக்கு கடல் பாலம் கட்டுகையில் ராம என்று எழுதிய கற்கள் மிதந்ததையும் நாம் கதைகளில் படிக்கிறோம். ஆனால் இவைகளுக்கு தொல்பொருட் துறை சான்றுகள் இல்லாததால் அறிஞர் பெருமக்கள் ஏற்கமாட்டார்கள். போகட்டும்.

மகாவம்சத்திம் வரும் சாட்சியங்களைப் பார்ப்போம். அத்தியாயம் 5-ல் ஆசோகனுக்கு வந்த கடிதங்கள் பற்றி சொல்லப்படுகிறது. 84,000 ஊர்களிலும் புத்த விகாரைகள் கட்டி முடிக்கப்பட்ட செய்தி ஒரே நாளில் கடிதங்கள் மூலம் வந்ததாக மகாவம்சம் இயம்பும். இதிலிருந்து நாம் அறிவதென்ன?

அருமையான அஞ்சல்துறை அக்காலத்தில் செயல்பட்டது. ஒரே நேரத்தில் மன்னன் வீட்டில் (அரண்மனையில்) கடிதங்கள் டெலிவரி ஆயிற்றூ!! ஐயா! 84,000 ஊர்கள் என்பது மிகைப்படுத்த எண்ணிக்கையாக இருக்கிறதே என்று சிலர் அங்கலாய்க்கலாம். அப்படிப்பட்டவர்கள் கபிலர் பாடிய புறநானூற்றுப் பாடலை நினைவிற் கொள்ள வேண்டும். பாரி என்னும் சிற்றரசன் வசத்தில் இருந்த 300 ஊர்களையும் பாரி வள்ளல் ஏற்கனவே தானம் செய்துவிட்டதாக மூவேந்தர்களுக்குச் செய்தி தருகிறார் கபிலர். சின்ன பாரியிடமே 300 ஊர்கள் இருந்தால் ஆப்கனிஸ்தான் முதல் கர்நாடகம் வரை ஆண்ட அசோகனிடம் 84,000 ஊர்கள் இருந்ததில் வியப்பில்லையே. பிற்காலத்தில் வந்த யுவாங் சுவாங் போன்ற சீன யாத்ரீகர்களும் இதை உறுதி செய்கின்றனர்.

சுவையான காதல் கடிதம்

அத்தியாயம் 22-ல் காதல் கடிதம், அதைத் தொடர்ந்து நடந்த படுகொலைச் செய்திகள் வருகின்றன.. கோதபயனுடைய மகன் காகவன தீசன் ராஜாவாகப் பதவியேற்ற காலத்தில் நடந்தது இது. அவனுடைய மனைவி பெயர் விஹாரதேவி. புத்த விஹாரத்தின் பெயரில் ஒரு ராணியா என்று வியப்போருக்கு மஹாவம்சம் விளக்கம் தருகிறது.

கல்யாணி என்னும் பகுதியை தீசன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் தம்பி உதிகன் என்பான் ராணியையே (அண்ணன் மனைவி) காதலித்தான். மன்னனுக்கு இது தெரிந்தவுடன் அவன் தம்பி ஊரை விட்டே ஓடிவிட்டான். இருந்தாலும் காதல் தீ அணையவில்லை. ஒருவருக்கு புத்தபிட்சு வேடம் போட்டுக் காதல் கடிதம் கொடுத்து அனுப்பினான். அந்தத் ‘’திறமைசாலி’’ அரண்மனை வாயிலில் இருந்த தேரர் குழுவுடன் கூட்டத்தோடு கூட்டமாக உள்ளே சென்று விடுகிறான். போஜனம் முடிந்து ராஜா ராணி கிளம்பும் தருணத்தில் ராஜா முன்னே சென்றார். ராணி பின்னே ஏகினாள். ராணியின் காலடியில், போலி புத்தபிட்சு காதல் கடிதத்தை வீசி எறியவே அந்தக் காகித சப்தம் கேட்டு ராஜா திரும்பிப் பார்க்கிறார். நடந்ததை அறிந்தவுடன் உண்மையை விசாரித்தரியாமல் புத்த குருவான தேரரையும் போலி புத்த பிட்சுவையும் தலையைச் சீவி கடலில் எறிந்து விடுகிறான்.

உண்மையான தேரரையும் மன்னன் கொன்றதால் இலங்கையை சுனாமி தாக்கி ஊருக்குள் கடல் அலைகள் பொங்கி வந்தன. உடனே கடல் தேவனின் கோபத்தை தணிக்க தனது அழகிய மகள் தேவியை பொற்கலத்தில் வைத்து கடலில் மிதக்க விடுகிறான். அது லங்கா விஹரை அருகே ஒதுங்கியது. அவளைக் காகவனதீசன் கல்யாணம் செய்துகொண்டு ராணி ஆக்குகிறான். அவள் பெயரே விஹார தேவி.

இதில் நமக்கு முக்கியமான விஷயம் புத்தபிட்சு மூலம் ராணிக்குப் போன லிகிதமே (கடிதம்)!

அத்தியாயம் 8-ல் 2500 ஆண்டுகளுக்கு முன்னர், முதல் மன்னன் விஜயன் எழுதிய கடிதம் பற்றிய செய்தி கிடைக்கிறது. அவன் முதல் மனைவி யக்ஷிணி என்பதால் அவளையும் அவள் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளையும் விரட்டிவிட்டான். பின்னர் கல்யாணம் கட்டிய தமிழ்ப் பெண் மூலம் குழந்தை கிடைக்கவில்லை. சாகப்போகும் தருணத்தில் தன் சொந்த நாடான வங்க தேசத்துக்கு கடிதம் அனுப்பி தன் தம்பியை வரவழைக்கிறான். இதன் மூலம் 2500 ஆண்டுகளுக்கு முன் இருந்த அஞ்சல் சேவையை (தபால் துறை) நாம் அறிய முடிகிறது

letter writing4

அத்தியாயம் 10-ல் பாண்டுகாபயனுக்கு அரசன் எழுதிய கடிதம் பற்றிப் படிக்கலாம். அவன் மாமன்மார்களை வெற்றி கொண்டு படைகளுடன் முன்னேறி வந்தவுடன் அரசன் கடிதம் அனுப்புகிறான். கங்கைக் கரையைத் தாண்டாதே. அதற்குப்பின் நீ வசப்படுத்திய பகுதிகளை வைத்துக் கொள் என்று கடிதம் கூறியது. ஆக உள்நாட்டு கடித சேவைபற்றியும் நாம் அறிய முடிகிறது.

அத்தியாயம் 33-ல் ரோஹனாவில் கலகம் செய்த பிராமணனுக்கு அரசன் அனுப்பிய செய்தி வருகிறது முதலில் ஏழு தமிழர்களுடன் சேர்ந்து கொண்டு அந்த பிராமணன் ‘’ஆட்சியை ஒப்படைத்துவிடு’’ என்று மன்னன் காமனிக்கு கடிதம் அனுப்புகின்றான். அவன் கலகம் செய்த பிராமணன் தீசனுக்கு பதில் அனுப்புகிறான். ‘’இந்த அரசு இப்போது உன்னுடையது முதலில் தமிழர்களைப் போரிட்டு வெல்வாயாக’’– என்று அரசன் பதில் கூறுகிறது.

அத்தியாயம் 23-ல் வேறு ஒரு தண்டச் சோறு உண்ணூம் இளைஞன் பற்றிய கதை வருகிறது. சங்கன் என்பனுக்கு ஏழு பிள்ளைகள் அதில் நிமிலன் என்பவன் வெட்டிச் சோறு உண்டு பொழுதை வீணாய்க் கழித்துவந்தான். அவன் சகோதர்களுக்கு ஏக கோபம். அப்போது அந்தப் பகுதிக்குக் காவலுக்குக் குடும்பத்துக்கு ஒருவர் வரவேண்டும் என்று கட்டளை இட்ட உடன் அவனே சென்று இளவரசனைக் கண்டான்.

இளவரசன் இந்த ஆள்– நல்ல உடல் வலுவோடு இருக்கிறான். இவனுக்கு ஒரு சோதனை வைப்போம் என்று கருதி தொலை தூரத்தில் என்னுடைய பிராமண நண்பன் குண்டலி வசிக்கிறான். அவனிடம் இந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு அவன் கொடுக்கும் வெளிநாட்டுச் சரக்குகளை வாங்கி வா என்கிறான். அவன் அந்தத் தேர்வில் வெற்றி பெறவே அவனுக்கு பெரும் பதவிகள் கிடைக்கின்றன. இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் பிராமணனுக்கு அனுப்பிய கடிதம் என்பதே!

கட்டுரையில் நாம் கண்டது என்ன?
2500 ஆண்டுகளுக்கு முன்னர், கண்டி முதல் காஷ்மீர் வரை கடிதப் போக்குவரத்து நடந்தது. மக்கள் எல்லோருக்கும் எழுதப் படிக்கத் தெரியும். காதல் கடிதம் முதல் மிரட்டல் கடிதம் வரை பலவகையான கடிதங்கள் எழுதப்பட்டன. அசோகன் காலத்தில் பிரம்மாண்டமான கடிதப் போக்கு வரத்து நடந்தது. இந்த எழுத்துக் கலை ராமாயண, மஹாபாரத காலத்திலேயே தோன்றிவிட்டது.

வளர்க கடிதம் எழுதும் கலை!! வாழ்க கடிதம் எழுதுவோர்!!

ரோம் நகரில் 700 மித்ரன் கோவில்கள்!

vatican mithra
Mithra in Vatican Museum

தொகுத்து வழங்குபவர்- கட்டுரை மன்னன் லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்..1311; தேதி- 26 செப்டம்பர் 2014

லண்டன் நகரில் இருந்து வெளிவரும் ‘டெய்லி டெலிகிராப்’ (Daily Telegraph) பத்திரிக்கையில் சில நாட்களுக்கு முன் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது. லண்டனில் 60 ஆண்டுகளுக்கு முன் மித்ரனென்னும் தெய்வத்தின் கோவில் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியதன் அறுபதாவது ஆண்டு தின நினைவாக (60th Anniversary) இக்கட்டுரை வெளியானது. அதில் கண்ட வியப்பான, சுவைமிகு தகல்களை மேலும் மூன்று என்சைக்ளோபீடியா தகவல்களுடன் தொகுத்து அளிப்பேன்.

பிரிட்டனை ரோமானியர்கள் 400 ஆண்டுக்காலம் ஆண்டனர். ஆகையால் முதல் 4 நூற்றாண்டுகளைச் சேர்ந்த சின்னங்கள் லண்டனில் ஆண்டுதோறும் கிடைத்து வருகின்றன. சென்ற ஆண்டு மட்டும் 10,000 ரோமானியப் பொருட்கள் கிடைத்தன. இதில் 250 ஜோடி தோல் (Leather Shoes) செருப்புகள், மட்பாண்டங்கள், கோப்பைகள், தட்டுகளும் அடங்கும். ரோமானியரின் ஒரு சின்னமான கழுகும் அதன் வாயில் பாம்பும் உடைய (Eagle and Snake) ஒரு கற்சிலையும் அண்மையில் கிடைத்தது.

மித்ரன் யார்?

மித்ரன் (Vedic God Mitra) என்பது வேத காலத்தில் வழங்கப்பட்ட ஒரு தெய்வம். வியப்பான விஷயம் என்ன வென்றால் இன்றும் பிராமணர்கள் நாள்தோறும் செய்யும் சந்தியா வந்தனத்தில் இந்த தெய்வத்தை வழிபடுகின்றனர். சூரிய நமஸ்காரம் செய்வோர் சொல்லும் முதல் மந்திரம் “ஓம் மித்ராய நம:”. மித்ரன் என்ற சொல்லுக்கு சூரியன், ஒப்பந்தம், நண்பன் (Sun, Contract, Friend) என்ற பொருள் உண்டு. விஷ்ணு சர்மா எழுதிய பஞ்ச தந்திரக் கதைகளில் ஒரு தந்திரம் மித்ர பேதம் என்பதைப் பலரும் அறிவோம்.

mithraeum in Rome hidden

Mithra hidden underground in Rome.

இதை எல்லாம் விட வியப்பான விஷயம் மித்ரன் பொறித்த களிமண் பலகைக் கல்வெட்டு சிரியா- துருக்கி ஆகிய முஸ்லீம் நாட்டு பிதேசத்தில் கிடைத்ததாகும். கி.மு. 1380 ஆண்டில் மிட்டனிய (Mittanian) வம்ச அரசன் ஒருவன் பக்கத்து நாட்டுடன் சமாதான நட்புறவு ஒப்பந்தம் செய்து கொண்டான். மிட்டனிய வம்சம் வேத கால இந்துக்கள் ஆவர். அவர்கள் மித்ரன், வருணன், இந்திரன், நாசத்யர்கள் (அஸ்வினி தேவர்கள்) பெயரில் சத்தியப் பிரமாணம் செய்து சமாதான ஒப்பந்தம் நிறைவேற்றினர். ஆகவே 4000 ஆண்டுகளாக மித்ரன் வழிபாடு நடக்கிறது!!!

மித்ரன், காலை நேர தெய்வம், வருணன், இரவு நேர தெய்வம். நம்மை எல்லாம் சூரியன், சந்திரன் போல எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். நல்லாட்சியை மலர வைப்பதும் தீயோரை நையப் புடைப்பதும், விதிகள் (ருதம்) ஒழுங்கு, கட்டுப்பாடு ஆகியனவற்றைச் செயல் படுத்துவதும் இவர்கள்தம் பணி என்று வேதங்கள் முழங்குகின்றன.

சில விஞ்ஞானிகள் பாசிட்டிவ், நெகட்டிவ் (Positive & Negative energy) என்ற இருவகை சக்திகளையே இந்துக்கள் மித்ர—வருண என்று சொன்னார்கள் என்பர். ஏனெனில் வேதத்தில் மித்ர—வருணன் என்று ஜோடியாகவே சொல்லுவர். பிரித்துச் சொல்வது அபூர்வம்.

mithraeum-san-clemente-8966p40
Mthra temple under San Clementine church.

ரோமானிய மித்ரன்

ரோமானிய படை வீரர்கள் இடையே 2000 ஆண்டுகளுக்கு முன்னரே மித்ரன் (Mithras) வழிபாடு பரவிவிட்டது. இவர்கள் ஏது காரணத்தினாலோ மித்ரன வழிபாட்டை ரகசியக் காப்பு பிரமாணத்தோடு, பாதாள குகைகளிலும், அறைகளிலும் நடத்தினர். ஒரு நேரத்தில் ரோம் நகரில் மட்டும் 700 மித்ரன் கோவில்கள் இருந்தன. ரோமானிய மித்ரன், ஈரான் வழியாக வந்த மித்ரன் என்பதால் பாரசீகக் குல்லாயைக் காணலாம். பாரசீக மித்ரன், (Azura Mazda) அசுர மஸ்தாவுடன் சேர்ந்தவன் இவர்கள் மித்ரன், ஒரு காளை மாட்டை கொல்லுவது போல சிலைகள் வடித்துள்ளனர். இதுவே ரோமாபுரி முழுதும் காணக்கிடக்கும். இந்தக் காளையைக் கொல்லும் சின்னம் வானியல் தொடர்பான சின்னமாகும். உண்மையில் காளை வதை அல்ல.

ரோமானியர், காளையை பலியிட்டு வணங்குவர். ஆயினும்அக் காளை வழிபாடு வேறு ஒரு பெண் தெய்வத்துகானதாகும்.

mithraism-carvings-ancient-rome

பாரசீக (ஈரான்) மித்ரன்

பாரசீக நாட்டில் வாழ்ந்த சொராட்ஸ்ரர் (Zoroaster) இந்தியாவின் குஜராத்/சௌராஷ்ட்ர (Saurashtra= Zoroastra) மாநிலத்தில் இருந்து சென்றவர் என்பது காஞ்சி மஹாபெரியவரின் கணிப்பு. அவரது காலமும் கி.மு.800-ஐ ஒட்டியதே. . அவர் வேதத்தின் ஒரு பகுதியை தலை கீழாக மாற்றி வைத்துக் கொண்டார். வேதம் அசுரன் என்று சொன்னால் அவர் தேவர் என்பார். ஆயினும் அவர்களும் தீயை வழிபடுவர், பூணூல் போட்டுக் கொள்வர். பல வகைகளில் ஒருமைப்பாடு காணலாம். அவர்களுடைய மித்ரன் நான்கு குதிரை பூட்டிய ரதத்தில் செல்லும் சூரியனாகவும், போர்த் தெய்வமாகவும், நீதி தேவனாகவும் வழிபடப்பட்டான். இந்த தெய்வம் அவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் ரோமானிய சாம்ராஜ்யத் துக்குள் நுழையும்போது இன்னும் உருமாறிப்போனார். எல்லோரும் ஒப்புக் கொள்ளக்கூடிய ஒரு விஷயம் இவர் முதலில் வேதகால தெய்வம் என்பதாகும்.

Mithras in bath

ரோம் ஆட்சி எங்கு எங்கெல்லாம் பரவியதோ அங்கு எல்லாம் ரோமானிய படைவீரர்கள் இந்த தெய்வத்தையும் கொண்டு சென்றனர். லண்டனில் இவரைப் போற்றும் கல்வெட்டுகளும் கிடைத்தன. இப்போது உலகம் முழுதுமுள்ள மியூசியங்களில் மித்ரன் சிலைகளைக் காணலாம். இந்துக்கள் மட்டும் உள்ளத்தில் மித்ரன் வழிபாடு செய்வர். மற்றவர்கள் மியூசியத்தில் காட்சிப்பொருளாகக் காண்பர்.
வாழ்க மித்ரன் புகழ்!

–சுபம்–

மகாவம்ச பொன்மொழிகள்

MINOLTA DIGITAL CAMERA

தொகுத்து வழங்குபவர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்..1305; தேதி- 23 செப்டம்பர் 2014
மஹாவம்ச ஆய்வுக் கட்டுரை வரிசையில் இது பத்தாவது கட்டுரை.

மஹாவம்சம் என்ற பாலி மொழி நூல் இலங்கையின் வரலாற்றையும், இலங்கையில் புத்தமதம் தோன்றி வளர்ந்த வரலாற்றையும் இயம்பும் ஒரு நல்ல நூல். கொஞ்சம் புத்தமத ஆதரவு தூக்கலாக இருந்த்போதும் நிறைய வரலாற்று ரகசியங்கள் இதில் பொதிந்து கிடக்கின்றன. மொத்தம் 37 அத்தியாயங்கள் உள்ளன. இந்தக் கட்டுரையில் அதில்உள்ள சில பொன்மொழிகளை மட்டும் காண்போம்.

பயன்படுத்தும் துணை நூல்:–
மகாவம்சம், தமிழாக்கம் எஸ். சங்கரன், சமுதாயம் பப்ளிகேஷன்ஸ், சென்னை, 1962, விலை ரூ.25

அத்தியாயம் 36: அரச போகம்
பெருமைக்குரிய பல காரியங்களைச் செய்ய அரசுரிமை ஆதாரமாக இருப்பது போலவே, பல அநீதிகளுக்கும் காரணமாக இருக்கிறது. இதை உணர்ந்து நடக்கும் பக்திமான்கள் அரச போகம் குறித்து ஆனந்தம் அடைய மாட்டார்கள். அதை விஷத்துடன் கலந்த இனிய உணவாகக் கருதியே நடப்பார்கள்.

அத்தியாயம் 35: அறிவாளிகளும் மூடர்களும்
அறிவுடையவர்கள் பெருமைக்குரிய பல காரியங்களைச் செய்து பயனற்ற செல்வத்தைப் பயன்படுத்தி மதிப்பிட முடியாத அளவு பயன் பெறுகிறார் கள். ஆனால் மூடர்கள் குருட்டுத்தனமாக இன்பத்தை அனுபவிப்பதற்காக பெரும் தீமைகளைப் புரிகிறார்கள்.

அத்தியாயம் 34: பெரும் பதவி
கர்வத்தையும், சோம்பேறித்தனத்தையும் வென்ற, பாசங்களிலிருந்து விடுபட்ட அறிவுடையோர், பெரும்பதவியை அடையும்போது மக்களுக்குத் தீங்கு செய்யாமல் பெருமைக்குரிய பல காரியங்களைச் செய்து மகிழ்ச்சி அடைவர். பக்தியுடன் பல நல்ல காரியங்களைச் செய்வர்.

அத்தியாயம் 33: பேராசை
அறிவுள்ளவர்கள் ஆட்சிக்கு வருகையில் தம்முடைய மகிழ்ச்சிக்காகவும் மற்றவர் மகிழ்ச்சிக்காகவும் பாடுபடுகிறார்கள். ஆனால் அறிவில்லாத வர்கள் தாங்கள் பெற்ற செல்வத்தை தமக்கோ பிறருக்கோ பயன்படுத்து வது இல்லை. மேலும் மேலும் பணம் சேர்க்கவேண்டும் என்ற பேராசையே இதற்குக் காரணம்.

அத்தியாயம் 32: சொர்க்கம்
நல்வாழ்வு நடத்தி பெருமைக்குரிய செயல்களைப் புரிந்தோர் தமது சொந்த வீட்டுக்குள் நுழைவதைப் போல சொர்க்கத்துக்குள் நுழைவார்கள். ஆகையால் அறிவுள்ளோர் பெருமைக்குரிய செயல்களைச் செய்வதில் மகிழ்ச்சி கொள்வார்களாக !

SirLanka.Buddhism

அத்தியாயம் 30: புத்தரின் அஸ்தி
உள்ளத்தில் நம்பிக்கை உடையவன் அருள்பெற்ற ஞானி புத்தருக்கு அவர் உயீரோடு இருகும்போதே வணக்கம் செய்திருப்பான். பின்னர் மனித குல விமோசனத்துக்காக அவர் பிரித்தளித்த அவரது அஸ்திக்கும் மரியாதை செலுத்துவான்.

அத்தியாயம் 28: நம்பிக்கை
உள்ளத்தில் நம்பிக்கையுடன், உடலின் தீமையைப் பொருட்படுத்தாமல் ஒருவன் தேடிச் சேர்த்த பெருமை நூற்றுககணக்கான பலன்களைத் தரும். அவை இன்பச் சுரங்கம் போன்றவை. எனவே உள்ளத்தில் நம்பிக்கையுடன் நல்ல பணிகளைச் செய்யவேண்டும்.

அத்தியாயம் 27: ஈகையில் இன்பம்

பிறருக்குக் கொடுப்பது எவ்வளவு பெருமையானது என்பதை அறிந்தவர்கள் பொருளைச் சேர்த்துவைப்பதைப் பயனற்றது என்று கருதுவர். பிறருக்கு தாராளமாக வழங்குவர். அவர்கள் மனம் ஆசையில் இருந்து விடுபடும். மக்களின் நலனே அவர்களது நாட்டமாக இருக்கும்.

Buddhist statue, Polonnaruwa, Sri Lanka

அத்தியாயம் 26: ஐந்து குற்றங்கள்

ஐந்து குற்றங்களை உடைய பொக்கிஷங்கள் விஷேச அறிவுடையவர்கள் வசப்பட்டால் அவை ஐந்து சாதகங்களாக ஆகின்றன. எனவே அறிவுடையோர் அவைகளை அடைய முயற்சிப்பாளர்களாக;
ஐந்து குற்றங்கள்: தீயினால் ஏற்படும் நஷ்டம், நீரினால் ஏற்படும் நஷ்டம், ஜீவராசிகளால் ஏற்படும் நஷ்டம், பொருட்கள் பறிமுதலாவது, கொள்ளை போவது.
ஐந்து சாதகங்கள்: மக்களிடையே புகழ், சாதுக்களிடையே பெரு மதிப்பு, பெருமை, கடமை செய்யும் உறுதி, மரணத்துக்குப் பின் சுவர்க்கத்தை அடைதல்

அத்தியாயம் 25 மரணம்
பேராசையால் கொல்லப்பட்ட எண்ணற்றவர்களை எண்ணும்போது, அதனால் விளையும் தீமைகளை நினைத்துப் பார்க்கும் போது, எல்லோருக்கும் மரணமே முடிவு என்பதை நினைவில் நிறுத்தவேண்டும். அபோதுதான் ஒருவன் கஷ்டத்தில் இருந்து விடுதலை பெற முடியும்

அத்தியாயம் 24 சமாதானம்
பல காரணங்களால் விரோதம் மூண்டாலும் பக்தியுள்ளோர் சமாதானமாகப் போய்விடுவர்.

அத்தியாயம் 23: அதிசய நிகழ்ச்சிகள்
தன்னுடைய விமோசனத்தில் அக்கறையுடைய மனிதன், சாதுக்களின் அதிசய நிகழ்ச்சிகளைக் கேட்கும்போது தீயவழியைத் திரும்பியும் பாரான். நேர் வழியில் சென்று மேலும் இன்பம் பெறுவான்

Discover-Sri-Lanka-9-Days-Buddhist-Tour

அத்தியாயம் 22: மறுபிறவி
பெருமைக்குரிய காரியங்களைச் செய்வதாலேயே இவ்வுலகில் மனிதர்கள் விரும்பிய பிறவியை அடைகிறார்கள். இதை எண்ணிப் பார்ப்போர் எப்போதும் பெருமைக்குரிய காரியங்களைச் செய்வதிலேயே உற்சாகத்துடன் மனதைச் செலுத்துவார்கள்

அத்தியாயம் 21: அற்புத சக்தி
இந்த அரசன் தவறான நம்பிக்கைகளைக் கைவிடாதபோதிலும், தீய வழியிலிருந்து விலகி நின்றதால் இத்தகைய அற்புத சக்திகளைப் பெற முடிந்தது.

அத்தியாயம் 20: தீய சக்தியின் வலிமை
சக்தியுள்ள, எதிர்க்கமுடியாத மரணத்தை அறிந்திருந்தபோதும் மனிதன் உலக வாழ்வில் அதிருப்தி கொள்வது இல்லை. இதன் காரணமாகத் தீமையைக் கண்டு வருந்துவதோ நன்மையைக் கண்டு மகிழ்வதோ இல்லை – இத்தீய சக்தியின் வலிமை அத்தகையது – அத்தகையவன் தெரிந்தே மூடனாகிறான்.

அத்தியாயம் 17: புத்தரின் அருள்
ஏற்கனவே நிர்வாணம் அடைந்துவிட்ட உலக நாதர் (புத்தர்) இவ்வாறாக மனித குலத்துக்கு எல்லையற்ற அருள் பொழிந்து கொண்டிருந்தார்.

அத்தியாயம் 12: அலுப்பு வராது
புத்தர் போலவே தேரர்களும் அங்குமிங்கும் சென்று ஆசியை அருளினார்கள். உலகம் உய்யப் பாடுபடும் பணியில் யாருக்குத்தான் அலுப்பு ஏற்படும்?

அத்தியாயம் 5: கடமை பெரிது
பிரம்ம லோகத்தையும் கைவிட்டு, துயரம் நிறைந்த இந்த மக்கள் உலகத்தில் புத்தமதக் கொள்கையின் பொருட்டு அவர் அவதரித்து கடமைகளைச் செய்தார். யார்தான் கொள்கைக்கான கடமையைக் கைவிட முடியும்?

buda-nın-beşiktaşlı-olması_425405

அத்தியாயம் 4 :மாய உலகமும் நிலையாமையும்
பூரணமான உள்ளொளி அடைந்த, மூவகையாக நிலவும் அனைத்து உலகுக்கும் அருள்பாலித்து உதவியர்களுமான உலக போதகரின் புத்திரர்களுடைய மறைவை எண்ணூம்போது நாம் இந்த உலகத்தின் பொய்யான தனமையை மனதில் இருத்தி விமோசனம் அடைவதற்காக விழிப்புடன் பாடுபடுவோமாக.

அத்தியாயம் 3: உலக இன்பத்தை மறுப்பது ஏன்?
அக ஒளியினால் மன இருளைப் போக்கிய தேரர்கள் உலக இருளை வெற்றி கொள்ளும் ஒளி விளக்குகளாகத் திகழ்ந்தார்கள். அந்த ஒளி விளக்குகளும் மரணம் என்னும் பெரும்புயலில் அணைக்கப் பட்டுவிட்டன. அதனால்தான் அறிஞர்கள் உலக இன்பத்தை மறுக்கிறார்கள்.

அத்தியாயம் 2:
நிலையாமை பற்றி சிந்தித்துப் பார்ப்பவர்கள் துயரத்திலிருந்து விடுபடுவார்கள்.

மஹாவம்சத்தில் உள்ள 37 அத்தியாயங்களில் பெரும்பாலான அத்தியாயங்களின் முடிவுப் பாடல் பொன்மொழியாக அமையும். அவைகளில் முக்கியமானவற்றைக் கொடுத்தேன்.
SL buddha
—சுபம்—

contact swami_48@yahoo.com

இந்தியாவுக்கு இராவணன் எப்படி வந்தான்? கப்பலா? விமானமா?

tamluk

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:-1303; தேதி: 22 செப்டம்பர் 2014

மஹாவம்ச ஆய்வுக் கட்டுரை வரிசையில் இது ஒன்பதாவது கட்டுரை.

இராவணன் ஆண்ட இலங்கை இப்போதைய ஸ்ரீலங்கா இல்லை என்றும் அது கோதாவரி முகத்வாரத்தில் இருந்த நதியிடைத் தீவு என்றும் , அக்காலத்தில் பறக்கும் புஷ்பக விமானம் இருந்ததற்கு தடயம், சாட்சியம் இல்லை என்றும் வெளிநாட்டு அறிஞர்களும், மார்கசீய வரலாற்று அறிஞர்களும் கதைத்த ஒரு காலம் உண்டு. ராமாயணம், மஹாபாரதம் ஆகியனவற்றை “வர்க்கப் போராட்ட வருணனைகள்” என்று அவர்கள் நகைத்த காலமும் உண்டு. இவர்களுக்கு தமிழ் இலக்கிய அறிவு போதாமையே இது போன்ற அரைகுறை ஆய்வுகளுக்குக் காரணம்.

சிலப்பதிகார தமிழ் காவியத்தில் கடல் சூழ் இலங்கைக் கயவாகு வேந்தன் (கஜபாகு) என்று இளங்கோ அடிகள் குறிப்பிட்டத்தில் இருந்து கடல் ச்சூழ்ந்த இலன்கையே நாம் அறிந்த இலங்கை, ஆற்றிடை திட்டு அல்ல என்பது விளங்கும். அது மட்டுமல்ல ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் இப்போதைய ஸ்ரீல்ங்காவை ராமனோடும் ராவணனோடும் தொடர்பு படுத்திப் பாடியுள்ளனர். எனினும் இவை எல்லாம் பழங்கதைகள். இப்போது உலகமே ஒப்புக்கொண்ட உண்மை- இன்றைய ஸ்ரீலங்காதான் அன்றைய ராமாயண இலங்கை.

தொல்முதுகோடி என்று தனுஷ்கோடி பற்றிய குறிப்பும் சங்க இலக்கியத்தில் உண்டு. ராமசேது என்னும் கடற்பாலம் இருந்ததற்கான தடயங்களை ‘நாஸா’ என்னும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமும் படம் மூலம் நிரூபித்துள்ளது.

ஒன்றுவிட்ட சகோதரனான குபேரனிடமிருந்து ராவணன் புஷ்பக விமானத்தைப் பறித்தான். இது எண்ணத்தால் — பெட்ரோலால் அல்ல — பறக்கச் செய்யும் விமானம். இதுபற்றி நியூ சைன் டி ஸ்ட் பத்திரிக்கையில் வந்த ஒரு விஞ்ஞான கட்டுரையை நான் எழுதி இருக்கிறேன். அதில் முழு விவரம் காண்க.

patna

புஷ்பக விமானத்தை நம்ப மறுக்கும் அறிவியல் புத்தி ஜீவிகளுக்கு மஹாவம்சம் சில அரிய பயணக் குறிப்புகளைப் படைக்கிறது.

இந்தியர்களுக்குப் பருவக் காற்றின் ரகசியம் தெரியும். இந்த ரகசியம் கரிகால் சோழனுக்கும் தெரிந்திருந்ததால் அவன் கடலுக்கு அப்பால் உள்ள தீவுகளை வெல்ல முடிந்தது.

நளியிரு முந் நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களியியல் யானைக் கரிகால் வளவ
— – புறநானூறு, பாடல் 66, வெண்ணிக் குயத்தியார் பாடியது.

வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்தி கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மத யானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ! – என்று உரைகாரர்கள் இதற்குப் பொருள் எழுதியுள்ளனர்.

அவன் வழியில் “ஞாலம் நடுங்கவரும் கப்பல்களுடன்” சென்று ராஜராஜ சோழனும் மாயிருடிங்கம் (பிலிப்பைன்ஸ்), மாபூப்பாளம் (போர்னியோ) மாநக்கவாரம் (நிகோபர் தீவு முதல் இந்தோ நேஷியா வரை)— முதலிய பல தீவுகளை வென்றான்.

இலங்கை – வட இந்திய கடற்பயணத்துக்கு ஒரே வாரம் போதும் என்கிறது மஹாவம்சம் (அத்தியாயம் 11):

தேவானாம் ப்ரிய திஸ்ஸன் (கடவுளருக்கு பிரியமானான்) என்ற இலங்கை மன்னன், அதே பெயருள்ள அசோகச் சக்ரவர்த்திக்குப் பரிசுப் பொருட்களுடன் தூதர் குழு ஒன்றை அனுப்புகிறான். அவர்கள் இலங்கையில் உள்ள ஜம்புகோளத்தில் கப்பல் ஏறி ஏழு தினங்களில் தாம்ரலிப்தியை அடைகின்றனர். இது மேற்குவங்கத்தில் மிதுனபுரி அருகே உள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்று. இன்று தாம்லுக் என்ற சிறிய ஊராக இருக்கிறது. எப்படி பூம்புகார், குமரிக்கோடு, தனுஷ்கோடி, துவாரகா முதலிய ஊர்களை சுனாமிப் பேரலைகள் விழுங்கினவோ அப்படியே இந்த ஊர் துறைமுகத்தையும் கடல் விழுங்கிவிட்டது.

ship

இலங்கைக்கு புத்தர் வாழ்ந்த காலத்தில் வந்த வங்காளதேச அரசன் விஜயனும் இங்கேயிருந்துதான வந்தான். முதலில் யக்ஷிணி (குபேர) வம்சப் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டு பின்னர் பாண்டியநாட்டுத் தமிழ் பெண்ணைக் கல்யாணம் முடித்தான. துரதிருஷ்டவசமாக குழந்தைகள் பிறக்கவில்லை!

தாம்ரலிப்திக்குச் சென்ற இலங்கைக் குழு அடுத்த ஏழே நாட்களில் பீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னா (பாடலிபுத்ரம்) நகரை அடைந்துவிட்டது. மாமன்னன் அசோகன் இலங்கைத் தூதுக்குழுவுக்கு ஐந்து மாதங்களுக்கு ராஜ உபசாரம் செய்கிறான். பின்னர் அசோகன் அனுப்பிய நிறைய பரிசுப் பொருள்களுடன் அந்தக்குழு இலங்கைக்குத் திரும்புகிறது. இதற்கு 12 நாட்கள் ஆயின.

ஏன் ஐந்து மாதம் இலங்கைக் குழு அங்கே தங்கியது? பருவக் காற்றின் போக்கை அறிந்த நம்மூர் மாலுமிகள் இந்த குறிப்பிட்ட காலத்தில் புறப்பட்டால் இதனை நாட்களில் சென்றுவிடலாம் என்பதை அறிந்து வைத்திருந்தனர். ஆகையால் போனவுடன் திரும்பிவர இயலாது. கொஞ்சம் காலம் தங்கிவிட்டு காற்று எதிர்த் திசையில் வீசும் போது திரும்பவேண்டும்.

tamluk board

அத்தியாயம் 18-ல் அசோகன் அனுப்பிய போதி மரம், ஒரு பெரிய குழுவுடன் இலங்கைக்கு வந்த செய்தி கூறப்படுகிறது. அதை வாங்குவதற்காச் சென்றவர், ஐப்பசி மாதம் சுக்லபக்ஷம் த்விதியை திதியில் (வளர்பிறை இரண்டா நாள்) ஜம்புகோளத்தில் புறப்பட்ட அதே நாளன்று புஷ்பபுரத்துக்குப் (பாட்னா) போய்ச்சேர்ந்தார் என்னும் மஹாவம்ச கூற்றை நம்புவது கடினம். ஒருவேளை அதே சுக்ல பக்ஷ த்விதீயை — ஆனால் வேறு ஒரு மாதமாக — ஆக இருக்கலாம். மஹா வம்ச ஒரிஜினலைப் பிற்காலத்தில் எழுதியோர் விட்ட தவறாக இருக்கலாம் இது என்பது என் கருத்து. அல்லது இதை மந்திர –தந்திர –அற்புத– அதிசய வகைச் செய்திகளில் சேர்த்துக் கொள்ளலாம்.

அத்தியாயம் 19-ல், சாலை மார்கம் பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது. பாட்னாவில் கங்கை நதியில் போதிமரத்தை ஏற்றிவிட்ட, அசோகன், விந்தியமலையைக் கடந்து ஒரே வாரத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தாம்ரலிப்திக்கு வந்துவிடுகிறான். இதிலிருந்து அக்காலத்தில் விந்திய மலை வழியாக நல்ல சாலை மார்க்கம் இருந்தது புலப்படும். இது அகத்தியர் அமைத்த பாதை. அதைப் புரணங்கள், “அகஸ்தியர் விந்திய மலையை கர்வ பங்கம்” செய்தார் என்று புகலும்/ புகழும்!

peryplus_first_century_AD_1000px

ஆக மேற்கூறிய குறிப்புகளைக் காண்கையில் அக்காலத்தில் கப்பல் வழி, சாலை வழிப் போக்குவரத்து மிக நன்றாக இருந்தது என்பது தெள்ளிதின் விளங்கும். வெள்ளைகாரன் வந்த பின்னால்தான் இந்த நாட்டில் போக்குவரத்து வசதிகள் அதிகரித்தன என்று கூறுவோரின் வாயை அடைக்க இதுவே போதும். வால்மீகியும் பரதன் — ஈரான்- ஆப்கனிஸ்தான் எல்லையில் இருந்து வந்த வழியை விரிவாகக் கொடுத்துள்ளதை ராமாயணத்தில் படித்து அறிக!!

புஷ்பக விமானத்தை நம்பாதோரும் இந்தக் குறிப்புகளை ஏற்கத்தான் வேண்டும். ஆக கைலாச மலையை ராவணன் அசைத்தான் – சிவபெருமானிடம் நல்ல அடி வாங்கினான் என்று ஞான சமபந்தப் பெருமான பதிகத்துக்கு பதிகம் பாடுவதும் உண்மையே.

அரபு நாட்டு ஷேக்குகள், அவர்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட, அட்டூழியங்களையும் பாப காரியங்களையும் பண்ணுவதற்கு பம்பாய்க்கும், ஹைதராபத்துக்கும் வந்து செல்லுவது போல அக்காலத்தில் ராவணனும் அவன தங்கை சூர்ப்பநகையும் சமூக விரோதச் செயல்களில் இறங்க மத்திய இந்தியாவில் இருந்த தண்டகாரண்யம், இமயமலையில் உள்ள கைலாசம் ஆகியவற்றைப் பயன்படுத்தினர். ராவணனால் விரட்டப்பட்ட குபேரன், இமயமலை திபெத் பகுதியில் குடியேறினான். அக்கலத்திலும் இந்தியா அகதிகளை ஏற்றுக் கொண்டதற்கு இதுவும் ஒரு சான்று.

Silk_Route_China_

பருவக்காற்றைக் கண்டுபிடித்தவன் தமிழனா? கிரேக்கனா? என்ற எனது பழைய கட்டுரையில் இது பற்றி விரிவாக எழுதியுள்ளேன். பருவக்காற்று ரகசியத்தை ஒரு இந்திய அசடு (மண்டு), எகிப்தில் அலெக்சாண்டிரியா நகரில் உள்ள ஒரு மாலுமியிடம் உளறிவீட்டான். அதன் பின்னர் போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர், பிரிட்டிஷ்காரர் முதலிய ஐரோப்பியர்கள் இந்தியாவைச் சூறையாட வழிவகை ஏற்பட்டது. — ((காண்க: தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள், ச.சுவாமிநாதன், நாகப்பா பப்ளிகேஷன்ஸ், சென்னை-14, ஆண்டு 2009; இதே புத்தகத்தை நிலாசாரல்.காம் ஈ-புத்தகமாகவும் வெளியிட்டுள்ளது)) —

contact swami_48@yahoo.com

கிருஷ்ணன் ரதத்தில் நான்கு குதிரைகள் ஏன்?

benhur2
Four Horse Chariot in Benhur Film

எழுதியவர் கட்டுரை மன்னன் : லண்டன் சுவாமிநாதன்
ஆரய்ச்சிக் கட்டுரை எண்.1302; தேதி 21 செப்டம்பர் 2014

கீதையை உபதேசித்த கண்ண பிரானின் ரதத்தில் அர்ஜுனன் நிற்க, அந்த ரதத்தை நான்கு குதிரைகள் இழுப்பதைப் படத்தில் காணலாம். ஏன் நான்கு குதிரைகள் என்று ஆராய்ந்து பார்த்ததில் உலகம் முழுதும் இப்படி நான்கு குதிரைகள் இருபதைக் காண முடிந்தது. இந்த வழக்கத்தை உலகிற்குக் கற்பித்தவர்களும் நம்மவரே என்ற முடிவுக்கு வர இயலும்.

உலகின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். பால கங்கதர திலகர், ஜெர்மன் அறிஞர் ஜாகோபி போன்றோர் ரிக் வேதத்தில் உள்ள வான சாத்திரக் குறிப்புகளைக் கொண்டு அதன் காலம் கி.மு.6000 என்றனர். மாக்ஸ் முல்லர் என்ற ஜெர்மன் அறிஞர் கி.மு. 1200 க்குப் பின்னர் யாரும் இதைக் கொண்டு செல்லமுடியாது. அதற்கு முன்னர் கொண்டு செல்லலாம் என்று கூறிவிட்டார். இப்போது அமெரிக்க பலகலைக் கழக அறிஞர்கள் இதை கி.மு.1700 என்று கணக்குப் போட்டுள்ளனர். இப்பேற்பட்ட அரிய பெரிய பழைய நூலில்தான் குதிரை பற்றி அதிகமான விஷயங்கள் உள்ளன. இது இலக்கியத்தில் கிடைத்த தடயங்கள்.

இதைவிட முக்கியமான தொல்பொருட்துறைத் தடயங்களும் கிடைத்து இருக்கின்றன. துருக்கி — சிரியா பகுதியில் மிட்டனியன் (மித்ரனீய) என்ற வம்சத்தினர் ஆட்சி செய்தனர். இவர்களுடைய பெயர்கள் தசரதன், பிரதர்தனன், பரவர்த்தனன் என்பதால் ஆராய்ச்சியாளர்களும் இவர்களை வேதகால இந்துக்கள் என்பதை ஒப்புக்கொள்வர். துருக்கியில் பொகஸ்கோய் என்னும் இடத்தில் களிமண் பலகைக் கல்வெட்டில் மித்ரன், வருணன், இந்திரன் முதலிய வேத கால தெய்வங்கள் சாட்சியாக ஒரு உடன்படிக்கை செய்துகொண்டதும் தெரிந்தது. அவர்கள் காலத்தில் இருந்த கிக்குலி என்பான குதிரைப் பயிற்சி நூல் ஒன்றை எழுதியதும் கிடைத்துவிட்டது. அதில் சம்ஸ்கிருத எண்கள், சம்ஸ்கிருத மொழிக்கு கி.மு.1380க்கு முந்திய தொல்பொருத் துறைச்சான்றும் கிடைத்துவிட்டது. உலகில் இப்போது புழங்கும் மொழிகளில் இதுதான் மிகப் பழைய சான்று. இந்தியாவில் உள்ள எவரும் சம்ஸ்கிருதக் கலப்பு இல்லாமல் பேசவே முடியாது என்பதும் உலகறிந்த உண்மை.
persiansungod
Persian Sun Chariot

தமிழை சம்ஸ்கிருதக் கலப்பிலாமல் பேசமுடியாது என்பதும் 2500 ஆண்டுகளாக ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. சம்ஸ்கிருதச் சொற்களை நீக்கினால் தொல்காப்பியம் திருக்குறள், 2400 சங்கத் தமிழ் பாடல்கள் அனைத்தும் கறையான் அரித்த காகிதம் போல ஓட்டை விழுந்ததாகும் அல்லது ‘’வைரஸ் பாதித்த சாப்ட்வேர்’’ ஆகிவிடும்.

இத்தகைய சம்ஸ்கிருதச் சொற்கள் எகிப்து நாட்டிற்குள்ளும் கி.மு.1480ல் புகுந்துவிட்டதை ஆன் ஹைலண்ட் என்ற குதிரை ஆராய்ச்சியாளர் (Ann Hyland has given full details about Kikkuli’s manual in her book “The Horse in the ancient World “;page 22) கண்டுபிடித்து ஒரு ஆங்கில நூல் எழுதினார். அதில் மர்யன்னு ‘maryannu’ (Vedic Sanskrit word) என்ற சம்ஸ்கிருதச் சொல் எகிப்திய மொழி வழக்கப்படி “ம் –அர்- ய- ன” என்று கி.மு 1470ல் ‘’பபைரஸ் அன்ஸ்டாசி 1’’-ல் எழுதப்பட்டிருக்கிறது என்கிறார். கிக்குலி இதை மர்யான்னு என்று எழுதி இருக்கிறார். சம்ஸ்கிருதச் சொல் வேறு ஒரு மொழியில் புகும்போது இப்படி மாறுவது இயற்கை என்பதை தமிழர்கள் நன்கு அறிவர். தற்சமம், தற்பவம் என்ற இலக்கண விதிகளில் காண்க.

ஆன் ஹைலண்ட் என்ற இந்தப் பெண்மணியின் குதிரை ஆராய்ச்சி பல புதிய உண்மைகளைக் கட்டுகிறது. சம்ஸ்கிருதச் சொற்களைக் கொண்ட குதிரைப் பயிற்சி நூல் எகிப்து நாட்டில் இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன்னரே ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கங்கைச் சம்வெளியிலும் சம்ஸ்கிருத முழக்கம் கேட்டுக் கொண்டிருக்கிறது. உலகத்தில் அக்காலத்தில் இந்தப் பரந்த அளவுக்கு வேறு எந்த மொழியும் ஒலிக்கவில்லை என்பதை தொல்பொருத் துறைத் தடயங்களும் இலக்கியக் குறிப்புகளும் தெள்ளிதின் எடுத்துக் காட்டுகின்றன. ஆகவே உலகின் முதல் குதிரை வீரர்கள் இந்துக்களே!!

quardiga big
Most Expensive Greek Coin in the world

அது சரி, புத்திசாலியான எவனும் சம பாரத்துக்காக (பாலன்ஸ்) நான்கு குதிரைகள் பூட்டலாமே என்று நமக்கும் தோன்றும். ஆனால் இந்த நான்கு குதிரைகளுக்கும் பெயர் சூட்டி வர்ணம் பூசியதும் நாம்தான. உலகின் மிகப் புகழ்பெற்ற நிகண்டு –சம்ஸ்கிருத நிகண்டான– அமரகோஷம் ஆகும். இதைப் பார்த்தே ஆங்கிலத்தில் ‘’ரோஜெட் திசாரஸ்’’ தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதாம். இதில் ஒரு பொருட் குறித்த பல சொற்களை அழகாக அடுக்கித் தருகிறார்.

சம்ஸ்கிருதம் கற்கச் செல்லும் குடுமி வைத்த பார்ப்பனச் சிறுவர்கள் முதலில் மனப்பாடம் செய்வது இதைத்தான். கேரளத்தில் எல்லா ஜாதியினரும் இதைக் கற்பர். அதில் இந்த நான்கு குதிரைகளின் பெயர்கள் கிருஷ்ண பரமாத்மாவின் குதிரைகள் என்று சொல்லப்பட்டுள்ளன. பாகவத புராணம், பத்ம புராணம் ஆகியனவும் இவற்றைத் திருப்பிச் சொல்லும். பத்ம புராணம். குதிரைகளின் நிறம் என்ன என்பதையும் பகரும். இவைகளின் காலம் குப்தர் காலம், அதாவது கி.பி. நாலாம் நூற்றாண்டு.

சில பகவத் கீதை உபதேச (கீதோபதேச) படங்களில் ஐந்து குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தைக் கண்பீர்கள். இது குதிரை மூலமாக ஆன்ம உண்மையை போதிக்கும் உபநிஷத ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டது. மனிதனின் ஐம்புலன்களும் ஐந்து குதிரைகள் என்றும் மனிதனின் தேகமே ரதம் என்றும் புத்தி அல்லது ஆன்மா அதைச் செலுத்தும் சாரதி என்றும் அந்த ஸ்லோகம் வருணிக்கிறது. ஆனால் கீதோபதேசக் குதிரைகளுடன் தொடர்புடையன அல்ல.

நான்கு குதிரைகள் பெயர் என்ன?
சைப்ய, சுக்ரீவ, மேக புஷ்ப, பலஹாக

நான்கு குதிரைகள் நிறம் என்ன?
சைப்ய = கிளிப் பச்சை
சுக்ரீவ = தங்க நிறம்
மேக புஷ்ப= மேக வர்ணம்
பலஹாக = தூய வெண்மை

தமிழன் ஓட்டிய நான்கு குதிரை தேர்
பெரும்பாணாற்றுபபடையில் புலவர் உருத்திரங்கண்ணனார் ( திருவாளர் ருத்ராக்ஷன் ) காஞ்சி மாநகரை ஆண்ட தொண்டைமான் இளந்திரையன் பற்றிப் பாடுகிறார். அங்கும் நான்கு குதிரைகள் பூட்டிய ரதம் பற்றியே பாடுகிறார் (வரிகள் 487-489)

nikeRing400 bce
Greek Gold ring with Nike in the British Museum

இந்த நான்கு குதிரைகள் படம் கிரேக்க நாட்டில் பானைகள், மோதிரங்கள், சிலைகளில் காணப்படும். இவை 2500 ஆண்டுகள் பழமையானவை. லண்டன் மாநகர பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள ஒரு கிரேக்க தங்க மோதிரத்தில் ‘நைகி’ என்னும் கிரேக்க வெற்றி தேவதை நான்கு குதிரைகள் ரதத்தை ஓட்டுவதைக் காணலாம். கிரேக்க நாட்டில் 2100 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட நான்கு குதிரைப் படம் பொறித்த ஒரு வெள்ளிக்காசு இரண்டு மில்லியன் பவுண்டுகளுக்கு ஏலம் போனது.

நான்கு குதிரை ரதங்களை ரோமானியர்களும் பயன்படுத்தி குவாட்ரிகா எனப் பெயர் சூட்டினர். இப்பொழுது உலகின் இகப் புகழ் பெற்ற கட்டிடங்களின் மீது நான்கு குதிரை ரத சிற்பங்களைக் காணலாம். அவை எல்லாம் 200 ஆண்டுகளாகத் தோன்றியவை. கலியுகம் கி.மு. 3100ல் தோன்றியதை பார்த்திவசேகரபுரம் கோ கருநந்தடக்கன் கல்வெட்டும் கூட ஒப்புக்கொள்கிறது. அப்படியானால் எஜமானன் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் டிரைவராக இருந்து ஓட்டிய தேரின் காலம் இற்றைக்கு 5100 ஆண்டுகளுக்கும் முந்தியது அன்றோ! எகிப்துக்கும் மேற்காசிய நாடுகளுக்கும் குதிரை பயிற்சி கொடுத்தவர் நாம் அன்றோ!

அது சரி, குதிரை என்பது இந்திய விலங்கு அல்லவே. வேத கால இந்துக்கள் ‘’ஸ்டெப்பி’’ புல்வெளியில் குதிரைகளைப் பிடித்து வந்து சைபீரீயா பனிப் பிரதேசத்தில் இருந்து இந்தியாவில் நுழைந்தனர் என்பதற்கு இதுவும் சான்றாக அமையாதோ? என்று சில ஆரிய திராவிட இன வெறிக் கொள்கையினர் சந்தோசப்படலாம். அது தவறு!

இன்று ‘கால்கேட் டூத் பேஸ்ட்’ பயன்படுத்தும் “டமிழ”னைப் பார்த்து, ஆஹா, நீ வெள்ளைக்காரன் மகன் தானே! பார்! கால்கேட் டூத் பேஸ்ட் உன் கையில் இருக்கிறது, இது என்ன தமிழ் பண்பாடா?’ என்று நகைப்பதை ஒக்கும் அது. குதிரை, இரும்பு (அஸ்வ, அயஸ்) என்னும் எனது ஆய்வுக்கட்டுரைகளில் மேல் விவரம் காண்க. குதிரைக்கும் இரும்புக்கும் காலம் கற்பித்த்வன் வெள்ளைக் காரன். அவனே புதிய புதிய தடயங்களைக் கண்டு, பழைய கொள்கைகளை மாற்றி எழுதி வருகிறான்.
stamps-009h
Chinese bronze from a 2300 old mausoleum

அவன் கூற்றுப்படி தமிழர்களும் மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து நுழைந்தவர்கள்! மனித இனமே ஆப்பிரிக்காவில் இருந்து சென்றவன்!! இதை எல்லாம் உண்மை என்று ஒப்புக் கொண்டாலும் குதிரை படம் வரலாற்றுக்கு முந்தைய குகைகளின் ஓவியங்களில் இருக்கிறது இவை அனைத்தும் ஐந்து ஆறு லட்சம் ஆண்டுகள் பழமையுடையவை.

மேலும் குதிரையும் கழுதையும் சொந்தக்காரர்கள்! கழுதை பிடித்தவனுக்கு குதிரை பிடிக்கத் தெரியாதா? சுமேரில் கூட கழுதை உண்டு குதிரை இல்லை. ஆகையால் அரைவேக்காட்டு ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளைப் படித்துவிட்டுக் குழம்பிப் போகாமல் “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்னும் வள்ளுவனின் வாய்மொழிச் சொல் வழியில் செல்க!

arjuna_krishna_chariot-front
Krishna’s Chariot
contact swami_48@yahoo.com

இராக்கில் 3000 கடவுள்: இந்துக்கள் போல சிலைக்கு ‘கண் திறக்கும்’ அதிசயம்!

adad01on bull

Adad on Rishaba Vahana (bull) like Lord Shiva

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்:- 1300; தேதி: 20 செப்டம்பர் 2014

இராக் என்று இப்பொழுது நாம் அழைக்கும் நாட்டில் உலகின் மிகப் பழமையான நாகரீகங்களில் ஒன்றான சுமேரிய பாபிலோனிய நாகரீகங்கள் இருந்தன. டைக்ரீஸ், யூப்ரடீஸ் என்ற இரு நதிகளுக்கு இடைப்பட்ட பிரதேசம் என்னும் பொருளில் இதை மெசபொடோமியா என்று அழைப்பர். இதைப் பற்றி பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட அகராதியை Dictionary of the Ancient Near East published by the British Museum நான் ஆழப் படித்திருக்கிறேன். எந்த ஒரு தலைப்பை எடுத்தாலும் இந்து கலாசாரத்துடன் பல ஒற்றுமைகளைக் காணமுடியும். இவைகளைப் பற்றி துலாபாரம், தகனம், இரு தலைப் பறவை, இந்திரன் வழிபாடு. லபிஸ் லசூலி ஏற்றுமதி முதலிய 20 கட்டுரைகள் எழுதி இருக்கிறேன்.
கடவுள் என்ற தலைப்பில் இந்த அகராதி தரும் விஷயங்கள் இந்து மதத்துடன் உள்ள அற்புத ஒற்றுமைகளைக் காட்டுகிறது. அவர்களும் கடவுளுக்கு 3000 பெயர்கள் வைத்திருந்தனர்!!

முதலில் சிலைகளுக்கு “கண் திறத்தல்” என்னும் அற்புத ஒற்றுமையைக் கண்போம். இந்துக் கோவில்களுக்குச் சிலை வடிக்கும் சிற்பிகள் அந்த சிலையின் கண்களைத் திறப்பதை மிகவும் முக்கியமானதாகக் கருதி அதற்கு விஷேச புனிதத்துவம் கொடுப்பர். இதை “நயனோன்மீலனம்” என்னும் வடமொழிச் சொற்களால் விவரிப்பர். சிலையின் கண்களைச் செதுக்கிவிட்டால் அதற்கு உயிரும் புனிதத்துவமும் வந்துவிடும். அதற்குப்பின் அது வெறும் கல் அல்ல—புனிதக் கடவுள்!! பின்னர் அதை ஜலத்திலும், தானியத்திலும் வைத்து மேலும் சக்தி ஏற்றுவர். அதற்குப் பின்னர், அதில் எண்ணை தடவ எல்லாப் பொதுமக்களையும் ஜாதி, குல வேறுபாடு இன்றி அனுமதிப்பர். இதே போல பாபிலோனியாவிலும் ஒரு சடங்கு உண்டு.

inanna  triumphant

Inanna like Hindu Goddess

பாபிலோனியாவில் சிலை வடித்த பின்னர் செய்யும் சடங்கிற்கு ‘வாய் திறத்தல், வாய் கழுவுதல்’ என்று பெயர். இதைச் செய்தவுடன் அந்தச் சிலைக்கு தெய்வீக சக்தி ஏற்பட்டுவிடும் என்று பாபிலோனியர் நம்பினர். அவர்கள் இந்துக்களாக இருக்கலாம். அல்லது நம்மிடம் இதைக் கற்றிருக்கலாம். நான் இப்படிச் சொல்வதற்குக் காரணம் உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதம் இந்துக்களுடையது. அதை கி.மு 6000 ஆண்டைச் சேர்ந்தது என்று சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகரும் ஜெர்மன் அறிஞர் ஜாகோபியும் கூறுகின்றனர். அண்மையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதிவரும் அமெரிக்கர்கள் அது கி.மு 1700-ஐச் சேர்ந்தது என்பர். எவ்வகையிலும் பாரினில் இதுபோல் பிரிதொரு நூல் இல்லை.

‘வாய் திறத்தலும்’, ‘கண் திறத்தலும்’ ஒன்றே. சில மொழிகளில் சில சொற்கள் இல்லாததால் வேறு உறுப்புகளைப் பயன்படுத்தி அதே கருத்தை வெளியிடுவர். ‘’தமிழுக்கு முகம் இல்லை, சம்ஸ்கிருதத்துக்கு வாய் இல்லை’’ — என்று ஆன்றோர்கள் பகடி செய்வர். தமிழில் முகம் என்று சொல்ல முடியாததால் வடமொழிச் சொல்லான முகத்தையே பயன் படுத்துவர். சம்ஸ்கிருதத்தில் வாய் என்று சொல்ல முடியாததால் ‘’முகத்தால் பேசினான்’’ – முகேன வதந்தி — என்பர். நான் தமிழ் ஒரு ‘’இதயமற்ற மொழி’’ என்று சொல்லுவதுண்டு. தமிழில் இருதயம் என்பதற்குச் சொல் இல்லததால், ‘’ஹ்ருதயம்’’ என்ற வடசொல்லையே பயன் படுத்துகிறோம். ‘ஹார்ட்’, ‘இதயம்’ ஆகியன எல்லாம் சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்தவை!

ashtart on lion
Ashtart on like Hindu goddess Durga on lion

ஆக வாய் திறத்தல் என்று பாபிலோனியர் (சுமேரியர், மெசபொடோமியர்) சொல்வதெல்லாம் கண் திறக்கும் ‘’நயனோன்மீலனம்’’ என்னும் சடங்கேயாம் என்று அறிக.

கடவுள் பற்றி பாபிலோனியர், சுமேரியர் சொல்வதும் நம்மைப் போன்றதே. கடவுளைப் பல் பெயர் இட்டு அழைக்கலாம், பல உருவம் கொடுக்கலாம், ஆண், பெண் என்ற பல வடிவில் வணங்கலாம், அவருக்கு உருவம் கொடுத்து சிலை வைக்கலாம், கடவுளில் பெரியவர், சின்னவர், பரிவார தேவதைகள் வைத்து வணங்கலாம். கடவுள் மேலுகத்திலும் , கீழ் உலகத்திலும் இருப்பார், அவர்களுக்கு வெவ்வேறு விஷேசப் பணிகள் உண்டு — இப்படி அவர்கள் கூறூவது எல்லாம் இந்து மதத்திலும் உண்டு. அவர்கள் மொத்தத்தில் இதுவரை 3000 பெயர்களைக் கண்டு பிடித்ததாக பிரிட்டிஷ் மியூசியம் வெளியிட்ட அகராதி கூறும் நாமோ ஒவ்வொரு சாமிக்கும் 1000 – சஹஸ்ர நாமம் — பெயர்கள் வைத்துள்ளோம்!!

இவ்வளவு பெயர்கள் இருந்தாலும் ‘’கடவுள் ஒருவரே, அதை அறிஞர்கள் பலவேறாக அழைப்பர்’’ — என்ற மாபெரும் உண்மையையும் உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்திலேயே செப்பியும் விட்டோம் (காண்க: ரிக் வேதம் (RV 1-164-46) – ‘’ஏகம் சத், விப்ரா: பஹூதா வதந்தி’’ = ‘’உண்மை ஒன்றே; அறிஞர்கள் அதைப் பல்வாறாக அழைப்பர்’’.

448px-Burney_Relief_Babylon_-1800-1750
Lilith of Hebrew mythology with owls like Lakshmi

ஏன் மனிதன் பல கடவுளரை உருவாக்கினான்?
சக்தி என்று ஒரு பெண் தெய்வத்தை அழைப்போம். ஒரு பையன் வந்து, அப்பா, நான் பரீட்சையில் நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று கேட்டால் அதை சரஸ்வதியாக வணங்கு என்போம். ஒருவர் பணம் வேண்டும் என்றால் லெட்சுமி என்னும் வடிவில் தியானம் செய் என்போம். மற்றொருவர் கோர்ட் வழக்கில் வெற்றி பெற்வேண்டும் என்றால் துர்க்கை என்று வழிபடு என்போம். இப்படியாக தெய்வங்களின் எண்ணிக்கை பெருகும். இன்னும் சில தெய்வங்கள் நடிகர் நடிகையர் மூலம் திடீரெனப் பிரபலமாகும். மூகாம்பிகை, ஐயப்பன், ராகவேந்திரர் முதலியோர் வழிபாடு பிரபலமானதைக் குறிப்பிடலாம். 100 ஆண்டுகளுக்கு முன் ஐயப்பன் கோவிலுக்குப் போனோர் தொகையை விரல் விட்டு எண்ணிவிடலாம். இன்று இரண்டு கோடிப் பேர் செல்கின்றனர். இப்படிக் காலத்துக்கு காலம் கடவுளர் பெருமை ஏறி இறங்கினாலும் கடவுள் ஒருவனே, அவனை எல்லா வகையிலும் வழிபட முடியும் என்ற மாபெரும் உண்மையை, கை நாட்டு வைக்கும் கிழவியும் கூட அறிவாள்.

வேறு கலாசாரங்களில் வெவ்வேறு இன மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் பல் தெய்வங்கள் இணைந்துவிடும். ஆனால் பல பெயர்கள் மட்டும் மக்கள் மனதில் தங்கிவிடும். மேலை நாட்டில் முதல் முதலில் நாகரீகத்தைப் பரப்பிய கிரேக்கர்களின் தெய்வங்களுக்கு இணையாக ரோமானியர்கள் ஒவ்வொரு தெய்வத்தின் பெயரைப் புகலுவர் மற்றும் புகழுவர்.

yazidi_symbol
Yasidi tribe has peacock as sacred symbol like Tamiol Skanda/ Muruga

இதே போல இந்தியாவில் இருந்து வேத கால நாகரீகத்தை மேற்கு ஆசியா, ஐரோப்பா முழுதும் எடுத்துச் சென்ற ‘ஹிட்டைட்ஸ்’, ‘காசைட்ஸ்’, ‘மிட்டனியன்ஸ்’ — நமது தெய்வங்களை அவர்களுடைய பழைய தெய்வங் களுடன் இணைத்தனர். இராக் மலைப் பகுதியில் வாழும் ‘யசீதி’ இனம் முதல் பல்வேறு இடங்களில் இந்துமதத்தின் எச்ச சொச்சங்களையும் மிச்சம் மீதிகளையும் காண்கிறோம். காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் 1932 ஆம் ஆண்டு சென்னைப் பிரசங்கத்தில் “உலகம் முழுதும் சநாதன தர்மமே இருந்தது, அதன் தடயங்கள்தான் இவை — நாம் மதத்தைப் பரப்ப எடுத்துச் செல்லவில்லை, முன்னரே இருந்தவை” — என்று கூறுவதையும் கவனத்திற் கொள்ளல் வேண்டும்.

Please read my earlier posts on Sumer- India link
Hindu Vestiges in Iraq ( Posted on 12th August 2014)
Indus Valley to Egypt: Lapis lazuli Export (posted 0n 6th Sept.2014)

Why did Sumer and Egypt worship Indra? (Posted 14th Sept.2014)
Double Headed Eagle: Indian—Sumerian Connection (18th December 2011)
Birds for Finding Direction: Sumeria to Tamil Nadu via Indus Valley (Posted 8th April 2013)
Cremation: Sumerian – Hindu Similarities (Posted on 14th May 2014)
Sanskrit Words in Sumerian: Sumukan Mystery (Posted on 12th May 2014)
A Hindu Story in Sumerian Civilization (Posted on 11th May 2014)
Mysterious Fish Gods around the World (Posted 27-10-2012)
Tulabharam: Indian – Sumerian Connection (Posted on 2nd January 2012)
Serpent Queen: Sabarimalai to Indus Valley
Hindu Vahanas around the World

procession-lg
Seven gods on Seven vahanas in Iraq

Hindu Vahanas in Iraq (Posted on 21st October 2012)
330 Million Gods (முப்பத்து முக்கோடி தேவர்கள்)
இந்தக் கட்டுரைகளில் பலவற்றைத் தமிழிலும் தந்துள்ளேன்

(Most of these articles are published in Tamil as well around the same dates)
Contact swami_48@yahoo.com
tammuz01
Tammuz in Mesopotamia