Very good book with English and Telugu translation of Tiruppavai by Dr Chennai Padmanabhan
Written by London Swaminathan
Post No. 14,009
Date uploaded in Sydney, Australia – 23 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆண்டாளின் தமிழ் அறிவினை எவரும் சந்தேகிக்கவோ குறைகூறவோ முடியாது; ஆயினும் பறை என்னும் சொல்லை அவர் எங்கேயிருந்து கண்டுபிடித்தார் என்பதுதான் வியப்பான விஷயம் ; புரியாத புதிர் ; சங்க இலக்கியத்திலும் அந்தச் சொல் இல்லை ; பிற்கால அகராதிகளிலும் அந்தச் சொல் இல்லை. அதாவது அவர் பயன்படுத்தும் பொருளில் இல்லை .
ஆண்டாள் எழுதிய திருப்பாவையில் பறை என்ற சொல் பல இடங்களில் வருகிறது.ஆனால் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருளில் வருவது வியப்பான செய்தியாகும்
பறை , பறையன், பறைகொட்டு முதலிய சொற்கள் காலப்போக்கில் மதிப்பிழந்து விட்டன. அந்தக் காலத்தில் பறைகளை முழக்கி அரசின் அறிவிப்புகளை வெளியிட்ட பெரிய அதிகாரிகள்
பறையர்கள் என்று அழைக்கப்பட்டனர் . வள்ளுவரும் இப்படி ஒரு பறையன் என்று சொல்லுவார்கள்.
இதே போல கழகம் என்ற சொல்லுக்கு அந்தக் காலத்தில் சூதாடுமிடம் என்ற பொருளே இருந்தது . இப்போது கட்சிகள் எல்லாம் கழகம் என்று பெயர் சூடிக்கொண்டு திரிகின்ற்ன . பல சங்கங்களும் கழகம் என்று பெயர் சூட்டிக் கொண்டு அலைகின்றன.
இதே போல ‘பறை’யும் அர்த்தம் மாறிவிட்டது. ஆனால் ஆண்டாளே பல இடங்களில் பல பொருளில் பயன்படுத்துவதுதான் வியப்பான
விஷயம்; அந்தப் பொருள்கள் அகராதியில் இல்லவும் இல்லை! திருப்பாவையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தோரும் இப்படிப் பல பொருளில் சொல்லாக்கம் செய்துள்ளனர்.
நமக்கே பறைதருவான்= நமக்கு அருள் தர காத்திருக்கிறான்
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து* உன்-
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து *நீ-
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது*
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் *உன் தன்னோடு-
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்*
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்-29
இன்று உன் அருளை (பறை) பெறுவது மட்டும் எங்கள் விருப்பமன்று.
*****
பறை (பெ) & (வி) – 1) சொல்; பேசு; அறிவி, 2) தமிழக இசைக்கருவிகளில் ஒன்று.
இன்றும் மலையாள மொழியில் பறைஞ்ஞ்சு என்ற சொல் பேசுதல் என்ற பொருளில் பயன்டுத்தப்படுகிறது . ஆனால் ஆண்டாள் பயன்படுத்திய பொருள் இல்லை.
****
திருப்பாவை முதல் பாசுரத்தில் தொடங்கி வரிசையாக 29 பாசுரம் வரை நம்மை ‘பறை’யை யூகிக்க வைத்து 29-ம் பாசுரத்தில் பறை என்பது திருமாலுக்கு என்றென்றும் சேவை செய்வதே, நாம் அடைய வேண்டிய பிறவிப் பயன் அதுவே —- என்ற உட்பொருளை உணர்த்தி, 30-ம் பாசுரத்தில் பலனை கூறி நிறைவு செய்கிறாள்.
ஆண்டாள் 29 ஆம் பாசுரம் வரை 11 இடங்களில் பறை என்பதை பயன்படுத்துகிறார் (1,8, 10, 16, 24, 25, 26, 27, 28, 29,30- எல்லா இடங்களிலும் அருள் என்ற பொருள் பொருந்தாது. குறிப்பாக ஆங்கிலத்தில் திருப்பாவையை மொழிபெயரத்தோர் வெவ்வேறு விதமாக மொழிபெயர்த்துள்ளனர். விருப்பம், ஆசை என்ற பொருளிலும் பறை வருகிறது.
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட-ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈர் இரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.(30)
*****
என்னுடைய கேள்வி இதுதான் ?
எங்கிருந்து ஆண்டாள் இந்தச் சொல்லைப் பெற்றார் ? வேறு எங்கேயும் ஆதாரம் இருக்கிறதா ?அல்லது அவரே உருவாக்கிய சொல் என்றாலும் தவறில்லை; அந்தப் புகழ் அவருக்கே உரித்தாகுக. ஆண்டாளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் வந்த ஷேக்ஸ்பியரும் ஆயிரத்துக்கும் மேலான புதிய ஆங்கிலச் சொற்களை உருவாக்கினார். கழகம் என்ற சொல்லை இன்று நாம் வேறு அர்த்தத்தில்/ பொருளில் பயன்படுத்துகிறோம். அதே போல ஷேக்ஸ்பியர் உருவாக்கிய ஆங்கிலச் சொற்களையும் நாம் இன்று வேறு அர்த்தத்தில்/ பொருளில் பயன்படுத்துகிறோம்.;மேலும் பறை போல சில சொற்களுக்கு வெவ்வேறு பொருள்களையும் ஆங்கில அறிஞர்கள் முன்வைக்கின்றனர். நேற்றுவந்த ஷேக்ஸ்பியர் விஷயத்திலேயே நாம்மிவ்வளவு திணறினால் 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஆண்டாள் விஷயத்தில் நாம் திணறுவதில் வியப்பில்லையே!!
—subham—
Tags—ஷேக்ஸ்பியர், திருப்பாவை, ஆராய்ச்சிக் கட்டுரைகள் 2, பறை , என்றால் என்ன , ஆண்டாள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் 15-12-24 அன்று ஒளிபரப்பான உரை.
இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது
நம்மாழ்வார் – 2
ச. நாகராஜன்
முப்பததைந்து ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் நம்மாழ்வார் திருநாடு அலங்கரிக்கலானார்.
நம்மாழ்வாரின் பிரிவைத் தாங்க முடியாத மதுரகவி ஆழ்வார் அவரது பாசுரங்களைப் பாடிப் பரவி பரப்பியதோடு திருநகரியில் அவருக்கென ஒரு கோவிலையும் எழுப்பினார். அதில் நம்மாழ்வாரின் விக்கிரகத்தையும் ஸ்தாபித்தார்.
ஒருநாள் அவரது பெருமைகளை வழக்கம் போல வீதியில் கூவிச் செல்கையில் பொறாமை பிடித்த புலவர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி ‘இதை நீர் நிரூபிக்க வேண்டும்’ என்றனர்.
இதனால் திகைத்த மதுரகவியார் நம்மாழ்வாரைத் துதிக்க ஒரு விருத்த வேதியர் அவரைச் சந்தித்தார்.
“நீர் கவலைப்பட வேண்டாம். நான் சொல்வதைச் செய்தால் போதும்’ என்று கூறினார்.
பின்னர் அவர்,
:கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே” என்ற பாசுரத்தின் முதல் அடியை ஒரு ஏட்டில் எழுதிக் கொண்டு போய் அந்த ஏட்டை அந்தப் புலவர்கள் வைத்திருக்கும் சங்கப் பலகையில் வைக்க அனுமதி பெறுங்கள். அது போதும்” என்றார்.
அதன் படியே மதுரகவியாரும் ஒரு ஏட்டில் முதல் அடியை எழுதி சங்கப் புலவர்களிடம் தர அவர்கள் சிரித்தவாறே அந்த ஏட்டை சங்கப் பலகையில் வைத்தனர். பொற்றாமரைக் குளத்தில் விடப்பட்ட அப்பலகையின் மீது அவர்களும் நின்றனர்.
ஏட்டை மட்டும் ஏந்திக் கொண்ட சங்கப் பலகை மற்ற புலவர்களை நீரில் ஆழ்த்தியது. அவர்கள் நீந்திக் கரை சேர்ந்தனர்.
நம்மாழ்வாரின் மகிமையை நன்கு அறிந்து கொண்ட அவர்கள் அவரைப் போற்றலாயினர்.
அது மட்டுமின்றி நம்மாழ்வாரின் பெருமையை தனித்தனிப் பாடல்களாக ஒவ்வொரு புலவரும் எழுதி சமர்ப்பிக்க எண்ணம் கொண்டனர்.
அப்படியே ஒவ்வொருவரும் ஒரு பாடலை எழுதிப் படிக்க முயன்ற போது என்ன ஆச்சரியம், அனைத்தும் ஒரே பாடலாகவே இருந்தன.
சேமங் குருகையோ? செய்ய திருப்பாற்கடலோ?
நாமம் பராங்குசமோ? நாரணமோ? – தாமம்
துளவோ? வகுளமோ? தோளிரண்டோ? நான்கு
முளவோ? பெருமா னுனக்கு
என்ற பாடலாகவே அனைவர் எழுதியதும் இருந்தது.
ஈயாடுவதோ கருடற்கெதிரே? இரவிக்கெதிர்
மின்மினி யாடுவதோ?
நாயாடுவதோ உறுவெம்புலிமுன்?
நரி கேசரி முன் நடையாடுவதோ?
பேயாடுவதோ அழகூர்வசி முன்? பெருமாள்
வகுளாபரணன் அருள் கூர்ந்து
ஒவாதுரை ஆயிரமாமறையின் ஒரு சொற்
பெருமோ உலகிற்கவியே
கருடனுடைய வேகத்திற்கு எதிரே ஈ எங்கே?
ஒளிதரும் சூரியன் முன் மின்மினி வெளிச்சம் எங்கே?
புலிக்கு முன்னே நாய் எங்கே?
சிங்கத்தின் கம்பீர நடைக்கு முன்னே நரியின் நடை எங்கே?
தேவலோக ஊர்வசி முன் பேய் ஆடுவது எப்படி இருக்கும்?
சடகோபரின் அருளிய ஒரு சொல்லின் பெருமைக்கு அனைத்து வித்துவான்களின் கவிகள் ஈடாகுமோ/
என்று இப்படி பலபடப் புகழ்ந்து ஒவ்வொருவரும் பாடினர்.
நம்மாழ்வார் வைகாசி விசாகத்தன்று அவதரித்தார்.
அதை ஒட்டி மலர்ந்த பாடல் இது:
ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை
பாரோர் அறியப் பகர்கின்றேன்
சீராரும் வேதந் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை
நாதன் அவதரித்த நாள்.
மதுரகவியாரின் கண்ணி நுண் சிறுத்தாம்பில் அவர் நம்மாழ்வார் பாசுரங்களைப் போற்றிப் புகழ்கிறார்.
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ்வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே
மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு
ஆட்புக்க காதல் அடிமைப் பயன் அன்றே
வானணியும் மாமாடக் குருகை மன்னன் வாழியே
வைகாசி விசாகத்தில் வந்துதித்தான் வாழியே
சேனையர் கோன் அவதாரம் செய்த வள்ளல் வாழியே
திருக்குருகை சடகோபன் திருவடிகள் வாழியே
என்று கூறி என் உரையை முடிக்கின்றேன். நன்றி வணக்கம்!
உலகிலேயே அதிக நகைகளை அணிவோர் இந்துக்கள்தான். எகிப்திய ஓவியங்களைப் பார்ப்போர் கழுத்தில் உள்ள சங்கிலிகளை மட்டுமே காணலாம். ஆனால் இந்துக்களின் ஓவியங்களிலும் கற்சிலைகளிலும் பாதாதி கேசம் நகைகளைக் காணலாம். அஜந்தா ஓவியங்களையும் பர்ஹுத் முதலிய இடங்களிலுள்ள சிலைகளையும் காண்போர், ஆண்களும் குண்டலங்களையும் கை வளையங்களையும் தோள் வளையங்களையும் அணிந்திருப்பதைக் காணலாம். இவைகளில் பல, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை. இதே போல இலங்கையில் சிகிரியா, தமிழ் நாட்டில் சித்தன்ன வாசல் ஓவியங்களிலும் அலங்காரம் செய்துகொண்ட பெண்களைக் காண்கிறோம்.
சங்க இலக்கியத்திலும் அதற்குப் பின் வந்த சிலப்பதிகாரத்திலும் அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரைகளிலும் நவரத்தினங்களை காண்கிறோம். ஆண்டாளும் இதற்கு விதி விலக்கு அல்ல. அவரும் நகைகளைப் பற்றிப் பாடுகிறார்.
அவளுக்கு நகைகள் மீது பற்று உண்டோ இல்லையோ மற்ற பெண்களைக் கவர்ந்து இழுக்கவாவது நகைகளைப் பற்றிப் பேசித்தானே ஆக வேண்டும்!
காளிதாசனுக்குப் பின்னர் எழுந்த சங்க இலக்கியத்தில் ஏராளமான நகைகள், அணிகலங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன
ஆறாவது பரிபாடலில் வையை நதியில் குளித்த பெண்களின் வருணனை வருகிறது
தொடி, தோள் வளை , மேகலை வடங்கள், ஆணிமுத்து வடங்கள் ஆகிய நகைகளும் இன்னுமொரு பாடலில் கை வளையம் , ஆழி மோதிரம், தலைக்கோலம், எட்டுவட முத்து மேகலை, வாகுவலையம், காஞ்சி ஆகிய ஆபரணங்களும் வருகின்றன.
பல்கலன் என்று சேர்த்திருப்பது மேலும் பல ஆபரணங்களையும் …. என்பதைக் காட்டும்
முழங்கையில் நெய் வழியும் அளவுக்கு பால் சோறு, அக்கார அடிசில் ஆகியவற்றையும் சாப்பிடுவோம் என்கிறார் ஆண்டாள்
இப்படி நகைகளை அணியும் வழக்கம் இமயம் முதல் குமரி வரை இருந்ததை ராமாயணத்திலும் காண்கிறோம். சீதா தேவியை ராவணன், விமானத்தில கடத்திச் செல்லுகையில் அவள் புடவைத் தலைப்பில் முடிந்து எறிந்த ஆபரணங்களை ப் புறநானூற்றுப் புலவர் பாடி இருக்கிறார் .
காளிதாசனின் சாகுந்தலம் முதலிய நாடகங்களில் மோதிரம், ஆபரணம் முக்கியப் பங்காற்றுகிறது; ராமாயணத்திலும் கணையாழி முக்கியமாக விளங்குகிறது. இவை அனைத்தும் பெண்களுக்கு —-இந்துப் பெண்களுக்கு —-நகைகள் உடலிலிருந்து பிரிக்க முடியாத அடையாளச் சின்னங்கள் என்பதைச் சொல்லாமல் சொல்லும்.
Date uploaded in Sydney, Australia – 20 DECEMBER 2024.
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
15-12-24 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
ஆலயம் அறிவோம்!
வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.
கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடந் தோன்று,மூர்
நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிப்புத்தூர் வேதக் கோனூர்
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது 108 வைணவ திவ்ய க்ஷேத்திரங்களுள் ஒன்றாக அமைவதும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த தலமாகவும் அமையும் ஶ்ரீ வில்லிப்புத்தூர் திருத்தலமாகும்.
இத்திருத்தலம் தமிழ்நாட்டில் மதுரையிலிருந்து ராஜபாளையம்-தென்காசி, குற்றாலம் போகும் வழியில் உள்ளது.
மூலவர் திருநாமம் : வடபத்ரசாயி
புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலம்_
உற்சவர் : ரங்கமன்னார்
தாயார்: ஆண்டாள்
விமானம் : சம்ஸன விமானம்
தீர்த்தம் : திருமுக்குளம்
மங்களாசாஸனம் : பெரியாழ்வார், ஆண்டாள்
கருவறையில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் ஶ்ரீ தேவி, பூதேவி சமேத வடபத்ரசாயியை தரிசிக்கலாம்.
பெருமாளுக்கு ஆண்டாள் வலது புறமும் கருடாழ்வார் இடது புறமுமாக தரிசனம் தருகின்றனர். வடபத்ரசாயி ஆதிசேஷனில் பள்ளி கொண்டுள்ளார்.
இத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. முக்கியமான ஒரு வரலாறு இந்த ஊருக்குப் பெயர் வந்ததன் காரணத்தைத் தெரிவிக்கிறது.
முன்னொரு காலத்தில், இந்த நிலப்பகுதி ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடிய போது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார்.
வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப் போய் சிறிது நேரம் தூங்கினார். அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. அதுவே வில்லிப்புத்தூர் என்ற பெயரைப் பெற்றது.
இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார் கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம்.
ஶ்ரீ வில்லிப்புத்தூரில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று பெரியாழ்வார் தனது நந்தவனத்தில் துளஸிச் செடியின் கீழ் பெண்குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தார். தன் கையில் பூமாலை போலத் தோன்றிய பெண் குழந்தைக்கு கோதா என்று பெயர் சூட்டினார். அதுவே நம்மால் கோதை என்று வழங்கப்படுகிறது. கோ என்றால் நல்வார்த்தை தா என்றால் தருபவள். திருப்பாவை 30 பாசுரங்களையும் நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களையும் அருளிச் செய்ததால் அவர் கோதை ஆகிறார்.. இன்னும் ஏராளமான அர்த்தங்களை வேதாந்த தேசிகன் தனது கோதா ஸ்துதியில் தெரிவிக்கிறார்.
‘இறைவனையே ஆண்டவள்’ என்பதால் ஆண்டாள் என்ற் திருப்பெயரை கோதை பெற்றார்.
பாமாலை பாடி பூமாலை சூடிக் கொடுத்ததால் சூடிக் கொடுத்த நாச்சியார் என்ற சிறப்புப் பெயரும் ஆண்டாளுக்கு உண்டு.
பெரியாழ்வாருடன் ஆண்டாள் வாழ்ந்த வீடே கி.பி. 14ம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவரால் திருக்கோயிலாக கட்டப்பட்டது.
11 நிலைகளுடன் 11 கலசங்கள் கொண்ட ராஜகோபுரம் 196 அடி உயரமுடையது.
கோவிலில் தினமும் காலையில் ஒரு காராம்பசு வந்து நிற்கும். ஆண்டாளின் பார்வை இந்தக் காராம்பசுவின் பின்புறம் விழும். ஆண்டாள் தினமும் கண்விழிப்பது இப்படித்தான்!
.
இங்குள்ள திருமுக்குள தீர்த்தம் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. கலாநேமி என்னும் அரக்கனை பெருமாள் தன் சக்ராயுதத்தால் வீழ்த்தினார். ரத்தம் தோய சக்கரத்தாழ்வார் வர அந்த சக்கரத்தைத் தூய்மைப்படுத்த கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் தமது தீர்த்தத்தை ஒரு குளத்தில் சொரிய அதில் சக்கரம் சுத்திகரிக்கப்பட்டது. இந்த மூன்று நதிகளின் நீர் சேர்ந்ததால் இது திருமுக்குளம் என்று அழைக்கப்படலாயிற்று.
இங்குள்ள கோவிலின் முன்புறமுள்ள கிணற்றில் கோடைக்காலமானாலும் நீர் வற்றுவதில்லை
ஆண்டாளின் தோளில் அழகுற வீற்றிருக்கும் கிளி தினமும் மாற்றப்படுகிறது. இந்தக் கிளி பச்சிலையால் செய்யப்பட்ட ஒன்றாகும். கிளியோடு இருக்கும் பெண் தெய்வங்கள் மதுரை மீனாட்சியும் ஆண்டாளும் தான். ராஜவம்சத்தில் வந்த மீனாட்சிக்கு கிளி வலது தோளிலும் எளிய பக்தி மார்க்கத்தில் வந்த ஆண்டாளுக்குக் கிளி இடது தோளிலும் இருக்கும். இந்தக் கிளி சுக முனிவரே என்று கூறுவர். இந்தக் கிளியைத்தான் ஆண்டாள் கண்ணனுக்குத் தூது விட்டாள். பூஜை முடிந்த பின்னர் தினமும் இந்தக் கிளியை பக்தர்கள் விரும்பி வாங்கிச் செல்வது வழக்கம்.
மார்கழி மாத உற்சவத்தில் ஶ்ரீ ஆண்டாளின் எண்ணெய் காப்பு உற்சவம் மிகச் சிறப்பான ஒன்றாகும். 61 வகை மூலிகைகள் அடங்கிய இந்தத் தைலத்தைக் காயச்ச நாற்பது நாட்கள் ஆகும். ஏழு படி நல்லெண்ணெயில் பசும்பால், நெல்லிக்காய், தாழம்பூ, இளநீர் மற்றும் மூலிகைகள் சேர்த்துக் காய்ச்சினால் இது நான்கு படியாகும். இதுவே தான் உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்குச் சாத்தப்படும்.
சர்வரோக நிவாரணியாகும் இதை பிரசாதமாக பக்தர்கள் வாங்கிச் செல்வர்.
இங்கு கோவிலில் கண்ணாடிக் கிணறு ஒன்று உள்ளது. இதில் தான் தினமும் ஆண்டாள் அழகு பார்த்துக் கொள்வது வழக்கம்.
சித்ரா பௌர்ணமியன்று மதுரை தல்லாகுளத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் பரிவட்டங்களை அணிந்த பிறகே வைகை ஆற்றில் இறங்குகிறார்.
12 ஆழ்வார்களில் இரு ஆழ்வார்கள் அவதரித்த திருத்தலம் என்ற சிறப்பை இந்தத் தலம் பெருகிறது.
கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள கலைமகள் சிற்பத்தில் நாசியும் கால் பெருவிர்ல் நுனியும் ஒரே நேர் கோட்டில் அமைந்திருப்பது சிற்பக் கலையின் சிறப்பை விளக்கும் ஒரு அபூர்வமான வேலைப்பாடாகும்.
ஒவ்வொரு ஆடிப் பூரத்திலும் அழகிய தேர் இங்கு இழுக்கப்படுகிறது.
தமிழக அரசின் அதிகாரபூர்வமான சின்னமாகத் திகழ்வது ஶ்ரீ வில்லிப்புத்தூர் கோவில் ராஜகோபுரம் தான்.
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும்
கோதை தமிழ் ஐயைந்து மைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஶ்ரீ வடபத்ர சாயியும் ஆண்டாளும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே நாகராஜன் வணக்கம் நமஸ்காரம்.
இன்று நாம் தமிழுக்கு வைணவ பக்தி இலக்கியத்தில் ஒரு புதிய பரிமாணத்தை அளித்ததோடு அனைவரையும் திருமாலைத் துதிப்பதற்கான சிறந்த பாசுரங்களை அருளிய ஆழ்வாரான நம்மாழ்வார் பற்றி சிந்திக்கப் போகிறோம்.
இவரது காலம் 9ம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.
பகவானது திவ்ய குணங்களில் சதா ஆழ்ந்து இருந்ததால் ஆழ்வார்கள் என்ற பெயரைப் பெற்ற ஆசாரியர்களில் நம்மாழ்வார் தனிச் சிறப்புடன் திகழ்கிறார்.
முற்காலத்தில் பக்தியில் செழித்த பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்றும் திருநகரி என்றும் அழைக்கப்படும் அழகிய நகரில் போற்காரியார் என்னும் பெயருடைய வேளளர் ஒருவர் வாழ்ந்து வந்தார். திருமால் பக்தரான அவர் உத்தமியான உடைய நங்கையார் என்ற மங்கையைத் திருமணம் செய்து கொண்டார். நங்கையாரின் தந்தையார் திருவாழ்மார்பர் என்பவர் மலையமாநாட்டில் திருவண்பரிசாரம் என்னும் நகரில் வாழ்ந்து வந்தார்.
தனது மாப்பிள்ளையைச் சில காலம் தன்னுடனேயே தங்குமாறு திருவாழ்மார்பர் வேண்ட அப்படியே தன் மனைவியுடன் பொற்காரியார் அங்கு வாழ்ந்து வந்தார்.
சில காலம் கழித்துத் தன் ஊருக்குத் திரும்பிச் செல்ல எண்ணம் கொண்ட பொற்காரியார் திருக்குறுங்குடி என்னும் ஊரை அடைந்தார். அங்கு எழுந்தருளியிருந்த இறைவனான நம்பியை புத்திரப் பேறு அளிக்குமாறு மனதார வேண்டினார்.
இறைவன் அருளால் நங்கையார் கர்ப்பமுற்று அழகிய ஓரு ஆண் குழந்தையைப் பெற்றார். இறைவனே அப்படி ஆண் குழந்தையாக அவதரித்த போது நாராயணனுக்குத் தொண்டு செய்யும் ஆதிசேஷன் திருக்குருகூரில் ஒரு புளியமரமாகத் தோன்றி வளரலானார்.
பிறந்த குழந்தை சற்று வித்தியாசமாக இருந்தது. அழாமலும் பால் குடிக்காமலும் எப்போது மௌனத்துடன் இருந்த அந்தக் குழந்தையைக் கண்டு அனைவரும் அதிசயித்தனர்.
குழந்தையை பெருமாள் கோவிலுக்குக் கொண்டு சென்ற பொற்காரியார் உலக நடைக்கு முற்றிலும் மாறாக இருக்கும் குழந்தைக்கு மாறன் என்று பெயர் சூட்டி அங்குள்ள புளிய மரத்தில் ஒரு அழகிய தொட்டிலில் குழந்தையை இட்டு வீடு திரும்பினார்.
ஒரு குழந்தை தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்தவுடன் அக்குழந்தையின் மேல் சடம் என்னும் வாயு வீசும். உடனே பரிசுத்த மனம் கொண்ட குழந்தை மனம் மாறி அழத் தொடங்கும் . உலக இயல்பைப் பெறும்.
ஆனால் இந்த தெய்வக் குழந்தையின் மீது வாயுவால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அந்த வாயுவை குழந்தை அப்புறம் தள்ளி விட்டது.
இப்படி சட வாயுவைத் தள்ளி விட்டதால் அவருக்கு சடகோபர் என்ற பெயர் உண்டாயிற்று.
இப்படியாக ஒரு நாள் அல்ல, ஒரு வருடம் அல்ல பதினாறு ஆண்டுகள் அவர் வளர்ந்து வந்தார்.
ஶ்ரீமன் நாராயணன் மாறனாருக்கு அனைத்து சாஸ்திரங்களையும் அளிக்கத் திருவுள்ளம் கொண்டு தனது கணத் தலைவரான விஷ்வக்ஸேனரை அழைத்து, ‘நீ திருக்குருகூர் சென்று அனைத்து வேதாந்த உட்பொருளையும் மாறனுக்க உபதேசித்து வா’ என்று அனுப்பினார்.
அதன்படியே விஷ்வக்ஸேனர் திருக்குருகூரில் உள்ள மாறனார் முன் பிரத்யக்ஷமாகி அவருக்கு அனைத்து வேதாந்த உட்பொருளையும் உபதேசித்தார். அனைத்து வேதங்களையும் மாறனார் அறிந்து கொண்டார். விஷ்வக்ஸேனர் தனது இருப்பிடம் மீண்டார்.
இப்படி நாட்கள் கழிகையில் திருமால் மீது அற்புதமான மதுரமான பாடல்களைப் பாடிய பக்தர் ஒருவர் அயோத்திக்குச் சென்றார். அவர் மதுரமான பாடல்களைப் பாடி வந்ததால் அவரை மதுரகவிகள் என்று அனைவரும் அழைத்தனர்.
ஒரு நாள் தெற்குத் திசையிலிருந்து பேரொளி ஒன்று வீசுவதைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர் அது ஒளிரும் திசை நோக்கி நடக்கலானார்.
அந்த ஒளி காட்டிய பாதையால் அவர் திருக்குருகூரை வந்து அடைந்தார். அங்குள்ள புளியமரத்தடியில் தியானத்தில் இருந்த மாறனாரைக் கண்டார்.
அவர் பேசாமல் இருந்ததைக் கண்ட மதுரகவியார் ஒரு கல்லை எடுத்துத் தட்ட இதுவரை பேசாமல் இருந்த மாறனார் அவருடன் பேசலானார். அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அற்புதமாக பதிலைத் தரலானார்.
மாறனார் ரிக், யஜுர் மற்றும் அதர்வண வேதத்தின் கருத்துக்களை உள்ளடக்கி திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி என்னும் நூலகளை இயற்றி உலகிற்குத் தந்தார்.
திருவாய் மொழி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக ஆக அது பகவத் விஷயம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது.
திருவாய்மொழியில் 1102 பாசுரங்களும் திருவிருத்தம் நூலில் 100 பாசுரங்களும் திருவாசிரியம் நூலில் 7 பாசுரங்களும், பெரிய திருவந்தாதி நூலில் 87 பாசுரங்களும் ஆக நான்கு பிரபந்தங்களில் மொத்தம் 1296 பாசுரங்கள் உள்ளன.
இப்படி வேதத்தை அழகிய தமிழில் விரித்துரைத்த அவரை அனைவரும் நம் ஆழ்வார் என்று அழைக்கலாயினர். அவர் நம்மாழ்வார் ஆனார்.
ஶ்ரீ ரங்க நாதரும் அவரை நம்மாழ்வார் என்று அழைக்கவே அப்பெயரே நிரந்தரமாயிற்று.
மற்ற ஆழ்வார்களை இவரது அவயவங்களாக கூறுவதால் இவரது சிறப்பு நமக்கு நன்கு விளங்கும்.
அவரது பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த பகவான் அவருக்கு ஒரு மகிழ மாலையைக் கொடுத்து அணிந்து கொள்ளும்படி பணித்தார். அதை அவர் அணிந்தார். அதனால் அவர் வகுளாபரணர் என்ற பெயரைப் பெற்றார்.
தான் அருளிச் செய்த பிரபந்தங்களை நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வாருக்கு உபதேசித்து அருளினார்.
மஹா விஷ்ணுவே முதல் தெய்வம் என்று நிரூபித்த நம்மாழ்வார் பிற மதங்களைக் கண்டித்தார். அதனால் அவருக்குப் பராங்குசர் என்ற பெயர் உண்டாயிற்று.
பிற மதங்கள் என்னும் யானைகளைத் தன் அங்குசத்தால் அடக்கியவர் என்ற பொருளைத் தருகிறது பராங்குசர் என்ப்ற பெயர்,
நம்மாழ்வாருக்கு வேதம் தமிழ் செய்த மாறன், குருகூர் நம்பி,, ஞான பிரான், தொண்டர் பிரான் உள்ளிட்ட 35 பெயர்கள் உண்டு.
Date uploaded in Sydney, Australia – 19 DECEMBER 2024 .
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
தமிழில் கிடைத்துள்ள பழைய நூல் தொல்காப்பியம் என்பதே பெரும்பாலோரின் கருத்து . அதில் அந்தணர், பார்ப்பனர் பற்றியும் வேதங்களில் உள்ள உச்சரிப்பு பற்றியும் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அந்தணர் கைகளில் ஏந்தும் மூன்று கிளையுள்ள முக்கோல் அந்தணர் பற்றி நாம் தொல்காப்பியம் முதல் கம்பராமாயணம் வில்லி பாரதம் வரை காண்கிறோம்.
நூலே கரகம் முக்கோல் மணையே
ஆயுங்காலை அந்தணர்க்குரிய
என்று ஒரு சூத்திரம் கூறும்.
எல்லா பிராமணர்களும் முக்கோல் ஏந்துவதை நாம் எந்தக் காலத்திலும் கண்டதில்லை. ஆயினும் சந்யாசிகள், ஜீயர், சங்கரா ச்சார்யார்கள் எப்போதும் முக்கோலைப் பிடித்த வண்ணமே வலம் வருகிறார்கள்; இன்றும் இதைக் காண்கிறோம் .ஆக இந்த இடத்தில் அந்தணர் என்பது பிராமணர்அல்ல, சந்யாசிகள் என்பது தெளிவு.
ஆயினும் அந்தணர் என்ற சொல் முக்கோல் ஏந்தாத பிராமணர்களையும் குறிக்கும் என்பதைத் தொல்காப்பிய பாயிரமும் புறநானூறும் ஏனைய சங்க நூல்களும் நமக்கு காட்டும்.
நூல் என்பது முப்புரிநூல், கரகம் என்பது கமண்டலம், முக்கோல் என்பது த்ரிதண்டம் , மணை என்பது ஆமை மணை என்று விளக்குகிறார்கள்
பூணூல் இல்லாத சன்யாசிகளாக இருந்தால் வேதத்தின் முடிவை அறிந்தோர் என்றும் கொள்ளலாம்
தொல்காப்பிய பாயிரம் பாடிய பனம்பாரனார் நான் மறை முற்றிய அதங்கோட்டு ஆச்சாரியார்தான் தொல்காப்பியருக்கு சர்டிபிகேட் கொடுத்தார் என்று சொல்கிறார். அந்த நான்மறை , அந்தணர் என்பதுடன் சேர்ந்து வருவதை சங்க இலக்கியங்களில் பல இடங்களில் காண்கிறோம் ..
சன்யாசிகளைக் குறிக்கையில் நான்மறை/ நால்வேதம் பற்றிப் பேசுவதில்லை; ஏனெனில் அவர்கள் வேதத்தின் அந்தத்தைக் கண்டவர்கள்; அந்தம் என்றால் முடிவு. அதனால் அவர்களை வேதாந்திகள் என்கிறோம்.
அத்வைத சந்யாசிகள் ஏக தண்டம் / ஒரே தண்டம் கொண்டு செல்வார்கள். முப்பகையை வென்ற கருத்துடன் இறைவன் ஒருவனே/ சர்வம் பிரம்ம மயம் என்பதையும் இது உணர்த்தும்.
தண்டத்தை எடுத்துச் செல்வதன் பின்னுள்ள கருத்து ஒன்றே.
முக்கோல் ஏந்துவது எதற்காக?
காமம், க்ரோதம் லோபமென்ற மூன்று தீய குணங்களை வென்றதைக் காட்டும் அடையாளம் முக்கோல்.
மண், பெண், பொன் ஆசைகளைத் துறந்தவர்கள் என்றும் சொல்லலாம்.
திருமழிசை ஆழ்வாரும் மூங்கில் மூன்று தண்டு என்று த்ரிதண்டத்தை பாடுகிறார்.
சங்க நூலான கலித்தொகையில் இரண்டு இடங்களில் முக்கோல் வருகிறது.
ஒரு பெண் காதலனுடன் ஓடிவிட்டாள் ; செவிலித் தாய் அவளைத் தேடிவரும்போது
எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடை நீழல்
உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்
உடைய சந்நியாசியை செவிலித்தாய் கண்டு வினவுகிறாள்.அங்கும் அந்தணர் என்ற சொல் வருகிறது.
கையில் கரகமும் குடையும் முக்கோலும் ஏந்திக்கொண்டு , இறைவன் திருவடிகளையே நினைக்கும் நெஞ்சத்தை உடையவர்ககளாய், ஐம்பொறிகளை அடக்கியவர்களாய் உள்ள அந்தணர் என்பது முழுப் பாட்டின் பொருள்
கலித்தொகையில் இன்னும் ஒரு இடத்தில்
முக்கோல் கொள் அந்தணர் முதுமொழி நினைவார் போல்
என்றும் காண்கிறோம்.
இங்கு ஓம் என்னும் பிராணவத்துக்கு முதுமொழி என்ற சொல் பயிலப்பட்டுள்ளது
முல்லைப்பாட்டு என்னும் சங்க நூலில் போர் வீரர்கள் பற்றிய காட்சியைப் புலவர் வருணிக்கிறார். அவர்கள் அம்பினை நட்டு அதன் மீது அம்பராத் துணியைப் போட்டிருந்தது படிவப் பார்ப்பான் முக்கோல் மீது காவி வஸ்திரத்தைப் போட்டு வைத்தது போல இருந்ததாம்..
இவைகளைப் பார்க்கும்போது தொல்காப்பிய காலம் முதல் வில்லி பாரதம் காலம் வரை குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முக்கோல் என்னும் த்ரி தண்டம் இருந்தது வெள்ளிடை மலை.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
8-12-2024 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான உரை.
யோகி வேமனா
ச. நாகராஜன்
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, லண்டன் திரு சுவாமிநாதன் அவர்களே சந்தானம் நாகராஜன் வணக்கம். நமஸ்காரம்.
இன்று நாம் தெலுங்கு உலகில் யோகியாக விளங்கிய கவி வேமனா அவர்களைப் பற்றிச் சிறிது பார்க்கப் போகிறோம்.
குமரகிரி வேமன ரெட்டி என்ற பெயரைக் கொண்ட அவர் கவி வேமனா என்றும் யோகி வேமனா என்றும் பிரபலமாக அறியப்படுகிறார்.
கவி வேமனா இப்பொது ஆந்திர பிரதேசத்தில் உள்ள கொண்டவீடு என்ற நகரில் கடம் வேமா என்பவருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவரது காலம் சரியாக கணிக்கப்பட முடியாமல் உள்ளது. 1659 முதல் 1750 முடிய உள்ள காலத்தில் இவர் வாழ்ந்திருக்கக் கூடும்.
இளம் வயதில் அவர் லம்பிகா சிவா என்ற யோகியிடம் தீட்சை பெற்றார். யோகி அவருக்கு யோகாப்யாசத்தைக் கற்றுக் கொடுத்தார்.
அவர் தெலுங்கு மொழியில் ஏராளமான கவிதைகளை இயற்றினார். அவை வேதத்திற்கு ஒப்பானவை என்று அனைவராலும் போற்றப்பட்டன.
சாடு பத்யம் என்னும் நான்கு வரி கவிதைகளை அவர் இயற்றினார். மூன்று அடிகளில் பெரிய உண்மை அடங்கி இருக்கும். நான்காவது அடியில் விஸ்வதாபிராம வினுர வேமா என்று இருக்கும். அதாவது விஸ்வதா என்றால் உலகைப் படைத்த இறைவன் என்று பொருள். அபிராம என்றால் அவனுக்கு நெருங்கியவன் என்று பொருள். இறைவனுக்கு நெருங்கிய யோகியாக வேமனா திகழ்ந்தார்.
5000 பாடல்களுக்கு மேல் அவர் இயற்றியதாகக் கூறப்படுகிறது.
சி.பி.ப்ரவுன் என்ற ஆராய்ச்சியாளர் வேமனாவைப் பற்றி ஆய்வு நடத்தியதோடு அவரது கவிதைகளை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார். 693 பாடல்களை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1829ம் ஆண்டு பிரசுரித்தார். 1839ல் இன்னொரு 1215 பாடல்களை அவர் பிரசுரித்தார்
வேமனாவின் வாழ்வில் ஏராளமான அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.
ஒரு நாள் அவரது குரு ஒரு முக்கிய வேலையாக வெளியில் செல்ல வேண்டியிருந்தது. ஆற்றில் குளிக்கச் சென்ற அவர் வேமனாவிடம், “இதோ எனது துணி. இவற்றை பத்திரமாக வைத்துக் கொள். குளித்துவிட்டு வருகிறேன்” என்றார். துணிகளை வாங்கிக் கொண்ட வேமனா அதை பத்திரமாக கையில் வைத்துக் கொண்டிருந்தார். குளித்து விட்டு வந்த குரு வேமனாவை நோக்கி, “இங்கு வா” என்று கூற வேமானா துணிகளைக் கீழே சகதியில் போட்டு விட்டு அவரை நோக்கி ஓடினார்.
இதனால் வருத்தமடைந்த குரு அவரை நோக்க, வேமனாவோ முழித்தார். ஆகவே குரு மிகுந்த ஏமாற்றம் அடைந்து அவரிடம் ஒரு சுண்ணாம்புக் கல்லை எடுத்துக் கொடுத்து, “இதோ, இந்தக் கல்லில் ராம ராம என்று நான் வரும் வரை எழுது” என்று கூறி விட்டு அங்கிருந்து தனது வேலையை முடிக்க அவர் கிளம்பினார்.
வேமனா தன் குரு தன்னால் ஏமாற்றத்தை அடைந்தார் என்பதைப் புரிந்து கொண்டார். ராம ராம என்று அந்தப் பெரிய பாறையில் எழுத ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் சுண்ணாம்புக் கல் கரைந்தது. ஆனால் தன் விரலினால் ராம ராம என்று தொடர்ந்து எழுத ஆரம்பித்தார் வேமனா. அவரது கை விரல்கள் தேய்ந்து ரத்தம் சொட்ட ஆரம்பித்தது. ஆனாலும் அவர் விடவில்லை. எழுதுவதைத் தொடர்ந்தார்.
வேலையை முடித்துக் கொண்டுவந்த குரு அவரிடம் வந்த போது அவர் கை ரத்தம் சொட்டச் சொட்ட இருந்ததைப் பார்த்துத் திகைத்தார். வேமனாவை அள்ளி அணைத்து, “நான் இப்படிச் செய்து விட்டேனே” என்று வருந்தினார்.
அன்றிலிருந்து ஒரு பெரிய மாற்றம் வேமனாவிடம் ஏற்பட்டது. பெரிய கவிதை எழுதும் ஆற்றல் அவருக்கு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான கவிதைகளை சரளமாக அவர் இயற்ற ஆரம்பித்தார்
வேமனாவைப் பற்றிய இன்னொரு சுவையான சம்பவம் உண்டு. ஒருமுறை தோட்டத்தில் விதைகளை விதைக்க அவர் பலரையும் அழைத்தார். ஆனால் அதை அனைவரும் அசட்டை செய்த போது ஒரு சிலர் மட்டும் முன்வந்தனர். அவர்கள் தங்கள் வேலையை முடித்த போது சில காய்களை அவர்களது வேலைக்கான கூலியாக வேமனா தந்தார்.
வீட்டிற்கு வந்து அந்தக் காய்களை நறுக்கிய போது அதன் உள்ளிருந்து விதைகள் விழுந்தன. அந்த விதைகளுக்குள் தங்க மணிகளாக இருந்தன. இதைப் பார்த்த அவர்கள் ஓவென்று ஆச்சரியத்தால் கூவினர். செய்தி பரவியதும் கிராமத்தில் இருந்த அத்தனை பேரும் வேமனாவிடம் வேலை கேட்டு வந்தனர். அவர்களுக்கு கூலியாக தங்க மணிகள் கிடைத்தன.
சிலர் திருட்டுத்தனமாக அங்கு வந்து காய்களை எடுத்த போது அவர்களுக்கு அந்தக் காய்களிலிருந்து தங்க மணிகள் கிடைக்கவில்லை. புழுக்களே கிடைத்தன.
வேமனா சிறந்த ரசவதியாகத் திகழ்ந்தார். அவரால் எதையும் பொன்னாக மாற்ற முடிந்தது
வேமனா அசல யோகம் என்னும் ஒரு யோக முறையை உபதேசித்தார். அனைத்தையும் கடந்ததே அசலம் எனப்படும்.
இறைவனை அடைவதற்கான தத்துவ தர்சனங்கள் பல.
ஆனால் இறைவன் ஒருவனே
விவேகம் என்னும் அற்புதமான கோடாலியை எடு
அவித்யா என்னும் காட்டை அழி
அறிவு என்னும் பெரும் விளக்கைக் கையில் எடு
மோக்ஷத்தைக் காண்
கொவிலும் கல்; உள்ளே இருக்கும் விக்ரஹமும் கல்
நீ எதைத் தொழுகிறாய் என்று கேட்கும் அவர் உள்ளே இருக்கிறான் இறைவன் அவனைப் பார் என்கிறார்.
“நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொண மொணன்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ ?”
என்ற சிவ வாக்கிய சித்தரின் கருத்தை வேமனாவின் கவிதைகளில் காண முடிகிறது.
இறைவனை உள்ளே பார் என்று அவர் உபதேசித்தருளினார்.
தூய்மையான இதயம் இல்லாமல் சடங்குகள் எதற்காக?
பானை சுத்தமாய் இல்லாதபோது சமைப்பது ஏன்?
மனம் தூய்மையாக இல்லாத போது வழிபாடு ஏன்?
என்று அவர் கேட்கிறார்.
தூய்மையான இத்யயத்துடன் செய்யப்படும் தர்மம் சிறிதாய் இருந்தாலும் நல்லது. என்று சொல்லும் அவர் உதாரணமாக ஆலமரத்தின் விதை சிறிதாக இருந்தாலும் மரம் பெரிதாக வளர்கிறதல்லவா? என்று சுட்டிக் காட்டுகிறார்.
ஒரு கீழான மனிதன் எப்போதுமே படாடோபமாய் பேசுவான். ஒரு நல்ல மனிதன் எப்போதுமே இனிமையாகப் பேசுவான். தங்கமானது பித்தளையைப் போல சத்தம் போடாது இல்லையா?
என்று கேட்கிறார் அவர்.
கூடை நிறைய பளபளக்கும் மதிப்பற்ற கற்களை விட நீலம் போன்ற ஒரு ரத்தினம் இருந்தால் போதும். மட்டமான ஏராளமான நூல்களை விட ஒரே ஒரு நல்ல கவிதை போதும் நல்ல இன்பத்தையும் ஊக்கத்தையும் பெற!
இன்னும் பல பாடல்களில் அவர் என்றும் நிலைத்து நிற்கும் வெற்றிகரமான வாழ்க்கைக்குத் தேவையான கருத்துக்களைக் கூறுகிறார். அவற்றில் சில இதோ:
மிளகு கருப்பாக இருக்கிறது. அதைக் கடித்தவுடன் அதன் காரம் உங்களுக்கு எரிச்சலைத் தருகிறது. ஒரு நல்ல மனிதனும் இப்படித்தான் இருப்பான். எவரையும் அவரது தோற்றத்தை வைத்து மதிப்பிடக் கூடாது. அவர்களது நிஜமான ஆளுமையை வைத்தே மதிப்பிட வேண்டும்.
நீர் நிறைந்த நதி கம்பீரமாகப் பாய்கிறது. அதனுடைய ஆழத்தையோ.அல்லது அது போகும் பாதையையோ அல்லது அதன் வேகத்தையொ அது நிரூபிக்கத் தேவை இல்லை. ஆனால் போகும் பாதை சீராக இல்லாத ஒரு சின்ன நீரோடை பாறைகளின் ஊடேயும் காடுகளின் உடேயும் வேகமாக அதிக சத்தத்துடன் பாய்கிறது. பிரபுத்வமான நல்ல நடத்தையே ஒருவரின் குணாதிசயத்தைக் காண்பிக்கிறது. வெறும் சத்தம் ஒருவரின் நல்ல குணங்களைக் காண்பிக்காது.
நீரில் இருக்கும் முதலையானது ஒரு யானையைக் கூட இழுத்து விடும்; ஆனால் அதிலிருந்து வெளியே இருக்கும் போது அது மெலிந்த ஒரு நாயைக் கூட எதிர்க்க முடியாது. இதுதான் ஸ்தான பலம் எனப்படும் இருக்குமிடத்தைப் பொருத்து ஏற்படும் வலிமையாகும்.
ஒரு படகானது நீரில் எளிதாகப் போகும். ஆனால் அதுவே நிலத்திலோ என்றால் ஒரு அங்குலம் கூட நகராது. ஆக இதுவே சரியான இடத்தில் இருப்பதால் ஏற்படும் நன்மை என்பது பெறப்படுகிறது. திறமைசாலியான ஒருவன் கூட தவறான இடத்தில் இருந்தால் தோல்வியையே அடைவான்.
கிராமத்தலைவனுக்கு மோசடிப் பேர்வழி யார் என்று தெரியும். அதற்குத் தக அவனை அவன் நடத்துவான். அதே போல கடவுளிடம் யாரும் எதையும் மறைக்க் முடியாது. ஒரு மனைவி தன் கணவனின் பசியை அறிவாள்.
இந்தப் பாடலால் அறியப்படுவது என்னவெனில் ஒருவன் எப்போதும் தனக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைத் தான்.
சிப்பிக்குள் விழும் மழை நீர் முத்தாக மாறுகிறது. ஆனால் நீருக்குள் விழும் மழை நீரோ நீருடனேயே கலக்கிறது. வெற்றி அடைய விதிக்கப்பட்ட ஒருவன் வாய்ப்பைத் தவற விடவே மாட்டான். சரியான நேரமும் காலமும் இடமுமே வெற்றி பெறத் தேவையானவை.
இப்படி நூற்றுக்கணக்கான நீதி மொழிகளை சரளமான தெலுங்கு வார்த்தைகளில் மிக அழகுறத் தருகிறார் வேமன கவி. அவை பட்டி தொட்டிகளில் எல்லாம் சாமான்யரால் இன்று கூட மேற்கோள்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வேமன சதகம் என்ற அவரது நூறு பாடல்களைக் கொண்ட சதக நூல் பிரசித்தி பெற்ற நூலாகத் திகிழகிறது.
அனந்தப்பூரில் கத்ரி தாலுகாவில் உள்ள கதருபள்ளியில் அவர் சமாதி அடைந்தார். அவரது சமாதி உள்ள இடத்தில் ஒரு அடையாளக் கல் உள்ளது.
வேமனாவின் கவிதைகள் பள்ளிக்கூட பாட புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. ஆந்திர அரசு 2008ம் ஆண்டு அவர் பெயரை ஒரு பல்கலைக்கழகத்திற்குச் சூட்டியுள்ளது.
1947ம் ஆண்டு யோகி வேமனா என்ற படத்தில் நாகையா நடித்துள்ளார்.
இன்னொரு படமான ஶ்ரீ வேமன சரித்ரா 1986ல் வெளியிடப்பட்டது.
வேமனாவின் தபால் தலை ஒன்றை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
யோகி வேமனா பாரதத்தின் தலை சிறந்த மகான்களில் ஒருவர் என்பதையும் அவர் கூறும் நீதிகள் மனித குலம் அனைத்திற்கும் பொதுவானவை என்பதையும் அவர் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது நீதி பாடல்களைப் படிப்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.