
Post No. 14,734
Date uploaded in London – —7 July 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
6-7-2025 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை!
காரைக்கால் அம்மையார்
ச. நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே, சிறப்பு விருந்தினர் திரு ரமேஷ் அவர்களே, வணக்கம். நமஸ்காரம்.
முற்காலத்தில் சோழமண்டலத்தில் இருந்த காரைவனம் என்று வழங்கப்பட்ட மாநகர் இப்போது காரைக்கால் என்று வழங்கப்படுகிறது.
இதில் வாழ்ந்து வந்த தனதத்தன் என்னும் வணிகருக்குப் புனிதவதி என்ற ஒரு மகள் பிறந்தாள். அவர் பரமதத்தன் என்ற வணிகரை மணந்து இனிதே இல்லறம் நடத்தி வந்தாள்.
ஒரு நாள் பரமதத்தனுக்கு அவனைக் காண வந்த இரு வணிகர்கள் இரு மாங்கனிகளைத் தந்தனர். அவற்றை அவன் அவற்றைத் தனது இல்லத்திற்கு அனுப்பினான்.
அதை வாங்கிக் கொண்ட புனிதவதி அப்போது அங்கு வந்த சிவனடியார் ஒருவருக்கு இரு மாங்கனிகளுள் ஒன்றை அளித்து உபசரித்தாள்
இல்லத்திற்கு வந்த பரமதத்தன் உணவருந்தும் போது எஞ்சியிருந்த ஒரு மாங்கனியை அவள் பரமதத்தனுக்கு அளித்தாள். அதன் சுவை அபாரமாக இருக்கவே இன்னொரு கனி எங்கே என்று அவன் கேட்டான்.
புனிதவதி திகைத்தாள். பின்னர் தான் வழிபடும் சிவபிரானை வேண்டினாள். அவளுக்கு ஒரு கனி கிடைத்தது. மகிழ்ச்சியுடன் அதைத் தன் கணவனுக்கு ஈந்தாள்.
அதனுடைய ருசி முந்தைய கனியை விட அதிகமாக இருக்கவே, “இது நான் அனுப்பிய பழம் போல இல்லையே. இது ஏது” என்று வினவினான்.
புனிதவதி நடந்ததைக் கூறினாள். பரமதத்தன் நம்பவில்லை.
இறைவன் கொடுத்தார் என்றால் இன்னொரு கனியையும் கேள் என்றான்.
புனிதவதி திகைத்தாள். இறைவனை மீண்டும் வேண்டினாள்.
மனம் இரங்கிய சிவபிரான் இன்னொரு கனியையும் ஈந்து அருளினார்.
அதை புனிதவதி பரமதத்தனிடம் கொடுத்தாள். அதைக் கையில் வாங்கிய பரமதத்தன் வியப்படைந்தான். உடனே அந்தக் கனி மறைந்தது.
புனிதவதி ஒரு தெய்வப்பிறவி என்று அறிந்த பரமதத்தன் அவளுடன் வாழ அஞ்சி வாணிகம் செய்யச் செல்வதாகச் சொல்லி பாண்டிய நாடு சென்று மதுரை நகரை அடைந்தான். அங்கு இன்னொரு பெண்ணை மணந்து கொண்டு வாழத் தொடங்கினான். அங்கு அவனுக்கு ஒரு மகள் பிறக்கவே அதற்குப் புனிதவதி என்று பெயரிட்டு அழைக்கத் தொடங்கினான்.
புனிதவதியாரின் சுற்றத்தார் பரமதத்தன் மதுரையில் வாழ்வதை அறிந்து, உடனடியாக புனிதவதியை அங்கு அழைத்துச் சென்றனர்.
நகருக்கு வெளியே புனிதவதி தங்கி இருந்தாள். புனிதவதி வந்ததை அறிந்த பரமதத்தன் தன் குடும்பத்துடன் சென்று அவரை வணங்கினான்.
மனைவியை நீ வணங்குவது ஏன் என்று அனைவரும் கேட்க பரமதத்தன், “இவர் சாதாரண மானுடர் அல்ல. இவர் ஒரு தெய்வப் பிறவி அனைவரும் வணங்குங்கள்” என்று கூறினான்.
இந்தச் சொற்களைக் கேட்ட புனிதவதி கணவனுக்காக தான் கொண்டிருந்த மானுட உடலை நீத்து ஒரு பேய் உருவத்தைப் பெற்றார்.
சிவபிரானின் மீது பல பிரபந்தங்கள் பாடியவாறே திருத்தலங்கள் பல சென்ற புனிதவதியார் நேராக கயிலை மலைக்குச் சென்றார். ஆனால் காலால் நடக்காமல் தலையால் நடந்து சென்றார்.
அவர் வருவதைக் கண்ட சிவபிரான், “அம்மையே, வருக!” என்று அன்புடன் அழைத்தார்.
சிவபிரானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிய புனிதவதியார், “அப்பனே. பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்புண்டேல் உன்னை மறவாமை வேண்டும். நீ ஆடுகின்ற போது உன் திருவடிக்கீழ் மகிழ்ந்து பாடிக் கொண்டு இருத்தல் வேண்டும்” என்று வேண்டினார். “அப்படியே ஆகுக” என்று கூறி அருளிய சிவபிரான் அவரைத் திருவாலங்காடு செல்லப் பணித்தார். அங்கு சிவபிரானின் திருநடனம் கண்டு பின்னர் அவர் முக்தியை அடைந்தார்.
அம்மையே என்று சிவபிரான் அழைத்ததால் அவர் அம்மையார் என்று அழைக்கப்பட்டார். காரைக்காலைச் சேர்ந்தவர் என்பதால் காரைக்கால் அம்மையார் என்று அழைக்கப்படலானார்.\
இவர் செந்தமிழில் பல பாடல்களைப் பாடியுள்ளார். அந்தாதி என்று ஒரு புது வகையை இவரே தொடங்கி வைத்தார். அற்புதத் திருவந்தாதி என்ற இவரது நூல் 101 செய்யுள்களைக் கொண்டுள்ளது.
காலனை வென்றதாக இவர் பாடும் பாடல் குறிப்பிடத் தகுந்த ஒன்று.
காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம்
மேலை இருவினையும் வேரறுத்தோம் – கோல
அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான்
சரணார விந்தங்கள் சார்ந்து
என்று காலனை வென்றதை இவர் கூறினார்.
பதிகம் என்ற பாடல் அமைப்பை முதலில் வகுத்து இவர் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். அதுவே முதலாவதாக அமைந்ததால் அது மூத்த திருப்பதிகம் என்று வழங்கப்படலாயிற்று.
திரு இரட்டைமணி மாலை என்ற நூலில் இருபது பாடல்களை இவர் பாடி அருளியுள்ளார்.
காரைக்காலில் சிவன் கோவிலில் இவருக்கென தனி சந்நிதி உள்ளது.
இக்கோவிலை மக்கள் காரைக்கால் அம்மையார் கோவில் என்றே அழைக்கின்றனர். அங்கு புனிதவதியார் இளமைத் தோற்றத்துடன் உள்ளார். சுற்றி உள்ள பிரகாரத்தில் இவரது வாழ்க்கை வரலாறு ஓவியங்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
வருடந்தோறும் ஆனி மாதம் பௌர்ணமி அன்று மாங்கனித் திருவிழா இங்கு நடைபெறுகிறது.
மற்ற நாயன்மார்கள் உருவங்கள் எழுந்து நின்ற நிலையில் இருக்கும் போது, இவரது உருவச்சிலை மட்டும் அமர்ந்த நிலையில் காணப்படும்.
காரைக்காலில் பெருமை மிக்க இந்த அம்மையார் தங்கி இருந்ததால் அங்கு கால் பதிக்க திருஞானசம்பந்தர் தயங்கினார்.
63 நாயன்மார்களில் மூன்று பேர்கள் பெண்கள். அவரில் இவரே முத்தவர்.
சைவ நெறிப்படி வாழ்ந்து சைவத்திற்குப் பெருமை சேர்த்த நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் திருவடி போற்றி வணங்குவோம்! என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.
| kalyanasundaram melaiyur nataraja | 07:34 (2 hours ago) | ||
to me, santhanam![]() | |||
TR ramesh
Talk by Mr. S Nagarajan from Bengaluru
news
aalayam arivom
********





