யார் நல்ல ஆசிரியர்?

raje2
Rajasthan Chief Minister Vasundhara Raje in a village school.

By London Swaminathan

Post No.871 dated 27th February 2014

ஆதிசங்கரர் எழுதிய வினா- விடை ரத்தின மாலை மிகவும் வியப்பான விஷயங்களைச் சொல்லும் ஒரு ஸ்தோத்திரம். வடமொழியில் இதன் பெயர் பிரஸ்ன உத்தர (பிரஸ்னோத்தர= வினா விடை) ரத்ன மாலிகா. மொத்தம் 67 ஸ்லோகங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் 3, 4 கேள்விகளும் பதில்களும் இருக்கும். சுமார் 200 கேள்விகளை அவரே எழுப்பி அழகான பதில்களைக் கூறுகிறார். குரு பற்றிய கேள்விகளை மட்டும் இன்று காண்போம்.

3.யார் குரு?

உண்மையை உணர்ந்தவர். மாணவர்களின் நலனை எப்பொழுதும் கருதுபவரே உண்மையான ஆசிரியர் / குரு.

அருமையான பதில். மதம் என்பதை மறந்து விட்டாலும் கூட இது சரியே. ஒரு ஆசியருக்கு தான் கற்பிக்க வந்ததை (உண்மையை) அறிந்திருக்க வேண்டும். முழுக்க முழுக்க மாணவர்களின் முனேற்றமே அவர்கள் மனதில் இருக்க வேண்டும்.

அந்தக் காலத்தில் குருவிடத்தில் சரண் அடைந்து உபதேசம் பெற்ற எல்லோரும் குருவின் கடாக்ஷத்தால் முன்னேற்றம் கண்டனர். அவர்கள் ஸ்பர்ச தீட்சை, நயன தீட்சை, மானச தீட்சை என்று மூன்று வகைகளில் அருள் பெற்றனர். ராமகிருஷ்ண பரமஹம்சர் தனது சக்தியை ஸ்பரிச தீட்சை மூலம் சுவாமி விவேகானந்தருக்கு மாற்றினார். அதன் மூலம் அவர் உலகப் புகழ்பெற்றார். இந்து மதமும் புனருத்தாரணம் பெற்றது.

சீடர்கள் ஏதேனும் தவறு செய்தால் அந்தப் பாவங்கள் அனைத்தும் குருவையே சேரும்.

குருவின் பெயரைச் சொன்ன மாத்திரத்திலேயே ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலமும் விலகி சிவோஹம் என்னும் நிலையைப் பெறலாம் என்பார் திருமூலர்:–

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரூச் சிந்தித்தல் தானே.

இன்னும் ஒரு அதிசய விஷயத்தையும் திருமூலர் கூறுவார்: கருடன் உருவத்தை மனதில் நினைத்துப் பிரார்த்திதாலோ கருட மந்திரத்தைச் சொன்னாலோ பாம்பு விஷம் பறந்தோடிப் போகுமாம்.அதே போல குருவை மனதாரப் பிராத்திப்பவனுக்கு மும்மலமும் அறுபட்டு முத்தி அடைய முடியுமாம்.

கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம் கெடுமா போல்
குருவின் உருவம் குறித்த அப்பொழுதே
திரிமலம் தீர்ந்து சிவன் அவன் ஆமே
— திருமூலரின் திருமந்திரம்

shantiniketan

Shantineketan, Calcutta

ஆதி சங்கரர் எடுத்துக் கொள்ளும் அடுத்த கேள்வி

9.எது விஷம்?
குருவின் கட்டளையை மீறுதல்.

ஒருவரை நம்பி குருவாக ஏற்றுக் கொண்டுவிட்டால் அவர் மீது பரிபூரண நம்பிக்கை வேண்டும். அவரது உத்தரவை மீறக்கூடாது. அப்படி மீறுவது விஷத்துக்கு ஒப்பானது. குருவை நிந்தித்தல் அதற்கும் மேலான ஆபத்து உடையது.

சாந்தோக்ய உபநிஷத்தில் ஒரு கதை வருகிறது
குருவின் கட்டளையை மீறாததால் ஞானம் பெற்றவ சத்யகாமன் கதை அது.

குரு, அவனுக்கு இட்ட கட்டளை நான் கொடுத்த மாடுகளின் எண்ணிக்கை ஆயிரமாகப் பெருகும் வரை வராதே என்பதுதான். அவனும் அதையே மனதில் கொண்டு வேறு எதையும் சிந்திக்காமல் மாடு மேய்ப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தான். ஆயிரம் மாடுகள் ஆவதற்குள் அவனுக்குப் பிரம்ம ஞானம் வந்துவிட்டது குருவே அவனைப் பார்த்து நீ ஞானியாக விளங்குகிறாயே உனக்கு யார் உபதேசம் செய்தார்? என்று கேட்கிறார். குருவின் கட்டளையை மீறாமையும், சிரத்தையும், நம்பிக்கையும் அவனுக்கு ஆன்ம ஞானம் ஏற்பட உதவிற்று.

‘’செய்யும் தொழிலே தெய்வம்’’– என்பது எவ்வளவு உண்மை! மாடு மேய்த்தாலும் குருவின் சொற்களில் இருந்த நம்பிக்கை, பிரம்ம ஞானத்தைக் கொடுத்துவிட்டது. எங்கு சிரத்தை இருக்கிறதோ அங்கு ஞானம் பிறக்கும் என்றும் கொள்ளலாம்.

School under the tree boys 2
School in Africa.

ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை:

ஒரு குரு, தனது சிஷ்யனுக்கு, உபதேசம் செய்தார். நீயும் பிரம்மம், நானும் பிரம்மம். எல்லாம் கடவுள் என்று. சிஷ்யன் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டுக் கொண்டான். வெளியே ஞானத் திமிருடன, செருக்குடன் நடந்தான். ஒரு மதம் பிடித்த யானை அவ்வழியே வந்தது. அனைவரும் அலறிப் புடைத்துக் கொண்டு ஓடினர். யானைப் பாகனும் விலகிப் போ, விலகிப் போ என்று கத்தினான். அவனோ, நானும் பிரம்மம், இந்த யானையும் பிரம்மம், நான் எதற்கு நகர வேண்டும் என்றான். அவனை யானை துதிக்கையால் சுழற்றி தூக்கி எறிந்தது.

ரத்தக் காயங்களுடன் குருவிடம் வந்து முக்கி முனகிய வாறே, குருவே! நானும் பிரம்மம், யானையும் பிரம்மம், ஆனால் அந்தப் பிரம்மம் இந்தப் பிரம்மனைத் தூக்கிப் போட்டுக் காயப்படுத்தியது. ஏனோ? என்றான்.

சிஷ்யா!, சிறிது விளக்கமாகச் சொல். யானை தனியாக ஓடி வந்ததா? மற்ற யாரும் அங்கு இல்லையா?

குருவே, யானைப் பாகன் விரட்டவே எல்லோரும் ஓடிவிட்டனர். நான் அவன் சொன்னதை மறுத்து நானும் பிரம்மம் , யானையும் பிரம்மம் என்று வாளாவிருந்தேன்.

சிஷ்யா!, யானையை பிரம்மம் என்று நீ கருதினாய். அதன் மீதிருந்த பாகன் என்ற பிரம்மம் சொன்னதை கேட்கவில்லையே. அவனும் பிரம்மம்தானே! என்றார்.

ஆக, குரு சொன்னதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் குருவின் கட்டளையை மீறியதால் அவர் துயரம் அடைந்தார்.

பரசுராமனிடம் பொய் சொல்லி வில்வித்தை கற்ற கர்ணனுக்கு நேர்ந்த கதையையும் நினைவிற் கொள்ளுதல் வேண்டும்.

Gautama Buddha Park,Noida

School under a tree at Gautama Buddha Park, Noida, India.

Contact swami_48@yahoo.com

அலெக்ஸாண்டரை அசத்திய கோவில் அழிந்தது எப்படி?

59706274-ruins-surajkund

Picture: Ruins in Surajkund, Multan,Pakistan

பாகிஸ்தானில் மூலஸ்தான்: அலெக்ஸாண்டரை அசத்திய இந்துக்கோவில் அழிந்தது எப்படி?

Post no 868 Dated 26th February 2014

டாக்டர் மும்தாஜ் ஹுஸைன் பதான், “சிந்து”, ஆங்கிலப் புத்தகம், ஹைதராபாத், பாகிஸ்தான், 1978.

( திருப்பதியில் உள்ள பாலாஜி கோவிலும், திரு அனந்த புரத்தில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோவிலும் தங்கத்திலும் வைரத்திலும் கொழிப்பதற்கு முன்பாக, 2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிகப் பணக்கார கோவிலாகத் திகழ்ந்தது மூலஸ்தானம் என்னும் இடத்தில் இருந்த கோவில் ஆகும். இப்போது இந்த நகரை மூல்டான் என்று அழைப்பர். இங்கு காந்த சக்தியால் அந்தரத்தில் தொங்கிய அதிசய சூரியன் விக்ரஹம் அலெக்ஸாண்டரை அசரவைத்தது என்று கிரேக்க, மற்றும் அராபிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். இது பற்றி சிந்து ராஜ்ய வரலாறு என்னும் புத்தகத்தில் டாக்டர் மும்தாஜ் என்ற பெண்மணி எழுதியதை அப்படியே தருகிறேன. அடைப்புகுறிக்குள் இருப்பது மற்றும் எனது கருத்துக்கள்—லண்டன் சுவாமிநாதன்)

“முற்காலத்தில் மேற்கு பாகிஸ்தானில் மாலி என்னும் வகுப்பினர் வாழ்ந்தனர். அவர்களின் பெயரில் மாலிஸ்தான் என்ற சம்ஸ்கிருதச் சொல் தோன்றியது. அதுவே இன்று மூல்டான் ஆகிவிட்டது. மாலோய், சிபி ஆகிய இரண்டு சக்திவாய்ந்த சமூகங்களை கிரேக்கர்களும் குறிப்பிடுவர். இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இன்றும் இவர்கள் பெயரில் பல இடங்கள் இருப்பதைக் காண்கிறோம். மத்திய இந்தியாவில் மால்வா, பஞ்சாபில் சிவிகோட், சிந்து மாகாணத்தில் சிவிஸ்தான், பலுசிஸ்தானில் சிபி என்றும் அழைக்கபடும் இடங்கள் இவர்களின் செல்வாக்கைக் காட்டுகிறது.

(சோழர்கள் தமிழர்களா? என்று நான் ஏற்கனவே இதே பிளாக்–கில் எழுத்ய கட்டுரையில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்).

பிரம்மாவின் வழி வந்த மனுவின் ஏழு புத்திரர்களில் ஒருவர் காஸ்யப மஹரிஷி. அவர் பெயரில் மூல்டான் நகரம் காஸ்யபபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. மனுவின் ஏழு புத்திரர்களை நட்சத்திர ரூபத்தில் சப்தரிஷி நட்சத்திர மண்டலக் கூட்டத்தில் காணலாம். மூல என்பதற்கு சூரியன் என்றும் ஒரு பொருள் உண்டு. சிந்து சமவெளியில் மூல்டானில் இருந்த பிரபல சூரியதேவன் கோவில் பற்றி அராபிய யாத்ரீகர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

மூலம் என்ற சொல்லுக்கு தோற்றுவாய், கடவுள், ஆகாயம், வான மண்டலம் என்ற பொருள்களும் உண்டு. இதில் எந்த்ச் சொல்லும் சூரியதேவனுக்கும் பொருந்தும். இந்திய துணைக்கண்டத்தில் முதல் முதலில் கட்டப்பட்ட கோவில் என்பதாலும் இப்பெயர் இர்க்கலாம். கிருஷ்ண பரமாத்மாவின் புதல்வன் சம்பா கட்டிய கோவில் இது.

இந்த இடத்துக்கு ஆத்யஸ்தானம் என்ற பெயரும் உண்டு. ஆதியான இடம், முதல் இடம் என்று அர்த்தம். ஆனால் சூரியனுக்கு உள்ள மற்றொரு பெயரான ஆதித்ய என்பதே இப்படி திரிந்து போனது. நாம் இபோதும் ஞாயிற்றுக் கிழமைக்கு ஆதித்ய வார், ஆய்த்வார், ஆய்த் என்றெல்லாம் சொல்கிறோம்.மனுவின் மகனான தைத்யன் ஹிரண்யகசிபுவின் மகன் பிரஹலாதன் இதை நிறுவியதாகவும் சொல்லுவர். சம்ஸ்கிருத மொழியில் தேர்ச்சிபெற்ற ஆலபரூனி என்ற அறிஞர் இந்தக் கோவில் கர்தா யுகத்தில் தோன்றியதாவும் 216432 அண்டுகளுக்கு முன் இது கட்டப்படதாகவும் எழுதி வைத்துள்ளார். (கர்தா யுகம் என்பது கிருத யுகம் என்று ஊகிக்கலாம்)

(இதை எல்லாம் ஒரு பாகிஸ்தானிய முஸ்லீம் பெண்மணி எழுதுகிறார் என்பதை நினைவிற் கொண்டு மேலும் படியுங்கள்)

Pakistan, Punjab map

மூல்டானில் அலெக்ஸாண்டர்

மூல்டான் பற்றி தொல் பழங்காலக் குறிப்புகளும்கிடைக்கின்றன. கிரேக்க நாட்டு ராணுவ தளபதியான் ஸ்கைலாக்சும் இது பற்றி எழுதியிருக்கிறார். அவர் முதலாம் டேரியஸ் மன்னன் (கி.மு.550 – 486) காலத்தில் பஞ்சாபுக்கு வந்தார். காஸ்யப புரம் பற்றி ஹெரோடோட்டஸ், டாலமி ஆகியோரும் குறிப்பிட்டனர். மூல்டான் கோவிலுக்கு வந்த அலெக்ஸாண்டர் அங்குள்ள கலைகோவிலைக் கண்டு அசந்தே போய்விட்டார். அந்தக் கோவில் விக்ரகம் பல காந்தக் கற்களின் உதவியால் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். மூலஸ்தான் சூரியதேவனார் கோவில் பற்றி 1200 ஆண்டுகளுக்கு முன் சீன யாத்ரீகர் யுவான் சுவாங்கும் எழுதி வத்தார். சூரியனார் சிலை சொக்கத் தங்கத்தினால் ஆனது. ஏராளமான ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப்பட்டது என்கிறார் அவர். அவர் வந்த காலத்தில் ஓடிய ராவி நதி கூட, இப்போது திசை மாறி ஓடுகிறது.

அராபியர் படை எடுப்புக்கு முன் சிந்து மாகாண ஆட்சி சாக் என்னும் பிராமணர் கையில் இருந்தது. அவர்கள் புத்த மதத்தினர் ககளி இருந்த் ஆட்சியைப் பறித்தனர். அராபியர் படை எடுத்த காலத்தில் ராஜ க்ண்ட என்பவர் கடுமையாகப் போரிட்டு அராபியரின் உணவு சப்ளை கிடைக்காதபடி செய்து பட்டினியில் வாடவீட்டார். இதனால் அவர்கள் கழுதைகளைக் கொன்று சாப்பிட நேரிட்டது. இதனால் கழுதை விலை யானை விலை, குதிரை விலை என்று ஏறிப் போனது. ஆனால் முற்றுகை வெகு காலம் நீடித்தவுடன், கோவில் பூஜாரிகள் மூல்டான் கோட்டையை அராபியரிடம் ஒப்படைத்தனர்.

அராபியர்களின் தீவிரவாதப் பிரிவான இஸ்மாயிலிகளின் போதனையால் வெறியர்களான அல் ஹைதம், சைபான் ஆகியோர் மூல்டான் சூரிய தேவன் விக்ரஹத்தைச் சுக்கு நூறாக நொறுக்கினர். முகமது பின் காசிம் எழுப்பிய மசூதியையும் மூடவித்தார் சைபான்.

(வரலாறு படித்தவர்களுக்கு முகமது பின் காசின் என்பவரை நினைவில் இருக்கும். இவர் துவக்கி வைத்த முஸ்லீம் ஆட்சிதான் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆட்டிப்படைத்தது. இவர்களும் பிரிட்டிஷாரும் செய்த தீவினைகளையே “ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி” என்றும், வேத நூல் பழிக்கும் வெளித் திசை மிலேச்சர் என்றும் பாரதியாரும் பாடலில் சாடுகிறார்—சுவாமி)

chin_mudra

மூல்டான் விக்ரஹ வருணனை

இந்தக் கோவிலில் இருந்த விக்ரஹத்தை பைபிளில் வரும் எபிரேய தீர்க்கதரிசி ஜாப் (அயூப்) புடன் ஒப்பிடுகின்றனர் அராபியர்கள். இந்திய துணைக் கண்டத்தில் பல பாகங்களில் இருந்து வந்த மக்கள் கூட்டம் மூலம் கோவிலுக்கு ஏராளமான வருவாய் கிடைத்தது. இதை வைத்தே அரசாங்கம் நடந்தது.
சூரிய தேவன் சிலை ஒரு நாற்காலியில் உட்காரவைத்தது போல வீற்றிருந்த திருக்கோலத்தில் இருந்தது. உடல் முழுதும் சிவப்புத்தோல் போர்த்தப் பட்டு கண்கள் மட்டும் ரத்தினக் கற்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.கண்கள் போல ஜொலித்த இரண்டு ரத்தினக் கற்களும் மிக மிக விலை மதிப்புடையவை. அவைகளை அவர்கள் கண்களில் பொருத்தி இருந்த முறை அதை உண்மைக் கண்கள் என்று நம்புமாறு இருந்தன. இவை இரண்டும் குருவி முட்டைகளை விடப் பெரியவை என்றும் கோவில் முழுதும் பிரகாசத்தைப் பரப்பியது என்றும் இபி நதீம் எழுதிவைத்துள்ளார். தலையில் தங்கக் கிரீடமும் தங்க விதானமும் அமைக்கப்பட்டிருந்தது. தொடையின் மீது இருந்த கைகள் நாலு என்று எண்ணுவது போல அமைக்கப்பட்டிருந்தது

(எனது கருத்து:- சின் முத்திரையைத் தான் அராபிய முஸ்லீம்கள் இப்படி நாலு என்னிக்கை என்று எழுதினர் போலும்: சுவாமி)

மூல்டானில் வேறு இரண்டு கற்சிலைகளும் இருந்தன. அவற்றின் பெயர் ஜுன்புகாத், சூன்புகாத் (துவார பாலகர்கள்??) பள்ளத்தாக்கின் இரண்டு பக்கமும் 80 கஜ இடைவெளியில் அமைக்கப்படிருந்தன. இந்த சிலைகளை வெகு தொலைவிலேயே காண முடியும். உடனே பகதர்கள் மரியாதை காரணமாக வண்டியில் இருந்து இறங்கி வெறும் காலகாளல் நடந்து கோவிலுக்கு வருவர்.
(இன்றும் திருப்பதியில் இத்தகைய காட்சிகளைக் காண்கிறோம்)

வெகு தொலைவில் இருந்தெல்லாம் மக்கள் வந்து காணிக்கைகலைக் குவித்தனர். சிலர் ஆயிரம் மைல் தொலைவில் இருந்து வந்தனர். அங்கே முடிகளை காணிக்கை கொடுத்துவிட்டு கோவிலை வலம் வந்தனர்.
(இன்றும் திருப்பதி, பழநி ஆகிய இடங்களில் இதைக் காண்கிறோம்)

counting 4 ashmolean

Picture of Surya in Ashmolean Museum, Oxford, England.

முல்டானில் மக்கள் சாமி கும்பிட்ட முறை பயங்கரமானவை, ஒரு மாதிரியானவை. ஒரு சிலர் கத்தியை எடுத்து கண்களைத் தோண்டி விக்ரகம் முன் காணிக்கை செலுத்தினர். மற்றும் சிலர் மூங்கில் கழியைக் கூராக்கி வயிற்றை அதில் வைத்து அழுத்தி முதுகின் வழியே வரச் செய்தனர். இதனால் அவர்கள் இறக்க நேரிட்டது.

(எனது கருத்து:கண்ணப்ப நாயனார், விஷ்ணு, சிபி சக்ரவர்த்தி ஆகியோர் கண் தானம் செய்ததை நான் ஏற்கனவே இதே பிளாக்—கில் எழுதி இருக்கிறேன். அதை நினைவுபடுதுகிறது மேற்கூறிய முஸ்லீம் அறிஞரின் வருணனை– சுவாமி)

மூல்டான் கோவிலுக்குச் சென்று வந்தவர்கள் கூறியதை இபின் ருஷ்டா என்பவர் கி.பி 903 ல் பின்வருமாறு எழுதுகிறார்:

“ இந்த விக்ரஹம் 20 கஜ தூரம் இருக்கும். இது வானத்தில் இருந்து வந்ததாகவும் தேவர்களே வணங்கச் சொன்னதாகவும் இந்துக்கள் நம்புகின்றனர். இந்த்க கோவில் வருவாய் அராபிய ஆட்சியாளர்களுக்கும் கோவில் குருக்கள்மார்களுக்கும் பெரும் வருவாயாக விளங்கியது. சிலர் தனது வருவாயில் பாதியையும் மற்றும் சிலர் முழுச் சொத்துகளையும் கோவிலுக்கே தானம் செய்தனர். கோவில் பூஜாரிகள் மிகவும் கடுமையான விரதத்தை அனுஷ்டித்தனர். குளித்துவிட்டு சுத்தமாக இருந்தனர். மாமிச உணவைத் தொடவில்லை. மீன், சோறு, காய்கறிகளைப் படைத்துவிட்டு கோவிலுக்கு வரும் மிருகங்கள், பறவைகள், பூச்சிகளுக்கு பகிர்ந்து கொடுத்தனர். விக்ரஹம் இரும்பினால் செய்யப்பட்டது. காந்த சக்தி மூலம் அந்தரத்தில் நிற்கவைத்தனர்.

அதே காலத்தைச் சேர்ந்த இபின் நதீம் பின்வரும் தகவலைத் தருகிறார்:
இந்த கோவில் விக்ரகம் ஏழுகஜம் அகலமுடையது. கோவிலின் உயரம் 180 கஜம். விக்ரகத்துக்கு நான்கு முகங்கள். ஒவ்வொரு முகமும் ஒரு நுழை வாயிலில் தெரியும் பக்தர்கள் எந்த வாசல் மூலமும் உள்ளே வருவர்.

அல்பரூனி (கி.பி. 973—1048) வேறுவித மான தகலைத் தருகிறார். இந்த விக்ரஹம் மரத்தால் ஆனது என்றும் தோலினால் மூடப் பட்டிருந்தது என்றும் சொல்கிறார். அராபியர்கள் விலை உயர்ந்த தங்க விக்ரகத்தை எடுத்துக் கொண்டு மரச் சிலையை வைத்திருப்பதை இது காட்டுகிறது. ஆனால் இறுதியில் இந்த மரச் சிற்பத்தையும் ஜமாம் பின் சைபான் நொறுக்கிவிட்டு பூஜாரிகளையும் சுவடே இல்லாமல் அடியோடு அழித்துவிட்டார்.

(வேறு ஒரு கட்டுரையில் அந்தக் கோவிலில் 6000 ஊழியர்கள், குருமார்கள் இருந்ததாக எழுதி இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் படுகொலை செய்தது மேற்கூறிய ஜமாம் பின் சைபான்,என்று யாத்ரீகர் தகவல்களில் இருந்து தெரிகிறது)

அராபியர்களுக்கு மூல்டான் விக்ரஹம் பலவகையில் உதவியது. பெரும் வருவாயைக் கொடுத்தது. அது மட்டுமல்ல. இந்து மன்னர்கள் படை எடுத்தபோதெல்லாம் முஸ்லீம்கள் இந்து விக்ரஹத்தை கோட்டை மதில் சுவருக்கு மேலே வைத்து முன்னேறி வந்தால் இந்தச் சிலையை கீழே போட்டு நொறுக்கிவிடுவோம் என்று மிரட்டினர். உடனே வந்தவர்கள் பின்வாங்கிவிடுவர். இப்படியாக மூல்டானின் அழிவு ஒத்திபோடப்பட்டது

சிந்து சமவெளியில் முதலில் நுழைந்த முஸ்லீம் தளபதியான முகமது பின் காசிமிடம் இந்த சிலையால் மிகப் பெரிய வருவாய் கிடைப்பதாக தெரிவித்தனர். ஆகையால் அவன் சிலையை உடைக்கவில்லை. ஆனால் இந்துக்களைக் கேலி செய்வதற்காக அந்தச் சிலையின் கழுத்தில் பசுமாட்டின் மாமிசத்தைத் தொங்கவிட்டுச் சென்றான்.”

டாக்டர் மும்தாஜ் ஹுசைன் பதான் எழுதிய சிந்து மாகாணம் என்ற புத்தகத்தில் கண்டதை மேலே படித்தீர்கள். ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்தவர் லண்டன் சுவாமிநாதன்)

swami_48@yahoo.com

அஹிம்சையே உயர்ந்த தர்மம்!

Himalaya1_BA_26_567px

சம்ஸ்கிருத செல்வம்–அத்தியாயம் 32 by ச.நாகராஜன்
Post no 867 Dated 26th February 2014

தர்மங்களில் எது உயர்ந்த தர்மம்? அஹிம்சையே உயர்ந்த தர்மம். யாரையும் ஹிம்சிக்காமல் இருப்பது சிறந்த கொடையாகும்.
இதை வலியுறுத்தும் கவிதை இது:

அஹிம்சா பரமோ தர்ம: ததாஹிம்சா பரோ தம: I
அஹிம்சா பரமம் தானம் அஹிம்சா பரமம் தப: II

அஹிம்சா பரமோ தர்ம: – அஹிம்சையே மிக உயர்ந்த தர்மம்
ததாஹிம்சா பரோ தம: – அந்த அஹிம்சை மிக உயர்ந்த சுய கட்டுப்பாட்டாலேயே அடைய முடியும்.
அஹிம்சா பரமம் தானம் – யாரையும் ஹிம்சிக்காமல் இருப்பது மிகச் சிறந்த கொடையாகும்
அஹிம்சா பரமம் தப: – அஹிம்சையே மிக உயர்ந்த தவமாகும்.

தர்மப்படி வாழ வேண்டும் என்கின்றன நமது அற நூல்கள். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் கவிஞர்கள் இதை வலியுறுத்தத் தவறுவதே இல்லை.

தர்மம் சரத் மா(அ)தர்மம் சத்யம் வதத் நாந்ருதம் I
தீர்கம் பஷ்யத மா ஹ்ரஸ்வம் பரம் பஷ்யத மா(அ)பரம் II

தர்மம் சரத் – தர்மத்தைக் கடைப்பிடி
மா அதர்மம் – அதர்ம வழியை அல்ல
சத்யம் வதத் – உண்மையே பேசு
ந அந்ருதம் – பொய்யைப் பேசாதே
தீர்கம் பஷ்யத பரம் பஷ்யத– தொலைவில் இருந்தாலும் கூட உறுதியான லட்சியத்தின் மீது கண்களைப் பதி
மா ஹ்ரஸ்வம்,மா அபரம் – உடனடியாக நிறைவேறும் அருகில் உள்ள லட்சியத்தின் மீது அல்ல

என்ன அருமையான அறிவுரை! மனத்தில் எப்போதும் நிலை நிறுத்தி வைக்க வேண்டிய அருளுரை அல்லவா இது!

இனி மதங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெரிவிக்கும் பாடலைப் பார்ப்போம்:

தர்மம் யோ பாததே தர்மோ ந ச தர்ம: ப்ரகீர்தித: I
அவிரோதாத் து யோ தர்ம: ச தர்ம: சத்யவிக்ரம: II

(ய) தர்மம் (அன்யம்) தர்மம் பாததே – எந்த மதமானது இதர மதத்தைப் பின்பற்றுபவர்களை கொடுமைப் படுத்துகிறதோ

ச தர்ம: ந ப்ரகீர்தித: – அந்த மதம் உண்மையான மதம் அல்ல!
ய தர்ம: அவிரோதாத் (ஸ்வீகார்யதே) – எந்த மதமானது மற்றவர்களுக்குத் தடையாக இருக்காமலோ அல்லது மற்றவைகளை அடக்காமல் இருக்கிறதோ
ச தர்ம: சத்யவிக்ரம: – அந்த மதமே உண்மையானது, சாசுவதமாக நிலை பெற்றிருப்பதாகும்.

இந்த சாசுவதமான சத்தியத்தை கவிஞர் வாயிலாக நாம் அறியும் போது உளம் மகிழ்கிறோம்.

இதைப் படிக்கும் போது ஹிந்து மதத்தைச் சார்ந்தோர் பெருமிதம் அடைவர்.
ஹிந்து மதத்தைப் பின்பற்றுவோர் ஒரு நாளும் பிற மதத்தினரை இழிவாகப் பேசுவதில்லை. அடக்குவதில்லை.

சாசுவதமான தர்மத்தை சகிப்புத் தன்மையுடன் சொல்வதோடு அதைப் பின்பற்றுவோர் இதர மதத்தினரை மரியாதையுடன் நடத்துகின்றனர்.

அதனால் தான் அது சனாதன தர்மம் என அழைக்கப்படுகிறது.
அது ஒரு மதம் மட்டுமல்ல; ஒரு வாழ்க்கை முறை; நேற்றும் இன்றும் நாளையும் என்றும் சனாதமாக இருக்கும் ஒரு தத்துவம், சத்தியம் அது!

Contact swami_48@yahoo.com
*****************

மனத்தின் ஏழு நிலைகள்

shanakara face

By London Swaminathan
Post No. 865 Date:

ஆதிசங்கரர் எழுதிய ஒவ்வொரு துதியும் அற்புதமானது. அவைகளில் மிகவும் வியப்பான விஷயங்களைச் சொல்லும் ஒரு ஸ்தோத்திரம் பிரஸ்ன உத்தர (பிரஸ்னோத்தர= வினா விடை) ரத்ன மாலிகா. இது ஒரு கேள்வி பதில் துதி. மஹா பாரதத்தில் உள்ள யக்ஷப் ப்ரஸ்னம் போல கேள்வி—பதில் பாணியில் அமைந்தது. மொத்தம் 67 ஸ்லோகங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் 3, 4 கேள்விகளும் பதில்களும் இருக்கும். சுமார் 200 கேள்விகளை அவரே எழுப்பி அழகான பதில்களைக் கூறுகிறார். அதில் ஒரு கேள்வியை மட்டும் காண்போம்.

யார் தூய்மையானவர்?

யாருடைய மனம் சுத்தமாக இருக்கிறதோ அவரே சுத்தமானவர்.
ஆதிசங்கரரின் மேற்கண்ட பதில் அருமையான பதில்.. மனம், சொல், உடல் (மனோ வாக் காயம்) மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது இந்து மதம் ஒன்றிலேயே தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்பொழுதுதான் மந்திர சித்தி உண்டாகும். உடலைத் தூய்மையாக வைப்பது எளிது. யானை முதல் காகம் வரை குளிப்பதைப் படத்தில் காண்கிறோம்..மனதைத் தூய்மையாக வைப்பதுதான கடினத்திலும் கடினம்.

காமம், க்ரோதம் (கோபம்), லோபம் (பேராசை) ஆகிய மூன்று தொடர்பாக நம் மனத்தில் வரும் எண்ணங்களை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு, பின்னர் நாம் அதைப் படிக்க முயன்றால் வெட்கப்பட்டு பாதியிலேயே கிழித்து எறிந்து விடுவோம்.அவ்வளவு விகாரமான எண்ணங்கள் வருகின்றன. இதுதான் சந்யாயாசிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்.

ராம பிரானுக்கு விதிகளை மீற எவ்வளவோ வாய்ப்பு கிடைத்த போதும் அவர் தர்மத்தில் இருந்து இம்மியும் பிறழவில்லை. ஆகையால்தான் ராமாயணம் காலத்தால் அழியாத காவியமாக விளங்குகிறது.

இந்துக்கள் தினமும் வழிபாடு முடித்தவுடன்
காயேன வாசா மனசேந்த்ரியைர்வா புத்யாத்மனேவா
ப்ரக்ருதேத் ஸ்வபாவாத் கரோமி யத் சகலம் பரஸ்மை நாராயணேத் இதி சமர்ப்பயாமி

என்று சொல்,செயல்,சிந்தனை மூன்றினாலும் செய்த பாவங்கள் உடலின் இயற்கை சுபாவத்தால் நிகழ்ந்தது என்று மன்னிப்பு கேட்டு அதையும் இறைவனுக்கே சமர்ப்பித்து விடுவர்.

யக்ஷப் ப்ரஸ்நத்தில் இப்படி ஒரு கேள்வி:
எது ஸ்நானம்?
தருமனின் பதில்: மன அழுக்கைப் போக்குதல்.

பாரதி பாடுகிறான்:
துணி வெளுக்க மண்ணுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல் வெளுக்க சாம்பலுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

மணி வெளுக்க சாணையுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம் வெளுக்க வழியில்லை—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!

என்று பாடி மாரியம்மாவைச் சரண்புகுந்தோம் என்று முடிக்கிறார். இறைவனின் திருப்பாதங்களை எண்ணிச் சரணடைவதே மனம் வெளுக்க ஒரே வழி!

மனம் பற்றி வள்ளுவன் கூறும் கருத்துகளும் ஒப்பிடற்பாலவை:

மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் (457)= மனத்தின் தூய்மை உலகில் உள்ள எல்லோருக்கும் இன்பம் தரும்
மன நலத்தின் ஆகும் மறுமை (459)= மனத்தின் தூய்மை, மறு பிறப்பிலும் பலன் தரும்
மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி (453)= மனம் அறிவை வளர்க்கும்
மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும் (456)= மனம் தூய்மை உடயவர்களுக்கு நல்ல புகழும் நல்ல குழந்தைகளும் உண்டாகும்.

ஆங்கிலத்தில் சுருக்கமாக

YOU ARE WHAT YOU THINK ‘யூ ஆர் வாட் யூ திங்க்’= மனம் போல மாங்கல்யம் என்று சொல்லி விடுவர்.

புத்தரும் தம்மபதத்தில் கூறுகிறார்:
நம்முடைய கடந்த கால சிந்தனைகளே நம்மை இன்றைக்கு இந்த நிலையில் வைத்துள்ளது. இப்போது நாம் நினைப்பது நாளைய நிலைமையை தீர்மானிக்கிறது
ஒருவன் தீய எண்ணங்களுடன் செயல்பட்டால் வண்டி மாட்டைத் தொடர்ம் வண்டிபோல கஷ்டங்கள் நம்மைத் தொடரும்.(1)

தூய மனதுடன் செயல்பட்டால், ஒருவனைத் தொடரும் நிழல் போல சந்தோஷம் அவனைத் தொடரும்.(2)

rkp shiva

மனத்தின் ஏழு நிலைகள்

ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார்: மனம் உலக விஷயங்களைச் சிந்திக்கும் போது லிங்கம், குஹ்யம், நாபி எனும் மூன்று ஸ்தானங்களில் சஞ்சரிக்கும்.. அந்த நிலையில் உயர்ந்த மனோ பாவங்கள் எழுவதில்லை. காமினி காஞ்சனத்திலேயே அழுந்திக் கிடக்கும் (காமினி காஞ்சனம்= பெண் ஆசை, தங்கம்/செல்வம்/பணம் மீது ஆசை).

மனத்தின் நான்காவது ஸ்தானம் இருதயம். இந்த இடத்துக்கு மனம் வரும்போது முதன் முதலில் ஆத்ம எழுச்சி உண்டாகிறது. இந்த நிலையில் மனமானது பெண்ணாசை, பொன்னாசைகளில் ஒருபோதும் செல்வதில்லை.

மனத்தின் ஐந்தாவது ஸ்தானம் கழுத்து. அங்கு வரும்போது அஞ்ஞானம் எல்லாம் அகல்கிறது. ஆறாவது ஸ்தானம் புருவ மத்தி. அங்கு வரும்போது இரவும் பகலும் இறைவனின் திவ்ய தரிசனமே தென்படுகிறது.

தலைதான் மனத்தின் ஏழாவது நிலை. அங்கு சமாதி உண்டாகிறது. தன் நினைவே கிடையாது. உலக வியாபாரங்கள் அனைத்தும் அறவே ஒழிந்து பரமானந்தம் கிட்டுகிறது.

இந்த ஏழு ஸ்தானங்களே யோக நூல்களில் மூலாதாரம், ஸ்வாதி ஷ்டா னம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா, ஸஹஸ்ராரம் என்று கூறப்படுகின்றன.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் புற்று நோய்

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் புற்று நோயால் ‘கஷ்டப்பட்டு வந்தார்” சசாதர பண்டிதர் அவரைப் பார்த்து,
ஸ்வாமி, யோக சக்தியால் நீங்கள் ஏன் நோயைக் குணப்படுத்திக் கொள்ளக் கூடாது? என்று கேட்டார்
ராமகிருஷ்ணர்:– பகவானுக்கு என்று அர்ப்பணம் செய்துவிட்ட மனதை இந்த அற்ப உடலின் பொருட்டு எப்படி நான் திருப்புவேன்?

சசாதரர்: ஆனால் வியாதியைத் தீர்த்தருள வேண்டும் என்று ஸர்வேஸ்வரியையாவது பிரார்த்திக்கக் கூடாதா?

ராமகிருஷ்ணர்::– ஸர்வேஸ்வரியை நினைத்துவிட்டால் எனது ஸ்தூல சரீர நினைவே இல்லாமல் போய்விடுகிறது. அப்போது அச் சரீரத்தில் இருப்பது இல்லை. ஆதலால் சரீரத்தப் பற்றி ஒன்றையும் பிரார்த்தித்துக் கேட்கக் கூடாதவனாக இருக்கின்றேன்.

இது போன்ற உயர் நிலை அடைய இடைவிடாத பிரார்த்தனையும் யோகப் பயிற்சியும் தேவை.

Contact swami_48@yahoo.com

ராம ராஜ்யம் -2

rama colorful

Post No 861 Date: 24 February 2014
ராமாயண வழிகாட்டி அத்தியாயம் 16

By ச.நாகராஜன்

ராமாயணத்தில் அயோத்யா காண்டத்தில் நூறாவது ஸர்க்கத்தில் ஸ்ரீ ராமர் பரதனை நோக்கிக் கேட்கும் கேள்விகள் பல. பொருள் பொதிந்த இவற்றுள் இன்னொரு ஸ்லோகத்தைப் பார்ப்போம்:-

தச பஞ்ச சதுர்வர்கான்சப்தவர்காஸ்ச தத்தவத: I

அஷ்டவர்க த்ரிவர்க ச வித்யாஸ்திஸ்ரஸ்ய ராகவ II

ராகவ – பரத! தச – பத்து பஞ்ச – ஐந்து சதுர்வர்கான் – நான்கு வர்க்கங்களையும் சப்தவர்கான் ச – ஏழு வர்க்கங்களையும் அஷ்டவர்கான் – எட்டு வர்க்கங்களையும் த்ரிவர்க ச – மூன்று வர்க்கங்களையும் திஸ்ர வித்யா ச – மூன்று வித்தைகளையும் தத்தவத – உள்ளபடி (ஆராய்ந்து அதற்கேற்றபடி நடந்து வருகிறாயா?)

இதில் பத்து, ஐந்து, நான்கு, மூன்றும் ஏழு, எட்டு வர்க்கம் என்ற எண்ணிக்கையால் ராமர் உரைப்பதை அவர் விளக்கவில்லை. சகல கலைகளையும் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர் ஆகிய நால்வரும் ஒரு சேரக் கற்றனர் என்பதால் எதிரிலிருக்கும் பரதனும் அதை அறிந்திருப்பான் என்பதை இதன் மூலம் நாம் தெரிந்துகொள்கிறோம்.

ராமர் கூறியதன் விளக்கத்தைப் பார்ப்போம்:-
பத்து என்று ராமர் குறிப்பிட்டது 1) வேட்டையாடுதல் 2) சூதாடல் 3) பகலில் தூங்குவது 4) வீண் பேச்சு 5) பெண்களின் சகவாசம் 6) குடி 7) நர்த்தனம் 8) பாட்டு 9) வாத்தியம் 10) தேசாடனம் ஆகியவற்றையே.

ஐந்து என்று குறிப்பிட்டது:- 1) பகைவரால் உண்டாகிய பகை 2) பொருளால் உண்டாகிய பகை 3) பெண்ணினால் உண்டாகிய் பகை 4) சொல்லால் உண்டாகிய பகை 5) குற்றத்தால் உண்டாகிய பகை.

நான்கு என்று குறிப்பிட்டது:- 1)சாம 2)தான 3)பேத 4) தண்டம்.

ஏழு என்று குறிப்பிட்டது:- 1) அரசன் 2) அமைச்சர் 3) நாடு 4) கோட்டை 5) பொருள் 6) சேனை 7) நட்பினர்.

எட்டு என்று குறிப்பிட்டது:- 1) கோள் உரைத்தல் 2) சாகசம் செய்தல் 3) வஞ்சனை 4) பிரணய கோபம் 5) பொறாமை 6) பொருளை இகழ்தல் 7) வன்மொழி கூறல் 8) கடும் தண்டனை தரல்

மூன்று என்று குறிப்பிட்டது :- 1) செய்யத் தகாத செயலில் முயலுதல் 2) செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் இருத்தல் 3) செய்ய வேண்டிய காரியங்களைக் காலமில்லாத காலத்தில் செய்தல்.

மூன்று வித்தைகள் என்று குறிப்பிட்டது: – 1) சுருதி 2) பயிர் செய்தல், வியாபாரம் 3) நீதி சாஸ்திரம் ஆகியவை.

நூறாவது ஸர்க்கத்தில் 68வது ஸ்லோகமாக அமைகிறது இது. இதைத் தொடர்ந்து இன்னும் இரண்டு ஸ்லோகங்களையும் சேர்த்துப் பொருள் காண வேண்டும். அவற்றையும் அடுத்துப் பார்ப்போம்.

Swami_48@yahoo.com

16,000 பெண்களுடன் கிருஷ்ணன் !!

KrishnaRadaGopis

Post No. 859 Date 23 February 2014

கட்டுரையாளர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்: 859 தேதி 23 பிப்ரவரி 2014

எச்சரிக்கை!!
‘’16.000 பெண்களுடன் கிருஷ்ணன் ஆடினான் என்பதை நம்புவோர், அவன் 16,000 பேருடன் ஒரே நேரத்தில் இருந்தான் என்று புராணங்கள் சொல்லுவதையும் நம்பத் தயாராக இருக்க வேண்டும். கிருஷ்ணன் செய்த மஹா அற்புதங்களையும் நம்ப வேண்டும். எனக்குப் இடித்த காமச் சேட்டைகளை மட்டும் எடுத்துக் கொள்ளுவேன். மற்றவற்றை ஒதுக்கிவிடுவேன் என்று கூறுவது உங்கள் அறியாமைக்கு விளக்குப் போட்டுக் காட்டியதாகி விடும். ‘’நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு’’ என்றும், ‘’வெள்ளத்து அனையது மலர் நீட்டம், மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு’’ என்ற வள்ளுவன் கூறிய சத்திய வாக்கினையும் நினைவிற் கொள்க’’.

நான் மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளிக்ககூட மாணவனாக இருந்த போது வடக்கு மாசிவீதியில் உள்ள எங்கள் வீட்டுக்கு மாதந்தோறும் அழகான கிறிஸ்தவப் பெண்கள் வந்து கதவைத் தட்டுவார்கள். கையில் பைபிளும் பல துண்டுப் பிரசுரங்களும் இருக்கும். மெதுவாகப் பேச்சுக் கொடுப்பார்கள். பிறகு கிருஷ்ணனைத் தாக்கத் துவங்குவார்கள். அவர் 16,000 பெண்களுடன் இருந்தது உங்களுக்குத் தெரியுமா? என்று. இதற்குள் என் அண்ணன் தம்பிகள் எல்லோரும் வாசலுக்கு வந்து விடுவார்கள்.

ஏசு பெருமான் 13 வயது முதல் 30 வயது வரை எங்கு இருந்தார் என்று பைபிள் கூறவில்லையே! அவர் இமய மலை காடுகளுக்கு வந்து உபநிஷதத்தைப் படித்துவிட்டு ஆட்டு இடையர்களுக்கு எவ்வளவு சொல்ல வேண்டுமோ அவ்வளவு சொன்னார். அது உங்களுக்குத் தெரியாதா என்று கேட்போம். விவாதம் சூடு பிடிக்கும்.

இதற்குள் மதுரை ஆதீனகர்த்தர் போட்ட துண்டுப் பிரசுரத்துடன் என் சகோதரர்கள் மற்ற கேள்விகளை எழுப்புவர். உலகம் 6000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது என்கிறீர்களே. அறிவியலுக்கு கொஞ்சமும் பொருந்தவில்லையே? கான்ஸ்டாண்டி நோபிளில் ஆயிரக் கணக்கான வகை பைபிள்களைப் போட்டு எரித்துவிட்டு மிச்சம் வைத்திருக்கும் ஒரே பைபிளிலும் ஏசுவின் இளமைக் காலத்தை அடியோடு மறைத்துவிட்டீர்களே? ஏசு பெருமான் சாகும் போது “ஏலி ஏலி லாமா சபக்தானி” (ஏ தேவனே! ஏ தேவனே! ஏன் என்னைக் கை விட்டீர்?) என்று கூக்குரல் எழுப்பியது ஏன்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, நைஸாக நழுவி விடுவர் அந்தப் பெண்கள்!

இதெல்லாம் என்ன பழைய கதை? “உலகமே ஒன்று, ஒரே கடவுள், நமக்கு ஏன் வம்பு?” என்று பேசாமல் இருந்துவிடும் இந்துக்களும் உண்டு. அப்படிப் பேசாமல் இருக்கத்தான் எனக்கும் விருப்பம். ஆயினும் விட மாட்டேன் என்கிறார்களே!

வெண்டி டோனிகர் என்ற அமெரிக்க பெண்மணி இந்துமதம் பற்றி விஷம் கக்கி எழுதிய புத்தகம் சில வாரங்களாக பெரிய சர்ச்சையை உண்டாக்கி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்..காரர்கள் கோர்ட்டில் வழக்கு போட்டவுடன் ‘பெங்குவின்’ நிறுவனம் அந்தபுத்தகத்தை விலக்கிக் கொண்டுவிட்டது. வெண்டி டோனிகருக்கு “செக்ஸ்’ தவிர வேறு எதுவும் தெரியாது, சிவன், காளி, கிருஷ்ணன் எல்லாவற்றிலும் செக்ஸைக் காணும் ஒரு பெண்!

அதுமட்டுமல்ல. அண்மையில் ரஷ்யாவில் பகவத் கீதை ஒரு வன்முறைப் புத்தகம் என்று கோர்ட்டில் ஒரு வழக்கு நடந்தது. அதுவும் தள்ளுபடி ஆனது.

6-Vastra-Haran-Krishna-and-Gopis

கோபியர் பற்றிய குறிப்பு சங்கத் தமிழ் இலக்கியத்தில்தான் முதலில் வருகிறது. பின்னர்தான் சம்ஸ்கிருத இலக்கியத்தில் வருகிறது!!

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை!!!

இதைவிட போலந்தில் ஒரு சுவையான வழக்கு நடந்தது.. அதில் வழக்குப்போட்ட கிறிஸ்தவ பெண்ணே பதில் சொல்லாமல் திணறவே வழக்கு தள்ளுபடி ஆனது.

கிருஷ்ணன் 16,000 கோபியர் என்ற பெண்களைக் கல்யாணம் செய்தார். ஒழுக்கம் கெட்ட அவரைப் போய் இந்த ஹரே கிருஷ்ண இயக்கத்தினர் கும்பிடுவதால் இந்த இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கிறிஸ்தவ கன்னிமார்கள் (நன்) வழக்கு தொடுத்தனர். உடனே இந்து தரப்பில் வாதாடிய வழக்குரைஞர், “ ஐயா, சகோதரி, கன்னிமார் / நன் ஆகப் பதவியேற்றபோது எடுத்த சத்திய வாக்குப் பிரமாணத்தை வழக்கு மன்றத்தில் உரத்த குரலில் மீண்டும் ஒரு முறை கூறச் சொல்லுங்கள்” என்றார். அந்தப் பெண் மறுத்துவிட்டார்.

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.!!!!

கிறிஸ்தப் பெண்கள் ஏசுவைக் கல்யாணம் செய்துகொள்வதாக சத்தியப் பிரமாணம் (உறுதிமொழி) எடுத்து கன்னிமார் ஆவர்.

கிருஷ்ணனுக்கு 16,000 பேர்தான் மனைவியர். இவர்கள் வணங்கும் ஏசுவுக்கோ மில்லியன் கணக்கில் மனைவிமார்கள் என்று இந்து தரப்பு வழக்கு அறிஞர் பேசி முத்தாய்ப்பு வைத்தார்!!!

இந்த கோபியர் விஷயம் ஓயவே மாட்டேன் என்கிறது. சுவாமி விவேகாநந்தர் 125 ஆண்டுகளுக்கு முன்னரே இதைப்பற்றி ஆக்ரோஷமான சொற்பொழிவு ஆற்றியுள்ளார். அதைத் தனியாகத் தருகிறேன். “ முட்டாள்களே, இந்தப் புனிதமான பக்தியைப் புரிந்துகொள்ள முதலில் உள்ளம் புனிதமாக வேண்டும்” என்று சாடுகிறார்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் கோபியரின் பக்தி பற்றி சில கதைகளும் உவமைகளும் தருகிறார். அதையும் தனியாகத் தருகிறேன். இப்போது ஒரே ஒரு குறிப்பை மற்றும் படியுங்கள்:

Radha Krishna Ras Leela Images -04

ஸ்ரீ சித்பவானந்த சுவாமிகள் எழுதுகிறார்:

பூர்ணாவதாரமாகிய கிருஷ்ணனுடைய விளையாட்டுகளை உள்ளபடி அறிந்து கொள்கிறவர்கள் கடவுள் தத்துவத்தையே அறிபவர் ஆகின்றனர். கிருஷ்ணனுடைய ஒவ்வொரு செயலும் தர்மத்துக்கு விளக்கமாகிறது. அவன் ஆற்றிய வினைகள் எல்லாம் அறச்செயலகள் ஆகின்றன. தர்மத்துக்கு அன்னியமான செயலை அவன் ஒரு தடவையிலாவது மறந்தும் செய்தது கிடையாது. அவைகளுள் சிலவற்றை ஈண்டு ஆரய்ச்சிக்கு எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

அவன் சிறு பிள்ளையாய் இருந்தபொழுது கோபியர்களுக்கு முன் எச்சரிக்கை செய்துவிட்டு வெண்ணெயைத் திருடி மற்ற சிறுவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவந்தான். அக் காலத்தில் செல்வத்தின் சின்னமாய் இருந்தது வெண்ணெய். செல்வத்தைத் தேடிப் பிறர்க்குப் பயன்படாது அடைத்து வைத்துவிட்டால் தெய்வச் செயலானது அந்தச் செல்வத்தைத் திருப்பி எடுத்துக் கொள்கிறது. இது காலமெல்லாம் நிகழ்கின்ற நிகழ்ச்சி. இவ்வுண்மையை கிருஷ்ணன் தனது விளையாட்டின் மூலம் விளக்கினான்.

அவன் சுமார் ஏழு வயது சிறுவனாய் இருந்தபொழுது யமுனையில் நீராடிக் கொண்டிருந்த கோபியர்களுடைய ஆடைகளை எல்லாம் ஒரு மரத்தின் மீது கொண்டுபோய் வைத்துவிட்டான். அவர்கள் நதியிலிருந்து வெளியே வந்து கேட்டால் துணிகளைத் திருப்பித் தருவதாகத் தெரிவித்தான். அவன் ஏன் இப்படிச் செய்தான் என்பது பலருக்கு விளங்குவதில்லை. தங்களுக்குத் தூய பக்தியைத் தந்தருள வேண்டும் என்று கோபியர்கள் கிருஷ்ணனிடம் வேண்டினார்கள் அதற்கு அவர்களுக்கு இன்னும் பரிபக்குவம் வரவில்லை என்று கிருஷ்ணன் சொன்னான்.

யாரிடத்தில் உடலைப் பற்றிய உணர்ச்சி இருக்கிறதோ அவருக்கு பராபக்தி உருஎடுக்காது.. சிறு குழந்தைக்கு உடலைப் பற்றிய உணர்ச்சி இல்லை. ஆண், பெண் என்ற வேற்றுமை இல்லை. நிர்வாணமாக உலவுவதில் சிறு குழந்தைகளுக்குச் சிறிதும் சங்கோஜம் இல்லை. முதியவர்களுள் யாருக்கு உடலைப் பற்றிய உணர்வு தானாக அகன்று போகிறதோ அவர்களுக்கு பராபக்தி உடனே வருகிறது.

These are not revealed unto the wise and learned but unto the babes—

வெறும் வாச ஞானம் பெற்றுள்ள பண்டிதர்களுக்கு விளங்காத பரமார்த்திகப் பேருண்மைகள் சிறு குழந்தைகளுக்கு விளங்குகின்றன என்று ஏசுநாதர் புகட்டிய கோட்பாட்டுக்கு விளக்கமாக கிருஷ்ணனுடைய செயல் வந்தமைகிறது. கிருஷ்ணன் பல்லாயிரம் கோபியர்களுக்கு நாதன் என்கின்ற உண்மை எல்லோருக்கும் புலப்படுவதில்லை. உயிர்கள் அனைத்துக்கும் கடவுளே கணவன் என்கின்ற கோட்பாட்டைக் கிருஷ்ணன் எட்டு வயதுச் சிறுவனாக இருந்தபோதே விளக்கிக் காட்டினான்.

raslila-DD06_l

பூரண அவதாரமாகிய இந்தக் கிருஷ்ணனைப் பற்றி ஓயாது துஷ்பிரசாரம் செய்வது கிருஸ்தவ மதப் பிரசார அலுவலாய் இருந்து வருகிறது. அவன் தூர்த்தன் என்றும், திருடன் என்றும், ஒழுங்கு தவறியவன் என்றும் மேடைகளில் அவர்கள் பிரசங்கம் பண்ணுவதுண்டு. அத்தகையவனை கடவுள் என்று வணங்குகின்ற மஹாபாவத்தை ஹிந்துக்கள் செய்துவருகிறார்கள் என்றும் அவர்கள் போதிக்கிறார்கள்.

கிருஷ்ணனை மதிப்பிடுதல் மூலம் சமயத்துறையில் தங்களுடைய அறிவுத் திறன் எவ்வளவு தூரம் பரிபாகம் அடைந்திருக்கிறது என்பதையே இத்தகைய மதப் பிரசாரகர்கள் விளம்பரம் பண்ணுகிறார்கள். இவை போன்ற எண்ணிறந்த அவதூறுகளை அமைதியாகக் கேட்டுவிட்டுப் போவது ஹிந்துக்களுடைய இயல்பு.”

—-பக்கம் 37—40, ஹிந்து மதமும் கிறிஸ்தவ மதமும், ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்ததுறை- 639 115, வெளியீடு ஆண்டு 1995

1995ல் எட்டாம் பதிப்பாக சுவாமி சித்பவானந்தர் இதை வெளியிட்டு இருக்கிறார். இப்போது அமெரிக்கப் பெண்மணி வெண்டி டோனிகர் எழுதிய புத்தகமும், ரஷ்யா, போலந்து ஆகிய நாடுகளில் கிருஷ்ண பரமாத்மா மீது வழக்கு போட்டதும் இன்னும் நிலைமை மாற வில்லை என்பதைக் காட்டுகிறது. இன்னும் சொல்லப் போனால் 125 ஆண்டுகளுக்கு முன் விவேகாநந்தரும் இதே தலைப்பில் பேசி வெளிநாட்டுக்காரர்களிச் சாடி இருக்கிறார். அதைத் தனியே காண்போம்.

Radha-and-Krishna-in-the-center-of-the-gopis

வேத நூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்
பாதமும் பொறுப்பளோ பாரத தேவி— என்று இவர்களைப் பார்த்த்துச் சீறினான் பாரதி.
நாமும் சீற வேண்டாமா?

எதற்கு எது அழகு?

woman

சம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 31
ச.நாகராஜன்

Post No 857 Date 22nd February 2014

கவிஞர் அழகற்ற குயிலையும் அவலட்சணமான மனிதன் ஒருவனையும், ஒரு பெண்ணையும்., ஒரு தவ யோகியையும் பார்த்தார். இவர்கள் அனைவரையும் அனைவரும் போற்றிப் புகழ்ந்தவுடன் அவருக்கு எதற்கு எது அழகு, ஏன் அப்படிப் புகழ்கின்றனர் என்பது புரிந்து விட்டது; கூடவே ஒரு நல்ல பாடலும் பிறந்து விட்டது!

குயிலுக்குக் குரல் அழகு
பெண்ணுக்கு கற்பு அழகு
அவலட்சணமானவனுக்கு கல்வி அழகு
தபஸ்விக்கு பொறை அழகு

கோகிலானாம் ஸ்வரோ ரூபம் நாரிக்யம் பதிவ்ரதம் I
வித்யா ரூபம் க்ரூபாணாம் க்ஷமா ரூபம் தபஸ்வினாம் II

கோகிலானாம் ஸ்வரோ ரூபம் – குயிலுக்கு அதன் கூவல் அழகு
நாரிக்யம் பதிவ்ரதம் – பெண்ணுக்கு பதிவிரதம் மேன்மை
வித்யா ரூபம் க்ரூபாணாம் – குரூபமாய் இருந்தாலும் கல்வி அவனுக்கு அழகு
க்ஷமா ரூபம் தபஸ்வினாம் – தவம் புரிவோருக்கோ பொறை அல்லது மன்னித்தல் அழகு

இது சுபாஷித ரத்னாகர பாண்டாகாரத்தில் தொகுக்கப் பட்டுள்ள பாடல்!

எது எதை எப்படிப் பாதுகாக்க வேண்டும்?

சத்யேன தர்மா – சத்தியத்தால் தர்மத்தை ரக்ஷிக்க வேண்டும்
யோகேன வித்யா – பயிற்சியால் கல்வியை ரக்ஷிக்க வேண்டும்
ம்ருஜயா ரூபம் – சுத்தப் படுத்துவதால் அழகை ரக்ஷிக்க வேண்டும்
(உடல் நலம் பேணுதல் வேண்டும்)
வ்ருத்தேன குலம் – ஒழுக்கமான நன்னடத்தையால் குடும்பத்தை ரக்ஷிக்க வேண்டும்.

சத்யேன ரக்ஷதே தர்மோ வித்யா யோகேன ரக்ஷயதே I
ம்ருஜயா ரக்ஷதே ரூபம் குலம் வ்ருத்தேன ரக்ஷயதே II

அழகான சொற்களால் அற்புதமான கருத்து வலிமை பெறுகிறது! இது மஹாபாரதத்தில் விதுர நீதியில் வரும் பாடல்.

யாருக்கு எது எதிரி?

எந்தக் காரணத்தால் எது அழிகிறது என்பதையும் பார்க்கலாம்:

ஸ்ரீ – ரூபம் – பெண் அழகால் அழிகிறாள்

ப்ராஹ்மணன் –ராஜசேவா – பிராம்மணன் அரசனுக்குச் சேவை செய்யப் போவதால் அழிகிறான்

காவா- தூர ப்ராசேரேண – பசுக்கள் தூரத்தில் உள்ள மேய்ச்சல் நிலத்திற்குச் செல்வதால் அழிகின்றன.

ஹிரண்யம் – லோபலிப்ஸா – தங்கம் பேராசையால் அழிகிறது.

ஸ்தீரி வினஷ்யதி ரூபேண ப்ராஹ்மணோ ராஜசேவா I
காவோ தூரப்ரசாரேண ஹிரண்யம் லோபலிப்ஸயா II

ஸ்தீரி (வினஷ்யதி) ரூபேண –பெண் அழிவது அழகாலே
ப்ராஹ்மணோ வினஷ்யதி ராஜசேவா – ப்ராம்மணன் அழிவது ராஜசேவையால்
காவோ (தூரப்ரசாரேண) வினஷ்யதி –பசு அழிவது வெகு தூரத்தில் மேய்ச்சலுக்குச் செல்வதால்
ஹிரண்யம் (வினஷ்யதி) லோபலிப்ஸயா – தங்கம் அழிவது பேராசையால்.

இதுவும் சுபாஷித ரத்னாகர பாண்டாகாரத்தில் இடம் பெறும் பாடல். தான்!

எது யாருக்கு அழகு என்பது பற்றியும், பாதுகாப்பது பற்றியும், எதனால் எது அழிகிறது என்பதையும் அமுதச் சொற்களால் தெரிந்து கொண்டோம்.

*******************

Contact swami_48@yahoo.com

திருவிளையாடல் புராணம் உண்மையே!

tv sirpam2

Part 1 of Thiru Vilaiyadal Puranam by s. swaminathan

எழுதியவர் : லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண் 855 தேதி 21 February 2014

பெரும்பற்றப்புலியூரார் (13 ஆம் நூற்றாண்டு) என்ற கவிஞரும் அவருக்குப்பின் வந்த பரஞ்சோதி முனிவர் (17 ஆம் நூற்றாண்டு) என்ற கவிஞரும் இரண்டு திருவிளையாடல் புராணங்களை எழுதினர். இவைகளை ஹாலாஸ்ய மஹாத்மியம் என்றும் சிவ லீலா வர்ணம் என்றும் சம்ஸ்கிருதத்தில் வேறு இரு வடமொழிக் கவிஞர்கள் மொழிபெயர்த்தனர். இது மதுரையில் சிவபெருமான் நடத்திய 64 லீலைகளை புரணக் கதை ரூபத்தில் வருணிக்கின்றன. இதில் பல பாண்டிய மன்னர்களின் பெயர்கள் வருகின்றன. அவை எல்லாம் வடமொழிப் பெயர்களாக இருப்பதாலும் அந்தப் பெயர்களில் கல்வெட்டுகள் கிடைக்காததாலும் இது உண்மை வரலாறா? கட்டுக கதையா? என்று ஐயப்பாடு நிலவி வந்தது. ஆனால் இது உண்மை வரலாறு என்பதற்கு இலக்கியச் சான்றுகள் இருக்கின்றன.

பாண்டியர் செப்பேடுகளிலும் சிலப்பதிகாரம், கல்லாடம் போன்ற நூல்களிலும் திருவிளையாடல் நிகழ்ச்சிகள் (குறிப்பிட்ட மன்னர்களின் பெயர்கள் இல்லாமல்) குரிப்பிடப்படுவதால் இவை 1500 ஆண்டுகளுக்கு முன்னரே பிரபலமாகிவிட்டதை அறிய முடிகிறது.

மதுரைக்கு வந்த திரு ஞான சம்பந்தர் பல அற்புதங்களைப் புரிந்து கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக்கியது தேவாரப் பாடல்களாலும் உறுதி செய்யப்படுகிறது. மதுரையிலும் மதுரையைச் சுற்றிலும் ஊர்ப்பெயர்கள் திருவிளையாடல் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை. இவையெல்லாம் பொய்க் கதைகளால் உருவாக முடியாது. அப்படி உருவானாலும் காலத்தைக் கடந்து நிற்கமுடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழன் செய்த தவப் பயன் அப்பர் பாடிய தேவாரப் பாடல்களாகும். தருமி, பொற்கிழி வாங்கிய வரலாறும், நரியைப் பரியாக்கிய வரலாறும் அப்பரின் தேவாரப் பாடல்களில் வருகிறது.
tv sirpam3

Picture of Tiruvilayadal from Madurai Sri Meenakshi Temple.

திருவிளையாடல் புராணமென்ற திரைப்படம் சிவாஜி கணேசனின் சிறந்த நடிப்பால் பெரிய வெற்றி அடைந்தது. அதிலுள்ள அருமையான வசனங்களும் ஏ.பி நாகராஜனின் டைரக்சனும் மேலும் மெருகூட்டின. இதிலுள்ள கதைகளுக்கு மதுரையில் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. அன்னக் குழி மண்டபம், மேங்காட்டுப் பொட்டல் (மெய் காட்டிய), கால் மாறிய நடராஜர் உள்ள வெள்ளியம்பலம், புட்டுத் தோப்பு — இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இந்தக் கட்டுரையாளர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரையில் வசித்ததால் ஆண்டு முழுதும் நடக்கும் திருவிளையாடல் திருவிழாக்களை நேரில் கண்டு ரசித்ததுண்டு.

வளையல் விற்ற திருநாளன்று வளையல் கொடுப்பார்கள். புட்டுத் திருவிழா அன்று புட்டு கிடைக்கும். நரியைப் பரியாக்கிய திருநாளன்று உண்மையான நரியைக் கொண்டுவருவார்கள். அதைப் பார்க்க கூட்டமாகச் செல்வோம். திக்கு விஜயம் அன்று மீனாட்சியும் சிவனும் நான்கு திக்குக்கும் பல்லக்கில் ஓட்டம் ஓட்டமாகச் செல்வார்கள். பல்லக்குகள் பின்னால் நாங்களும் ஓடுவோம். இவை எல்லாம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டும் மாறிக் கொண்டும் வருகின்றன. கால வெள்ளத்தை யாரால் தடுக்க முடியும்?

ther sirpangkal from potramarai

Wooden sculptures from the chariot (Ther); from Potramarai book.

இந்தப் புராணத்தில் கூறப்படும் பாண்டிய மன்னர்கள் உண்மையிலேயே மதுரையை அரசாண்டார்கள் என்றால் அது எந்தக் காலத்தில் என்ற கேள்வியும் எழுகிறது. இரண்டு திருவிளையாடல் புராணங்களுக்கும் சிறிது வேறுபாடு இருந்தாலும் பரஞ்சோதி முனிவரின் புராணமே மிகவும் பிரபலமானது. அதிலுள்ள நிகழ்ச்சிகளின் வரிசையும் மன்னர்களின் வரிசையும் உண்மையா என்று தெரியாது. ஆயினும் அதில் வரும் மாடக் கூடல், தாமரை வடிவில் அமைந்த நகரின் நடுவில் கோவில் இருந்தது ஆகிய செய்திகள் கலித்தொகை, பரிபாடல் ஆகிய சங்க இலக்கிய நூல்களில் இருக்கின்றன.

மதுரையுடன் தமிழ் மொழிக்குள்ள தொடர்பும் ஐம்பது சங்கப் புலவர்களால் தெரிய வருகிறது. மேலும் ஒன்பதாம் நூற்றாண்டு நூலான கல்லாடத்தில் 30க்கும் மேலான லீலைகள் வருகின்றன. இந்த லீலைகள் சார சமுச்சயம் என்ற வடமொழி நூலைத் தழுவி எழுதப்பட்டது. ஆக இவை அனைத்தும் கட்டாயம் ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முன்னர் நடந்தது தெரிகிறது. மேலும் களப்பிரர் ஆட்சிக்குப்பின் வந்த பாண்டிய மன்னர்களின் வரலாறு ஆறாம் நூற்றாண்டில் இருந்து வரிசையாக கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரங்களுடன் கிடைத்துவிட்டதால் அதற்கு முன் தான் இவை நடந்திருக்க முடியும்.

மீனாட்சி ஆட்சி எப்போது நடந்தது?

மீனாட்சி பற்றிய மறைமுகக் குறிப்பு கிரேக்க தூதரான மெகஸ்தனீஸ் (கி.மு. 330-290) எழுதிய இண்டிகா என்ற நூலில் இருந்து கிடைக்கிறது. பண்டேயா என்ற தெற்கத்திய தேசத்தை ஒரு பெண் அரசி ஆண்டதாக அவன் எழுதியுள்ளான். ஆக குறைந்தது 2300 ஆண்டுகளுக்கு முன் மீனாட்சி ஆட்சி புரிந்தது இதில் இருந்து தெரிகிறது. ஆக மலயத்துவஜ பாண்டியன் கி.மு நாலாம் நூற்றாண்டில் ஆண்டிருக்க வேண்டும். இதை மஹாவம்சமும் அதரிக்கிறது. இலங்கையில் வந்து இறங்கிய ஒரிஸ்ஸா மன்னன் விஜயனுக்கு ராஜ வம்ச பெண்கள் இலங்கையில் இல்லாததால் அவனுக்கும் அவனது அமைச்சர்களுக்கும் பெண் கொடுத்து உதவியது பாண்டிய நாடே! இது நடந்தது கி.மு 543 வாக்கில்( காண்க: மஹா வம்சம்)

மதுரையை அரசாண்ட மீனாட்சியும் வடக்கத்திய தொடர்புடைய பெண்மணியாக இருக்கக்கூடும். மலத்துவஜனின் மனைவியான காஞ்சன மாலா (மீனாட்சியின் தாய்) சூரிய குல வேந்தன் சூரசேனனின் மகள். சூரிய குலம் என்பது சோழ தேசத்தைக் குறித்தாலும் கூட, அவர்களும் வடக்கத்திய மன்னர்களே என்பதை “சோழர்கள் தமிழர்களா?” என்ற கட்டுரையில் எழுதிவிட்டேன். மேலும் பாண்டியர்—பாண்டவர் தொடர்புக்கும் சில ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகையால் மெகஸ்தனீஸ் சொல்லுவது உண்மையே என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

இதை எல்லாம் ராமயாணம், மஹா பாரதம், காத்யாயனர் (கி.மு நாலாம் நூற்றாண்டு) நூல், கவுடில்யரின் அர்த்தசாஸ்திரம், அசோகர் கல்வெட்டுகள், மதுரையைச் சுற்றியுள்ள பிராமி கல்வெட்டுகள், காளிதாசரின் ரகுவம்சம் ஆகியன உறுதிப் படுத்துகின்றன.

ther sirpangkal from potramarai3

தருமி பொற்கிழி கதை

நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி
நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன் காண்
– திருப்புத்தூர் தாண்டகம், அப்பர் தேவாரம்

திருவிளையாடல் சினிமாவில் மிகவும் மறக்க முடியாத லீலை நாகேஷும் சிவாஜியும் சேர்ந்து நடித்த தருமி பொற்கிழி கதையாகும். இதை அப்பர் பெருமான் தன் பாட்டில் கூறுவதும் சிவன் எழுதிக் கொடுத்த பாட்டு குறுந்தொகை என்னும் சங்க நூலில் இருப்பதும் இதன் காலத்தை ஓரளவுக்குக் காட்டிவிடுகிறது. அப்பரின் காலம் மஹேந்திர பல்லவனின் காலம் (கி.பி 600- 630). ஆக கி. பி. 600-க்கு முன்னர்தான் தருமி கதை நடந்திருக்க வேண்டும். சங்க இலக்கியம் முழுதும் கி.பி.300க்கு முன் எழுதப்பட்டதாக பொதுவான கருத்து இருப்பதால் சிவன் எழுதிய கொங்குதேர் வாழ்க்கை கவிதையும் அப்போதுதான் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆக, தருமி கதையின் காலத்தை கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் அல்லது அதற்கு முன் வைக்கலாம்.

நரி—பரி லீலையும் அப்பர் தேவாரத்தில் வருகிறது.

நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும்
விரதங் கொண்டு ஆடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும்
முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த
அரவு அரைச்சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே
–(4-33 அப்பர் தேவாரம்,திருவாரூர் பதிகம்)

மாணிக்க வாசகர் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு அல்ல என்பதற்கு நரி பரியாக்கிய குறிப்பு உதவுகிறது. நரியைப் பரியாக்கிய நிகழ்ச்சியையும் அப்பர் தேவாரத்தில் காண்கிறோம். ஆக, மாணிக்கவாசகரும் அப்பர், சம்பந்தர் காலத்துக்கு முந்தையவரே. (இதற்கு மேலும் பல ஆதாரங்கள் உண்டு. அதைத் தனியாக எழுதுவேன்).

தருமி காலத்தில் அரசாண்ட மன்னன் செண்பக பாண்டியன். அவன் தான் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்று ஆராய, அது பெரிய மோதலில் முடிந்தது. அதில் நக்கீரரும் சம்பந்தப் பட்டிருப்பதால் கட்டாயம் முதல் மூன்று நூற்றாண்டுக்குள்தான் நடந்திருக்க வேண்டும். தருமி சம்பவத்தைத் தெள்ளத் தெளிவாக அப்பர் குறிப்பிடுவதால் மஹேந்திர பல்லவன் காலத்துக்கு ஓரிரு நூற்றாண்டுகள் முன்னர்தான் இது நடந்திருக்கவேண்டும்.

மேலும் சில செய்திகள்

சிலப்பதிகாரத்தில் வன்னி மரம் – லிங்கம் கதை இருக்கிறது. கடல் மேல் வேல் விட்ட கதை, மேகம் சிறை செய்யப்பட்ட நான்மாடக் கூடல் கதைகளும் உள்ளன. இந்தக் காவியம், குறள், தொல்காப்பியம் ஆகிய மூன்றும் ஐந்தாம் நூற்றண்டில் எழுந்தவை என்பது என் கணிப்பு. முன்னரே எழுதியுள்ளேன் (காண்க ‘தொல்காப்பியம் காலம் தவறு’).

பராந்தக வீர நாராயணனின் ( 895—907; ஒன்பதாம் நூற்றாண்டு) கல்வெட்டிலும் இச் செய்திகள் உள்ளன.

குலசேகர பாண்டியன் காலத்தில் கீரந்தை சம்பவம் நடந்தது. அவன் தான் பொற்கை பாண்டியன். இந்தக் கதையும் சிலப்பதிகாரத்தில் உள்ளதால் எல்லாம் ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னரே நடந்தவை.

சம்ஸ்கிருதப் பெயர்கள் இருப்பதால் இவர்கள் முற்கால மன்னர்களாகவே இருக்க வேண்டும். கடலில் மூழ்கிய தென்மதுரை மன்னர் பெயர்களிலும் மாகீர்த்தி முதலிய வடமொழிப் பெயர்கள் உண்டு. தென் கன்னடத்தை ஆண்ட ஆலூபா மன்னர்கள் பாண்டியருடன் தொடர்புடையவர்கள். அவர்களில் தனஞ்ஜயன், சித்திரவாகனன் முதலிய மஹா பாரதப் பெயர்கள் பாண்டியர் பெயர்களாக வருவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

*மதுரைப் பேராலவாயார் அகநானூற்றில் நெடுஞ்செழியன் ஆண்ட மதுரையைப் பாடுகையில் மலை போன்ற மதில்கள் பற்றிப் பாடுகிறார்.

*சேரமான் பெருமாள் நாயனார்,சுந்தரர், பாண பத்திரர், அவ்வையார் ஆகியோர் சம காலத்தவர்கள். (சங்க கால அவ்வை வேறு)

*ஸ்ரீமாறன் என்ற பாண்டிய மன்னனின் சம்ஸ்கிருத பெயர் வியட்னாமில் இரண்டாம் நூற்றாண்டிலேயே கிடைக்கிறது.

*ப்ளினி (கி.பி.75) கொற்கையிலிருந்து மதுரைக்கு தலை நகர் மாறியதைக் குறிப்பிடுகிறார். கொற்கை= கபாடபுரம்?

மேலும் மூர்த்திநாயனார் போன்ற களப்பிரர் கால மன்னர்களை பெரியபுராணத்தில் இருந்து அறிகிறோம். ஆனால் சம்ஸ்கிருத பெயருடைய இவர் பற்றி வரலாறு பூர்வ ஆதாரங்கள் ஏதுமில்லை. இருந்தபோதிலும் இது உண்மை என்பதில் யாருக்கும் ஐயமில்லை.

தி வி புராணத்தில் உக்கிரகுமாரன், வீரபாண்டியன் வரலாறுகள்: —இதில் கடற்கோள், வரட்சி, இமயம் வரை பயணம் ஆகியன இருப்பதால் இவைகளை உண்மையான வரலாற்று நிகழ்ச்சிகளாகக் கொள்ளலாம். மேலும் தமிழ்நாட்டில் அதிகம் கானப்படும் பாம்புக் கடி பற்றி பல குறிப்புகள் வருகின்றன. ஒரு பாண்டியன் புலி அடித்து இறந்தது, மற்றொரு பாண்டியன் காமப் பிசாசாக வாழ்ந்தது ஆகிய எல்லாம் உண்மை வரலாற்றை எழுதுவார் போலவே எழுதப்பட்டுள்ளன. மற்ற பாண்டிய மன்னர்களின் குணாதிசயங்களை, காளிதாசன் சூரிய குல மன்னர்களின் பெருமைகளை வருணிப்பதுபோலவே பரஞ்சோதியாரும் வருணித்துள்ளார்.

ஒரு தனி மகாநாடு கூட்டிப் பொறுமையாக உட்கார்ந்து ஆராய்ந்தோமானால் மேலும் பல உண்மைகளை வெளிக் கொணரலாம்.

(தி.வி.புராணம் மதுரை, கூடல், ஆலவாய் என்ற வரிசையில் மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது மதுரையின் காலமுறை வளர்ச்சியைக் குறிக்கிறதா என்றும் காணவேண்டும் வங்கியசேகரன் காலத்தில் மதுரை நகரம் ஆலவாய் ஆகியது. மதுரைப் பேராலவாயார் என்ற புலவர் சங்க நூல்களில் காணப்படுகிறார்.)

Continued in part-2

(Pictures are from the Book Potramarai and Temple Souvenirs;thanks)

தொடர்பு முகவரி : swami_48@yhaoo.com

த……….த……….த……….:- தேசிய கீதம் ஆக்கலாமே!

golden-temple-lightning
Thunder and lightning over Amritsar

த………………….த…………………..த…………………….:-தேசிய கீதம் ஆக்கலாமே!

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண் 850 தேதி 19 பிப்ரவரி 2014

Translation of my Post posted in English on 19th February 2014 in this blog.

த…..த…..த….. என்ற மூன்று எழுத்துக்களை (சொற்களை) பிரபலமாக்கியோர் மூவர். ஒருவர் நமது காலத்தில் வாழ்ந்து, நமக்கு எல்லாம் அருள் புரிந்து சிவமயமாகிவிட்டவர்-காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994). மற்றொருவர் ஆங்கில இலக்கிய பாடம் படிக்கும் எல்லோருக்கும் தெரிந்த அமெரிக்க ஆங்கில மொழிக் கவிஞர்– நாடக ஆசிரியர் டி.எஸ்.எலியட் (1888—1965). மூன்றாவது மனிதர் , 3000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் வாழ்ந்த ஒரு ரிஷி. பிருஹத் ஆரண்யக (பிருஹத்= பெரிய, ஆரண்யக= காடு) உபநிஷத்தில் த….த…த…..கதையை முதலில் நமக்குச் சொன்னவர். அதாவது வேத கால ரிஷிகள்.

முதலில் நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த காஞ்சிப் பெரியவர் எழுதிய சம்ஸ்கிருதப்பாடலும் அதன் மொழி பெயர்ப்பும். இதை 1966 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் பாடுவதற்காக அவர் எம்.எஸ்.சுப்புலெட்சுமிக்கு எழுதிக் கொடுத்தார்:

மைத்ரீம் பஜத, அகில ஹ்ருஜ்-ஜேத்ரீம்!
ஆத்மவதேவ பராநபி பச்யத!
யுத்தம் த்யஜத! ஸ்பர்தாம் த்யஜத!
த்யஜத பரேஷ்வக்ரமம்-ஆக்ரமணம்!
ஜநநீ ப்ருதிவீ காமதுகாஸ்தே,
ஜநகோ தேவ: ஸகல தயாளு:!
தாம்யத! தத்த! தயத்வம் ஜநதா:!

ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!

Lightning,New-York-
Thunder and lightning over New York

இந்த கீதத்தின் தமிழாக்கம்:

அனைத்துளம் வெல்லும் அன்பு பயில்க!
அன்னியர் தமையும் தன்னிகர் காண்க!
போரினை விடுக! போட்டியை விடுக!
பிறனதைப் பறிக்கும் பிழை புரிந்தற்க!
அருள்வாள் புவித்தாய், காமதேநுவாய்!
அப்பன் ஈசனோ அகிலதயாபரன்!
அடக்கம் – கொடை – அருள் பயிலுக, மக்காள்!

உலகினரெல்லாம் உயர்நலம் உறுக!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக! – என்பதுதான்.

கதை என்ன?

இப்பாடலில் வரும் தாம்யத – தத்த – தயத்வம் என்ற சொற்றொடர் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருவதாகும். அது குறித்த கதை: ஒரு சமயம் தேவர்கள், மானுடர்கள், அசுரர்கள் ஆகிய மூன்று இனத்தாரும் ப்ரஜாபதி (ப்ரஹ்மா) யிடம் உபதேசம் வேண்டினர். அவர் தமது உபதேசத்தை த-த-த என்ற இடியின் ஒலியாகக் கூறி அருளினார். ‘த ‘ என்பதை தேவர்கள், ‘தாம்யத’ எனப் பொருள் கொண்டனர். அப்பதத்துக்குப் ‘புலன்களைக் கட்டுப்படுத்துங்கள்’ என்று அர்த்தம். தேவர்கள் புலனின்பம் துய்ப்பதிலேயே ஈடுபட்டவர்கள். ஆதலால் தங்களுக்கு இந்த உபதேசம் எனக் கொண்டனர்.
மானுடரோ ‘த’ என்பதை ‘தத்த’ எனப் பொருள் கொண்டனர். ‘தத்த’ என்பதற்கு ஈகை உடையவர் ஆக இருங்கள் என அர்த்தம். மானுடர்களுக்கு ஈகை குணம் மிகவும் குறைவாக இருப்பதாலேயே இப்படி உபதேசம். அசுரர்கள் ‘த’ என்பதை ‘தயத்வம்’ – அதாவது, தயையுடன் இருங்கள் – எனப்பொருள் கொண்டனர்.

ஆதிசங்கரர் இதற்கு உரை எழுதுகையில், மானுடரிலேயே தெய்விக குணமும், அசுர குணமும் உடையவர்கள் இருப்பதால் இம்மூன்று உபதேசங்களுமே மானுடர்களுக்கானவை எனத் தெளிவு செய்துள்ளார். –நன்றி கல்கி

இந்தப் பாடல் வெளியானபோது ஒலிப் பதிவோடு, எம்.எஸ். அவர்கள் காஞ்சி சுவாமிகளைச் சந்தித்து ஆசிபெறச் சென்றார். உனது கியாதி (புகழ்) சூரிய சந்திரர் உள்ள வரை இருக்கும் என்று எம்.எஸ்.ஸை ஆசிர்வதித்தார். அர்த்தம் புரிகிறதா? சம்ஸ்கிருதமும் காஞ்சி சுவாமிகளின் பெருமையும் எக்காலத்தும் அழியாது.

சூரிய சந்திரர் உள்ள வரை இருக்கும்!

அமெரிக்க கவிஞர் டி.எஸ்.எலியட்டுக்கு இந்துமதத்தில் பேரார்வம் உண்டு. அவர் கீழை—மேலை நாட்டு கருத்தொற்றுமை காணும் முகத்தான் அவரது நீண்ட தத்துவக் கவிதையான தி வேஸ்ட்லாண்டின் இறுதிப் பகுதியில் இந்த தாம்யத, தத்த, தயத்வ என்ற சம்ஸ்கிருதச் சொற்களை அப்படியே சேர்த்து சாந்தி, சாந்தி, சாந்தி, என்று சொல்லி கவிதையை முடிக்கிறார்.
எனது ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரம் காண்க.

ஒரு சிறிய ஆராய்ச்சி

1. பெரிய காட்டு உபநிஷத்தில் உள்ள இந்தக் கதை மனிதனின் உளவியலை நன்கு ஆராயும் ஒரு கதை. காரல் மார்க்சும் எங்கல்சும் கம்யூனிஸ தத்துவத்தைப் பரப்புவதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதன் பகுத்துண்டு வாழ வேண்டும் என்று கூறும் கதை இது. ஒவ்வொரு மனிதன் இடத்திலும் உள்ள தீய குணங்களை அகற்ற மூன்று த—க்களும் அவசியம்தான்.

2. இந்தக் கதையை விளக்கும் காஞ்சி சுவாமிகளின் கவிதை அற்புதமான ஒரு கவிதை. அதை இந்தியாவின் தேசிய கீதமாகவோ அல்லது ஐ.நா.சபை மூலம் உலக கீதமாக அறிவிக்க வேண்டும்.

3. இந்தக் கதை ஆரிய திராவிட வாதத்துக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்பு வைத்து விட்டது. மனிதர்கள், அசுரர்கள், தேவர்கள் ஆகிய மூன்று பிரிவினரையும் பிரஜாபதி (பிரம்மாவின் ) குழந்தைகளாகவும் மாணவர்களாகவும் வருணிக்கிறது பிருஹத் ஆரண்யக உபநிஷத். அது மட்டுமல்ல. மூவரும் ஒரே ஸ்கூலில்தான் படித்து இருக்கிறார்கள்! ஆக வெள்ளைக்காரன் எழுதியதெல்லாம் பொய் என்பது தெளிவாகிறது. அசுரர்களும், தேவர்களும், மனிதர்களும் ஒரு தாய் வயிற்றுப் புதல்வர்கள். ஆனால் செய்தொழிலால் வேறுபட்டு நின்றனர். நம் மனதுக்குள்ளேயே இந்த மூன்று குணங்களும் மறைதிருப்பதை விளக்கி நமக்கு தன்னடக்கம்/ புலனடக்கம், தானம் செய்யும் மனப்பாங்கு, கருணை மூன்றும் வேண்டும் என்கிறது.

4. இதில் இன்னும் ஒரு முக்கிய விஷயம்– தமிழ், கிரேக்கம் ,லத்தீன் மொழிக்காரர்களுக்கு எழுதவும், இலக்கியம் படைக்கத் தெரியாமலும் காலத்தில் எழுந்தவை உபநிஷதங்கள். புத்தர், மஹாவீரர், கன்பூசியஸ், லாவோட்சு, சொராஸ்தர், ஏசு கிறிஸ்து, ஒரு வேளை மோசசும், பிறப்பதற்கு முன்னால் எழுந்தவை உபநிடதங்கள். இவ்வளவு உயரிய சிந்தனை மலர வேண்டுமானால் அவர்கள் உலக மகா அறிவாளிகளாக இருந்திருக்க வேண்டும். ஹோமர் என்னும் கவி கிரேக்க நாட்டில் முதல் நூலான இலியட்டையும் ஆடிசியையும் எழுதும் முன்னர் வேதகாலரிஷிகள் எழுதிக் குவித்துவிட்டனர்.

5. அளவிடற்கரிய அற்புதமான இலக்கியங்களை வைத்தே ஒரு நாட்டின் அறிவு முதிர்ச்சியையும் அனுபவ முதிர்ச்சியையும் அளந்துவிடலாம். அந்த வகையில் பார்க்கப்போனால் உலகில்—பழங்கால உலகில்— ஒரே நாகரீக நாடு இந்தியாதான். கல் கட்டிடங்கள் எகிப்தில் உருவாகி இருக்கலாம்—ஆனால் கல்வி என்னும் கட்டிடங்கள் இமயமலை அடிவார குருகுலங்களில்தான் முதலில் உருவாகின. அதற்கு தெள்ளிய எடுத்துக் காட்டு பெருங்க்காட்டு (பிருஹத் ஆரண்யக) உபநிஷதம்!!!

பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே
பார் மீது ஏதொரு நூல் இது போலே— என்று சும்மாவப் பாடிவைத்தான பாரதி!

contact swami_48@yahoo.com

பசுவும் பாம்பும் !

direct milk supply

சம்ஸ்கிருத செல்வம் — அத்தியாயம் 30
Post No 851 Date 19-02-2014
ச.நாகராஜன்

நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்ல வந்த கவிஞர் பசுவையும் பாம்பையும் பார்த்தார். அவருக்குப் பளிச்சென்று அற்புதமான கருத்து தோன்றியது.

நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய பசுவையும் பாம்பையும் பாருங்கள்! பசுவானது பசும் புல்லைத் தின்று அதைப் பாலாக மாற்றிப் பாலைத் தருகிறது. பாம்போ பாலைக் குடித்து அதை விஷமாக மாற்றி விஷத்தைக் கக்குகிறது.

பாத்ராபாத்ரவிவேகோஸ்தி தேனுபன்னகயோ இவ I
த்ருணாத் சஞ்சாயதே க்ஷீரம் க்ஷீராத் சஞ்சாயதே விஷம் II

B_Id_411184_nag-panchmi

தேனு – பசு
பன்னகயோ இவ – பாம்பு இவற்றில் (பன்னகம் – பாம்பு)
பாத்ர அபாத்ர விவேக அஸ்தி – நல்லவன், கெட்டவன் ஆகியோரைப் பற்றிய விவேகம் உள்ளது.
த்ருணாத் சஞ்சாயதே க்ஷீரம் – புல்லைத் தின்று பாலாக மாற்றுகிறது (பசு)
க்ஷீராத் சஞ்சாயதே விஷம் – பாலைக் குடித்து விஷமாக மாற்றுகிறது (பாம்பு)

சரி கெட்டவரின் லக்ஷணம் என்ன?
தூர்த்த லக்ஷணம் பற்றி சுபாஷித ரத்னாகார பாண்டாரத்தில் வரும் சுபாஷிதம் தெளிவாக விளக்கத்தைத் தருகிறது.

முகம் பத்மதளாகாரம் – தூர்த்தனைப் பார்த்தால் தாமரை போன்ற முகம் இருக்கும்
வாணி சந்தன ஷீலதா – பேச்சோ சந்தனம் போல குளுமையாக இருக்கும்
ஹ்ருதயம் க்ரோத சம்யுக்தம் – இதயமோ கோபத்தால் கொப்பளிக்கும்

த்ரிவிதம் தூர்த்த லக்ஷணம் – இப்படி மூன்று விதமாக கெட்டவனின் லக்ஷணத்தை அறிந்து கொள்ள வேண்டும்

முகம் பத்மதளாகாரம் வாணி சந்தன ஷீலதா I
ஹ்ருதயம் க்ரோத சம்யுக்தம் த்ரிவிதம் தூர்த்த லக்ஷணம் II

இது தான் தூர்த்தனின் லக்ஷணம்! இவர்களைப் பார்த்தவுடன் இடத்தை விட்டு அகன்று விட வேண்டும்!

***************

contact swami_48@yahoo.com (Pictures rae used from different sources.Thanks.