சோம பானமும் சுரா பானமும்

(I have already posted this article in English: London swaminathan)

வேத காலத்தில் ரிஷி முனிவர்களும் பிற்காலத்தில் யாகம் செய்த மன்னர்களும் அருந்தியது சோம பானம். குடிகாரர்கள் அருந்துவது சுரா பானம், அதாவது, கள் மது பான வகைகள். வேதத்தை ஆராய்ச்சி செய்த வெளிநாட்டு “அறிஞர்கள்” இவ் விஷயத்தில் மகா குழப்படி செய்து விட்டார்கள். ஆரிய சிவன் வேறு , திராவிட சிவன் வேறு, தமிழ் முருகன் வேறு, வடமொழி ஸ்கந்தன் வேறு, தமிழ் கிராம தேவதைகள் வேறு, வேத இதிகாச, புராண தெய்வங்கள் வேறு, ஆரியன் வேறு, திராவிடன் வேறு என்று இந்து மதத்தில் மாபெரும் விஷ வித்துக்களை ஊன்றியவர்களுக்கு “அறிஞர்” என்று நாம் பட்டம் சூட்டியதற்கு மூன்றே காரணங்கள் தான்: 1. அவனுக்கு வெள்ளைத்தோல், நமக்கு கருப்புத் தோல் 2. அவன் எழுதியது ஆங்கிலத்தில், தமிழனுக்கு வடமொழி தெரியாது, வடக்கத்தியானுக்குத் தமிழ் தெரியாது. 3. அவன் நம்மை ஆண்டவன், நாமோ அடிமையாக ஆயிரம் ஆண்டு வாழ்ந்தவன்.

 

‘ஆயிரம் ஆண்டு அன்பிலா அந்நியர் ஆட்சி’ என்று பாரதி பாடியதற்கும், “ஏ, வெளிநாட்டுக்காரர்களே, நீங்கள் செய்த தீங்குகளுக்கு இந்துமஹா சமுத்திரத்தில் உள்ள சகதி அனைத்தையும் எறிந்தாலும் போதாது” என்று சுவாமி விவேகநந்தர் கூறியதற்கும் இதுதான் காரணம். இந்துமதம் என்று அழிகிறதோ அன்று இந்தியாவும் அழிந்துவிடும் என்று சுவாமி விவேகாநந்தர் கூறுவதற்கு முன்னரே வெள்ளைத் தோல் “அறிஞர்”களுக்கு இவ்வுண்மை நன்கு விளங்கியது.இந்து மதத்தை அழித்து இந்தியாவைப் பிரிது ஆள திட்டம் வகுத்தனர். அது பலிக்கவில்லை.

 

அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி 65 ஆண்டுகளுக்குப் பின்னரும் நாம் மாறாதது நமது குறையே. சங்கத் தமிழ் இலக்கியத்திலோ, பழைய வடமொழி நூல்களிலோ வெளிநாட்டு அறிஞர்கள் கூற்றுகளுக்கு எள்ளளவும் ஆதாரம் இல்லை.

தமிழ் இலக்கியத்தில் சோம பானம்

ரிக்வேதத்தின் ஒன்பதாவது மண்டலம் முழுதும் சோம பானம் பற்றிய பாடல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில்லும் சோமலதை (கொடி) பற்றிய பாடல்கள் கொஞ்சம் உண்டு. பகவத் கீதையிலும் கண்ண பிரான் (காண்க 9-20) சோமலதையின் பெருமையைப் பேசுகிறார். இதை அருந்துவோர் இந்திர லோகப் பயன்களைப் பெறுவர். ஆனால் முக்தி பெற உதவாது என்று கூறுகிறார்.

 

இந்தத் தாவரம் இமய மலையின் வடமேற்குப் பகுதியான முஜாவத் மலையில் விளைந்தது. இப்போது அழிந்துவிட்டது அல்லது இன்ன தாவரம் என்று தெரியாமல் போய்விட்டது.. இது என்ன தாவரம் என்று தெரியாதது வெளி நாட்டு அறிஞர்களுக்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது. ஆகவே இதை கஞ்சா, அபினி வகையில் சேர்த்து போதையூட்டும் மருந்து என்று கூறிவிட்டனர். அதுமட்டுமல்ல மூன்று நான்கு பேர் வெவேறு தாவரங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இவைதான் சோமலதை என்று “சத்தியம் செய்து”விட்டார்கள். நமது ஊரில் இவர்களுக்கு ஜால்ரா போடுவதையே வாடிக்கையாகக் கொண்டவர்கள், டாக்டர் பட்டம் (பிஎச்.டி) பெறுவதற்காக இன்னும் கொஞ்சம் குழப்பம் உண்டாக்கிப் புது விசயங்களைக் கற்பித்தனர். இங்குள்ள இந்துமத விரோத “திராவிட”ங்களுக்கோ இதைப் படிக்கப் படிக்க ஏக சந்தோஷம். கஞ்சா அபினி, வெளி நாட்டுச் சரக்குகள் அத்தனையும் சேர்த்துச் சாப்பிட்டால் எவ்வளவு போதை ஏறுமோ அவ்வளவுக்கு கிறுகிறுப்பு, கிளுகிளுப்பு!

 

பராந்தக வீரநாராயணனின் தளவாய்புரக் கல்வெட்டில் ஒருவரி வருகிறது: ‘சோமபானம் சாப்பிட்டு மனோ சுத்தராகிய காடக சோமயாஜி’ என்று. அதாவது சோமபானம் சாப்பிட்ட ரிஷிகள் குடிபோதையில் ஆடவில்லை. இந்த பானம் அவர்களின் மனதைச் சுத்தப்படுத்தியது. சோமக் கொடி ஒரு அபூர்வமான காய சித்தி மூலிகை! வடமொழியில் அதற்கு மற்றொரு பெயர் ‘பவமான’. இந்தச் சொல்லின் மறு பொருள் : சுத்தம், தூய்மை.

ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளியுடன் சேரமன்னன்  பாண்டிய மன்னன் ஆகிய இருவரும் சேர்ந்த காட்சியைக் கண்ட அவ்வைப் பாட்டிக்கு ஏக சந்தோஷம். இன்று போல் என்றும் ஒற்றுமையுடன் வாழ்க என்று பாராட்டுகிறார். வாழ்நாள் முழுதும் ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு அழிந்த இனம் தமிழ் இனம். இதனால் மூவேந்தர்களும் ஒன்றுபட்ட காட்சியைக் கண்ட ( புறநானூறு பாடல் 367) அவ்வைப் பாட்டி பூரித்துப்போனார்.

 

சங்க இலக்கியம் எழுதிய காலத்திலேயே சோமலதை அருகிவிட்டது. கடலைக் கடந்து எடுத்த அமிழ்தத்தை 6 இடங்களிலும் வசிஷ்ட மஹரிஷியின் மனைவி பத்தினித் தெய்வம் அருந்ததியை 6 இடங்களிலும் வடமொழிச் சொல்லிலேயே குறிப்பிடும் சங்கப் புலவர்கள்,  சோமக் கொடியைப் பற்றி நேரடியாக ஒரு இடத்திலும் பேசவில்லை.

 

ராஜசூயம் யாகம் செய்வோர் சோம ரசத்தை அருந்துவதால்தான் அதற்கு ராஜ சூயம் என்று பெயர் ஏற்பட்டதாக வடமொழி நூல்கள் கூறுகின்றன. அதாவது மூலிகைகளின் ராஜாவான சோமத்தைப் பிழிந்து ராஜா குடிக்கும் யாகம் ராஜசூயம். சதபத பிராமணம் என்னும் பழைய நூல் பூமியின் முதல் மன்னன் சோமன் என்றும் கூறும், ஆக, சோம என்ற பதத்துக்கே ராஜ என்று பொருள். இதைச் சாப்பிட்டனர் ராஜசூய யாகம் செய்த தமிழ் மன்னர்கள்.

 

வடமொழி இலக்கியத்தில் சோம பானம்

ஸ்ரீசூக்தம் என்ற வேத மந்திரமும் (பாடல் 23) சோமரசத்தைப் புகழ்கிறது.

வடமொழி நூல்களான சதபத பிராமணமும் தைத்ரீய பிராமணமும் சோமபான- சுராபான வேறுபாடுகளை அழகாகப் பட்டியல் போட்டுக் காண்பிக்கிறது:

சோம ரசம்: இது சத்தியமானது, வளம் தருவது, ஒளியூட்டுவது.

 

சுராபானம்: கண்டிக்கத்தக்க பானம்; தீயது, இருளூட்டுவது, வறுமைகொடுப்பது; இதைக் குடித்தால் கோபம் வரும். பிராமணர்கள் தொடக் கூடாதது ( சதபத. 5-1-2-1-10; 12-8-1-5; 12-7-3-20).

 

சோமலதை என்பது பழுப்பு நிறம் கொண்டது. அதைக் காய்ச்சி வடித்து ரசத்தைப் பாலுடன் கலந்து குடித்தனர். சிந்து சமவெளி முத்திரைகளில் இனம் தெரியாத ஒரு சல்லடை போன்ற வடிகட்டி இருக்கிறது. இதை சோமபான வடிகட்டியாக இருக்கலாம் என்று மெள்ள மெள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக்கொள்ளத் துவங்கிவிட்டனர்.

எபிட்ரா தாவரம்

சோமலதையை கழுகுகள் தூக்கி வந்ததாகவும் அதை முஜாவத் மலையில் இருந்தவர்கள் விரட்டியதாகவும் பல பாடல்களில் ரிஷி முனிவர்கள் குறிப்பிடுகின்றனர். சோமக் கொடியை கழுகுகள் என் தூக்கிவர வேண்டும்? இது விளங்காமல் வெளி நாட்டு அறிஞர்கள் முழிக்கின்றனர். இந்த விஷயத்தைத் தொடாமல் மறைத்து நிறைய எழுதுகின்றனர்!!

 

சோமலதை போதைப் பொருள் என்றால், எந்த முட்டாளாவது அதில் முக்கால் வாசியை சோமயாகத் தீயில் கொட்டிவிட்டு மீதியை மட்டும் குடிப்பானா? முழுச் சரக்கையும் உள்ளே இறக்கிக் கூத்தடிக்க மட்டார்களா?

 

சோமலதை போதைப் பொருள் என்றால் அதை விலைக்கு விற்றவர்கள் கொஞ்சமாவது ருசி பார்த்து ஆட்டம் போடிருப்பார்களே. அப்படி வேதத்திலோ பிற்காலத்திலோ ஒரு குறிப்பும் இல்லையே. ரிஷி முனிவர்கள் மட்டும் ஏன் சாப்பிட்டனர்? மலை ஜாதி மக்களிடம் இதை விலைக்கு வாங்கியதையும் அதைப் பாதுகாத்துப், பதனப் படுத்தி வைத்ததையும் நிறைய பாடலகளில் காணலாம்.

 

த்வஷ்டா என்ற வேத கால தெய்வத்தை சோமலதையுடன் தொடர்புபடுத்தும் வேதப் பாடல்கள் உண்டு. ஒரு அறிஞர் (Hildebrandt) இந்த த்வஷ்டா வேதகால தெய்வம் இல்லை. வெளியிலிருந்து இறக்குமதியான தெய்வம் என்று ஒரு போடு போட்டார்! கொள்கைகளை வளைத்தும் திரித்தும் சுழித்தும் முறுக்கியும் வெளியிடுவது வெள்ளைத் தோல்களின் வாடிக்கை!!!

 

சோமபானத்தில் எபிட்ரின் Ephedrine என்ற ரசாயனப் பொருள் இருந்ததாகவும் அதை இப்போதும் போதைப்பொருளாக சிலர் பயன்படுத்துவதாகவும் இருவருக்கு (‘Prof.N.A.Quazilbash and Dr C.G.Kashikar )’ஞானோதயம்’’ ஏற்பட்டு ஒரு புத்தகம் எழுதிவிட்டார். இந்த ரசாயனப் பொருள் பல தாவரங்களில் உள்ளது. ஏன் அதை இன்று வரை நம்மவர்கள் பயன்படுத்தவில்லை? ஏனெனில் அது சோம லதை இல்லை!!

 

இன்னொருவருக்கு (R. Gordon Wasson) ஏற்பட்ட ‘’ஞானோதயம்’’: சைபீரியாவில் பயன்படுத்தும் காளான் Amanita muscaria (Fly Agaric) வகை இது!! ஏனெனில் அங்கும் சாமியார்கள் இதைப் பயன்படுத்தி போதை பெறுகின்றனர். இப்படி ஒரு ஆராய்ச்சிப் புத்தகம்!

 

லாசன் (Mr.Lassen :-Sarcostemma viminale or brevistigma) ராத் (Mr Roth:-Sarcostemma acidum), ஜார்ஜ் வாட் (Mr George Watt :- Afgan grape) ரைஸ் (Mr.Rice :- sugarcane) மாக்ஸ்முல்லர் (Mr.Max Muller with a species of hop) ஆகியோர் மனம் போன போக்கில் அவர்களுக்குத் தெரிந்த தாவரங்களின் பெயர்களை எல்லாம் கூறிவைத்தனர்.

 

இதற்கு மூல காரணத்தைப் பார்க்கவேண்டும். நாம் மதிக்கும் ஒழுக்கம் தெரியாத ஒரு இனத்தில் பிறந்தவர்கள் இந்த ஆய்வாளர்கள். பிறந்து ஞான ஸ்நானம் செய்த அன்றே ஒயின் குடிப்பவர்கள் அவர்கள். தினசரி சாப்பாட்டுக்குப் பின்னர் நாம் தண்ணிர் குடிக்கிறோம், அவர்களோவெனில் பிராந்தி, விஸ்கி குடிக்கிறார்கள். வயதான பின்னரோ புகையிலை முதல் போதைப்பொருள் வரை பயன் படுத்தாத குடும்பமே இல்லை. ஆனால் ரிஷிமுனிவர்களோ தங்களைத் தூய்மைப் படுத்த பசு மூத்திரம் குடித்தார்கள். ஆக ‘’நீரளவே ஆகுமாம் நீராம்பல், தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு’’ என்பதற்கு இணங்க அவர்களின் சிற்றறிவுக்கு எட்டியதை எல்லாம் ஆராய்ச்சி என்று கொட்டித் தீர்த்துவிட்டார்கள். நம்மவர்களுக்கு மூளை எங்கே போனது? இதை இன்னும் நம்பும் நம்மவர்களை நினைத்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

 

Books for further reading: Identification of Soma by Dr.C.G Kashikar,Pune, 1990; The Rig Veda- A Historical Analysis—Shrikant G.Talageri, New Delhi, 2000; Life in Brahmana Period.

Contact swami_48@yahoo.com

 

இரண்டு சாமியார்கள் இடையே அடிதடி!

(I have already posted this article in English: London swaminathan)

இந்தக் கதையை ஆனதாஸ்ரமம் ஸ்ரீ சுவாமி ராம்தாஸ் கூறினார். ‘சுவாமி ராமதாஸ் சொன்ன கதைகள்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் இது உள்ளது.

 

“ இரண்டு சாமியார்கள் ஒரே நேரத்தில் ஒரு ஊருக்கு வந்தார்கள். ஒருவர் அரச மரத்துக்கு அடியில் உகார்ந்தார். பக்தர்கள் கூட்டம் குவியத் தொடங்கியது. மற்றொருவர் ஆலமரத்துக்கு அடியில் உகார்ந்தார். அங்கும் கூட்டம் குவிந்தது. கடவுள் நம்பிக்கை உடைய ஒருவருக்கு சாமியார்களைப் பார்கத்து ஆசி பெற வேண்டும் என்று ஆசை வரவே முதலில் அரச மர சாமியார் இடத்துக்குப் போனார்.

 

“சுவாமிஜி, இந்த ஏழை எளியேன் மீது உங்கள் அருள் பார்வை படவேண்டும” என்று இறைஞ்ச, அவரும் ‘அப்படியே ஆகட்டும்’ என்றார். அத்துடன் நிறுத்தி இருக்கக் கூடாதோ?

“சுவாமிஜி, உங்களுக்குத் தெரியுமா? ஊரின் மேற்குப் பக்கத்தில் ஆல மரத்துக்கு அடியில் ஒரு சாமியார் வந்து அமர்ந்து இருக்கிறார். அங்கும் கூட்டம் அலை மோதுகிறது. உங்களுக்கு அவரைத் தெரியுமோ?”

சுவாமிஜி பட்டெனப் பதில் கொடுத்தார். “அவனா? அவன் ஒரு எருமை!” என்று இளப்பத்துடன் சொன்னார்.

 

அந்த பக்தன் ஒரு வைக்கோல் கட்டை வாங்கிக் கொண்டு ஆலமர சாமியாரிடம் சென்றான். வைக்கல் கட்டுடன் சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்தான்.

“பக்தா எழுந்திரு. உன் பக்தியை மெச்சினோம். இது என்ன வைக்கோல்  கட்டு. வயலிலிருந்து நேரடியாக வந்தாயா?” என்றார். “இல்லை, சுவாமிஜி. நீங்கள் எருமை அல்லவா? நீங்கள் சாப்பிடவே கொண்டு வந்தேன்” என்றான் பக்தன்.

வந்ததே கோபம் சுவாமிஜிக்கு! மடையா, மூளை பிறண்டுவிட்டதா? என்று கத்தினார்.

 

“மன்னிக்கவேண்டும் சுவாமிஜி. உங்களைப் போலவே ஊரின் கிழக்கு பக்கத்தில் ஒரு சுவாமிஜி வந்திருக்கிறார். அவரிடம் உங்களைப் பற்றிக் கேட்ட போது நீங்கள் எருமைச் சாமியார் என்று சொன்னார். அன்போடு உங்களுக்காகக் கொண்டுவந்தேன்” என்றான்.

“ஓ, அவன் சொன்னானா? அவன் கழுதை அல்லவா!” என்றார்.

 

பக்தன் மெதுவாக பின்னோக்கி வந்தான். நேராகக் கடைக்குப் போய் இரண்டு கிலோ பருத்திக் கொட்டை வாங்கிக் கொண்டு அரச மர சாமியாரிடம் வந்து நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து நமஸ்கரித்தான். “சுவாமிஜி ,உங்களுக்குப் பிடித்த பருத்திக் கொட்டை கொண்டு வந்திருக்கிறேன். நீங்கள் உடனே சாப்பிட்டு என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதிக்க வேண்டும்” என்றான்.

“மடையா, நான் என்ன குதிரையா, கழுதையா ,மாடா? இதை எல்லாம் தின்பதற்கு? எடுத்துக்கொண்டு ஓடு” என்றார்.

“சுவாமிஜி , சொன்னால் கோபிக்க மாட்டீர்களே. நீங்கள் சொன்ன எருமைச் சாமியாரிடம் போனேன். உங்கள் பெருமை பற்றிக் கேட்டபோது அவன் ஒர் கழுதை என்று உங்களைப் பற்றிச் சொன்னார். அதனால்தான் இப்படிச் செய்தேன்”.

 

பக்தன், இதைச் சொல்லி முடிப்பதற்குள்,, எழுந்தார் கழுதைச் சாமியார். “எங்கே அந்த எருமை? அவன் இருக்கும் இடத்தைக் காட்டு”, என்று புறப்பட்டார்.

பக்தன், பயபக்தியுடன் அவரைப் பின் தொடர்ந்து ஆல மரத்துக்கு அழைத்துச் சென்றான். இருவரும் ஒருவரை ஒருவர் “ஏ, கழுதை, ஏ எருமை” என்று ஏசிய சப்தத்துடன் மின்னலும் இடிச் சப்தமும் தோன்றின.

 

பக்தன் என்ன முட்டாளா, பக்கத்தில் போக!! மரத்துக்குப் பின்னால் நின்று ரசித்தான்!! அவனுக்கோ ஒரே சிரிப்பு” !!

Contact : swami_48@yahoo.com

எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது?

15.சம்ஸ்கிருதச் செல்வம்

 

எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது?

ச.நாகராஜன்

 

  எந்தத் துறையைத் தேர்ந்தெப்பது, எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்ற கேள்வி இன்றைய இளைஞர்கள் அனைவருக்கும் எழும் ஒரு கேள்வி. இதற்குப் பண்டைய கவிஞர் தரும் விடை பொருள் பொதிந்த ஒன்று.

யத்கர்ம குர்வதோஸ்ய ஸ்யாத்பரிதோஷோந்தராத்மன: I

தத் ப்ரயத்னேன குர்வித விபரீதம் து வர்ஜயேத் II

 

(யத் – எந்த கர்ம – வேலை விபரீதம் – விபரீதமானதை

வர்ஜயேத் – தவிர்த்தல் வேண்டும்)

எந்த வேலையானது சந்தோஷத்தைத் தருமோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.அதற்கு மாறாக உள்ள எதையும் தவிர்த்து விட வேண்டும்.

ஆக மனதிற்குப் பிடித்த படிப்பைத் தேர்ந்தெடுத்து அதில் தேறி அந்தத் துறையில் வேலையில் சேர்ந்து அதில் முன்னேற வேண்டும்.இதுவே கவிஞர் தரும் அறிவுரை.

சரி, எப்படிப்பட்ட பணம் நம்மிடம் நிலைக்கும்? இந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்கிறது:

அக்ருத்வா பரசந்தாபமகத்வா கலமந்திரம் I

அயாசித்வா பரம் கச்சித் யத் ஸ்வல்பமபி தத்பஹு II

(ஸ்வல்பம் – குறைவாக; தத் பஹு – அதுவே அதிகம்)

 

மற்றவர்களுக்கு தொந்தரவு தராமல்

ஒரு ரௌடியின் வீட்டிற்கும் செல்லாமல்

யாரிடமும் பிச்சை எடுக்காமல்

சொல்பமாகக் கிடைத்தாலும் கூட எனக்கு எது கிடைக்கிறதோ

அதுவே எனக்கு அதிகம்.

அற வழியில் மற்றவர்களைக் கொள்ளை அடிக்காமல், கீழான ஒருவனின் தயவுமின்றி, லஞ்சம் கொடுக்காமல். எனக்குப் பிடித்த வேலையைச் சந்தோஷமாகச் செய்யும் போது எனக்கு எந்த வருவாய்  கிடைக்கிறதோ அதுவே எனக்குப் போதும் !

இந்த மனப்பான்மை தொன்றுதொட்டு இந்த நாட்டில் இருந்து வந்திருக்கிறது. ஆகவே கிராமங்களில் வாழ்ந்து வந்தவர்கள் கூட மனத் திருப்தியுடன் நன்கு வாழ்ந்து வந்தனர்.

என்று ஆங்கிலேயன் வகுத்த ஆபீஸும் அதில் ‘குமாஸ்தா; உத்தியோகமும் வந்ததோ அன்றிலிருந்து கல்வி முறையானது உத்தியோகம் சார்ந்ததாக ஆகி அதற்கான டிகிரிகளை அச்சிட்டுத் தரும்

ஒரு வழிமுறையாகி விட்டது!

சரி.  இந்தக் கல்வி முறையை ஒரே நாளில் நம்மால் மாற்ற முடியாவிட்டாலும் கூட , நமக்குப் பிடித்த துறையையாவது தேர்ந்தெடுத்து முன்னேறலாம் இல்லையா! சிந்திப்போம், செயல்படுவோம்!!

*************

காளை வாகனம் எப்படிக் கிடைத்தது?

காளை வாகனம் எப்படிக் கிடைத்தது?

சிவனுக்குக் காளை வாகனம் எப்படிக் கிடைத்தது? என்று அருணகிரிநாதர் திருப்புகழிலும் மாணிக்கவாசகர் திருவாசகத்திலும் பாடுகின்றனர்:

 

“காமபாண மட்டனத கோடிமாதரைப் புணர்ந்த

காளியேறு கர்த்தனெந்தை அருள்பாலா” (திருப்புகழ்)

“தட மதிகள் அவை மூன்றும்டழல் எரித்த அந்நாளில்

இடபமதாய்த் தாங்கினான் திருமால் காண் சாழ்லோ” (திருவாசகம்)

 

முப்புரத்தை எரிக்க சிவன் புறப்பட்டார். தேவர்களும் அவருக்கு உதவியாக வந்தனர். ஒவ்வொருவரும் தன்னுடைய பலத்தாலதான் சிவன் முப்புரங்களையும் எரிக்கப்போகிறார் என்று ஆணவம் கொண்டனர். இதை அறிந்த சிவ பெருமான் தனது தேரை சிறிது கீழே அழுத்தினார். தேர் ஒடிந்துபோனது. தேவர்கள் பயந்தனர். இனி சிவபெருமான் எப்படி பயணம் செய்வார் என்று கலங்கி நின்றனர். இச் சமயத்தில் திருமால் களையாக வன்ஹு அவரைத் தான்கிச் சென்றார்.

ஆட்டு வாகனம் எப்படி வந்தது?

இந்தப் பூவுலகில் நாரதர் ஒரு வேள்வி செய்தார். அதில் இருந்து முரட்டு ஆட்டுக் கிடா புறப்பட்டது. அதைக் கண்டு தேவர்கள் பயந்தோடினர். நாரதரும் கயிலயை நோக்கி ஒடினார். சிவனுக்குச் செய்தி அனுப்ப முருகனிடம் முறையிட்டனர். முருகனோ தனது படைத்தலைவர் வீரவாகு தேவருக்கு உத்தரவு இட்டார். அவர் ஓடிப் போய் ஆட்டைப் பிடித்துவந்தார். நாரத்ர் முதலியோரின் வேண்டுகோளுக்கிணங்க ஆட்டை தனது வாகனமாக்கினார் முருகப் பெருமான் (ஆதாரம்: கந்தபுராணம்).

 

பெருச்சாளி வாகனம் எப்படி உண்டானது?

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மிகப் பெரிய தொல்லைகள் கொடுத்தவன் கஜமுகாசுரன். அவனை எப்படியாகிலும் ஒழித்துவிடும்படி பிள்ளையாரை வேண்டினான் இந்திரன்.

கணபதியும் அவர்களுடைய வேண்டுக்கோளுக்கிணங்க அவனைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்டார். கடுமயான சண்டையில் விநாயகப் பெருமான், தனது ஒரு தந்தத்தை ஒடித்து கஜமுகாசுரன் மீது எறிந்தார். கீழே விழுந்து இறந்தவன் போல நடித்த அவன, திடீரெனப் பெருச்சாளி ரூபம் எடுத்து கணேசர் மீது பாய்ந்தான். பிளையார் அவன் மீது தாவி ஏறி அமர்ந்தார். இனி எப்போதும் இதுபோலவே என்னைச் சுமக்கக்கடவாயாக என்றும் ‘ஆசிர்வத்திதார்’.

“கசமுகத்தவுணனைக் கடியானை” (ஆதாரம்: புராணம்)

சிவன் வாகனம் எலி!!

யஜுர் வேதத்தின் மிக முக்கியமான பகுதி ருத்ரம். அதில் சிவனை கணபதி, சேனானி (மக்கள் தலைவன், படைகளின் தலைவன்,) என்று ரிஷிக்கள் வருணிக்கின்றனர். இதுவே பிற்காலத்தில் கணபதியாகவும், முருகனாகவும் தனி தெய்வங்களாக உருப்பெற்றன என்பது ஆராய்ச்சியாஅரின் துணிபு. இதற்கு ஒரு ஆதாரமும் உளது. ருத்ரனின் வாகனம் ஆகு, அதாவது எலி. சதபத பிராமணமும், தைத்ரீய பிராமணமும் (S.B.2-6-2-10, T.B.1-6-10-2) ருத்திரனின் வாகனமாகக்க் கூறும் எலி, புராண காலத்தில் விநாயகரின் வாகனமாக மாறிவிட்டது. பல கொள்கைகளையும் தத்துவங்களையும் விளக்குவதற்காகக் கூறப்பட்ட கதைகள், உவமைகள் பிற்காலத்தில் பல தெய்வங்களையும் வாகனங்களையும் உருவாக்கிவிட்டன. கடவுளரின் சின்னங்களாக எழுந்த கொடிகள் பிற்காலத்தில் வாகனங்களாக உருப்பெற்றன.

Picture  shows Indra’s Airavata vahana in Indus valley seal. Indra’s other name is Chakra which is inscribed over his head.

அந்தகக் கவி வீரராகவனார் வாகனப் பாட்டு

அந்தகக் கவி வீரராகவ முதலியார் தன்னுடைய இல்லாளுடன் கோபித்துக் கொண்டு நண்பர் வீட்டில் போய்ச் சாப்பிட்டார். அவர் கொஞ்சம் கட்டுச் சோற்றைக் கட்டிக் கொடுத்டு வழி அனுப்பினார். முதலியார் தன்னுடைய சீடர் ஒருவருடன் வழிபயணத்தைத் தொடர்ந்தார். வழியில் சீடன், கட்டுச் சோற்று மூட்டையை வைத்துவிட்டு, தண்ணிர் எடுக்க அருகிலுள்ள குளத்தில் இறங்கினான். ஒரு நாய் வந்து அந்த சோற்று மூடையைக் கவ்விக் கொண்டு கற்றய்ப் பறந்துவிட்டது. அப்போது அவர் பாடிய பாடல்:

 

“சீராடையற்ற வயிரவன் வாகனம் சேரவந்து

பாராரும் நான்முகன் வாகனம் தன்னை முன் பற்றிக்கொண்டு

நாராயணனுயர் வாகன மாயிற்று நம்மை முகம்

பாரான் மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே”

 

வயிரவன் வாகனம்=நாய், நான்முகன் வாகனம்= அன்னம், நாராயணன் வாகனம்= கருடன், மை வாகனன் = அக்னி பகவான். கட்டுச் சோற்று மூட்டையை நாய் தூக்கிக்கொண்டு போனதால் பசித் தீ வயிற்றில் பற்றிக்கொண்டது என்று பொருள்பட பாடினார். அன்னம் என்பது சோற்றையும் அன்னப் பறவையையும் குறிக்கும்.

 

My Articles on VAHANAS (Mounts of GODS):

வாகனங்கள் தோன்றியது எங்கே?

எந்தக் கடவுளுக்கு என்ன வாகனம்?

Vahanas in Kalidasa and Ancient Tamil Literature

Hindu Vahanas Around the World

Hindu Vahanas in Italy and Greece

Vahanas on Coins and in Sculptures

Interesting Facts About Vahanas

Seven Gods Procession on Vahanas

Who Rides on What Vahana (Animal or Bird)?

 

தொடர்பு முகவரி: swami_48@yahoo.com

முத்துசுவாமி தீட்சிதர் செய்த அற்புதங்கள்

முத்துசுவாமி தீட்சிதர் செய்த அற்புதங்கள்

ஆதாரம்: ஷண்மதமும் முத்துசுவாமி தீக்ஷிதரும், எழுதியவர்: என். பார்த்தசாரதி, ஆண்டு 2002.

சென்னை மேற்கு மாம்பலம் பார்த்தசாரதி அவர்கள் எழுதிய 24 பக்க புத்தகத்தில் ஒரு கலைக்களஞ்சிய அளவுக்கு தகவல்கள் உள்ளன. சங்கீத ரசிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

 

அற்புதம் 1: காசியில் கங்கை நதியில் வீணை கிடைத்தது.

 

அற்புதம் 2: திருத்தணி முருகப்பெருமான் சன்னிதியில் அவன் அருளால் முதல் பாட்டைப் பாடி 440 கீர்த்தனைகளை இயற்றினார். (அவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது ஒரு வயதான ஆள் அவர் வாயில் கற்கண்டைப் போட்டதாகவும் உடனே பாடல்கள் பொங்கி எழுந்ததாகவும் கூறுவர்). முதல் பாட்டு ‘ஸ்ரீ நாதாதி குருகுஹோ’ என்று அமைந்தது. அது முதற்கொண்டு எல்லா பாடல்களிலும் ‘குருகுஹ’ என்ற முத்திரையை வைத்துப் பாடினார்.

 

அற்புதம் 3: எட்டயபுரத்தில்  வறட்சி நிலவிய காலத்தில் அங்கு சென்றார். ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய’ பெருமக்கள் வரிசையில், மரபில் வந்தவர் அவர். உடனே அமிர்தவர்ஷினி ராகத்தில் அம்பிகை மீது ‘ஆனந்தாமிர்தகர்ஷினி’ என்ற க்ருதியைப் பாடவே மழை ‘பெய்யெனப் பெய்தது’.

 

அற்புதம் 4: தமிழ், சம்ஸ்கிருத மொழிகளில் வேற்றுமைகள் (விபக்தி) எட்டு ஆகும். இவைகளை வைத்துப் பாடினால் விபக்தி கிருதிகள் என்பர். இவ்வகையில் 32 கீர்த்தனைகள் இயற்றினார். ஒரு குறிப்பிட்ட கீர்த்தனையில் அதே வேற்றுமையில் வரிகள் அமையும். அபயாம்பிகை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பிகை, மதுராம்பிகை பெயர்களில் (4 x 8=32) இப்படிப் பாடினார்.

 

அற்புதம் 5: சிவன் மீது பாடிய ‘ஸ்ரீ விஸ்வநாதம்’ என்ற கிருதி சிகரமாக அமைந்தது. 14 ராகங்களைக் கொண்டு சிவனின் பெருமைகளை விளக்குகிறார். ஒரே பாட்டில் 14 ராகம்!

 

இனி அரிய தகவல்கள்

அரிய தகவல் 1: இவர் ஒவ்வொரு பாடலிலும் ‘குருகுஹ’ என்ற முத்திரையோடு பாடலின் ராகத்தையும் இணைத்துக் கூறுகிறார்.

 

தகவல் 2: கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான இவர் செய்த ‘வாதாபி கணபதிம் பஜே’ என்ற ஹம்சத்வனி ராக பாடலைத் தான் முதலில் கற்பிப்பார்கள். இவர் மும்மூர்த்திகளில் ஏனைய இருவரான சியாமா சாஸ்திரிகள், தியாகராஜர் ஆகியோர் காலத்தவர். ஷியாமா சாஸ்திரிகளைச் சந்தித்தது உறுதி, ஒருவேளை தியாகராஜரையும் சந்தித்திருக்கலாம்.

 

தகவல் 3: இவர் வாழ்ந்தகாலம் 1775- 1835. பிறந்தது திருவாரூர், சமாதி அடைந்தது எட்டயபுரம். காசியில் சிதம்பரநாத யோகியுடன் வசித்தது 5 ஆண்டுகள். திருவாரூர், தஞ்சாவூர், காஞ்சீபுரம், எட்டயபுரத்திலும் பல ஆண்டுகள் வாழ்ந்தார்.

 

தகவல் 4: சங்கீதம், யோக சாஸ்திரம், மந்திரம், உபநிஷதம், சம்ஸ்கிருதம், தெலுங்கு முதலியவற்றில் கரை கண்டவர். சம்ஸ்கிருத சொற்களை அடுக்கு மொழியில் அள்ளித் தெளித்திருக்கிறார். அவைகளில் அழ்ந்த  மந்திர தந்திரங்கள் நிறந்திருக்கின்றன.

 

தகவல் 5: பிள்ளையார் மீது சுமார் 24, சிவன் மீது 100, சக்தி மீது 150, முருகன் மேல் 30, ராமர், கிருஷ்ணர், விஷ்ணு மீது 60, நவக்கிரகங்கள் மீது 9 கிருதிகள் என்று ஷண்மத தத்துவங்களையும் பாடி இருக்கிறார்.

 

தகவல் 6: இவர் அம்பாள் மீது பாடிய பாடல்களை ஸ்ரீசக்ரம், மந்திர, யந்திர, தந்திரங்கள் அறிந்தவர்களே பூரணமாக விளங்கிக் கொள்ள முடியும். பரம ரகசியங்கள் நிறைந்தவை. அதே போல பலன்களும் கொடுக்க வல்லவை. இதில் மிகவும் முக்கியமானது நவாவரணக் கீர்த்தனைகள் 9 ஆகும். இதே போல நவக்கிரஹங்கள் பற்றிய 9 பாடல்களில் கிரஹ பீடைகள் விலக மந்திரபூர்வ பாடல்களைப் பாடியுள்ளார்.

தகவல் 7: இவர் பாடல்களில் வரும் புராண, இதிஹாச நிகழ்ச்சிகள் எண்ணற்றவை. அதிகமாகக் கேள்விப்படாத விஷயங்கள் சில: ஒரு பாடலில் குபேரனின் மகன்கள் நளகூபரனும் ,மணிக்ரீவனும் நாரதர் சாபத்தால் மருத மரங்களாகப் பிறந்து கிருஷ்ணனின் உரலால் சாப விமோசனம் பெற்றதைக் குறிப்பிடுகிறார். இன்னொரு பாடலில் தானம் கொடுத்த பசுவையே மீண்டும் தானம் கொடுத்த ந்ருக மகாராஜன் ஓணாயாகப் பிறந்து கண்ண பெருமானால் முக்தி அடைந்ததைப் பாடுகிறார்.

 

தகவல் 8: இது வேறு ஒரு ஆங்கிலப் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்: தீட்சிதர் , காஞ்சிபுரத்தில் உபநிஷத் பிரம்மம் என்ற சாதுவுடன் 4 ஆண்டுக் காலம் வசித்தார். அவர் இயற்றிய ராம அஷ்டபதிக்கு இசை அமைத்தார்.

 

தகவல் 9: இவருடைய சீடர்களில் திருவாரூர் நடன மாது திருவாரூர் கமலமும் ஒருவர். அவர் கோவிலில் ஆடுவதற்காக 2 தெலுங்கு பாடல்களையும் இயற்றினார். அதைப் பார்க்க நாட்டியப் பேரறிஞர்களான தஞசாவுர் நால்வரான பொன்னையா, சின்னையா, வடிவேலு, சிவானந்தம் ஆகிய நால்வரும் வந்தனர்.

 

மேலும் விவரம் வேண்டுவோர், என்.பார்த்தசாரதியின் “ஷண்மதமும் முத்துசுவாமி தீக்ஷிதரும்” என்ற நூலையும் டி.எஸ்.பார்த்தசாரதி எழுதிய   ‘Muthuswami Dikshitar’ ( in the book Great Composers ) என்ற ஆங்கிலக் கட்டுரையையும் படிக்கவும்.

தாயுமானவர் உண்டாக்கிய தமிழ் மழை

இரண்டு தினங்களுக்கு முன் “மழை வர பிரார்த்தனை” என்ற தலைப்பில் மழையைப் பெய்யச் செய்யும் தமிழ் பதிகங்களைப் பிரசுரித்தேன். முத்துசுவாமி தீட்சிதர் அமிர்தவர்ஷினி ராகத்தில் பாடி மழை கொட்டச் செய்ததையும் மேலே படித்தீர்கள். இதே போல தாயுமானவரும் செய்திருக்கிறார்.

தாயுமானவர் ராமேஸ்வரம் சென்றபோது மழையே இல்லை, ஒரே வரட்சி. காய்ந்து கருகிப்போன பூமியில் வசிக்கும் மக்களின் அவல நிலையைக் கண்டு மனம் உருகினார். உடனே இப்படிப் பாடினார்:

 

சைவ சமயம் சமயம் எனில் அச் சமயத்

தெய்வம் பிறை சூடும் தெய்வம் எனில்—ஐவரை வென்

றானந்த இன்பில் அழுந்துவது முத்தி எனில்

வானக்காண் பெய்மின் மழை.

 

இந்த வெண்பாவைப் பாடிய உடனே பெரு மழை கொட்டித் தீர்த்தது. மக்கள் எல்லோரும் தாயுமானவரின் பெருமையை உணர்ந்தனர்.

 

Please Read my earlier posts on music:

1.Rain Miracles: Rain and Fire by Music

2.மழை அற்புதங்கள்

3.இசைத் தமிழ் அதிசயங்கள்

4.சங்கீத ரகசியம்: இளமையில் கல்

5.தியாகராஜருடன் 60 வினாடி பேட்டி

 

Contact swami_48@yahoo.com

 

மழை வர பிரார்த்தனை

வினவுங்கள் விடை தருவோம் கேள்வி-2

மழை வர பிரார்த்தனை

 

மழை பெய்விக்க வருண ஜபம் செய்கிறார்கள். தமிழில் ஏதேனும் பாடல்கள் இருக்கிறதா? (ராமதாஸ் கேட்கும் கேள்வி)

 

கீழ்கண்ட பாடல்களை சில ‘வெப்சைட்டில்’ இருந்து எடுத்துள்ளேன். இவைகளை மழை பெய்விக்கவும் பொதுவாக கிரகங்கள் தொடர்பான கோளாறுகள் போகவும் படிப்பதுண்டு.

 

1.திருப்பாவை : ஆண்டாள் பாடியது

 

ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி

ஊழிமுதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்

பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

 

விளக்கம்: உலகில் நல்ல செயலைச் செய்யத் தொடங்கினால் பலரும் வந்து தன்னாலியன்ற உதவியைச் செய்வார்கள். நல்ல மழைபொழிந்து நாட்டில் நன்மை ஏற்படுவதற்காக கிருஷ்ண பக்தர்களான ஆயர் சிறுமியர் நோற்கும் நோன்புக்குத் தானும் உதவி செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு மழையைத் தரும் வருணதேவன் இவர்களின் எதிரில் வந்து நிற்கிறான். அவனை ஆழிமழைக்கண்ணா! என்றழைத்து நாங்களும் கண்ணனும் மகிழ்ந்து நீராடும்படி மழைபொழிய வேண்டும் என்று அவனுக்குக் கட்டளை இடுகிறார்கள். மழைபொழியும் செயலைக் கண்ணும் கருத்துமாக நடத்தும் வருணதேவனே! உன்னுடைய கொடைத்தன்மையில் சிறிதும் மறைத்துக் கொள்ளாமல் மழைபொழிந்து எல்லோருக்கும் உதவவேண்டும். நிறைய மழையைத் தர தண்ணீருக்கு எங்கே போவது என்று நினையாதே! நடுக்கடலுக்குச் சென்று முகத்தைத் தண்ணீரில் வைத்து உனக்குத் தேவையான அளவு தண்ணீரைப் பருகு; ஆரவாரித்துக்கொண்டு வானத்திற்குச் செல்; ஊழி முதல்வனின் உருவம்போல் கருமை நிறத்தைப் பெறு; மிக்க வலிமையுடைய பத்மநாபனின் வலக்கையில் இருக்கும் சக்கரம்போல் சுடரொளியால் மின்னலை மின்னிக்காட்டு; பகவானின் கையில் இருக்கும் வலம்புரிச் சங்குபோல் ஒலித்துக்காட்டு; ராமனுடைய கையில் இருக்கும் திருச்சார்ங்கத்திலிருந்து கிளம்பும் ராமபாணம்போல் அனைவரும் வாழ இவ்வுலகினில் மழைபொழிந்திடாய்! நாங்களும் கண்ணனும் மகிழ்ந்து நீராட தாமதிக்காமல் மழைபொழிந்திடு என்கிறார்கள்.

 

2. இசை விற்பன்னர்கள் இருந்தால் அமிர்தவர்ஷினி ராகம் அல்லது மேகரஞ்சனி ராகத்தில் பாடவோ வாத்தியங்களை இயக்கவோ செய்யலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நம்பிக்கையும் மனம் குவிந்த பிரார்த்தனையும் இருந்தால் கைமேல் பலன் கிடக்கும் என்பது முன்னோர் கண்ட முடிவு. எட்டயபுரம் பகுதியில் வறட்சி நிலவியதைப் பார்த்து வருத்தம் அடைந்த முத்து சுவாமி தீட்சிதர்,  அமிர்த வர்ஷினி ராகத்தில் “ஆனந்த அம்ருதகர்ஷினி” என்ற பாடலைப் பாடியவுடன் மழை கொட்டியது.

 

3.ஆதிகாலத்தில் வறட்சி எற்பட்டால் ரிஷி முனிவர்களை நாட்டிற்குள் வர அழைப்பார்கள். கோசல நாட்டில் வரட்சி ஏற்பட்டவுடன் ரிஷ்யசிருங்க (கலைக்கோட்டு) முனிவரை காட்டில் இருந்து அழைத்துவந்தார் தசரத மாமன்னன். உடனே மழை கொட்டியது. இதனால்தான் “நல்லார் ஒருவர் உளரேல் எல்லோர்க்கும் பெய்யும் மழை” என்ற வாசகம் வந்தது.

 

4.தெய்வம் தொழாள் கொழுநன் (கணவன்) தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்று வள்ளுவரும் கூறுகிறார்.

 

5.தேவாரம்: கோளறு திருப் பதிகம் (திருஞான சம்பந்தர் பாடியது. இதைப் பாடினால் கிரகங்கள் காரணமாக நிகழும் அனைத்துத் துன்பங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை)

 

1. வேய் உறு தோளிபங்கன் விடம் உண்ட கண்டன்

மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

சனி பாம்பு இரண்டும் உடனே

ஆசறு நல்லநல்ல அவை நல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

2. என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க

எருது ஏறி ஏழை உடனே

பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து என்

உளமே புகுந்த அதனால்

ஒன்பதொடு ஒன்றொடடு ஏழு பதினெட்டொடு ஆறும்

உடனாய நாள்கள் அவைதாம்

அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

3. உரு வளர் பவளமேனி ஒளி நீறு அணிந்து

உமையோடும் வெள்ளை விடைமேல்

முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

திருமகள் கலையது ஊர்தி செயமாது பூமி

திசை தெய்வம் ஆன பலவும்

அருநெதி நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

4. மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து

மறை ஓதும் எங்கள் பரமன்

நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

கொதிஉறு காலன் அங்கி நமனோடு தூதர்

கொடுநோய்கள் ஆன பலவும்

அதிகுணம் நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

5. நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்

விடை ஏறும் நங்கள் பரமன்

துஞ்சு இருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

வெஞ்சின அவுணரோடும் உரும் இடியும் மின்னும்

மிகையான பூதம் அவையும்

அஞ்சிடும்  நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

6. வாள்வரி அதள் ஆடை வரி கோவணத்தர்

மடவாள் தனோடும் உடனாய்

நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து என்

உளமே புகுந்த அதனால்

கோள் அரி உழுவையோடு கொலை யானை கேழல்

கொடு நாகமோடு கரடி

ஆள் அரி நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

7. செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக

விடையேறு செல்வன் அடைவு ஆர்

ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

வெப்பொடு குளிரும் வாதம் மிகை ஆன பித்தும்

வினையான வந்து நலியா

அப்படி நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

8. வேள்பட விழிசெய்து அன்று விடைமேல் இருந்த

மடவாள் தனோடும் உடனாய்

வாண்மதி வன்னி கொன்றை மலர்சூடி வந்து என்

உளமே புகுந்த அதனால்

ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்

இடரான வந்து நலியா

ஆழ்கடல் நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

9. பலபல வேடமாகும் பரன் நாரிபாகன்

பசு ஏறும் எங்கள் பரமன்

சலமகளோடு எருக்கும் முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர்

வருவகாலமான பலவும்

அலைகடல் மேருநல்ல அவை நல்லநல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

10. கொத்து அவர் குழலியோடு விசயற்கு நல்கு

குணம் ஆய வேட விகிர்தன்

மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என்

உளமே புகுந்த அதனால்

புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்

திருநீறு செம்மை திடமே

அத்தகு நல்லநல்ல அவை நல்லநல்ல

அடியார் அவர்க்கு மிகவே.

 

11. தேனமர் பொழில் கொள் ஆலை விளைசெந்நெல் துன்னி

வளர் செம்பொன் எங்கும் நிகழ

நான்முகன் ஆதியாய பிரமாபுரத்து

மறைஞான ஞானமுனிவன்

தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து

நலியாத வண்ணம் உரைசெய்

ஆன சொல்மாலை ஓதும் அடியார்கள் வானில்

அரசாள்வர் ஆணை நமதே.

என்ற கோளறு திருப்பதிகம் பாடியருளினார்.

 

நம்பினார் கெடுவதில்லை. இது நான்கு மறை தீர்ப்பு

அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் (மகா கவி பாரதி)

 

Please read my earlier posts:

1.Spaceships and Special Prayer Days (February 2012)

2.மாதத்துக்கு மூன்று மழை ஏன்? (டிசம்பர் 2012)

3.Rain Miracles: Rain by Fire and Music

Please send your questions to : swami_48@yahoo.com

 

கற்பூரம் ஏற்றுவது ஏன்?

Picture of President Obama with Hindu Priest at White House in 2009.

வினவுங்கள் விடை தருவோம்- பகுதி 1

கற்பூரம் ஏற்றுவது ஏன்?

(பயன்படுத்திய நூல்கள்: 1) இந்துமத தத்துவங்களும் சடங்குகளும்- பேராசிரியர் டி.கே. நாராயணன்; 2) இந்து சமயக் களஞ்சியம்—மு.திரவியம், 3) இந்துமதம் பதில் அளிக்கிறது,பகுதி-3, தொகுப்பு எஸ்.லட்சுமி சுப்பிரமண்யம்).

Q) Why do we light camphor in temples? A)The answer is available in English as well.

“தீப மங்கள ஜோதி நமோ நமோ

தூய அம்பல லீலா நமோ நமோ” (திருப்புகழ்)

 

“தமசோ மா ஜோதிர் கமய”

(இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்: பிருஹத் ஆரண்யக உபநிஷத்)

1.ஏன் இறைவனுக்கு கற்பூரம் காட்டுகிறோம்? (கு.அருள் ஜெகன் கேட்ட கேள்வி)

அ) கோவில்களில் கடவுளின் பிரதிமை/ உருவம் உள்ள கர்ப்பக்கிரகம் (கருவறை) இருட்டாக இருக்கும். பழங் காலத்தில் மின் விளக்குகள் கிடையாது.புகை, எண்ணெய் முதலியன பட்டு மூர்த்தியின் உருவம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக பல கோவில்களில் வெளியே தான் விளக்குகள் வைக்கப்பட்டு இருக்கும். கற்பூரமோ நெய் விளக்கோ காட்டும்போது கடவுளின் உருவம் நன்கு தெரியும். அப்போது பட்டர் அல்லது அர்ச்சகர் அந்தக் கோவிலின் , மூர்த்தியின் பெருமையை மனப்பாடமாக ஒப்புவிப்பார். இது புத்தகத்தில் படித்துச் சொல்லும் விஷயம் அல்ல. அவர் கூறுவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செவி வழி மூலம் பெறப்பட்ட அரிய விஷயம். அவ்வாறு ஒருவர் சுவாமியின் மீது வெளிச்சம் போட்டுக் காட்டி, விவரிக்கும்போது நமது முழு கவனமும் அதன் மீது இருக்கும். இவ்வாறு மனம் குவியும்போது நாம் செய்யும் பிரார்த்தனை அப்படியே நிறைவேறும். அப்போது கடவுளைத் தரிசனம் செய்யும் எல்லோரும் ஒரே ‘வேவ் லெந்த்’தில் இருப்பதால் இறையருள் பெறுவது எளிதாகிறது.

Picture of pure camphor

ஆ) இதற்கு ஒரு தத்துவ விளக்கமும் உண்டு. மனத்திலுள்ள இருட்டு, அதாவது அஞ்ஞானம், விலக இறை அருள் தேவை. ஆரத்தியில் காட்டும் தீபம் எப்படி கர்ப்பக்கிரக இருளைப் போக்குகிறதோ அதுபோல, நம் அகத்தில் உள்ள இருளும் வழிபாட்டில் மறைந்து விடும்.

 

இ) கற்பூரத்துக்கும் நெய் தீபத்துக்கும் வேறுபாடு உண்டு. கற்பூரம் என்பது ஒரு விநோதமான ஹைட்ரோகார்பன் பொருள். இதை எரிக்கும்போது பதங்கமாதல் (சப்ளிமேஷன் ) என்னும் முறையில் எரிகிறது. அதாவது அந்தப் பொருளை சூடு படுத்தும்போது திட நிலையில் இருந்து திரவ நிலைக்குச் செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்குப் போய்விடும். இதே போல கற்பூரம் போல வெள்ளை உள்ளம், தூய உள்ளம் உடையோர், இடைப்பட்ட நிலைகளைக் கடந்து நேராக இறைவனிடத்தில் ஐக்கியமாகலாம் என்பதையும் கற்பூர ஆரத்தி நினைவுபடுத்துகிறது.

 

ஈ) கற்பூரம் வெண்மையானது. அது போல ஆன்மா சுத்த தத்துவ குணமுள்ளது. கற்பூரம் ஏற்றியவுடன் அது தீபம் போல எரிகிறது.  அதே போல மலம் நீங்கப்பெற்ற ஆன்மாவானது ஞானாக்கினியால் சிவகரணம் பெற்று நிற்கிறது. கற்பூரம் இறுதியில் ஒன்றுமின்றி கரைந்து போகிறது. அதே போல ஆன்மாவானது சரீரத்தை விட்டு நீங்கி மறைந்து இறைவனோடு ஒன்றுபடுகிறது.

Picture of camphor tree

உ) இதோ சுவாமி தயானந்த சரஸ்வதி அளிக்கும் பதில்: ஆலயத்துக்குச் செல்லும்போது வெளிச்சம் நிறைந்த வெளிப் பிரகாரத்தில் இருந்து கருவறைக்கு முன் வந்து நிற்கிறோம். அங்கே இருள் சூழ்ந்து இருக்கிறது. விளக்கு ஒளியில் மங்கலாக விக்ரகம் தெரிகிறது. அர்ச்சகர் கற்பூரத்தை ஏற்றி நம்மை தரிசிக்க வைக்கிறார். தலையில் உள்ள மணிமுடியால் தலை இருக்கும் இடம் தெரிகிறது. காதில் உள்ள குழையால் முகம் இருக்கும் இடத்தைப் பார்க்கிறோம். கழுத்தில் உள்ள மாலை அவருடைய மார்பைக் காட்டுகிறது இடையில் உள்ள அணி இறைவனின் மேனியைக் காட்டுகிறது, காலில் உள்ள சதங்கை அவனது பாதங்களைக் காட்டுகிறது. ஆகக் கற்பூரம் ஒவ்வொரு இடத்திலும் ஒளியேற்றும்போது, இறைவனின் உருவத்தை நாம் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து விடுகிறோம்.

Picture of chemical formula of camphor

இது எப்படி இருக்கிறது? இறைவனின் சக்தியை உணருவதன் மூலம் , அவனைப் புகழ்ந்து பாடுவதன் மூலம்  அவனை அடையாளம் காணுவதைப் போலத்தான் இருக்கிறது. சூடான சூரியனின் கதிர்களும், குளிர்ந்த நிலவின் ஒளியும்,  கண்ணைக் குளிரச் செய்யும்  தாவரங்களின் பசுமையும் தாகத்தைத் தணிக்கும் ஊற்றின்  நீரும் இறைவனின் பிரதியாக , அவனுடைய புகழின் வடிவமாக  நமக்குத் தரிசனம் தருகின்றன. அவற்றின் மூலம் இப்படி நாம் இறைவனைப் புரிந்து கொள்கிறோம். “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?” என்று கூறி மகிழ்கிறோம். இதே செயலைத் தான் நாம் ஆலயத்தின் கருவறையிலும் செய்கிறோம். இத்தனை சிறப்பான வடிவத்தை சுடர் ஒளி அங்கம் அங்கமாகக் காட்டும் போது, அடையாளம் கண்டு கொள்கிறேனே! என்று கூறி வியக்கிறோம். அப்படி உணரும்போது நமது அறியாமை கரைந்து மறைகிறது. அதே போல கற்பூரமும் ஒளி அணைந்து காற்றில் கரைந்து மறைந்து விடுகிறது.

 

ஞானாக்கினியில் அறியாமை எரிக்கப்படுவதை, கற்பூரம் நமக்கு ஒளிகாட்டி எரிந்து மறைவதன் மூலம் உணர்த்துகிறது. ஒளியே வடிவான இறைவனை ஒளி மூலம் உணர்கிறோம். அப்போது ஞானமே வடிவான இறைவன் நமக்குள்ளேயே இருப்பதை உணர்கிறோம்.

இந்தத் தத்துவத்தைக் காட்டுவதே கற்பூரம் ஏற்றித் தரிசனம் செய்ய வைக்கும் நிகழ்ச்சியாகும்”. (சுவாமி தயானந்த சரஸ்வதி).

(குறிப்பு: இப்போது தமிழ்நாட்டுக் கோவில்களில் கற்பூரம் ஏற்றுவதை அனுமதிப்பதில்லை. இதற்குக் காரணம் தூய கற்பூரத்துடன் செயற்கையான மெழுகைச் சேர்க்கும்போது அது கரித் தூளை உமிழ்கிறது. இது புறச் சூழலைக் கெடுக்கிறது. இதற்குப் பதிலாக அதே ஒளியூட்டும் பணியை நெய் விளக்கு செய்கிறது. தத்துவம் ஒன்றே.)

 

(பி.பி.சி. தமிழோசையில் தமிழ் ப்ரொட்யூசராகப் பணியாற்றிய ஆறு ஆண்டுக் காலத்தில், ‘வினவுங்கள் விடை தருவோம்’ என்று நான் (லண்டன் சுவாமிநாதன்) நடத்திய நிகழ்ச்சி, 35 மொழிகளில் முதன்மையாக நின்றது. ஒரே ஆண்டில் 19,000 நேயர் கடிதங்களைப் பெற்று  சாதனை படைத்தது (1987- 1992). அந்தக் கேள்வி பதில்களை அதே தலைப்பில் புத்தகமாக வெளியிட்டவுடன் 3000 புத்தகங்களும் உடனே விற்றுத் தீர்ந்துவிட்டன. இப்போது எனது 500 ஆய்வுக்கட்டுரைகளைப் படிப்போர் தனிப்பட்ட மெயிலில் சில கேள்விகளைக் கேட்கின்றனர். அவைகளுக்குப் பதில் அனுப்பி வந்தேன். இனி அதையும் பழைய பி.பி.சி. பாணியில் வெளியிட்டால் என்ன என்று தோன்றியது. நீங்களும் கேள்விகள் கேட்கலாம்).

 

contact : swami_48@yahoo.com

பாண்டிய மன்னனின் அளவற்ற பக்தி!

பக்திக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவன் வரகுண பாண்டியன். இவனுடைய கதையைக் கேட்டால் இப்படியும் பித்துப் பிடித்தவர் போல பக்திமான் இருக்க முடியுமா என்று வியக்கத் தோன்றும். பாகவதத்தில் பக்திக்கு இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. நல்ல பக்தனுக்கு ஒன்பது வகையான செயல்கள் உண்டு. இதையே நாரத பக்தி சூத்திரம், அப்பர் பாடல் ஆகியவற்றிலும் காணலாம். ஏறத்தாழ காதல் வயப்பட்ட ஒரு இளைஞனோ யுவதியோ எப்படி இருப்பரோ அப்படி பக்திமானும் இருப்பார். ஆனால் காதலில் கிடைப்பது உடல் சம்பந்தமான சிற்றின்பம். பக்தியில் கிடைப்பாதோ ஆன்மா சம்பந்தமான நிரந்தரமான பேரின்பம்.

 

பாகவத புராணத்தில் வரும் ஸ்லோகம் இதோ:

ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத சேவனம்

அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்ய ஆத்மநிவேதனம் (பாகவதம் 7-5-23)

 

அதாவது கடவுளின் நாமத்தைக் 1.கேட்டல், பக்திப் பரவசத்துடன் 2.பாடுதல், கடவுளின் பெயரை சதாசர்வ காலமும் 3.நினைத்தல், அவனுடைய பாதாரவிந்தங்களில் 4.பணிவிடை செய்தல், பூவாலும் இலையாலும் பொன்னாலும் மணியாலும் அவனை 5.அர்ச்சித்தல், அவனை சிரம் மேற் கைகூப்பி 6.வணங்குதல், அவனுக்கு 7.அடிமைபோல பணியாற்றல், அவனை உயிருக்குயிரான 8.நண்பனாகக் கருதல், இருதயபூர்வமாக 9.தன்னையே அர்ப்பணித்தல் ஆகிய ஒன்பது செயல்களைப் பக்தனிடம் காணலாம். இவைகளை ஆண்டவனுக்கு மட்டுமின்றி இறையடியார்க்கும் செய்வர்.

இந்தக் கருத்துகளை அப்பர் பெருமான் தனது தேவாரப் பாடலில் அப்படியே வடித்துள்ளார்:

 

அப்பர் தேவாரம்

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்

பின்னம் அவளுடைய ஆரூர் கேட்டாள்

பெயர்த்தும் அவனுக்கே பிச்சியானாள்;

அன்னையும் அத்தனையும் அன்றே நீத்தாள்

அகன்றாள் அகலிடத்தே ஆசாரத்தை

தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்

தலைப் பட்டாள் நங்கை தலைவன் றாளே

 

சங்க இலக்கியத்தில் அகப்பாட்டுகளைப் படித்தோருக்கு காதலன், காத்லியின் நிலை விளங்கும். அப்பர் கூறிய பக்திப் பித்தை, பைத்தியத்தை அங்கும் காணலாம்.

இந்த குணநலன்களை வரகுண பாண்டியன் விஷயத்தில் நன்கு பார்க்கமுடிகிறது. இது தமிழர்களுக்குப் புதிதல்ல. முல்லைக் கொடிக்குத் தேர் ஈந்தான் பாரி வள்ளல், மேகத்தைக் கண்டு மகிழ்ச்சியாக ஆடிய மயிலைக் கண்டு குளிரால் நடுங்குகிறது என்று போர்வை அளித்தான் பேகன். ராமாயாண உபந்யாசம் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட குலசேகரன், தனது படைகளை உடனே ராமருக்கு உதவியாக அனுப்ப உத்தரவிட்டான். இது போல புகழ்சோழன், ஏனாதிநாயனார் கதைகளிலும் பல நிகழ்ச்சிகளைப் படிக்கிறோம். மேம்போக்காகப் பார்த்தால் அவர்களுடை செயல்கள் அறிவிழந்தவர் செயல் போலத் தோன்றும். ஆழமாகப் பார்த்தால் அவர்களுடைய ஆத்மார்த்த பக்தி விளங்கும். இன்றும் கூட அரசியல் தலைவர்களுக்காகவும், குருவுக்காகவும் உயிர்கொடுக்கும் தொண்டர்களைக் காண்கிறோம். அந்தக் கண்ணோட்டத்தோடு வரகுணன் கதைகளை அணுகவேண்டும்.

ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகுணன் மாபெரும் சிவ பக்தன் என்பதை பட்டினத்தார் பாடல், மாணிக்க வாசகரின் திருக்கோவையார், தளவாய்புரம் செப்பேடுகளில் காண்கிறோம்:

 

தளவாய்புரம் செப்பேடு

 “மற்றதற்கு மகனாகிய கொற்றவனெங் கோவரகுணன்

பிள்ளைப் பிறைச் சடைக்கணிந்த பினாக பாணி எம்பெருமானை

உள்ளத்தினிலிதிருவி உலகங் காக்கின்ற நாளில்”

******

வரகுணனாம் தென்னவன் ஏத்து சிற்றம்பலத்தான் (திருக்கோவை 306)

******

பன்னிரு திருமுறைகளில் பதினோராவது திருமுறையாக அமைந்தது

‘திருவிடைமருதூர் மும்மணிக்கோவை’. இதில் வரகுணன் செய்த வியப்பான பக்தி விஷயங்கள் வருகின்றன:

 

1.ஒரு திருடனைக் கையும் களவுமாகப் பிடித்து வந்து, வரகுண பாண்டிய மன்னர் முன்னர் நிறுத்துகின்றனர் காவல்காரர்கள். திருடனின் நெற்றியில் விபூதி இருப்பதைப் பார்த்து விடுகிறார். உடனே அவனை விடுதலை செய்ய உத்தரவிடுகிறார்.

2. இரவில் நரிகள் ஊளை இடுகின்றன. அவை அனைத்தும் அரன் நாமத்தை உச்சரிப்பதூபோல இவர் காதில் விழவே அனைத்துக்கும் சால்வை போர்த்த உத்தரவிடுகிறார்!

3.குளத்தில் வாழும் தவளைகள் கத்துகின்றன. அவை அனைத்தும் சிவன் பெயரை உச்சரிப்பதாக எண்ணி குளத்தில் பூவையும் பொன்னையும் தூவ உத்தரவிடுகிறார்.

4.கோவிலில் விளக்கு ஏற்ற எண்ணை தேவை. அதற்காக எள்ளைக் காயவத்திருந்தனர். அதை ஒருவன் தின்றுகொண்டிருந்தான். அதைப் பார்த்த வரகுணனுக்கு ஒரே கோபம். சிவன் சொத்தை இப்படித் தின்னால் உனக்கு என்ன நேரிடும் தெரியுமா? என்று கேட்கவே அவன் பட்டென்று பதில் தந்தான்:’’ ஓ, தெரியுமே, நான் செக்கு மாடாகப் பிறப்பேன். சிவன் கோவிலுக்கு எண்ணை ஆட்டிக் கொடுத்த புண்ணியம் கிடைக்கும்”’. இதைக் கேட்ட அடுத்த நொடியில் எள்ளைத் துப்பசெய்து அதை விழுங்கினான் மன்னன். இப்போது எள்ளித் தின்னவன் கேட்டான், ஓ மன்னரே, நீவீர் ஏன் எள்ளைத் தின்றீர்? என்றான். மன்னரும் பட்டென்று பதில் தந்தார், இது தெரியாதா எள்ளை ஆட்டி எண்ணை எடுக்க இரண்டு மாடுகள் தேவையே. நான் தான் இரண்டாவது மாடு”. இது வரகுணனின் அதீத பக்தியைக் காட்டுகிறது.

5.ஒருநாள் சிவன் கோவில் வளாகத்தில் ஒரு மண்டை ஓடு கிடந்தது. அதைப் பார்த்து மன்னன் வணங்கினான். என்ன புண்ணியம் செய்தனை, இப்படி சிவன் கோவிலில் தலை கிடக்க, எனக்கும் இக்கதி வரவேண்டும் என்றான் வரகுணன்.

6.வேப்பம் பழங்கள் கீழே விழுந்து பாதி மணலிலும் பாதி வெளியிலும் கிடந்தன. அவைகள் அனைத்தும் சிவலிங்கம் போல தோன்றவே, அவைகளுக்கு விதானம் அமைக்க உத்தரவிட்டான்.

7. ஒருநாள் நாயின் மலத்தைக் கோவிலில் பார்த்தவுடன் மன்னன் என்பதையும் மறந்து, தானே அதைச் சுத்தப்படுத்தினான்.

8.மன்னர்கள் பல நாடுகளின் மீது படை எடுத்து வெற்றி கிடைத்தால் தோல்வி அடைந்த நாட்டில் அந்தப்புரத்தில் உள்ள பெண்களை மன்னரிடம் ஒப்புவிப்பர். அவன் விரும்பிய பெண்களை மணப்பான். இப்படி வேற்று நாட்டுப் பெண்கலை அவனிடம் அழைத்து வந்தபோது இவ்வளவு அழகானவர்கள் சிவன் கோவில் சேவைக்கே உரியவர்கள் என்று அனுப்பிவைத்தான் வரகுண பாண்டியன்.

இதோ பட்டினத்தார் பாடலில் இதைப் படியுங்கள்:

 

“வெள்ளை நீறு மெய்யிற்கண்டு

கள்ளன் கையிற் கட்டவிழ்ப்பித்தும்

ஓடும் பல்நரி ஊளை கேட்டு அரனைப் பாடின

என்று படாம்பல அளித்தும்

குவளைப் புனலில் தவளை அரற்ற

ஈசன் தன்னை ஏத்தின என்று

காசும் பொன்னும் கலந்து தூவியும்

வழிபடும் ஒருவன் மஞ்சனத்தியற்றிய

செழுவிடை எள்ளை தின்னக் கண்டு

பிடித்தலும் அவன் இப் பிறப்புக்கென்ன

இடித்துக்கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்

மருதவட்டத் தொருகனிக் கிடந்த

தலையைக் கண்டு தலையுற வணங்கி

உம்மைப்போல எம் இத்தலையும்

கிடத்தல் வேண்டுமென்று அடுத்தடுத்திரந்தும்

கோயில் முற்றத்து மீமிசை கிடப்ப

வாய்த்ததென்று நாய்க்கட்டம் எடுத்தும்

காம்பவிழ்த்துதிர்ந்த கனியுறுக் கண்டு

வேம்புகட்கெல்லாம் விதானம் அமைத்தும்

விரும்பின கொடுக்கை பரம்பரற்கென்று

புரி‘குழல்தேவியைப் பரிவுடன் கொடுத்த

பெரிய அன்பின் வரகுண தேவர்’’

 

ராமகிருஷ்ண பரமஹம்சர் வழ்விலும் இப்படிப் பல நிகழ்ச்சிகலைக் காண்கிறோம்.ஒரு நாள் வானத்தில் கருமையான மேகக் கூட்டம் காணப்பட்டது. அங்கு வெள்ளை நிறக் கொக்குகள் பறந்தன. அந்தக் காட்சியைக் கண்ட பரமஹம்சர், அப்படியே சமாதி நிலையில் ஆழ்ந்துவிட்டார். இயற்கைக் காட்சியைக்கூட இறைவனின் லீலையாகக் கண்டார்.

Contact: swami_48@yahoo.com

சரஸ்வதி இருக்குமிடத்தில் லக்ஷ்மி ஏன் வருவதில்லை?

14.சம்ஸ்கிருதசெல்வம்

சரஸ்வதி இருக்குமிடத்தில் லக்ஷ்மி ஏன் வருவதில்லை? ரகசியம் இதோ!

 

By ச.நாகராஜன்

 

         பணம் வேண்டும் என்று எண்ணாதவன் உலகில் யாரேனும் உண்டா? நவீன காலத்தில் சந்யாசிகள் கூடத் தங்கள் ஆசிரம வளர்ச்சிக்காகவும் நற்பணிகளுக்காகவும் பணத்தைத் தேடிச் சேர்க்கின்றனர்.ஆகவே பணத்தை அள்ளித் தரும் லக்ஷ்மி தேவியை அனைவரும் வணங்குவதில் வியப்பே இல்லை.

 

 

ஒரு கவிஞர் பார்த்தார், அனைவரின் நன்மைக்காகவும் ஸ்ரீதங்காத இடங்களைப் பட்டியலிட்டுத் தந்து விட்டார் தன் கவிதை வாயிலாக. அதைப் பார்ப்போம்:

 

குசைலினம் தந்தமலோப ச்ருஷ்டம்

   ப்ரஹ்மாஷினம் நிஷ்டூரபாஷினம் I

சூர்யோதயே சாஸ்தமிதே ஷயனம்

    விமுச்சதி ஷீரபி சக்ரபாணிம் II

 

(தந்தம்பல்; நிஷ்டூர பாஷினம்கடுஞ்சொற்களைப் பேசுதல்; சூர்யோதயம்சூரிய உதய நேரம்; அஸ்தமிதம்சூரியன் அஸ்தமிக்கும் மாலை வேளை; ஷயனம்உறங்குதல்)

 

அதிர்ஷ்ட தேவதையான லட்சுமி தேவி விஷ்ணுவையும் விட்டு நீங்கி விடுவாளாம்! எப்போது?

 

அவர் அழுக்கான உடைகளை அணிந்தால்

பற்களைத் துலக்காமல் அவை அழுக்குடன் இருந்தால்

அவர் பெருந் தீனிக்காரராக இருந்தால்

அவர் கடுஞ்சொற்களைப் பேசினால்

சூர்யோதய காலத்திலும் சூர்யாஸ்தமன காலத்தில் அவர் தூங்கினால்

அவர் விஷ்ணுவாக இருந்தாலும் க்ஷ்மி தேவி அவரை விட்டு விலகி விடுவாளாம்!

 

 

ஆக நல்ல பழக்கங்களை மேற்கொண்டால்  அது நாம் லக்ஷ்மி தேவியை வரவேற்கிறோம் என்று பொருள்!

 

இது ஒரு புறமிருக்க,  நல்ல வாக்கை உடைய புலவர் ஒருவர் வறுமையில் வாடுகிறார். அதன் காரணத்தை ஆராய்ந்தார். உலகியல் ரீதியான விளக்கம் சட்டென்று அவருக்குப் புரிந்தது. எந்த மாமியாரும் மருமகளும் ஒத்துப் போனதாக உலக சரித்திரம் உண்டா, என்ன! அப்படி இருக்கும் போது சரஸ்வதியும் லட்சுமியும் மட்டும் எப்படி ஒத்துப் போவார்கள். மாமியார் இருக்கும் இடத்தில் மருமகள் இருப்பாளா என்ன! அது தான் தன்னிடம் சரஸ்வதி இருக்கும் போது லட்சுமி வந்து வாசம் செய்ய மாட்டேன் என்கிறாள்! காரணம் புரிந்தவுடன் கவிஞரின் மனம் ஒருவாறு சமாதானம் அடைகிறது.

அதைப் பாடலாக வடித்து விட்டார் இப்படி:

 

 

குடிலா லக்ஷ்மீர் யத்ர

  ப்ரபவதி சரஸ்வதி வஸதி தத்ர I

ப்ராய: ஸ்வஸ்தூஸ்நுஷயோர்

   த்ருஷ்யதே சௌஹத்வம் லோகே II

 

(குடிலாகெட்ட சுபாவமுள்ள)

கெட்ட சுபாவமுள்ள லட்சுமி  எங்கு செழித்து சக்திவாய்ந்தவளாக இருக்கிறாளோ அங்கு சரஸ்வதி வசிக்க மாட்டாள். பொதுவாக உலகத்தில் மாமியாருக்கும் மருமகளுக்கும் நட்பு இருந்து பார்த்ததே இல்லை! – இது தான் ஸ்லோகத்தின் பொருள்!

 

விஷ்ணுவின் பத்தினியான லட்சுமி தேவி விஷ்ணுவின் நாபியில் பிறந்த பிரம்மாவின் பத்தினியான சரஸ்வதிக்கு மாமியார் முறை ஆகிறாள் அல்லவா; அதனால் விளைந்தது இந்த அற்புதக் கற்பனை!

*****  

 

‘இன்பம் எங்கே, இன்பம் எங்கே என்று தேடு’

 

Pictures are drawn by Maniam Selvam for another book.Thanks.

வணக்கம். என் பெயர் நக்கீரன். சென்ற 4 வாரங்களில் ‘சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை’,  ‘மன்னிக்க வேண்டுகிறேன்”,  “ரொம்ப நாளாக எனக்கு ஒரு ஆசை”,  ‘’கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு” என்ற தலைப்புகளில் பேசினீர்கள். இன்று நாம் அலசும் விஷயம் ‘’இன்பம் எங்கே?’’ யார் வேண்டுமானாலும் விவாதத்தைத் துவக்கி வைக்கலாம்.

 

திருமூலர்:

நான் பாடியதை முதலில் படியுங்கள், இன்பம் என்ன என்று விளங்கும்:

“முகத்தில் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்” (திருமந்திரம்)

“யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின்

ஊன்பற்றி நின்ற உயர் திருமந்திரம்தான்

தான் பற்றப் பற்ற தலைப்படும்தானே”  (திருமந்திரம்)

(இறை வழிபாடே இன்பம் தரும்)

‘’ஆசை விடவிட ஆனந்தம் ஆகுமே’’

 

வள்ளுவர்:

என்னுடைய குறளில் 29 இடங்களில் இன்பம், இன்புறுவது என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளேன்.

‘’அறத்தான் வருவதே இன்பம்’’ (குறள் 39) (தருமத்தைப் பின்பற்றினால் இன்பம் கிடைக்கும்)

‘’மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்

சொற்கேட்டல் இன்பம் செவிக்கு’’ (குறள் 65) (குழந்தைகள் இன்பம் தருவர்)

‘’இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்’’ (98) (இன்சொல் இன்பம் தரும்)

‘’இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பம் கெடின்’’ (ஆசையை ஒழித்தால் இன்பம்)

‘’ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்

கூடி முயங்கப்பெறின்’’ (1330) (கணவன் –மனைவி ஊடல் பின்னர் சமாதானத்தில் முடியும்போது கூடுதல் இன்பம் தரும்)

 

அப்பர்=திருநாவுக்கரசர்

நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம்

ஏமாப்போம் பிணி அறியோம் இடர்வோம் அல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பமில்லை. . . . .

 

மாணிக்கவாசகர்

‘’ இன்ப ஊர்தி ‘’ (சிவ பெருமான்)

‘’பால் நினைந்தூட்டும் தாயினும்

சாலப் பரிந்து நீ பாவியேனுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து

புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே’’

 

’ஆராத இன்பம் அருளும் மலை போற்றி’’

 

நம்மாழ்வார்

கொள்ள மாளா இன்ப வெள்ளம் கோதுஇல தந்திடும்

என் வள்ளலேயோ (திவ்யப் பிரபந்தம் 3298)

தழை நல்ல இன்பம் தலைப்பெய்து எங்கும் தழைக்கவே (திவ்யப் பிரபந்தம் 3834)

 

தாயுமானவர்

‘’எல்லோரும் இன்புற்றிருப்பதேயன்றி

யாமொன்றும் அறியோம் பராபரமே’’

 

பாரதிதாசன்

அட நான் கூடத்தான் இன்பத் தமிழ் பற்றிப் பாடிய பாடலில்

தமிழுக்கும் அமுதென்று பேர்—அந்தத்

தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

என்று ஒரே பாடலில் ‘’இன்பத் தமிழ்’’ என்ற சொல்லை எட்டு முறை பயன்படுத்தி தமிழ்தான் இன்பம் என்று நிரூபித்திவிட்டேன்.

பாரதி

என் சீடன் பாரதிதாசன் கூறியது முற்றிலும் உண்மையே. அத்தோடு சுதந்திரமும் ஆனந்தம் தரும். உலகே ஒரு இன்பக் கேணி என்று வேதம் சொல்லுவதையும் கணக்கிற் கொள்ள வேண்டும். இதோ கேளுங்கள்;

‘’செந்தமிழ் நாடெனும் போதினிலே—இன்பத்

தேன் வந்து பாயுது காதினிலே’’

‘’ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று’’

‘’ஒன்று பரம் பொருள்- நாம் அதன் மக்கள்

உலகு இன்பக் கேணி என்றே- மிக

நன்று பல் வேதம் வரைந்த கை பாரத

நாயகி தன் திருக் கை’’

‘’தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா

உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையா நந்தலாலா’’

‘’தனமும் இன்பமும் வேண்டும்

தரணியிலே பெருமை வேண்டும்’’

 

அருணகிரி

‘’என் பிறப்பு பங்கம் சிறைப்பங்கம் சிதைத்து உன்றன் பதத்து இன்பம் தருவாயே’’ (முருகன் திரு அடியே இன்பம்)

‘’சுரர்ச் சங்கம் துதித்து அந்தஞ்சு எழுத்து இன்பம் களித்து உன்பண் சுகத்த உய்ந்து இன்பு அலர்’’ (ஐந்தெழுத்தே இன்பம்)

தொல்காப்பியர்:

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் (தொல்காப்பியம்)

சினிமா பாட்டு

மருதகாசி: ஐயா, என் பெயர் மருத காசி. நான் எழுதிய பாடலில் இன்பம் என்றால் என்ன என்று சினிமா பாட்டு வடிவிலேயே சொல்லிவிட்டேன்; நல்ல மனைவியும் மக்களும் தான் ஒருவனுக்கு இன்பம் தருவர்:

இன்பம் எங்கே இன்பம் எங்கே – (திரைப்படம்: மனமுள்ள மறுதாரம் பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்)

 

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு – அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு (2 முறை)
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

இன்றிருப்போர் நாளை இங்கே
இருப்பதென்ன உண்மை – இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து
காத்து என்ன நன்மை (2 முறை)
இருக்கும் வரை இன்பங்களை
அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே
உனக்கு ஏது இனிமை

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

கனிரசமாம் மதுவருந்திக் களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம் (2 முறை)
இணையில்லா மனையாளின் வாய்மொழியே இன்பம் – அவள்
இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்
வாழ்வினிலே ஒருவனுக்குத் தருவதல்ல இன்பம் (2 முறை)

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம் – உன்
மார் மீது உதைப்பதிலே கிடைப்பது தான் இன்பம்

இன்பம் எங்கே
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு அது
எங்கிருந்த போதுமதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

 

நக்கீரன்

நன்றி. தேச சுதந்திரம், ஆன்ம சுதந்திரம், தமிழ் மொழி, நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், முருகன் திருவடி, சிவபெருமான், ஐந்தெழுத்து, விஷ்ணு, இறை வழிபாடு, தருமம் என்பன எல்லாம் இன்பம் பயக்கும் என்று அருமையான கருத்துக்களை முன் வைத்தீர்கள். ஆயினும் 29 குறட் பாக்களில் இன்பம் என்ற சொல்லைப் பயன்படுத்திய வள்ளுவனுக்கு எல்லோரும் ஒரு ‘’அப்ளாஸ்’’ கொடுக்கும் படி வேண்டுகிறேன். நமது அடுத்த வார தலைப்பு ‘’வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்’’ (பலே பாண்டியா திரைப் படம்) நன்றி, வணக்கம்.

 contact swami_48@yahoo.com